Advertisement

அத்தியாயம் 07

லலிதாவின் வீட்டுவாசலில் பந்தல் வெய்து இருக்க, ஊரே கூடியிருந்தது.

அவள் அன்னை வழிச் சொந்தங்கள், பாட்டியின் உடன் பிறப்புகள், அவர்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகள் வரை ஊரில் இருந்து வந்த சொந்தங்கள் அனைத்தும் நிறைந்திருந்தனர்.

ஒரே அழுகையும் சலசலப்பும் மட்டுமே!

சரவணன் திண்ணையில் அமர்ந்திருந்தான். இரண்டாம் நாளாக இன்னும் அவன் வீட்டிற்குச் செல்லவில்லை. ரத்தின பாண்டியனும் வந்து மாலை சாத்திவிட்டு ஆண்கள், பெரிய மனிதர்களோடு கூட்டத்தில் நின்றிருந்தார்.

சரவணன் அமர்ந்திருக்கும் திண்ணைக்கு எதிரே உள்ளே கூடத்துத் தூணில் சாய்ந்தபடி, சருகாக கிடந்தாள் லலிதா.

ஓலமிட்டு, கதறி அழவில்லை என்றாலும் நேற்றிலிருந்து கண்ணீர் மட்டும் வற்றாத கங்கையாக வந்து கொண்டே இருக்கிறது.

சரவணன் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து சரியாக, அவள் பார்வையில் விழ, பார்க்க பார்க்க அவனுக்கு நெஞ்சம் கனத்தது.

இந்த சில நாட்களாக இவன் மீது பாசம் காட்டிய, பாட்டி தான் இருந்தாலும் அவர் இழப்பு தரும் வேதனையை விடவும், அவர் இல்லாமல் இந்தச் சிறு பெண் இனி என்ன செய்வாள்? என்னும் கவலை தான் அதிகம் நெஞ்சைக் குடைந்தது.

அதே நேரம் வாசலுக்கும் வெளியே சாலையில் ஒரே கலவரமான சத்தம் கேட்க, சட்டென எழுந்து சென்றான்.

தங்கராசு தான் போதையில் ரகளை செய்து கொண்டிருந்தான். பார்த்த சரவணனிற்குச் சினம் உச்சம் தொட்டு இருந்தது.

மருத்துவமனையிலும் இதே போல் ஒரே ரகளை. சொர்ணம் இறந்துவிட்டதாகவும், கட்டணம் முழுவதும் செலுத்திய பின், உடலை அவர்கள் ஊருக்கு எடுத்துச் செல்லும் படியும் கூறினர்.

கொடுத்த காசிற்கே அன்னையின் உயிரைக் காப்பாற்றவில்லை, என்ன சிகிச்சை செய்தீர்கள்? இனி மேலும் ஏன் பணம் செலுத்த வேண்டும் என நியாயம் கேட்டுக்கொண்டு நிர்வாகத்திடம் ஒரே கூச்சலும் ரகளையும் செய்து கொண்டிருந்தான்.

பாட்டியை இழந்த வேதனையில் இருந்த லலிதாவிற்கு தங்கராசுவை எப்படி அமைதிப்படுத்துவதென்றே தெரியவில்லை, திணறி நின்றாள்.

பார்த்துக் கொண்டிருந்த சரவணனிற்கு பற்றிக்கொண்டு வந்தது. நல்ல வேளையாக லலிதா தன்னை இருக்குமாறு வேண்டினாள் என்றே நினைத்தான்.

மருத்துவ நிர்வாகத்திடம் பேசி கட்ட வேண்டிய தொகையை கட்டி, உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்து, ஊருக்குத் தகவல் தெரிவித்து, தங்கராசுவையும் அடக்கி இழுத்துக் கொண்டு வந்தான் சரவணன்.

இவன் இல்லையென்றால் இந்தநிலையில் லலிதா என்ன செய்திருப்பாள் என்றே தெரியாது.

