Advertisement

               முருகானந்தம் அவனது தந்தையாருமே சண்முகநாதனை தேடி வந்தார்கள். கனிஅரசனை பற்றி நல்ல விதமாக எடுத்துச் சொன்னார்கள். காண்ட்ராக்ட் அடிப்படையில் தான் வெளிநாட்டில் வேலை செய்கிறான். தவணைக் காலம் முடிவடைந்ததும் இங்கேயே ஒரு தொழிலைப் பார்த்து குடும்பத்தை பேணிக்கொள்வான். வருத்தப்பட வேண்டாம்.

               சண்முகநாதன் யோசிக்கலானார். கனகு இங்கே வாம்மா என்று அழைத்தார்.

               என்னப்பா இதோ வந்துவிட்டேன். தாகம் எடுக்கிறதா தண்ணீர் வேண்டுமா.

               இல்லையம்மா உன்னிடம் முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும். அவர்களிருவரும் பேசிச் சென்றதை கவனித்தாயா என்று கேட்டார்.

               கேட்டேன் அப்பா. எதுவானாலும உங்கள் சித்தம் என் பாக்கியம் என்றாள்.

               மகளே பையன் நல்லவனாகத் தெரிகிறான். உன்னை அதிகமாக நேசிக்கவும் செய்கிறான். வெளிநாட்டில் வேலை செய்கிறான் என்பது மட்டுமே தான் எனக்கு ஒத்து வரவில்லை. உன் விருப்பம் எப்படிமா என்றார்.

               இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது போல எனக்கு என்ன தெரியும் வெளிநாட்டில் வேலை செய்வது பெரிய தவறாப்பா? நாம் விரும்புவர்களை விட நம்மை விரும்புவரை ஏற்றுக்கொள்வது நல்லது தானே அப்பா.

               தவணைக்காலம் நிறைவடைந்ததும் இங்குதானே இருக்கப்போகிறார். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வது போல வாய்ப்பு உள்ள போது பணம் காசு சேர்த்துக்கொள்ளட்டுமே. “வாழ்க்கைக்கும் பணம் மிக மிக அவசியம்தானே என்று தந்தையிடமே கேள்வி போல் கேட்டாள்.

               அப்படியாம்மா. நீ எண்ணித் துணிவாய் என்பது தான் என் கருத்து. வாழ்க்கை உள்ளது. அதனை நல்முறையில் அமைத்துத் தரவேண்டியது என் பொறுப்பு உனது சொல், செயலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வாழ்க்கையை நிர்ணயிப்பதில் உனக்கும் சம பங்கு உண்டு”.

               உனக்கு சம்மதம் என்றால் ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்ததுக்கு சொல்லி விடுமோ.

               திருமணம் என்பது நம்மால் ஆகின்ற காரியமில்லை. கடவுள் சித்தம் என்று நீங்கள் தானே கூறுவீர்கள். கடவுள் சித்தப்படி நன்மையாய் நடக்கட்டும் என்று கூறிவிட்டு டிபன் தயாரிக்கச் சமையலறைக்குள் சென்றாள்.

               சண்முகநாதன் விழித்தெழுந்து காலைக்கடன் முடிந்த பின்பு நாட்காட்டியை  எடுத்துப்பார்த்தார். ஆவணித் திங்கள் பத்தொன்பதாம் நாள் மிக நல்ல நாளாகத் தோன்றியது.

               அவர் முருகானந்த் இல்லம் தேடிச் சென்றார். முருகானந்த் அப்பாவிடம் பேசி ஆவணி பத்தாம் நாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்வோம் என்று கனியரசன் வீட்டில் சொல்லி வரும்படி கேட்டுக்கொண்டார்.

               பின் சம்பந்திகள் இருவரும் விழா எப்படி நடக்க வேண்டுமெனப் பேசித் திட்டமிட்டனர். அங்கு கடைக்குட்டித்தம்பி இங்கே ஒரே மகள் செல்லக்குட்டி கேட்கவா வேண்டும் இரு வீட்டாரின் பரிபாலனத்துக்கும் நிச்சய தாம்பூல விழாவே தேவியின் திருவிழா போல் கோலகலமாக நடந்தேறியது.

