Advertisement

அத்தியாயம் 04

சரவணன் மறுபுறம் அமர்ந்திருப்பான் என்றோ இப்படி விருட்டென எழுந்து நெடும் உயரமாக முன் நிற்பான் என்றோ சற்றும் எதிர்பாராத லலிதா திடுக்கிட்டு விழித்தாள். இதயம் அதிர்ச்சி கலந்த பயத்தில் படபடத்தது துடித்தது.

மன்னிப்பு வேண்ட நினைத்தாலும் ஒட்டிய உதடுகள் பிரிய மறுக்க, பின் எங்கே வாய் தாண்டி வார்த்தைகள் வரும்.

கடந்த ஒரு வாரமாக இவனும் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறான். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதைப் போல் தன்னைக் கண்டாலே தலை தெறிக்க ஓடுகிறாளே? அப்படி என்ன செய்து விட்டேன் நான் இவளை?

“என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ உன் மனசுல?” சற்றே அதட்டலாகக் குரல் உயரக் கேட்டான்.

இந்த குரலுக்கே தன்னாலே லலிதா மேனி அதிர, நடுங்கினாள்.

உள்ளே ஓடி விடும் எண்ணத்தில் திரும்ப, அது சரவணனுக்கு அவமானமாகத் தோன்ற, சினந்தான்.

அவள் செல்லும் முன்னே சரவணன் முந்திக்கொண்டான்.

“லலிதா இப்போ நீ நிக்கலை நான் உன் வீட்டுக்குள்ள வந்து பேச வேண்டியிருக்கும் பார்த்துக்கோ” என்றான் சற்று மிரட்டலாக.

இவளும் சிறு பிள்ளை போலே பயந்து போனாள். அமைதியாக, அசையாத சிலையாக, அதே இடத்தில் நிற்க, இருவருக்கும் இடையில் இடைவெளி முல்லைக்கொடி படர்ந்த இந்த வேலி மட்டும் தான்.

ஆற்றில் இருந்தது பைப் லைன் அமைப்பதற்கான குழிகள் தோட்டப்பட்டுக் கொண்டிருந்தனர் ஊழியர்கள், அங்கு நிழலே இல்லாததால் இங்கு வந்து ஓய்வாக அமர்ந்திருந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேலையாட்கள் வெளியாட்கள் என யாருமில்லை. லலிதாவின் வீட்டிலும் அவளைத் தவிர யாருமில்லை.

திட்டத்தான் போகிறான் என உள்ளுக்குள் போர் முழக்கச் சங்கு முழங்க, முயன்று தைரியத்தை திரட்டிக்கொண்ட வீராங்கனையாக நின்றிருந்த லலிதா, “சா.. சாரி.. நீங்க அந்த பக்கம் இருந்ததை கவனிக்கலை, தெரியாம.. ஈரத்துணி காயப் போட நினைச்சி உதறி..” அவனிடத்தில் பேசும் தைரியம் இல்லாது சிக்கனமாக வார்த்தைகளைப் பாதியில் முடித்தாள்.

பார்வையில் அனல் கூட, “என்ன நினைச்சிட்டு இருக்க நீ?”  அதிகாரமாகக் கேட்டான் சரவணன்.

இப்படிக் கேட்டால்? என்னவென்று பதில் சொல்வது? இவனை ஏன் நான் நினைக்க வேண்டும்? அதுமட்டுமின்றி இவனை நினைத்தாலே ஒருவித நடுக்கும் தான்.

செய்த தவறுக்கு மன்னிப்பும் வேண்டிவிட்டேன், பழைய கணக்கிற்கு தங்கராசு பொறுப்பு.

கடன் வாங்கிய மாமன் அதைக் கொடுத்தும் விட்டான். பின்ன என்ன இருக்கு இவனைப் பற்றி நினைக்க? பதில் இல்லாது பரிதாபமாக விழித்தாள் பெண்.

சரவணனுக்கு கண் முன்னே இருக்கும் உயிர் உள்ள சிலையும் அதன் உணர்வும் புரியவில்லை. அன்றைய நாளில் பட்ட அவமானம் தான் நினைவில் தகித்துக் கொண்டிருந்தது.

இவன் உயரமும் தராதரமும் சரிய, இவள் குடிகார மாமனுக்குச் சமமாகத் தன்னையின் கீழ் இறக்கி விட்ட ஆத்திரம், ஆற்றாமை. அத்தனைக்கும் காரணம் இவள் என்ற எண்ணம்!