என்ன மனிதன் இவன்? அருவருப்பாக எண்ணினான். பெற்ற தாயின் இறுதிச் சடங்கில் தன் கடமை செய்வதை விடுத்து இப்படி ரகளை செய்து கொண்டிருக்கிறானே? ஆத்திரமாக வந்தது சரவணனிற்கு.

சொர்ணத்தின் இறுதிச் சடங்கிற்காகச் சீட்டுக் கட்டியிருக்கும் பெண்மணியிடம் இருந்து பணம் வாங்கிக் கொள்ளும்படி லலிதா கூறியிருந்தாள்.

பாதியில் கேட்டதால் அவர் சற்று பிடித்தம் வைத்துக்கொண்டு மீதியைக் கொடுத்து இருக்க, அதற்கும் ஒரு பிரச்சனை செய்து கொண்டிருந்தான் தங்கராசு.

விஷயம் இதுவென விசாரித்துவிட்டு உள்ளே வந்த சரவணன், “மீதியை நான் வசூலுச்சு தாரேன். இப்போ உள்ள போய் நீ ஆக வேண்டிய காரியத்தைப் பார் தங்கராசு” என்றான் சத்தமாக.

ஆனால் அந்த நிலையில்லாதவனோ, “நீயா? நீ எப்படி வசூல் செய்வேன்னு எனக்குத் தெரியாதா?” கோணல் சிரிப்போடு இளக்காரமாகக் கேட்டபடி, சரவணனை நெருங்கினான்.

தங்கராசு கையில் பெரிதாகப் பணம் தங்குவதே இல்லை, அன்றைய உழைப்பு, அன்றைய செலவு என்றே பொழுதை கழிப்பவன். பணத்தேவை என வரும் போது இப்படித் தான் சமாளிக்க இயலாது, பிறரிடம் மல்லுக்கு நிற்பான்.

சரவணனிற்கு இந்த நிலைமையில் இவனோடு சண்டையிடுவதில் சுத்தமாக விருப்பமில்லை. இவன் பொறுமை காக்க, அதற்குள்ளாக சில உறவுகள் வந்து தங்கராசுவை இழுத்துச் சென்றிருந்தனர்.

உறவுகளின் வழிகாட்டுதல்படி, பெற்றவளுக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்து முடிக்க, சொர்ணத்தின் இறுதி யாத்திரை தொடங்கியது.

ஒரு பாவம் செய்யாத ரோஜா இதழ்கள் உதிர்ந்து உயிரற்றுக் கிடக்க, அதன் மீது அனைவரின் கால் தடமும் பதிந்து, கடந்து போனது.

என்னவோ இதைக் காண, காரணமின்றி லலிதாவின் நிலையோடு தான் ஒப்பிட்டது பரிதவிக்கும் சரவணனின் உள்ளம்.

வந்த ஊர் ஜனமெல்லாம் கிளம்பி இருக்க, மிச்சம் சொச்சமாய் சில உறவுகள் மட்டுமே இருந்தனர்.

சரவணன் இறுதி வரைக்கும் அங்கே இருந்தான். பின் வீட்டிற்குச் சென்று குளிக்க, இரண்டு நாட்களாகத் துளியும் இல்லாத உறக்கம் அவனை இழுக்க, அசதியில் அப்படியே படுக்கையில் விழுந்தான்.

அசதி தீர உறங்கினாலும் நிம்மதியான நித்திரை என்பது ஏனோ கிட்டவில்லை.

மாலை நேரமாக எழுந்து மீண்டும் சைட்டில் வந்து அமர்ந்து கொண்டான். இத்தனைக்கும் இன்று இங்கே வேலை நாளும் கிடையாது. அவனுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவே முடியவில்லை, ஓடோடி வந்து விட்டான்.

ஒரு வாரம் ஓடியிருந்தது. இந்த ஒரு வாரமாகச் சரவணன் இந்த சைட் தாண்டி எங்கும் செல்லவில்லை.

இன்றும் வந்து சைட்டில் இருக்கும் தன் அறையில் அமர்ந்து கொண்டான்.

