Advertisement

14

               காலைக் கதிரவன் உதித்தான். அந்திச் சூரியன் மறைந்தான். பகலும், இரவும் போட்டியிட்டு ஓடிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு விடியலிலும் இன்று மடல் வரலாம். ஏன் அவரே கூட வரலாம் என்ற நினைப்புடனே எழுவாள்.

               மனதை ஒருமுகப்படுத்தி இயந்திரமாக உழைத்தாள். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலை ரோபாட் மாதிரி தவறின்றி நடந்து வந்தது.

               ஒவ்வொரு இரவிலும் என்னங்க? ஏன் இப்படிச் செய்தீங்க. எங்களை மறந்து விட்டீர்களா? நீங்களாவது நல்லாயிருக்கீங்களா? என்ற மந்திரத்துடனே உறங்கினாள்.

               பிரகாஷ் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதியிருந்தான். தேர்வு முடிக்காகக் காத்திருந்தான்.

               பிரகாஷ் இங்கே வா என்றாள் கனகு. என்னம்மா இதோ வந்துவிட்டேன் என்று அருகில் வந்து நின்றான்.

               என்னப்பா எல்லாப் பையன்களும் தேர்வு முடிவு தெரியும் வரை விடுமுறையில் கூட கம்ப்யூட்டர், டைப்ரைட்டிங், மியூசிக் என்று என்னவெல்லாமோ படிக்கிறார்களே நீ என்னிடம் படிக்கப் போகிறேன் என்று சொல்லவில்லை.

               நீயும் மற்றப் பையன்களைப் போல் படி. உன் படிப்புச் செலவு எவ்வளவு ஆனாலும் அம்மா தருகிறேன் என்றாள் கனகு.

               இல்லையம்மா. எனக்குப் படிப்பில் அத்தனை ஆர்வம் இல்லை. பள்ளி இறுதிப் படிப்பு போதும். மின்சார வாரியத்தில் வேலைபார்க்க ஆசைப்படுகிறேன். லைன்மேன் ஆக வேண்டியதற்கான ஒரு வருட பயிற்சிப் பள்ளி இருக்கிறது.

               இனிமேல்தான் அப்ளிகேசன் அனுப்ப வேண்டும். இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். படித்துவிட்டால் உடனே வேலையில் சேர்ந்து விடுவேன். தனியாகவும் கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்தால் நன்கு சம்பாதிக்கலாம். படிப்படியாக முன்னுக்கு வரலாம் என்றான் பிரகாஷ்.

               அப்படியா? உன் அப்பா உன்னைப் பெரிய படிப்பு படிக்க வைக்க விரும்பினாரே. ஆனந்த பிரகாஷ் என்று பெயரிட்டு என் பையன் உயர்கல்வி கற்று ஆனந்தமாய் பிரகாசிக்க வேண்டும் என்று சொன்னாரே. நீயானால் இந்தப் படிப்பே போதும் என்கிறாய்.

               அம்மா அந்த ஆளைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள். பெரிய படிப்பு படிக்க வைக்கிறவர் எங்கே போனார். பணம் அனுப்பினால் போதும் என்று நினைப்பவரின் விருப்பத்தை நிறைவேற்ற என்னால் முடியாது.

               அம்மா, நீங்கள் அவருடைய பணத்தைக்கூட வேண்டாம் என்று கூறிவிட்டீர்கள். நான் உங்கள் பிள்ளையம்மா. படித்தால் மட்டும் போதுமா? படிக்காத மேதைகளிலொருவனாக இருந்துவிட்டுப் போகிறேன்.

               படிப்பை அவர் விரும்பியதற்காகவோ, நான் படிப்பை வெறுக்கிறன். பூப்போன்ற மனதை கல்லால் அடிக்க மாட்டேன்ம்மா. உழைத்து சம்பாதித்து பண்புடன் இருப்பேன். உங்களை விட்டு அங்கே, இங்கே அசைய மாட்டேன்.

               அம்மா என்னை விடவும் தம்பி கல்வியில் நல்ல திறன் பெற்றவனாக இருக்கிறான். அவனைப் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைப்போம். என்னை என் விருப்பப்படி இருக்க சம்மதியுங்கள் அம்மா.

               மகன் பேச்சால் உவகையடைந்த கனகு மகனை அன்புடன் நோக்கி உன் விருப்பப்படியே செய்வோம் என்றாள்.

               முகுந்த் என்றழைத்த தாயிடம் பாசமாய் வந்து நின்றான் மகன். முகுந்த் அண்ணன் கல்லூரிப் படிப்பெல்லாம் படிக்க மாட்டேன். தம்பி நன்றாகப் படிக்கிறவன். அவனை மேல் படிப்பெல்லாம் படிக்க வைப்போம் என்கிறான். நீ என்ன சொல்கிறாய்.

