Advertisement

               என்னம்மா அரசு மீது உனக்குக் காதலா? என்ன காரியம் செய்துவிட்டாய். உன் வாழ்வில் ஆசைப்பட்ட எதுவுமே உனக்குக் கிடைக்காத மாதிரி ஆக்கிவிட்டாயே.

               அரசு திருமணமானவன் அம்மா. அவள் மனைவிமீதும் மகன் மீதும் அளவற்ற அன்பும், பாசமுமிக்கவன். அவன் போதாத காலம் பழைய நினைவுகள் மனைவி மக்களையும் மறந்து பித்துப் பிடித்தாற்போல இருக்கிறான். அவன் ஒப்பந்தம் முடிந்து ஊருக்குச் செல்ல ஓரிரு மாதங்களே உள்ளன.

               அவன் மனைவியின் முகவரி தெரியாததால் தான் அவனது இந்த நிலைமையை அந்தப் பெண்மணிக்குத் தெரிவிக்காமல் இருக்கிறேன். அங்கு ஒரு நிலவரமும் தெரியாமல் பிள்ளைகளுடன் அந்தப் பெண்மணி எத்தனை இடர்படுகிறாளோ அவளை எண்ணி நான் கவலைப்படுகிறேன்.

               அல்லாவிடம் இறiவா அரசுவையும், அவன் மனைவி மக்களையும் ஒன்று சேர்த்து இன்பமாக வாழ வைக்கவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

               நீ இப்படி நினைத்திருக்கிறாயே. உன் பெண்மைக்கு இழுக்கு ஏற்பட்டு விடுமோ என்று ஏன் பயப்படுகிறாய். நான் நல்வழி காட்டுவேன் என்ற நம்பிக்கையில் இரு. போ எனக்குத் தேனீர் தயாரித்து வா என்றார்.

               சமையலறைக்குச் சென்ற நிபிஷா ஹே அல்லா, எவ்வளவு பெரிய துரோகம் செய்யவிருந்தேன். நல்லவேளையாக என்னை நீ அத்தீச்செயலில் இருந்து காத்துவிட்டாய் நன்றி. ஐயாவுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று தனக்குள் எண்ணியவாறு வேலையில் ஈடுபட்டார்.

               ஐயாவின் மகன்தான் தன் கற்பை சூறையாட எண்ணுகிறான் என்று நான் அவரிடம் எப்படி சொல்வேன். உண்மை அறிந்தால் அவரே என்னை வீட்டை விட்டுத் துரத்திவிடுவாரே. உண்ட வீட்டிற்கு குந்தகம் செய்கிற நீயும் ஒரு பெண்ணா என்று நினைத்து விடுவாரா அல்லது வேலியே பயிரை மேய்ந்தால் அவள் என்ன செய்வாள் என்று என்னை மன்னித்தருள்வாரா?

               என்ன நடக்கும், எப்பொழுது நடக்கும் என்ற கிலியுடனே நாட்களைக் கடத்தலானாள் நிபிஷா.

               அரசுவிடம் சென்று மன்னிப்புக் கேட்கலாமா. அவரே தன் நிலை மறந்து இருக்கிறார். அவரிடம் போய் ஏதாவது கூறி சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் என்பது போல் அவரை மீண்டும் கெடுத்து விடக்கூடாது. அடர்ந்த வனத்தில் திசை தெரியாமல் சிக்கிக் கொண்ட மருண்ட ஆட்டுக்குட்டியாய்ச் செய்வதறியாது தவித்தாள்.

               அரசு ஒரு நல்ல மனிதன். அவரிடம் என் வாழ்வு பத்திரமாக அமையும் என நினைத்தேன். நினைப்பதெல்லாம் நடக்கிறதா இல்லை. அரசுவுக்கு ஏன் இந்த நிலை. என்னைப்பற்றியே நினைத்துப் புலம்பிக் கொண்டிருக்கிறேனே. அவரது மனைவி என்ன பாடுபடுகிறாளோ. அரசுவுக்கு தன் நினைவு வரவேண்டும். அவர் ஒப்பந்தம் முடிந்து ஊருக்குச் சென்று மனைவி மக்களுடன் மகிழ்ந்திருக்க அருள் செய்வாயப்பா இறiவா என்று வேண்டிக் கொண்டார்.