               எண்ணி பத்தே நாளில் திருமணவிழாவும் வெகு விமரிசையாக நடந்தேறியது. எண்ணங்கள் மட்டும் செயல் வடிவம் பெற்றுவிட்டால் ஒரு படையே எதிர்த்து வந்தாலும் தடைபடுத்த முடியாது என்பது போல அரசுவின் எண்ணம் திண்ணம் பெற்றதால் எந்தத்தடங்கலும் தாமதமும் இன்றி கனகுவின் கழுத்தில் மாலைசூட்டி மனைவியாக்கி கொண்டான்.

               ஜோடிப் புறாக்கள் கொஞ்சின, குலாவின கனிஅரசன் என்னங்க இந்தப்பெயரை உங்களுக்கு யார் வைத்தது. உலகத்து கனிகளுக்கெல்லாம் அரசனாகி விடாதீர்கள். எனக்கு மட்டுமே அரசனாயிருப்பீர்கள் தானே.

               ஏன் கேட்கிறாய்? உமையொரு பாகன் தன் உடலின் சரிபாதியை உமையவளுக்குத் தந்து ஆணும் பெண்னும் சமம் என்று நிருபித்தாரில்லையா. இனி என் கனி நீ தான் கனகு என்றொரு பெயர் உனக்கெதற்கு நீ என் கனி நான் உன் அரசன். இனி இரு பெயர் நமக்கெதற்கு நாம் ஈருடல் ஒர் உயிர்போல் ஒரே பெயர் என்று ஆக்கிகொள்வோம்.

               என் கனிரசத்தைப் பருகலாமா என்று கேட்டுக்கொண்டே அவளை அணைத்தான். செழுங்கிளை தாங்கும் கொம்பு போல் அவள் மேல் அவன் படர்ந்தான்.

               முதல் இரவிலேயே முக்கனியின் தித்திப்பையும் பருகிக் களித்தனர்.

               இரவுப் பகல் எண்ணாது எந்நேரமும் என்கனி என்று ஏதாவது சீண்டிக்கொண்டும் ஊடலாடிக் கொண்டும் பரசவமாய்ப் பொழுதைக் கழித்தனர்.

               என் இல்லத்தரசியே, உள்ளங்கவர் கள்ளியே அடியேனின் விடுமுறை நாட்கள் குறைந்து கொண்டே வருகிறது. பனிக்குச் செல்லும் நாள் நெருங்கிக்கொண்டே வருகிறது. அவ்விடம் வருவது பற்றித் தங்கள் கருத்து என்னவோ என்று கேட்டான் அரசு.

               அவ்விடம் அகப்பட்டுக்கொண்டு தான் திண்டாடுகிறேனே. எவ்விடம் வருவது பற்றிக் கேட்கிறிர்கள்.

               ஆங்…… ஒன்றும் தெரியாத பாப்பா விரலைப் பிடித்து கடித்தாளாம். கனி விளையாட்டு போதும் நான் சீரியஸாகப் பேசுகிறேன். கவனிக்கிறாயா.

               முகத்தை ஒரு முழுத்துக்கு தூக்கி வைத்துக்கொண்டு நானும் சீரியஸாகத்தான் கவனிக்கிறேன். சொல்லுங்கள்

               அவள் முகத்தைப் பார்த்துச் சிரிப்பை அடக்க முயன்றும் முடியாது கொல்லென்று சிரித்து விட்டான் அரசு.

               என்ன நான் சீரியஸா இருக்கேன். நீங்கள் சிரிச்சுக்கிட்டு விஷயத்துக்கு வாங்க.

               வந்துக்கிட்டே இருக்கேன் அதாவது நீயும் என்னுடன் துபாய் வந்து வாழ்க்கை நடத்தச் சம்மதமா எனக்கு உன்னை பிரிந்திருப்பது நினைக்கியிலேயே கல்லில் நார் உரிப்பது போன்று அத்தனை கடினமாய் உள்ளது.

