Advertisement

                 அத்தியாயம் 29

கல்லூரியில் இறுதியாண்டிற்கான தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்தது. ஒரு குழுவிற்கு காலையிலும் மற்றொரு குழுவிற்கு மாலையிலும் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்து.

அக்னி நேஹா கதிருக்கு காலையிலும் ரேயன் கிஷோர் மற்றும் ஆருவிற்கு மாலையிலும் தேர்வு நடைபெற்றது. இறுதி தேர்வை முடித்துவிட்டு ஆரு வெளியில் வர அதே சமயம் அங்கு வந்த கிஷோர் “என்ன பார்ட்னர் எக்ஸாம் எப்படி பண்ணிருக்க” என்று கேட்க அவனை பார்த்து கண்ணடித்தவள் “அத்து சொல்லி கொடுத்ததாச்சே” என்னும் போதே வகுப்பிலிருந்து வெளியே வந்த ரேயன் அவள் காதை பிடித்து திருகி “மூணு மணி நேரம் முழுசா உட்கார்ந்து எக்ஸாம் எழுதுன்னு சொன்னா கேட்கமாட்டியா” என்று அதட்ட, ஆருவோ உதட்டை பிதுக்கினாள்.

கிஷோர் “நீ தலைகீழாக நின்னு தண்ணி குடிச்சாலும் அவ அவ்ளோ நேரம் உட்கார்ந்து எழுத மாட்டா.. அதனால டைம் வேஸ்ட் பண்ணாம வா போவோம்.. லன்ச் கூட சாப்பிடல டா.. பசிக்கிது” என்று முகத்தை சுருக்க, ஆரு “ஆமா அத்து எனக்கும் பசிக்கிது.. வா போவோம்” என்றாள்.

ரேயன் “சரி சரி.. வாங்க” என்றவன் கார் எடுத்துக்கொண்டு வர, ஆரு முன் இருக்கையிலும் கிஷோர் பின் இருக்கையிலும் அமர்ந்தனர். அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தவன் கிஷோரை விட்டுட்டு ஆருவை விட சென்றான்.

ஆருவின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன் அவளை பார்க்க அவளோ இறங்காமல் அமர்ந்திருந்தாள். ரேயன் “என்ன ஆச்சு.. இறங்கல” என்று வினவ, ஆரு “நீயும் வா.. எவ்ளோ நாளா உன்ன கூப்பிடுறேன்” என்று முறைக்க அதில் மெலிதாக புன்னகைத்தவன் “இன்னோரு நாள் வரேன்.. இன்னிக்கி வேண்டாம்” என்று தயங்க அவளோ “நோ.. நான் மட்டும் அன்னிக்கு உன்கூட வீட்டுக்கு வந்தேன்ல.. இப்போ நீ வர அவ்ளோதான்.. டாட்” என்று சிலுப்பிக்கொள்ள அவள் தலையை பிடித்து ஆட்டியவன் “புரிஞ்சிக்கோடி.. எனக்கு ஏதோ போல இருக்கு” என்றிழுக்க, அவனை முறைத்தவள் “ஆமா எங்க வீட்ல பேய் பிசாசு இருக்குல..” என நக்கலாக கூறியவள், “நீ ஒன்னும் வர வேண்டாம்” என்று முகத்தை திருப்பிக்கொண்டு இறங்கி செல்ல, அவளின் சிறுபிள்ளை தனத்தில் சிரித்தவன் “சரி வாரேன்” என்று வண்டியிலிருந்து இறங்க, அவன் தோளை பிடித்து திருப்பியவள் “தேவையில்ல” என்று உதட்டை சுழிக்க அவள் தோளை பிடித்து வீட்டினுள் தள்ளியவன் “போடி” என்று மென்னகை புரிய, ஆருவும் அவனுடன் இணைந்து நடந்தாள்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த சிவகுமார் ஆருவுடன் வந்த ரேயனை பார்த்து “அடடா வா ஆத்ரேயா.. இன்னிக்கி தான் கேட்ல இருந்து வீட்டுக்கு வழி தெரிஞ்சிதா” என்று நக்கலடிக்க அவரை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன் “அப்படியெல்லாம் இல்ல அங்கிள்” என்றான் ஆனால் அப்போதும் அவனிடம் சிறு தயக்கம் இருக்க தான் செய்தது. அதற்குள் அங்கு வந்த நிலா “என்னங்க வீட்டுக்கு வந்த புள்ளைய இப்படி நிக்க வச்சி பேசிட்டு இருக்கீங்க” என கணவரை முறைத்தவர் “ரேயா நீ வாப்பா..” என்று அவனை வரவேற்றார்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்தவனை பார்த்தே அவன் சங்கடத்தை புரிந்துகொண்ட சிவகுமார் “ஆரு.. நீ ரேயனை கூட்டிட்டு போ” என்றிட அவளும் தலையசைத்துவிட்டு அவனை அழைத்துக்கொண்டு சென்றாள்.

