Advertisement

அத்தியாயம் 02

காலையில் எழுந்ததுமே இந்த தங்கராசு மாமாவை எங்குச் சென்று தேடுவது? என்ற யோசனையில் தவித்துக் கொண்டு தானிருந்தாள் லலிதா.

இவள் நல்ல நேரமாக, அன்றைய காலைப் பொழுதே வீட்டிற்கு வந்தான் தங்கராசு.

வந்துட்டான் தண்டச்சோறு, உழைச்சி ஒத்த ரூபாய் கூட வீட்டுக்குக் கொடுக்கிறதில்லை. சாப்பாட்டுக்கு மட்டும் நேரத்துக்கு வந்துடுவான். எல்லாம் என் வயித்துல வந்து பிறந்திருக்கான் பார், இன்னும் என்னெல்லாம் பார்க்கப் போறேனோ? லலிதா அதுக்கு சாப்பாடு போட்டு விடு” வளர்ந்த ஆண் மகன் என்னும் மரியாதை இன்றி பொறுப்பில்லாத பிள்ளையின் மீதான ஆதங்கத்தில் கத்தினார் சொர்ணம்.

வீட்டிற்கு வந்தால் எப்போதும் இதே பல்லவி தான். கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன விஷயம். சிறிதும் மானம், ரோஷம் பார்க்காது, சட்டையில் படிந்த தூசியாகத் தட்டிவிட்டுச் சென்றான் தங்கராசு.

உணவுன்ன அமர, அசூகையும் அதிருப்தியுமாகப் பார்த்தாள் லலிதா. என்றுமில்லாத இந்தப் பார்வை இன்று புதிதாக, இவனால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எடுத்து வைத்துப் பரிமாறிய லலிதா, மாமனிடம் பேசுவதற்கு மௌனமாக மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வையிலும் ஓர் ஆராய்ச்சி!

அதற்குள்ளாக, “உழைச்ச காசு தான் வீடு வரலை, கடன் மட்டும் வீடு வரைக்கும் இழுத்துட்டு வந்திருக்க? அப்படி என்னடா கஷ்டம்? கஞ்சிக்கு வழி இல்லைன்னு போய் ஐம்பது ஆயிரம் கடன் வாங்கியிருக்க?” பின் கட்டில் இருந்து உள் வரைக்கும் கணீரென கத்தினார் பெரியவர்.

அப்போதும் கண்டு கொள்ளாது உணவினை அள்ளி வாயில் திணித்துக் கொண்டே, “என்னாச்சு லலிதா?” எதிரே அமர்ந்திருப்பவளிடம் கேட்டான்.

சரவணன் வீட்டிற்கே வந்து கடன் கேட்டுச் சென்றது, பாட்டியிடம் இவள் பணம் கேட்டது, அப்போது தொடங்கிய சொர்ணத்தின் கச்சேரி என அனைத்தையும் கூறியவளுக்கு விழி கலங்கி கண்ணீரால் நிறைந்து போனது.

வீட்டுக்கே வந்து கேட்குறாங்க, நான் தான் பதில் சொல்ல வேண்டியிருக்கு, எனக்கு அவமானமா இருக்கு, எப்படியாவது அந்தக் கடனை கொடுத்துடுங்க மாமா!” தொண்டை கரகரக்க வேண்டினாள்.

தங்கள் வீட்டுப்பெண்ணை இவ்வாறு காண, தங்கராசுவிற்கு மனம் தாங்கவில்லை.

ஒன்னா இரண்டா ஐம்பது ஆயிரம் குடிச்சி, சீட்டாடி தொலைச்சி இருப்பானே.. பாவி மகன்!” வேலை பார்த்துக் கொண்டே இருந்தாலும் சொர்ணத்தின் பாடல் மட்டும் முடிந்த பாடில்லை.

லலிதாவோ தயக்கமே இன்றி, “காசு இல்லைன்னா என் நகையை வைச்சாவது கொடுத்திடுங்க மாமா, பாட்டிகிட்ட நான் சொல்ல மாட்டேன்” இறைஞ்சினாள்.

