Advertisement

இப்படித்தான் நடந்தது

               இனிய தென்றல் மழைமேகத்துடன் இணைத்து சுகமாய் வருடிய காலைப்பொழுது புலர்ந்தது. காலைக் கதிரவனையே மறைத்து விட்ட கர்வத்தால் மேகம் ஒளிக்கிறதாய் மின்னியது. இடியாய் முழக்கமிட்டது.

               முட்டையிலிருந்து வெளியே வந்து ஒரு நாள் மட்டுமே நிறைவு பெற்ற வண்ண வண்ண பஞ்சுருண்டையாய் கோழிக்குஞ்சுகள் தாயைச் சுற்றி நின்றிருந்தன.

அம்மா குஞ்சு, கோழிக்குஞ்சு ஒடுது ஒடுது வெளியே ஒடுது ஒடிவாங்க என்றான் முகுந்த். ஆ மழை வரும்போல் உள்ளதே கோழியைத் திறந்து விட்டுவிட்டேனே.

முகுந்த் பார்த்துக்கோடா இதோ வந்துவிட்டேன் என்று சமையலறையிலிருந்து ஒடி வந்தாள் கனகு.

               பூப்போல் மென்மையாகப் பொத்தி பொத்தி குஞ்சுகளை எடுத்து பாதுகாப்பான இடத்தில் விட்டாள். தாய் கோழியுடன் சேர்த்துக் கூண்டு கொண்டு மூடினான்.

               தாய்கோழியின் இறக்கைக்குள் அணைத்து குஞ்சுகளும் புகுந்து சுகம் பெற இரண்டு குஞ்சுகள் தனித்து நின்றன.

               முகுந்த் ஏய் குஞ்சுகளை அம்மா இறக்கைக்குள் உங்களுக்கு இடமில்லையா? உங்க அப்பாவை எங்கே. நீங்கள் உங்கள் அப்பா இறக்கைகுள் புகுந்து சுகம் பெறலாமே என்று குஞ்சுகளிடம் பேசினான்.

               குஞ்சுகள் சிற்சிற் என்று கொஞ்சுமொழி பேசியதில் என்ன புரிந்ததோ அவனுக்கு, அம்மா இந்த குஞ்சுகளுக்கும் முகுந்த் மாதிரி அப்பா எங்கோ சென்றிருக்கிறதாமே. அம்மா இங்கே வாங்களேன். எங்கே போனீர்கள். என்றான்.

               மகன் பேசியது காதில் விழாமலேயே  கோழிக்குஞ்சுகளை மழையில் நனையாதபடி கூண்டுக்குள் அடைத்து விட்டேன். நீ மட்டும் மழையில் நனையலாமா உள்ளே வாடா என்றாள் அன்னை.

               மழை இன்னும் தான் பெய்யவில்லையே குஞ்சுகளின் அப்பா எங்கேம்மா. அப்பாவையும் சேர்த்து கூண்டுக்குள் போட்டால் அந்த இரண்டு குஞ்சுகளும் தனியே நில்லாதல்லவா என்றான்.

                என்னடா சொல்கிறாய் என்று அருகில் வந்த தாய் அந்தோ கொண்டையிலே பூவைச் சூட்டி குப்பைகளைக் கிளறிக்கொண்டிருக்கிறதே அந்த சேவல் தான் குஞ்சுகளின் அப்பா என்று சுட்டிக் காட்டினாள்.

               தாய் மட்டுமே குஞ்சுகளிடம் ஒட்டிக்கொண்டிருக்க அப்பா கோழி தனியே சென்று இரை மேய்கிறது. அப்பா கோழியும் நம்ம அப்பாவைப் போலவே நல்லதில்லை என்றான்.

               அப்பா நல்லவரில்லை என்று உன்னிடம் யார் சொன்னது. அப்பா நல்லவர். நாம் சுகமாய் வாழ்வதற்காக திரை கடல் ஒடித் திரவியம் தேடச் சென்றுள்ளார். நாம் இங்கு சந்தோஷமாகத்தானே இருக்கிறோம். அவர் அங்கு என்ன பாடுபடுகிறாரோ. அப்பாவை ஏன் குறை சொல்கிறாய்.

               குறை கூறாமல் எப்படி இருக்க முடியும். பள்ளியில் எல்லா மாணவர்களும் என் நண்பர்களின் அப்பா கூட நல்லா படி முதல் தரம் பெற்றால் உனக்கு விருப்பமான பொக்லைன், விளையாட்டுபொருள் வாங்கித்தருவேன், கார் வாங்கி தருவேன் என்று சொல்கிறார்கள். பள்ளிக்கு அவர்களுடைய அப்பாக்கள் தானே பள்ளிக்கு வண்டியில் வந்து விட்டுச் செல்கிறார்கள். பள்ளி முடிந்ததும் வந்து அழைத்து செல்கிறார்கள்.