“என்ன சொல்லி வைச்சே உன் மாமாகிட்ட நீ?” இரும்புக் குரலில் கேட்க, இந்த குரலுக்கே உதறல் எடுத்தது லலிதாவிற்கு.

ஒரு நொடி யோசித்தபடியே, “உங்க கடனை திருப்பிக் கொடுத்திடச் சொன்னேன்” பதில் சொல்ல விருப்பமின்றியும் சொன்னாள்.

சொல்லாவிட்டால் அடித்து விடுவானோ என்ற பயத்தை அவன் கணீர் குரல் தோற்றுவித்தது.

“அது மட்டும் தான் சொன்னியா? அதை நான் நம்பணுமா?” ஊசியாகக் குத்தியவன் கேட்க, லலிதாவிற்கு கண்களே கலங்கி விட்டது.

“உங்க தேவைக்குக் காசும் கொடுத்துட்டு இந்த பேச்செல்லாம் கேட்கணும்னு எனக்கு என்ன அவசியமா?”  சுருக்கென கேட்டான்.

லலிதாவிற்கு உதடுகள் ஒட்டி அடைத்துக் கொண்டது, வாய் திறந்தால் அழுகை தான் பெரும் கேவலாக வரும் என்னும் நிலை மௌனமாக நின்றாள்.

சரவணனிற்கு அது இன்னும் சாதகமாகிவிட மேலும் பேசினான்.

“இங்க பார்ம்மா.. வட்டிக்குக் கொடுக்கிறது ஒன்னும் என் தொழில் இல்லை. ஏதோ ஆத்தாவுக்கு முடியலை அவசரம்னு கேட்டு வந்ததால உதவின்னு செய்தது தான் புரியுதா?” விரல் நீட்டிக் கேட்டான்.

செய்வது கந்து வட்டி பெயர் மட்டும் உதவியாம்? உறவோ, உரிமையோ இல்லாத என்னிடமே இத்தனை அதிகாரம்? யாராலும் கேள்வி கேட்க இயலாது என்னும் திமிர், பணத்திமிர்! உள்ளம் குமுறினாள்.

“மார்க்கெட்ல வைச்சு அந்தப் பேச்சு பேசுறான் உன் மாமன்! இவனுக்கு உதவியும் செஞ்சிட்டு இவன் கிட்ட அவமானப்பட எனக்கு என்ன தலையெழுத்தா?” சுள்ளென கேட்கவும் ஏதோ இருவருக்குமிடையில் பிரச்சனை நிகழ்ந்திருக்கிறது என அப்போது தான் லலிதாவிற்குப் புரிந்தது.

“கடன் வாங்குனா திருப்பி கேட்பாங்கன்னு வாங்கினவனுக்குத் தெரியாதா? அவன் வீட்டுல இருக்கிற நேரம் இல்லாத நேரம் எனக்கு எப்படித் தெரியும்? இருப்பான்னு நினைச்சி தான் வெள்ளன வீட்டுக்கு வந்தேன்!

நீ தனியா இருக்கேன்னு எனக்கு என்ன தெரியும்? நான் என்ன கடனுக்கு உன் கையை பிடிச்சி இழுத்தேனா?”

நீர் நிறைத்த கயல்விழிகள் இன்னும் பெரிதாகி மிதக்க, திடுக்கிட்டு விழித்தாள். கோபம் போலே, நுனி மூக்குச் சிவக்கிறது.

இருந்தும் தணியாத குரல், “மார்கெட்ல வைச்சு அப்படி பேசுறான் உன் மாமன்? உங்க வீட்டு வாசலை கூட இன்ன வரைக்கும் மிதிக்கலையே? சொல்லி வை!” பட்டாசாகப் பொரிந்தான்.

இவன் கடனை கேட்டது இப்படி ஒரு அர்த்தத்தில், இப்படி ஒரு பிரச்சனை ஆகுமென யாருமே எதிர்பார்க்கவில்லை.

தங்கராசு பேசியதற்கு எல்லாம் தானே காரணம், தான் சொல்லித்தான் என நினைத்திருப்பவனுக்கு என்ன சொல்லி தன்னை விளக்குவது எனத் தெரியவில்லை. மிகவும் அசதியுற்றாள் லலிதா.

நெற்றியில் கை வைத்தபடி மீண்டும், நாற்காலியில் அமர்ந்து கொண்டான் சரவணன்.

