Advertisement

அத்தியாயம் 06

அதுவரையிலும் பயம் பிடித்து ஆடிக்கொண்டிருக்க, முற்றிலும் நொறுங்கி இருந்தாள் லலிதா.

சரவணன் அருகே வர, ஆறுதல் வார்த்தையும் ஸ்பரிசமும் கூட இல்லாத போதும், தைரியமும் ஒன்று தானாக வந்து ஒட்டிக் கொண்டது போன்றிருந்தது.

விந்தையாக இருந்த போதும், அலசி ஆராயாமல் அனுபவித்தாள் லலிதா.

நீர் நிறைந்த விழிகள், காரிருளில் வைரமாக ஜொலிக்க, வார்த்தை வராது வாயடைத்த போதும், அந்தக் கண்களில் ததும்பிக் கிடக்கும் தவிப்பை மொழிபெயர்த்துப் படித்துக் கொண்ட சரவணன், “என்னாச்சு?” வினவினான்.

கண்ணெல்லாம் கண்ணீர், மேனி எங்கும் நடுக்கம், அதீத பயத்தில் இருந்தாள்.

“மாமா இன்னும் வீட்டுக்கு வரலை?” மெல்லிய குரலில் அப்போதைய அவள் தேவையைக் கூறினாள்.

தங்கராசுவைக் கூறவும் சரவணனிற்கு உள்ளுக்குள் என்னவோ எரிந்தது. கடுகடுவென எரிச்சல் மண்டி வர,  “அவன் என்னைக்கு வீட்டுக்கு வந்திருக்கான்? இன்னைக்கு வர? இப்போ என்ன அவன் தேவை?” சற்று இளக்காரமாகத்தான் வினவினான்.

லலிதாவிற்கு தாங்க முடியவில்லை. இமை தாண்டிய கண்ணீர் கன்னங்களில் வழியக் கண்டவன், “எதுவும் பிரச்சனையா நேரடியா சொல்லு லலிதா” ஒரு அதட்டல் போட்டான்.

இவன் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இல்லை, இவனை விட்டாலும் இப்போது வேறு வழியில்லை.

பயந்த குரலில், “அது பாட்டிக்கு உடம்பு முடியலை, ஹாஸ்பிடல் கூட்டிட்டிப் போயிடலாம்னு நினைக்கிறேன்” என்க, “என்ன செய்து?” அதிர்வோடு படபடத்தான் சரவணன்.

“அது..” சொல்லத் தெரியாது ஒரு நொடி தடுமாறித் திணறியவள், “வந்து பாருங்க வாங்க” என்றவள் வாசல் நோக்கி விரல் நீட்டினாள்.

எதையும் யோசிக்கவில்லை, “அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது, பயப்படாத நீ” தைரியம் கூறியபடியே, அவளையும் தாண்டி உள்ளே சென்றான்.

பதைபதைப்பில் பின்னோடு வந்த லலிதா, “அங்க, அந்த ரூம்ல..” வழிகாட்டினாள்.

உண்மையில் பாட்டியைக் குறித்த வேதனை என்பதை விட, அவர் இல்லையென்றால் தன் நிலை? இது தான் இவளை மேலும் கவலையுறச் செய்தது.

படுக்கையில் இருந்தவரை,லலிதா தான் நிமிர்த்தி அமர வைத்திருக்க, மீண்டும் படுக்கையில் சரிய, சரியாக உள்ளே வந்தான் சரவணன்.

சொர்ணம் பாட்டி மூச்சுக்குத் திண்டாடிக் கொண்டிருந்தார் பேசவும் இயலாது, வாய் வழியாக மூச்சிரைக்க முடியாது, நெஞ்சில் கை வைத்து வலிப்பதாகச் சைகை காட்டினார்.

அவர் நைந்த உடல், மெல்லிய தேகத்தால் இவ்வலியைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. பெரிதும் அல்லாடிக் கொண்டிருந்தார்.

சரவணனிற்கும் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்வதே சரியெனத் தோன்ற, அவரை தூக்கினான். ஓடி வந்த லலிதாவும் உதவினாள்.

