Advertisement

               ஏங்க உங்கப் பிள்ளை கேட்கும் கேள்விகள் உங்களுக்கு கேட்கிறதா? அப்படி என்னங்க உங்களுக்குக் கோபம். கடலுடன் தானே ஆறு சங்கமிக்க வேண்டும். ஆறே நீ தள்ளி நில் என்று கடல் சொல்வது போல் உங்கள் நடவடிக்கை.

                                             கர்ப்பவதியாய் விட்டுச் சென்றீர்களே குழந்தை பிறந்ததா? என்ன குழந்தை எப்படி இருக்கிறாய். ஒரு மடல் ஒரே ஒரு மடல் எழுதக் கூடாதா? சரி விடுமுறை கிடைக்கவில்லை என்றாலும் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இருந்தால் இரண்டு மாத விடுப்பு தருவார்கள் என்று சொல்லியிருந்தீர்களே.

                                             இப்பொழுது நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டதே. உங்களைத் தேடுவதற்காகக் கூட உங்கள் முகவரியை நான் தெரிந்து வைத்திருக்கலாம். வைக்கவில்லை. வான் பொய்க்கும் பகல் இரவு மாறி மாறி வருவதை போல உங்கள் மேல் அத்தனை நம்பிக்கைக் கொண்டிருந்தேனே. நான் என்ன செய்வேன் என்று புகைப்படத்திடம் அரற்றிக் கொண்டிருந்தாள்.

               சண்முகநாதன் மகள் அருகில் வந்தார். என்னம்மா இப்படி அரற்றிக் கொண்டிருந்தால் மனக் கிலி உண்டாகிவிடும். இந்த மாதம் வங்கிக்குப் பணம் வாங்கச் செல்லும்போது பணம் எங்கிருந்து வருகிறது என்ற தகவல் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

               அந்த முகவரியை வாங்கி நாம மடல் எழுதுவோம். பிரகாஷையும் எழுதச் சொல்வோம். மகன் எழுத்தைப் பார்த்துப் படித்ததும் மனமிரங்கி வந்து விடுவார். கவலைப்படாதம்மா.

               உன் பிள்ளைகளை கோவிலுக்குப் போகச் சொல்லியிருக்கிறாள். திக்கற்றவருக்கு தெய்வம் துணை. உன் பிள்ளைகள் அப்பாவைப் பற்றி யாரும் கேட்டால் கோபத்துடன் பேசிவிடுவான். உன் இளைய மகன் அடித்துக்கூட விடுவான். எனவே, நானும் கோவிலுக்குச் சென்று தரிசித்து வேண்டிவிட்டு பிள்ளைகளைக் கூட்டி வருகிறேன் என்று கூறிச் சென்றார்.

               சண்முகநாதன் தன் ஒரே பெண்ணின் கதி இப்படி ஆகிவிட்டதே. அவள் அல்லும் பகலும் கனவிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள். பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

               மாயமான் மாரீசன் போன்று திடீரெனத் தோன்றி மறைந்து விட்டிருக்கிறானே.  வானவில் போன்று அழகாய்த் தோன்றிய மகள் வாழக்கை தெளிவற்று சிதைந்துவிட்டதே இந்த சிந்தனையிலே காலம் கடத்தி வந்தார்.

               கடவுள் அமைத்த நாடகமேடையில் நம் மகளின் கதாபாத்திரம் எப்படி அமைக்கப்பட்டுள்ளதோ யார் அறிவார். கடவுள் விட்ட வழி என்று காத்துக் கிடப்பதுதான் நம் விதி என்று நொந்து கொள்வார்.

               அந்தக் காலத்தில் பின்னால் வருகின்ற நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து சொன்னார்களாம் சித்தர்கள். இக்காலத்தில் எண் ஜோதிடம் என்கிறார்கள். நாடி ஜோதிடம் என்கிறார்கள். காலத்தைக் கணித்துக் கூறுவதில் விஞ்ஞானத்தையும் விஞ்சிவிட்டது சோதிடம் என்கிறார்கள்.