               அம்மா கல்வியைக் கண்போன்று மதித்து கற்பவன் நான். நான் மேல்படிப்பு படிப்பேன் அம்மா.

               தாயும், தனயனும் கொடுத்த ஊக்கத்தால் முகுந்த் நன்கு படித்தான். நல்ல மதிப்பெண்கள் பெற்று கோயம்புத்தூர் இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கச் சென்றான்.

               அண்ணா நம் அம்மாவை நன்கு பார்த்துக் கொள். நம் தாத்தா கூறியது போல் நான் நன்கு படித்து நல்ல உத்தியோகம் பார்ப்பேன். நம் அம்மாவைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்வோம், நான் சென்று வருகிறேன்.

               அம்மா என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்று கனகுவின் காலில் விழுந்து வணங்கினான்.

               என் ஆசிகள் எப்பொழுதும் உனக்கு உண்டு. அண்ணனும் நானும் உன் நலனுக்காக வேண்டிக் கொள்கிறோம். நீ உடல்நலம் பேணிக் கொள். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

               மகன் புறப்பட்டுச் சென்றதும் தந்தையின் படத்திற்கு முன்னால் வந்து கண்மூடி நின்றாள். தந்தையிடம் தன் மனப் பாரத்தையெல்லாம் இறக்கி வைத்தாள்.

               உங்கள் ஆசியால் பேரப்பிள்ளைகள் நன்கு வளர்ந்து பண்பால் உயர்ந்துள்ளனர். உங்கள் மகள்மீது பாசமழை பொழிகின்றனர். உங்களுக்கு நன்றியப்பா நன்றி.

               பிரகாஷ் வந்து என்னம்மா பிரார்த்தனை இன்னும் முடியவில்லையா என்று கேட்டதும் கண் திறந்து பார்த்தாள்.

               பிரகாஷ், தாத்தா இறந்து கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகள் ஆகிறது. இந்த நீண்ட காலத்தை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நம்மை கடக்கச் செய்ததற்கு நன்றி கூறினேன். மேலும், தாத்தா உயிரோடு இருக்கும்பொழுது பதினான்கு வருடங்கள் கழித்து உன் தந்தை வந்தாலும் வரலாம் என்று கூறிக் கொண்டிருந்தார். அதுவும் சிந்தையில் வந்துவிட்டதால் தாமதமாகிவிட்டேன்.

               போங்க அம்மா, அந்த ஆளின் நினைப்பு உங்களுக்கு இன்னும் இருக்கிறதா, அந்த ஆளைப் பற்றி நினைக்காதீர்கள் அம்மா. உங்களின் இளமையை, எங்களின் மழலை மனதை அழித்தவரல்லவா அவர். அவர் நினைப்பு நமக்கு வேண்டாம்மா. அவர் எக்கேடு கெட்டால் என்ன நம்மை தவிக்க விட்டவர்தானே.

               அம்மா நீங்கள் அன்பையும், பாசத்தையும் பாலாய் ஊட்டி எங்களை வளர்த்து விட்ட இனியவர் உங்களை உங்கள் நல்ல மனதை ஏமாற்றி வஞ்சித்த அவரை சும்மா விடப் போவதில்லை.

               என்ன செய்யப் போகிறாய்? நம் நிலைமை இப்படி. அவர் நிலை அங்கு எப்படியோ? எதுவும் தெரியாமல் ஒருவர் மீது வெறுப்புக் கொள்ளக் கூடாதப்பா. நான் எவ்வளவோ முயன்றும் அவர்மீது எனக்கு வெறுப்போ, கோபமோ ஏற்படவேயில்லை. ஏன் என்று என்னை நான் கேட்டுக் கொள்கிறேன். நான் பெற்ற செல்வம் தானே நீ. உனக்கு மட்டும் ஏன் இத்தனை கோபம் வருகிறது என்று கேட்டாள்.

               தன்னை கல் கொண்டு எறிந்தவனுக்கு நாம் கனி கொடுத்து உதவும் பழமரம் போன்றவள் நீ. உன் குணமும் பண்பும் எனக்கு வராது தாயே. ஏனென்றால் அந்தக் கயவனின் இரத்தமும் என் உடலில் பாய்கிறதல்லவா.