சிறு பெண்ணின் முன் தான் குறைந்து கீழிறங்கிப் போவதைத் தாங்க முடியவில்லை. குடிகாரனாக இருந்தாலும் பாவையின் பார்வையில் மரியாதை உண்டு, இன்று கடன்காரனான போது, அது குறைந்து போனது. மனமே தணலாக எரிந்தது.

விருட்டென எழுந்தவன், இவளிடம் மட்டும் கூறிக்கொண்டு விறுவிறுவென கிளம்பி விட்டான்.

காலை நேரம், குளித்து முடித்து பளீரென்ற வெள்ளைச் சட்டையோடு வெளியில் வந்தான் சரவணன்.

உணவு மேசையில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த, அக்கா சாரதா வேலையில் ஒரு கண்ணும், அருகில் இருக்கும் அலைபேசியில் ஒரு கண்ணுமாக இருந்தாள்.

அருகே இருக்கையில் அமர்ந்தபடியே, “என்னக்கா செக்கப் போனியா?” என்றவன் விசாரிக்க, விட்டேத்தியாக மறுப்பாய் தலையசைத்தாள்.

சாரதாவிற்கு இது ஏழாம் மாதம்! கடந்த வாரம் தான் வளைகாப்பு விழாவைச் சிறப்பாக நிகழ்த்தி பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

அவளுக்கோ பார்வை இன்னும் அலைபேசியில் தான்.

நேத்து தானே டாக்டர் வரச்சொல்லி இருந்தாங்க” குரல் உயராது தமையன் கண்டிக்க, “எனக்கு மட்டும் இந்த குழந்தை மேல அக்கறை இருந்தா போதுமா?” சுள்ளென கேட்டாள்.

சரவணனுக்கு முகமே வாடிப்போனது, என்னவென்று பதிலுரைப்பான்? மௌனமானான்.

சாரதா இப்படிப் பேசுபவளே கிடையாது, முரட்டு மாமாவின் குணம் இவளுக்கும் ஒட்டிக்கொண்டது போலும் மனதில் நொடிந்தான்.

ஒருமுறை மாமா கதிர்வேலிடம் பேச வேண்டுமென்று மனதில் முடிவு செய்தவன் எழுந்து கொண்டான்.

என்ன சரவணா இவ்வளவு காலையிலே வெளியே கிளம்பிட்ட? கொஞ்சம் பொறு, டிஃபன் முடிச்சிட்டு போகலாம்” என்றபடியே அன்னை ராசாத்தி வர, “இல்லைம்மா வேலையிருக்கு, வெளியே பார்த்துக்கிறேன்” நில்லாது பதில் கூறியபடியே விறுவிறுவென வெளியேறி விட்டான்.

வாசலில் வண்டியை துடைக்கும் ஓட்டுநரோடு நின்று பேசிக் கொண்டிருந்த  ரத்தின பாண்டியன், சரவணனைக் காண, அருகே வந்தார்.

இருசக்கர வாகனத்தை இயக்கியபடியே தந்தையைப் பார்க்க, “நேத்து தங்கராசுகிட்ட கடனை வசூலிக்கச் சொன்னேனே கேட்டியா?” விசாரிக்க, தலையாட்டினான்.

அதே நேரம், லலிதாவின் முகமும் ஒரு நொடி மின்னலென நினைவில் வந்து போனது.

நேத்து தக்காளி, கத்தரி லோடு போயிருக்கு. இன்னைக்கு டவுன் பக்கம் போனா, சண்முகம் காய்கறி மண்டியில கலெக்ஷன் வாங்கிட்டு வந்துடு” என்க, “சரிங்கப்பா..” என்றபடியே கிளம்பி இருந்தான்.

அன்றைய வேலைகள் எல்லாம் பட்டியலாக வரிசைக்கட்டி நினைவில் வர, சுறுசுறுப்பாகக் கிளம்பினான்.

