Advertisement

               ஒருநாள் முதலாளி அரசுவை அருகே அழைத்தார். அரசு நீ கிட்டதட்ட இருபது இருபத்திரண்டு ஆண்டுகள் எங்களுக்காக உழைத்துவிட்டாய். அதிலும் இந்த பதினெட்டு ஆண்டுகள் என் குடும்பத்தில் ஒருவனாகவே ஆகிவிட்டாய். என் சொத்தில் பாதியைக் கூட உனக்குத் தரலாம். தந்தாலும் உன் உழைப்புக்கு ஈடாகாது.

               நான் தகுந்த சன்மானத்தையும், என் அன்பையும் வாழ்த்துதலையும் தந்து உன்னை அனுப்பி வைக்கிறேன். இனியாவது நீ உன் தாய்நாடு சென்று மனைவி மக்களுடன் மகிழ்ந்திரு. இனிமையான இல்லறம் நடத்து என்றார்.

               நீ புறப்படுவதற்கு ஆயத்தமான எல்லா ஏற்பாடுகளையும் செய் என்றார். ஆகட்டும் என்று ஒரு வார்த்தை மட்டுமே விடையாகத் தந்தான்.

               தெளிவான சிந்தனையும், நல்லெண்ண ஓட்டங்களும் கைவரப்பட்ட அரசு மன நிம்மதியுடன் அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து கனிக்கு மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் எடுத்துக்கூறி விரிவான மடல் எழுதினான். பெரிய பார்சலாக எடையிட்டு தபாலில் சேர்த்தான். நிம்மதியுடன் பெருமூச்சு விட்டான். கனியிடம் செல்லப்போகிறோம் என்று மனது துள்ளியது.

               அம்மா இன்று நான் முன்னதாகவே ஆபீஸ் போக வேண்டும், சாப்பாடு தருகிறீர்களா என்று கேட்டான் பிரகாஷ்.

               இதோ வந்துவிட்டேன் என்று கூறிய கனி தட்டில் இட்லிகளை எடுத்து வைத்தவாறே இன்று என் இடது கண் துடிக்கிறது. ஏதோ நல்ல செய்தி வரும்போல் தெரிகிறது. மனதும் என்றும் இல்லாமல் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறது. அம்மா பூப்போன்ற இட்லியில் தெரிகிறதம்மா உங்கள் மனது. என்னாளும் இன்று ருசியில் தேவாமிர்தம் என்றான்.

               அம்மா அடுத்த வாரம் நம் முகுந்த் வருகிறான்.

               அப்படியா சந்தோஷம் என்றாள் கனி. அம்மா நானும் இன்று புதியதாக துவங்கவுள்ள தொழிற்சாலை ஒன்றின் மின் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

               அலுவலகம் சென்று வந்தபின்பு கோவிலுக்குச் செல்வோம். வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு தயாராய் இருங்கள் என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.

               நண்பகல் பன்னிரண்டு மணிக்கு அம்மா தபால் என்ற குரல் கேட்டு ஓடோடி வந்தாள் கனி. பெரிய புத்தகம் போன்ற பார்சலைக் கண்டதும் முகுந்த் தான் ஏதோ பார்சல் அனுப்பியிருக்கிறான் என்று எண்ணி வாங்கினாள்.

               பார்சலில் முகவரி எழுதப்பட்ட கையெழுத்தைக் கண்டவுடன் உடலும், உள்ளமும் பரவசத்தால் சிலிர்த்தது.

               பார்சலைக் கொண்டு சாமிபடத்தின் முன்பு வைத்து வணங்கி நின்றாள். பார்சலைப் பிரித்துப் படிக்கத் துவங்கினாள். நல்ல வேளையாக சமையல் வேலையெல்லாம் முடித்திருந்தாள்.

