Advertisement

அத்தியாயம் 28

ரயில் சென்னையை வந்தடைய அனைவரும் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு தங்களின் வீடு நோக்கி சென்றனர்.

அக்னி ரயில் நிலையம் நெருங்கும் போதே தங்களுக்காக டாக்ஸி புக் செய்திருந்தான் எனவே இறங்கியவுடன் அவன் டாக்ஸி நோக்கி செல்ல அனைவரையும் அழைத்தான்.

அக்னி “வாங்க டாக்ஸி மெயின் கேட் கிட்ட நிக்குதாம், டிராபிக் வேற, சீக்கிரம் போனும்” என்று சொல்லிக்கொண்டு முன் நடக்க, நேஹாவும் கதிரும் பின்தொடர்ந்தனர். ஆரு அங்கு ரேயன் தென்படவில்லையே என்று பார்த்துக்கொண்டு இருந்தாள், “இவன் வேற எங்கன்னு தெரியல, அப்பறம் பை கூட சொல்லாம போய்ட்டனு என்னதான் கத்துவான்” என்று தனக்குள் புலம்பியபடி கண்களை சுழலவிட்டாள்.

அங்கு ரேயனோ ரயில் உள்ளே ஆருவை தேடியபடி கிஷோரிடம் “டேய் கிச்சா, ட்ரெயின் ஸ்டாப் ஆகியே 2 நிமிஷம் தான ஆகுது அதுக்குள்ள எங்கடா போனா” என்று கேட்க அவனோ “அஹன் நீ இப்படி வருவன்னு தெரிஞ்சு அந்த பயர் பய ரன்னிங்ளையே அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போயிருப்பான்” என்றான் கேலியாக.

அங்கு அக்னி “ஆரு வா…லேட் ஆகுது” என்று கத்திக்கொண்டிருக்க
ஆரு “அஹன் வரேன் வரேன்” என்று சொல்லிக்கொண்டு திரும்ப அங்கு இறங்கினான் அவளவன்.

அவனை பார்த்து நிம்மதி அடைந்தவள் “ஹப்பா.. டேய் எங்கடா போன, எவ்ளோ நேரமா உனக்கு வெயிட் பண்றது.. அப்பறம் பை சொல்லலன்னா  கோச்சிப்ப”  என்று முகம் சுருக்கி அவனிடமே புகார்பத்திரிக்கை வாசிக்க அதைக்கேட்ட கிச்சாவோ “சீ…கோச்சிப்பானா….டேய் நீயா டா…பெட்டி பெட்டி அஹ் தேடுறப்பவே நினச்சேன்” என்று சந்தேக பார்வை வீசினான்.

ஆரு “பெட்டி பெட்டியா தேடுனதுக்கு உன் போன எடுத்து பாத்தாலே என் மிஸ்டு கால் இருந்திருக்கும், எவ்ளோ வாட்டி கால் பண்ணுறது உனக்கு….கிளம்புறேன் பை” என்று சிலுப்பிக்கொள்ள அதில் புன்னகைத்தவன் “சரி சரி ரொம்ப கோவம் வேண்டா…பாத்து போ” என்றான்.
ஆரு “எங்களுக்கு தெரியும்…ஹ்ம்ம்…”என்று முகத்தை வெட்டி திருப்பிக்கொண்டு செல்ல, “ஓ கோச்சிகிட்டியா.. அப்போ நாளைக்கு பீச் பிளான் கேன்சல் பண்ணிடுறேன்” என்று இதழுகிடையே புன்னகையை மறைத்தபடி கூறியவன் ஏதும் தெரியாதது போல் தனது கைபேசியை நொண்ட ஆருவோ அவன் கூறியதை கேட்டு விழி விரித்தாள்.

ஆரு “என்ன நிஜமாவா.. ” என்று அவன் அருகே வந்து அவன் கை பிடித்தபடி கேட்க அவனும் ஆம் என்பது போல் தலையாட்டினான். ஆரு “செம்ம.. நான் ரெடி.. நாளைக்கு பாக்கலாம்…பை பார்ட்னர்…” என்றவள் கிச்சாவிற்கும் கைகாட்டிவிட்டு சென்றாள்.