ஆரு ரேயனை தன் அறைக்கு அழைத்து செல்ல, நிலா சிவகுமாரிடம் “ரொம்ப நல்ல பையன்ல” என்று கேட்க அதற்கு அமோதிப்பதாய் தலையசைத்தவர் ஆத்ரேயனின் மீது ஆருவிற்கிருந்த காதலை அறிந்தே இருந்தார்.

ஆருவின் அறைக்குள் நுழைந்தவன் “என்னடி ரூமை இப்படி வச்சிருக்க” என்று வினவ அசட்டு சிரிப்பை உதிர்த்தாள் அவள். காலையில் படிக்கிறேன் பேர்வழி என்று அனைத்து புத்தகத்தை கடை பரப்பியல்லவா வைத்திருந்தாள்.

ஆரு காபி கொண்டு வர சென்றிருக்க ரேயன் அவள் புத்தகங்களை எடுத்து நேர்த்தியாக அடுக்கி வைத்தான். காபியுடன் வந்தவள் “என் ரூமா இது” என்று ஆர்ச்சிரியமாக வினவியவள் “ஆமா இதெல்லாம் நீ எதுக்கு பண்ணுற.. நான் பண்ணிருப்பேன்ல” என்க அவளை பார்த்து நக்கலாக தலையசைத்தவன் “என்னிக்கா இருந்தாலும் பண்ண போறது”  என்று கண்ணடிக்க அவளோ புன்னகையுடன் காபி கோப்பையை அவனிடம் நீட்டினாள்.

அதன் பின் இருவரும் காபி அருந்தியபடி வெகு நேரமாக கதை பேசிக்கொண்டிருந்தனர். ரேயனிற்கு அழைப்பு வர அதை பால்கனிக்கு சென்று பேசியவன் அங்கிருந்து தெரிந்த தோட்டத்தையும் மழை பொழிய தயார் நிலையிக்கிருந்த கருமேகங்களையும் ரசித்தபடி அங்கேயே நிற்க, அவன் அருகில் வந்தவள் “என்ன ஆச்சு.. இங்கயே நின்னுட்ட” என்று கேட்க அவள் கண்களை பார்த்தவன் “பிடிச்சிருக்கு” என்றான்.

அவன் கூறியதை கேட்டு ஆருவோ விழி விரித்து நிற்க, ரேயன் “நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும் தியா” என்றான் பீடிகையுடன். அவனை குறுகுறுவென பார்த்தவள் “என்ன சொல்லனும்” என்று கேட்க அவளை இழுத்து தன் முன் நிறுத்தினான்.

இரவு விளக்கின் மங்கிய ஒளி பெண்ணவளின் கன்னத்தில் பட, தேவதை பெண்ணாய் மிளிர்ந்தாள் அவள். வானமும் மழை மேகங்களை தயார் நிலையில் வைத்திருந்தது.

தடுப்பு கம்பியின் மீது அவள் சாய்ந்து நிற்க, அவளை தன் இரு கைகளுக்கு நடுவே சிறை செய்து நிறுத்தியிருந்தான். ஆரு அவன் கண்களை பார்த்து கொண்டு நின்றிருக்க, ஆத்ரேயன் பேச தொடங்கினான்.