               நீ அங்கு வருவதாய் இருந்தால் நான் சென்றவுடன் விசா மற்றும் என் மனைவி என்பதற்கான சான்று மற்றும் ஆவணங்கள் ஏற்பாடு பண்னுவதற்கே ஆறு மாதமாகும். அந்த ஆறு மாதங்களை எப்படி தாங்கிச் சமாளிப்பேன் என்ற கவலையாக உள்ளது என்றான்.

               நான் ஒன்று சொன்னால் நீங்கள் கோபம் கொள்ள மாட்டீர்களே.

               நான் அங்கு வந்தால் நீங்கள் அலுவலகம் சென்றபின் தன்னந்தனியாக கொட்டுகொட்டென்று விழித்துக்கொண்டுதானே இருக்க வேண்டும். எனக்குத் தனிமை என்பது மிகுந்த பயத்தை உண்டாக்கும். உங்களைத் தவிர வேறு யாரிடமும் பேசுவதற்கு அங்குள்ள மொழி கூடத்தெரியாதே.

               மேலும் என் தந்தை தனியாக இருந்தால் கலங்கிவிடுவாரே. சிறு வயதி

லேயே என் அன்னை இறந்தபோது வேறு துணையை நாடாது எங்களுக்காகவே வாழந்தவர். இந்த வயதுக்காலத்தில் அவரைத் தனியாகத் தவிக்க விட்டுடக்கூடாதுங்க. தயவு செய்து என்னை இங்கு வசிப்பதற்கு சம்மதியுங்கள் என்று கெஞ்சிக் கேட்டாள்.

               நான் மட்டும் பாவமில்லையா? இரண்டு ஆண்டுகள் தனியாகத்தானே இருந்திருக்கிறேன். இன்னும் எட்டு ஆண்டுகள் தனியாகத்தான் இருக்க வேண்டுமா? வேதனையைத் தாங்குவேனா. திருமணம் எதுக்காக செய்து கொண்டோம். எண்ணி, எண்ணித் துடிப்பதற்கா? ஏங்கி ஏங்கி தவிப்பதற்கா என்ற நெஞ்சுருக்குகிறது.

               நீங்கள் யார்? என் உயிர். என் உயிர் தவித்துநிற்பதை காணச் சகிக்காது எனக்கு நமக்குள்ளே உறவுப்பாலம் ஏற்பட்ட இந்த ஒராண்டு கலத்தை எப்படி கழித்தீர்கள்? தாகம் தணிக்கும் தண்ணீராக நான் இருந்திருக்கிறேன். அல்லவா?

               இப்பொழுது என் உணர்வெல்லாம் நீங்கள் தான். உங்கள் உணர்விலும் நானே நிறைந்து நிற்கிறேன். இந்த எண்ணத்திலே பத்து மாதங்களைக் கழித்து விட்டு கூண்டிலிருந்து தப்பி பறந்த பறவையாக ஒடி வந்து விடுங்கள்.

               இரண்டு மாதங்கள் கழித்திருப்போம். மறுபடி பத்துமாதங்கள் கூண்டுக்கிளியாய் ஆகி விடுங்கள். எட்டு ஆண்டுகள் ஒரு நொடியில் ஒடி விடும். நான் உங்கள் உள்ளத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பொழுது பிரிவுத்துயர் ஏன் உங்களை வாட்டுகிறது.

               நான் நீங்கள் என் அருகில் இருந்து என்னைத் தாங்கி கொள்வதாகவே நினைத்திருப்பேன்.

                கருத்தரித்த பின் அது குழந்தையாகி வெளியுலகைக் காணும் வரை பத்து மாதங்கள் கண்ணுக்குத் தெரியாத அந்து சிசுவை தாய் எப்படி பேனுகிறார். கருப்iபிலிருக்கும் தன் குழந்தை நலமாய் வளர வேண்டும் என்பதற்காகதான் உணவு உண்கிறார். மருந்து குடிக்கிறார். அசைவு தெரிந்ததும் அதனுடன் மனதால் பேசி கூட மகிழ்கிறார். பத்துமாத பந்தமாய் நாம் கண்ணால் பார்க்காமல் காலத்தைத் தள்ளுவோம். இரண்டு மாதங்கள் ஆனந்த லாகிரியில் லியித்திருப்போம். இதில் எங்கே இருக்கிறது பிரிவு. எங்கே வாட்டுகிறது துயர் ஒன்றுமில்லை. நீங்கள் சாதாரணமாகச் சென்றுவரலாம். நான் பத்து மாதங்கள் தவம் இயற்றி தங்கள் வரவை வழிமேல் விழிவைத்துப் பாhத்திருப்பேன் சம்மதமா கனிவுடன் பார்த்தாள்.

