Advertisement

அத்தியாயம் 03

நண்பகலை நெருங்கும் நேரம், வேப்பமரத்தின் தணிந்த காற்றை அனுபவித்தபடி திண்ணையில் அமர்ந்திருந்தாள் லலிதா. மதிய சமையலுக்குத் தேங்காயைத் துருவி கொண்டிருந்தாள். சமையல், வீட்டு வேலைகளை எல்லாம் லலிதாவே செய்து விடுவாள்.

பெரும்பாலும் பாட்டிக்கு வேலைகளே அதிகம் வைக்காது, தாங்காத குறையாக லலிதாவே கவனித்துக் கொள்வாள். பாட்டிக்கு வெளி வேலைகள் மட்டும் தான், அதுவுமே இவள் கண்டிப்பையும் மீறி அவராக இழுத்துப் போட்டுச் செய்வது தான்.

கல்லூரி படிப்பு முடிந்து கடந்த ஒருவாரமாகத்தான் வீட்டில் இருக்கிறாள். இதற்கே அத்தனை சலிப்பாக இருந்தது. உடன் பிறப்போ, தன் சோட்டுப் பெண்களோ, அக்கம் பக்கத்தினரோ என யாருமில்லை. உழைப்பு, ஓய்வு போக பெரும்பாலான நேரம் தனிமை தான்.

அடுத்த என்ன செய்வது என்ற யோசனையும் ஒருபுறம் ஓடிக்கொண்டே இருக்கிறது. மேற்படிப்பு அனுப்பும் எண்ணம் பாட்டிக்குத் துளியும் இல்லை என நன்கு அறிவாள். அதை மீறி அவரிடம் கேட்டுவிடவும் இவளால் இயலாது.

பெற்றோர்கள் இல்லாது, இத்தனை நாட்கள் பாட்டி தன்னை வளர்த்ததே பெரிய விஷயம். இவள் வீடு, தோப்பு என்றாலும் உழைப்பு அவர்களது தானே? இதுநாள் வரையிலும் சின்ன சின்ன வெளி வேலைக்குக் கூட இவளை அனுப்பியதில்லை.

படிப்பு நேரம் போக, வீட்டு வேலைகளும் தோப்பு வேலைகளும் சிறிது பழக்கம். மத்தபடி அத்தனைக்கும் இவர்களைச் சார்ந்த வாழ்க்கையே! அப்படித்தான் வளர்க்கப்பட்டிருந்தாள்.

பாட்டி ஊருக்குள் இருக்கும் ஒரு சிறிய உணவகத்திற்குக் காலையில் வேலைக்குச் சென்று விடுவார். இட்லி, வடை, பஜ்ஜி போட்டுக் கொடுத்துவிட்டு மதியம் பனிரெண்டு மணிக்குத்தான் வேலை முடிந்து வருவார்.

சொர்ணம் கடுமையான உழைப்பாளி. தங்கராசு வீட்டுத் தேவைக்குச் சிறிது கூடபணம் தரமாட்டான், சொர்ணத்தின் சொற்ப வருமானத்தில் தான் குடும்பம் ஓடுகிறது. அதற்குள்ளும் சிக்கனமாக நடத்திக் கொள்ளும் திறமைசாலி சொர்ணம்.

பின் பாதி வேளை வாழைத்தோப்பை கவனிப்பார் சொர்ணம். இதில் மொத்தமாக கை சேரும் வருமானம் தான் லலிதாவின் படிப்பு செலவிற்கு, அது போக இவளுக்கு என சிறுகச் சிறுக தங்க நகையும் சேர்க்கிறார்.

லலிதாவின் மீது அன்பைக் கொட்டினர் என்றுவிட முடியாது, ஆனால் ஆதரவாக இருக்கின்றனர்.

மேற்படிப்பிற்கு அனுமதி இல்லை என்றால் அடுத்ததாகத் தனது திருமணம் தான் பாட்டியின் குறிக்கோளாக இருக்கும் என நன்கு புரிந்தது.

அதற்குள்ளாகச் சிறிது சம்பாத்தியம் வெளி உலக அனுபவம் பெற வேண்டும், இதற்காகவாவது வேலைக்குச் செல்ல வேண்டும். இது பற்றி பாட்டியிடம் பேச வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தாள்.

அந்த நேரம் இவள் சிந்தனையைத் தடை செய்தது, வெளிப்புறம் புதிதாகக் கேட்கும் வாகனங்களின் அதிர்ந்த சத்தம்.