               அவள் மனதில் அரசு பிடித்துக் கொண்ட இடத்தை அகற்றிவிடவும், அவளுக்குத் துணிவிருக்கவில்லை.

               நிபிஷா தன்னிடம் தந்துவிட்டு சென்ற பார்சலை அப்படியும் இப்படியுமாக பூனைக் கையில் கிடைத்த அப்படித் துண்டைப் போல் உருட்டிப் பார்த்தான் அரசு.

               பார்சலைப் பிரித்துப் பார்த்தபொழுது அதனுள் அன்று பிரிப் கேஸினுள் வைத்திருந்த போன் நம்பர்ஸ், தன் வீட்டில் போனுக்கு ஏற்பாடு செய்திருந்த அத்தனை விண்ணப்பங்கள். மேலும், வீடு கட்டிய வகையில் முக்கியமான கணக்குகள் எல்லாம் இருக்கக் கண்டான்.

               அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதுதான் அவனது சிறுமூளைப் பகுதியில் இலேசான பொறி பறக்கிறது.

               ஆ, என் கனி என் மகன் பிரகாஷ். என் கனி பிள்ளைத்தாச்சிப் பெண்ணாயிற்றே. ஒரு வாரத்தில் போன் பண்ணுகிறேன் என்று சொல்லி வந்தோமே.

               இந்த பார்சல் நிபிஷாவிடம் எப்படிப் போயிற்று. இவளிடம் இந்த நம்பர் அகப்பட்டுக் கொண்டதால் அல்லவா நான் கனிக்குப் போன் பண்ணவில்லை.

               ஐயோ, என் கனி நான் உன்னை மறக்கவில்லை. இதோ ஓடி வருகிறேன் என்று கூறியவாறு தொலைபேசி பூத்திற்குச் சென்றான். தனது இல்லத்திற்கு எண்களை அழுத்தினான். ஹலோ என்றது கருடுமுரடான ஆண்குரல்.

               கனி இருக்கிறார்களா? கனியா அப்படி யாரும் இல்லை. இந்த வீட்டில் ஆறேழு வருடங்களாக நான்தான் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன் என்றான்.

               தொலைபேசியை வைத்துவிட்டு அகன்றான். அவன் கனி ஏன் அவ்வீட்டில் இல்லை. அப்பா வீடு சென்றிருக்கிறாள். என்னையும், என் சொல்லையும் மதிக்கவில்லையே என்று சினம் எழுந்த அந்நேரம் தொலைபேசி மனிதன் கூறிய ஆறேழு வருடங்கள் என்ற வார்த்தை நெஞ்சில் மோதியது.

               ஆறேழு வருடங்களா என் கனியை மறந்து இருந்திருக்கிறேன். கனியே தேனமுதே சுகவீனமாய் விட்டு வந்தேன். என்ன பிள்ளை பெற்றாயோ என்ன பெயர் வைத்தாயோ இனி உன் முகத்தில் எப்படி விழிப்பேன். என்ன செய்வேன் இறiவா என்று மருகினான்.

               என் போன் வரும் என்று எதிர்பார்த்து எப்படியெல்லாம் ஏக்கத்துடன் காத்திருந்தாயோ. கண்ணீர் வடித்தான். கர்ப்பிணி நீ எப்படியெல்லாம் தவித்தாயோ, என் தங்கமே உன் தவிப்பைப் போக்கிடக் கடிதமாய் வடிவெடுத்து வருகிறேன்.

