Advertisement

                                             அன்று காலையில் எழும் போதே கனிக்கு தலைசுற்றல் வாந்தி எழுந்திருக்க முடியாமல் சோர்ந்து படுத்து விட்டாள்.

                                             கனி என்ன செய்கிறது என்று வேலையுடன் கேட்ட அரசுக்கு காதுக்குள் மந்திரமாய் புதிய வரவு ஒன்று உருவாகியுள்ளது.

                                             அப்படியா இன்பம், பேரின்பம் ஆனால் தாயே ஒன்றுதான் ஒளி மயம். இரண்டிலும் தவறில்லை இன்ப மயம். இதைக்கனியமுதை இனிதே ஈன்றெடுத்து நிறைவு பெற்றிட வேண்டும் கண்மணி.

                                             அரசுவின் பேச்சு கனியைக் கன்னம் சிவக்கச் செய்தது. எழச்செய்ய இயலாது போயிற்று.

                                             மருத்துவமனை அழைத்துச் சென்றான. மருத்துவர் இந்தம்மா மிகவும் உடலும் பலவீனமாகவும் மனமும் வேதனையுற்றது போல் இருக்கிறார்கள். நல்ல ஓய்வு வேண்டும் சத்தான உணவும் உண்ண வேண்டும். என்றார்கள்.

                                             கனி நான் என்ன செய்வது. முதல் குழந்தைக்கும் என்னால் ஒரு உதவியும் உனக்கில்லை. இந்தக் குழந்தைக்கும் அதே நிலைதான் உருவாயிற்று. யாரை உதவிக்கு அழைக்கலாம் கூறு என்றான்.

                                             முதல் பிரசவம் தான் பெண்ணுக்கு மறுபிறவி என்பார்கள். இது இரண்டாவது தானே பிரச்சனையில்லை. சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் அருகில் இல்லாதது என்னை வாட்டத்தான் செய்யும் என்றாள்.

                                             கனி நான் ஊர் சென்றடைந்தவுடன் தொலைபேசியில் பேசுகிறேன். மடலும் எழுதுகிறேன். நீ தைரியமாயிரு எக்காரணம் கொண்டும் இந்த வீட்டை விட்டுக் கிளம்பி கிராமத்திற்குச் சென்று விடாதே. அங்கு நம்பிள்ளையின் படிப்பிற்கு வசதியில்லை. கண்ணான கல்வியை கருத்தாய் நம் மகன் பெற்றிட நீ இங்குதான் இருக்க வேண்டும்.

                                             உதவிக்கு வேண்டுமானால் உன் அப்பாவையும் வேலைக்காரம்மாவையும் அழைத்து வைத்துக் கொள் என்றான்.

                                             கனியின் வாயில் சனி அமர்ந்திருந்தானா அல்லது விதி பின் விளைவை முன்னால் தெரிவித்ததா? தாக என்ன பேசுகிறோன் என்று அறியாது.  இன்சொல் தவிர கடுஞ்சொல் அறியாத கனி நீங்கள் உங்கள் வேலை எதுவோ அதைப் பார்த்துக் கொண்டு போங்கள்.

                                             எனக்கு என்ன செய்ய வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியும். இந்த வீட்டில் என்னா நீங்கள் இல்லாமல் ஒரு கணமும் இருக்க முடியாது. நீங்கள் இல்லாமல் ஒரு கணமும் இருக்க முடியாது. நீங்கள் சொல்வதற்காக ஏழுமாதங்கள் வரை அதாவது இன்னும் ஐந்து மாதங்கள் தான் இங்கிருப்பேன். அதன்பின் நான் அப்பா வீடு சென்று விடுவேன்.

                                             நீங்கள் வந்து அழைத்துக்கொண்டு வந்தபின்புதான் இந்த வீட்டிற்கு வரமுடியும் என்று கூறி விட்டாள்.

                                             அப்பா வீடு அப்பா வீடு என்கிறாயே உனக்கு அந்த வீட்டில் என்ன இருக்கிறது. இந்த வீட்டில் என்ன வசதியில்லை. நீ இங்கு தான் இருக்க வேண்டும். நான் சொல்வது படிதான் நீ நடக்க வேண்டும்.