கண் மூடினாலே லலிதாவின் கண்ணீர் நிறைந்த முகம் காட்சியாக, இதயம் கனத்தது.

லலிதாவுடன் இவனிற்கு எந்த வித நட்பும் உறவும் இல்லை தான். இருந்தாலும் ஏனோ இதயம் அவளை நினைத்தே தவித்தது.

நினைக்காதே என முயன்று மனதைத் திருப்பினாலும் மறுநொடி எல்லாம் அவளைக் குறித்த கவலையே வந்து ஆக்கிரமித்து மனதை அரிக்கும்.

ஏதோ பாரம் ஏறிய கனம், பெரிதும் மூச்சுக்குத் திண்டாடும் உணர்வு!

அறைக்குள் தான் இப்படித் தோன்றுகிறது போலே என நினைத்தவன், வெளியில் வந்து வேப்பமரத்து நிழலில் அமர்ந்து கொண்டான்.

லலிதாவின் வீட்டில் அன்று ஏழாம் நாள் விசேஷம் வைத்திருந்தனர். அவர்கள் நெருங்கிய உறவுகள் மட்டுமே இருக்க, வீட்டிலே வைத்து முடித்திருந்தனர்.

அனைவரும் கிளம்ப, வெளியே தங்கராசுவிடம் வந்ததும், “அடேய்! லலிதாவைக் கல்யாணம் முடிச்சிக்கோ! முப்பது நாள் கழியவும் ஒரு நல்ல நாள் பார்த்துட்டு வாரேன்” என தாய்மாமா சொல்லிச் சென்றார்.

போனவா போயிட்டா, ஆனால் உங்க இரண்டு பேருக்கும் ஒரு நல்லது செய்யாம போயிட்டாளே! அவ பொறுப்புல நானே செய்றேன்! லலிதாவைக் கல்யாணம் கட்டிக்கோ.. அவளுக்கு ஆதரவு இல்லை, நாம தானே நல்லது செய்யணும், நாம தானே அவளுக்கு உறவு, ஆதரவு” நெஞ்சில் அடித்து அழுதபடி கூறிச் சென்றாள் தங்கராசுவின் சித்தி.

மூச்சுக்காற்றிற்காக வந்த சரவணனிற்கு மொத்தமாக மூச்சே நின்ற விடும் போல் இருந்தது இந்தச் சேதியை செவியில் வாங்கியதும்.

தங்கராசு கல்லாய் நிற்க, “ஆத்தா இல்லை, இரண்டு பேருமா இனி ஒரே வீட்டுல தான் இருப்பீங்க, அது வேற பேச்சா ஆகுறதுக்குள்ள அவளை கட்டிக்கோங்க தம்பி! லலிதா உங்களுக்கு அக்கா மக தானே கட்டுகிற முறை தானா?” ஒருத்தி புத்திமதி கூறுவதாக எடுத்துக் கொடுக்க, “ஆமாம் ஆமாம் உங்களுக்குத்தான் கல்யாணம் கட்டிக்கிற முதல் உரிமையே!” பின்பாட்டுப் பாடினாள் இன்னொருத்தி.

தங்கராசு பேச வருவதற்குள் எல்லாம் முந்திக் கொண்ட பெருசு “ஆமாம், உனக்கும் வயசாகிட்டுச்சு, அவளை விட்டா யார் உனக்கு பொண்ணு கொடுப்பா?” இளக்காரமாகக் கேட்டார்.

இவனை விடுங்க தாத்தா! லலிதாவுக்கு எங்கே மாப்பிள்ளை தேட? நகை நட்டு, சீர், முறை செய்ய இங்க என்ன இருக்கு?” அத்தை மகள் அதை விடவும் மட்டம் தட்ட, தங்கராசுவிற்கு பொறுக்கவில்லை.

ஐந்து மணி பஸ் வர நேரம், சீக்கிரம் கிளம்புங்க” முகத்தில் அடித்தார் போன்று கூறிவிட, வெடுக்கெனச் சிலுப்பிக் கொண்டு சென்றது அந்தக் கூட்டம்.

