Advertisement

                               2

     “ஹப்பா ஒரு வழியா பைனல் செம் முடிஞ்சுது! இனி நிம்மதியா ஊர் சுத்தலாம்!” என்றான் ரவி.

     “சுத்துவடா சுத்துவ! ஒழுங்கு மரியாதையா ரெயில்வே எக்ஸாம்கு ப்ரிபேர் பண்ணு” என்றாள் கீர்த்தி கட்டளையாக.

     “ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?! எப்போ பாரு அதிகாரம் பண்ணிக்கிட்டு! கொஞ்சமாச்சும் என் லைபை என்ஜாய் பண்ண விடுடி! என்னதான் சின்ன வயசுல உன்னைப் பேசி முடிச்சாலும் முடிஞ்சாங்க, சில பல சைட்டு, ஒரு சில லவ்வுன்னு எதுவுமே இல்லாம லைப் ஒரே போரா போகுது!” என்றான் அவன் புலம்பலாய்.

     “என்ன? என்ன? என்ன சொன்ன?! சில பல சைட்டு, ஒரு சில லவ்வா?!” என்று கோபம் கொண்டவள்,

     “அப்போ, அப்போ இத்தனை நாள் இதை எல்லாம் மனசுல வச்சிக்கிட்டுதான் நீ என் கூட சுத்தி இருக்க?!” என்று சுற்றும் முற்றும் பார்த்தவள்,  அவர்கள் அமர்ந்திருந்த பெஞ்சிற்கு சற்று தொலைவே தெரிந்த பெரிய கூழாங்கல்லை எடுத்துக் கொண்டு வர,

     “அடியே என்னடி பண்ற?!”

     “ம் உன்னைக் கொல்லப் போறேன்” என்று அவள் அவன் மண்டையை நோக்கிக் குறி பார்க்க,

     “அடிக் கொலைகாரி!” என்று அவன் ஓட அவளும் துரத்திக் கொண்டு ஓட,

     “கடவுளே கடவுளே! கலிகாலம்! இதுகளை எல்லாம் இவா வீட்ல கண்டிக்க ஆளே கிடையாதா?! இந்த வயசுலேயே இப்படி ஊரைச் சுத்துதுங்க!” என்று பார்க்கில் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒரு மாமி தலையில் அடித்துக் கொண்டு செல்ல,

     “மாமி,  இந்த வயசுல இல்லாம உங்க வயசுலயா இப்படி சுத்த முடியும்!” என்று ரவி கவுண்டர் கொடுத்துக் கொண்டே அவள் பின்னே ஓட,

      “கலிகாலம் கலிகாலம்!” என்றவர் ஒரு சில மணித்துளிகளில் அவர்கள் இருவருக்காகவும் கண்ணீருடன் மருத்துவமனையில் நின்றிருப்பார் என்று நினைத்தும் பார்த்திருப்பாரா?!

     ஏற்கனவே இருவரையும் கண்டித்திருந்த அந்த ஆடவன், பல நாட்களுக்குப் பின் மீண்டும் அவர்களைப் பார்க்கில் ஒன்றாய்க் கண்டதில் மிகுந்த வன்மத்துடன் இருவரையும் பார்த்துக்கொண்டே யாருக்கோ போன் போட்டான்.

     சிறிது நேரத்தில் இருவரும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்க, அவர்களைப் பார்க்கில் திட்டிய அந்த மாமியும் அவர்கள் பின்னே தான் வந்து கொண்டிருந்தார்.

