Advertisement

அத்தியாயம் 05

லலிதா எந்த அளவிற்கு ஒதுக்கம் காட்டினாலோ அதற்கு மாறாக வாஞ்சையுடன் சீராட்டினார் சொர்ணம்.

ஏன், என்னவென்று தெரியாது சரவணன் மீது மட்டும் சிறிது வெளிப்படையாகவே பாசம் காட்டினார் சொர்ணம்.

வேலையிடத்தில் அவனுக்குத் தேவையான சிறு சிறு உதவிகளைச் செய்தார். பெரும்பாலான மாலை நேரங்களில் சரவணன் சைட்டில் இருந்தால், தன் வீட்டில் போடும் தேநீரை அவனுக்குக் கொடுத்துவிட்டு அவனோடு சிறிது நேரம் பேசிவிட்டுத்தான் செல்வார்.

சரவணனிற்கும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத இவர் அன்பு புரிந்தது. துளி சலுகை எடுத்து அனுபவித்தான். அவர் வந்தாலே வேலையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அமர்ந்து கொள்வான்.

காலம் போன காலத்துல இந்த கிழவியோட உனக்கு ஃப்ரண்ட்ஷிப்பா?” கேலியாகக் கேட்கும் முகில், “உனக்கு மட்டும் டீயும் மாசால் வடையும் ஸ்பெஷல் கவனிப்பு?” சில நேரம் பொருமலாக குமுறிவிட்டுச் செல்வான்.

பெரும்பாலும் மகன் தங்கராசுவின் பொறுப்பின்மை பற்றிய ஆதங்கத்தை அதிகம் புலம்புவார் சொர்ணம்.

தங்கராசு வீட்டுப்பக்கமே வருவதில்லை என்பதைச் சரவணனும் இந்த சில நாட்களில் கவனித்திருந்தான்.

பெரியவருக்கு ஆறுதல் கூறும் சரவணனிற்கு அப்போது தான் புரிந்தது,

வசூலுக்கு வந்த அன்று, தங்கராசுவிற்குச் சாதகமாக லலிதா நடிக்கிறாள் என்றெல்லாம் கொஞ்சம் அதிகப்படியாக அவளை பேசிவிட்டோமென!

காலை நேரங்களில் வாழை தோப்பில் தண்ணீர் பாய்ச்சும் போதும் மாலை நேரங்களில் முல்லைக்கொடியில் பூ பறிக்கும் போது கண்ணில் படுவாள்.

அன்றை வாக்குவாதத்திற்குப் பின் மன்னிப்பு எல்லாம் கேட்க நினைத்தது இல்லை. அவளும் இந்நாள் வரையிலும் ஒரு போதும் நின்று பேசியதில்லை.

அன்று விடுமுறை நாள், மெல்லிய வெளிச்சம் சிறிதே மிச்சமிருக்கும் மாலை வேளை.

சிமென்ட் லோட் வந்திருக்கவே, சரவணன் மட்டும் வேலை இடத்திற்கு வந்திருந்தான். சொர்ணத்திடம் சாவியை வாங்கிச் சென்றவன், லோட் இறக்கவும் மீண்டும் பூட்டி விட்டு சாவியைக் கொடுக்க வந்தான்.

தோப்பில் இருந்த சொர்ணம் கை காட்ட, பின் புறம் இருக்கும் வாசல் வழியாகத் தோப்பிற்குள் வந்திருந்தான் சரவணன்.

பெரியவரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு, வாய்க்கால் நீரில் கை, கால்களைக் கழுவிக் கொண்டிருந்தான்.

கொதிக்கும் எண்ணைச் சட்டியிலிருந்து வடிகட்டி எடுத்த வாழைப்பூ வடையை ஒரு தட்டில் வைத்து, மற்றொரு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தேநீரை ஒரு டம்ளரில் ஊற்றினாள் லலிதா.

பாட்டி.. டீ போட்டேன் வாங்க..” சமையலறையில் இருந்தபடியே சற்று உரக்க, அதிரும் குரலில் அழைப்பு விடுத்தாள் பேத்தி.

இங்க கொண்டு வா லலிதா..” என்ற சொர்ணமும் கணீரெனப் பதில் பாட்டுப் பாடினார்.