                                             நீ அங்கிருந்து கொண்டு இந்த வீட்டை பூட்டி பூதம்காத்த புதையலாக்க விரும்புகிறாயா? அதற்காகவா நான் ஓர் ஆண்டு விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து, என் மேற் பார்வையிலேயே வீட்டைக் கட்டினேன். உன் இஷ்டம் போல் செய்துகொள். என் பேச்சுக்குத் தான் மதிப்பு மரியாதை இல்லையே என்று கோபத்தோடேயே அரசும் பேசினான்.

                                             ஊடல் கூடலில் சங்கமிக்காமல் ஊடலுடனேவே பிரயாணத்தைத் துவக்கினான்.

                                             தொலைபேசி சிணுங்கிய பொழுதெல்லாம் தன் கணவன் குரல் தேனாறாக பாயும் என்று ஓடிச்சென்று எடுப்பாள்.

                                             அரசுவின் குரலுக்குப் பதிலாக, அண்ணன்கள் உறவினர் யாருடைய குரலாவது ஒலிக்கும். இவளது ஆவல் மழைநீர் போல் வழிந்தோடி விடும்.

                                             அவர்கள் இவளின் நிலை புரியாது வயிற்றெரிச்சலைக் கிளப்புகிற மாதிரி பெரிய வீடுகட்டி பெருமை பட வாழ்வதற்கு வாழ்த்துச் சொல்வார்கள். அவர்களின் பேச்சு இவளின் மனத்து யரைக் கூட்டும்.

                                             ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது மாதிரி தொலை பேசியில் தான் பேசவில்லை மடல் கூடவா எழுதக் கூடாது.

                                             வழக்கமாக வாரத்திற்கு ஒரு மடல் வருவதே இருபது நாட்களாகியும் ஒரு மடல் கூட வரவில்லையே. உணவைக் கூட மறந்து மனப் போராட்டத்திலேயே அல்லாடினாள்.

                                             மகன் பிரகாஷின் பள்ளிப் படிப்பும் அவனது கிள்ளை மொழியுமே அவளை உயிர்தரிக்கச் செய்யும் அருமருந்தாய் அமைந்தது.

                                             இல்லையென்றால் மனச்சுமையோடு மட்கிப் போயிருப்பாள். மகன் வருவான், மகன் உண்பான் என்பதற்காகத் தந்தை வாங்கித் தரும் பொருட்களைக் கொண்டு ஏதோ சமைப்பாள். பெயருக்கு உணவு உண்டாள்.

                                             நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. குரலையும், எழுத்தையும் காணாது தவித்தாள். தடுமாறினாள்.

                                             அரசுவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு புகைப்படத்தோடு மனதில் பேசினாள். வாய்விட்டும் அரற்றினாள். கண்ணீர் வறண்டதுதான் மிச்சம் பலனேதும் இல்லை.

                                             என்னங்க என்மீது உங்களுக்குக் கோபமா? மலருக்குத் தென்றல் பகையா? நிலவுக்கு வானம் பகையா? என்மீது நீங்கள் கோபம் கொள்ளலாமா? நீரைத் தவிர்த்து மீன் வாழ முடியுமா? ஏன் நீங்கள் மடல் கூட எழுதவில்லை.

                                             நான் அப்படி என்ன மன்னிக்க முடியாத பெருந்தவறு செய்து விட்டேன். உங்களோடு கூட இந்த வீட்டில் வாழ்வது இன்பம் பயக்கும். நீங்களல்லாது இந்த வீடு எனக்குச் சிறையாகத் தோன்றும் என்பதை மனதிலுள்ளதை அப்படியே கூறியது தவறா? நீங்கள் உங்கள் முகவரி தந்திருக்கிறிர்களா? நானாவது மடல் எழுத தங்களிடம் மன்னிப்புக் கோருவதற்கு.

                                             என் கனி கடிதம் எழுதி கைவலித்து விடக் கூடாது. நானே எழுதுவேன். உன் மனதை அங்கிருந்தபடியே நான் படித்துக் கொள்வேன்.

                                             நீ என்ன பதில் கேட்பாய் என்பதறிந்து நான் மடல் எழுதிக் கொள்வேன. என் உணர்வில் எல்லாம் நீ தானே இருக்கிறாய் என்பீர்களே.

                                             இன்று நான் என்னவானேன். நான் உங்கள் பாதகாணிக்கை தானே. நான் பேசியது தவறு என்றால் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கிறேன். என்னை மன்னித்து மடல் எழுதுங்கள்.