என்னவோ என்ற எண்ணத்துடன் திண்ணையில் எழுந்து நின்றவள் எட்டிப்பார்த்தாள்.

வீட்டிற்கு வெளியே இருக்கும் வேப்பமரத்திற்கு அருகே காலி இடத்தில் ஒரு லோடு வாகனம் நிற்க, அதிலிருந்து இறங்கி நிற்கும் வேலையாட்கள் தகர சீட்கள், ஜல்லி, இரும்பு கம்பிகள் எனக் கட்டுமானப் பொருட்களை இறக்கி வைக்கத் தொடங்கினர்.

அங்கே ஒரு கார் நிற்க, அதன் அருகே திரும்பி நின்றபடி ஒருவன், அனைவரையும் வேலை ஏவியபடி இருந்தான்.

முகம் பாராமலே அது சரவண பாண்டியன் தான் என்பது புரிய, விருட்டென மீண்டும் திண்ணையில் மறைந்து அமர்ந்து கொண்டாள் லலிதா. என்னவோ அவனை எதார்த்தமாக எதிர்கொள்ள இயலவில்லை.

இந்த தங்கராசு மாமா இவங்க கடனை கொடுத்துட்டாங்களா இல்லையா? என்றே யோசனை ஓடியது.

இவள் அமர்ந்திருக்கும் திண்ணையைத் தாண்டி பெரிய முற்றமும், அதற்கும் முன்பாக இரும்பு முள் வேலியும் வெய்யப்பட்டுள்ளது. அதில் ஒருபுறம் முல்லைக்கொடியும் மறுபுறம் அவரைக்கொடியும் அடர்த்தியாக, மறைசலாகப் படர்ந்திருக்கிறது. வெளிப்புறம் இருந்து பார்த்தால் உள்ளே அமர்ந்திருப்பவர்களைக் காண இயலாது.

பொருட்களை இறக்கி வைத்து அனைவரும் கிளம்பியிருக்க, இறுதியாக சரவணனின் கார் கிளம்பியது.

இவள் வீட்டைத் தாண்டிச் சென்ற சரவணனும் ஒருபார்வை பார்த்தபடி தான் சென்றான்.

அதன் பின்பு, தங்கராசு வந்த போது, கடனை கொடுத்து விட்டான் எனக் கேட்டறிந்து கொண்டாள் லலிதா. அப்போது தான் நெஞ்சிலேறிய பாரம் நீங்கியதைப் போன்ற நிம்மதியும் வந்தது.

மறுநாளும் அங்கே வேலையாட்கள் வந்திருந்தனர். மூவர் இவர்கள் வீட்டிற்கு நேராகப் பக்கவாட்டில் தகர ஷீட்களை அடித்து தற்காலிக அறை அமைத்துக் கொண்டிருக்க, மற்ற அனைவரும் சாலையைக் கடந்து எதிர்புறம் இருக்கும் காலி இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

பதினோரு மணிப்பொழுதில் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினான் சரவணன்.

அவனும் வேலையாட்களிடம் பேசி விட்டு சிறிது நேரம் மேற்பார்வை செய்து கொண்டிருந்தான். உச்சிப்பொழுதில் வெயில் ஏறி விட, அவன் மில்லுக்குக் கிளம்பிச் சென்றவன், மீண்டும் மாலை தான் இங்கு வந்தான்.

நண்பகலுக்கு மேலாக வீட்டிலிருக்கும் சொர்ணத்திற்கு இருப்புக் கொள்ளவில்லை. பெரும்பாலும் வேலை செய்பவர்கள், உள்ளூரும் பக்கத்து ஊரும் என அறிந்த முகங்களாக இருந்தனர். ஒருவர் வந்து தண்ணீர் கேட்க, ஒரு குடம் குடிநீரைக் கொடுத்த சொர்ணம், சென்று என்ன வேலை நடக்கிறது என விசாரித்து வந்திருந்தார்.

சற்று தூரத்தில் இருக்கும் ஆற்றில் இருந்து குடிநீர் குழாய் பதித்து வந்து, இவர்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் அரசு காலி இடத்தில் சுத்திகரிப்பு நிலையமும் அருகே குடிநீர்த் தொட்டியும் அமைக்க வேண்டும். குடிநீர் தொட்டிலில் இருந்து நீரானது ஊருக்குள் இருக்கும் மேல் நிலை குடிநீர்த் தொட்டிக்கு அனுப்பப்பட்டு, தெருவிற்கு ஒன்றாக இருக்கும் குடிநீர் குழாயின் வாயிலாகப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

சுத்திகரிப்பு நிலையம், குடிநீர்த் தொட்டி அமைப்பது வரையிலான, அரசு கட்டுமான ஒப்பந்தத்தைப் பெற்றிருந்தான் சரவணன்.