               இதைப் புத்தகம் படிப்பது போன்ற ஆர்வத்துடன் தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தாள். மணி இரண்டைத் தாண்டியும் மகன் வரவில்லையென்றதை அறிந்தும் கவலைப்படாமல் படித்தாள்.

               படித்துக் கொண்டிருக்கும்பொழுதே குலுங்கி, குலுங்கி அழவும் செய்தாள். பரவசப்படடு அழவும் செய்தாள். அவள் உள்ளக் கிடக்கையை அவளையன்றி யாரே அறிவார்.

               அம்மா இன்று வழக்கத்தை விடவும் நேரமாகிவிட்டதே. பசி வயிற்றைக் கிள்ளுகிறது. சாப்பாடு போடுங்கள் என்றான்.

               கை, கால் சுத்தம் செய்து வா, இதோ சாப்பாடு போடுகிறேன் என்றாள் தாய்.

               தாய் பரிமாறிய உணவில் உப்பு இல்லாதிருந்தும் கூட பசி ருசியறியாது என்பதாய் அள்ளி, அள்ளி உணவு உண்டான். வயிறு நிரம்பிய பின்பே தாயின் முகத்தை ஏறிட்டு நோக்கினான்.

               குழம்பில் உப்பு, காரம் எல்லாம் சரியாக இருந்ததா என்று தாய் கேட்டாள். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதற்காக உப்பே இல்லாமல் மறந்தாலல்லவோ நினைப்பதற்கு என செய்து விட்டீர்கள்.

               மகன் பதிலால் உடல் குலுங்க சிரித்தாள் கனகு. அம்மாவின் முகத்தில் வழக்கத்திற்கு மாறாக அலாதி மகிழ்ச்சியும், மலர்ச்சியும் தெரிவதைக் கண்டான்.

               அம்மா இடது கண் துடித்ததின் மகிமையை இன்று முகம் தாமரையாக மலர்ந்து சிவந்திருக்கிறது என்றான்.

               சீ போடா தாயிடமும் கேலிப்பேச்சும், கிண்டலும்தானா. உன் மாமன் மகனிடம் கிண்டல் கேலியெல்லாம் பேச வேண்டும் என்றாள்.

               அது அந்தக் காலம். இப்ப அங்க வாலாட்டினால் ஒட்ட நறுக்கி விடுவார்கள். பிள்ளை தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்தானே. என் தோழியிடம் நான் கொஞ்சுவேன், குலாவுவேன், உங்களுக்கென்ன என்றான்.

               அம்மா இன்று மதிய பூஜைக்குக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என நினைத்தேன். அது நடந்து நடை சாத்தியிருப்பார்கள்.

               மாலை பூசைக்குக் கோவில் செல்வோமா என்றான். தம்பி வருகிறேன் என்றான். வரவில்லையா? இரவில்தான் வந்தாலும் வருவான்.

               சற்று நேரம் ஓய்வெடுக்கிறேன் என்று கூறி டிவி முன் அமர்ந்தான். அவன் டிவி பார்த்துக் கொண்டிருந்தபொழுது இந்தப் பார்சல் இன்று தபாலில் வந்தது. படித்துப்பார் என்று மகனிடம் கொடுத்தாள். கொடுத்துவிட்டு சாமிபடத்தின் முன் போய் அமர்ந்தாள்.

               என்னது மின் இணைப்பிற்கான விண்ணப்பங்கள் நிரப்பவேண்டிய பார்ம்ஸ் எல்லாம் ஆபீசிற்கு அனுப்பாமல் வீட்டிற்கு அனுப்பி விட்டார்களா என்று கேட்டுக் கொண்டே வாசிக்கத் துவங்கினாள்.

               வாசிக்க, வாசிக்க ரத்தம் கொதிப்பானான். சினத்தீ முண்டெழுந்தது, நெஞ்சம் படபடக்க, உதடுகள் துடிக்க அம்மா என்று கத்தினான்.

               என்னய்யா என்ன பிரகாஷ் என்று கேட்டு அருகில் வந்தாள் கனி.