                                             ஒருவேளை நான் இத்தனை கதறியும் நீங்கள் மடல் எழுதாமலிருக்கக் காரணமில்லையே. ஏதோ தவறு நடந்தது போல் என் மனம் விளிக்கிறதே. உங்களுக்கு உடல் நலமில்லையா? ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ. என் அன்பே நான் அனலில் இட்ட புழு வாய்த் துடிக்கிறேனே. உங்கள் உணர்வில் என் நிலை புரியவில்லையா? நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். உங்கள் சொல்லுக்குக் காத்துக்கிடக்கிறேன் என்று இரவெல்லாம் புகைப்படத்தோடு பேசிக் கொண்டே இருந்தாள்.

                                             பகலில் மகனிடம் கொஞ்சனாள். தொலை பேசியையும், தாபால் காரரையும் கண்கள் பூத்துப்போகும் வரை பார்த்திருப்பாள். இரவில் புகைப்படத்தோடு பேசி கொண்டேயிருந்தாள்.

                                             மாதங்கள் கடந்து நிறைமாதக் கற்பிணியாய் நின்றாள். மிகவும் தளர்ச்சியாய் அயர்ச்சியாய் இருந்தாள்.

                                             அப்பா வேலைக்கார அம்மாவைக் கூப்பிடுகிறார்கள். ஏழுமாதங்கள் வரைதான் இங்கிருப்பேன். பின் அப்பாவிடம் சென்று விடுவேன் என்று கூறிய நான் அவருடைய சொல்படி பத்து மாதங்கள் இங்கிருந்து விட்டேன்.

                                             மடல்கூட வரவில்லை இனியும் நான் இங்கிருப்பதில் பொருள் இல்லை. குழந்தை பிறக்கட்டும். நாம் நம் வீடு சென்று விடுவோம். இந்த வீட்டிற்கு வந்த பின்புதானே என்நிலை இப்படியாகிவிட்டது. கடந்த காலங்களில் அவர் எழுதிய மடல்களே குன்றெற குவிந்து நான் குதுகலமாய் நாட்களைக் கழித்தேனே.

                                             இந்த வீடும் பிடிக்கவில்லை எதுவுமே பிடிக்கவில்லை. குழந்தை பிறந்தவுடன் நம் வீடு  சென்று விடுவோம் அப்பா என்றாள்.

                                             சரியம்மா. நீ கண்ணீர் வடிக்காதே என் மனம் கூறியதே என் கண்மணிக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் மணமகன் வேண்டாம் என்று என் மனது சொல்லியதை உனக்காக நீ விரும்புவது போல் தெரிந்ததால் விட்டுக் கொடுத்தேன். இப்படித்தான் நடக்க வேண்டும் என்றிருந்திருக்கிறது.

                                             இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம் என்றார். வேலைக்கார அம்மாவை வரவழைத்தார். வீட்டில் வாடகைக் குடியிருப்புக்கான நல்ல நபர்களைத் தேடினார். வீடு வாடகைக்குப் பேசி முடிக்கப்பட்டது. அந்தப் பணமும் அரசுவின் அண்ணனின் மூலம் வங்கியில் சேர்ப்பதற்கு ஏற்பாடும் செய்தார் கனியின் தந்தை.

                                             கனகு கடந்த காலத்தை நினைத்து, தற்போதுள்ள நிலையோடு ஒப்பிட்டும் பார்த்தான்.

                                             முதல் பிரசவத்தின் போது கணவனின் அருகாமையே கல் தூணாய் பலம் தந்தது. தாங்குவார் கோடி தழுக்குவார் கோடி என்று ஒரே பராமரிப்பாய் இருந்தது.

                                             இன்று சீண்டுவார் யாருமில்லை. பொன்னும் மணியும், தேனாறும் பாலாறும் ஓடிக்களிக்கச் செய்ய வேண்டும் என்று நான் ஓரு போதும் நினைத்ததில்லையே.

                                             குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் மழலை கேளாதார். கஞ்சியோ, கூழோ கணவனும் குழந்தைகளும் கூடி உண்டால் அமிழ்தினும் இனிதாகுமே. அந்தப் பாக்கியமற்ற பாவியாகிவிட்டேன் என்று தனக்குள்ளே பேசிக் கொண்டாள்.

