Advertisement

சொந்தம்-1

     “அம்மா நீ எப்போவும் எங்ககூட தான் இருக்கன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் உன் குரலைக் கேட்காம, உன்னோட அந்த அன்பான அரவணைப்பு இல்லாம இருக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கும்மா. அப்பா எங்களை ரொம்பவே நல்லா பாத்துக்கறார் ம்மா. ஆனாலும், நீ இல்லாத இந்த வீடு எங்களுக்கு ரொம்ப வெறுமையா இருக்கும்மா.”

     என்று தாயின் புகைப்படத்தின் முன் நின்று பேசிக் கொண்டிருந்த கீர்த்தனாவின் காதில் அவள் சகோதரி தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த கட்டளையான வார்த்தைகள் காதில் விழுந்து அவள் மனதைச் சுட்டது.

      “எனக்குத் தெரியாதுப்பா. எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நீ கிராண்டா அவர் அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி நடத்தித்தான் ஆகணும்” என்றாள் கார்த்திகா கட்டளையும் பிடிவாதமுமாய்.

     தமக்கையின் வார்த்தைகளைக் கேட்டவள், தாயிடம், “அம்மா, அப்பாவுக்கு எல்லா விதத்துலயும் நீதான்மா துணையா இருக்கணும்! நீ இல்லாம அவர் ரொம்ப கஷ்டப்படுறார் ம்மா. ஆனா அக்கா,” என்றவளுக்கு மேலும் வார்த்தை வராது துக்கம் தொண்டையை அடைத்தது.   

     “இப்படிப் பேசினா எப்படிம்மா? அவங்க கேட்குற மாதிரி கல்யாணத்தை நடத்தணும்னா பல லட்சங்கள் செலவாகுமே?! அவ்ளோ பணத்துக்கு நான் எங்கம்மா போறது?!” என்றார் சதாசிவம் கவலையாய்.

     “அதான் இந்த வீடு இருக்குல்ல. அதை வித்து செய்யுங்க” என்று கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சொன்னவளைப் பார்த்து அவர் மனம் வேதனை கொள்ள,

     “அக்கா கேட்குற மாதிரியே செஞ்சிடுப்பா. அவ வாழ்க்கை நல்லா இருந்தா போதும்” என்றாள் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்த கீர்த்தனா.

     “அம்மாடி?!” என்று சதாசிவம் சின்ன மகளைப் பார்க்க,

     “ம் ப்பா” என்று கண்ணசைவிலும் தலையசைவிலும் தன் முழுச் சம்மதத்தையும் கொடுத்தாள் பதிநான்கே வயதான அந்தப் பெரிய மனுஷி.

     “அதான் உங்கச் சின்ன மகளே சொல்லிட்டாளே அப்புறமென்ன?!” என்றாள் கார்த்திகா அலட்சியமாய்.

     கார்த்திகாவிற்குச் சிறுவயது முதலே தான் நினைத்தது நடக்க வேண்டும். தானே எல்லாவற்றிலும் முதலாய் இருக்க வேண்டும்.

     என்று கீர்த்தனா பிறந்தாளோ, அப்போதிலிருந்து அவள் தாய் தந்தையின் அன்பு அவளுக்கும் கிடைப்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை! அதிலும் தாய் இறந்த பின் அத்தனைச் சிறு பெண்ணிடம் எல்லாவற்றையும் சொல்லிக் கேட்டு அனுமதி பெற்று தந்தை ஒவ்வொரு செயலையும் செய்வதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு அத்தனைக் கோபமும் எரிச்சலும் மண்டியிடும்.

     எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் மனுஷி அவள். அப்பா அம்மா மீது பாசம் இருந்தாலும் தன் தேவைக்குப் பின்தான் எல்லாமே.

     அவள் ஆசைப்படியே, வீட்டை விற்றுத் தன் சக்திக்கு மீறி அவளின் திருமணத்தை ஓரளவு விமரிசையாகவே நடத்தி முடித்து அவளை நல்ல படியாய் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார் சதாசிவம்.