இங்கு கிஷோரோ வாயை பிளந்தபடி ரேயனை பார்த்த்துக்கொண்டிருந்தவன் “என்ன டா நடக்குது இங்க….” என்று அதிர்ச்சிகுறையாமல் வினவ
ரேயன் “பார்த்தா தெரியல” என்றான் விஷம புன்னகையுடன்.
கிஷோர் “தெரியல சொல்லு” என்று அவனையே குறுகுறுவென பார்க்க, ரேயனோ அலுங்காமல் குலுங்காமல் “ஐ லவ் ஹேர்” என்று கூறியே விட்டான்.

கிஷோர் “ஓ லவ்வா” என கூறியவன் பின் அவன் கூறியதின் அர்த்தம் உணர்ந்து “எதே.. லவ்வா.. டேய் என்ன சொன்ன திருப்பி சொல்லு” என்று கேட்க
ரேயன் “உனக்கு கேட்டது தான் சொன்னேன்” என்றான்.
கிஷோர் “இவ்ளோ நாள் பிரண்ட்ன்னு சொல்லிட்டு சுத்துன, அப்போ அது” என்றிழுக்க
ரேயன் “அதுவும் உண்மைதான்” என்று தோளை உலுக்கினான்.
கிஷோர் “டேய் சைக்கோ.. ஒழுங்கா சொல்லு.. லவ்வா பிராண்ட்டா” என்று கேட்க, ரேயனோ “வா கிளம்பலாம்” என்றான்.
கிஷோர் “இல்ல உனக்கு என்ன பாத்தா ‘இங்கு வாருங்கள் கலாய்த்து அனுப்புங்கள்’ னு போர்டு போட்ட மாதிரி இருக்கா” என்று கடுகடுப்பாக கேட்க
ரேயன் பலமா சிரித்து விட்டு, “ஐயோ ஐயோ…அப்படி போர்டு மாட்டுனா எப்படி இருக்கும்ல” என்று மறுபடி சிரிக்க
கிஷோர் “சரி போதும் கோல்கேட் ஆட்ல வரமாதிரி சிரிச்சது.. விஷயத்த சொல்லு” என்றான்.

ரேயன் “வா” என்று அவனை காருக்கு இழுத்து சென்றான். ரேயனின் தந்தை  அவனுக்காக காரை ஸ்டேஷன் அனுப்பி வைத்திருந்தார். வண்டியில் ஏறிய கிஷோர் “இப்போ சொல்லு.. எப்போத்துலருந்து இதலாம் நடக்குது.. அவக்கூட என்கிட்ட சொல்லல” என்று புருவம் இடுங்க கேள்வி எழுப்ப
ரேயன் “அவகிட்டயே நான் இன்னும் சொல்லல” என்றான் உதட்டை பிதுக்கி.

கிஷோர் “அப்போ அவ உன்ன லவ் பண்ணலையா?” என்று சந்தேகமாக கேட்க, மறுப்பாக தலையசைத்தவன்
“யார் சொன்னா.. அவளும்தான் லவ் பண்றா” என்று சிரித்த முகமாய் கூற கிஷோருக்கு தான் தலையை பிய்த்து கொள்ளலாமா என்றிருந்தது.

கிஷோர் “டேய் ஏற்கனவே என் மேல் மாடி காலி டா.. இதுல இப்படி குழப்புனனா பாவம் டா நான்.. தெளிவா சொல்லு ப்ளீஸ்” என்று கெஞ்ச, ரேயன் “நான் கூட அவ எனக்கு ஒரு நல்ல பிரண்ட் அதுக்குமேல ஏதும் இல்லை, எதும் வேண்டான்னு தான் இருந்தேன்.. பட்.. நான் எவ்ளோதான் என்னோட பீலிங்ஸ அவாய்ட் பண்ணாலும் அது என்ன விடல.. யார்கிட்டயும் வராத பீலிங்ஸ் எனக்கு அவள பாத்தா மட்டும் வருது.. இது நானே இல்லைன்னு சொன்னாக்கூட அது பொய்யாதான் இருக்கும்” என்றவனின் முகமோ மென்மையை தத்தெடுத்திருக்க அவன் இதழிலோ ஆழ்ந்த புன்னகை.

