Advertisement

13

               அம்மா தாத்தாவை எங்கே? தோட்டத்திற்குச் சென்று விட்டார்களா? தாத்தா காப்பி குடித்து விட்டார்களா என்று முகுந்த் கேட்டான். மூத்தவனை விடவும் முகுந்துக்கு தாத்தா மேல் பிரியம் அதிகம். விபரம் தெரியாமல் இருக்கும்பொழுது எனக்கு மட்டும்தான் தாத்தா. பிரகாஷ_க்கு கிடையாது. நீ போ என்று அவனை விரட்டுவான்.

               முகுந்த் தாத்தா நேற்று மிகவும் தாமதமாகப் படுக்கச் சென்றார். அதனால் இன்னும் எழுந்து வரவில்லை. நீ போய் தாத்தாவை எழுப்பிப் பல் துலக்கச் சொல். நான் காப்பி கலந்து கொண்டு வருகிறேன் என்றாள்.

               முகுந்த் ஓடிச்சென்று தாத்தா, தாத்தா என எழுப்பினான். தாத்தா இன்று நானே காப்பி குடிச்சிட்டேன். நீ பல் துலக்காமல் தூங்கிக்கிட்டிருக்கியே. ஐய் தாத்தா தூங்குமூஞ்சி என்று சொல்லியவாறு தட்டி எழுப்பினான்.

               தாத்தா எழவில்லை. அம்மாவிடம் சென்று அம்மா இன்றைக்குத் தாத்தா தூங்கு மூஞ்சியாய்க் கிடக்கு, எழும்ப மாட்டேங்குது என்று கூறினான்.

               பிரகாஷ_ம் அம்மாவும் தாத்தா படுத்திருந்த படுக்கை அருகில் சென்று அவரைத் தட்டி எழுப்பினார்கள். உடல் சில்லிட்டிருந்தது. கை, கால்கள் விரைத்துப் போயிருந்ததைப் பார்த்த கனகு அப்பா என்று அலறினாள். அந்த ஒரு வார்த்தையிலே உலகத்து துன்பத்தையெல்லாம் ஒரு சேர வெளிப்படுத்தியது போல அத்தனை சோகக் கத்தல் கத்தினாள்.

               மகளின் வாழ்வு காணச் சகிக்காமல் உலகத்தைவிட்டே சென்ற தந்தையின் உடலைத் தொட்டுக் கதறிய கதறலில் ஊரே கூடிவிட்டது.

               கனகு துடித்தாள், துவண்டாள், குழந்தைகள் பேந்தப் பேந்த விழித்தனர். அப்பா வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்றிர்களே நான் தானே என் தலையில் நானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டேனே. அப்பா உங்கள் உயிரைம் பறித்து விட்ட பாவியாயிட்டேனே.

               அப்பா இந்த நிலையில் என்னை விட்டுச் செல்ல எப்படிப்பா மனது வந்தது. அவர் வந்தால் வரட்டும், வராவிட்டாலும் இருக்கட்டும். என் அப்பா இருக்கிறார். எனக்கும், என் குழந்தைகளுக்கும் மரம்போல் நிழல் தந்து பாதுகாப்பார் என்றிருந்தேனே. என் நினைப்பிலும் இடி விழுந்துவிட்டதே.

               என்னை நிர்க்கதியாய் விட்டுவிட்டு காத தூரம் சென்று விட்டீர்களே. என் செல்லக் கண்மணி உன் கண்ணில் நீர் வரக் கூடாதம்மா. உன் கண்ணில் நீர் வந்தால் நெஞ்சு வெடித்தது போல் வேதனை அடைகிறேன் என்று சொன்னீர்களே அப்பா. அதற்காக உங்கள் கண் காணும்படி அழுவதையே நிறுத்திவிட்டேனே. அப்படியிருந்தும் ஏன் என்னை விட்டுச் சென்றீர்கள்.

               அப்பா கண்ணீர் சிந்துகிறேன். கதறித் துடிக்கிறேன், தேற்றிட எழுந்து வாருங்களேன். அப்பா என் மனம் நோக ஒருநாள் கூட பேசியதில்லையே. இன்று மனம் துடித்து பதறும்படி விட்டு சென்று விட்டீர்களே. இது நியாயமா, கடவுள் என் வாழ்வில் ஏன் இப்படி ஆட்டம் காட்டுகிறார்.

               என் புருஷனாவது இப்படித் தவிக்கவிட்டாலும் விடலாம் என்று என் சிந்தையில் எண்ண ஓட்டம் ஓடியதுண்டு, ஆனால் உங்களை நான் அப்படி நினைத்ததை இல்லையே, என்னை அந்தோ பரிதாபம் என்று விட்டுச் செல்வதற்காகத்தான் மனதைத் தளர விடாதேம்மா, தைரியமாயிரு என்று சொன்னீர்கள்.