அவன் பொறுப்பில் தான், இங்கு வேலைகள் நடைபெறுகிறது என்பது வரை விசாரித்து வந்துவிட்டார் சொர்ணம்.

பேச்சுவாக்கில் லலிதாவிடம் அத்தனையும் கூற, என்ன இன்னும் சில மாதங்களுக்கு இவனுக்கு இங்கு தான் வேலையா? ஏனோ மனம் பிடித்தமின்மையும் அதிருப்தியையும் காட்டியது.

பின்புற வாழை தோப்பிற்குள் சிறு பகுதியைக் காய்கறி பாத்தியாக்கி, வீட்டுத் தேவைக்கானக் காய்கறி வளர்த்திருந்தார் சொர்ணம். கடையில் வாங்குவதே இல்லை இங்கு விளைவது தான் எப்போதும் வீட்டிற்கு.

மாலை நேரம் மறுநாள் சமையலுக்குக் காய்கறிகளைப் பார்த்துப் பறித்துக் கொண்டிருந்தார் சொர்ணம்.

மெல்லிய இருள் சூழ்ந்த நேரம், ஏழு மணி. வெளிவாசலில் மின்சார விளக்கைப் போடுவதற்கு, வாசலில் வந்து திண்ணையில் நிற்க, சரியாக வேலியைத் தாண்டி வாசல் நோக்கி வந்திருந்தான் சரவணன்.

“ஏங்க இந்த சாவியைக் கொஞ்சம்..” என்றவன் குரலிலே அது சரவணன் தான் என்பதை உணர்ந்து, திரும்பியும் பார்க்காத லலிதா திண்ணையில் இருந்து படிகளில் குதித்து, மின்னலென உள்ளே ஓடியிருந்தாள்.

“ஏம்மா.. கொஞ்சம் நில்லும்மா” எனச் சரவணன் ஓங்கி குரல் கொடுக்க, அதற்குள்ளாக மறைந்திருந்தாள்.

இவன் என்னவோ பூச்சாண்டி போன்றும், அவள் என்னவோ பயந்து ஓடும் சிறுபிள்ளை போலும் சென்று விட்டாள்.

ஆனால் சரவணனிற்கு இச்செயல் பெரும் கோபத்தைக் கொடுத்தது, இவன் அழைக்க, அவள் அலட்சியமாகச் சென்றதாக நினைத்தான். முகத்தில் அறைந்து போன்று அவமானமாக உணர, சுளீரென சினம் வந்தது.

வந்த வழியிலே திரும்ப, “வாங்க தம்பி, வாங்க..” என்ற குரலோடு மெல்ல படியிறங்கி சொர்ணம் வந்துவிட, மீண்டும் திரும்பினான்.

உள்ளே சென்ற லலிதா தான் தோப்பில் இருக்கும் இவரை அனுப்பி வைத்திருப்பாள் என்றெல்லாம் இவன் யோசிக்கவில்லை. தன் குரலுக்கு இவர் வந்ததாக மட்டுமே நினைத்தான்.

“என்ன விஷயம்? உள்ள வாங்க தம்பி” கனிந்த முகத்தோடு, வாஞ்சையாக அழைத்தார்.

பெரிய வீட்டுப்பிள்ளை என்னும் மரியாதை! இவன் தந்தையின் வசதிக்காக மட்டும் வரும் மரியாதை இல்லை, அவர் இவர்களுக்குச் செய்திருக்கும் உதவிக்காகவும் தரும் அன்பு.

ஊருக்கு வந்த புதிதில் வெளியூர் ஆட்கள் என ஊர் விசேஷங்கள், கோயில் திருவிழாக்களில் வரி வாங்காது ஊர் பெருசுகள் ஒதுக்க, எப்படியிருந்தாலும் லலிதாவின் பெற்றோர்கள் இந்த ஊர் தானே? அவர்கள் வீட்டில் அவர்கள் ஸ்தானத்தில் தானே இருக்கிறார்கள், லலிதாவிற்குச் சொந்த ஊர் தானே அவளை எவ்வாறு ஒதுக்க இயலும் என வாதிட்டு ஊரோடு சேர்த்து வைத்ததும் இவர் தான்.

