Advertisement

     “என்னடா எந்நேரமும் டிவியையே பார்த்துட்டு இருக்க? பைனல் செமஸ்டர்கு தயாரா இருக்கியா, இல்லையா?” என்றபடியே வீட்டினுள் நுழைந்தார் ஜெகன்நாதன்.

     “அதெல்லாம் சூப்பரா ப்ரிபேர் பண்ணி இருக்கேன் பா” என்ற மகனை ஆசையாய் தலை கோதிவிட்டு அவர் அமர,

     “என்னங்க வந்ததும் வந்தீங்க. அப்படியே முகம் கைகால் கழுவிட்டு வந்தா டிபனும் சாப்பிட்டுடலாம் இல்லை!” என்றார் சாரதா.

     “ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்துட்டுப் போறேன்ம்மா. என்னவோ ரொம்ப களைப்பா இருக்கு இன்னிக்கு. கட்சி மீட்டிங்னால ஒரே அலைச்சல் இன்னிக்கு பூரா”

      “என்னவோ போங்க. நமக்கு இருக்க பூர்வீக சொத்துக்கு, நீங்க வேலைக்கு ஆள் வச்சுட்டு நிம்மதியா இருக்காம, கட்சி அது இதுன்னு வேற ஓடிட்டு இருக்கீங்க? சொன்னாலும் கேட்கப் போறது இல்லை. அப்புறம் எதுக்கு நான் சொல்லிக்கிட்டு.”

     “என்னதான் பணம் இருந்தாலும் பதவின்னு ஒண்ணு இருந்தா அதோட மதிப்பே தனிதான் சாரதா. அதுக்காகத்தானே இந்த ஓட்டம்.”

     “ம் என்னவோ செய்ங்க. உங்க இஷ்டம்” என்றுவிட்டு சமையற்கட்டினுள் செல்லப் போக 

     “என்ன இங்க சத்தம்?” என்றபடியே வீட்டினுள் வந்தவளைப் பார்த்து,

     “வாம்மா மருமகளே. இன்னிக்கு என்ன கொண்டு வந்திருக்க உன் மாமாவுக்கு?!” என்றார் ஜெகன்நாதன்.

      “காரதோசைக்கு மாவு அரைச்சேன் மாமா. உங்க கார் சத்தம் கேட்டதும் நீங்க வந்துடீங்கன்னு தோசை வார்த்து எடுத்துட்டு வந்தேன்.”

     “பார்த்தியாடா இவளை. நாம ரெண்டு பேரும் இங்க இருக்கோம். நம்ம ரெண்டு பேரையும் கண்டுக்கலை! அவர் வந்ததும் மட்டும் தோசை போட்டுக் கொண்டு வர்றா! ம்ஹும்! இவ எல்லாம் எனக்கு மருமகளா வேணாம்” என்றுக் கோபத்துடன் சாரதா சொல்ல,

     “என்ன சாரதா இது பிள்ளைய இப்படிப் பேசிக்கிட்டு?!” என்று கடிந்தார் நாதன்.

      “நீங்க சும்மா இருங்க! அவ பண்றது மட்டும் சரியா? ம்! சரியான்னு கேட்டேன்.” என்று அவர் சிடுசிடுக்க,

     “அப்படியா?! எங்க அதை என் முகத்தைப் பார்த்து சொல்லுங்க!” என்று அவள் அவர் அருகே செல்ல,

     “ஒண்ணும் வேணாம்!” என்று அவர் முகம் திருப்ப,

     “நெஜம்மா வேணாமா அத்தை!” என்று அவள் அவர் கன்னம் தொட்டுத் திருப்ப,

     “என் ராஜாத்தி!” என்று அவள் கன்னத்தில் முத்தம் இட்டவர்,

     “நீதான்டி என் வீட்டுக் குலவிளக்கு! இதை இன்னிக்கு நேத்து இல்லை! என்னிக்கு உன் அம்மா என் புள்ளை உசிரைக் காப்பாத்தறதுக்காக உயிரையே விட்டாங்களோ, அன்னைக்கே நானும், உன் மாமாவும், உன் அப்பாவுக்குக் கொடுத்த சத்திய வாக்குடி தங்கம்” என்று அவர் மீண்டும் அவள் கன்னத்தில் முத்தம் வைக்க, அப்பா, மகன் இருவரும் அவர்களைச் சிரிப்புடன் பார்த்திருந்தனர்.