இருவரும் சொர்ணத்தைக் காரில் கிடத்தி, பக்கத்து டவுனில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சரவணன் உதவுவான் என நம்பிக்கை இல்லாது இருந்தவளுக்கு இப்போது ஆச்சரியமே!

வழி நெடுகிலும் பாட்டியை விட்டு பார்வை நகர்த்தாது, கண்ணீர் வடித்தபடியே வந்தாள் லலிதா.

சிகிச்சைக்கு அனுமதித்து விட்டு, இவளைப் பார்த்த சரவணனிற்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.

அந்த நள்ளிரவில், யாரும் ஆதரவின்றி அலைந்து திரிந்து ஓய்ந்த தோற்றத்தில் இருந்தாள். பார்க்கவே சரவணனிற்குப் பரிதாபம் பொங்கியது.

சுவரில் சாய்ந்தவாறே வெகு நேரம் அழுது வடிந்தவள், கண்ணீர் வறட்சியோடு இவனுக்கு அருகே இருக்கும் இருக்கையில் அமர்ந்தாள்.

தலையை திருப்பி இமைக்காது ஒரு நொடி உற்றுப்பார்த்தான். இப்படியே விட்டுச்சென்றால் இவள் சமாளித்துக் கொள்வாள் என்னும் நம்பிக்கை இல்லை.

அவன் பார்வையை காணாதவள், தலை குனிந்து விம்மியபடியே, “மாமா வர வரைக்கும் கொஞ்சம் நேரம் கூட இருக்கீங்களா ப்ளீஸ்!” நைந்த குரலில் வேண்டினாள்.

அந்த குரல் என்னவோ உள்ளுக்குள் சென்று குடைந்தது. இப்படியே விட்டுச்செல்ல இவனாலும் இயவில்லை.

தலையாட்ட, லலிதாவிற்குச் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு ஆறுதலைத் தந்தான் சரவணன்.

“அழாதே லலிதா” மென்மையாகக் கனிந்த குரலில் கூறினான்.

இந்த குரல் இவளுக்குப் புதிது! உணரும் நிலையில் இல்லை, ஆனாலும் இப்போது தான் மேலும் வெடித்துக்கொண்டு அழுகை வந்தது. என்னவோ அவள் குரலும் அவள் வார்த்தையும் ஒரு மாதிரி நெஞ்சைப் பிசையும் உணர்வு.

தங்கராசுவுடன் இருந்த பிரச்சனைக்குச் சற்று அதிகப்படியாகப் பேசி விட்டானே தவிர, லலிதாவிடம் விருப்போ வெறுப்போ எதுவுமில்லை.

இவள் அழுகையை நிறுத்தும் வழி தெரியவில்லை. மெல்லப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.

மருத்துவமனை என்பதால் சற்று தாழ்ந்த குரலில் “தங்கராசு எங்க?” என்றான்.

அழுகையை விழுங்கியபடியே, “தெரியாது” என்க, “அப்புறம் எப்படி வாசல்ல வந்து அவனுக்காக வெய்ட் பண்ண?” குறுக்கு விசாரணைக்கு வந்தான்.

“பாட்டிக்கு முடியலைன்னு பார்த்ததுமே மாமா நம்பருக்குக் கால் பண்ணேன் அவர் எடுக்கலை. அப்புறமா.. மணி அண்ணனுக்குக் கால் பண்ணி விசாரிச்சேன். அவருக்கும் தெரியலை. மாமா எங்கேயிருந்தாலும் தேடி, எழுப்பி வீட்டுக்கு அனுப்பி வைக்கச் சொன்னேன்” என்க, கேட்டிருந்த சரவணனிற்கு ஆத்திரமாக வந்தது.

வயது பெண்ணும் வயதானவரும் இருக்கும் வீட்டில் இப்படிப் பொறுப்பில்லாத ஆண் மகனா? இந்தச் சிறு பெண்ணை இப்படித் தவிக்க விட்டுள்ளானே? கையில் கிடைத்தால் நொறுக்கி விடும் அளவிற்குப் பன்மடங்கு சினம் கொதித்தது.