               நோய்க்கும் பார் பேய்க்கும் பார் என்று ஒரு மொழி உண்டு. சோதிடம், மற்றும் எந்தவிதமான வழியிலுமே மனம் சென்றதில்லை. இறைவனை நம்பி, பகுத்தறிவு துணை கொண்டுதான் இத்தனை காலமும் சிறப்பாக வாழ்ந்துவிட்டேன்.

               மகளின் நிலைமைக்கு நீ ஜாதகம் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து கொடுத்ததுதான் காரணமாயிருக்கும். பார்த்து கிரகநிலை சரியில்லையென்றால் ஏதாவது பரிகாரம் செய் உன் மருமகன் வழிக்கு வந்துவிடுவான் என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.

               நான் என்ன செய்வது பேரக்குழந்தைகள் இருவருக்கும் பிறந்த நேரத்தை மட்டுமே குறித்து வைத்துள்ளேன். நண்பர் உதவியுடன் அந்த நேரத்தைக் கொடுத்து ஜோதிடம் கணித்துப்பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

               தை மாதம் வங்கிக்குச் சென்றபொழுது வங்கி மேலாளரிடம் சண்முகநாதன் பேசினார். ஐயா என் மருமகன் பெயருக்கு எந்த முகவரியிலிருந்து பணம் வருகிறது என்று கேட்டார்.

               ஐயா, பெரியவரே வெறுமனே துபாய் என்று மட்டும் தான் வருகிறது. துபாயில் எந்த ஊர், எந்தக் கம்பெனி என்றுகூட ஒன்றுமில்லாமல் இந்த வங்கியின் தெளிவான முகவரிக்கு துபாயிலிருந்து கனி அரசு என்று மட்டும் தான் வருகிறது. இடையில் இரண்டாண்டு காலம் பணம் எதுவும் வரவில்லை. பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

               இடையில் பணம் அனுப்பாத காலத்தும் நாங்கள் பணம் பெற்றுச் சென்றோமே என்றார். பணம் அங்கிருந்து வரவில்லையென்றாலும் இங்கு உங்கள் மருமகன் பெயரில் பணம் அதிகமாக உள்ளது. மேலும, செக்புக்கில் காலியாக, காலியாகக் கொடுத்து உங்கள் மகள் பணம் எப்பொழுது எவ்வளவு கேட்டாலும் கொடுக்க வேண்டு என்று எழுதி பதிவுச்செய்து வைத்திருக்கிறார். அதனால் நீங்கள் கேட்ட பொழுதில் பணம் தந்தோம் என்று விளக்கமாகச் சொன்னார்.

               நம்பியிருந்த ஒரு வழியும் அடைபட்டுவிட்டது. அரசவின் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள், அறியாதவர்கள், நண்பர்கள் என்று வெளிநாட்டில் வேலை செய்து வருபவர்கள் வீடு தேடி அலைந்து விசாரித்துப் பார்த்தார். யாரும் எந்தவித நன்மை  பயக்கும் தகவலும் தரவில்லை.

               நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தார். நாங்கள் பார்க்கவும் இல்லை. முகவரியும் தெரியாது என்ற விபரம்தான் கிடைத்தது.

               பணம் அனுப்பாமல் இருந்தவர் பணம் அனுப்புகிறார் என்பதறிந்து எங்கிருந்தாலும் நன்றாக உள்ளார். அது போதும் என்று மனதை தேற்றிக் கொண்டார்கள்.

               சண்முகநாதன் நண்பரொருவர் துணையோடு டவுனில் பெயர்பெற்ற ஜோதிடர் ஒருவரைத் தேடிச் சென்றார்.

               கனகு நான் உங்கள் முகவரியாவது தரக்கூடாதா என்று கேட்டதற்கு ஏன் நீ அங்கு வந்துவிடப் போகிறாயா? ஒன்றும் இல்லை பின் எதற்கு நான்தான் மடல் எழுதுகிறேன். டாண் என்று வந்து நிற்கிறேன். உனக்கு நான்தானே வேண்டும். என் முகவரியா வேண்டும் என்றீர்களே இன்று எங்களை மறந்து வாழாவிருப்பது சரியா. நீங்களே சொல்லுங்கள். நான் உங்களிடம் தானே பேசமுடியும். என் கேள்விக்குப் பதிலென்ன என்று கேட்டு நின்றாள்.