     இருவரும், என்னதான் பேசிச் சுற்றிக் கொண்டு திரிந்தாலும், சற்று இடைவெளி விட்டு கண்ணியமாகவே பேசிக் கொண்டு நடந்து செல்வதைக் கண்டு, 

     ‘நல்ல பசங்கதான் போல, நாமதான் தப்பா நினைச்சுட்டோம். ஆனாலும் இதுக ரெண்டோட ஜோடியும் அவ்ளோ பொருத்தமாயிருக்கு! ஒன்னுத்துக்கு ஒன்னு அழகுல குறைச்சலே இல்லை! ஆனா என்ன வயசுதான் ரொம்ப சின்ன வயசா இருக்கு! அதுக்குள்ள இந்தக் காதல் எல்லாம் எதுக்கு?!’ என்று எண்ணிக் கொண்டே பின்னே நடந்து வந்து கொண்டிருந்தவர், பைக்கில் ஹெல்மெட் போட்டபடி இரு ஆண்கள் தனக்கு மிக அருகே உரசியபடி செல்ல, விதிர் விதிர்த்துப் பின்வாங்கினார்.

     “அசட்டு மூதேவிங்க எப்படிப் போகுதுங்க பாரு!” என்று வாய்விட்டுப் புலம்பிய நேரம், அந்த பைக்கில் பின்னே அமர்ந்திருந்த ஒருவன் கையில் ஏதோ குடுவை ஒன்று இருக்க,

     “அய்யய்யோ! இதென்ன பகவானே! கையில ஏதோ பாட்டில் வச்சிருக்கானுங்க! இந்த படத்துல எல்லாம் காட்டுறா போல அசிட் கிசிடா இருக்குமோ?!” என்று பதறியவருக்கு,

     அதை அவன் தன் முன்னே நடந்து சென்று கொண்டிருந்த அந்த இளம்ஜோடிகள் மேல்தான் வீசப் போகிறான் என்று அவனது செய்கையில் உடனே புரிந்து போனது.

     “ஏய் பொண்ணே! ஏய் பொண்ணே?!” என்று அவர் பதட்டமாய் கத்தினார்.

     “ஐயோ அந்தப் பயனாண்டான் ஏதோ பேர் சொல்லிக் கூப்டுட்டே ஓடினானே அந்தப் பொண்ணை! என்னவோ பேராச்சே?! ஹான் ஏய் கீர்த்தி!! பின்னாடித் திரும்பிப் பாருடி!” என்று அவர் சத்தமாய் அழைக்க, யாரோ தன்னைத்தான் கூப்பிடுகிறார்கள் என்று சட்டெனத் திரும்பிய கீர்த்தி பைக்கில் தங்கள் அருகே வந்து கொண்டிருந்தவர்கள் செய்யவிருந்த செயலை நொடியில் ஊகித்தாள்.

     ஊகித்த நொடி, ரவி என்று அவனை இழுத்துத் தனக்கு எதிர்ப்புறப் பக்கவாட்டில் தள்ளிவிட, அவள் எதிர்பாராத விதமாக வேகமாய் வந்து கொண்டிருந்த கார் ரவியை இடித்துத் தள்ளித் தூக்கி எறிந்தது. அதே சமயம் அவர்கள் அவன்மேல் வீசிய ஆசிட் அவன் தள்ளிப் போனதால் அவளின் ஒருபக்க வயிறு, தொடை, மற்றும் பெண் உறுப்புப் பகுதி முழுவதையும் பதம் பார்த்து பொசுக்கியது.

     கீர்த்தி என்று கத்திக் கொண்டே விழுந்தவன் தூக்கி வீசப்பட்ட வேகத்தில் தலை தரையில் மோத, ரத்தம் பீய்ச்சிக் கொண்டு வந்தது.

     எதிர்பாராத நொடியில் நிகழ்ந்த இரு அசம்பாவிதத்தில், இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்தபடி துடிதுடித்து சுய நினைவை இழக்க,

       “ஐயோ! பகவானே! இதென்ன கொடுமை! என் கண்ணே இந்தப் பிள்ளைங்க மேல பட்டுடுச்சோ! ஆண்டாவா?!” என்று பதறிய அந்த மாமி, தான் கையோடு கொண்டு வந்திருந்த அந்தக் காலத்து நோக்கியோ கைப்பேசியில் ஆம்புலன்சிற்கு அழைத்தார்…

                                                  *****

     “என் பையன் என் பையனுக்கு என்ன ஆச்சு?!” என்று பதட்டத்தோடு ஜெகநாதன் ஓடி வர,

     “அண்ணே என்ன அண்ணே ஆச்சு என் மருமகளுக்கும் புள்ளைக்கும்” என்று கதறியே விட்டார் சாரதா.