இத்தனை நாள் வீடு தோப்புன்னு அனுபவிச்சாங்களே இப்போ இந்த பிள்ளையை பார்த்துக்க மட்டும் கசக்குமோ?” ஒரு பெண் குமுற, “என்ன மதினி இப்படிப் பேசுற?” மற்றொரு பெண் வாயைக் கிளறினாள்.

பின்ன என்னடி அந்த கிழவி இருந்த வரைக்கும் நம்மளை கிட்ட அண்ட விட்டிச்சா? அது மகள் வீடு, அது பேத்தின்னு உரிமை கொண்டாடுச்சே!” மேலும் புலம்பியவாறே, சரவணனின் வேலை இடத்தையும் கடந்து சென்றனர்.

அத்தனையும் கேட்டிருந்த சரவணனிற்கு, ‘ச்சே! என்ன மனிதர்கள் இவர்கள் இத்தனை சுயநலமா? கள்ளம் கபடமற்ற அவள் முகம் பார்த்துமா இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள்?’ வெறுப்பாகத் தோன்றியது.

சரவணனிற்கு மனம் கொதியாகக் கொதித்தது. எப்படி இப்படிப் பேசுகிறார்கள்? லலிதாவின் வயது என்ன? தங்கராசுவின் வயது என்ன? ஆத்திரமாக வந்தது சரவணனிற்கு.

அவர்கள் வீட்டிலும் மாப்பிள்ளை இருந்த போதும், லலிதாவின் பொறுப்பை யாரும் ஏற்கத் தயாராக இல்லை. தங்கராசுவின் தலையிலே கட்டிவிட நினைக்கின்றனர் என்பது அவர்கள் போலி பாசத்திலும் அக்கறையிலும் சக்கரை தடவிய வார்த்தைகளிலும் நன்கு புரிந்தது.

அவர்கள் தான் பேசுகிறார்கள் என்றால் இந்த தடிமாடு தங்கராசுவிற்கு புத்தி எங்கே போனது? குத்துக்கல் போல் அமைதியாக நிற்கிறான் பார்!’ நேராக தங்கராசுவை பார்த்து முறைத்தபடி அமர்ந்திருந்த சரவணன் மனதில் திட்டித்தீர்த்தான்.

அந்த அறிவு கெட்டவர்களின் அறிவுரையைக் கேட்டு, தங்கராசு ஏதேனும் விபரீதமாகத் திருமண ஏற்பாடு செய்துவிடுவானோ? என்றும் ஒரு நொடி பதைபதைப்பு வந்தது.

இது வரையிலும் அவர்கள் வீடு, அவர்கள் பிரச்சனை, அவர்கள் உறவுகள், என்ன தான் உதவி செய்த போதும் தான் அந்நியன் தானே அந்த எண்ணப் போக்கிலே விலகி இருந்தான். இதுவே லலிதாவிற்கு ஒரு அநியாயம் நடக்கிறது என்றால் கைக்கட்டி வேடிக்கை பார்க்காது களத்தில் இறங்கி விடுவது என முடிவு எடுத்துக்கொண்டு மனதை அமைதிப்படுத்த முயன்றான்.

ஆனால் அவன் அறிவோ, லலிதாவின் மனமும் மனநிலையும் அறியாமல் நீ என்ன முடிவு எடுத்து என்ன பயன் என்றே இடித்துரைக்க, அப்படியே யோசனையில் அமர்ந்துவிட்டான்.

சரவணனின் வேலை, தற்போதும் பாதி முடிந்திருந்தது. குடிநீர் சுத்திகரிப்பு தொட்டிகளுக்கான கட்டுமானம் தற்போது நிகழ்ந்து கொண்டிருந்தது.

லலிதாவின் உறவுகள் வீட்டில் இருந்த போதே இது மாதிரியான அரசல் புரசலான தகவல்களும் நேரடி புத்திமதி எனப் புத்தி கெட்ட அறிவுரைகளையும் இவளிடமும் அள்ளி வழங்கி இருந்தனர்.