“ரொம்ப நேரமா காத்திருந்தேன், மாமா வரலை. எனக்கு ரொம்ப பயமா இருந்தது. நல்லவேளை நீங்க வந்திங்க, இல்லைன்னா இன்னைக்கு நான் என்ன செய்திருப்பேன்னு தெரியலை” என்றாள் வேதனையும் தன்னிரக்கமும் மிக.

நேரம் அதிகாலை மூன்று!

“மணி நம்பர் கொடு” என்று வாங்கிக் கொண்டவன், சற்று தூரம் எழுந்து சென்று அந்த எண்ணிற்கு அழைத்துப் பேசினான்.

தங்கராசுவை பற்றிய தகவல் அவனுக்குத் தெரியாது போக, அடுத்ததாக முகிலுக்கு அழைத்தான்.

தங்கள் ஆட்களை அனுப்பி இந்த நேரமே தங்கராசுவைத் தேடுமாறும், அவசரம் என்றும் கூறினான். பின் எந்த இடத்தில் கிடைத்தாலும் உடனடியாக இந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கச் சொன்னான்.

அலைபேசியில் பேசிவிட்டுத் திரும்ப, அருகில் நின்றிருந்தாள் லலிதா. அருகில் என்றாலும் சற்று இடைவெளியோடு நிழல் உரசாத தூரம் தான்.

கேள்வியாகப் பார்த்தவன், அவளுக்குப் பின்னும் பார்த்தான். நீண்ட வரண்டாவில் இவர்கள் இருவரைத் தவிர, மருத்துவமனை ஊழியர்களின் நடமாட்டம் மட்டுமே இருந்தது.

“இல்லை நான் இங்க இருந்துக்கிறேன்” என்றபடி அவன் நிற்கும் இடத்திற்கு அருகே இருக்கும் இருக்கையில் தலை குனிந்தபடி அமர்ந்து கொண்டாள் லலிதா.

இதை இவன் எவ்வாறு எடுத்துக் கொள்வான் என்ற எண்ணமெல்லாம் துளியுமில்லை. அவளுக்கு மனதெல்லாம் பிடித்து ஆட்டியது அச்சம் மட்டுமே! அதை வாய்விட்டுச் சொல்லவும் முடியாது இறுக்கமாக அமர்ந்து கொண்டாள்.

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வரை, இவன் உதவுவான் என்ற நம்பிக்கை கூட இல்லாது இருந்தவள் இந்த நொடி இவன் மட்டுமே பற்றுக்கோல் என்னும் மனநிலைக்கு மாறியிருந்தாள்.

சரவணனிற்கும் லலிதாவின் பயம் புரிந்தது. அமைதியாக அடுத்த இருக்கையில் அமர்ந்தான்.

“பாட்டிக்கு முடியலை, ரொம்ப நாளாகவே முடியாம தான் இருந்திருக்கு, வெளியே சொல்லிக்காம டீக்கடைக்கு வேலைக்குப் போகவும், பக்கத்து மெடிக்கல்ல மாத்திரை வாங்கிப் போட்டுக்கவுமா இருந்திருக்காங்க.

கடுமையா உழைப்பாங்க.. உழைச்சு உழைச்சு அவங்க உடலைக் கவனிக்காமலே போயிட்டாங்க! இன்னைக்கு இப்படிப் பார்க்கவும் எனக்கு ரொம்ப பயமா இருக்கு” மனதின் அழுத்தத்தை எல்லாம், விம்மியபடியே கொட்டிக்கொண்டு இருந்தாள். அருகில் இருப்பவன் கேட்கிறானா இல்லையா என்பது எல்லாம் கூட இவள் கருத்தில் பதியவில்லை.

அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்த சரவணன், “எதுவும் ஆகாது தைரியமா இரு” ஆறுதல் கூறிவிட்டு, “பாட்டின்னா அவ்வளவு பாசமா?” இதமாகக் கேட்டான்.