               ஜோதிடரைப் பார்க்கச் சென்ற சண்முகநாதன் விக்கித்துப் போனார். ஜோதிடர் சொல்லிய செய்தி அவரை நிலை தடுமாற வைத்தது. ஐயோ மகளே கனகு என்ன செய்யப் போகிறாய் என்று பிதற்றினார்.

               இரண்டாவது பையன் கரு தரித்த நேரமே சரியில்லை. தகப்பன் முகமே காணாமல் அவன் பதினெட்டு வருட காலம் வாழவேண்டியது உள்ளது. அவனது கிரகநிலை உங்கள் மகள் வாழ்க்கையில் விளையாடி விட்டது.

               வேறு பெண்ணுடன் தொடர்போ, உயிருக்கு ஆபத்தோ அப்படி ஒன்றும் இல்லை. ஒரு சமயம் ஒன்று நினைப்பான், அடுத்த கணமே எதிர்மாறாக நினைப்பான். சித்தப் பிரமை பிடித்தவன் போல்தான் இருக்கவேண்டும்.

               பதினெட்டு வயது நிறைவடையும்பொழுது தானாகவே வந்துவிடுவார். அதன் பின்தான் தந்தை முகம் காணவேண்டியுள்ளது. நான்கு ஆண்டுகள் நீக்கி பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திலும் உம் மகளுக்கு பாலைவனமாகவும் தான் அமையும். இதில் மாற்றமில்லை, ஆண்டவனை வேண்டிக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கூறினான்.

               ஐயோ, என் செல்ல மகளே உன் வாழ்வு இப்படி பாலைவனமாகிவிட்டதே. இதற்காகவா ஒரே பெண் என்று பாராட்டி, சீராட்டி வளர்த்தேன். என் கண்மணியின் வாழ்க்கையின் நலம் கருதியல்லவா என் மனைவியை இழந்த பின்பும் துவளாது தூணாய் நிமிர்ந்து நின்றேன். அன்று தாயாகவும், தந்தையாகவும் நின்று முகம் வாடாமல் காத்து நின்றமைக்கு இன்று உன் வாழ்வே வாடி விட்டதம்மா. தன் மனதுக்குள்ளேயே ஒவ்வொன்றாய் நினைத்துக் குமுறினார்.

               வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்றேனே. விதி உன் நாவில் விளையாடி விட்டதே. அவனுடன் இருந்த ஏழு ஆண்டில் ஒழுங்கான தாம்பத்யம் நடத்தவில்லையே. நீரற்ற சோலையாய் வாடிவிட்டாயே முப்பத்தொறு வயதில் வாழாத வாழ்க்கையை நாற்பத்தைந்து வயதிலா வாழப்போகிறாய். இந்த நரக வேதனையைப் பார்ப்பதற்காகவா இத்தனை ஆண்டுகள் உயிர் தரித்திருந்தேன்.

               பூமி மாதாவே பூமி பிளந்து என்னை விழுங்கிடலாகாதா, என் கண்மணியின் வாழ்க்கையைப் பார்த்து ஆலைவாய்க் கரும்பாய் கசக்கிப் பிழியப்படுகிறேனே. இறiவா, என்மீது இரக்கம் கொள்ளலாகாதா.

               நம் பிள்ளைகளுக்குப் பெரிய சொத்து சேர்த்து வைக்கவிட்டாலும், புண்ணியத்தைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணி வள்ளுவர் வழி அறனும் பண்புமாய் வாழ்ந்தேன். எதற்கு ஏன் இந்த இழிநிலை. விதையொன்று போட வித்தொனறா முளைக்கும் என்பார்களே. நான் நல் வினைதானே செய்தேன். என் மகளின் இந்த நிலைமைக்கு எது காரணமாகியது? விதிப்பயனா விதியை மதியால் வென்றிடலாகாதோ?

               இதே சிந்தனையில் உணவு, உறக்கம் தவிர்த்தார். வெந்தணிலில் இடப்பட்ட புழுவாய்த் துடித்தார். ஒரு நாளில் பாதிநேரத்தைக் கோவிலிலேயே கழித்தார். கற்பகாம்பிகை கண் திறப்பாள் என்று காத்திருந்தார். வழி புலப்படவில்லை.