தங்கராசு தன்னிடம் வீரத்தைக் காட்டு, தன் வீட்டுப் பெண்ணிடம் பேசக் கூடாது என்றானே? பின், ஏன் நான் மீண்டும் இவளிடமே வந்து நிற்கிறேன்?

கொண்ட அவமரியாதை, தங்கராசுவின் மீது இருந்த கோபம் அந்த வேகத்தில் இவளிடம் சத்தமிட்டவன் இப்போது இயல்பு நிலைக்கு மெல்லத் தணிந்தான்.

தன்னையே நொந்து கொள்ள, மற்றொரு மனமோ, தன் தவறு என்ன? இவள் தானே மாமனிடத்தில் தன்னைப் பற்றி தவறாக ஏற்றி வைத்திருக்கிறாள் எனச் சாமரம் வீசியது.

இவளுக்கும் தன் மீது தவறான எண்ணம் தானோ? உள்ளுக்குள் ஒரே குடைச்சல்!

இவளை நம்ப மறுப்பவன் தான், ஏனோ அவளிடத்தில் தன்னை மெய்ப்பிக்கப் போராடிக் கொண்டிருக்கிறான். இந்த முரணை சரவணனே இன்னும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.

காலையில் எட்டு மணிக்கு எழுந்து கிளம்பிய சரவணன், உணவுண்ண அமர, சற்று தொலைவில் வரவேற்பறையில் வேக வேகமாக நடந்தபடியே அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் சாரதா. அதுவும் சற்று கோபமாக, உடல் இறுக, முகம் சிவக்க.

“அப்படியெல்லாம் போக முடியாது, போன்ல விசாரிக்கிற அளவுக்கு தானே உங்க அக்கறை? போதும் வைங்க!” கத்திவிட்டு அலைபேசியை அணைத்தாள்.

வீட்டிற்குள் தானே நடை பயில்கிறாள் பின் ஏன் இத்தனை வேகம்? பார்வை அங்கிருக்க, “அக்காக்கு என்ன?” அன்னை ராசத்தியிடம் விசாரித்தான்.

“செக்கப் போக மாட்டேங்கிற, மாப்பிள்ளை வரணும்னு எதிர்பார்க்கிற போல” குரலில் கவலை.

அன்னையாக அவரும் முயன்று பார்த்து சாரதாவின் பிடிவாதத்திற்கு முன் முடியவில்லை.

பேசி முடித்த சாரதா அருகே வந்து அமர, தண்ணீர் டம்ளரை அவளிடம் நீட்டிய சரவணன், “மாமா பிஸியா இருக்கிறாரோ என்னவோ? நீ கிளம்பி இருக்கா, நான் வந்து கூட்டிட்டு போறேன்” என்றான் சமாதானமாக.

தண்ணீரை மட்டும் வாங்கிக் கொண்டவள், “உன் வேலை என்னவோ அதை மட்டும் பார் சரவணா” சுள்ளென தீப்பொறியாக விழுந்தாள்.

ஏன் இவ்வளவு பிடிவாதம்? எடுத்து எரிந்து பேசுகிறாளே? இதென்ன? புதுப் பழக்கம் என் அக்கா இப்படியில்லையே? அதுவும் தன்னை வருத்தி, உடல் நலனைக் கவனிக்காமல் அப்படியென்ன பிடிவாதம்?

இந்த மாமாவும் என்ன தான் செய்கிறாரோ? அப்படி என்ன வேலை? கொஞ்சமும் அக்கறை, பாசம் இல்லாமலா இருக்கிறார்? சற்றே கோபம் கூட வந்தது.

எதிர்பார்த்து, காத்திருந்து, வரமாகப் பெற்ற பிள்ளைப்பேறு இப்படிப் பொறுப்பில்லாமல் நீயா நானா போட்டியில் அலட்சியப்படுத்துகிறார்களே? இருவர் மீதும் கோபமும் ஆத்திரமும் வந்தது.

கண்டிப்பாக ஒருமுறை கதிர்வேலைச் சந்திக்க வேண்டுமென்ற முடிவில் எழுந்து கொண்டான்.

உண்டு முடிந்தவன் அன்றைய வசூலுக்குச் சென்றுவிட்டு, பின் மில்லுக்குச் சென்று கணக்கு வழக்குகளைப் பார்வையிட்டு, வங்கிக்குச் சென்று விட்டு அதன் பின்னர் சைட்டுக்குச் சென்றான்.

