Advertisement

இதற்குள் அவனது உடமைகள் பொட்டலமாகக் கட்டி தனித்து வைக்கப் பட்டது. சட்டைப் பையினுள் என்ன இருக்கிறது என பார்த்தனர். அவன் வேலை பார்க்கும் கம்பெனியின் பெயர் எழுதப்பட்ட அடையாள அட்டை புகைப்படத்துடன் இருந்தது.

                                             காவலர்கள் கம்பெனிக்குத் தகவல் தெரிவித்த அரசு இன்று வந்து சேர்ந்திருக்க வேண்டுமே. நம்மை ஏமாற்றி விட்டானா? அல்லது ஏதும் அசம்பாவிதம் நடந்து விட்டதா என்று எண்ணி தவித்துக் கொண்டிருந்தார். கம்பெனியின் உரிமையாளர். அவர் அரசுவின் ஆற்றல் திறனை நன்கு உணர்ந்தவர். அரசுவிற்குப் பதிலாக அமர்த்தியவனின் சாமர்த்தியம் சரியில்லை. அதனால் தனக்கு பல ஆயிரங்கள் நஷ்டம் என்பதை அறிந்தார். அரசுவின் வரவை ஆவலோடு எதிர் பார்த்திருந்தார்.

                                             அந்தச் சமயத்தில் தான் துறைமுக மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அரசு இருக்கிறான் என்பதைக் காவலர்கள் தெரிவித்தனர்.

                                             விரைந்து சென்று அரசுவைப் பார்த்தார். கோமாவில் கிடந்த அரசுவை திக்கற்ற நிலையில் விட்டு வர மனம் இடம் தரவில்லை.

                                             தகுந்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் தன் வீட்டிற்கே கொண்டு சென்றார். வீட்டில் அரசுவுக்கென ஒரு தனியறை ஒதுக்கப்பட்டு படுக்க வைக்கப்பட்டான் தகுந்த மருத்துவரைக் கொண்டு சிகிச்சையும் நடத்தினார். தன் வீட்டு வேலைக்காரப் பெண் நிபிஷாவை அவருக்கும் பணிவிடை செய்ய வைத்தார்.

                                             நிபிஷா அழகும் இளமையும் ததும்பிய சித்திரப்பார்வை. தனது ஏழ்மையினாலும் பெற்றவளை இழந்து மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளாகியதாலும் எண்ணெய் வள நாட்டில் பணிப்பெண்ணாய் இருக்கிறாள். வட மாநிலத்து இந்தியப் பெண் ஆவாள்.

                                             முன்பே பலமுறை அரசுவைப் பார்த்திருக்கிறாள். அவனது ஆண்மையுடன் கூடிய அழகை ரசித்திருக்கிறாள். தனக்கு இவனே மணவாளனாய் அமைந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனைத்தேரில் ஏறி வலம் வந்திருக்கிறாள்.

                                             அரசு இந்நிலையில் வந்து படுத்திருப்பதுவும் தான் அவனுக்கு சிசுருஷை செய்ய நேர்ந்ததையும் எண்ணி வியந்தாள். மணவாட்டி ஆகாவிட்டாலும் மருத்துவ உதவியாவது செய்ய முடிந்ததே என்று எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

                                             அவனை இந்த நிலைமையில் காணக்கான நிபிஷாவின் உள்ளம் துக்கித்து துயருற்றது.

                                             ஹேய் அல்லா இந்தப் பாயி உயிர் பிழைத்து எழ வேண்டும். நடமாட வேண்டும். வேலை செய்ய வேண்டும் என்று தனது ஐந்து நேரத் தொழுகையிலும் தனக்கு மேலாக அவனுக்கே மனமுருக வேண்டிக் கொண்டாள்.

                                             நிபிஷாவின் சிரத்தையான பணிவிடையாலும் பக்திமிக்க தொழுகையாலும், முதலாளியின் அன்பு சிகிச்சையாலும் அரசு சற்று தெளிவடைந்தான்.

                                             அரசு எழுந்து நடமாடிக் கொண்டு அவன் பணிகளை மட்டும் செய்து கொள்வதற்கு மட்டுமே ஓராண்டு ஆகிவிட்டது.

                                             இருந்த போதிலும் பழைய நினைவுகள் தெளிவாகத் தெரியவில்லை.