ரத்தின பாண்டியன் மிகுந்த இரக்கக் குணம் கொண்டவர். ஊருக்குள் அனைவருக்குமே அவ்வளவு செய்திருக்கிறார். யார் என்ன என்ற அடையாள பேதம் பார்க்காமல் உதவி கேட்டு வருபவர்களுக்குச் செய்து விடுவார்.

அதிலும் அவசர தேவை எனப் பண உதவி கேட்டு வந்தால் எப்போது முடியுமோ அப்போது திரும்பிக் கொடுங்கள் என மறுக்காது செய்வார். இவர் இரக்கக் குணத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் மக்கள் சிலர் இருந்த போதும், இவர் கொள்கையில் மாறுவதே இல்லை.

ஆகையாலே பெரும்பாலும் வசூல் வேலைகளைச் சரவண பாண்டியன் கையில் எடுத்துக் கொள்வான். வட்டிக்குக் கொடுப்பது தொழில் இல்லை என்றாலும் தந்தை கொடுத்தவற்றை இவன் தான் வசூலிப்பான். அதிலும் ஏமாற்றுபவர்களிடம் சற்று கறாராகக் கண்டிப்பாகத்தான் இவன் வசூல் இருக்கும்.

காய்கறி சந்தையில் விளைச்சல் பொருளை இறக்கிவிட்டு தனது லோடு ஆட்டோவை உதவியாளன் இயக்க, அருகே இருக்கும் இருக்கையில் அரைப் போதை மயக்கத்தில் கிடந்தான் தங்கராசு.

வார நாட்கள் என்றாலும் வியாபாரிகளும், பொது மக்களும் புழங்கும் சந்தை ஜனத்திரளோடு ஜேஜேவென இருந்தது.

தனது இருசக்கர வாகனத்தை பார்க்கிங்கில் விட்டுவிட்டு வசூலுக்கு வந்திருந்தான் சரவணன்.

எதார்த்தமாக வெளிப்புறம் நோக்கிய தங்கராசுவின் விழிகளில் இவன்  பட்டுவிட, சட்டென வண்டியை நிறுத்தக் கூறி இறங்கிக் கொண்டவன் விறுவிறுவென சரவணனை நோக்கிச் சென்றான்.

வசூல் செய்ய வேண்டியிருக்கும் கடையை நோக்கி விறுவிறுவென சென்று கொண்டிருந்த சரவணனின் வேகம் இடையில் வந்து நின்ற தங்கராசுவால் தடைப்பட்டது.

சரவணன் கேள்வியாகப் பார்க்க, போதையில் சிவந்த விழிகள் மேலும் சிவக்க, இறுகிய தோற்றமாக இவனை நோக்கினான் தங்கராசு.

ஏன்டா கடன் என்ன நான் உங்கிட்ட வாங்கினேனா? உங்கப்பா கிட்ட தானே? அப்புறம் ஏன் நீ வந்து கேட்குற? அதுவும் வீட்டுல ஆள் இல்லாம, பொண்ணு தனியா இருக்கிற நேரமா வந்திருக்க?” என உறுமியபடியே சட்டைப்பையில் இருந்த பணத்தையும் எடுத்து நீட்டினான்.

இவனின் உறுமிய குரலின் அதிர்வுக்கு, சுற்றியிருப்போர் எல்லாம் திரும்பிப் பார்க்க, தெரிந்தவர்கள் சிலர் வர, சிறு கூட்டமே கூடியது.

தங்கராசுவின் உதவியாளன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி ஓடி வந்தான். போதையில் வேறு இருக்கிறான், ஆள் தெரியாமல் எதுவும் பேசி, பிரச்சனை செய்துவிடுவானோ என்ற பயம்!

சரவணனுக்கும் கண்மண் தெரியாத அளவிற்குக் கோபம். நரம்பெல்லாம் விரைத்து, புடைத்தது. பொது இடம் என்பதும் நினைவில் இருக்க, “வார்த்தை! வார்த்தை.. மரியாதையா பேசு?” விரல் நீட்டி எச்சரித்தான். மிகுந்த பிரயத்தனப்பட்டு சினத்தைச் சிறை செய்திருந்தான்.