ரேயன் கூறியதை மலைப்பாக கேட்டுக்கொண்டிருந்த கிஷோர் “என்னடா திடீர்ன்னு” என்று கேட்க
ரேயன் “ஹாஹா திடீர்னுலாம் இல்ல, ஒரு வருஷமா நானே என்ன என்னன்னு குழப்பி இப்போ தான் முடிவெடுத்தேன்.. அவதான் என் வைப்.. வேற யாரும் என் லைப் உள்ள வரமுடியாது.. விடவும் மாட்டேன்” என்றவனின் குரலில் அத்தனை உறுதி.
கிஷோர் “மச்சான்…” என்றழைக்க
ரேயன் “புரியுது.. பிரச்சனை வரும்னு தெரியும்.. ஆனா என்னால அவளை விட முடியலடா.. நான் வேண்டான்னு தான் நினைச்சேன் ஆனா முடில.. நேத்து நீயே பார்த்தல, அவ மயக்கத்துல இருக்குறதகூட என்னால பாக்க முடில.. அவ இல்லாம என்னால இனிமே நார்மலா இருக்கமுடியும்னு எனக்கு தோணல டா கிச்சா…” என்று கூறி முடிக்கவும் கிஷோரின் வீடு வரவும் சரியாக இருந்தது.

வண்டியிலிருந்து இறக்கியவன் அவனுடைய பெட்டியை எடுத்து குடுக்க,
கிஷோர் “சரி டா நாளைக்கு பாக்கலாம்” என்றான், ரேயன் “ஏதும் சொல்லாம போற” என்று கேட்க அதில் புன்னகைத்த கிஷோர் “சொல்ல என்ன மச்சான் இருக்கு.. என் அத்து ஆசைபட்டான்.. இதுக்குமேல என்ன வேணும்.. கண்டிப்பா எல்லாம் நல்லா நடக்கும்.. நடத்துவோம்.. யூ சில் மேன்” என்றவன் அவன் தோளில் தட்டினான்.

ரேயன் “பர்ஸ்ட் டைம் பயம் வருது கிச்சா.. எங்க அவ என்ன விட்டு போயிடுவாளோன்னு” என்று கூற
கிஷோர் “ஏன்டா பயம்” என்றான் அவன் கூற்று புரியாது, அப்பொழுது ரேயன் தன் கைபேசியில் வந்திருந்த ஆருவின் குறுஞ்செய்தியை காட்டினான் அதில் அடுத்த நாள் அக்னியின் வீட்டில் விசேஷம் இருப்பதால், பீச் இன்னொரு நாள் செல்லலாம் என்று கூறியிருந்தாள் மங்கையவள்.

அதை பார்த்த கிஷோர் “அவனை நீ அவ வாழ்க்கையை விட்டு அனுப்ப முடியாது அத்து” என்று அக்னியை நினைத்து கூற
ரேயன் “எனக்கு தெரியும்” என்று கூறிவிட்டு சோகமா காரில் ஏறி சென்றான். கிஷோர் தான் மனதிற்குள் “சொல்றதுக்கு முன்னாடியே பொஸ்ஸஸிவ் ஆகுறான், ஹர்ட் ஆகுறான், சொல்லிட்டா என்ன ஆகும் தெரியலயே.. இவன் ஒரு சைக்கோ, அவன் ஒரு பெரிய சைக்கோ.. ரெண்டு பேரு நடுல ஆரு என்ன ஆக போராளோ.. பாவம் பார்ட்னர் நீ..” என்று நினைத்தவன் “அந்த நேஹாவும் எப்போ பயர் கிட்ட மாட்ட போதோ இவன்கிட்ட பேசுறதுக்கு.. ஷப்பா” என்று தலையில் அடித்து கொண்டு உள்ளே சென்றான். இதெல்லாம் விரைவில் ஒரு முடிவிற்கு வந்துவிடாத என்று ஏங்கியவன் அறியவில்லை அவர்களின் ஊடல் அவ்வளவு எளிதில் முடியக்கூடிய ஒன்றல்ல என்று.

காரில் சென்ற ஆத்ரேயனிற்க்கு அவள் வரவில்லை என்று கூறியது வருத்தம் என்றாலும், தனது நண்பனிடம் தன் காதலை பற்றி கூறியதில் மகிழ்ச்சி தான்.

அதுவும் முதல் முறை காதலை உணர்ந்து கொண்டதாலும் மிகுந்த உற்சாகத்தில் தான் இருந்தான்.

ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்பது
தடுமாற்றம் தாக்குது

தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
உன் வீட்டை தேடவா
உறங்காமல் தேயவா

ஓஹோ ஹோ ஹோ தினம்
ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்

ஓஹோ ஹோ ஹோ வரும்
ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்..