“நான் இதுவரை எத்தனையோ பேர கடந்து வந்திருக்கேன் ஆனா யாரும் உன்ன போல என்ன தடுமாற வச்சதில்ல..  உன்ன முதல் நாள் ஆடிடோரியத்துல பார்த்தப்பவே எனக்குள்ள அப்படி ஒரு தடுமாற்றம்” என்றிட ஆருவோ ‘இது எப்போ’ என்ற ரீதியில் அவனை விழி விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனோ அதை கண்டுகொள்ளாமல் “அதுக்கு அப்பறம் நான் இந்துவை தேடி போகும் போது பூனைக்குட்டி போல என் பின்னாலேயே வந்தியே அப்போ உன்ன ரொம்ப பிடிச்சிருந்தது..” என்னும் போதே அவளுக்கு மயக்கம் வராத குறை தான். இதெல்லாம் அவன் கவனிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தாள் அல்லவா அவள். ஆனால் அவன் பேசி முடிக்கட்டும் என்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ரேயனே தொடர்ந்து “அண்ட் அடுத்த நாள் என்ன கிளாஸ்ல பார்க்கும் போது அப்படியே ஷாக்காகி நின்னியே அப்போ எவ்ளோ கியூட்டா இருந்த தெரியுமா” என்றவன் விரிந்திருந்த அவள் விழிகளின் மேல் தன் இதழ் பதித்தான். அந்த சிறு தீண்டலிலே சிலிர்த்துவிட்டாள் பெண்ணவள்.

“அண்ட் அப்போவே மேடம் எனக்காக அந்த ரீனா கூட சண்டை போட்டதுலாம்.. ப்பா” என்று அவளை கலாய்த்தவன் தொடர்ந்து “எனக்கு உன்ன பிடிக்கும் தியா.. ரொம்ப துறுதுறுன்னு வாயடுச்சிக்கிட்டு எல்லார்கிட்டயும் நட்பா பழகிக்கிட்டு… எனக்கு அவ்ளோ பிடிக்கும்டி உன்ன” என்றான்.

ஆருவோ “அப்பறம்” என்க, அவளை தன் மூச்காற்று படும் தூரம் நெருங்கி நின்றவன் “அதுக்கு அப்பறம் மேடம் என்னோட பேட்ச்ல சேர்ந்தீங்க.. முதல ஒரு நல்ல பிரெண்ட்டா தான் உன்ன பார்த்தேன் ஆனா ஒரு கட்டத்துக்கு மேல உன்னோட சின்ன சின்ன அசைவ கூட என்ன மீறி ரசிக்க ஆரம்பிச்சிட்டேன். இது ஈர்ப்பு தான்னு நான் என்ன ஏமாதிக்கிட்டாலும் அது வெறும் ஈர்ப்பு இல்ல.. அதையும் தாண்டி வேற ஏதோ ஒன்னுன்னு எனக்கு புரிஞ்சிது” என்றவன் சிறு இடைவேளை விட்டு “எனக்காக நீ பதறுறதை பார்க்கும் போது எனக்குள்ள அப்படியே சாரலடிச்ச மாதிரி இருக்கும்.. உன்னோட அருகாமைல எனக்கு கிடைக்கிற அந்த ஹாப்பினஸ்.. அதை.. அதை வார்த்தைல எப்படி சொல்லுறதுன்னு எனக்கு தெரியல” என்றவனோ உணர்ச்சியின் பிடியில் இருந்தான்.

பின் ஒரு பெருமூச்சுடன் “இதெல்லாம் வாழ்க்கை முழுக்க கிடைக்கனும்னு மனசு கேட்குது.. கிடைக்குமா” என்று அவள் முகம் பார்த்தவனின் கண்களில் தான் எத்தனை காதல் மற்றும் ஏக்கம்.

ஆரு “ம்ம்.. கடைசி வரை நல்லா பிரெண்ட்டாவே இருக்குறேன்” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கூறியவளுக்கு அவன் வாயால் அவன் காதலிப்பதை கேட்க வேண்டும் என்ற ஆவல் இருக்க தான் செய்தது.

ஆரு கூறியதை கேட்டு புன்னகைத்தவன் அவள் இடையில் கைவைத்து அவளை தன்னோடு இறுக்கி, அவள் முகம் தாங்கி “ஐ லவ் யூ தியா” என்று அவள் இதழோடு இதழ் பொறுத்தினான். வார்த்தைகளால் பரிமாறப்பட்ட காதலை இப்போது இதழ் வழி அவளுக்கு புரிய வைத்துக்கொண்டிருந்தான்.