என் தந்தையின் பணத்தை நான் தானே கேட்க முடியும்? அதிலும் தான் வசூல் ராஜா என்பது ஊரறிந்த விஷயம் வேறு, இவன் என்ன முட்டாள்தனமாகப் பேசுகிறான் என்ற எரிச்சல் மண்டியது.

லலிதா பார்த்த பார்வையும் அவளின் கண்ணீரும் இன்னும் அப்படியே தங்கராசுவிற்கு நினைவில் நின்று குத்திக் கீற, ஏற்றி இருக்கும் போதையும் சேர்ந்து அவனை நிலையிழந்து ஆட வைத்திருந்தது.

உனக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கு? கடன் கொடுத்துட்டா என்ன வேணா செய்யலாம்னு நினைப்பா? வீடேறி வந்து கேட்பியோ? வசூல்னு சொல்லிட்டு வீட்டுல தனியா இருக்கிற பொண்ணுகிட்ட ரகளை செஞ்சிருக்க?” சிவந்த கண்கள் அனலாய் தகிக்க, மேலும் போதையில் வாய் குழற வார்த்தையை வீசினான் தங்கராசு.

டேய்.. மரியாதையையா பேசு?” என்ற கூவலோடு அவன் சட்டையைப் பிடித்திருந்தான் சரவணன். கட்டுப்பாடும் பொறுமையும் காற்றில் பறக்கும் தூசியாகிப் போனது சரவணனிடம்.

இவர்களைத் தெரிந்தவர்கள், இவர்கள் ஊர் ஆட்கள் என்றால் சரி, புதிதாகப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? தன்னைப் பேசுவதாக நினைத்து அவன் வீட்டுப் பெண்ணையும் அசிங்கப்படுத்துகிறானே? முட்டாள்! முட்டாள்! கொதித்துப் போனான்.

ஆத்திரமும் இதற்கு மேலும் இவன் பேசக் கூடாது என்ற வெறியும் மட்டுமே இருக்க, கொத்தாகப் பற்றிய சட்டையோடு தங்கராசுவின் கழுத்தையும் நெரித்துப் பிடித்தான் சரவணன்.

வயதில் பெரியவன், தடித்த திடகாத்திரமான தேகம் கொண்டவன் தங்கராசு இருந்தும் போதையின் பிடியில் நிலையில்லாது மிதப்பவனால் சரவணனிடம் வலிமையைத் தாங்க முடியவில்லை.

அதற்குள்ளாக தங்கராசுவின் உதவியாளன் வந்து அவனைக் காப்பாற்ற முயல, காய் கறிக்கடை சண்முகம் வந்து சரவணனைப் பிடித்துத் தடுத்திருந்தார்.

விடுங்க தம்பி, விடுங்க.. உங்க லெவலுக்கு குடிகாரப்பயலுக கூட எல்லாம் மல்லுக்கு நிக்கலாமா?” எனச் சமாதானப் படுத்தியபடியே, தண்ணீரைக் கொடுத்து அமைதிப்படுத்த முயன்றார் சண்முகம்.

அந்தப்புறம் தங்கராசுவின் உதவியாளனும் அவனை அமைதிப்படுத்த முயல, அவனை அடித்து தள்ளி விட்டு ஆடிக்கொண்டே இருந்தவன், வாய்க்கு வந்த வார்த்தைகளில் எல்லாம் சத்தமிட்டான். ஏற்கனவே இருக்கும் கோபத்தோடு கழுத்தைப் பிடித்த காரணமும் சேர்ந்து கொள்ள, சரவணனை நோக்கிப் பிதற்றிக் கொண்டே இருந்தான்.

கைகளை உதறி, கசங்கிய சட்டை நீவிக் கொண்டிருந்தான் சரவணன். “இவ்வளவு ரோஷம் இருக்கிறவன் வாங்கின பணத்தைக் கொடுத்திருந்தா நான் ஏன் கேட்கப் போறேன்? பொய் சொல்லி பணம் வாங்கிட்டு அதை கேட்கிறதுக்கு வீட்டுக்கும் வரக் கூடாதாமா?” ஆத்திரத்தில் அனத்திக் கொண்டே இருந்தான்.