இரண்டு நாட்களுக்கு பிறகு கல்லூரியில் வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒன்றான “பாரம்பரிய நாள்” வந்தது. அன்று மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான புடவையிலும், பட்டு வேட்டி சட்டையிலும் வருவது வழக்கம், அதற்க்கு ஏற்ப கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அன்று ஆருவும் நேஹாவும் ஒரு திட்டம் போட்டு அதை நிறைவேற்ற களத்தில் இறங்கினர். நேஹா “சோதப்பிறாத ஆரு, அப்பறம் சிக்கினோம் இடியாப்பம் தான்.. உலறி வச்சிறாத” என்று பதற
ஆரு “அட நான் உலறலாம் மாட்டேன்டி.. நீ போய் குடு.. நானும் போறேன்” என்று கூறிக்கொண்டு இருவரும் தங்களின் அடிமைகளை தேடி சென்றனர் (வேற யாரு அத்துவும் அக்னியும் தான்?).

அக்னி மற்றும் கதிர் பட்டு வேட்டி சட்டையில் தங்களின் தலை முடியை சரி செய்தவாறு பேசி கொண்டிருந்தனர் அங்கு சென்ற நேஹா “டேய் அகி என்ன சட்ட இது” என்று முகம் சுழிக்க
அக்னி “ஏன்.. நல்லா இல்லையா.. காலைல நல்லா இருக்குனு தான சொன்ன” என்று குழப்பமாக கேட்க
கதிர் “ஆமா அதான.. உங்களுக்கு கண்ணுல பிரச்சனையா” என்று விளம்பர பாணியில் கேட்க,
நேஹா “வாய மூடு நான் உன்கிட்ட பேசல.. நல்லா இல்ல அகி.. நீ இத போடு” என்று தன் கையில் வைத்திருந்த மரூண் நிற சட்டையை கொடுத்தாள்.

அக்னி “இது எப்போ வாங்குன…இதுக்குதான் நான் போட்டது நல்லா இல்லன்னு சொன்னியா” என்று சிறு புன்னகையுடன் வினவ
நேஹா “ஹாஹா….ஆமா” என்று அசடு சிரிப்பை உதிர்த்தாள்.
அக்னி “இதை நேத்தே குடுக்க வேண்டியது தான” என்று கேட்க,
நேஹா ‘அஹன் நீ வாசல்ல அவன பாத்துட்டா’ என்று நினைக்க,
அக்னி “உன்னதான்” என்று அவள் தோளைஉலுக்க அதில் சுயம் பெற்றவள்  “அதலாம் அப்டிதான.. சப்ரைஸ்.. நல்லா இருக்கா?” என்று ஆர்வமா கேட்க, பக்கத்தில் இருந்த கதிரை பார்த்த அக்னி “மச்சா எனக்கு கொஞ்சம் ஜூஸ் வாங்கிட்டு வாயேன்…தல சுத்துது” என்று கேட்க,
கதிர் “இல்ல டீசண்டா நானே போயிருக்கனும் தான்….மனிச்சுறு” என்று சென்றுவிட, அவன் சென்ற பிறகு நேஹாவை பார்த்தான்.

நேஹா “புடிச்சிருக்கான்னு கேட்டேன்” என்று இடுப்பில் கைவைத்து புருவமுயர்த்த, அவளை சேலையில் பார்த்த போதே தடுமாறியவன் அவளை இத்தனைஅருகில் பார்த்தால் விடுவானா என்ன. கண்களால் அவளை அளந்தவன் அறையில் அறையில் யாரும் இல்லாததை கவனித்துவிட்டு அவளை ஜன்னல் புறம் காட்டி “ஹை நேஹா அங்க பாறேன் அந்த பறவைய” என்று கூற அவளும் ஆர்வமாக ஜன்னலின் வழி வந்து அவனை இடித்துக்கொண்டு என்னவென்று பார்க்க, அவளின் கன்னத்தில் அழுந்தமாக இதழ் பதித்தவன் “செம்மையா இருக்க, அனா இப்படி டியூப்லைட்டா இருக்கியே” என்று கண்ணடித்துவிட்டு ஓடிவிட
நேஹா “டேய் பிராடு.. இரு டா..” என்று அவளும் பின்னே ஓடினாள்.