அவள் இதழின் தேனை சுவைத்தவனோ கள்ளுண்ட வண்டாய் ஆனான். அவள் இதழில் கவி பாடியவன் மெல்ல அவளை விடுவிக்க அவளோ கன்னம் சிவந்து அவன் மார்பிலே தஞ்சம் புகுந்தாள். அவளை இறுகி அணைத்தவன் அவள் செவியில் இதழ் உரச “இப்போ சொல்லு.. லைப் லாங் இதே மாதிரி என் கையணைப்புல இருப்பியா” என்று கரகரத்த குரலில் கேட்க அவன் மார்பில் முகத்தை புதைத்தவள் “ம்ம்” என்றாள்.

அவள் முகத்தை பிடித்து நிமிர்த்தியவன் “கேட்கல” என்று அவளை போலவே பாசாங்கு செய்ய அவன் கண்ணோடு கண் கலந்தவள் “அப்போ சாரும் என்ன முதல் நாளே நோட் பண்ணிருக்கீங்க” என்று தலை சாய்த்து வினவ அவள் நெற்றி முட்டி மூக்கோடு மூக்குரசியவன் “ஆடிட்டோரியத்துல என்ன சைட் அடிக்கும் போதே கண்டுபிடிச்சிட்டேன்” என்க அவளோ அதிர்ந்துவிட்டாள். அவள் அதிர்வை ரசனையாக பார்த்தவன் “நான் கேட்டதுக்கு பதில் இன்னும் வரல” என்று மென்மையாக கேட்க, தன் கைகளை மலையாக அவன் தோளில் கோர்த்தவள் “சொல்ல மாட்டேன்” என்று கண்ணடிக்க, அவளை போலியாய் முறைத்தான்.

“அப்படியா” என்றவன் அவளை சர்வ சாதாரணமாக கையிலேந்த அவள் விழிகளோ தெரிந்துவிடும் அளவிற்கு விரிந்தது. அவளை கட்டிலில் கிடத்தியவன் அவள் எதிர்பாரா வண்ணம் அவள் இடையில் கைவைத்து கிச்சு கிச்சு மூட்ட அவளோ “ஹாஹா.. வேண்டாம் அத்து.. அத்து ப்ளீஸ் ஹாஹா” என்றாள் உடல் கூச. அவள் கண்களில் நீர் வரும் வரை அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டி  விட்டவனோ “நீ சொல்லவே வேண்டாம்.. உன் கண்ணு போதும் உன்ன காட்டிக்கொடுக்க” என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு “லேட் ஆகுது.. போயிட்டு வரேன்” என்று எழ அவனை காதலாக பார்த்துக்கொண்டிருந்தவள் “ம்ம்” என்றாள் மென் புன்னகையுடன்.

அவனை அழைத்துக்கொண்டு வந்தவளை பார்த்த நிலா “வாங்க சாப்பிடலாம்” என்றழைக்க, சிறு தயக்கத்துடன் மறுக்க நினைத்தவன் ஆருவின் பார்வையில் அடங்கி போனான்.

கூந்தல் நெளிவில் எழில்
கோலச்சாிவில்
கா்வம் அழிந்ததடி..
என் கா்வம் அழிந்ததடி….

ரேயன் உணவருந்திவிட்டு அங்கிருந்து விடைபெற, அவனுடன் வாசல் வரை சென்றாள். வண்டியில் ஏறியவனோ “தியா நான் உன் ரூம்ல ஒன்னு மறந்து வச்சிட்டு வந்துட்டேன்” என்க அவளோ அவனை குழப்பமாக ஏறிட்டு “என்ன மறந்த” என்று கேட்க
“போய் கால் பண்ணு, சொல்றேன்” என்றான். அவளும் தன் அறைக்கு வந்து அவனுக்கு அழைக்க அதை ஏற்றவன் “நீயும் நானும் முதல் முதல வெளிய போகும் போது நான் உனக்கு ஒரு புக் வாங்கி கொடுத்தேன் நியாபகம் இருக்கா” என்று கேட்க
“ம்ம் இருக்கே.. ஏன் அது வேணுமா” என்று கேட்க, “டியூப்லைட்டி நீ’ என்று அவளை வசைபாடியவன் “அந்த புக்கை எடு” என்க,  தன் அலமாரியில் இருந்து அந்த புத்தகத்தை எடுத்தாள். அந்த புத்தகத்தின்  கீழ் ஒரு பரிசு பொருள் இருக்க அதை பார்த்து விழி விரித்தவள் “ஹே.. கிப்ட்டா” என்று வினவ, “ஆமா அதை எடுத்துக்கிட்டு கீழ வா” என்றான்.