                                             குறிப்பிட்ட நாளில் வலி உண்டாக அரசு மருத்துவ மனையிலேயே அதிகக் கஷ்டங்களுக்கிடையே பிரசவித்தாள்.

                                             ஆஸ்திக்கு ஆண் பிறந்து விட்டது. இனி  வருவது  ஆசைக்குப் பெண்ணாய் இருக்கட்டும் என்று அரசுவிடம் கூறி இருந்தது நினைவு வந்தது.

                                             பெண்தான் பிறக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு ஆண்குழந்தையாய் பிறந்தது ஏமாற்றமாய் இருந்தது. வேலைக்கார அம்மா சண்முகநாதனிடம் இந்தாருங்கள். உங்கள் பேரக்குழந்தை என்ன அழகு பாருங்கள் என்று கூறி கையில் கொடுத்தார்கள்.

                                             தந்தை தன் குழந்தையின் முகத்தை ரசித்துப் பார்ப்பதைக் கவனித்தக் கனி அப்பா என் குழந்தை எப்படி இருக்கிறான். பெண் பிறக்க வேண்டும் என நினைத்தேன். ஆண் பிறந்திருக்கிறது. மனது ஏனோ ஏக்கமாய் உணர்கிறது. அப்பா என் வாழ்க்கையே ஏமாற்றமாக முடிந்து விடுமோ என்று உள்மனது உறுத்துவது போல் உள்ளது.

                                             அப்பா என்மீது எவ்வளவு பாசம் வைத்தார். குழந்தை மீதும் அளப்பரிய பற்றும் பாசமும் கொண்டவராயிற்றே. மடல் எழுதாமல் இருக்கவே மாட்டாரே. அப்பா என் இதய தெய்வத்திற்கு ஏதும் ஆகியிருக்குமோ? உடல்நலமில்லாமல் இருப்பாரோ. என்மனம் ஒரு நிலையில் இல்லாது தத்தளிக்கிறதே என்ன செய்வேன் என்று கூறி கண்ணீர் உகுத்தாள்.

                                             கனகு நீ அழக்கூடாதம்மா. பச்சை உடம்புகாரி அழுதால் ஆகாதம்மா. தீராத தலைநோவை உண்டாக்குவதால் அழாதம்மா என்று ஆறுதல்படுத்தினார் வேலைக்கார அம்மா.

                                             மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம் அவ்வீட்டில் தங்கினர். அதன் பின் முக்கியமானப் பொருள்களை லாரியில் ஏற்றிக் கொண்டு மூத்த மகன் பிரகாஷின் பதிவுச்சான்றிதழையும் வாங்கிக் கொண்டு அமைதி தரும் என்ற நம்பிக்கையுடன் ஆலந்தாவிற்கு வந்தனர்.

                                             மகனை உள்ரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சேர்த்தாள்.

                                             தான் பிறந்து வளர்ந்து காதல் கணவனுடன் களித்திருந்ததும், மடல்களிலே மனம் மலர்ந்திருந்ததுமாகிய அந்தவீடு கனிக்கு சிறிது அமைதி அளித்தது.

                                             மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததும் ஓடோடி வந்து இவளைத் திகைப்பிலாழ்த்த வேண்டும் என்றாமடல் கூட எழுதாது இருக்கீறீர்கள்.

                                             கனி என் செல்லம் உடம்பை நன்கே கவனித்துக் கொள். ஒரு குழந்தையைக் கவனிக்கவே திண்டாடி இருக்கிறாய். இப்பொழுது இரண்டாகி விட்டது. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் உன் உடம்பை பேணி நீ நன்றாக இருந்தால்தான் நம்பிள்ளைகளை வளர்க்க முடியும் என்றீர்களே.

                                             எவ்வளவுக் கடினமான வேலையைக் கூட உன் அன்பு முகம் என்மனதில் தோன்ற ஒருநொடியில் கணினி போன்று முடித்து விடுவேன் என்பீர்களே. நான் தனிமையில் இப்படி அவதிப்படுவது உங்கள் மனதில் தெரியவில்லையா?

                                             எங்கும் நீ. எதிலும் உன் முகம் தான் தெரிகிறது. முகம் பார்க்கும் கண்ணாடியில் என் முகத்தில் உன்முகம்தான் பிரதிபலிக்கிறது என்பீர்களே. நீயின்றி நானில்லை என்பீர்களே. உங்களுக்கு இரண்டாவதும் பையன்தான் பிறந்துள்ளான். எங்கள் முகம் பிரதிபலிக்க வில்லையா?