அவளோ மறுப்பாகத் தலையசைத்தபடி, “பாசம்ன்னு சொல்ல முடியாது, எனக்கு அவங்க வேணும்! அவங்க இல்லாம நான் என்ன செய்வேன்? எனக்கு வேற யார் இருக்கா?” என்றாள் உணர்வற்ற, வெறுமையான குரலில்.

இவன் என்னவோ சாதாரணமாகப் பேச வேண்டுமென்று கேட்டுவிட, சற்றும் எதிர்பாராத பதில்! கேட்ட சரவணனிற்கு நெஞ்சைக் கிள்ளியது போன்று இருந்தது.

என்ன மாதிரியான பதில் இது! அதிர்ந்த சரவணன் லலிதாவையே பார்த்திருந்தான். இந்த சிறு வயதில் இந்த பெண்ணிற்கு ஏன் இத்தனை சோதனைகளோ? அனுதாபமே விம்மி வர, ‘இவளுக்காக வேண்டியாவது சொர்ணம் பாட்டி சொர்க்கம் கிளம்பாது இருக்க வேண்டும்’ என்ற வேண்டுதலை மனதிற்குள்ளே வைத்தான்.

“எங்க அம்மா வீட்டுல, அதாவது தாத்தா அம்மாவோட சின்ன வயசுலையே இறந்துட்டாங்க. பாட்டியோட உழைப்பு மட்டும் தான் அங்கே. வீடு கூட சொந்தமா இல்லை, கஷ்ட ஜீவனம் தான்.

என்னோட அப்பாம்மா தவறவும் எங்க வீட்டுக்கு வந்தவங்க, அப்படியே இருந்துட்டாங்க. என் மேல பாசத்தைக் கொட்டுனாங்கன்னு சொல்ல முடியாது, என்னை வளர்த்தாங்க. ரொம்ப நல்லா வளர்த்தாங்க!

எங்க அப்பாம்மா இறந்ததுல கிடைச்ச காசுல தான் தோப்பு வாங்குனாங்க. உங்ககிட்ட பேசுன அளவு கூட எங்கிட்ட பாசமா ஒரு நாளும் பேசுனதில்லை.

ஆனாலும் இவங்க என் பாட்டி தான், எனக்கு இருக்கிற ஒரே துணை இவங்க தான்!” விம்மினாள்.

மேலும் புலம்பியவள் அதிக அசதியில் அப்படியே கண்ணயர்ந்து போனாள்.

இருக்கையில் வைத்திருந்த சரவணனின் கரத்தின் மீது கிடந்தது லலிதாவின் ஒரு பக்க முகம். அதிலும் இவன் கரங்களில் அழுத்திக் கிடந்தது அவள் கன்னம்.

மீண்டும் ஒரு பார்வை பார்த்தான். அழுது அழுது சிவந்த முகம், நீர் பசப்பே அற்று வெளிறிப் போயிருந்தது. கலைந்த தலை முடிகள் சில, கன்னத்துக் கண்ணீரோடு ஒட்டிக் களைந்து கிடந்தது.

பார்வை இவள் மீது தான் என்ற போதும் ரசனையில்லை. இவளைக் குறித்த ஆராய்ச்சியே இவன் மனவெளியில்.

நேற்றைய இரவு பார்த்த பொழுதில் இருந்து இவன் நிழலை விட்டு லலிதா நகரவில்லை. எப்படி என் மீது இவளுக்கு நம்பிக்கை, என்னை வீட்டிற்குள் அனுமதித்தாள், என்னோடு தனிமையில் வருகிறாள், என்னை விட்டு விலகாது இருக்கிறாள்!

தனியாக இருக்கும் பெண்களிடம் வசூல் செய்பவனென என்னைக் கீழாகக் கூறியவளும் இவள் தானா? அப்படியான எண்ணம் இருப்பவள் இப்போது மட்டும் எப்படி என்னை நம்புவாள்?

ஒருவேளை இவள் கூறவில்லையோ தங்கராசு தான் கூறியிருப்பானோ? தானாகத் தான் அவன் வார்த்தைக்கு இவளை குற்றவாளி ஆக்கிவிட்டேனோ?

மேலும் லலிதாவைக் குறித்தே அலசி, ஆராய்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தான் சரவணன்.