               எங்கள் அப்பா ஒரு நாளாவது வீட்டிற்கு வந்திருக்கிறாரா. தட்டிக்கொடுத்து முத்தம்கொடுத்திருக்கிறாரா. ஏன் முகத்தை கூட பார்த்ததில்லையே.

               சந்தோஷ் அப்பாகூட எங்கோ வேலை பார்க்கிறாராம். அடிக்கடி விடுமுறைக்கென்று வந்து சந்தோஷிடம் எப்படி பேசுகிறார். வரும்பொழுதெல்லாம் என்னதெல்லாம் வாங்கி வருகிறார். அவன் வகுப்பிற்கு கொண்டு வந்து எங்கப்பா வாங்கிகொடுத்தார் என்று காட்டி பெருமையடிக்கிறானே.

               எங்கப்பாவுக்கு ஒரு நாள் கூட விடுமுறை கிடையாது. அண்ணன் பிராகாஷாவது அப்பா முகத்தையாவது பார்த்திருக்கிறான். இது தான் உங்கள் அப்பா என்று நீங்கள் சுட்டிக்காட்டிய அப்பாவின் முகத்தைப் புகைப்படத்தில் தானே பார்த்திருக்கிறேன். எப்படி அம்மா என்னால் அப்பாவை குறை சொல்லாமல் இருக்க முடியும் என்றான் முகுந்த்.

               தாத்தா எங்களுக்கு வேண்டியதெல்லாம் வாங்கி தருகிறார்கள். எங்களுக்கு கதை கூறித் தூங்க வைக்ககிறார்கள். நீங்களும் அன்பாய் இருக்கிறீர்கள்.

               ஆனால் தாத்தாவுக்கு வயதாகி விட்டது. என்னதான் தாத்தா பார்த்துச் செய்தாலும் அறிவுப் பசிக்கு தீனி போடும் அப்பாவாக முடியுமா?

               தாத்தா நான் பெரிய தவறு செய்துவிட்டேன் கண்மணிகளா. உன் அம்மாவிடம் உலக நடப்பை எடுத்துக் கூறி வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று திருமணத்தை தடுத்திருக்க வேண்டும். நம் செல்ல மகள் விரும்புகிறாளே என்று திருமணத்திற்கு சம்மதித்துவிட்டேன்.

               உலகறிவு இல்லாத, வெளுத்ததெல்லாம் பால் என்று எண்னுகின்ற பிள்ளை உள்ளம் கொண்ட கிள்ளையை உங்க அப்பாவுக்கு மணம் முடித்து கொடுத்தது என் தப்புதான் என்னை மன்னித்து விடுங்கள்.

               கணவனின் அன்பும், அரவணைப்பும் இன்றி கண்ணின் மணியாம் உங்களைச் சீரும் சிறப்புமாகப் போற்றி வளர்க்கிறார்கள். அவள் மனம் நோகாமல் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

               நீங்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வர வேண்டும். உங்கள்  உயர்வைக் கண்டு அவள் உற்சாகம் கொள்ள வேண்டும். நீங்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ வேண்டும். என் கண்மணியைக் கண் கலங்காமல் பார்த்துக்கொள்வீர்களா செல்வங்களா என்று எங்களிடம் கெஞ்சிக் கேட்பார்கள். தெரியுமா?

               இவ்வளவு நல்ல தாத்தாவையும் உங்களையும் எங்களையும் வாட்டி வதைக்கும் அப்பா எப்படி நல்லவராக இருக்க முடியும். அவர் நல்லவர் இல்லை.

               நானும் அண்ணனும் வெறுக்கிறோம். நீங்கள் வேண்டுமானால் நல்லவர் என்று பீற்றிக் கொள்ளுங்கள். கொண்டாடிக் கொள்ளுங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றான்.

               சிறு பிள்ளையாகிய உன் எண்ணங்களானது தவறு என்று நான் சொல்லவில்லை. இருப்பினும் உங்களிருவருக்கும் உயர் கொடுத்த உத்தமரல்லவா. உங்கள் உள்ளத்தில் அவர் மீது வெறுப்பு வரக்கூடாதப்பா.