               தம்பி என்ன இருந்தாலும் அவர் உன் தந்தை. அவரை கயவன் என்று சொல்லாதே. உனக்கும் இருபத்திரண்டு வயதாகிவிட்டது. நம் மண்ணிலே பாந்தமாய் உழைக்கிறாய், திருப்தியாய் பொருளீட்டுகிறாய். இன்னும் ஓரிரண்டு ஆண்டில் திருமணம் நடத்த வேண்டும்.

               அவையத்து முந்தியிருக்கச் செய்வதற்காக உன்னைப் பள்ளியில் சேர்த்து விட்டுச் சென்றார் உன் தந்தை. உன் திருமணத்திற்கு வந்து விடுவார் என்று நினைக்கிறேன்.

               எங்கள் திருமணம் என் தாயும் அவருடைய பெற்றோர் இருவருமே இல்லாமல் நடைபெற்றது. பெற்ற பிள்ளைகள் பெருமைபட வாழவேண்டுமென பெற்றோர்கள் தானே மனம் நிறைய வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்துகள் எங்களுக்கு கிடைக்காததால்தான் எங்கள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது.

               உன் திருமணமாவது பெற்றோர் புடைசூழ உறவினர் வாழ்த்த நடைபெற வேண்டும் என ஆண்டவனை இப்போதிலிருந்தே வேண்டுகிறேன் என்றாள்.

               உங்கள் வேண்டுதல் நிறைவேறுமா என்று நினைத்தபோதிலும், அந்தக் கற்பனையில் திளைத்து நீங்கள் சந்தோசமாய் பொழுதைக் கழிப்பது எனக்கு மகிழ்ச்சியே என்றான் மகன்.

15

கனி அரசுவின் நிலை

                                             கோபம் என்பதையே அறியாத என் கனி கோபக் கனலாய் மாறி கனி பிழம்புகளை அள்ளித் தெளித்து விட்டாளே. ஏன்? என்ற மன சஞ்சலத்தோடேயே தொடர்வண்டி பயணத்தை மேற்கொண்டான் அரசு.

                                             அன்று முழுவதும் ஒரே அலச்சல், திரிச்சல் மனஉளச்சல் என்பதால் உணவைக் கூட மறந்து விடிய விடியத் தூங்கி விட்டான்.

                                             மும்பையிலிருந்து துவங்கிய கப்பல் பயணத்தில் தான் கனி அவன் உள்ளத்தை ஆட்டிப் படைத்தாள்.

                                             என்ன இருந்தாலும் நான் தான் அப்படி பேசியிருக்கக் கூடாது. கனி எவ்வளவு நல்லவள். இனிமையாகப் பேசி இன்முகம் காட்டி களித்திருப்பவள்.

                                             நான் கோபப்படும் அளவிற்கு அவள் என்ன சொல்லி விட்டாள். இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பது கஷ்டங்க. அதனால் ஐந்து மாதங்களுக்குப் பிறகு அப்பா வீட்டிற்குச் சென்று விடுகிறேன். நீங்கள் வந்து அழைக்கும் பொழுது வந்து விடுகிறேன் என்றுதானே சொன்னாள். இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது.

                                             என்மேல்தான் தப்பு. நான் அவள்மீது மகன் படிப்பிற்காக இங்குதான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி என் கருத்தைத் திணித்திருக்கக் கூடாது. அவள் பிள்ளைத் தாச்சிப் பெண்ணாய் இருக்கிறாள். மிகவும் பலவீனமா வேறு உள்ளாள். கணவன் அருகில் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கை தானே.

                                             என் அருகாமை அவளுக்கு கிடைக்காமல் இருப்பது குறித்த ஆற்றாமையால் அப்படி பேசியிருக்கலாம். சரி நடந்தது நடந்து விட்டது.

                                             கப்பல் ஊர் சென்றாடைந்ததும் என் உள்ளக்கிடக்கையை மடலாக வடித்து அனுப்பினால் படித்து விட்டு பரவசமாகி விடுவாள். நிலாவைப் பிடித்து வந்து விளையாட தா என்று அடம் பிடிக்கும் குழந்தையிடம். நிலாவைக் காக்கா கொத்திக் கொண்டு போயிற்று. உனக்கு மிட்டாய் தந்திருக்கிறான். மிட்டாயைக் காட்டினால் நொடியில் நிலாவை மறந்து விடுவது குழந்தை போல் என்கனிக்கு என்மீதுள்ள கோபம் பஞ்சாய்ப் பறந்து விடப்போகிறது.

                                             இதற்கு போய் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்ட அரசு பத்திரிக்கைப் படிப்பதில் கவனம் செலுத்தினான்.