                                             கப்பலில் இருந்து இது வரை நிகழ்ந்த நிகழ்வுகளை நிபிஷாக் கூறியதன் மூலமே தெரிந்து கொண்டான்.

                                             ஏன் என் வேலைக்குப் போகாமல் எம்.டி-யின் வீட்டில் பொழுதைக் களித்துக் கொண்டிருக்கிறேன் என்று நிபிஷாவிடம் கேட்டான்.

                                             கனி என் செல்வம் ஆனந்தபிரகாஷ். மாமா இவர்கள் ஊரில் இருக்கிறார்களே இவர்களுக்கு ஒரு மடல் எழுத வேண்டும் என் தொலை பேசியில் பேச வேண்டும் என்ற எண்ணம்.

                                             சிறு குழந்தைகள் எழுது பலகையில் எழுதிவிட்டு எழுதியதை அழித்து விடுவது போல அவன் உள்ளத்தில் கனியின் அத்தியாயம் அழிக்கப்பட்டிருந்தது.

                                             மீண்டும் ஓரிரு மாதங்கள் சென்றுவிட்ட நிலையில் அரசு கம்பெனி வேலைக்குச் சென்றான். வேலைக்குச் சென்றவுடன் எம்.டி வீட்டிற்கு வருவதை விடுத்து வழக்கமாக அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று விட்டான்.

                                             வேலையில் மட்டும் திறமையைக் காட்டிய அரசு யாருடனும் எதுவும் பேசுவதாயில்லை. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பதாகக் காணப்பட்டான்.

                                             ஒருநாள் எம்.டியின் அழைப்பிற்கிணங்க எம்.டியின் இல்லத்திற்கு விளைந்தான்.

                                             அரசு நீ ஆறு வருடம் வேலை செய்ய வேண்டியிருந்த நிலையில் ஒன்றேகால் ஆண்டு சுகவீனமாய் இருந்தாய். இப்பொழுது அருமையாக வேலைகெய்கிறாய். ஒன்றேகாலி ஆண்டு உனக்கான மருத்துவச் செலவுக்கு ஓராண்டு சம்பளத்தைப் பிடித்துக் கொண்டால் கூட சரி வராது.

                                             எனவே ஆறு ஆண்டை ஏழு ஆண்டாக வேலை செய்து விடு. ஒரு வருடம் மட்டும் அரைச் சம்பளம் தருகிறேன். மற்ற ஆண்டுகளில் வழக்கமானச் சம்பளம் பெற்றுக்கொள். என்ன நான் சொல்வது சரிதானா உனக்குச் சம்மதமா என்று கேட்டார்.

                                             உங்களுக்கு எவ்வளவு பெரிய மனது. சுயநினைவற்றுக்கிடந்த என்னைத் தூக்கி கடலில்கூட வீசியிருக்கலாம். ஆனால் உங்கள் கருணை உள்ளம் என்னைக் கொண்டு வந்து, உங்கள் வீட்டிலேயே வைத்து ராஜவைத்தியம் செய்திருக்கிறீர்கள்.

                                             நான் இன்று உங்கள் முன் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு காரண கர்த்தா நீங்க தானே. நீங்கள் எத்தனை ஆண்டு வேலை செய்யச் சொன்னாலும் செய்வேன். நீங்கள் பிச்சையாக இட்டது இந்த உயிர். இது உங்கள் காலடியிலே கிடக்க வேண்டுமானாலும் கிடப்பேன் என்று கண்ணீர் மல்கச் சொன்னான்.

                                             இவன் வருவதை சாளரம் வழியே பார்த்திருந்த நிபிஷா ஓடோடி நின்று கேட்டாள். ஓ இவனுக்குத் திருமணம் ஆன மாதிரி தெரியவில்லையே. ஆகியிருந்தால் மனைவி மக்களைப் பார்க்க வேண்டும் என்று கேட்டிருப்பான் அல்லவா? நாம் நம் எஜமானரிடம் அவன் மீதுள்ள அன்பை எடுத்துச் சொல்லி திருமணத்தை நடத்தி வையுங்கள் என்று கேட்க வேண்டும். நடந்தால் இருவரும் காலுக்குச் செருப்பாக இருந்து நாம் உழைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

                                             எஜமானருக்குத் தெரியா வண்ணம் அவனுக்கு மட்டும் தெரியும்படி நின்று கொண்டு கை அசைத்துச் சிரிக்க அவன் கையடித்து விட்டு உம்மென்றிருந்தான்.