அது மட்டுமின்றி அதற்கு முன்பும் லலிதாவின் பெற்றோர்கள் தவறிய போது, காரணமாக இருந்த கல் குவாரியில் பேசி, முறையிட்டு கணிசமான தொகை ஒன்றை நஷ்ட ஈடாக வாங்கிக் கொடுத்தார். அந்த பணத்தில் வாங்கியது தான் இந்த வாழைத்தோப்பு!

லலிதாவின் பெற்றோர்களிடம் இந்த ஓட்டு வீடு மட்டுமே இருக்க, அதை ஒட்டிய விவசாய நிலம் விலைக்கு வர, கையில் இருக்கும் பணத்திற்கு வாங்கிப் போட்டு, உழைத்து தோப்பை உருவாக்கி வைத்திருக்கிறார் சொர்ணம்.

சரவணனின் தந்தை இவர்களுக்குஅவ்வளவு உதவி செய்திருக்கிறார் அந்த நன்றியுணர்வு இன்னும் சொர்ணத்திடம் உண்டு.

அதனால் ஊற்றெடுத்த அன்பும் மரியாதையும் சரவணன் மேலும் பொழிந்தார். காரணம் புரியாத போதும் பெரியவரின் அன்பை அந்த முகத்திலும் குரலிலும் இவனால் நன்கு உணர முடிந்தது.

“இருக்கட்டும் பாட்டி, இங்க பக்கத்துல தகரம் அடிச்சி ரூம் போட்டு இருக்கோம். உள்ளதான் சிமெண்ட் மத்த பொருள் எல்லாம் இருக்கு. காலையில நான் வர்ற லேட் ஆகும். ஒன்பது மணிக்கெல்லாம் ஆளுங்க வேலைக்கு வந்திடுவாங்க, அவங்க வரவும் இந்த சாவியை கொடுக்கணும்” என்றவன் கேட்டு நின்றான்.

“அதுக்கு என்ன இப்போ, என் பேத்தி வீட்டுல தான் இருப்பா.. கொடுங்க, கொடுத்திடுவா” என்றபடியே வாங்கிக் கொண்டார் சொர்ணம்.

சாவியைக் கொடுத்த சரவணன் ஒரு தலையசைப்போடு விடைபெற்றுச் சென்றான்.

லலிதாவின் செயல் ஏற்கனவே அவள் மீது இருக்கும் கோபத்திற்குத் தூபம் போட்டிருக்க, மேலும் புகைச்சலில் கனன்று கொண்டே இருந்தான்.

அடுத்த நாள் காலை எட்டரை மணிக்கு எல்லாம் வந்து விட்ட வேலையாட்கள் லலிதாவிடம் வந்து சாவியை வாங்கிக் கொண்டு, அவர்கள் வேலையைத் தொடங்கி இருந்தனர்.

ஒரு வாரம் ஓடியிருந்தது. நிலத்தைச் சுத்தம் செய்து அளந்து, அவர்கள் தொகுதி எம்.ல்.ஏ மற்றும் அரசியல் தலைவர்கள், ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி, பூஜையிட்டு, புகைப்படம் எடுத்து, என அத்தனையும் முடிந்து முறையாக வேலைகள் நடக்கத் தொடங்கி இருந்தது.

இந்த ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிக்கும் போதே இதற்கான திட்ட வரைபடமும் சரவணன் தயார் செய்து வைத்திருக்க, இப்போது ஒப்புதல் பெற்று வேலைகள் தொடங்கினான்.

முதல் நாள் போலே சரவணனைப் பார்த்தாலே நில்லாது ஓடி விடுவாள் லலிதா. பெரும்பாலும் வீட்டை விட்டே வராதவள்.

காலையிலே வேலையாட்கள் வந்து வேலையைத் தொடங்கி இருந்தனர். ஆற்றோரத்தில் வேலை நடந்து கொண்டிருக்க, அதை மேற்பார்வை பார்த்து வந்த சரவணன் அங்கே வேப்பமர நிழலில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியைப் போட்டு அமர்ந்துக் கொண்டான்.

சாராதவைப் பற்றி யோசித்தபடியே, கண்மூடி படுத்திருந்தவன் மீது  குற்றாலச் சாரலாகச் சில்லென்று சில துளிகள் விழ, திடுக்கிட்டு விழித்தான்.

விருட்டென எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க, வேலிக்கு மறுபுறம் கையில் ஈரத்துணியோடு நின்றிருந்தாள் லலிதா.

Advertisement