அங்கோ குட்டி பிரளயமே நடந்துக்கொண்டிருந்தது.
ரேயன் “நோ.. நான் வேஷ்டி சட்ட போடமாட்டேன்” என்று அடம்பிடிக்க
ஆரு “ரொம்ப பண்ணாத அத்து, ஒரு நாள் தான” என்றாள்,
கிஷோர் “அதான.. என்னடா இப்போ உனக்கு.. போடேன்” என்று அதட்டினான்.

ரேயன் “நோனா நோ.. அவ்ளோதான்” என்றான் மார்பிற்கு குறுக்கே கைகட்டி,
ஆரு “ஏன் டா இந்த டிசைன் ல பொறந்துருக்க.. எல்லாத்துக்கும் எதாச்சு ஒன்னு சொல்ல வேண்டியது” என்று முறைக்க
ரேயன் “தியா ப்ளீஸ்….வேண்டாம்” என்றான் இறைஞ்சலாக
கிஷோர் “நீ போ ஆரு, இவன் கேக்கமாட்டான்.. போய் உன்ன சைட் அடிப்பான்ல அந்த முண்டகண்ண அவன்கிட்ட குடு, போட்டுப்பான்” என்று ஏத்திவிட
ஆரு “ஆமா பார்ட்னர்.. அதான் ரைட்டு.. நான் போறேன்” என்றவள் ரேயனிடம் “எப்படியோ போ.. கெஞ்சிட்டுலாம் இருக்க முடியாது” என்று கத்திவிட்டு செல்ல முயன்றபோது எட்டி அவள் கைப்பற்றியவன் “சரி இரு” என்றான்.

ஆரு “என்ன” என்று கேட்க
ரேயன் “குடு போடறேன்”என்றான் சிறு குரலில்.
ஆரு “கேக்கல…” என்று கதை பிடிக்க
ரேயன் “போடறேன் சொன்னேன்” என்றான் குரலை உயர்த்தி, அப்போதும்  ஆரு “இல்ல கேக்கல” என்று சதி செய்ய
கிஷோர் “ஆமா என்ன தம்பி சொன்னீங்க” என்று ஆருவின் கட்சிக்கு தாவி விட
ரேயன் “எப்பா சாமிகலா குடுங்க போட்டு தொலைக்குறேன்” என்று கத்த, இதற்குமேல் வெறுப்பேற்றினால் நிஜமாவகவே வீட்டுக்கே சென்றுவிடுவான் என்று அவள் வைத்திருந்த அதே மரூண் நிற சட்டையையும் வெள்ளை வேட்டியும் அவன் கையில் கொடுத்தாள்.

ரேயன் “வா” என்று கிஷோரை அழைக்க,
கிஷோர் “நான் எதுக்கு” என வினவ
ரேயன் “எனக்கு கட்ட தெரியாதுடா” என்று கோவமாக கத்தினான்,
ஆரு “அத்து மே ஐ ஹெல்ப் யூ?” என்று அவன் காதின் அருகில் வந்து நின்று கேட்க,
ரேயன் “அடிங்கு” என்று ரேயன் கூறும் போதே ஓடி விட்டாள்.

மாணவர்கள் அனைவரும் அவர்கள் கல்லூரியின் பெரிய மைதானத்தில் அமைக்க பட்டிருந்த வித விதமான பாரம்பரிய வீடுகள் போல அமைக்கபட்டிருந்த குடில்களின் அருகில் நின்று செல்பீ எடுத்துக்கொண்டிருந்தனர், ஆங்காங்கே ராட்டினம், பஞ்சுமிட்டாய் போன்றவையும் அமைக்க பட்டு இருந்தது, மாணவர்கள் ஒரு படி மேலே சென்று விறகு அடுப்புக்கள் அமைத்து சமைக்கவும் செய்தனர்.

அந்த இடத்திற்கு அக்னி, கதிர் நேஹாவுடன் வர, ஆரு கிச்சாவுடன் வந்தாள். ஆரு”எங்க பார்ட்னர் அவன்.. இன்னுமா வேட்டி.கூட சண்டை போடுறான்” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் வினவ
கிச்சா “தெரியல பார்ட்னர்.. அப்படியே வீட்டுக்கு போனாலும் போயிருப்பான்.. யாருக்கு தெரியும்” என்றான் தோளை உலுக்கி
ஆரு “அதலாம் போமாட்டான்” என்று கூற
கிச்சா “நம்பிக்கை.. ஹ்ம்ம்..” என்றான் கேலியாக.