               நம் கையின் விரல்கள் ஐந்தும் ஒன்று போல இல்லையல்லவா அதுபோல எல்லோருடைய அப்பாக்களும், அம்மாக்களும் ஒன்று போல் அமைவதில்லை. அவன் ஆட்டுவிக்கும் விதத்தில் நாம் ஆடுகிறோம். நமக்கென இருப்பதில் நாம் திருப்திபட்டு மகிழ்ச்சி அடைய வேண்டும். நம் நன்மைக்கு இறைவன் இதனை செய்கிறான் என்று எண்ண வேண்டும். சரியா என் பிள்ளளை நல்லபிள்ளையல்லவா என்று கூறி மகனை அணைத்து முத்தமிட்டாள்.

               ஆமாம் நீ இன்று பள்ளி செல்லவிள்ளையா? அண்ணாவைப் பார். குளித்து ரெடியாகி வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருக்கிறான்.

               நீ பொழுதன்றைக்கும் கோழிக்குஞ்சுகளோட இருக்க போகிறாயா என்று கேட்டான்.

               இதோ ஒரு நொடியில் பள்ளிக்கு தயாராகிவிடுகிறேன். மழை பெய்து விட்டதால சற்று தாமதித்துவிட்டேன். வீட்டுப்பாடமெல்லாம் நேற்று மாலையே முடித்து விட்டேன்.

               தாத்தா ரெடியாகி விட்டார்களா என்று பார்த்துவிட்டு வருகிறேன். என்று தாத்தாவிடம் ஒடினான். தாத்தா இன்று மழை இலேசாக தூறிக் கொண்டிருக்கிறது. நடக்கும் பொழுது வழுக்கும். அதனால் நீங்கள் பள்ளிக்கு விட வரவேண்டாம். நானும் அண்ணாவும் சென்றுவிடுகிறோம் என்று கூறினான்.

               தாத்தா சிரித்தார். அத்தனை பெரிய மனிதனாகி விட்டாயா? சரி புறப்படு பார்ப்பபோம் என்று கூறி அனுப்பினார்.

               சொல்லியது போலவே, குளித்துச் சீருடை அணிந்து வேகமாக புறப்பட்டு வந்து விட்டான்.

               மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்ததால் ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு சகோதரர் இருவர் மட்டுமே பள்ளி சென்றனர்.

               பேரப்பிள்ளை இருவரும் நாங்களே பள்ளிக்கு போய்கொள்கிறோம். தாத்தா நீங்கள் வரவேண்டாம் என்று கூறியது தாத்தாவுக்கு குளிருக்கு இதமாகச் சூடாகத் தேநீர் பருகியது போன்று தெம்பாக இருந்தது.

               தூறல் நின்று இளஞ்சூரியன் ஒளியும் குளிர்ந்த காற்றும் பதமான பருவநிலையாயிருந்தது. தாத்தா மகளிடம் தோட்டம் வரை சென்று வருகிறேன் என்று கூறிச் சென்றார்.

               காலைச் சிற்றுண்டியோடு நண்பகலுணவும் தயாரித்த விட்ட படியால் கனகுக்கு மாலை மூன்று மணி வரை ஒய்வு தான். ஆனால் கனகு வெறுமனே அமர்ந்திருக்கும் ரகமில்லை.

               ஆடு, மாடு, கோழி என்று வளர்த்துப் பொழுதைக் கழிக்கவும், பொருளாதாரம் பெருக்கவும் பழகியிருந்தாள்.

               பிள்ளைகள் பள்ளி சென்றபின் தந்தையும் தோட்டத்திற்கு சென்று விட்டதால் கோழிகளுக்குத் தீவனம் வைப்பதற்காக கொல்லைப்புறம் வந்தாள்.

               குழாய்க்கிணறு மேடையில் அமர்ந்தவாறே தரவாரியான தனது கோழிகளுக்குத் தீவனம் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

               முந்தின நாள் பொரித்திருந்த குஞ்சுகளையும் தாய்கோழிகளையும் வெளியே எடுத்து விட்டாள். காலையில் மகனுடன் பேசிய பேசுசுக்கள் காதில் ரீங்கராரத்துடன் ஒலிக்க துவங்கின.

               மனத்திரையில் அவள் கடந்தகாலம் வண்ணப்படமாய் வலம் வரலாயிற்று.

               ஊரைச் சுற்றிலும் பசுங்கம்பளம் விரித்தாற்போன்ற நெல் வயல்கள், தென்றல் வீசும் நெடிதுயர்ந்த தென்னஞ் சோலைகள் தென் பொதிகைத் தாமிரபரணியின் அருங்கொடையால் வற்றா வளம் நிறைந்த குளம் என்று இயற்கையாய் அமைந்து ஆலந்தா குக்கிராமம் என்றோ, நகரம் என்றோ சொல்ல முடியாத ஒரு சிற்றூர்.