அதை எடுத்துக்கொண்டு அவன் காரினுள் ஏறியவள் “எனக்கா” என்று வினவ, மறுப்பாக தலையசைத்தவன் “இல்ல ரீனாக்கு” என்று கேலி குரலில் கூற அதில் அவனை நன்றாக முறைத்தவள் “போடா” முகத்தை திருப்பினாள். அவள் கை பிடித்து பின்னிருகைக்கு சென்றவன் அவளை நெருங்கி அமர்ந்து “இதை பிரி” என்று அவளிடம் நீட்ட
“எனக்கு ஒன்னும் வேண்டாம்.. போ அந்த ரீனா கிட்டயே கொடு” என்றாள் சிலுப்பிக்கொண்டு.

அவள் இடை பற்றி தன் மீது அமரவைத்தவன் “இப்படி சொன்னா கேட்க மாட்ட” என்று அதை பிரிக்க, அவளோ அவன் மடியில் அமர்ந்து கூச்சத்தில் நெளிந்துக்கொண்டிருந்தாள்.

ஆரு “சரி கொடு.. நானே பிரிக்கிறேன்” என்றவள் அதை பிரிக்க அதில் பிளாட்டினமால் ஆனா மெல்லிய சங்கிலி ஒன்றும் அதில் ‘A’ என்ற வைர பெண்டெண்ட்டும் இருந்தது. அதனை பார்த்து விழி விரித்தவள் “எனக்கு இது வேண்டாம் அத்து.. இவ்ளோ காஸ்ட்லி கிப்ட்” என்று மறுக்க, அவள் தாடையை பற்றி தன்னை நோக்கி திருப்பியவன் “இது என் தியாக்காக என் முதல் சம்பலத்துல வாங்குனது.. சோ நீ இதை மறுக்க கூடாது என்றவன் அதை தானே அவள் கழுத்தில் அணிவிக்க அவள் கண்கள் கலங்கிவிட்டது.

“ப்ச்.. எதுக்கு இப்போ கண் கலங்குற” என்றபடி பெருவிரலால் அவள் கண்களை துடைக்க, ஆரு “மூணு மாசம் ஒழுங்கா சாப்பிடாம, தூங்காம.. காலேஜ் ஆபிஸ்ன்னு மாறி மாறி போய் உடம்ப வறுத்திக்கிட்டது இதுக்கு தானா” என்று முறைக்க அதில் மெலிதாக புன்னகைத்தவன் “என் தியாக்காக.. என்ன வேணாலும் பண்ண நான் தயாரா இருக்கேன்” என்றவன் அவள் உச்சியில் இதழ் பதித்து “போய் தூங்கு” என்க அவனை இறுக அணைத்தவள் “ஏன்டா என்ன இவ்ளோ லவ் பண்ணுற.. இதுவரை நான் உனக்கு என்ன பெருசா பண்ணிட்டேன்.. ஆனா நீ.. எனக்காக இவ்ளோ மாறிட்ட.. இவ்ளோ இறங்கி வந்துட்ட” என்றவளுக்கோ அவன் காதலின் மேல் அத்தனை கர்வம்.

எதற்காகவும் யாரிடமும் இறங்கி போகாதவன், மன்னிப்பு கேட்காதவன் அவளிடம் மட்டுமே அல்லவா இறங்கி போகிறான். அவளின் சிறு முக மாற்றத்திற்காக தனக்கு பிடிக்காத ஒருவனுடன் போட்டியில் கலந்துகொண்டான் அல்லவா.. மொத்தத்தில் அவளுக்காக தன்னையே மாற்றிக்கொண்டான் அவளவன்.

அவளை தன்னிடமிருந்து விலக்கியவன் “லேட் ஆகுதுடி” என்க
“ம்ம்.. பை” என்று வண்டியிலிருந்து இறங்கினாள். ரேயன் ஒரு தலையசைப்புடன் விடைபெற அவனை வழியனுப்பிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.