               உன் மடிமீது தலைசாய்த்து உறங்கி உடனே புறப்பட்டு வருகிறேன் என்று எண்ணியவாறு மடல் எழுத அமர்ந்துவிட்டான்.

               தனது நிலை குறித்து நிபிஷாவிடமிருந்து அறிந்தது முதல் இன்றைக்கு வரை உள்ள தகவல்களையெல்லாம் வரிசைப்படுத்தி எழுதி கனிக்கு அனுப்ப வேண்டும். அவள் என்னை மன்னித்து ஏற்பாள் என்ற நினைவே இனித்தது.

               எப்படித் துவங்குவது என்று தவித்து என் உயிரினும் இனிய கனிக்கு என எழுதிய வேளை வாசலில் நிழலான நின்றவரைப் பார்த்து யார்? என்ன வேண்டும் என்று உட்கார்ந்தவாறே கேட்டான்.

               ஐயா, முதலாளி உங்களை மிக அவசரமாக அழைத்து வரச்சொன்னார் என்று வந்தவன் கூறினான்.

               வைத்தவை வைத்தபடி அப்படியே போட்டுவிட்டு எம்.டியைக் காண விரைந்து சென்றான்.

               அங்கே அவன் கண்ட காட்சி கதிகலங்க வைத்தது. சிந்தனைத் திறனை இழக்கச் செய்தது. முதலாளி படுத்த, படுக்கையாக சலைன் வாட்டர் இறங்கிக் கொண்டிருக்கிறது. சுவாசத்திற்கு தவித்த நிலையில் கிடந்தார்.

               அரசுவைப் பார்த்ததும் கண்ணீர் தரதரவென கன்னத்தில் வழிந்தோடியது. நிபிஷா பேசக்கூடாது என வாயில் விரல் வைத்துத் தடுத்திட்டபோதும் அவர் பேசினார். இப்பொழுது பேசாவிட்டால் பேசமுடியாதே போய் விட்டால் ஒன்றும் செய்வதற்கில்லை. நான் அரசுவிடம் பேசியே ஆகவேண்டும் என பேசினார்.

               அரசு என் மனைவிதான் எடுப்பார் கைப்பிள்ளை போன்று அடுத்தவர் உதவியின்றி வாழ இயலாது தவிக்கிறாள் என்றால் என் நிலையும் அப்படி ஆகிவிடும் போல் உள்ளதே.

               அவளுக்குமாகச் சேர்த்து நான் ஓடி, ஆடி ஊர் முழுவதும் சுற்றி அலைந்தேன். இன்று இப்படி ஆகிவிட்டதே. என் ஒரே பிள்ளை ஸெராத்கின் படிப்பு முடிவதற்கு இன்றும் ஈராண்டுகள் உள்ளன.

               அரசு இந்த என் தொழில் நிறுவனத்தின் நுணுக்கங்கள் தெரிந்தவன் நீ ஒருவனே. என் மகன் படிப்பு முடிந்து வந்து இதன் நுட்பத்தை அறிந்து நிர்வாகம் செய்துகொள்ளும் திறன் வரும் வரை நீ தான் எனக்கு மகனுக்கு மகனாகக் கண்ணாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் செய்வாயா என்றார்.

               உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நீங்கள் விரைவில் குணமடைந்து எழுவீர்கள். அதுவரை உங்கள் நம்பிக்கைக்கு ஊறு விளையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலை கொள்ளாமல் ஓய்வெடுங்கள் என்று அரசு கூறினான்.

               நீ உன் நிலையிலிருந்து குணமாகி நன்கு தேறி வருகிறாய். உன்னை உன் ஊருக்குச் சென்று மனைவி, மக்களுடன் சந்தோசமாய் வாழ்க்கை நடத்து என்று வாழ்த்தி அனுப்ப வேண்டும் என நினைத்திருந்தேன்.

               நானொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்து விட்டது பார்த்தாயா? இதைத்தான் விதி என்பதா, நானே உன்னைப் போகவிடாமல் தடுக்கிறேன். என்னை மன்னித்து விடப்பா என்று கெஞ்சினார்.