               இதோ பாருங்க, இந்த ஆள் இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. வைக்கவும் விடமாட்டேன். நல்ல கதையாக இருக்கிறதே. இவர் பாட்டிற்கு நம் நினைப்பே இல்லாமல இருப்பார். வனவாசம் முடிந்துவிட்டது. வருகிறேன் என்கிறார். இதை யாரால் ஏற்றுக் கொள்ளமுடியும்.

               வனவாச காலத்தில் எங்களை வளர்க்க நீங்கள் பட்ட இடர்பாடுகளை எழுத்தில் வடிக்க இயலுமா?

               இராமர் வனவாசம் தாயின் வரத்தின்படி சென்று ஊர் உலகுக்கு எல்லாம் தெரியும். அவர் குடும்பத்திற்கும் வனவாசத்திற்கும் தொடர்பு இருந்து கொண்டுதான் இருந்தது.

               ஆனால் இங்கு பதினெட்டு வருட வனவாசத்தில் நாம் இருக்கிறோமா, செத்தோமா எதுவுமே அறியாமல் இருந்த இவர் எழுதியிருப்பது எல்லாம் உண்மையென்றெண்ணி ஏமாந்து விடாதீர்கள்.

               யார் கண்டார்கள், அந்த நிபிஷாவிடம் இவர் குடும்பம் கூட நடத்தியிருக்கலாம். இவர் இங்கு வரக்கூடாது என்ற வார்த்தை முழுமையடையுமுன் ஓங்கி கன்னத்தில் அடி விழுந்ததை உணர்ந்தான். கன்னத்தைப் பிடித்து ஒரு நிமிடம் நின்றவன் கீழே விழுந்து படுத்துக் கொண்டான்.

               யாரை இதை கூறுகிறோம். உன்னை பெற்ற உன் தாய் கூறுகிறேன். அவர் உத்தமர். என் உள்மனம் ஒருநாளும் பொய் உரைக்காது என்று கூறிவிட்டு மகன் அருகில் தாயும் படுத்துக் கொண்டாள்.

               அசதி, அயர்ச்சியினால் இருவரும் தூங்கிவிட்டார்கள்.

20

               அம்மா நான் கோவிலுக்குச் செல்கிறேன். அந்த ஆளுக்கு உன் உள்ளத்தில் நம் வீட்டில் இடமில்லை என்று நினைத்தால் என்னுடன் கோவிலுக்கு வாருங்கள் என்றான்.

               மகனின் முதுகையே வெறித்துப் பார்த்தாள் கனகு. எப்படியடா அவரை மறப்பேன், என் உணர்வெல்லாம் அவராகத்தானே உள்ளார்.

               என்று அவர் நம்மை வந்து அழைக்கிறாரோ அன்று அவருடன் நாம் சென்று விடவேண்டுமென என்பது தானே பேச்சு. தாத்தா இறந்த சமயத்தில் உறவினர்களிடமெல்லாம் அப்படித்தானே சொன்னேன்.

               இன்று என்னை வார்த்தை மீறச் சொல்கிறாயா? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்லவனுக்கு ஒரு சொல். கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும். அதுதானே நீதி என்றாள் தாய்.

               அம்மா நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் காலம் கடந்த உண்மையினால் பயனுமில்லை என்று கூறிவிட்டு வேகமாக சென்றுவிட்டான்.

               என் தந்தை கூட பதினெட்டு வருடங்கள் கழித்துக் கூட அவர் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றுதானே கூறினார். நீ அவருடன் இணையாதோன்று சொல்லவில்லையே என்று மனதிற்குள் நினைத்தாள். கோவிலுக்குச் செல்லாமல் சுவாமி படங்களுக்கு முன்னால் போய் நின்று வேண்டினாள்.