அப்பொழுது அங்கு ஒரு இடத்தில் சிவா தலைமையில் போட்டிகள் நடந்துகொண்டிருந்தது, சிவில் மட்டும் இல்லாமல் எல்லாத்துறை மாணவர்களும் இருந்தனர்.
சிவா “ஒகே மக்களே, இப்போ நம்ம விளையாட போற கேம் எப்படினா, இங்க நாலு டேபிள் ல நாலு ப்லேட்ஸ் இருக்கு, அதுல பால்ஸ் உம் இருக்கு, பக்கத்துல பெரிய டூத்பிக்கும் இருக்கு, ரெண்டு ரெண்டு பேரு விளையாட போறீங்க, அதுவும் நாங்கதான் செலக்ட் பண்ணுவோம், டூத்பிக் எடுத்து வாயில வச்சிட்டு ஒரு சின்ன பால் எடுத்து ரெண்டு பேரும் பாலன்ஸ் பண்ணி இன்னொரு எண்டு ல இருக்க பௌல்ல போடணும்.. யாரு நீரையா போடுறீங்களோ அவங்கதான் வின்னர்.. ஓகே” என்றிட அங்கிருந்த அனைவரும் ஓகே என்று ஆர்பரித்தனர். அவர்கள் கத்திய அதே சமயம் ரேயன் அங்கு வர அவனையும் அக்னியையும் கவனித்த சிவா “வாவ் ஹீரோஸ் ரெண்டு பேரும் ஒரே கலர் ஷர்ட்ல வந்திருக்கங்களே” என்று கூற,
அவன் கூறியதை கேட்ட ரேயன் புரியாமல் பார்க்க, அக்னி அவனை பார்த்துவிட்டான். அப்பொழுது தான் ரேயனும் அவனை கவனித்தான், அவ்வளவு தான் இரண்டு பேரும் அவர்களின் துணையை கண்களாலே எரிக்க தொடங்கினர் ஆனால் அவர்களோ இதற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல் ஆச்சரியமாக அவர்களை பார்த்து வைத்தனர்.

அக்னி “இவ இப்டி பண்ண சான்ஸ் இல்ல, நிஜமா கோயின்சிடென்ஸா” என்று குழம்ப,
ரேயன் “இவ வேலையை தான் இருக்கும்” என்று நினைத்து அங்கிருந்து நகரபார்க்க, அவனை தடுத்த கிஷோர் “மச்சா.. நிஜமா இது கோயின்சிடென்ஸ் தான், அவனுக்கு தெரிஞ்சி எப்படி அவ குடுப்பா, பாரு அவளும் ஷாக் அஹ் ரெண்டு பேர மாத்தி மாத்தி பாத்துட்டு இருக்கா” என்று கூற, ரேயனும் ‘இது எதர்சியாக நடந்தது தான் போல’ என்று நினைத்துக்கொண்டான் ஆனால் நேஹாவும் ஆருவும் கண்ணடித்து கொண்டதை யாரும் அறியவில்லை.

விளையாட்டிற்கு பங்குபெறுபவர்களின் பெயர்களை எழுதி போட சிவா கூற, ஆரு ரேயன் வரமாட்டான் என்று தெரிந்து அவன் பெயரையும் சேர்த்தே எழுதினாள். அக்னி நேஹா கதிர் கிஷோர் பெயரும் போடப்பட்டது.

சிவா பங்குபெறப்போகும் ஜோடிகளின் பெயரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தான்.
சிவா “ஓகே குலுக்கல் முறையில நாலு ஜோடி எடுக்க போறேன்.. அவங்க தான் இந்த விளையாட்டவிளையாட போறீங்க.. ரெடி.. ஒகே.. முதல் ஆதி அண்ட் ஸ்ருதி”

“இரண்டாவது, கதிர் அண்ட் இந்து”

அப்பொழுது தான் கூட்டத்தை பார்த்த கதிர் இந்து நிற்பதை கவனித்து செய்கையில் “ஜி நீங்களா” என்று கேட்க, அவள் ஆம் என்று தலை அசைத்தாள்.

இருவரும் பேரும் முன் செல்ல,
ரேயன் “என்னடா நடக்குது…எல்லாம் பிளான்னா.. இவ பெரு இப்படி இவன்கூட” என்று கேட்டவனுக்கோ அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,
கிச்சா “நீதான் பாத்தல, உன் முன்னாடி தான்டா எடுத்தான், அப்பறம் எப்படி” என்று கேட்க ரேயனும் அரை மனதாய் நின்றுக்கொண்டிருந்தான். அப்படி நின்றுகொண்டிருந்தவன் அடுத்து அழைக்கப்பட்ட பெயரில் அதிர்ந்து போனான் என்றாள் ஆருவும் நேஹாவும் விழி விழித்து நின்றனர்.