                வரியார்க்கொன்று ஈவதே ஈகை என்பதால் ஏழைகள் மனம் குளிர அள்ளிக்கொடுத்து, விருந்தினரை முகமலர வரவேற்று உபசரித்து, வற்றாபுகழும் வளமான கல்வியும் பொன்னோடும், பொருளோடும் சிறப்புற வாழ்ந்த பல குடும்பங்களில் சண்முக நாதனின் குடும்பமும் ஒன்றாகும்.

               நான்கு அணணன்மார்களுக்கு ஒரு செல்லத்தங்கையாய் அன்புடன் வளர்க்கப்ட்டவள் கனகலெட்சுமி என்ற கனகு.

               கற்காம்பினகத் தாயார் எழுந்தருளியுள்ள திருக்கோவில் ஆலந்தாவின் தனிச் சிறப்பாகும்.

               அண்டும் மெய்யடியார்கள் துன்பம் நீக்கி, வேண்டிடும் வரங்கள் தந்து காத்திடும் கருணைக் கடலாவாள். அன்பர் உள்ளம் கொள்ளை கொண்ட தேவியவளுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா எடுக்கப்படுகிறது.

               திருவிழாவிற்கு உள்ளுர் மக்களுடன் வெளியூர் பக்தகோடிகளும் வந்து அருளாசி பெற்று செல்வார்கள்.

               விழா பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் கன்னிப்பென்கள் எடுத்து மகிழும் முளைப்பாரிதான் விழாவின் நிறைவாகக் கருதப்படும்.

               அந்த ஆண்டும் வழக்கம் போல் முளைப்பாரி ஊர்வலம் மேளதாள சங்கீதத்துடன் சென்று கொண்டிருந்தது. முளைப்பாரியை ஊரணியில் அலசுவார்கள். அலசி எடுத்து வந்து கோயிலுக்குள் கொண்டு வந்து பூஜை நடத்திய பின்னரே அவரவர் இல்லங்களுக்கு எடுத்துச் செல்வர்.

               முப்பது முப்பத்தைந்து பெண்கள் முளைப்பாரி தூக்கிச் சென்றனர். கடைசி ஆளாக ஒயிலாக, நூலிடை அறுந்து விடுமோ என அஞ்சிஅ ன்ன நடை பயின்று கொண்டிருந்தாள் கனகு. கனகுவை இரண்டு கண்கள் ஊடுருவி விழுங்கப் பார்த்துக்கொண்டிருந்தன. காந்தம் இரும்பைக் கவர்ந்திருப்பது போன்று பார்வைக் கனகைச் சுன்டிவிட்டது.

               ஈர்க்கப்பட்ட அவள் திரும்பி மின்னல் பார்வையிரண்டும் சந்தித்து கொண்ட பின் மின்வெட்டு ஏற்பட்டது. கண்னும் கண்னும் கலந்துரவாடின.

               தன் உள்ளத்தில் ஏற்பட்ட ரசவாத வித்தையால் தன்னிலை மறந்தாள் கனகு.

               முளைப்பாரி பூஜை நடைபெற்ற பின் வீடு திரும்பினர். அண்னன்கள், அண்ணிகள், குழந்தைகள் என வீடு களைகட்டி இருந்தது.

               சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டதால் வேலைகாரித் துணையுடன் வீட்டு நிர்வாகத்தை கனகுதான் கவனித்து வந்தாள். அண்ணன்மார் திருமணமாகித் தொழில் பாக்கவென்று கோவையில் தங்கியிருந்தனர். திருவிழாவிற்கு வந்து சென்றனர்.

               வேலைக்கரியும் தனது வீட்டிற்கு விருந்தினர் வந்திருப்பதால் இன்று ஒரு நாள் விடுமுறை கேட்டாள். கனகு கொடுத்தனுப்பி விட்டாள்.

               அண்ணிமார் துணையுடன் விருந்துணவெல்லாம் தயாராகி விட்டது.

               உணவு பரிமாறி எல்லோரும் உணவருந்த வேண்டும். தண்ணீரைப் பார்த்தாள். குடி தண்ணீர்குடம் காலியாக இருந்தது.

               வீட்டுக்குச் சற்று தொலைவிலுள்ளது குடிதண்ணீர்க்கிணறு எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ஒரு குடம் நீர் எடுத்து வந்து விடுவோம் என்று குடத்தை தூக்கி கொண்டு வேகமாகச் சென்றார்.