               அப்பா, என்னப்பா அவசரமாக அங்கே போய் என்ன செய்யப் போகிறீர்கள், இத்தனை அவசரமாக அம்மா உங்களை அழைத்தார்களா? உங்கள் பேரப்பிள்ளைகள் தாத்தா கதை சொல்லச் சொல்லுங்கள் என்று கேட்டால் நான் என்ன செய்வேன், அப்பா எனக்கு நீங்க வேணும் என்று பதலிதம் கதறி தலையிலும், நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறித் துடித்தாள்.

               ஆயிற்று, எல்லாக் காரியமும் நடந்தேறியது. சண்முகநாதன் மாலைகளிடப்பட்டு விளக்குகள் எரிய புன்னகையுடன் புகைப்படமாய் அமர்ந்திருந்தார்.

               உறவுகள் எல்லோரும் ஒவ்வொருவராய் கழன்று கொண்டிருந்தனர். அரசுவின் அண்ணன்கள் வந்து கனி இனியும் நீ இங்கிருக்க வேண்டாம், உன் வீட்டிற்கு வந்து குடியேறு. பிள்ளைகளை அங்கு படிக்க வைத்துக் கொள்ளலாம். நாங்களும் எங்களால் இயன்ற உதவிகளைச் செய்கிறோம்.

               மாமா இங்கு இருக்கும்பொழுது உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, இனி அப்படி இருக்காதம்மா, நீ தனியாக இங்கிருந்து தவிக்க வேண்டாம் அங்கு வந்து விடம்மா என்று அன்பாகக் கேட்டனர்.

               கனி தந்தையின் வீட்டை விட்டு நகரத்தில் செல்ல மறுத்துவிட்டாள். மாமா நீங்கள் எங்கள் மீது காட்டும் அன்பிற்கு நன்றி, அந்த வீட்டிற்கு அவர் இல்லாம நான் வரமாட்டேன்.

               என் அப்பா இறந்துவிட்டாலுங்கூட எங்களுக்குத் துணையாக எங்களுடனே தான் அவரது ஆவி சுற்றிக் கொண்டிருக்கும். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதாய் என் தந்தையும் எங்களை வழிநடத்துவார்.

               நான் பிறந்து வளர்ந்த இந்த மண் எனக்குத் துரோகம் நினைக்காது. உங்கள் தம்பி எப்பொழுது வந்து எங்களை அழைக்கிறார்களோ அப்பொழுது அங்கு நாங்கள் வருகிறோம்.

               அரண்மனை மாதிரி வீட்டில் வாழ வைப்பேன். என் குழந்தைகளை ஆங்கில் கல்வியால் பெரிய படிப்பு படிக்க வைப்பேன். நீ ராணி மாதிரி வாழவேண்டும். இந்த வீட்டில் தொலைபேசி வசதி செய்து தந்திருக்கிறேன். வாரமொருமுறை என்ன தினமும் பேசிக்கொள்வோம் என்று கூறிச் சென்றாரே.

               ஒருநாள் ஒரே ஒரு நாளாவது பேசினாரா? வாரமொரு மடல் எழுதியவர் ஒரு மடலாவது எழுதியிருக்கிறாரா? எங்களை அடியோடு மறந்து விட்டாரே.

               நான் பணத்தையோ, பகட்டான வாழ்வையோ எதிர்பார்க்கவில்லை. அவருடைய பண்பான நடத்தையும், அன்பான ஆதரவான பேச்சையும் பார்த்துதானே என் மனதைப் பரிகொடுத்தேன். எங்களை ஏமாற்றத்தால் பிறர் எள்ளி நகையாடச் செய்துவிட்டாரே. அவருடைய வீடும், பணமும் எனக்கு வேண்டாம்.

               தகப்பன் பந்தம் இல்லாமல் பிள்ளை வளர்ப்பது, அதன் இடர்பாடு என்ன என்பது எனக்குத்தான் தெரியும். எவரெஸ்ட் சிகரத்தைக் கூட ஏறி எட்டிடலாம். ஒவ்வொரு நாளும் என் மக்கட்செல்வங்கள் கேட்கும் வினாக்களுக்கு விடை தெரியாமல் தடுமாறுகிறேன். கடப்பாரை கொண்டு தள்ளினால்கூட நாள் நகர மறுக்கிறது.