வீட்டு வேலை, தோப்பு வேலையெல்லாம் நானே செய்துக்கிறேனு சொன்னாலும் இந்தப் பாட்டி கேட்குறதே இல்லை!’ உள்ளுக்குள் அலுத்துக் கொண்டாள் லலிதா.

அடுப்பை அணைத்துவிட்டு பாட்டிக்காக எடுத்துக்கொண்டு பின் வாசலில் இறங்கிய லலிதா, அங்கே சரவணனைச் சற்றும் எதிர்பாராது நின்றாள்.

வாசலிலே தேங்கி நின்றவளைக் கண்ட சொர்ணம், “என்ன அங்கேயே நின்னுட்ட? இங்க வா, கொண்டு வந்து தம்பிக்கிட்ட கொடு லலிதா” என்ற பாட்டியின் அதட்டலில், அப்போது தான் அவளை கவனித்தான் சரவணன்.

பக்கத்து இடத்தில் தானே வேலை, தோப்பிற்குள் ஏன் வந்தான்? இருந்தாலும் இந்த பாட்டி இவனுக்கு அதிகம் உரிமை கொடுக்கிறது உள்ளுக்குள்ளே நொடிந்தாள்.

அவன் முன்பே அழைத்துக் கூறி விட, மறைக்கவும் முடியாது, மரியாதைப் பண்பிற்காக, பவ்யமான முகத்தோடு, அமைதியாக அருகில் வந்தாள்.

இங்கே சரவணனும் “இல்லை இல்லை வேண்டாம் பாட்டி” மறுத்தான்.

கேட்கவில்லை, அவள் கையில் இருப்பதை வாங்கி இவனிடம் கொடுத்துவிட்டு, மோட்டாரை அணைக்க, மோட்டார் அறைக்கு நோக்கிச் சென்று விட்டார் சொர்ணம்.

இவனுக்கு நான் செய்ய வேண்டுமா? இவனெல்லாம் நம் வீட்டில் உண்பானா? நொடிந்து கொண்டு சந்தேகித்தாள் லலிதா.

சந்தேகம் தான், அவனால் கண்டுபிடிக்க இயலாத ஓரப்பார்வையில் லலிதா கண்காணிக்க, சூடான தேநீரை மடக்கெனக் குடிக்க முடியாது மெல்ல, நிறுத்தி நிதானமாகச் சரவணன் குடித்துக் கொண்டிருந்தார்.

உள்ளுகுள்ளோ, ‘சவுன்ட் மட்டுமில்லை சமையலும் நல்லா வரும் போலே?’ கேலியாக நினைத்தபடியே நிமிர்ந்து லலிதாவை நோக்கினான்.

சட்டென தடுமாறி இவளும் பார்வையைத் திருப்பிக் கொள்ள, ‘இவள் என்ன இவ்வளவு நேரமும் தன்னை பார்த்தாளா?’ உற்சாகம் பொங்க, ஒரு நொடி உள்ளம் துள்ளினான்.

மறுநொடி, ‘பார்த்தாளா? இல்லையா? தன் கற்பனையா?’ குழம்பிப் போனான்.

துளைக்கும் பார்வையில் அவளை நோக்கியவனின் மனசாட்சி, ‘இது தேவையில்லாத ஆராய்ச்சி சரவணா’ என அடக்கியது.

அவன் பார்வை உணர்ந்தும் திரும்பாது, இருந்தவளை நோக்கி, தொண்டையைச் செறுமிக் கனைத்தபடியே, தட்டையும் டம்ளரையும் நீட்ட, இப்போது அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

இங்கிருந்தபடியே கிளம்புவதாகப் பாட்டியை நோக்கி குரல் கொடுத்துவிட்டு, லலிதாவை ஏற்றெடுத்தும் பார்க்காது விறுவிறுவென வெளியேறிவிட்டான் சரவணன்.

தன் செயல் அவனுக்கு அவமரியாதையாக இருந்ததோ? அதான் உடனடியாக கோபித்துக்கொண்டு சென்று விட்டானோ? யோசனையோடு நெற்றி முடியை தன் விரல்களுக்குள் சுருட்டிக் கொண்டிருந்தாள் லலிதா.

இவன் செய்தது மட்டும் சரியோ என்னிடம் தானே மிரட்டி வசூல் கேட்டான்? பணம் இருந்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்னும் நினைப்போ? எப்படியெல்லாம் பேசினான்? என்னைப் பேச இவன் யார்? சரியான பணத்திமிர்! மனதோ தகிக்க, அவன் மீதான காந்தல் மட்டும் துளியும் குறையவில்லை.