                                             நிபிஷா என்று குரல் கொடுத்தார் எம்.டி. தூரத்திலிருந்து ஓடி வருபவள் போன்று ஓடிவந்து என்னங்க ஐயா

                                             எங்கள் இருவருக்கும் தேனீர் கொண்டு வா என்று கட்டளையிட்டார்.

                                             தேனீர் கொண்டு கொடுத்து விட்டு அவண் தேனீர் அருந்தும் அழகை பிறந்த குழந்தை பால்சப்பிக்குடிப்பதை ரசிக்கும் தாய் போல் ரசித்து நின்றாள்.

                                             அரசு நான் சென்று வருகிறேன் ஐயா என்று கூறிச் சென்று விட்டான்.

                                             மாதம் முடிந்தவுடன் அவனுக்கு அரைச்சம்பளம் வழங்கப்பட்டது. சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட அரசு வழக்கம்போல் தனது செலவிற்குச் சிறிது பணம் எடுத்து கொண்டு மீதியை அஞ்சலகத்திற்குச் சென்று அனுப்பி வைத்தான்.

                                             பணம் அனுப்பி விட்டு வருகிறோமே. எங்கு அனுப்புகிறோம். யாருக்காக அனுப்புகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் அனுப்பி விடடு வந்தான். மாதாமாதம் இப்பணி தொடர்ந்தது.

                                             நிபிஷா ஒரு நாள், இவன் தங்கியிருக்கும் இடத்திற்கு இவனைக் காணச் சென்றாள்.

                                             நிபிஷாவா, வாவா எனக்கு உயிர்வரக் காரணமாயிருந்த உதய நிலவே வா, வா என்று வரவேற்றாள்.

                                             இவனது வரவேற்பு அவளுக்குச் சாதகமாய் இருப்பதை நினைத்த நிபிஷா என் உயிர் உங்கள் வசமல்லவா மாட்டிக் கொண்டது. அதை மீட்க முடியாது தவிக்கிறேன். உங்களை நான் உள்ளத்தால் மிகவும் நெருங்கி விட்டேன். நாம் இருவரும் நிக்காஹ் நடத்திக் கொள்வோமா மனதில் நினைத்தாள்.

                                             நிக்காஹ் என்றால் திருமணமா? உனக்கும் எனக்கும் திருமணம் என்று யார் சொன்னா நான் சொன்னேனா.

                                             நீங்கள் சொல்லவில்லை. நான் உங்களை விரும்புகிறேன் நீங்களும் என்னை விரும்புகீறிர்கள் தானே. மணம் முடித்து கொண்டால் என்ன என்று நினைத்தேன்.

               ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிய அரசு. நான் உன்னை திருமணம் செய்வதற்காக விரும்பவில்லை. எனக்கு உதவிகள் புரிந்து ஆளாக்கியதற்கு நன்றிக்கடன் தீர்க்க எண்ணுகிறேன். அவ்வளவுதான் திருமணம் வேண்டாம், வேண்டாம் என்று கூறி மனநிலை சரியில்லாதவன் போன்று திரு, திருவென்று விழித்துக்கொண்டு கைகளை ஆட்டினான்.

               நன்றிக் கடனாகத் திருமணம் செய்து கொள்ளலாமே என்றாள். அவளும் விடாப்பிடியாக.

               இல்லை, நீ போ. இப்படிப் பேசுபவர்களை எனக்குப் பிடிக்காது. நான் உன்னை எம்.டியிடம் சொல்லிக் கொடுத்துக் கசையடி கொடுக்கச் சொல்கிறேன் பார்.

               அரசு மனநிலை பாதிப்படைந்தவராகிவிட்டாரா என்ன ஏன் இப்படிப் பேசுகிறார். பழைய நினைவுகள் எதுவும் தோன்றாது. மறந்துவிட்ட நிலையில் புத்தியும் பேதலித்த மாதிரித் தோன்றுகிறது. பாவம் வேலை நன்றாகச் செய்கிறார் என்று எஜமானர் சொன்னாரே இது எப்படி என்று குழம்பியவாறு நிபிஷா வீடு சென்றடைந்தாள்.