     “இவங்க சண்டைக்கு மட்டும் என்னிக்கும் பஞ்சாயத்துக்கு போயிடாதீங்க அப்பா. கடைசில நாமதான் பல்ப் வாங்கணும்” என்றான் ரவி.

     “அதென்னமோ சரிதான்டா மகனே!” என்று நாதனும் சொல்ல,

     “போதும் போதும் உங்க ரெண்டு பேர் கண்ணுமே பட்டுடும் போலேயே! நீ வாடி தங்கம்” என்று அவர் கீர்த்தனாவை கைபிடித்து அழைத்து சமையல் அறைக்குக் கூட்டிச் செல்ல, ரவி, இருவரையும், பெருமையுடன் பார்த்திருந்தான்.

     ‘இது என்ன வகையான அன்பு?! பெத்த பையன் என்னைவிட கூட கீர்த்தி மேலதான் அம்மாக்கு எவ்ளோ பாசம்?!” என்று எப்போதும் போல் வியந்து கொண்டான்.

                                        *****

     சில நாட்களுக்குப் பிறகு, “வாக்கா, வாங்க மாமா” என்று வரவேற்றவளிடம் தன் சின்ன மகனைக் கொடுத்துவிட்டு,

     “இங்க வந்தா மட்டும் வாங்க வாங்கன்னு வாய் நிறைய கூப்பிடுற மாதிரி கூப்பிடுறது! அங்க எங்க வீட்டுப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கிறது இல்லை ரெண்டு பேரும். வந்தா என்ன சீரும் நகை நட்டுமா கொண்டு வரப் போறீங்க? வந்து ஒரு எட்டுப் பார்த்துட்டு ஏதோ பிள்ளைங்களுக்காவது ஏதாவது வாங்கிக் குடுத்துட்டுப் போலாம்ல!” என்று குறைப்பட்டுக் கொண்டே வந்தவளைப் பார்க்க சதாசிவம் தன் மனதுள் நொந்து கொண்டார்.

      கீர்த்தனாவிற்கும் மனதில் சுருக்கென வலித்தாலும், அதை வெளிக் காட்டிக் கொள்ளாது, முகத்தில் சிரிப்புடன்,

     “உட்காருக்கா. நான் போய் டீ போட்டுக் கொண்டு வரேன்” என்றவள்,

     “பட்டுத் தங்கம். வாங்க சித்தி கூட சேர்ந்து டீ போடலாம்” என சின்னவனை இடுப்பில் தூக்கியபடியே அவள் உள்ளே செல்ல,

     “எப்படி இருக்கீங்க மாப்ளை? வீட்ல அப்பா, அம்மா  சௌக்கியங்களா?” என்றார் சதாசிவம்.

     “எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா.”

     “பிஸினஸ் எப்படிப் போகுது?”

     “ஏன் நல்லா போகலைன்னா நீங்க பணம் குடுத்து தூக்கி நிறுத்தப் போறீங்களா என்ன?!” என்றாள் கார்த்திகா வெடுக்கென்று.

     “சும்மா இரு கார்த்திகா!” என்று மனைவியை அடக்கிய தருண்,

     “மாமா நாங்க ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் இங்க வந்தோம்” என்றான் தயக்கமாய்.

     “என்ன மாப்ளை” என்று கேட்டவருக்கு பயம் கவ்வியது. நிச்சயம் பணம் விஷயமாகத்தான் இருக்கும் என்று அவருக்குப் புரிந்து போனது. இல்லையென்றால் தன் மகள் இவ்வளவு தூரம் தங்களைத் தேடி வருவாளா?!