அவன் சென்ற பின் சிவகுமாரின் அருகே வந்தவள் “ப்பா” என்றழைக்க அதில் நெஞ்சில் கைவைத்தவர் “இப்படியெல்லாம் ஷாக் கொடுக்காத டி.. குட்டி பிசாசு” என்று நக்கலடிக்க அவரை முறைத்தவள் “அப்பா” என்று சிணுங்க, சிவகுமார் “சரி சொல்லு என்ன விஷயம்” என்றார்.
ஆருவோ “அது.. அது வந்து” என்றிழுக்க
சிவா “என்ன மாப்பிள்ளை உனக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டானா” என்று கேட்க அவரை அதிர்ந்த பார்த்தவள் “என்ன நேர்ல பார்த்த மாதிரி சொல்லுறீங்க” என்று கேட்க அவரோ தலையில் அடித்துக்கொண்டார்.

நிலா “கண்ணா கிட்ட சொல்லிட்டியா” என்று கேட்க, மறுப்பாக தலையசைத்தவள் “இனி தன் சொல்லனும்.. ஆனா எனக்கு பயமா இருக்கு மா” என்றவளின் முகத்திலிருந்த கவலையை கண்ட சிவா “அதெல்லாம் அவன் ஒன்னும் சொல்ல மாட்டான்.. நீ எதையும் போட்டு குழப்பிக்காம போய் தூங்கு” என்று அவளை அனுப்பி வைத்தார். அறைக்கு வந்தவள் அவளவனின்  இனிய நிகழ்வுகளில் அப்படியே கண்ணயர்ந்தாள்.

இங்கு இவ்வாறிருக்க அங்கு அக்னியின் அறையில் மூன்று மணி நேரமாக அந்த puzzle உடன் போராடிக்கொண்டிருந்தாள் நேஹா. கட்டிலின் மீது அமர்ந்திருந்த அக்னியோ அவளை புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தான்.

மணி இரவு ஒன்பது என கடிகாரம் கட்ட, அக்னி “போதும் டி.. மீதிய நாளைக்கு வந்து பண்ணு” என்றான் அவளோ மறுப்பாக தலையசைத்துவிட்டு “இரு இரு ஆல்மோஸ்ட் முடிச்சிட்டேன்” என்றவள் ஒரு இருபது நிமிடங்களில் அதை முடித்தும் காட்டினாள்.

பின்னணியில் இருவரின் சிறு வயது முதல் இப்போதிலான புகைப்படங்கள் இருக்க, அவள் புடவையில் இருக்கும் ஒரு புகைப்படம் முன்னணியில் பெரிதாக போடப்பட்டு போட்டோ மொசைக் செய்யப்பட்டிருந்தது.

நேஹாவோ விழி விரித்து “வாவ்” என்றவள் அந்த புகைப்படங்களை உற்று நோக்கினாள். அக்னி “என்னடி அப்படி பாக்குற” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் வினவ, அவளோ “இதுலாம் என்ன போட்டோஸ்” என்று புருவம் சுருக்கியவள் தொடர்ந்து “அண்ட் இந்த மெயின் போட்டோ பெயிண்டிங் போல இருக்கு” என்று யோசனையாக கேட்டவள் ஏதோ நியாபகம் வந்தது போல் “அப்போ இதுக்கு தான் பெயிண்டிங் கிளாஸ் போனியா” என்று கண்களில் மின்னல் வெட்ட கேட்க, அவளை மெச்சும் பார்வை பார்த்தவன் “ம்ம்” என்றான் சிறு தலையசைப்புடன்.

நேஹா “இது என்ன போட்டோ..” என்று ஒரு புகைப்படத்தை காட்ட, கட்டிலில் இருந்து எழுந்தவன் அவள் பின் வந்து நின்றான். அவளை உரசியபடி நின்றவன் அவள் கைபிடித்து ஒவ்வொரு புகைப்படத்தையும் விளக்கினான்.

“இந்த போட்டோ நீ முதல் முதல இந்த வீட்டுக்கு வரும் போது எடுத்தது.. இது நம்ம இன்டர்ஸ்கூல் காம்படிஷன் போகும் போது எடுத்தது.. அதோ அந்த போட்டோ மேடம் முதல் முறை புடவை கட்டும் போது எடுத்தது” என்றவன் சிறு இடைவெளி விட்டான்.