கோபித்துக் கொண்டால் போகிறான், தனக்கென்ன நஷ்டம்? என்றவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே சொர்ணம் வந்தார்.

சரவணன் கிளம்பிட்டானா?” வினவியபடியே வீடு நோக்கிச் செல்ல, “ஹான்.. பாட்டி, அவங்களுக்கு எல்லாம் எதுக்கு என்னை டீ கொடுக்கச் சொல்றீங்க?” சற்றே குரல் குறுக, சிடுசிடுத்தாள்.

என்ன லலிதா பேசுற?” உரத்த குரலில் அதட்டியவர், “வீட்டுக்கு  வந்தவங்களுக்கு செய்ற மரியாதை! அப்புறம் சரவணன் நமக்கு எவ்வளவு உதவி செஞ்சி இருக்கான், அந்த நன்றியுணர்வு கொஞ்சம் கூட வேண்டாமா?” என ஆரம்பித்தவர் இவளுக்குப் புத்தி கூறுவது போலே அவன் புகழ் பாடத் துவங்கி விட்டார்.

கேட்டுக் கேட்டு புளித்தே போன பாடல் இவள் காதுகளுக்குள் இரைச்சலாகக் கேட்க, ‘செய்வது கந்து வட்டி பெயர் மட்டும் உதவியாம்?’ நொடிந்தபடியே பின்னோடு சென்றாள் லலிதா.

அன்றைய இரவு சரவணன் வீட்டிற்கு வர, வெளியே வாசலில் மாமா கதிர் வேலின் வாகனம் இருப்பதைக் காணவும் அவர் வந்திருப்பதைப் புரிந்து கொண்டான்.

மறுநாள் காலையில் உணவு மேசையில் அமர்ந்திருக்க, அப்போது தான் எழுந்து வந்தார் கதிர்வேல். சாரதா வந்து ஒரு கோப்பை தேநீரைக் கொடுத்து விட்டுச் சென்றாள்.

நேத்து ஹாஸ்பிடல் போயிட்டு வந்தியாக்கா?” மூத்தவளை நோக்கி கேட்க, “ம்ம், அதான் நான் வந்திருக்கேனே? அவ்வளவு வேலையும் அப்படியே போட்டுட்டு வந்திருக்கேன்” குறுக்கிட்டுக் குறை கூறினார் கதிர்வேல்.

சாரதாவின் முகத்தில் சிறிதும் மலர்ச்சியே இல்லை, அழுததைப் போன்று சிவந்து உப்பிய முகமும், சிறிதும் புன்னகை அற்றப் பாலைவனமாக இருந்தது.

இவனுக்குமே மாமா பேசுவது பிடிக்கவில்லை. அக்காவின் முகம் காணத் தாளவில்லை.

பொறுமை கொண்டவன், இன்முகமாக வரவேற்று மாமாவிடம் நலம் விசாரிப்பதாகப் பேச்சை மாற்றினான். கதிர்வேலிடமிருந்து சுரத்தே இல்லாத வார்த்தைகளில் ஏனோதானோவென பதில் மட்டும் வந்தது.

சரவணன் உணவுண்டு எழ, கதிர்வேலும் தேநீரை முடித்துக் கொண்டு எழுந்தார்.

வேலையிருப்பதாகக் கூறிக்கொண்டு அவர் உடனே கிளம்பி விட, இன்னும் இருவருக்குமான பிரச்சனை சரியாகவில்லை என இளையவனுக்கு நன்கு புரிந்தது.

கதிர்வேல் கார் எடுக்க, “மாமா வழியில என்னை மில்லுல இறக்கி விடுங்களேன்” என்றபடியே பின்னோடு வந்த சரவணனும் ஏறிக் கொண்டான்.

கணவன் மனைவிக்குள் உள்ள ஊடல் என்னவென்று கேட்கவோ மூக்கை நுழைக்கவோ இயலாதே!

கதிர்வேல் மௌனமாகவே வண்டியை இயக்க, “மாமா எதுவும் முக்கியமான வேலையா இருக்கீங்களா? இல்லை வேலை அதிகமாக இருந்தா கொஞ்சம் சொல்லுங்க மாமா, என்னால முடிச்ச வரைக்கும் செய்து கொடுக்குறேன்” என்றான் தன்மையாக.