                                             அல்லது எங்களை மறந்து விட்டீர்களா? எங்களை கைகழுவி விடும் அளவுக்கு உங்களுக்கு என்ன சோதனையோ. நான் என்றும் உங்களோடு பேசிக்கொண்டே இருக்கிறேன். கேள்விகளின் நாயகனே எந்தன் கேள்விகளுக்கு பதில் எப்போது தெரியும் என்று கேவி, கேவி அழுவாள்.

                                             பிரகாஷ் அம்மா ஏன் அழுகிறீர்கள். அப்பாவைப் பார்க்க வேண்டும் என்றா. எனக்கும் அப்பாவைப் பார்க்க வேண்டும் என்றா. எனக்கும் அப்பாவைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. அப்பா இன்னும் ஏன் வரவில்லையம்மா?

                                             எனக்கு நிறைய பொம்மைகள். விளையாட்டுச் சாமான்கள், திண்பண்டங்கள் எல்லாம் வாங்கி வந்தார்கள். புது ட்ரெஸ் எத்தனை எடுத்து தந்தார்கள். அம்மா என் பிறந்த நாளை புது வீட்டில் வைத்து எப்படி சந்தோசமாகக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

                                             என்னைப் பள்ளியில் கொண்டு சேர்த்தார்களே அது எவ்வளவு நல்ல பள்ளி. அப்பாதானே அந்தப் பள்ளியில் சேர்த்தார்கள். நீ ஏன்மா அங்கிருந்து இங்கு கூட்டி வந்து விட்டாய். இங்கே பிள்ளைகளெல்லாம் அழுக்கு எனக்கு இந்தப் பள்ளி பிடிக்கவே இல்லை.

                                             அப்பாவை வரச் சொல்லம்மா அப்பா வந்தால் என்னை அந்தப் பள்ளியில் சேர்த்து விடுவார். நாம் புது வீட்டிற்குப் போய் விடுவோம். ஹாய் ஜாலி தான் என்றான்.

                                             அம்மா ஏம்மா அழுகிறாய். அப்பா வந்து விடுவார் தானே நீ அழாதேம்மா. பிரகாஷைப் பார்க்க வந்தார்தானே முகுந்தை அப்பாவிற்குப் பிடிக்கவில்லையா. அவனை பள்ளியில் சேர்ப்பதற்குக் கூட வரவில்லை.

                                             நீ இந்தச் சின்னப் பள்ளியில் சேர்த்துவிட்டாய் ஒரு புது ட்ரெஸாவது வாங்கித் தருகிறாயா? உனக்கு ஒன்றுமே தெரிவதில்லை. எப்பப் பார்த்தாலும் அழுதுகிட்டே இருக்கிறாய்.

                                             எனக்கு அப்பா வேண்டும் என்னை அப்பாவிடம் கூட்டிச் செல். முகுந்த் பையனைத் தாத்தாவிடம் விட்டு விட்டு நாம் அப்பாகிட்ட போவோம்மா என்று ஊடலாய் பிள்ளை மொழி பேசினான்.

                                             ஏன்டா பிரகாஷ் விளையாட்டுக்குக் கூட அப்படிச் சொல்லாதே. அப்பா வெகு தொலைவில் உள்ள ஊரில் வேலை பார்க்கிறார்கள். நமக்கும் அங்கு போக முடியாது. அப்பாவிற்கும் நினைத்த மாத்திரத்தில் வர முடியாது.

              அம்மா முகவரி இழந்து தவிக்கிறேன்யா தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் நமக்கும் ஒரு வழி கிடைக்கச் செய்ய இறைவன்தான் அருள்  புரிய வேண்டும். சிறுவர்கள் கள்ளம் கபடு இல்லாதவர்கள். சிறுவர் வேண்டுதலுக்கு மனமிரங்கி வந்து இறைவன் உதவுவார்.

                                             நீயும் தம்பியும் சேர்த்து தினமும் எங்கப்பா எங்களை நாடி இங்கு வரவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் கடவுள் வழிகாட்டுவார் மகனே கவலைப் படாதே கோவிலுக்குச் சென்று வா என்று கூறி அனுப்பி வைத்தாள்.

Advertisement