பின் பெண்ணவளின் தோளில் நாடியை பதித்தவன் “நயின்த் வரை நல்ல பையனா தான் இருந்தேன்.. ஆனா டென்த்ல எப்போ உன்ன முதல் முறை சாரில பார்த்தனோ அப்போவே விழுந்துட்டேன்” என்று அவளை இறுக அணைத்தான். அக்னி “என்ன முழுசா புரிஞ்சிகிட்ட ஒரே ஆள் நீ தான் டி.. நான் என்ன திட்டினாலும் கோவப்பட்டாலும் அகி அகின்னு என் கூடவே வர உன்ன எனக்கு அவ்ளோ பிடிக்கும்..” என்றபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவன் அணைப்பிலும் வார்தைகளிலும் கரைந்துகொண்டிருந்தவள் சட்டென திரும்ப, அவள் மறு கன்னத்தில் இதழ் பதிக்க வந்தவன் அவள் இப்படி திரும்புவாள் என்பதை எதிர்பாராது அவள் இதழில் இதழ் பதித்துவிட அவளோ விழி விரித்து நின்றாள்.

சட்டென்று அவளிடமிருந்து விலகியவன் “சாரி.. சாரி.. நான் கன்னத்துல தான்..” என்று தடுமாற, அவளோ தலை குனிந்து நின்றாள். அவள் கன்னங்களோ ரத்த சிவப்பாய் மாறியிருக்க அவள் அருகில் வந்தவன் அவள் கன்னம் தாங்கி “எனக்கு இந்த சினிமால வர மாதிரி டயலாக்லாம் பேச வராது.. ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன்.. நீ இல்லனா என்னால நானா இருக்க முடியாது.. சந்தோஷமா கோபமோ துக்கமோ, எனக்கு எது நடந்தாலும் அதுல நீ கூட இருக்கனும்.. சுருக்கமா சொல்லனுனா.. இந்த நேஹா இல்லாம அக்னி இல்ல” என்று கூற, அவனை மென் புன்னகையுடன் ஏறிட்டவள் “இன்னும் நீ முழுசா சொல்லல” என்றிட அதில் நாக்கை கடித்து புன்னகைத்தவன் “சொல்லுறேன்” என்றான் அசடு வழிந்தபடி.

“டென்த் அப்போவே எனக்கு உன்மேல இருந்தது வெறும் பிரெண்ட்ஷிப் மட்டும் இல்ல அதையும் தாண்டி ஒன்னுன்னு புரிஞ்சிகிட்டேன் ஆனா அதை உன்கிட்ட சொல்ல கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு.. பிளஸ் நான் சொல்லாமலே நீ அதை உணரனும்னு நினைச்சேன்.. அப்பறம்
நம்ம ஸ்கூல் முடிக்கும் போது உங்க அப்பா உன்ன பெங்களூர்ல தான் சேர்ப்பேன்னு பிடிவாதமா இருக்கும் போது நான் தான் உங்க அம்மாகிட்ட பேசி இங்க சேருங்கன்னு ஏத்திவிட்டேன்.. அப்போன்னு பார்த்து நீ வேற நான் பெங்களூர் போறேன்னு சொல்லிட்டியா அதான்  உடனே அருணுக்கு போன் பண்ணி அவனை இங்க வர வச்சு உனக்கு ஒரு அட்வைஸ போட சொன்னேன்.. அப்பறம் சிவா அப்பாவை விட்டு உங்க அப்பாகிட்ட பேச வச்சு அவரை பிரெயின்வாஷ் பண்றதுக்குள்ள போதும் போதுன்னு ஆகிடுச்சு.. அப்போ கூட இந்த டியூப்லைட்டுக்கு என் மனசு புரியல.. அப்பறம் ஆரு தான் இதெல்லாம் தள்ளி போடக்கூடாது சீக்கிரம் சொல்லிடனும்னு சொல்லி என்ன உசுப்பேத்தி விட்டா.. அதான் அன்னிக்கி மாடில நான் ஒரு பொண்ணை லவ் பண்றேனு உன்கிட்ட சொன்னேன்” என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு கூற, “பிராடு.. பிராடு.. எல்லாம் கூட்டு களவானிங்க” என்றவள் அவன் நெஞ்சில் அடிக்க, அவள் மலர் கரங்களை பிடித்து தடுத்தவன் அதை பற்றி இழுக்க அவன் மீதே மோதி நின்றாள்.