அக்காவிற்காக எதையும் செய்வேன் என அறிவிக்க முயன்றான்.

ஏன் என் அக்காவைச் சரிவரக் கவனிப்பதில்லை என்ற கேள்வியும் உங்கள் வேலையை நான் செய்து தருகிறேன் என் அக்காவிற்கு நேரம் ஒதுக்குங்கள் என்ற பேரமும் இதில் இருப்பதாக நினைத்தார் கதிர்வேல்.

அப்படியெல்லாம் எதுவுமில்லை மாப்பிள்ளை. செக்கப் தானே அத்தையை கூட்டிட்டு போய்க்கோன்னு சொன்னேன். நான் தான் வரணும்னு ஒரே பிடிவாதம்! வர்ற வர எல்லா விஷியத்துலையும் அவ சொல்றததைத்தான் கேட்கணுங்கிற பிடிவாதமும் அடமும் அதிகமாகிட்டு உன் அக்காளுக்கு!” பெரும் குறையென குற்றம் பாடினார்.

முகமும் குரலும் இறுகிப் போக, சாரதாவின் செயல் பிடிக்கவில்லை எனக் காட்டிவிட்டார். கேட்ட சரவணனுக்கு, அக்காவைக் குறை கூற மனம் பொறுக்கவில்லை.

எங்க அக்கா என்னச் சொன்னாலும் அதுக்கொரு காரணம் இருக்கும். எங்க அக்கா பிடிவாதமும் நல்லதுக்காகத்தான் இருக்கும். இந்தக் குழந்தை மேல அவளுக்கு ரொம்ப ஆசை மாமா” இறங்கிய குரலில் கனிவுடன் உரைத்தான்.

எனக்கும் குழந்தைதானே சரவணா? அதுவும் காத்திருந்த வரமா கிடைச்சிருக்கு! குழந்தையை வைச்சு அடம் பண்றா? இதென்ன விளையாட்டு? கொஞ்சம் சொல்லி வைங்க” கதிர்வேல் சடைத்தார்.

சரவணனிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சரியெனத் தலையாட்டி வைத்தான்.

ஒவ்வொரு தடவையும் எங்க ஊர்ல இருந்து நானே வர முடியுமா? அத்தை தான் பார்த்துக்க இருக்காங்களே? அவளே தான் பிடிவாதம் பிடிச்சி ஏழாம் மாசமே உங்களை வளைகாப்பு செய்ய வைச்சு, உங்க வீட்டுக்கு வந்துகிட்டா? இப்போ என்னை அலைக்கழிச்சா என்ன அர்த்தம்? நானும் எவ்வளவு பொறுமையா போவேன்?” மேலும் பிதற்றினார்.

மெல்லப் பேச்சை மாற்றியவன் தொழில் பற்றி விசாரித்து கேட்டறிந்து கொண்டான். தன்னால் முடிந்த உதவியும் செய்வதாகக் கூறினான்.

அவன் கேட்டறிந்த வரை, எப்போதும் இருக்கும் வேலைகள் தான். அதிலும் பார்த்துக்கொள்ள நம்பிக்கையான பணியாளர்கள் இருக்கும் போது, இங்கு வந்து செல்வதற்கு என்ன? ஏன் அக்காவைத் தவிர்க்கிறார்?

அக்காவிற்காகவே அவள் பக்கமாக மட்டுமே யோசித்தான் பாசம் நிறைந்த அவள் சகோதரன்.

சரவணன் வழியில் அவர்கள் ஆலையில் இறங்கிக் கொள்ள, கதிர்வேல் விடைபெற்று அவர்கள் ஊர் செல்லும் சாலையில் திரும்பினார்.

அன்றைய பொழுது சரவணனிற்கு வெளி வேலைகள் இருக்க, அதையே கவனித்துக் கொண்டிருந்தான். அதுவும் போக, மற்ற இடங்களில் நடக்கும் வேலையையும் கவனித்து வந்தான்.

காலையிலிருந்து சைட் பக்கமே வரவில்லை. மாலை நேரமாக அதே சாலையில் கடந்து செல்ல மனமின்றி அங்கே, லலிதாவின் வீட்டின் முன் நின்று விட்டான்.