               எனது மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் என் தந்தைதான் எனக்கு ஆதரவுக்கரம் நீட்டியவா. அவர் வாழ்ந்த இந்த வீடுதான் என் வாழ்க்கைக்குச் சரிப்பட்டு வரும் என்று என் உள்மனம் உரைக்கிறது. என் அருமை மகன்களுக்காக, அவர்களைப் பொறுப்புள்ள நன் மக்களாய் வளர்க்க வேண்டுமே என்ற கடமையால்தான் இன்னும் உயிர் தரித்துக் கொண்டிருக்கிறேன்.

               என் செல்வங்களின் கல்விக்காக அவர் பணம் மூவாயிரம் மாதா மாதம் எடுத்துக் கொண்டிருந்தேன். என் தந்தைதான் என் கையெழுத்துப் பெற்றுச் சென்று வாங்கி வருவார். இனி அவர் இல்லை பணம் வாங்குவதற்கு உங்கள் தம்பியின் பணமும் எங்களுக்குத் தேவையில்லை. ஆசைகாட்டி மோசம் பண்ணியவரின் பணத்தில் நாங்கள் வாழ வேண்டாம்.

               நானே தினக் கூலியாய் உழைத்து என் பிள்ளைகளை பண்புடன் வளர்ப்பேன். இந்த ஊரைவிட்டு அகலமாட்டேன். எங்களைப் பார்க்கவேண்டும், ஏதாவது செய்ய வேண்டுமானால் இங்கு வந்து பார்த்துச் செல்லுங்கள், இது அன்பான உறுதியான என் முடிவு என்று கூறி முடித்தாள்.

               கனகுவின் அண்ணன்கள் அழைத்ததற்கும் அவ்வாறே கூறிவிட்டாள். இந்த வீட்டில் குடியிருப்பதற்கு அனுமதிப்பீர்களா சகோதரர்களே என்று கனகு கேட்கவும், அவளின் துயரம் தோய்ந்த கேள்வியைக் கேட்டு சகோதரர்கள் தேம்பித் தேம்பி அழுதனர்.

               எங்களின் அன்பே உருவான அமுதமாகிய தங்கைக்கு இந்த அவலமா? எங்களால் தாங்கமுடியவில்லை அம்மா. இந்த வீடு உனக்கே உனக்குத்தான் என்று அப்பா எழுதி வைத்திருக்கிறார். நாங்கள் கொடுத்தால் பெற்றுக்கொள்ள உன் தன்மானம் தடுக்கும் என்பதை அறிந்த அப்பா செய்த ஏற்பாடம்மா அது.

               தங்கையிடம் சிறு வேண்டுகோள் கேட்கலாமா என்றார் பெரியண்ணன்.

               கேளுங்கள், கேட்பதைப் பொறுத்து என் பதில் இருக்கும் என்றாள். நமது தோட்டம், வயல் எல்லாவற்றையும் ஊர்த்தலைவர் மூலம் கட்டுக்குத்தகைக்கு கொடுத்திருக்கிறார் அப்பா. மாதாமாதம் என்றில்லாவிட்டாலும் வருடத்திற்கு சுமார் ஐம்பதாயிரம் வரை தேறும் என்கிறார் பெரியவர். அந்தப் பணத்தையாவது மாப்பிள்ளை வரும் வரை பயன்படுத்திக்கொள்ளம்மா.

               அப்பா எங்களுக்கு நல்ல கல்வி தந்தார். நாங்கள் நன்கு சம்பாதிக்கிறோம். திருப்தியாய் இருக்கிறோம். உன்னைப் படிக்க வைக்க முடியவில்லை. அதனால்தான் சம்பாதிக்கவில்லை. நீ குடும்பப்பொறுப்பை ஏற்றுக்கிட்டு நடத்தியதால்தானே நாங்கள் படிக்க முடிந்தது.

               அதனால் குடும்பச் சொத்து அனைத்தும் உனக்குரியதே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்பாகக் கேட்கிறோம். அது மட்டுமன்றி, கூலி வேலைக்குச் செல்லவேண்டாம் என்று அன்புக் கட்டளையிடுகிறோம். பையன்கள் பள்ளி சென்றபின் நேரம் போகவில்லையென்றால் ஆடு, மாடு, கோழி என்று வளர்த்துப் பழகு. பொழுதும் சிறப்பாகக் கழியும், வருமானமும் பெருகும். பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும்பொழுது உன் மனச்சுபை குறையும். என்ன நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறாயா என்று பெரியண்ணன் கேட்டார்.

               பதில் எதுவும் சொல்லாமல் யோசனையிலாழ்ந்தாள். சற்று நேரம் கழித்து, சரி அண்ணா, தாங்கள் சொல்லியபடி அப்பாவிற்காக ஏற்றுக் கொள்கிறேன் என்றாள். எல்லோரும் அவரவர் இடங்களுக்குச் சென்றனர்.

Advertisement