    “உ உள்ள ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கும்மா?! ஒண்ணுமே சொல்ல மாட்றாங்க! எனக்கு ஒன்னுமே புரியலைம்மா?!” என்று கலக்கத்துடன் பதில் கூறினார் சதாசிவம்.

     “உங்க உங்க பொண்ணுதான் என் பையனைத் தள்ளி விட்டாளாமே?! அவளுக்கு எத்தனை நாளா இந்த துவேஷம் என் பையன் மேல?!” என்று ஜெகன் நாதன் மனசாட்சி இன்றி வார்த்தைகளை விட, சதாசிவமும், சாரதாவும் திகைத்துப் போயினர்.

     “ஐயோ என்னங்க என்னங்க பேசறீங்க நீங்க? நம்ம மருமக போயி?” என்று சாரதா முடிப்பதற்குள், அவளை ஓங்கி ஓர் அறை விட்டிருந்தார்.

     “இன்னொரு முறை அவளை மருமகன்னு சொன்ன?!” என்று அவர் மிரட்டலாய் கூற, சாரதா, சதாசிவம் இருவருக்குமே, பிள்ளைகளின் நிலைமையோடு சேர்ந்து இவரின் இந்த புதிய முகமும் பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் கொடுத்தது.

     அதற்குள், சிகிச்சை அளித்த தலைமை மருத்துவர் வெளியே வர,

     “டாக்டர், என் பையன் என் பையனுக்கு என்ன ஆச்சு? அவன் எப்படி இருக்கான்?! அவனுக்கு ஒன்னும் இல்லையே?!” என்று ஜெகன்நாதன் கேட்க,

      “ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்றவர்,

     “உங்க பையனுக்கு ஹெட் இஞ்சுரி ஆகி இருக்கு. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்ததுல ஒரு சில இடங்கள்ல ரத்தம் உறைஞ்சு போய் இருக்கிறது தெரியுது.” என்று அவர் சொல்ல,

      “கடவுளே?!” என்று மூவருமே பதறிப் போயினர்.

      “வெய்ட் வெய்ட், சரி செய்ய முடியாதுன்னு நான் சொல்லலையே. என்னோட நண்பர் தலைசிறந்த நியூரோ சர்ஜன் டாக்டர். பிலிப்ஸ் இது போல நிறைய கேசசை குணப்படுத்தி இருக்கார். ஆனா அவர் இப்போ நம்ம நாட்ல இல்லை. அவரோட சொந்த ஊரான, லண்டன்ல போய் செட்டில் ஆகிட்டார்.”     

     “என் பையன் குணமாகணும்னா லண்டன் இல்லை இந்த உலகத்தோட எந்த மூளைக்கும் நான் அவனை அழைச்சிட்டுப் போவேன்”

     “அப்போ நான் உடனடியா அதுக்கான வேலைகளை ஆரம்பிக்கிறேன்.”

     “ஐயா என் என் பொண்ணு எப்படிங்க இருக்கா?!” என்றார் சதாசிவம் தோய்ந்த குரலில்.