     “வந்து மாமா என் தங்கச்சி காவ்யாவுக்கு கல்யாண  நாள் நெருங்கிட்டு இருக்கு. அதுக்காக வெளில பணம் கேட்டிருந்தோம். ஆனா திடீர்னு பணம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரி திருநின்றவூர்ல ஒரு இடம் வாங்கிப் போட்டு வச்சிருந்தோம், அதையாவது வித்து கல்யாணச் செலவைச் செய்யலாம்னு பார்த்தா, கடைசி நேரத்துல வாங்குறோம்னு சொல்லி அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துட்டு இப்போ பின்வாங்குறாங்க. எனக்கு என்ன செய்யிறதுன்னே புரியலை. அதான் உங்ககிட்ட,”

     “எ எங்கிட்ட எதுங்க மாப்ளை அவ்வளவு பணம்?!” என்று அவர் கவலையுடன் கேட்க,

     “அதான் உங்க சின்னப் பொண்ணு பேர்ல போட்டு வச்சிருக்கீங்களே அந்தப் பணம் இருக்கு இல்லை” என்றாள் கார்த்திகா.

     “மன்னிச்சிடுங்க மாப்ளை. அ அது ஒண்ணுதான் நான் சின்னவளுக்குன்னு செஞ்சிருக்க ஒரே நல்ல விஷயம். அதையும் எடுத்துட்டா அவளுக்குன்னு என்ன இருக்கும்?!”

     “அது எனக்கும் புரியுது மாமா. ஆனா நான் கண்டிப்பா திரும்பக் குடுத்துடுவேன். இப்போ பிஸினசும் கொஞ்சம் டல்லா இருக்கு. அதான் வெளியிலயும் யாரும் பணம் தர யோசிக்கிறாங்க”

     “உங்க சூழ்நிலை எனக்குப் புரியுதுங்க மாப்பிளை. ஆனா?” என்று சிறிது நேரம் யோசித்தவர்,

     “நான் ஒண்ணு கேட்டா நீங்க தப்பா நினைக்கக் கூடாது.” என்றார்.

     “சொல்லுங்க மாமா”

     “நீங்க விக்கிறோம்னு சொன்ன அந்த இடத்தை எங்களுக்கு விக்க முடியுமா?!”

     “ஓ! பேரம் பேசறீங்களோ?!” என்றாள் கார்த்திகா நக்கலாக.

     “இல்லைங்க மாப்ளை. இப்போ நீங்க கேட்ட பணத்தை நான் உங்களுக்குக் குடுக்குறதுல எந்தப் பிரச்சனையும். ஆனா, அதை நீங்க திருப்பிக் கொடுக்கணும்னு எதிர்பார்த்து நான் உங்களுக்குக் கொடுத்தா அது நல்லா இருக்காது. ஆனா இப்போதைக்கு சும்மா தூக்கிக் கொடுக்குற அளவுக்கு எனக்கு வசதியும் இல்லைங்க மாப்ளை. அது உங்களுக்கேத் தெரியும். ஏற்கனவே இருந்த வீட்டை வித்துதான் உங்க கல்யாணமே நடத்தி வச்சேன். அதுல எஞ்சி இருந்த சொற்பத் தொகைதையத்தான் சின்னவளுக்குன்னு போட்டு வச்சேன். என்னோட ரிடையர்மென்ட் பணத்தையும் பெரியவளுக்கே தான் செலவழிச்சேன். இப்போதைக்கு என் பென்ஷனை வச்சுதான் குடும்பமே ஓடிக்கிட்டு இருக்கு. அப்படி இருக்கும்போது சின்னவளுக்குன்னு என்னால எதையுமே சேர்க்கவும் முடியலை. இப்போ இருக்குற பணத்தையும் கொடுத்துட்டா என்னால நிச்சயமா அவ கல்யாணத்துக்கு எதுவுமே செய்ய முடியாதுங்க மாப்ளை. நாளை பின்ன என்னால அந்த பணத்தைத் திரும்பக் கேட்கவும் முடியாது. அப்படிக் கேட்ட அது எல்லோருக்கும் மனக்கஷ்டம் உண்டாக்கும். அதனால்தான், சட்டுன்னு இந்த யோசனை வந்தது அதான் கேட்டுட்டேன்” என,

     ‘பரவாயில்லை! இந்த அப்பா ஒண்ணும் தெரியாதவர்னு நினைச்சிட்டு இருந்தேன். உஷார்தான். பேசாம அப்பா சொல்ற மாதிரி அந்த இடத்தை நாமளே வாங்கிக்கிட்ட நமக்கும் அதுல பங்கு இருக்கும்ல. அங்க இருந்தாலும் அதை இவங்க அந்தக் காவ்யாவுக்குதான் எழுதி வைப்பாங்க. இங்க அப்பா பேர்ல இடத்தை வாங்கிப் போட்ட நாளைக்கு நமக்கும் அதுல பங்கு வரும்ல’ என்று மனதுள் கணக்குப் போட்டாள் கார்த்திகா.