               அவள் மனம் ஏனோ வெறமையடைந்தது போன்று வேதனையுற்றது. வீட்டு வேலைகளைச் செய்து முடித்த நிபிஷா. அரசு இங்கிருக்கும்பொழுது உபயோகப்படுத்திய அறைக்குச் சென்று அதனைச் சுத்தம் செய்ய முயன்றாள். ஒவ்வொன்றாக எடுத்துச் சுத்தம் செய்த பொழுது, ஒரு சிறிய பார்சல் தூசிகளுடன் காணப்பட்டது. அதனை எடுத்துப் பார்த்தவள் இது அரசு உடையதாகத்தான் இருக்க வேண்டும். அவருடைய துணிகளைச் சுத்தம் செய்யும்பொழுது எப்படியோ தவறுதலாக இங்கு தங்கிவிட்டது போலும். நாளை அங்கு சென்று கொடுத்துவிட்டு வருவோம் என எடுத்து வைத்தாள்.

               எம்டிக்கு அரசு மேல் தனிப்பாசம் ஏற்பட்டிருந்தது. அவர் அரசு பழைய மாதிரி நல்ல நிலைமையில் இல்லை. முன்புள்ள நினைவுகளற்று இருக்கிறான் என்பதை உணர்ந்திருந்தார்.

               ஒருநாள் தொழிற்சாலைக்குச் சென்றபோது அரசுவைப் பார்த்து முன்பெல்லாம் ஆண்டுக்கொருமுறை ஊருக்குக் கிளம்புகிறேன் என்பாய். இப்பொழுது ஒன்றரை ப்ளஸ் மூன்றரை ஆண்டுகளாகின்றன. ஊருக்குக் கிளம்புவதாயில்லையே ஏன்? என்று பரிவோடு கேட்டார்.

               பதில் சொல்லத் தெரியாமல் விளித்த அரசுவிடம் நிர்வாகி விடுமுறை தருவதற்கு மறுத்தால் உடனே என்னிடம் ஓடி வருவாயே என் மனைவி மகன் என்று எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பாய். வீடு கட்ட வேண்டும் என்றாய். கட்டினாயா என்று கேட்டார்.

               எதுவும் தெரியவில்லை. ஏதோ எனக்கு ஆகிவிட்டது என்று புரிகிறது. என்னவென்று புரியவில்லை. ஒப்பந்த ஆண்டுகள் முடிந்தபின்பே செல்கிறேன் என்றான்.

               பார்சலை எடுத்துக்கொண்டு அரசுவைப் பார்க்கச் சென்றாள் நிபிஷா.

               நிபிஷாவா வா அன்று கோபமாய்ச் சென்றுவிட்டாய் போலும். நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டான். உன்னை எனக்குப் புரியவே இல்லை. உன் அறையை ஒழுங்குபடுத்தியதில் இந்தப் பார்சல் கிடைத்தது. அதை உன்னிடம் தந்து செல்லவேண்டும் என்றுதான் வந்தேன். இந்தா பிடி நான் சென்று வருகிறேன் என்று கூறி பார்சலை அவன் கையில் வைத்தாள்.

               போவதற்குத் திரும்பியவளைப் போகாதே, நில் என்று கையைப் பிடித்திழுத்து தடுத்து நிறுத்தினான்.

               நீதான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டாயே. பின் ஏன் கையைப் பிடிக்கிறாய் என்று கேட்ட நிபிஷாவை முறைத்துப் பார்த்தான். வேண்டாம் போ என்று விரட்டி விட்டுவிட்டாள்.

               நிபிஷா பாரம் நெஞ்சை அழுத்துவது போன்ற வேதனையுடனே வீடு போய்ச் சேர்ந்தாள். எஜமானின் மகன் ஸெராத்கின் பொறியியில் கல்லூரியில் படிப்பவன் விடுமுறைக்கு வந்திருந்தான். அவனுக்கு நிபிஷா மேல் எப்பொழுதுமே ஒரு கண்.

               வாசலில் நின்று கொண்டிருந்தான் ஸெராத்கின். நிபிஷா வேகமாக உள்ளே செல்வதைக் கவனித்த அவன் அவள் அறியா வண்ணம் அவள் அறைக்குள் சென்று தாழ்ப்பாளிட்டான். தாழ்ப்பாள் சத்தம் கேட்டு திரும்பிய நிபிஷா சின்ன எஜமானரே வணக்கம். என்ன காரணமாக இங்கு வந்தீர்கள்.

