Advertisement

அத்தியாயம் 09

வீட்டிற்கு விரைந்த சரவணன், அரை மயக்க நிலையில் கிடக்கும் சாரதாவையும் உடன் அன்னையையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான்.

மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருக்க, கதிர்வேலுக்கு அழைத்து தகவல் தெரிவித்தான்.

மனைவியின் உடல்நிலையை விசாரித்த கதிர்வேலோ நான் தற்போது ஊரில் இல்லை, விரைந்து வருகிறேன், அது வரையிலும் கவனித்துக் கொள்ளுமாறு கூறினார்.

சரவணனிற்கு மனது சமாதானம் அடையவே இல்லை. குமுறிய உள்ளத்தோடு ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

அருகில் வந்த ராசத்தியை நிமிர்ந்து நோக்கியவன், “அக்கா இப்போ எப்படி இருக்காம்மா?” என்றான் கவலையாக.

பரவாயில்லைடா, பிபி அதிகமாகி இருக்கு! ஏற்கனவே சாப்பிடாம இருந்ததுன்னு எல்லாம் சேர்ந்து மயக்கமாகிட்டான்னு சொல்றாங்க, இப்போ ட்ரீட்மெண்ட் கொடுத்து இருக்காங்க, கண் முழிக்கவும் போய் பார்க்கலாமாம்!” கலக்கமும் கவலையுமாக மொழிந்தார்.

ஏற்கனவே கதிர்வேல் மேல் கோபம் கன்று கொண்டிருக்க, “என்னம்மா செய்ற? வீட்டுல தானே நீயும் இருக்க? அவளைச் சரியா கவனிச்சுக்க முடியலையா?” சுள்ளெனக் கேட்டான்.

ராசாத்திக்கு மூக்கு விடைக்க, கோபம் வந்த போதும், கண்களில் கண்ணீரும் தேங்கித் ததும்ப, “சாப்பாடு கொடுத்தா வாங்கி வைச்சுகிட்டு சாப்பிட மாட்டேங்கிறாள், நானா கொஞ்சம் ஊட்டி விட்டாத்தான். எப்போ பார்த்தாலும் சோர்ந்து படுத்தே கிடக்குறா, என்னை பிரச்சனைன்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறா, நீயும் பார்க்கிற தானே சரவணா? எங்கிருந்து வந்தது இவளுக்கு இவ்வளவு பிடிவாதமும் அமைதியும்னு தெரியலை!என்ன தான் இவ மனசுல இருக்கோ தெரியலை?” ஆற்றாமையில் ஆரம்பித்துப் புலம்பலில் முடித்தார்.

எல்லாம் அறிந்த இவனே தன்னைக் குற்றவாளி போலே கேள்வி கேட்கிறானே என்ற வேதனை ஒருபுறம் மகளை நினைத்த கவலை மறுபுறம்!

மேலும் தன் கணவரும் சாரதாவின் புகுந்த வீட்டினரும் கூட இவனைப் போல் தானே கேட்பார்கள் என்ற பயம் வர, விம்மி அழத் தொடங்கினார்.

சரிம்மா தெரியாம சொல்லிட்டேன், அழாதே! ஏன் சாரதா இப்படி பண்றா?” ஆறுதல் கூறியவன் குரலில் உடன் பிறந்தவளை நினைத்து வேதனை!

என்னன்னு தெரியலை! சொல்ல முடியாத வேதனையா இருக்கும், இல்லை சொல்லி பிரோஜனமில்லாத விஷயமா கூட இருக்கலாம். சொல்ல முடியாம தான் மனசுல வைச்சு இப்படி அவளை அவளே வருத்தி, உருக்கிறாளோ என்னவோ?” விம்மியபடியே புலம்பினார்.

மனம் தாளாது அன்னையை சாமாதானம் செய்த சரவணன், சாராதவை காண உள்ளே அழைத்துச் சென்றான்.