     “ப்பா. இன்னிக்கு ஒருநாள்தான் நாம இந்த வீட்ல இருப்போம்ல?!” என்று தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டு கேட்ட மகளைப் பார்த்து,

     “என்மேல கோபம் இல்லை இல்லம்மா?!”

     “எதுக்குப்பா இப்படிக் கேட்கற?!”

     “உனக்குன்னு எதுவுமே மிச்சம் இல்லாம அப்பா வித்துத் தொலைச்சுட்டேனேன்னு” என்றார் வேதனையாய்.

     “ஏன் பா அப்படிச் சொல்ற? எனக்குதான் நீ இருக்கியேப்பா?! உனக்கு மேல எனக்கு என்னப்பா வேணும்?!” என்று வயதிற்கு மீறிய பக்குவத்தோடு சொன்னவள்,

     “நான் பெரியவளாகி நல்லா சம்பாதிச்சு இதே போல ஒரு வீடு கட்டுவேன் பா! அதோட முன்வாயில்ல பெருசா சக்தி சதாசிவம்னு உன் பேரையும் அம்மா பேரையும் சேர்த்து பித்தளை எழுத்துக்கள்ல பொறிச்சு, அதுக்கு லைட் எல்லாம் போட்டு, எல்லோரும் வீட்டுக்குள்ள நுழையும் போதே என் அம்மா அப்பா பேரை கெத்தா வியந்து ரசிக்கும்படி செய்வேன்” என்றாள் கண்ணில் கனவுகளோடு.

                                                *****

     நான்கு வருடங்களுக்குப் பிறகு. “டேய் நில்லுடா நில்லு? கையில மாட்டின அவ்ளோதான்” என்று ஓடிச்சென்று அவன் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தியவளைச், சற்று தூரத்தில் இருந்த அந்த இரு கண்கள் கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தன.

     “பிசாசு இன்னிக்கும் நீதான்டி ஜெயிச்ச!” என்றவன் மூச்சிரைக்க, வியர்வை சொட்டச் சொட்ட நின்ற அந்தப் பதின் வயதுப் பேரழகியின் அழகைக் கண்கொட்டாமல் ரசிகக,

      “என்னடா அப்படிப் பார்க்குற?!” என்றாள் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து.

     “இப்போல்லாம் உன்னை பார்க்கவே கண்ணு கூசுதுடி!” என்றவன்,

     “ஹான் கூலிங் கிளாஸ் மாட்டிக்கோ!” என்று அவள் மொக்கை செய்ய,

     “ப்ச்! பேசாம நாம இப்போவே எங்கயாச்சும் கோவில்ல போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?!” என்றான் ஆசையும் காதலுமாய்.

     “ஓ! பண்ணிக்கலாமே?!” என்றவள்,

     “ஆனா சாருக்கு இப்போ என்ன வயசாச்சு?! நாம கல்யாணம் செய்துகிட்டா நாம வாழ்க்கை நடத்த என்னவெல்லாம் திட்டம் வச்சிருக்கீங்க?! சொந்த வீடெல்லாம் கூட எனக்கு வேணாம். ஆனா வாடகை வீடும், சோறு பொங்கி சாப்பிடவாச்சும் காசு வேணுமே?” என்று அவள் சீரியசாகச் சொல்ல,

     “என் அப்பா தான் சேர்த்து வச்சிருக்காரே கோடி கோடியா! அப்புறமென்ன?!” என்றான் அவன் சாதாரணமாய்.

     “போடா! மாமா சேர்த்து வச்ச காசுல எல்லாம் நான் சாப்பிட மாட்டேன். நீ சுயமா சம்பாதிச்சு என்னைப் பார்த்துக்கணும். அது கம்மி சம்பளமா இருந்தாலும் பரவாயில்லை” என்றவள்,

     “இன்னொரு முறை கல்யாணம் அது இதுன்னு பேசுன கொன்னுடுவேன். ஒழுங்கு மரியாதையா படிச்சு முடிச்சிட்டு வேலை வெட்டிக்குப் போற வழியைப் பாரு” என்றாள் சற்றே கண்டிப்பாய்.