விடிந்து விட்டது காலை ஆறுமணி. லலிதாவும் கண் விழித்திருந்தாள்.

கேண்டீன் சென்றவன் அவளுக்குத் தேநீர் வாங்கி வந்து கொடுத்தான். அமைதியாக முகம் கழுவி வந்தவள், மறுப்பேதும் கூறாது வாங்கிப் பருகினாள். அழுது அழுது வறண்டத் தொண்டைக்குச் சூடாக, இதமாக இருந்தது, மற்றபடி சுவையெல்லாம் லலிதாவிற்குத் தெரியவில்லை.

தேநீரில் கரைந்து போன தித்திப்பைப் போலே சரவணனின் கரிசனமும் அவள் நெஞ்சில் கலந்தது போனது.

தங்கராசு வந்துவிடுவான் என நினைத்தவளுக்கு ஏமாற்றமே!

தன்னிடம் இருக்கும் பணத்தைச் சரவணனிடம் கொடுத்தவள், “ட்ரீட்மெண்ட்க்கு பத்தாதுன்னு தெரியும். இதையும் வைச்சிடுங்க” கையோடு ஒரு ஜோடி தங்க வளையல்களையும் நீட்டினாள்.

“ம்ப்ச்.. சும்மா சும்மா நகையைக் கழட்டாதே லலிதா” கொஞ்சம் உரிமையாக, அதட்டலாக உரைத்தான்.

எதையும் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் நிலையில் லலிதா இல்லை. மௌனமாகப் பிடிவாதம் காட்டினாள்.

இவள் மௌனத்திற்குக் கூட இப்போது அர்த்தம் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தான் சரவணன்.

பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு, வளையல்களை அவள் கையிலே வைத்துவிட்டு, “நான் பார்த்துக்கிறேன்” என்றபடியே எழுந்தான்.

மருத்துவமனைக்கும், மருந்தகத்திற்கும் கட்ட வேண்டிய தொகையைக் கட்டிவிட்டு வந்தான்.

இருவரும் மருத்துவரிடம் சொர்ணத்தின் உடல்நிலை குறித்து விசாரிக்க, அவர்களால் எந்தவித நம்பிக்கையும் தர இயலவில்லை.

என்னவோ இவர்கள் தரும் சிகிச்சையைச் சொர்ணத்தின் உடல் ஏற்க மறுத்தது.

மருத்துவரின் வார்த்தைக்கு லலிதாவே, நம்பிக்கையற்றுத் தளர்ந்து போனாள். மீண்டும் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க, சரவணன் ஏதேதோ நம்பிக்கை வார்த்தைகளைக் கூறிப் பார்த்தான்.

அதே நேரம் தங்கராசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். சரவணனின் ஆட்கள் எங்கெங்கோ தேடி இறுதியில் பக்கத்துக் கிராமத்தில் திருவிழா கூட்டத்தில் தான் கண்டுபிடித்தனர்.

இரவு நடந்த கலைநிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, அங்கே சத்திரத்தில் கவிழ்ந்து விட்ட, தங்கராசுவை கண்டு பிடித்து, எழுப்பி, சேதி கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

நேராக லலிதாவிடம் சென்று அனைத்தையும் விசாரித்து அறிந்து கொண்டான் தங்கராசு.

“அப்படியென்ன முக்கிய வேலை? ஏன் மாமா போன் அட்டென் செய்யலை? எங்க மாமா போனீங்க?” என்றாள் கோபமாக, ஆதங்கமாக.

லலிதாவிற்கு அவ்வளவு எளிதாக எல்லாம் கோபம் வராது. எப்போதும் தங்கராசுவின் பொறுப்பின்மைக்கு சொர்ணம் தான் திட்டிக்கொண்டே இருப்பார். லலிதா ஒரு வார்த்தை குறையாகப் பேச மாட்டாள்.