               தாய் தன்னுடன் கோவிலுக்கு வரவில்லை. வீட்டிற்குள் சென்று விட்டார்கள் என்று அறிந்தான். சுவாமிக்கு பூசையாகி முடியும் வரை வேண்டா வெறுப்பாக தூண் அருகில் அமர்ந்தான்.

               அம்மா தன் பூவுக்கும், பொட்டுக்கும் வரம்தந்த பெரியவர். பொன்வேலியிட்டு காத்த உத்தமர் என்று தமிழ் பண்பாட்டில் ஊறி கணவனே கண் கண்ட தெய்வமாகப் போற்றுவார்கள்.

               ஆனால் என்னால் அந்த மனிதரை தந்தைசொல் மிக்க மந்திரமில்லை என்பதாய் அவர் சொல்லையும் அந்த மனிதரையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

               ஆனால் என் தாய் தாயாகவும் தந்தையாகவும் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்கள். ஆலவிழுதாக என் அன்னையைத் தாங்கினால் அன்றோ என் பிறவிக்குப் பயன்.

               இறைவா இது என்ன சோதனை இந்த ஆளை இப்பொழுது ஏன் இங்கு வரவழைத்தாய். இப்பொழுது தான் தெளிவான ஓடை போன்று அமைதியாய் சென்று கொண்டிருந்த எம் வாழ்க்கையில் கல்லைத் தூக்கிப் போட்டு கலங்கடித்து விட்டாயே தன்மானமா? தாயா? நான் எந்தப் பக்கம் சாய்வது எப்படிப் பார்த்தாலும் என் தாயே தரம் உயர்ந்து நிற்கிறார்.

               தாயிடம் சேர்ந்திருப்போம் எனின் அந்த ஆளைத் தவிர்த்து விடுவோம் என்ற எண்ணத்துடன் வீட்டிற்குத் திரும்பினாள்.

               அன்னையிடம் எதுவும் பேசாது டிவியை ஆன்பண்ணிவிட்டு டி.வி முன் உட்கார்ந்தான் பிரகாஷ்.

               பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கலங்காது என்பதாய் மகன் ஒன்றும் பேசாமலிருந்தாலும் அவன் அருகில் வந்து அமர்ந்தாள் கனி.

               ஒரு வாரத்தில் உனக்குத் தொலைபேசியில் பேசுகிறேன் என்று கூறிச் சென்றவர் பதினெட்டு வருடங்களுக்கும் பின்னா மடல் வரைந்திருக்கிறார். வருகிறேன் என்றுதானே எழுதியிருக்கிறார். என்று வருகிறேன் என்றா எழுதியிருக்கிறார்.

               நாளை நடப்பதை யார் அறிவார் அவர் வரட்டுமே. வந்தபின் நடந்தவற்றைப் பற்றி தெளிவாக எண்ணுவோமே அதற்குள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறாய் மகனே. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் பாக்கியத்தை இச்செயலால் எனக் களித்துளாய் மகனே. அiதியாய் இரு என்று கனகு கூறினான்.

               எல்லா நாட்களைப் போலவே அந்த நாளும் ஆரவாரமில்லாமல் அமைதியாகவே விடியலுற்றது. ஆனால் விடியக் கருக்கலிலேயே கனகுவின் வீட்டின் முன் காரின் ஆரன் ஒலி ஒலித்தது.

               கனகு ஒடி வந்தாள். ஏய் கனி என்று உயிர்பெற்றழுந்தவள் போல் ஆதங்கக் குரல் கொடுத்தான் அரசு.

               குரலில் தேனைக் குழைத்து எண்ணங்கானும் தேவகானமாய் பதிலைத் தந்தாள் கனி.

               இடையில் புகுந்தான் மகன் பிரகாஷ் நில் அங்கேயே நில் நீ யார்? எதற்காக இங்கு வந்தாய் ஏறு காரில் ஏறி திரும்பி பார்க்காமல் சென்று விடு. ஒரடி வைத்தால் நட்கிறதே வேற என இடியென முழக்கமிட்டான்.