அவளை இடையோடு கட்டிக்கொண்டவன் “உனக்கு அந்த மாதிரி பீலிங் இருக்கான்னு தெரியனும்ல அதான்” என்றவன் தொடர்ந்து “அன்னிக்கி அந்த ஸ்வேதா பத்தி சொல்லும் போது உன் முகம் போன போக்கை நினைச்சா இன்னிக்கும் சிரிப்பு தான்டி வருது.. அது எப்படி நான் அவளை லவ் பண்ணிட்டு உன்ன நெருங்குவேன்.. சரியான மக்கு” என்றான்.

பின் அவள் முகத்தை கையிலேந்தி “என்னால இதுக்கு மேல சொல்லாம இருக்க முடியாது டி” என்றவன் அவள் கண்களை பார்த்து “ஐ..” என்று கூறும் போதே நேஹாவின் அலைபேசி அலற, “ப்ச்.. யாரு டி” என்றான் சலிப்பாக. அலைபேசி எடுத்து பார்த்தவள் “ஐயோ அப்பா கால் பண்ணுறாங்க.. அகி நாளைக்கு பேசலாம்” என்றவள் அவசரமாக செல்ல பார்க்க அவள் கைபிடித்து தடுத்தவன் அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்துவிட்டு “சாரி டி.. ஐ காண்ட் ரெசிஸ்ட்” என்றவன் அவள் சுதாரிக்கும் முன் அவள் முகம் தாங்கி இதழ் கவ்வ அவளோ அதிர்ந்துவிட்டாள்.

ஆழமான முத்தம் ஒன்றை பதித்தவன் அவளை விடுவித்து “பை” என்க அவளோ மந்திரித்து விட்டது போல் தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

செல்லும் அவளை வெட்க புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவன் அறியவில்லை அவன் காதல் சொல்வதற்குள் அவன் பட போகும் பாட்டை.

மறுநாள் மாலை பிரியாவிடை கொடுக்க அனைவரும் கூடியிருக்க, ஆடல் பாடல் என பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது ஜூனியர் மாணவன் ஒருவன் ரேயனிடம் வந்து “ரேயன் அண்ணா.. உங்க இனிய குரல்ல ஒரு பாட்டு பாடுங்களேன்” என்று கேட்க, அவனோ “அதெல்லாம் வேண்டாம்டா” என்றான். அந்த மாணவனோ “அண்ணா ப்ளீஸ்.. நீங்க அருமையா பாடுவீங்கன்னு எங்களுக்கு தெரியும்” என்று அழைக்க
கிஷோர் “ஆமா மச்சா.. நீ பாடி கேட்டு ரொம்ப நாள் ஆகுது” என்க, அவன் கண்களோ ஆருவை தழுவியது. ஆருவும் “பாடு” என்று வாயசைக்க, அவளை ஒரு பார்வை பார்த்தவன் அந்த மாணவனிடம் சரி என்றான்.

உடனே அந்த மாணவன் அவனிடம் ஒலிபெருக்கியை நீட்ட அதை வாங்கியவன் தொண்டையை செருமிவிட்டு

வீசிப்போன புயலில்
என் வோ்கள் சாயவில்லை
ஒரு பட்டாம்பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல
என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி

மண்ணிலே செம்மண்ணிலே
என் இதயம் துள்ளுதடி ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயா் சொல்லுதடி
கனவுப் பூவே வருக
உன் கையால் இதயம் தொடுக
எந்தன் இதயம் கொண்டு
நீ உந்தன் இதயம் தருக
ஓ ஹோ ஹே ஹே

என்று ஆருவை பார்த்தபடி பாட, ஆருவோ கன்னம் சிவக்க நின்றுக்கொண்டிருந்தாள்.

இவர்கள் இருவரின் மௌனமொழிகளை பார்த்துக்கொண்டிருந்த அக்னிகோ ஏதோ புரிவது போல் இருக்க அவன் முகமோ இறுகிவிட்டது. ஆரு அவனை காதலிப்பதை நினைக்கவே கசத்தது ஆனால் அவளை தடுக்கவோ எதிர்க்கவோ அவன் நினைக்கவில்லை, சிறு விஷயங்களை கூட தன்னிடமிருந்து மறைக்காதவள் இப்போது வாழ்க்கை நிர்ணயத்தையே மறைத்துவிட்டாள் என்று எண்ண எண்ண அவன் முகமும் மனமும் பாறையென இறுகியது.

தொடரும்…

Advertisement