விட்டால் இவர்களே தனக்கும் தங்கராசு மாமாவிற்கும் திருமணம் செய்து வைத்துவிட்டுத் தான் கிளம்புவார்கள் போலிருக்கே எனப் பயந்து போனாள். உறவுகள் அனைவருமே அத்தனை தீவிரம் காட்டினர்.

எப்போதுடா கிளம்புவார்கள் என்று எண்ணிய நிலையில் அவர்கள் கிளம்பிவிட, பாட்டியை இழந்த துக்கத்தைத் தாண்டி தன்னிரக்கத்தில் அமிழ்ந்து விட்டாள்.

தங்கராசுவை பிடிக்கும், தாய்மாமன் என்னும் பாசம் அதிகம் உண்டு, இறுதியாக மிச்ச சொச்சமாக தனக்கும் ஒரே உறவு அவன் மட்டும் தான், அதற்காகத் திருமணமா? நினைத்தாலே வேம்பை விடவும் கொடுமையாக கசந்தது.

நினைத்தும் பார்க்க முடியவில்லை, ஒருவாறு மனமும் உடம்பும் கூசிப் போனது.

சிறுவயதில் இருந்தே தன்னை பிள்ளை போலே தூக்கி வளர்த்தவன், அவன் எப்படியிருந்தாலும் உறவு முறை எப்படி இருந்தாலும் மனதளவில் தாயின் ஸ்தானத்திற்கு நிகரானவன் தான் தாய்மாமன் தங்கராசு.

இப்படியான அறிவுரையில் இவர்களுக்கு என்ன இலாபம்? யோசித்து யோசித்துத் தெளிந்தாள்.

இவர்கள் குணம் அறிந்து தான் பாட்டி இவர்களைத் தள்ளி வைத்திருந்தார் போலும். இது வரையிலும் வராத உறவுகள் இனியும் தேவையில்லை என்னும் பிடிவாதத்தில் இருந்து கொண்டாள் லலிதா.

இவர்கள் யார் என் வாழ்விற்கான முடிவுகளை எடுப்பதிற்கு? யாரைச் சார்ந்தும் தான் இல்லை. யாரும் தேவையில்லை.  ஒரு மாதிரி கோபம், வெறி, வெறுப்பு சூழ்ந்தது.

பாட்டியில்லாத இந்த தனிமை, கசந்த உறவுகள் அனைவருமே வாழ்க்கையில் எதுவும் நிரந்தமில்லை என்ற பாடத்தையும் தனிமையிலும் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் தந்துவிட்டுச் சென்றிருந்தது.

இந்த சில நாட்களில் மனிதர்களின் வண்ணமயமான முகங்களைக் கண்டதில் கொஞ்சம் பக்குவமும் முதிர்ச்சி கொண்டிருந்தாள் லலிதா.

கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பின் எழுந்து வந்தவள் வாழைக்குத்  தண்ணீர் பாய்ச்சினாள். அவள் நிற்கும் இடத்தில் இருந்து சற்றே தொலைவில் முகிலோடு வேலை விஷியமாகப் பேசிக்கொண்டிருந்த சரவணன் கண்ணில் பட, ஒரு நொடி இமைக்காது பார்த்திருந்தாள்.

ரசனை என்றில்லை, இவனைக் குறித்த அலசல் தான் மனதில்.

அண்ணே! பக்கத்து வீட்டுப் பாப்பா உங்களையே பார்க்குதுண்ணே!” என முகில் மெல்லிய குரலில் கூவினான்.

வேலையில் கவனமாக இருந்த சரவணன், பாப்பா என்றதுமே யார் அந்தச் சிறுமி என்ற எண்ணத்திலே திரும்பிப் பார்க்க, அங்கே தொலைவில் லலிதா மட்டுமே தெரிந்தாள். வேறு பெண் வடிவமே அப்பகுதி எங்குமில்லை.