               இரண்டு வீட்டைக் கடந்ததும் தென்னந்தோப்பு. தோப்பை கடந்தால் கிணறு. தோப்பினிடையே சென்று கொண்டிருகுகும் பொழுது, ஏய் பொன்னு நில்லு என்று குரல் கேட்கவும் நின்று திருப்பி பார்த்தாள்.

               தென்னை மரத்தின் பின்னிருந்து காளை ஒருவன் வெளிப்பட்டான். அன்னமே என் சொல்வண்ணமே ஒரு பார்வையிலே என் இதயத்தை திருடிவிட்டாய் தங்கமே என்றான் அவள் ஒது, ஊது பைத்தியமா உங்களுக்கு யாராவது பாhத்தால் இந்த கனகுவிடம் இவன் ஏதோ தகராறு பன்னுகிறான் போலும் என்று நையப் புடைத்து விடுவர்.

               நீங்கள் யார் என்னையே சுற்றி வருவது போல் உள்ளது. என்னிடம் என்ன வேண்டுமோ? எதை எதிர் பார்க்கீறிர்கள் என்றாள் கனகு.

               கனகு நீ…..நீதான் வேண்டும் எனக்கு உன்னைப் பார்த்த வேளையிலே என் உள்ளம் பறிகொடுத்தேன். உன்னிடம் மலரை நாடும் வண்டுபோல் என் உள்ளம் உன்னையே நாடுகிறது என்றான்.

               வண்டா அது மலருக்கு மலர்தாவுமே எனக்கு அதில் நாட்டமில்லையே வானில் ஒரே நிலவாய் உலா வரவே எந்தப் பெண்ணும் விருபம்புவார்.

               வண்ணம் கொண்ட வெண்ணிலவே உனது வானம் நானாயிருக்க சம்மதிப்பாயா? என் பெயர் கனி அரசன் இந்த ஊரிலிருந்து ஆர்மியில் வேலை செய்கிறானே முருகானந்த் அவனின் ஆருயிர் நன்பன் நான்.

               திருவிழா காண அழைப்பு விடுத்ததால் நண்பனின் அழைப்பை ஏற்று வந்துள்ளேன். வந்த இடத்தில் என் கனவுக் காரிகையைக் கண்ணாரக் கண்டேன். ஆயிரம் வாசல் இதயத்தில் என் ஒருவனுக்கே இடம் தந்து பராமரித்திட வேண்டுமென யாசிக்கிறேன்.

               நீங்கள் யாசித்ததை நானும் யோசிக்கிறேன். நீங்கள் நாட்டைக் காக்கும் நற்பணியில்தான் உள்ளீரா என்றான்.

               நாங்கள் இருவரும் பள்ளித்தோழர்கள். அவன் ஆர்மியில் சேர்ந்து விட்டான். நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன். நானும் விடுமுறைக்கு வந்துள்ளேன். அவனும் விடுமுறைக்கு வந்துள்ளதால், இருவரும் சந்தித்துக் கொண்டோம் என்று அரசு கூறினான்.

               என்னை எல்லோரும் அரசு என்றுதான் சொல்வார்கள். நீயும் அப்படியே சொல்லலாம், என்றான்.

               சொல்லலாம்தான் ஒரு ஆணை அவனின் சேர்க்கை நன்பனை வைத்து எடை போட வேண்டும் என்பார்கள். முருகானந்த் அண்ணன் நல்லவர்தான் நாட்டிற்காகப் பணியாற்றும் இடத்தில் எல்லோரும் மது அருந்துவார்களாம். புகைபிடிப்பார்களாம். அண்ணன் அதை தவிர்த்து வெற்றி பெற்றார் என்றால் அவரின் நல்ல பண்பு அதில் தெரிகிறதல்லவா.

               அவர் நல்லவர் பண்பானவர் என்பதால் உள்ளங்கை புண்ணுக்கு கைக்கண்ணாடி தேவையில்லை என்பது போல தாங்களும் நல்லவராகத்தான் இருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை.

               என் இதயக்கோயிலில் குடிகொண்ட அமுதசுரபியே உன் பேச்சு கள்ளுண்ட மந்தியாய் என் உள்ளம் மகிழ்ந்தாடச் செய்கிறது. நான் இன்றே ஊருக்குச் செல்லவிருக்கிறேன். விரைவிலேயே இந்த வஞ்சிக்கொடியை என் மஞ்சத்து ராணியாக்க தூது விடுகிறேன்.

               உன் இதயத்தில் எனக்கு இடமுண்டு என்று என் மனக்குயில் பாடியது உண்மைதானே. நான் வரட்டுமா என்று ஒரு வித பரவசக் குரலில் கேட்டு விட்டு வேகமாகச் சென்று விட்டான்.

Advertisement