               மகளும் ஏதோ சிந்தனையில் மகன்களுக்காக வாழ்ந்திருந்தாள். கனகு என்றழைக்கும் அப்பாவின் குரல் கேட்டு என்னப்பா என்று அருகில் வந்து நின்றாள்.

               தந்தையின் வாடிய முகம் நொந்து உள்ளதைப் புரிந்த கனகு என்னப்பா ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள், சரியாக உண்பதும் இல்லை, உறங்குவதும் இல்லை.

               நான் இருக்கும் நிலையில் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் ஒரே ஆதரவு நீங்கள் மட்டும்தான். நீங்கள் வேர் அறுந்த மரம் போன்று சோர்ந்து விட்டீர்கள் அப்பா எனக்கு ஆறுதல் கூற நீங்க வேண்டுமப்பா. நீங்களும் இல்லையென்றால், நான் என்ன செய்வேன் என்று கண்ணீர் மல்க கேட்டாள்.

               கவலைப்படாதே மகளே! இத்தனை நாள் படாத கஷ்டத்தையா இனி படப்போகிறாய். பட்டு, பட்டு பக்குவமாகிவிட்டாய் என நினைக்கிறேன். உன் விதி இப்படித்தான் இருந்திருக்கிறது. உன் செல்வங்கள் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையல்லவா? அவர்கன் உனக்குத் துணை நிற்பார்கள்.

               அந்த இளங்குருத்துகளை வளர்த்து ஆளாக்கவேண்டிய பொறுப்பை உனக்கு இறைவன் தந்திருக்கிறான். மோப்பக்குழையும் அனிச்சம் போல் வாடக்கூடியவர்கள் குழந்தைகள். குழந்தைகள் மனம் பாதிக்கா வண்ணம் அவர்களை நீ போற்றி வளர்க்க வேண்டும்.

               உன் துன்பங்களையெல்லாம் மூட்டையாகக் கட்டித் தூக்கி பரணிலே போட்டுவிட்டு, பிள்ளைகளை முன் மகிழ்ச்சியாகவே தோற்றமளிக்க வேண்டும். என்னம்மா நான் சொல்வது புரிகிறதா தங்கமே என்றார்.

               புரிகிறதப்பா நான் நடிப்புக் கலையிலும் தேறவேண்டும் என்கிறீர்கள் என்றாள். அது மட்டுமல்ல கனகு. அவர்களை நல்ல பண்பு நலம் பெற்றவர்களாக வளர்த்து நம் மாவட்டத்திற்குள்ளேயே வேலை பார்த்துக் கொள்ளச் சொல். நீ எந்த நிலையிலும் மனதைத் தளரவிடாது, தைரியமாக துணிந்து செயல்பட வேண்டும் என்றார்.

               சரியப்பா! சாப்பாடு எடுத்து வைக்கிறேன், சாப்பிட வாருங்கள் என்றார்.

               கனகு பேரப்பிள்ளைகள் என்ன செய்கிறார்கள். அவர்களையும் அழைத்து வா எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்.

               இன்று சமையல் என்னவோ என்று கேட்டார். விசேஷமாக ஒன்றும் இல்லையப்பா. சாதம், சாம்பார், கீரை, அப்பளம், ரசம் அவ்வளவுதான்.

               பிரமாதப்படுத்தி விட்டாய் போதும் தங்கங்களே எங்கள் சிங்கங்களே சாப்பிடுவோமா வாருங்கள் என்று பேரப்பிள்ளைகளை அருகில் அமர்த்திக் கொண்டார். சந்தோசமாக உணவருந்திவிட்டு, பேரப்பிள்ளைகளுடன் சிரித்துப் பேசிக் களித்தார்.

               கதை கேட்ட பேரப்பிள்ளைகளுக்கு சிங்கமும், நான்கு மாடுகளும் கதைகூறி, தூங்க வைத்தார். வழக்கத்தைவிடத் தாமதமாகப் படுக்கைக்குச் சென்றார்.

Advertisement