தன்னைப் பார்க்கிறாள் என்பதும் புரிய, ஒரு வித பரவச அலை பரவியது. முகம் மென்மையுற, மெல்லிய புன்னகையைத் தத்தெடுத்து இதழ்கள் விரிந்தன.

அண்ணே..” முகிலின் குரலுக்குத் திரும்பிய சரவணன் தீயாய் முறைக்க, “பெரியப்பா அதான் உங்கப்பா இதைப் பத்தி எங்கிட்ட விசாரிச்சார்..” என ஆரம்பித்தான்.

பதட்டமே இல்லாது, அறிந்தும் அறியாதது போலே, “எதைடா?” என்றபடி கையில் இருக்கும் வரைபடத்தில் பார்வையைப் பதித்துக் கொண்டான் சரவணன்.

இதோ, இதை தான். நீங்க இந்த சைட் தவிர வேற எங்கையும் போறதில்லை, என்னையே அனுப்புறீங்க, வீட்டுக்கும் சரியா போறதில்லை, சதா இங்கே கிடக்குறீங்களே என்ன காரணம்னு கேட்டார்” என்றவன் போட்டு வாங்கினான்.

நீ என்ன சொன்ன?” விசாரித்த சரவணன், “எதுவும் ஏடா கூடமா சொல்லி வைச்சே, தோலை உரிச்சிப்புடுவேன் பார்த்துக்கோ” என மிரட்டலாக எச்சரித்துவிட்டுச் சென்றான்.

அசராத முகில், “நீ சரியே இல்லை, அந்த சொர்ணம் பாட்டி ஆவி தான் உனக்குள்ள புகுந்துடுச்சோ என்னவோ? போ” புலம்பினான்.

வானிலை மாற்றத்தால் வரும் வசந்த காலத்தின் இனிமையைச் சரவணன் இப்போது ஒவ்வொரு நாளும் உணர்ந்து கொண்டிருந்தான்.

காரணம் இப்போதெல்லாம் அடிக்கடி லலிதாவின் பார்வை சரவணனை நோக்கி வருகிறது. எத்தனை தொலைவில் இருந்தாலும் எந்த வேலையாக இருந்தாலும் அவள் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு பார்வை தென்றலோடு கலந்த பூவாசம் போலே இவனைத் தழுவி விட்டுத்தான் செல்லும்.

இவன் வேலையாக இருந்த போதும் அவள் பார்க்கிறாள் என்றால் இவன் உள்ளுணர்வு தட்டிச் எழுப்பிச் சொல்லும், நிமிர்ந்து பார்க்காமலும் சரியாகக் கண்டு கொள்வான் சரவணன்.

சில நேரங்களில் காலையில் இவன் தாமதமாக வந்தால், அடிக்கடி அவள் வெளியில் வேலை இருப்பதைப் போல் வந்து தேடி விடுவாள்.

அவள் கண்களில் தேங்கிக் கிடக்கும் தவிப்பும் அலைப்புறுதலையும் கண்டுவிட்டு முகில் சரவணனிடம் கூறிக் கேலி செய்வான்!

சரவணனோ சந்தோஷம் தாங்க முடியாது, தரையில் கால் நிற்காது, பரவசத்தில் பறந்து கொண்டிருப்பான்.

சரவணனிற்கு அவளிடம் பேசும் ஆசை தான், ஆனால் வாய்ப்பை வடித்துக் கொண்டு எல்லாம் அலையவில்லை. பார்வையே பல்லாயிரம் சந்தோஷ மத்தாப்புகளைப் பற்ற வைக்க, அனுபவித்த களிப்பில் சுற்றிக் கொண்டிருந்தான்.

அதே நேரம் தங்கராசுவும் சதா, திண்ணையிலே கிடந்தான். இந்த ஐந்து நாட்களும் மாலையும் காலையும் முகில் தான் சென்று தங்கராசுவிடம் சாவி கொடுப்பதும் வாங்கி வருவதுமாக இருக்கிறான்.

Advertisement