               ஐயா, தவறு நீங்கள் மன்னிப்பு என்னிடம் கேட்கக் கூடாது. என் உயிரை மீட்டுத் தந்தவர் நீங்கள் தானே. உங்களுக்குத் தக்க சமயத்தில் உதவி செய்ய முடிந்ததே என்று எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். போய் வருகிறேன் என்று கூறி வெளி வந்தான்.

               கனிக்கு மடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் உதிக்காமலே வேலைப்பளுவிலும், பொறுப்புடன் பணிவினை செய்வதிலும் நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டே இருந்தது.

               ஆனால், மனைவியின் புகைப்படத்தை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் எடுத்து வைத்து என் உணர்வில் நீ இருக்கிறாய். உன் உணர்விலும் நான்தான் இருப்பேன். என் தவறுகளை, என் இயலாமையை நீ நிச்சயம் மன்னிப்பாய், மறப்பாய். நான் உன்னுடன் வாழ்வது போல நீ என்னுடன் வாழ்ந்து கொண்டிரு என்று கூறி முத்தமழை பொழிந்து அருகில் வைத்துக்கொள்வான்.

               கம்பெனி நிர்வாகத்தை திறமுடன் ஏற்று நடத்தி மேலும் முன்னேற்றமடையச் செய்தான். நிபிஷாவிடம் தன் குடும்பம், தனது ஊர் வாழ்க்கை பற்றிச் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் பேசி உன்னை என் சகோதரியாய் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்தான்.

               எம்டியின் மகன் படிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தான். அவனுக்குப் பொறுப்புடன் நுட்பங்களை கற்றுக் கொடுத்தான். இவனிடம் பேசுவது போல் நிபிஷாவை விழுங்கப் பார்த்தான் ஸெராத்கின்.

               எம்.டி தகுந்த சிகிச்சை சரியான பணிவிடைகளால் ஓராண்டில் எழுந்து அமர்ந்தார். மேலும் ஒரே ஆண்டில் வீட்டுக்குள் கைத்தடி உதவியுடன் நடமாடத் துவங்கினார்.

               தன் மகன் நிபிஷாவிடம் நீ எனக்கு வேண்டும் என்றான். உடன் அவள் நன்றி கொன்ற பாவியாக்கி விடாதீர்கள் என்னை மறந்து விடுங்கள். இவ்வீடு எனக்கு அடைக்கலம் கொடுத்தப் புகலிடம். இதனை மாசுபடுத்த நான் ஒருநாளும் விளைய மாட்டேன் என்று கூறி அணைக்கச் சென்ற கையை வெடுக்கெனத் தள்ளிவிட்டதை அவர்களிருவரும் அறியா வண்ணம் எம்டி பார்த்தார். கேட்டதால் தன் நிலை மறுபடியும் படுக்கையில் படுக்கும்படி ஆகிவிடுமோ என்று கவலை கொண்டார்.

               நிபிஷா அரசுவிடம் சகோதரியாக என்னை ஏற்றுக்கொண்டேன் என்றீர்களே. சகோதரிக்கு சகல விதத்திலும் பாதுகாப்புத் தருவது சகோதரன் கடமையல்லவா என்றாள்.

               இங்கு இந்த இடத்தில் உன் பாதுகாப்புக்கு எக்கேடும் கிடையாதே என்றான் அரசு.

               உனக்கும் நினைப்புத்தான். உயிரினும் மேலாகப் போற்றப்படும் என் கற்புக்கே பங்கம் ஏற்படும் போல உள்ளது. நான் பயந்து, பயந்து நடுக்கத்தோடேயே ஒவ்வொரு நாளும் கடத்துகிறேன் என்றாள்.

               உன் கற்பை சூறையாட நினைக்கும் கயவன் இங்கே யாரம்மா சொல் என்றான் அரசு.