     “சாரி டு சே! அவங்க நிலைமை கொஞ்சம் கிரிட்டிகல் தான். அது ரொம்ப வீரியமான அசிட். ஸ்கேன் பண்ணிப் பார்த்ததுல அவங்க உள்ளுறுப்புகள் வரை அதோட பாதிப்பு இருக்கிறது தெரிஞ்சுது. அதுக்கு அதுக்கு சிகிச்சையும் செய்ய முடியாது. மருந்து மாத்திரை மூலமா தான் முயற்சி பண்ணனும். அதுக்கும் ரொம்ப நாள் எடுக்கும். அப்படியே குணமானாலும் அவங்க பழைய படி நார்மலா இயங்க முடியாது. அவங்க ஒருபக்க குடல், கிட்னி, கர்ப்பப்பை, பெண் உறுப்புன்னு எல்லாமே ரணமாகி இருக்குறதுனால அவங்க சாப்பிடுறது செரிமானம் ஆகிறது முதற்கொண்டு, தாம்பத்திய வாழ்க்கை, பிள்ளைப்பேறு இது எல்லாத்துக்குமே கஷ்டம்தான்.” என்று பெரிதாய் இடியை இறக்கினார் மருத்துவர்.

     சதாசிவம் இதை எல்லாம் கேட்கக் கேட்க, அப்படியே உறைந்து போய் கண்களில் நீர் பெருக நிற்க, சாரதாவோ, நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார் தாளமாட்டாமல். ஜெகன்நாதன் கூட கல்லாய் சமைந்துதான் போயிருந்தார்.

     “அய்யா சித்த நேரத்துக்கு முன்னாடி சொன்னீங்களே அந்த பொண்ணு தான் உங்க பிள்ளையைத் தள்ளிவிட்டதா யாரோ சொன்னாங்கன்னு. அந்தப் பொண்ணு மட்டும் தள்ளி விடலைன்னா இந்நேரம் உங்க பையனாண்டாந்தான் அந்தப் பொண்ணோட நிலைமையில இருந்திருப்பான். உங்க பையனுக்காவது ஆபேரஷன் பண்ணா சரியாகிடும்னு டாக்டர் சொல்றாரு. அந்தக் கொழந்தையோட நிலைமை?!” என்று யாரோ ஒருவராய் சற்று நேரத்திற்கு முன் அவர்களைப் பார்த்திருந்த மாமியே கண்ணீர் வடிக்க, ஜெகன்நாதனுக்கும் உள்ளம் கலங்கித்தான் போனது. ஆனாலும், இத்தனை நாள் மனுதுள் மறைத்து வைத்திருந்த எண்ணத்தை செயலாற்றும் தக்க தருணமாய் அதைப் பயன்படுத்திக் கொள்ள அவர் மூளை முடிவெடுத்தது.

     “ட்ரீட்மென்ட்கு நிறைய செலவாகும். உங்களால முடியுமா? இல்லை அரசு மருத்துவமனைக்கு ஷிப்ட் ஆகிக்கறீங்களா?!” என்றார் டாக்டர் சதாசிவத்திடம்.

     “எ எவ்ளோங்க ஐயா ஆகும்?!” என்றார் சதாசிவம்.

     “பல லட்சங்கள் செலவாகும். வெளிக்காயம் ஆறின பிறகு பிளாஸ்டிக் சர்ஜனை வரவழைச்சு சர்ஜரி செய்தால் வெளித் தோல் ஓரளவுக்கு நார்மலா இருக்கும்.” என்று மருத்துவர் சொல்ல,

     “ம்! வெளில இருக்க காயம் ஆறி என்னங்கய்யா பிரயோஜனம். உள்ள இருக்க ரணவேதனையை என் பொண்ணும் நானும் காலத்துக்கும் அனுபவிச்சுதானே ஆகணும்?!” என்றவர்,

     “நீங்க கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கே எழுதிக் கொடுத்துடுங்க ஐயா. என் பொண்ணுக்கு பொழக்கிற ப்ராப்தம் இருந்தா பொழைக்கட்டும் இல்லாட்டி ஆண்டவன் விட்ட வழி” என்றார் மனதைக் கல்லாகிக் கொண்டு.

      “அண்ணே ஏன்ணே இப்படிப் பேசறீங்க? நாங்க இருக்கும் போது எங்க மருமகளை அப்படி விட்டுடுவோமா?” என்ற சாரதா,

     “என்னங்க நீங்க பேசாம நிக்கறீங்க?!” என்றார் கோபமாய்.  