ஆனால் இன்று உச்சபட்ச கோபம் தங்கராசுவின் மீது. இவர் இருந்திருந்தால் சரியான நேரத்திற்கு அழைத்து வந்திருக்கலாமே? இவர் ஏன் இந்த நிலையில் தன்னை தவிக்க விட்டார்? என்ற ஆத்திரம் மருத்துவர் கூறிச் சென்றதில் பாட்டியைப் பற்றி வேதனை அதிகமாகக் குரல் உயர பேசிவிட்டாள்.

ஆனால் தங்கராசுவிற்கு தாங்க முடியவில்லை. அதுவும் சரவணன் முன் பேசியதைச் சிறிதும் ஏற்ற முடியவில்லை.

சரவணன் இங்கு தான் இருக்கிறான், உதவி இருக்கிறான் என்பதெல்லாம் தெரியும் இருந்தும் அவனையும் அவன் உதவியையும் அலட்சியம் செய்தான் தங்கராசு.

சரவணனிற்கு தங்கராசுவின் உடல் மொழியில், நடத்தையில், பார்வையிலே புரிந்தது. அது ஒரு மாதிரி அவமரியாதையைக் கொடுக்க, உள்ளே கனன்று கொண்டே, அடங்கி இருந்தான் சரவணன்.

“என் போன் சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகிட்டு லலிதா..” தங்கராசு காரணம் கூறுவதாக நினைத்து, லலிதாவிற்கு இருக்கும் ஆதங்கத்தை அதிகப்படுத்தி விட்டிருந்தான்.

“இருந்தா மட்டும், கூப்பிட்டதும் வந்திருப்பீங்களோ?” சுள்ளென கேட்க, பொறுமை இழந்த தங்கராசு, “லலிதா..” குரல் அதிர சத்தமிட்டான்.

லலிதா ஒரு நொடியிலே அரண்டு, அடங்க, பார்த்திருந்த சரவணன் முறுக்கியபடி, “ஏன் ஹாஸ்பிடல்ல சத்தம் போடுற?” கண்டித்தான்.

“ஏன் உங்கிட்ட உத்தரவு கேட்டுட்டு தான் நான் பேசணுமா? வந்த வேலை முடிச்சதா? கிளம்ப வேண்டிய தானே?” முகத்தில் அறைத்தது போன்று தங்கராசு கேட்க, லலிதா துடித்துப் போனாள்.

“மாமா ப்ளீஸ்!” அடக்க நினைத்த லலிதா கண்ணீரோடு வேண்டவே அமைதியானான்.

என்ன மனிதன் இவன்? சரவணனிற்கு ஆத்திரமும் ரௌத்திரமும் பொங்கியது. இனி இவன் பார்த்துக் கொள்ளட்டும் எனக் கிளம்ப நினைத்தான்.

“லலிதா..” என்றழைக்க, அவன் குரலுக்கு இருவருமே திரும்பினர். அதிலும் தங்கராசு தீயாக முறைக்க, லலிதா அவனருகே சென்று பேசிக் கொண்டிருந்தாள்.

“இது பணம் கட்டியதற்கான பில், நான் கிளம்புறேன்” என அவள் முன் நீட்ட, தவித்து, துடித்துப் போனாள் லலிதா.

உள்ளுக்குள் இருந்து எந்த சக்தி உந்தியது, அவளை இயக்கியது எனத் தெரியவில்லை.

“இன்னும் கொஞ்ச நேரம் இருக்களேன் பிளீஸ்! எனக்காக” வாய் வார்த்தையாகக் கேட்டே விட்டாள்.

இவன் அருகாமை ஒரு நம்பிக்கை, இவன் குரல் ஒரு தைரியம் லலிதாவிற்கு! எப்போதிலிருந்து எதனால் இந்த மாற்றம் என்றெல்லாம் தெரியவில்லை.

என்னவோ லலிதாவின் வார்த்தைக்கு கட்டுண்டவன் போலும் அவளுக்குக் கடமைப் பட்டவன் போலும் அமைதியாக அமர்ந்து விட்டான் சரவணன்.

‘தான் இருக்க, அவனிடம் சென்று லலிதா வேண்டுகிறாளே?’ தங்கராசு மட்டும் தணலாகக் கொதித்தான்.

 

Advertisement