               இந்த கம்பீரக் குரல் என் மகனுடையது தானா என்று சிந்தித்து நின்றான் அரசு. என்ன அழகு இளமையுடன் ஆண்மையும் ஆளுமையும் பெற்ற வீரனாக, வாலிபனாக நிற்பது என் மகனே தான். ஏன் என்னை மறுக்கிறான். தவறு என்ன செய்தேன் என்று உள்ளுற நினைத்தவாறு கனியை நோக்குகிறான்.

               என்னங்க போய் விடுங்கள் போய் நகரத்தில் தங்கி கொண்டு இவனைச் சமாதானம் செய்து பின்பு அழைத்துச் செல்லுங்கள். என் ஆருயிரே தயை கூர்ந்து சென்று வாருங்கள் என்று கூறி கை கூப்பினாள்.

               அரசு வந்த வேகத்திலே சென்றுவிட்டான்.

               ஏண்டா இப்படிச் செய்தாய். அவர் என்னை தொட்டு தாலிகட்டியவர். உனக்கும் உனது தம்பிக்கும் உயிர்கொடுத்த உத்தமர். அவர் தனது நிலை குறித்துச் சுறுதி கலையாமல் எழுதியிருந்தாரே. தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருந்தாரே. மன்னிப்பது தானே மனித இயல்பு.

               சான்றோன் என எண்ணி இறுமாந்திருந்தேனே என் எண்ணம் தோல்வி கண்டு விட்டதே. அவரை அவமதித்து அனுப்பி விட்டாயே. நான் என்ன செய்வேன்.

               ஏண்டா அந்த நிபிஷாவா, பபிஷாவா அவருடன் அவர் வாழ்க்கையை இணைத்திருக்கலாமே. சுய அறிவற்ற நிலையில் தானே இருந்திருக்கிறேன். அப்படிச் செய்திருந்தால் உன்னால் அவரை என்ன செய்ய முடியும். அவர் வாழ்க்கை நெறி தவறா உத்தமர்டா. அவரைப்போய் இப்படி பேசி விட்டாயே. உன் சினம் தணிந்ததா? இப்பொழுது நிம்மதி தானே. போ போய் உன் வேலையைப் பார் என்று ஆற்றாமையுடன் பேசித் தீர்த்தாள் கனகு.

               அம்மா அவர் இல்லாமல் இத்தனை நாள் நாம் வாழவில்லையா? வாழவேண்டிய வயதில் உன்னை வாழ வைக்கவில்லை. அணைத்து ஆதரவு தந்து வளர்த்து அறிவுப்புகட்ட வேண்டிய நாளில் எங்களைப் புறக்கிணத்த பெரிய மனதுக்காரர். பாராமுகம் காட்டிய அந்த பரோபக்காரர் நமக்கெதற்கம்மா. வேண்டாம் அவர் வேண்டாம்மா என்று நெஞ்சம் கரையப் பேசினான் மகன்.

               அய்யா மகனே அப்படிச் சொல்லாதே என் உடலிலும் உள்ளத்திலும் உணர்விலும் கூட அவர் தான் நிறைந்து நிற்கிறார். அவர் நினைவும், உணர்வும் தந்த பலத்தினாலேயே தான் நான் தூய்மையாக வாழ்ந்திருக்கிறேன். அவர் தந்த செல்வங்களை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற ஊக்கமும் எழுச்சியும் அவருடைய நினைவுகள் தந்த பரிசு.

               உன்னைப் பெற்றெடுத்த தாய். பிச்சையாக உன்னிடம் யாசிக்கிறேன். அவரை ஏற்றுக்கொள். நீ அவரிடம் பாராமுகம் காட்டினால் கூட பரவாயில்லை. குடும்பத்துடன் ஏற்றுக்கொள். உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன் ஏற்றுக்கொள் என்று மன்றாடினாள்.

Advertisement