     “சதாசிவம் உன் பொண்ணோட சிகிச்சைக்கு என்ன செலவாகுமோ அத்தனையும் நான் பார்த்துக்கறேன். ஆனா அதுக்கு நீ எனக்கு ஒரு வாக்கு குடுக்கணும்?” என்றார் ஜெகன்நாதன்.

     சதாசிவம் என்னவென்பது போல் பார்க்க, “உன் பொண்ண நாங்க எங்க மருமகளா ஏத்துக்கறோம்னு சொன்னது வாஸ்தவம்தான், ஆனா அவ இப்படி இந்த நிலைமையில என் குடும்பத்துக்கு ஒரு வாரிசைக் கூட,” என்று அவர் மேலும் பேசுவதற்குள் கையமர்த்திய சதாசிவம்,

     “நீ என்ன சொல்லப் போறேன்னு எனக்கு புரியுது. என் பொண்ணை உன் பையனுக்கு கட்ட முடியாது. அதானே?!” என்றார் வேதனையும் விரக்தியுமாய்.

      “அப்படி மட்டும் சொன்னா என் பையன் அதை ஏத்துக்கவே மாட்டான்” என்று ஜெகன்நாதன் சொல்ல,

     “அப்புறம்?!” என்பது போல் சாதாசிவம் பார்க்க,

     “கீர்த்தி செத்துட்டான்னு நான் என் பையன்கிட்ட சொல்லப் போறேன்.” என்று அவர் சொல்ல, சாரதா கொத்தாய் அவர் சட்டையையே பற்றிவிட்டார்.    

     “மனுஷனா மனுஷனா நீங்க?!” என்றார் உறுமலாய்.

     “நான் உயிரோட இருக்கணும்னா பேசாம கையை எடு சாரதா!” என்று அவரை விலக்கி நிறுத்தி ஊமையாக்கிய நாதன்,

     “கீர்த்தி இறந்துட்டான்னு அவன் நம்பணும்னா நீங்க இந்த ஊரைவிட்டே போயிடணும். அதுக்கப்புறம் என் பையனை எப்படி நம்ப வைக்கணும்கிறதை நான் பார்த்துக்கறேன்” என,

     “ம்! ம்! நீ இப்போ பேசுறது எல்லாம் இன்னிக்கு யோசிச்ச விஷயம் மாதிரி எனக்கு தெரியலை! ஏதோ பல வருஷமா இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த மாதிரி இருக்கு” என்ற சதாசிவம்,

      “நீ என் பொண்ணை எப்படி நினைச்சியோ எனக்குத் தெரியாது! ஆனா நான் ரவியை என் மருமகனைப் போல நினைச்சுதான் ஒவ்வொரு நொடியும் அன்பைக் காட்டினேன். அப்படிப்பட்ட என் மருமகனோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நான் என்னிக்கும் நினைப்பேன். பட்ட மரமா நிக்குற என் பொண்ணுக்காக அவன் வாழ்க்கையையும் தியாகம் பண்ணனும்னு நான் என்னிக்குமே நினைக்க மாட்டேன். போ, நீ என்னவெல்லாம் சொல்லணும்னு நினைக்கிறியோ அவன்கிட்ட சொல்லி அவனை வாழ வச்சுக்கோ!” என்றுவிட்டு, மருத்துவரிடம் திரும்பி,

     “அரசு மருத்துவமனைக்கு எழுதிக் கொடுத்துடுங்க ஐயா” என்றுவிட்டு மகளைப் பார்க்க ஐசியு வார்டிற்குள் நுழைந்தார்.