     “சரி சரி சரி! கோச்சுக்காதடி. இனி இந்த பேச்சே எடுக்க மாட்டேன்” என்றான்.

     “என்ன?! அப்போ கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?!” என்று இவள் முறைக்க,

     “ஐயோ அப்படி இல்லடி. படிச்சு நல்ல வேலைக்குப் போகாம கல்யாணப் பேச்சை எடுக்க மாட்டேன் போதுமா?” என்றான்.

     “ம்!! அந்த பயம் இருக்கட்டும்” என்றவள்,

     “சரி சரி நேரமாகுது. இப்படி தினமும் உன்கூட பார்க்ல உட்கார்ந்து கடலை போட்டுட்டு வீட்டுக்குப் போய் சமைச்சிட்டுப் படிக்க நேரமாகிடுது. பாவம் அப்பா பசியோட காத்துட்டு இருக்கார். இனி நான் தினமும் எல்லாம் உன்னைப் பார்க்க வர மாட்டேன்” என்று அவள் கண்டிஷன் போட,

     “வராத! நான் வீட்டுக்கு வந்துட்டுப் போறேன்” என்றான் அவன்.

     “வா வா! வந்து உன் மாமனார் கிட்ட கடலை போடு” என்றுவிட்டு அவள் எழுந்து கொள்ள முயன்ற நேரம் நன்கு இருட்டி விட்டிருக்க, பார்க்கில் மக்கள் கூட்டம் வெகுவாய்க் குறைந்திருந்தன.

     பருவ வயதின் உணர்வுகளிலும், ஆர்வத்திலும், ஆசையிலும், அவளின் பேரழகிலும் திணறிக் கொண்டிருந்த ரவிவர்மனுக்கு அன்று ஏனோ ஆசை எல்லை மீற, இதுவரைக் கட்டிக் காத்து வந்த பொறுமையையும், அடக்கத்தையும் சிதறவிட்டவனாய், சட்டென்று எழுந்து கொள்ளப் போனவளைத் தன்னருகே இழுத்து மெலிதான பயமும் நடுக்கமும் ஆசையும் போட்டியிட அவள் கன்னத்தில் பட்டும் படாமல் முத்தமிட்டு அவளை விடுவிக்க, அவள் திடுக்கிட்டுப் போனாள்.

     “சாரி சாரிடி. என்னவோ தெரியலை இன்னிக்கு நீ வந்ததுல இருந்தே உனக்கு முத்தம் கொடுக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்ததுடி. அதான் இப்படிப் பண்ணிட்டேன். சாரி சாரி” என்றான் பத்தொன்பதே வயதான அந்த இளம்வாலிபன்.

     சில நொடிகள் நடந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாது தவித்தவள், அவன் என்னதான் மன்னிப்புக் கேட்டாலும், அவள் என்னதான் அவனை உயிருக்கு உயிராய் நேசித்தாலும், அவன் செய்தது பெரும் தவறு என்பது உரைக்க, பளீரென்று அவன் வீங்கும்படி அறைந்திருந்தாள்.

     இதற்குள் அவர்களை வெகு நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் அவர்கள் அருகே வந்து ரவியின் சட்டையைப் பிடித்து இழுத்து சரமாரியாய் தாக்க,

     “ஏய் விடு யார் யார் நீ?!” என்று கத்திக் கொண்டே ரவியை அவனிடமிருந்து விடுவிக்க முயன்றாள் சற்று முன்பு அவன் மேல் எழுந்த கோபத்தை எல்லாம் மறந்தவளாய்.