சரவணன் நலம் விசாரிக்க, “ஏன்டி இப்படி உடம்பைக் கெடுத்துக்கிற? உன் வீட்டுக்காரரோ உங்க வீட்டு ஆளுங்களோ என்னைத் தானே கேள்வி கேட்பாங்க? அதை விடு, வயித்துல இருக்கிற குழந்தையை பத்தி கொஞ்சமும் நினைக்க மாட்டியா?” சத்தமிட்டபடியே புலம்பினார் ராசாத்தி.

எதுவும் பிரச்சனையா? சொல்லு சாரதா?” தன்மையாகக் கேட்டான் தமையன்.

சாரதா என்ற அழைப்பே அவனுள் பொங்கிக் கிடக்கும் கோபத்தை அவளுக்குக் காட்டிக்கொடுத்தது. இருந்த போதும், பிரச்சனை எதுவுமில்லை என மழுப்பிச் சமாளித்தவள், அன்னையின் பக்கமாகத் திரும்பிக் கொண்டாள்.

பக்கவாட்டு மேசையில் இருக்கும் அவள் அலைபேசியைச் சத்தமின்றி எடுத்து தனது பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டவன், “நான் போய் ஜூஸ் ஏதாவது வாங்கிட்டு வரேன்” என்றபடி வெளியேறி இருந்தான்.

வெளியில் வந்த சரவணன் சாரதாவின் அலைபேசியைப் பரிசோதிக்க, நேற்றிலிருந்து இன்று வரை பேசிய நான்கு அழைப்புகளுமே கதிர்வேல் மற்றும் காவ்யாவிடம் இருந்து தான். வேறு அழைப்புகள் ஏதுமில்லை.

ஒருவேளை அவர்கள் குடும்பப்பிரச்சனையாக இருக்கும் என்பது புரிய, தன்னால் முடிந்த காரியம் எதுவாக இருந்தாலும் செய்யத் தயார்.

அக்காவிற்காக ஏற்கனவே கதிர்வேல் மாமாவிடம் பேசிப் பார்த்துவிட்டான், அவர் சிறிதும் பிடிகொடுக்கவில்லை. இனி இந்த காவ்யாவிடம் பேசிப்பார்ப்பது என முடிவு செய்து கொண்டான்.

பழச்சாறும் கொஞ்சம் பழங்களும் வாங்கிக் கொண்டு உள்ளே வந்தவன், அன்னையிடம் கொடுத்துவிட்டு, சாரதாவின் அலைபேசியையும் அங்கே வைத்துவிட்டான்.

தந்தை ரத்தின பாண்டியனிடம் இருந்து இவனுக்கு அழைப்பு வர, பேசியபடியே அமர்ந்து கொண்டான்.

லலிதாவின் வீட்டில் வாழைகளை வெட்ட ஆட்கள் வந்திருந்தனர். சரவணன் இருந்ததையும் அவசரமாக வெளியில் கிளம்பியதையும் லலிதா கவனிக்கவில்லை.

ஒவ்வொரு வாழையாக வெட்டி, லோட் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவ்வப்போது பின் வாசல் வழியாக வரும் லலிதா வேலை எவ்வளவு தூரம் முடிந்திருக்கிறது எனக் கண்காணித்து விட்டுச் சென்றாள்.

மொத்தம் ஐந்து பேர் வேலை செய்ய, அதில் ஒருவன் பார்வை அடிக்கடி லலிதாவின் மீது பாய்ந்தது.

வந்ததில் இருந்தே அவன் பார்வை சரியில்லை. ஏதோ ஒரு அசௌகரியத்தை உணர்ந்தாள் லலிதா.

அவனும் தண்ணீர் வேண்டும், தேநீர் வேண்டுமென்று பின் வாசல் வரையிலும் இரண்டு முறை வந்து நிற்க, லலிதாவிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. முதலிலே ஒரு முறைப்போடு எட்ட நிறுத்தினாள்.