     நாதன் அப்போதும் கொஞ்சம் கூட மனமிறங்க மனதில்லாமல் கல் போன்றே நின்றிருக்க, சாரதா மகனைக் கூடப் பார்க்கத் தோன்றாமல் அப்படியே அருகே இருந்த நாற்காலியில் சரிந்து அமர, யாரோ ஒருவராய் வந்த அந்த மாமி இங்கு நடந்த அநியாயத்திற்கு சாட்சியாய் மாறி, கண்கள் கலங்க அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

                                          *****

     பால்நிலவாய் ஜொலித்த மகளின் முகத்தையே உள்ளே நுழைந்ததும் கண்ட சதாசிவத்தின் கண்கள், சற்றுக் கீழே அவள் உடல் முழுவதும் ஏற்பட்டிருந்தக் காயத்தைக் கண்டதும், மகளின் அருகே கூட செல்ல முடியாமல், கால்கள் தடுமாற அங்கேயே விழுந்து மண்டியிட,

     “ஐயா பாத்து பாத்துங்க ஐயா” என்று ஒரு செவிலியர் வந்து தூக்கிவிட்டார்.

     “என் என் பொண்ணு என் ராஜாத்தி?!” என்று அவர் முகத்தில் அறைந்து கொண்டு அழ, அந்தச் செவிலியைக்கே ஏதோ போல் ஆகிவிட்டது.

      ‘எவ்ளோ அழகான முகம் இந்தப் பொண்ணுக்கு?! இப்படி ஒரு கொடுமை ஏன் கடவுளே நேர்ந்தது?!’ என்று வருந்தினார்.

     “கீர்த்தி கீர்த்திம்மா???!!!” என்று கதறிய அந்தத் தந்தைக்கு ஆறுதல் சொல்லக் கூட அங்கு யாருமில்லை.

      சிறிது நேரம் தானே அழுது ஓய்ந்து தேறிய அந்தத் தந்தை, “அம்மா… என் பொண்ணு என் பொண்ணு உயிருக்கு?!” என்றார் செவிலியையிடம்.

     “உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லைங்க ஐயா?! ஆனா?!”

      “ஆனா வாழ்க்கை பூரா என் பொண்ணு நரகத்தை அனுபவிக்கணும் அதானேம்மா?!” என்றவருக்கு தொண்டை அடைத்தது.

                                      *****

     அவள் மயக்க நிலையில் இருக்கும் போதே ஜிஎச்சிற்கு மாற்றப் பட, அதன் பிறகே கார்த்திகா விவரம் அறிந்து அங்கு வந்து சேர்ந்தாள்.

      “என்னப்பா என்னப்பா ஆச்சு?! ஏன் இந்தப் பொண்ணுக்கு இந்த வேண்டாத வேலை?! அந்த ரவி பையனால இவ இந்த கதில நிக்கணுமா?! ரெண்டும் பிஞ்சிலேயே பழுத்துப் போயி சுத்திக்கிட்டு இருந்ததுங்க இல்லை! அதான் ஆண்டவன் மொத்தமா ஆப்பு வச்சிட்டான்!” என்று கார்த்திகா ஈவு இரக்கிமின்றிப் பேச,

     “ஏய்!!” என்று மகளைக் கைநீட்டி அறையப் போன சதாசிவம், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

     “இவளை இங்க இருந்து கூட்டிட்டுப் போயிடுங்க மாப்ளை!” என்றார் கட்டளையாய்.

     “ஓஹோ! இப்போ கூட உங்க சின்ன மகதான் உங்களுக்கு முக்கியம்! அவ செய்யிற தப்பு எதுவுமே உங்களுக்குத் தெரியாது!”

     “கூட்டிட்டுப் போங்க மாப்ளை!” என்று அவர் மீண்டும் கர்ஜிக்க,

     “நீ வா, நீ வா கார்த்திகா போகலாம்!” என்று அவள் கைபிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினான் தருண்.

     சதாசிவம் போகும் பெரிய மகளை ஒருபுறமும் மற்றவர்களுக்காகவே தன் வாழ்வை இழந்து மருந்தின் மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் சின்ன மகளை ஒருபுறமும் பார்த்து மனம் தாளாது கலங்கி நின்றார்.

                                                        -தொடரும்…

 

                                                        

 

    

       

     

    

Advertisement