அதுவரையிலும் முடிந்திருக்கும் வேலைகளைப் பார்வையிடுவான், பின் மதிய உணவு நேரத்திற்கு அனைவரையும் அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் வரும் வரை காத்திருப்பான். பெரும்பாலும் உள்ளூர், பக்கத்து ஊர் வேலையாட்கள் என்பதால் மதிய உணவு நேரத்திற்கு வீட்டிற்குச் சென்று விடுவர்.

அவர்கள் வரவும் அடுத்த செய்ய வேண்டிய வேலைகளைக் கூறிவிட்டு, இவன் மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்றுவிடுவான். பின்னர் வேலை நடக்கும் வேறு சில சைட்களுக்கும் சென்றுவிட்டு, இங்கு வேலை முடியும் அந்திநேரம் தான் வந்தமர்வான்.

சரவணன் இல்லாவிட்டாலும் இங்கே வேலைகள் சரியாக நடக்கும். அத்தனையும் பொறுப்பாக பார்த்துக் கொள்வது முகில் தான்.

சரவணனின் உறவுக்கார இளைஞன், படிப்பு முடியவும் தொழிலை கற்றுக்கொள் என சரவணனிடம் அனுப்பி வைத்து விட்டார் அவன் தந்தை.

மாலை வந்து வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுத்து அனுப்பி விட்டு, முடிந்த வேலைகளைப் பார்வையிடுவது, கையிருப்பு பொருட்களைப் பார்ப்பது, கணக்கு வழக்குகளைப் பார்ப்பது என அத்தனையும் முடித்துக் கிளம்ப, ஏழு அல்லது எட்டு மணியாவது ஆகிவிடும்.

பின்னர் அறையைப் பூட்டிச் சொர்ணத்திடம் சாவியைக் கொடுத்துவிட்டுத்தான் வீடு செல்வான். ஒருநாளும் லலிதா வந்து வாங்கியதே இல்லை.

ஒரு காலை உணவு நேரம் தங்கராசு அரிதாக வீட்டிற்கு வந்திருந்தான். சொர்ணம் வேலைக்குச் சென்றிருந்தார்.

லலிதா உணவு பரிமாறிய பின்னரே, “ஏன் மாமா வெளியூர் மார்கெட்ல வைச்சு உனக்கும் அந்த சரவணனுக்கும் எதுவும் பிரச்சனையா?” மெல்லக் கேட்டாள்.

விருட்டென நிமிர்ந்தவன், முறைப்பு கூடிய பார்வையில், “யார் சொன்னா? அவனா?” சீற, பதறியவள், “இருங்க மாமா, என் ஃப்ரண்ட் சித்ரா தான் போன வாரம் கோயில்ல பார்க்கும் போது சொன்னா” என்றாள் சமாதானமாக.

அமைதியுற்றவன் அள்ளி உண்டபடியே, “தைரியமிருந்தா எங்கிட்ட நேரா மோதிப் பார்டான்னு சொன்னேன், அந்தப் பயலுக்கு இங்க தான் வேலை நடக்குது போல, உன்னைக்கிட்ட பேசுனா இல்லை பிரச்சனை செய்தா எங்கிட்ட சொல்லு லலிதா” என்க, சரியெனத் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

அவனும் சொல்லிவை என்கிறான், இவனும் சொல் என்கிறான். இருவருக்குமான பகை விளையாட்டில் ஏனோ நான் தான் பகடையா? உள்ளே வெம்பினாள்.

என்னவென்று தங்கராசுவிடம் சொல்வாள்? சொன்னால் மீண்டும் இவனிடம் வந்து சண்டை தானே பிடிப்பான்? அதிலும் தங்கராசு எந்த நேரம் எப்படியிருப்பான்? எப்படி நடப்பான் என யாராலும் கணிக்க முடியாதே?

இந்த மாமா ஏன் பொது இடத்தில் வைத்து அவனிடம் சண்டையிட்டுள்ளாரோ நொந்து போனாள் லலிதா. வீண் பிரச்சனைகள் வேண்டாம் நினைத்தவள் இது பற்றி தங்கராசுவிடம் எதுவும் கூறாது விட்டுவிட்டாள். இவளால் முடிந்தது இது மட்டும் தான்.

ஆரம்பத்தில் இருந்தே சரவணனுடன் பிரச்சனை வருவதில் இவளுக்கு விருப்பமில்லை. ஆனால் சரவணனோ அத்தனைக்கும் இவள் தான் காரணம் எனக் கண்மூடிக்கொண்டு குருட்டுப் பிடிவாதத்தில் இருந்தான்.

Advertisement