என்ன பாப்பா நீ மட்டும் தான் வீட்டுல இருக்கியா?” என்ற வழிசல் பேச்சு ஒருமாதிரி ஆத்திரத்தைக் கிளப்ப, அவனோ விடாது, “இராத்திரிக்கும் நீ மட்டும் தனியா தானா?” விசாரிப்பது போலே அத்துமீறிப் பேசினான்.

லலிதாவிற்கு தாங்கமுடியவில்லை. பார்வை இப்போது சரவணனின் சைட் பக்கம் சுழல விட்டாள். எங்கும் அவனில்லை, அவனின் வண்டியையும் காணவில்லை.

உள்ளுக்குள் ஒரு பயம் படர, அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஒரு காரமான முறைப்போடு சூடான தேநீரை அவனிடம் நீட்டுவது போலே அவன் மீது கொட்டியவள், வார்த்தையின்றி விரல் நீட்டி எச்சரித்தாள்.

அவனுக்கு சிறு பெண்ணிடம் பட்ட அவமானமும் சூடமும் ஆத்திரத்தைக் கிளப்ப, கண்கள் சிவக்க, வன்மமாக பார்வை சீறியது.

லலிதாவிற்கு அவன் பார்வை, இருக்கும் பயத்தை மேலும் அதிகப்படுத்தியது. என்ன செய்து விடுவான் இங்கும், அங்கு சரவணனின் வேலையிடத்திலும் தெரிந்தவர்கள் ஊர்க்காரர்கள் இருக்கார்களே எனத் தன்னையே தைரியப்படுத்திக்கொண்டு விறுவிறுவென உள்ளே சென்றவள் கதவை அடைத்துக் கொண்டாள்.

லலிதாவிற்கு நிலை கொள்ளவில்லை. ஒரு வித பய உணர்விலும் தவிப்பிலும் அனத்தியவள், தங்கராசுவிற்கு அழைத்தாள்.

இப்போதும் அழைப்புகள் ஏற்கப்படவில்லை. என்றுமில்லாது இன்று தங்கராசு பொறுப்பின்மையை நினைத்து நொந்து கொண்டாள் லலிதா.

அதன் பின் அவள் வெளியில் வரவில்லை. மாலை நான்கு மணி போலே வேலை முடிந்தது.

வெளியில் இருந்து ஒருவர் குரல் கொடுத்த பின்பே, லலிதா வெளியில் வந்தாள்.

அவனோடு மற்றொருவர் என இருவர் வாசலில் நின்றிருந்தனர். வாழை மொத்தமும் வெட்டப்பட்டு, சீர் கெட்டுக் கிடந்தது இவள் தோப்பு.

பாப்பா வேலை முடிச்சது” மற்றொருவர் அறிவிக்க, “இப்போ நாங்க லோட் ஏத்திட்டுப்போறோம். நான் இந்த வழியா தான் வீட்டுக்குப் போவோம். வரும் போது முதலாளி கிட்ட காசு வாங்கிட்டு வந்து கொடுத்துட்டுப் போறேன்” என்றான் அவன் நக்கல் சிரிப்போடு, கண்களில் பழிவாங்கும் கனல் மின்ன.

இல்லை ஒன்னும் தேவையில்லை. எங்க தங்கராசு மாமா வந்து கடையில வாங்கிப்பார். நீங்க கிளம்புங்க!” பட்டெனக் கூறி விட்டு லலிதா மீண்டும் உள்ளே திரும்ப, “நான் வருவேன்” லலிதாவை நோக்கிக் கூறி விட்டுச் சென்றான் அவன்.

இவர்கள் அனைவரும் கிளம்பி இருக்க, அங்கே சரவணனின் சைட்டிலும் வேலையாட்கள் கிளம்பிக் கொண்டிருக்க, லலிதா இருந்த பயத்தில் இரண்டு பக்க கதவையும் மூடி தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.

இதில் இறுதி நேரமாகச் சரவணன் வந்ததை இவள் அறியவில்லை.