               கனி இத்தனை சொன்ன பிறகு அவளை வற்புறுத்த அவனுக்கும் மனம் வரவில்லை. இங்கு வா ஒன்று சொல்கிறேன் என்று கூறி அவளை இழுத்து இறுக்க அணைக்க அதரங்களைக் கௌவினான்.

               இது கிடைக்குமா என்றான் அவன் கற்பனையில் கிடைக்குமே என்றாள் அவள்.

               யாருடைய வேண்டுதலுக்காகவும் நிற்காமல் சுழன்ற நாட்கள் கடந்து அரசு புறப்பட வேண்டிய நாளும் வந்தது. காலையிலேயே கிளம்பிச் சென்று அண்ணன்மார்களைப் பார்த்து வந்தான்.

               நண்பகல் உணவுச்சாப்பிட அமர்ந்தான் அரசு. உணவு உண்ண முடியமால் போதும் என்று எழுந்தான் என்னங்க சாப்பாடு நன்றாக இல்லையா? சாப்பிடாமலே எழுந்து விட்டீர்களே. இருங்க வேறு ஏதாவது பதார்த்தம் செய்து தரட்டுமா என்று கேட்கும்பொழுது நெஞ்சு முட்டிக்கொண்டு கண்ணீர் எட்டிப் பார்த்தது.

               ஒன்றுமில்லை கனி சாப்பாடு நன்றாகத்தான் இருக்கிறது. தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. நாளை இந்நேரம் எங்கே சாப்பிடுவோமோ என நினைத்தேன். மனதில் பெருமூச்சு எழுந்தது எழுத்து விட்டேன்.

               நீ சாப்பிடு. இன்றைக்கு நான் தான் உணவு ஊட்டி விடுவேனாம். வா. உட்கார் என்று அவள் வாயில் உணவை எடுத்து ஊட்டினான். இருவர் கண்களிலும் கண்ணீர் வந்து விடுவேன் என்று அச்சுறுத்திக் கொண்டிருந்தது. தற்செயலாகச் சமையலறைப் பக்கம் வந்த சண்முகநாதன் இதைக் கண்டு கண் கலங்கினார்.

               மாப்பிள்ளை அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்கள் இப்படிக் கண்கலங்கலாமா? இப்பொழுது என்ன உத்தியோகத்திற்காகத்தானே செல்கிறீhகள்? நினைத்பொழுது விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து கனகு முன் குதித்து விட வேண்டியது தானே.

               அம்மா கனகு மாப்பிள்ளை ஊருக்குப் புறப்படும்போது நீ முக்கைச் சீந்திக்கொணடிருக்க கூடாதம்மா. காதல் கொண்ட மனது என்ன பாடு படும். நீ சிரித்தமுகத்துடன் வெற்றிதிலகமிட்டு அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரது செயல் அனைத்தும் சிறப்பாக நடக்கும் என்று மருமகனையும் மகளையும் தேற்றினார்.

               தான் மட்டும் மறுபக்கம் திரும்பி கண்ணாடியைக் கழட்டி கொண்டு கண்ணில் கசிந்த கண்ணீரை மேல்துண்டால் துடைத்துக்கொண்டார்.

               மகளும் மருமகனும் ஒன்றரை மாதகாலமாக வாழந்த இனிய இல்லறத்தைக் கண்டு மகிழ்ந்திருந்தார் வேலைக்காகத்தான் என்றாலும் பிரிவு என்பது மனதை ஆட்டம் கொள்ளத்தான் செய்தது.

               பெட்டி, படுக்கை மற்றும் பொருட்கள் சகிதமாக மனைவி, மாமனார் துணையுடன் தொடர்வண்டி நிலையம் வந்தடைந்தான் அரசு.