ஆம் அடுத்ததாக அழைக்கப்பட்டதென்னவோ ஆத்ரேயன் மற்றும் அக்னி தான். இப்போது ரேயன் வெளிப்படையாகவே ஆருவை முறைக்க அவசரமாக அவன் அருகே சென்றாள், நேஹா அக்னியை அழைத்துக்கொண்டு கூட்டத்திற்கு மறுபுறம் சென்றாள்.

ஆரு “அத்து இதுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்ல” என்று கூற அவளை நம்பாத பார்வை பார்த்தவன் “நான் கிளம்புறேன்” என்று திரும்ப அவன் கை பிடித்தவள் “அத்து.. ஜஸ்ட் கேம் தான.. போய் ஆடு” என்க அவளை அழுத்தமாக பார்த்தவன் “நோ வே” என்றிட அதில் அவனை நன்றாக முறைத்தவள் “அதெல்லாம் தெரியாது.. எப்படியாவது  பர்ஸ்ட் ப்ரைஸ்ல இருக்குற டெடியா வின் பண்ணி கொடுக்குற” என்று கட்டளையிட
ரேயனோ “ஒரு டெடி என்ன ஓராயிரம் டெடி வாங்கி தரேன் ஆனா இதுல கலந்துக்க முடியாது” என்று மறுத்துவிட அவளோ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.

அவள் முகம் சுருங்கியதை பார்க்க சகிக்கதவன் தன்னை நொந்துகொண்டு “சரி போறேன்.. ஆனா அவன் எதாச்சு பண்ணா நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றிட அவளுக்கோ இதுவே போதுமென இருந்தது. கிஷோரோ ரேயனின் கூற்றில் விழிகள் தெரிவித்துவிடும் அளவிற்கு நின்றுக்கொண்டிருந்தான். ஆத்ரேயனின் பிடிவாதத்தை பற்றி நன்கறிந்தவனாயற்றே அவன். அப்படிப்பட்டவன் அவளிடம் இறங்கி வருவதிலேயே அவன் காதலின் ஆழத்தை உணர்ந்துகொண்ட கிஷோரோ மென்முறுவல் பூத்தான்.

அங்கு அக்னியோ இறுகி நின்றிருக்க நேஹாவோ “எனக்காக விளையாடு அகி.. ப்ளீஸ்” என்று கண்களை சுருக்கி இறைஞ்ச அவனோ பிடிவாதமாக மறுத்தான். நேஹா “இதுவரை நான் உன்கிட்ட எதுவும் கேட்டதில்ல அகி ஆனா இப்போ கேக்குறேன்.. இந்த கேம்ம வின் பண்ணி கொடு” என்றவள் பேசியே அவனை தாஜா செய்திருந்தாள்.

தத்தம் துணைகளுக்காக போட்டியில் கலந்துகொண்ட இருவரின் முகமும் கடுகடுவென தான் இருந்தது.

இருவரும் மற்றொருவரிடம் பேசவில்லை அவ்வளவு ஏன் முகத்தை கூட பார்க்கவில்லை ஆனால் இருவரும் மேசை மீது வைக்கப்பட்டிருந்த பந்துகளை எதிரிலிருந்த தட்டுகளில் கொண்டு சேர்த்தனர். இது எப்படி சாத்தியம் என பலர் வாயை பிளக்க ஆரு மற்றும் நேஹா ஆழ்ந்த புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தனர்.

போட்டியின் முடிவில் ரேயன் அக்னி ஜோடி முதல் பரிசை பெற்றுவிட ஆரு மற்றும் நேஹாவை கையில் பிடிக்கமுடியவில்லை ஆனால் வெற்றி பெற்ற இருவரும் இதற்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்பதை போல பரிசை கூட பெறாது அங்கிருந்து சென்றனர்.

நேஹா ஆருவிற்கு கண் காட்டிவிட்டு அக்னியின் பின் செல்ல ஆரு ரேயனின் பின் சென்றாள். அவர்களை சமாதானம் செய்வதற்குள் பெண்களுக்கு தான் போதும் போதுமென ஆனது.