அக்காவையும் அன்னையையும் மருத்துவமனையில் இருந்து கிளம்ப, அழைத்து வந்து வீட்டில் விட்டான். வேலையாள் ஒரு கோப்பை தேநீரை நீட்ட, மறுத்தவன் நில்லாது மீண்டும் சைட்க்கு ஓடி வந்திருந்தான்.

அப்போது தான் கிளம்ப இருந்த முகில் சாவியைக் கொடுத்துவிட்டு, முடிந்த வரையிலான வேலைகளை பற்றியும் அறிவித்துவிட்டுக் கிளம்பி விட்டான்.

சரவணன் அத்தனையையும் சில நிமிடங்களிலே சரி பார்த்துவிட்டுக் கிளம்பினான். சாவியைக் கொடுக்கவென லலிதாவின் வீட்டிற்கு வரக் கதவுகள் மூடியிருந்தது.

என்னவோ அவள் முகம் பார்க்காமல் வீட்டுக்குச் செல்லவே இயலவில்லை.

இன்று அக்காவின் செயல், அதிகப்படியான அலைச்சல் அத்தனையும் சேர்ந்து இவனை வதைத்திருந்தது.

லலிதா எங்கும் வெளியில் செல்லவில்லை, முகில் தான் சாவியைக் கொடுத்து விடும்படி சொல்லிவிட்டுச் சென்றிருந்தானே? உள்ளே தான் இருக்கிறாள் பின் ஏன் இத்தனை விரைவில் கதவை மூடி விட்டாள்? குழப்பமாக ஒரு நொடி நின்றான்.

எதுவும் பிரச்சனையோ? இல்லை ஏதேனும் விபரீதமாக முடிவு.. ச்சே.. ச்சே இல்லையில்லை அப்படியெல்லாம் இருக்காது ஒரு துளி நம்பிக்கை இருந்த போதும், மனம் அதிகம் பதறியது.

சரவணனின் புத்தி பயத்தில் என்னென்னவோ யோசித்தது.

கதவை ஓங்கித் தட்டினான். லலிதாவிற்கு உடல் தன்னாலே உதறல் எடுக்க, சொன்னபடி அந்தத் தடியன் தான் வந்து விட்டானோ என்ற பயத்தில் நடுங்கினாள்.

அவள் கட்டுப்பாட்டையும் மீறி கண் இரண்டிலும் கண்ணீர் முத்துச்சரமாகக் கோர்த்து வழிய, இப்படியொரு நிலை தனக்கு ஏன் நொந்து அழுதாள்.

சில நிமிடங்கள் கடந்தும் அப்படியே சென்றுவிட இயலாது, “லலிதா லலிதா..” என ஓங்கிக் குரல் கொடுத்தவாறு சற்று பலமாகக் கதவைத் தட்டினான் சரவணன்.

கதவு மூடிவிட்டால் எப்போதும் சரவணன் தட்டி அழைத்ததே இல்லை, அப்படியே திரும்பி விடுவான், ஆனால் இன்று அவனால் இயலவில்லை.

நிசப்தமான வீட்டிற்குள் சரவணனின் குரல் கேட்க, ஆசுவாசப்பட்டாள் லலிதா.

இவன் பதட்டத்தை அதிகப்படுத்திய சில நொடிகளுக்குப் பின்னரே கதவு திறக்கப்பட்டது. கதவின் பின் புறம் மறைந்து நின்றபடி, இவன் குரல் தெரிந்தும் இவன் தானா என உறுதி செய்துகொள்ள எட்டிப் பார்த்தாள்.

என்னாச்சு?” விசாரிக்க, திடுக்கென கேட்டதில், எதுவும் கூற இயலாது வாயடைத்து நின்றாள்.

என்னவென்று சொல்வாள்? சரவணனிற்குச் சுள்ளென கோபம் வந்தது. இத்தனை நேரம் தவித்து நின்ற தவிப்பை இவள் ஒரு வார்த்தை தணிக்கும் என்பதை அறியவில்லை.