               தேனீர் வேண்டுமா தயாரித்துத் தரட்டுமா. ஷ் – வாயில் கைவைத்துப் பேச வேண்டாம். நீ தான் வேண்டும்.

               சொல்லில் நிற்காமல் அவளது கையைப் பிடித்து இழுத்து அவன்மேல் விழவைத்தான். திமிறி எழுந்த நிபிஷா வேடன் கையில் சிக்கிய மானாய் பதறித் துள்ளினாள்.

               ஐயா வணக்கத்திற்குரியவரே, நீங்கள் எங்கே நான் எங்கே மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். நான் உங்கள் கழிவறைக் கொல்லையில் பூத்த நெருஞ்சிப்பூ என்னை நெருங்காதீர்கள்.

               நான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அடிமை வாழ்வையும் இழந்து பிச்சைக்காரி ஆக்கிவிடாதீர்கள். தயவுசெய்து சென்று விடுங்கள். கண்ணீர் பெருக்கினாள்.

               அவள்மீது உண்மையிலேயே அன்பு கொண்ட ஸெராத்கின் அவள் கண்ணீரைக் கண்டதும் விலகிச் சென்றுவிட்டான். தனது அணுகுமுறை தவறோ என்ற சிந்தனையில்,

               ஹே அல்லாஹ் இந்த நிபிஷா பெண் திலகமே எனக்கு மணவாட்டியாக வருவதற்கு நீ அருள்புரிய வேண்டும் என தொழுதான்.

               நிபிஷா என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். விழியில் நீர் அருவியெனக் கொட்டிக் கொண்டிருந்தது.

               நிபிஷா இங்கே வாம்மா என்ற அன்பான குரல் எஜமானரின் வாயிலிருந்து அல்லவா வருகிறது. உணர்ந்த நிபிஷா கண்களைத் துடைத்துக் கொண்டே என்னங்க ஐயா.

               நிபிஷா உன் விழிகள் கலங்கியிருக்கிறதே. அழுதாயா அம்மா இரக்கத்துடன் கேட்டார்.

               அவர் குரலின் கனிவைத் தாங்கிக் கொள்ளமுடியாத நிபிஷா பெற்றவன் முன் தன் உள்ளக் குமுறலைக் கொட்டும் சேயாகக் குமுறி குமுறி அழுதாள்.

               என்னம்மா, உனக்கு இங்கு என்ன குறை. உன்னை யாராவது இம்சித்தார்களா? சொல் நிபிஷா சொல்.

               ஐயா நான் ஒன்று கேட்கலாமா? என்மீது அன்பு கொண்டு நான் கேட்பதைச் செய்வீர்களா.

               மாற்றாந்தாயால் நீ அடைந்த இன்னல் பொறுக்காது தானே நான் உன்னை இங்கே சேர்த்துக் கொண்டேன். உன்னை வேலைக்காரி மாதிரியா நான் நடத்துகிறேன். குடும்பப்பொறுப்பையே, என் மனைவியையே உன் பொறுப்பில் விட்டு வைத்திருக்கிறேன்.

               என்றாவது உன்னைக் கடுஞ்சொல் கூறி சோதித்திருக்கிறேனா. நீ வேலை செய்யும் பணிக்கும், உன் குணமும், பண்பும் நமக்கு இப்படி ஒரு பெண் இல்லையே என என்னை நினைக்க வைத்திருக்கிறாய். சொல் என்ன வேண்டும்.

               எனக்கு நிக்காஹ் வேண்டும். குடும்பம் நடத்தி குழந்தை பெற்று போற்றி வளர்ப்பதற்காகவும், என் பெண்மையைப் போற்றிக் காப்பதற்குத் துணை வேண்டும். அதுவும் தமிழ்நாட்டிலிருந்து வந்து நம் வீட்டில் ஹோமாவில் கிடந்தானே. அரசு அவன் தான் துணையா வரவேண்டும்.

               நாங்களிருவரும் உங்கள் வீட்டு நாயாய்க் கடைசிவரை உழைப்போம் என்று கூறினாள்.

Advertisement