வேலை முடிந்து அனைவரும் சென்றிருக்க, இறுதியாகக் கிளம்ப இருந்த முகில், சாவியைக் கொடுக்க வர, காரை நிறுத்திவிட்டு இறங்கும் சரவணனைக் கண்டு அவன் அருகில் சென்றான்.

அன்றைய வேலைகளைப் பற்றி விசாரித்து, சாவியை வாங்கிக் கொண்டு, முகிலை அனுப்பு வைத்தான் சரவணன்.

அறைக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்தவன், கணக்கு வழக்குகளைப் பார்த்து, நாளைய வேலைகளைக் குறித்து வைத்தான். பின் மேசையில் கிடக்கும் கட்டிட வரை படத்தில் கவனம் பதிய, நேரம் சென்றதே தெரியவில்லை.

இவனுக்கு அதில் இருக்கும் ஆர்வத்தில் கால நேரம் கணக்கற்றுப் போக, முழுவதுமாக வரைந்து முடித்த பின்பே மணியைப் பார்த்தான் இரவு பதினொன்று.

பின் வெளியே வந்தவன் அறையை மூடிக்கொண்டு  கார் அருகே வந்தான்.

இந்த நேரம் வயதுப் பெண்ணும் வயதானவரும் இருக்கும் வீட்டில் சாவியைத் தருகிறேன் எனத் தொந்தரவு செய்யக் கூடாதென்ற நாகரிகம்  உணர்ந்தவன், சாவியைத் தனது பைக்குள் போட்டுக் கொண்டான்.

காலையில் வேலையாட்கள் வரும் முன்பாக விரைந்து வர வேண்டும் என்ற எண்ணத்துடனே தனது காரை இயக்கினான்.

நட்சத்திரங்கள் தொலைந்த, தேய்ந்த நிலவும் நிசப்தமும் ஆட்கொண்ட இரவுப் பொழுது, குளிர்ந்த இயற்கை காற்று மட்டுமே தழுவி அணைக்கும் ஏகாந்த பொழுது.

லலிதாவின் வீட்டைத் தாண்டிச் செல்கையில் சரவணனின் கண்கள், தன்னிச்சையாக, இயல்பு போலே அத்திசையில் நோக்கியது.

வெளியில் மின்சார விளக்குகள் ஒளிர, வீட்டிற்குள்ளும் விளக்குகள் ஒளிர்வது தெரிந்தது.

இந்த நேரம் என்ன செய்கிறார்கள்? யோசனையுடனே சரவணன் வண்டியை நிறுத்த, அவ்வீட்டின் வாசல் கதவு திறக்க, உள்ளிருந்து கையில் அலைபேசியுடன் சற்றே பதைபதைப்புடன் வாசலை பார்த்தபடியே, வெளி வந்து நின்றாள் லலிதா.

இருள் சூழ்ந்த நேரமாக இருந்த போதும், மின்சார விளக்கொளியில் அவள் முகமும் பாவனையும் அந்த விழியில் மிளிரும் கண்ணீரும் நன்கு காட்சியானது.

வாசலை ஒரு பார்வையும், அலைபேசியில் ஒரு பார்வையுமாக நின்றவள் மறுநொடி வீட்டிற்குள்ளும் ஒரு பார்வை வீச, இதைக் கவனித்த சரவணனிற்கு என்னவோ சரியில்லை எனத் தோன்றியது.

தங்கராசுவை எதிர்பார்த்து நிற்கும் லலிதாவிற்கு, மெல்லிய ஒளியில் சரவணனின் கார் நன்கு அடையாளம் தெரிந்த போதும் அவனிடம் உதவி கேட்கத் தயங்கினாள். அதை விடவும் இவன் உதவ மாட்டான் என முடிவே கட்டிக் கொண்டாள்.

தன்னைப் பிடிக்காது, அதுமட்டுமின்றி ஐந்து பைசாவிற்கும் கணக்குப் பார்ப்பவன், இவனா உதவப் போகிறான்? என்னும் ஒரே கோணப் பார்வை தான் லலிதாவிடம்.

இதற்கு மேல் சரவணனிற்கு இங்கே இருப்புக் கொள்ளவில்லை. சட்டென இறங்கி லலிதாவை நோக்கிச் சென்றான்.

Advertisement