               ரிசர்வேஷன் செய்யப்பட்ட டிக்கெட்டுடன் தன் இருக்கையில் ஏறி அமர்ந்தான். கனகும், மாமனாரும் வண்டிக்கு வெளியே நின்றனர். புகைவண்டி புறப்படும் நேரத்தில் கனியின் கையைப் பிடித்து அழுந்த முத்தம் பதித்து டாடா காட்டினாள். கனி போதுமா என்று கண்ணடித்தாள். அவரும் பத்து மாதங்கள்தான் தாங்கும் என்று கண்ணடித்து, கையசைத்து வண்டி புறப்பட்டுச் சென்றது.

               அலுவலகம் செல்லும் நேரம் தவிhத்து மற்ற நேரங்களில் கனியின் புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு புகைப்படத்துடன் பேசிக் கொண்டிருப்பதே அரசுவின் வழக்கமாக இருந்தது.

               வாரம் ஒரு மடல் வரைந்து விடுவான். அச்சமயத்தில் கனியின் வீட்டிற்கோ, என் ஊருக்கோ கூட தொலைபேசி வசதி கிடையாது.

               ஆனால் அன்றும் அரசு மட்டும் தான் மடல் எழுதுவானே தவிர கனி ஒரு பொழுதும் மடல் எழுதினாள் இல்லை. அரசு வேலை பார்க்கும் இடத்தின் முகவரி கூடத்தெரியாது.

               திருமணம் நடந்த சில நாட்களிலேயே அரசுவிடம் நம் திருமணத்திற்கு அப்பா எப்படிச் சம்மதித்தார் தெரியுமா என்று கேட்டாள்.

               யாம் அறியோம் பராபரமே என்று கையை விரித்தான்.

               வெளிநாட்டில் வேலை செய்கிற மாப்பிள்ளை வேண்டாமா என்று தந்தை கூறியதும் அப்பா வெளிநாட்டில் வேலை செய்வது என்பது அவ்வளவு பெரிய தவறா ஒளவைப் பாட்டி கூட திரைகடல் ஒடியும் திரவியம் தேடு என்றுதானே சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டேன்.

               குற்றமொன்றுமில்லை எனக்கு உசிதமாகப்படவில்லை.

               நான் தங்கள் மேல் உள்ள காதலை மறைத்துக் கொண்டு, பையன் நல்லவன் என்கீறிர்கள் திருமணத்திற்குப் பின் வெளிநாட்டில் வேலை வேண்டாம். இங்க் வேலை தேடிக்கொள்ளுங்கள் என்றால் கேட்காமாலா இருக்கப்போகிறார் என்றேன்.

               உனக்கு விருப்பம் என்றால் எனக்கு விருப்பம்தான் என்று சம்மதித்து விட்டார். எனவே நீங்கள் பத்து வருட ஒப்பந்தம் என்றாலும் அதை ஐந்து வருடமாகக் குறைத்துக் கொண்டு இங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றாய். நானும் அதற்கென்ன முயற்ச்சிக்கிறேன் என்றேன். அப்பொழுதும் கூட நீ என்னுடன் வருவாய் என்றுதான் எதிர்பார்த்தேன்.

               நீ வருவதாக இல்லை. நீ அருகில் இல்லாத ஒவ்வொரு நாளும் காணல் நீராய் கலைகிறது. எனவே ஒப்பந்தகாலத்தை குறைப்பதற்கு முயற்சி மேற்கொண்டேன். என்னவாயிற்று தெரியுமா?

               ஆண்டுக்கு ஒரு மாதம் விடுமுறை என்றால் மட்டுமே பத்து ஆண்டுகள் ஒப்பந்த காலம் முடியும். நீ முதல் வருடம் ஒரு மாதம் விடுப்பு எடுத்தாய். இப்பொழுது இரண்டிரண்டு மாதங்கள் விடுப்பு எடுக்கிறாய். பத்து ஆண்டுகள் ஆனாலும் ஆகலாம் என்கிறார்கள். எனக்கு என் செய்வது என்று புரியவில்லை என்று மடலில் எழுதியிருந்தான்.

Advertisement