என்ன பிரச்சனைன்னு சொன்னா தானே தெரியும்? நான் என்னன்னு நினைக்கட்டும்?” காய்ந்தான்.

அதிர்ந்த குரலுக்கே மேலும் நடுங்கியவளுக்குக் கண்ணெல்லாம் நீர்க் கட்டி நின்றது. இவள் மௌனம் காண காண அவன் முகம் இன்னும் கடினமானது.

மெல்ல இதழ் பிரித்தவள், “பயமா இருக்கு” என்றாள் ஒற்றை வார்த்தையாக.

சரவணனின் மனம் சட்டென ஒடிந்து போனது. முற்றிலுமாக தணிந்து போனான். சொல்ல முடியாத பாரம் நெஞ்சில் அழுத்தியது. எத்தனையாவது முறை என்று தெரியாது, மீண்டும் நினைத்தான். இந்த வயதில் இந்தப் பெண்ணிற்கு ஏன் தான் இத்தனை சோதனையோ!

தங்கராசு எங்க? இன்னைக்கும் வீட்டுக்கு வரலையா?” என்க, ஆமென்னும் தலையசைப்பு மட்டும் தான் இவளிடம் பதில்.

தங்கராசுவின் மீது கொலை வெறியே வந்தது. எதிரில் இருந்தால் இந்த நேரம் என்ன செய்திருப்பானோ? அன்று மட்டும் வாய் கிழியப் பேசினானே? எங்கள் வீட்டுப் பெண் என்றானே, இது தான் அவன் கவனித்துக் கொள்ளும் லட்சணமா?

அவள் முகம் பார்க்கவே என்னவோ குடைந்தது. ஏதோ சரியில்லை என உள்ளுணர்வு அழுத்திச் சொன்னது.

வெகு நாட்களுக்குப் பின் இவள் அழுது சிவந்த முகம் கண்டவன், “ஏன்..?” என்றான்.

இத்தனை நாளும் இதே வீட்டில் இருந்தால் தானே, இன்று மட்டும் என்ன இத்தனை பயம்?

என்னவோ இவனிடம் மட்டும் மறைக்கத் தோன்றவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை அது எப்போது தோன்றியது என்று தெரியாத நம்பிக்கை.

காலையில் நிகழ்ந்த அனைத்தையும் சொன்னாள்.

கேட்ட சரவணனின் திண்ணிய தோள்களும் புஜங்களும் நரம்பும் புடைத்தது, சீற்றம் பொங்கியது. யாரடா நீ? பற்களைக் கடித்தவன் அவனை சும்மா விடுவதாக இல்லை.

லலிதாவோ பயத்தில் வெளிறிய முகமாக நிற்க, “அப்படியெல்லாம் யாரும் வர முடியாது. நீ பயப்படாத உள்ள போ” மென்குரலில் சாமரம் வீசுவது போல் ஆறுதல் கூறினான்.

இவனால் என்ன இயலும்? இவன் என்ன செய்வான்? என்ற யோசனையே இல்லை இவன் வார்த்தை அப்படி ஒரு ஆறுதலைக் கொடுத்திருந்தது.

மீண்டும் நம்பினாள். மீண்டும் திடமாக உள்ளே திரும்ப, “கதவை தாள் போட்டுக்கோ, பயம் தேவையில்லை” என்றான் ஒருவித இரும்புக் குரலில் உறுதியாக.

உள் சென்று படுத்துக் கொண்ட லலிதாவிற்குப் பாதி இரவு உறக்கமின்றி இப்படியே கழிந்தது. எப்போது வந்தான்? எப்படி தான் தவிக்கும் நொடிகளில் எல்லாம் சரியாக வந்து விடுகிறான்? சரவணனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிப் போனவளுக்கு, முன்பிருந்த பயம் தொலைந்து போனதே தெரியவில்லை.

பின் பாதி இரவிலே மெல்லக் கண் அயர்ந்து போனாள் லலிதா.

Advertisement