இது தங்கராசுவின் காதுகளில் துல்லியமாக விழுந்தது. இடையில் நில்லாத உடையையும் இழுத்துப் பிடித்துக்கொண்டு விறுவிறுவென வந்தவன், “போதும் நிறுத்து, இந்தா உன் காசு.. இனி என் வீட்டுப் பக்கம் வந்தியோ இல்லை அவளோடு வம்பு செய்தியோ சும்மா விட மாட்டேன் பார்த்துக்கோ. உன் வீரத்தை எல்லாம் என் வீட்டுப் பொண்ணுகிட்ட காட்டாம, தைரியமிருந்தா எங்கிட்ட காட்டு” பிதற்றினான்.

அருகில் இருந்த சண்முகம் பணத்தை வாங்கியபடியே, “உன்னையெல்லாம் எங்களுக்குச் சமமா நடத்துனது தான்டா தப்பு” நொந்து புலம்பிக் கொள்ள, காதிலே கேளாது கிளம்பி இருந்தான் தங்கராசு.

சண்முகத்தின் கடையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த சரவணனிற்கு ஆத்திரம் அடங்க மறுத்தது. எந்த அளவிற்கு தங்கராசுவின் மீது கோபமோ அதற்குச் சற்றும் குறைவில்லாத சினம் லலிதாவின் மீதும்.

என்னை என்னவென்று நினைத்தாள்? தனியாக இருக்கும் பெண்ணிடம் வசூல் செய்பவன் என கீழ்த்தனமாக நினைத்தாளோ? எவ்வாறு அவள் தன்னை இப்படி நினைக்கலாம்? உள்ளமே கொதித்தது.

நான் என்ன அவளிடம் வம்பு செய்தேனா? குறைவாகப் பேசினேனா? இல்லையே அவளை பற்றியே பேசவில்லை! என் பணத்தைக் கேட்டேன், பின் ஏன் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஒன்றை இரண்டாக்கி இவனிடம் கொளுத்தி வைத்திருக்கிறாள்? ஆற்றாமையில் விம்மினான்.

உள்ளே வந்த சண்முகம் தங்கராசு கொடுத்த பணம் மற்றும் அவர் தர வேண்டிய பணம் என அத்தனையும் சேர்த்து அவனிடம் ஒப்படைத்தார்.

பின், “நீங்க ஏன் தம்பி மார்க்கெட்ல வைச்சு குடிகாரன் கிட்ட எல்லாம் பிரச்சனை செய்து கிட்டு நம்ம கௌரவத்தைக் குறைச்சிக்கிறீங்க..” என்றவர் வருத்தம் தெரிவிக்க, நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்தவன் பதிலேதும் பேசவில்லை.

உண்மையில் தங்கராசு தானே வந்து பிரச்சனை செய்தான்? இவரே இப்படி நினைத்தால் விஷயம் கேள்விப்படும் அனைவரும் அப்படித் தானே நினைப்பர்? ஏன் பார்த்தவர்களே இவன் என்னவோ கந்து வட்டிக்காரன், கொடுமைக்காரன், பெண்ணிடம் வம்பு செய்பவன் என்று தானே நினைப்பார்கள்? ஒரு மாதிரியாக இந்த எண்ணமே உள்ளே குடைந்து கொண்டே இருக்க, மிகுந்த அவமானமாக உணர்ந்தான் சரவணன்.

இதுக்கு நம்ம ஆளுங்ககிட்ட சொன்னா இரண்டு தட்டுத்தட்டி பணத்தை வாங்கிட்டு வந்திடப் போறாங்க. இவனை எல்லாம் கவனிக்கிற விதத்துல கவனிச்சா தான்.. ” மேலும் அவர் ஆதங்கம் தீரப் புலம்பிக் கொண்டே இருக்க, “கிளம்புறேன் அண்ணே” விடைபெற்று வெளியேறி இருந்தான் சரவண பாண்டியன்.

Advertisement