ரேயன் காரில் ஏறி அமர ஆருவும் அவனுடன் அமர்ந்தாள். அவன் முகமோ இறுகியிருக்க அவன் தாடையை பற்றி முகத்தை நிமிர்த்தியவள் “இப்போ எதுக்கு இப்படி உர்ருன்னு இருக்க” என்று வினவ அவளை முறைக்க முயன்றவன் தோற்று தான் போனான்.

அன்றளர்ந்த மலர் போல் இளஞ்சிவப்பு நிற டிசைனர் புடவையில் தன்னருகே   அமர்ந்திருந்தவளின் எழிலின் தன்னை தொலைத்தவனின் இதயமோ என்றுமில்லாமல் இன்று அதிவேகமாக துடித்தது. அமைதியாக அமர்ந்துகொண்டிருந்த ரேயனின் அருகே அவனை இடித்துக்கொண்டு அமர்ந்தவள் “இப்போ ஏன் இவ்ளோ அமைதியா இருக்கிற” என்று கேட்க அவனோ ஒன்றுமில்லை என்பதாய் மறுப்பாக தலையசைத்தான்.

அவள் அருகாமையும் அவளின் பிரத்யேக வாசனையும் மன்னவனின் உணர்வுகளை கிளிர்த்தெழ தன் பிடரியை அழுத்தி தேய்த்தவன் தன்னை இடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவளின் காதருகே குனிந்தவன் “அழகா இருக்க” என்றான் உணர்ச்சிகள் மிகுந்த கரகரப்பான குரலில். அவன் குரலில் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் முதல் முறை அவன் கண்ணில் தனக்கான காதலை கண்டாள். இருவரின்  முகமும் வெகு அருகில் இருக்க இருவரின்  மன்னவனின் மூச்சுக்காற்று பெண்ணவளின் மூச்சுக்காற்றுடன் இணைந்து வெளிவந்தது.

அவன் கண்களில் தனக்கான காதலை தேடியவள் அறியவில்லை அவனை போலவே அவளும் அவனை அளவு கடந்து நேசிக்கிறாள் என்று. இருவரின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் இணைந்து காதலை பரிமாற ரேயனோ ஒரு படி மேல் சென்று அவள் இடையை பற்றி தன்னோடு இறுக்கினான். இளஞ்சிவப்பு நிற புடவையின் இடையே பளீரென்று தென்பட்ட வெற்றிடையில் ஆணவனின் கரங்கள் அழுத்தத்தை கூட்ட அவள் கண்களோ மெல்ல தாழ்ந்தது.

ஒரு கரம் அவள் வெற்றிடையை தீண்டி சிவக்கவைக்க மறுகரமோ அவள் கன்னத்தை ஏந்தி இருந்தது. கண்களை மூடிக்கொண்டு அழகு பதுமையென தன்னருகே அமர்ந்திருந்தவளை பார்த்தவனின் எண்ணம் தறிகெட்டோட அவள் நெற்றியில் அழுத்தமாக தன் முதல் முத்திரையை பதித்தான்.

ஆருவோ கண்களை மூடிக்கொண்டு அவன் சட்டையை இறுக பற்றியிருக்க அவள் இதழ்களோ உணர்ச்சியின் பிடியில் துடித்துக்கொண்டிருந்தது. அவள் இதழை அழுத்தமாக வருடியவன் அவள் இதழின் மேல் தன் இதழ் பதிக்க நெருங்கும் வேளையில் கரடியாய் ரேயனின் கைபேசி அலற இருவரும் தன்னிலை பெற்று விலகி அமர்ந்தனர்.

ஆருவோ வெட்கத்தில் சிவந்திருக்க ரேயனின் முகத்திலோ அத்தனை மென்மை. முதல் முறை அவனைபார்க்கும் போதே அவளுள் தோன்றிய தடுமாற்றத்திற்கான காரணத்தை இன்று உணர்ந்துகொண்டாள் பெண்ணவள். அவனுக்காக அவள் பதறுவதும் அவளுக்காக அவன் இறங்கி வந்து மன்னிப்பு கேட்டதும் அவள் மனதில் படம்போல் ஓடியது. அவன் மீது அவளுக்கிருந்து வெறும் ஈர்ப்பு என்று அவள் நினைத்திருக்க அது ஈர்ப்பு மட்டுமல்ல அதையும் தாண்டிய மெல்லிய உணர்வு என்பதை புரிந்துக்கொண்டாள் அவள்.

Advertisement