                                             எண் ஜாண் உடம்பிற்கு அரை ஜாண் வயிறே பிரதானம். ஒவ்வொரு மனிதனும் பொருளீட்டுவது முக்கியமாக வயிறாறச் சாப்பிடுவதற்காகத்தான். பசித்துப் புசி என்பது அரசுவின் வயிறு பசிக்கிறது என்பதை அவனுக்கு உணர்த்தியது.

                                             அரசு எழுந்து கேன்டினுக்குள் நுழைந்தான். சர்வரிடம். ஐயா மிகவும் பசியாயிருக்கிறதே. சாப்பாடு இருக்கிறதா என்று கேட்டான்.

                                             அன்று ஏனோ தயார் செய்த உணவு அவ்வளவும் காலியாகி இருந்தது. பசி என்றவனுக்கு உணவு கொடுக்கவில்லை என்றால் கோபம் கொள்வான். அதிலும் இவன் தமிழ்நாட்டுக்காரன் போல் இருக்கிறான். இவனிடம் இல்லை என்ற சொல் பேசக் கூடாது என்று நினைத்தான் சர்வர்.

                                             முந்திய நாளோ அதற்கும் முந்தியோ தயாரிக்கப்பட்ட உணவு சிறிது இருக்கக் கண்டான். கடல் காற்று பதத்தில் உணவு எளிதில் கொதிப்பதில்லை என்பதால் உடனே சாப்பாடு கொஞ்சமாகத்தான் இருக்கிறது சாப்பிடுங்கள் என்று அரசுவிடம் கொடுத்தான்.

                                             பசி ருசி அறியாது என்பதாய் கிடைத்த உணவை அரசு வயிற்றுக்குள் தள்ளினான். நன்றாகத்தான் இருந்தான். தூங்கியெழ வேண்டும் என நினைத்தான் அரசு.

                                             அரைமணி நேரம் கூட ஒழுங்காகத் தூங்கியிருக்கவில்லை. வயிறு கொட முடா என்று சத்தம் கொடுக்க எழுந்து உட்கார்ந்தான்.

                                             வாந்தி எடுத்தான். பேதியும் ஆயிற்று ஒரு முறை இருமுறை தாங்கினான். முடியாது என்று நினைத்த போது சகபயணியிடம் மருத்துவரை அழைத்து வரும்படி கேட்டான்.

                                             மருத்துவர் வந்தார் சோதித்துப் பார்த்தார். என்ன சாப்பிட்டீர்கள். புட் பாய்சன் ஆகி விட்டதே என்று கூறி சிகிச்சையைத் தொடர்ந்தார். ட்ரிப் ஏற்றப்பட்டது. அசந்து படுத்திருந்தான் அரசு. வீட்டைப் பற்றிய நினைவு கனவலையாய்த் தோன்றியது.

                                             மீண்டும் வாந்தி வாந்தியைக் கட்டுப்படுத்த முடியவில்லையே என்று மருத்துவர் கன்ப்யூஸ் ஆகிநின்ற நிலையில் கப்பல் தரையை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நின்றது.

                                             பயணிகள் அனைவரும் தம் தம் உடைமைகளை எடுத்துக் கொண்டு வேகமாக துறைமுகத்திற்கு விரைந்தனர். அரசு கப்பல் தரையைத் தழுவி நிற்கிறது நம் உடமையை எடுத்துக் கொண்டு இறங்க வேண்டுமே என்ற சுயஅறிவு இன்றி மல்லாக்கப் படுத்திருந்தான்.

                                             எல்லோரும் இறங்கிய பின் மாலுமியும் இறங்கி ஓய்வரைக்குச் சென்றபின். யாருடைய உடமையாவது தவறி விட்டுச் சென்றிருக்கிறீர்களா என்பதைப் பார்க்கச் சிப்பந்தி ஒருவன் வருவது வழக்கம்.

                                             அந்தச் சிப்பந்தி அரசுவைப் பார்த்தான். அதிர்ந்தான். துறைமுகக் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்றான். தமிழ் நாட்டுக்காரனொருவன் கப்பலுக்குள் இறந்து கிடக்கிறான் என்று சொன்னான்.

                                             காவலர் இருவர் விரைந்து வந்து அரசுவை பார்த்தனர். உயிர் உசலாடும் நிலையில் உள்ளான். உடனே மருத்துவ மனைக்குச் எடுத்துச் சென்றால் உயிரைக் காப்பாற்றி விடலாம் என்று எண்ணினார்.

                                             துறைமுக சிறிய மருத்துவ மனையில் அவரை சிகிச்சைப் பகுதியில் சேர்த்தனர். மருத்துவர் வந்து சோதித்துப் பார்க்கத் தாமதமாகியதால் அரசுவின் நிலைமை கவலைக்கிடமாகியது.

Advertisement