     தருண் யோசிக்க, “அப்பா, சொல்றதும் சரி மாதிரிதான் இருக்குங்க. பேசாம அந்த இடத்தை அப்பா பேர்ல எழுதிக் கொடுத்துட்டு பணத்தை வாங்கிப்போம்.” என்றாள் கார்த்திகா.

     “ம் சரிங்க மாமா. ஆனா கல்யாணநாள் ரொம்ப பக்கத்துல வந்துடுச்சி. ரெஜிஸ்ட்ரேஷேன் கல்யாணம் முடிஞ்சா பிறகு வச்சுக்கலாமா மாமா. அப்பா, அம்மா கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிடறேன்.” என்றான் தருண்.

     “சரிங்க மாப்ளை.”

     “இந்தாங்க மாமா, சூடா டீ சாப்பிட்டுக்கிட்டே இருங்க. பஜ்ஜியும் போட்டுக் கொண்டு வந்துடறேன்” என்றவள்,

     “அப்பா குழந்தையைப் பிடிங்க” என்று அவர் கையில் கொடுத்துவிட்டு உள்ளே போனாள்.

     சிறிது நேரத்தில் அவள் பஜ்ஜி போட்டு வந்துக் கொடுக்க, அனைவரும் சாப்பிட, பிள்ளைகளுக்கும் கீர்த்தி ஊட்டிவிட்டாள்.

     “சரிப்பா அப்போ நாங்க கிளம்பறோம். நாளைக்கு பணம் எடுத்துக் குடுத்துடுவீங்க இல்லை” என்றாள் கார்த்திகா கிளம்பும் முன் மீண்டும் உறுதி செய்து கொள்ள எண்ணி.

      “ம்? ம் மா” என்று தலையசைத்தார் சதாசிவம் கலக்கத்துடனேயே.

     நல்லவேளையாக சதாசிவம் பயந்தது போல், பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிடாமல், திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் தருணின் தாய் தந்தை இருவரும், ரெஜிஸ்டர் ஆபீசிற்கு வந்து பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர்.

     என்ன சதாசிவம் எடுத்த முடிவால் கார்த்திகா தான் சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொண்டு அனைவரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். அது என்ன முடிவென்றால், வாங்கும் இடத்தை தன் பெயரில் வாங்காமல் தன் சின்ன மகள் கீர்ததனாவிற்கு பதினெட்டு வயது பூர்த்தி அடைந்து விட்டிருந்ததால் அவளது பெயரிலேயே பத்திரப் பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தார் சதாசிவம். அதுதான் அவளது கோபத்திற்கு காரணம்.

      காரண காரியமின்றி எதுவும் நடக்காதல்லவா?! பிறப்பு இறப்பு, ஆக்கம், அழிவு, உதயம், அஸ்தமனம் எல்லாவற்றிலும் நம்மை மீறிய ஏதோ ஓர் சக்தியின் இயக்கம் நிறைந்திருக்கிறது. அந்த சக்திக்கு மனிதனாய் சூட்டிக் கொண்ட பெயர்தான் தெய்வம். நம் சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் நேரும் போது எத்தனை பெரிய ஜாம்பவானாய் இருந்தாலும் அவன் சரணாகதி அடைவது அந்தப் பரம்பொருளைத்தான். எவ்வளவு பெரிய பணக்காரனாய் இருந்தாலும், மரணப் படுக்கையில் அவன் வேண்டும் வேண்டுதல், நல்ல படியாய் என்னை எடுத்துகொள் இறைவா என்பதாக மட்டும்தான் இருக்கும். மரணம் யாருக்கும் விதி விலக்கல்ல! யாருக்கும்!

                                                             -தொடரும்… 

 

 

    

    

    

  

    

    

    

 

      

 

 

               

Advertisement