               நம் எஜமானரின் மகன் ஸெராத்கின் தான் அந்தப் போக்கிரி என்றாள். உடன் ஸ்தம்பித்து நடுவே நீட்டோலை வாசியா நின்ற கல்மரம் போல நின்று விட்டான் அரசு. இதனையும் இவ்விருவர் அறியாமலே கண்டு விட்டார் எம்.டி. அவருக்கு இது என்ன சோதனை என்று மனம் நொந்தார்.

               தன் ஒரே மகனுக்கு எவ்வளவு ஆடம்பரமாக திருமணம் நடத்த வேண்டும் என்று அவர் கொண்டிருந்தார்.

               நிபிஷா ஒரு ஆதரவற்ற ஏழை பெண்தான் என்றாலும் குணத்திலும், பண்பிலும் தங்கத் தாமரையான இந்திய முஸ்லீம் பெண்தான்.

               அவளை நிக்காஹ் செய்து ஒழுக்கமாக வாழ்க்கை நடத்த விரும்புகிறானா? அல்லது வேலியற்ற பயிர்தானே என்று பயிரை நாசமாக்கிட விரும்புகிறானா, ஒன்றும் தெரியவில்லையே. என்ன செய்வேன் என்று நொந்து படுக்கையில் சுருண்டார்.

               படுக்கையில் விழுந்துவிட்ட எம்டியைக் காண மூவரும் ஓடோடி வந்தனர். மூவரையும் அமரச் செய்து நான் ஒருவன் படுத்துவிட்டேன் என்பதால் இந்த வீட்டில் என்ன நடக்கிறது நாடகமா, இது நாடக மேடையா அல்லது வாழ்க்கை நடத்தும் வீடா என்று சினம் வார்த்தைகளில் கொப்பளிக்கக் கேட்டார்.

               மூவரும் அமைதி காத்தனர். அமைதியைக் கிழித்துக்கொண்டு முதலில் அரசு ஐயா என்று வாய்திறக்கவும், ஸெராத்கின் அப்பா என்றும் நிபிஷா ஐயா என்றும் ஒரு சேர வாய் திறந்தனர்.

               அப்பா அவர்களிருவரும் எந்தத் தவறும் செய்யவில்லை. நான்தான் நிபிஷா மேல் காதல்கொண்டுவிட்டேன். காதல் கொண்ட மனதை அடக்க முடியாது ஏதேதோ பேசிவிட்டேன். வேறு தவறு எதுவும் செய்யவில்லை.

               அப்பா நான் உண்மையான அன்புதான் கொண்டுள்ளேன். என் மனதில் அவள் ராணியாக கொலுவிருக்கிறாள். நீங்கள் அந்தஸ்து, மதம், ஜாதி என்று பார்த்தால் உங்கள் ஒரே மகனின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை. நிபிஷாதான் என் மனைவி என்பதில் உறுதியாயிருக்கிறேன்.

               மகன் சொல்லியதைக் கேட்ட தந்தை என்னை தனியாக இருக்கவிடுங்கள். மூவரும் வெளியே செல்லுங்கள் என்று கட்டளை இட்டார்.

               மூவரும் வெளியே சென்றபின் அரசுவை அழைத்து ஸெராத்கின் நிபிஷா திருமண ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார். திருமணம் கோலாகலமாக நடந்தேறி நிபிஷா மருமகள் ஆனதும் கூடுதல் பொறுப்புடன் பராமரிப்பும் நடைபெற்றதால், மாமனாரை ஊன்றுகோல் இல்லாமலே நடக்க வைத்து அவரது வேலைகளை அவரே செய்து கொள்ள முயன்றார்.

               அரசுவும் முதலாளியின் வீட்டிலேயே ஸெராத்கினுக்கு உற்ற தோழனாகவும், நிபிஷாவிற்குச் சகோதரனாகவும் முதலாளிக்கு மூத்த மகனாகவும் வளைய வந்தான்.

Advertisement