     “ஏய் நானும் பார்த்துட்டுத்தான்டி இருக்கேன் நீயும் அவனும் போடுற ஆட்டத்தை! ஏதோ சின்ன வயசுல இருந்து பழகின பசங்க பிரெண்ட்லியா சுத்துறீங்கன்னு பார்த்தா, இன்னிக்கு இந்த நாய் உனக்கு முத்தமெல்லாம் குடுக்குது! காதலிக்கிறீங்களோ?! கொன்னுடுவேன் ஜாக்கிரதை! எவன் உன்னைக் காதலிச்சாலும் சரி, எனக்குதான் நீ பொண்டாட்டி ஆகணும்!” என்று அவள் கன்னங்களை அழுந்தப் பிடித்துச் சொன்னவன், அவனிடம் திரும்பி அவன் கழுத்தை இறுக்கமாய் பற்றி,

     “இன்னொரு முறை நீ அவகூட சேர்ந்து சுத்துறதைப் பார்த்தேன். பார்க்கக் கூடாது!” என்று மிரட்டி விட்டு செல்ல, இருவருக்குள்ளும் பயப்பந்து உருண்டது.

     “இ இவன் யாரு ரவி?!” என்றாள் மெல்லிய குரலில்.

     “தெரியலை கீர்த்தி! இவன் அப்பப்போ நம்மளை கவனிக்கிறதைப் பார்த்திருக்கேன். ஆனா இவன் இந்த எண்ணத்துல நம்மளைப் பார்க்குறான்னு எனக்குத் தெரியலை! நான் அப்பாக்கிட்ட சொல்லவா?! அவர் இவனைப் பார்த்துப்பார்.”

     “இல்லை இல்லை! வேணாம் ரவி அப்புறம் பிரச்சனை பெரிசாகிடப் போகுது. இன்னொரு முறை அவன் வந்தான்னா அப்புறம் மாமாகிட்ட சொல்லலாம்.”

      “ம். அதுவும் சரிதான். அப்பா இதை ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போய்டுவார்”

     “ம்! அதுக்குத்தான் வேணாம்னு சொல்றேன்.”

     “ரொம்ப வலிக்குதாடா” என்றாள் அவன் உதட்டோரம் வழிந்த ரத்தத்தைப் பார்த்து.

     “ம் கொஞ்சமா”

     “திருப்பி அடிச்சிருக்க வேண்டியது தானே?!”

     “அடிக்கணும்னு தான் தோணுச்சு! எங்க நீ பயந்துடுவியோன்னு தான் விட்டுட்டேன்.”

     “ஆமாம்! இல்லைன்னா அவன் கை காலை உடைச்சிருப்ப அப்படித்தானே?!” என்று முறைத்தாள் அவள்.

     “இல்லையா பின்ன?!”

     “நம்பிட்டேன்டா பயந்தாங்கோலி. ஒருநாள் இதைவிட பெருசா எதாச்சும் பிரச்சனை வந்தா இப்படித்தான் அடிவாங்கிட்டு சும்மா இருப்பியா?!”

     “ஏன் கீர்த்தி இப்படி எல்லாம் பேசுற?! ”

     “வேற என்னடா கொஞ்சமாச்சும் தைரியமா நடந்துக்கோ. அவன் அப்படி மிரட்டிட்டுப் போறான். நீ பேசாம நிக்குற!” என்றாள் சலிப்பாக.

      “அவன் பேசினா நடந்திடுமா? என் உயிர் இருக்க வரைக்கும் என் கீர்த்தியை யாருக்காகவும் எப்போவும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.” என உறுதியாய் சொல்ல, அவள் மெல்ல அவன் கையில் தன் கையைக் கோர்த்துக் கொண்டு,

     “தப்புன்னு தெரிஞ்சா தைரியமா துணிஞ்சு நில்லுடா. இனி எப்போவுமே நீ தைரியமா கம்பீரமா தான் இருக்கணும்! சரியா?!”

     “கண்டிப்பா! என் கீர்த்தி சொன்ன பிறகு மறுபேச்சு ஏது?!”

     “அது சரி!” என்று அவள் சிரிக்க, அவன் உடன் சிரித்தான்.

                                               ******

Advertisement