Advertisement

அத்தியாயம் 14

காவ்யா வாழ்த்திச் சென்ற பின், மனமெங்கும் மணக்கோலத்தில் தன் மங்கை வந்து நிறைய, இனிய கனவில் சுற்றி வந்தான் சரவணன்.

கண் திறந்திருந்தும் பகல் கனவில் சுற்றி வருபவனுக்குக் காலுக்குக் கீழ் கிடக்கும் பலகையும் அதன் அடியில் நீட்டிக் கொண்டிருக்கும் கூர்மையான இரும்புக் கம்பியும் கண்ணுக்குத் தெரியவில்லை.

வலி உணர்ந்தவன் சற்று அலறிய பின்பே குனிந்து காண, உள் பாதத்தில் கீறி, குருதி கொட்டிக் கொண்டிருந்தது.

இவன் குரலுக்கு ஓடி வந்த முகில், தடுமாறிய சரவணனைத் தாங்கிப்பிடித்தான்.

என்னண்ணே பார்த்து வர மாட்டியா? கால்ல பார் இரத்தம்?” கடிந்து கொண்டே மெல்ல இவனை நடத்தி வந்திருந்தான் முகில்.

வா ஹாஸ்பிடல் போயிடலாம்..அழைப்போடு கார் அருகே நடத்தி வந்திருக்க, “வேண்டாம்டா.. சின்னதா ஒரு கம்பி கீறுனதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யாதஎன்றபடி முகிலைப் பற்றிக்கொண்டு வந்தவன், லலிதாவின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான்.

என்ன நினைத்தானோ, இவன் எண்ணம் அறிந்தானோ, “லலிதா.. சிஸ்டர்..ஓங்கி, உள் நோக்கி குரல் கொடுத்தான் முகில்.

இவன் குரல் உள்ளே லலிதாவிற்குக் கேட்க, முகிலை எரித்து பஸ்பமாக்கி விடுவதைப் போல் முறைத்தான் சரவணன்.

ஹோ.. அண்ணி இல்லை..? இனிமே அண்ணின்னே சொல்றேன்” முகில் உறவுமுறையைத் திருத்த, “டேய் முதல்ல மெடிக்கலுக்குப் போய், பேண்டேஜ், மருந்து எல்லாம் வாங்கிட்டு வாடா” சரவணன் கூற, தலையாட்டிவிட்டுக் கிளம்பினான் முகில்.

சரியாக வெளியே வந்த லலிதா, வீட்டைத் தாண்டி செல்லும் முகிலைப் பார்த்துவிட்டுத் திரும்ப, சரவணன் காலை நீட்டியபடி திண்ணையில் அமர்ந்திருப்பதைக் கவனித்தாள்.

என்னாயிற்று?’ மனம் பதறியவளின் பார்வை இவனை நொடியில் ஆராய, காலில் வழியும் இரத்ததை கவனித்துவிட்டாள்.

ஐயோ.. இரத்தம்? என்ன.. இது எப்படி?” வார்த்தை குழறியபடி அருகில் வந்த லலிதா, சரவணனின் கால்களைத் தொட முயன்றான்.

இவள் குரலுக்கே நிமிர்ந்து இவளைக் கவனித்த சரவணன், தன் கால்களைப் பற்ற வரும் இவள் கரங்களை மறுப்பதற்காகத் தடுத்துப் பிடித்தான்.

ஒன்னுமில்லை சின்னக்கீறல் தான்” சரவணன் சமாளிக்க, “சின்னக்காயமா? இரத்தம்ல வருது” கொஞ்சம் உரிமையான அதட்டல், குரல் சற்று சத்தமாகவே லலிதாவிடம் இருந்து வந்ததிருந்தது.

இவனுக்கு என்னவோ’ என்ற பதட்டம், பயம் அவளை கட்டுப்பாட்டை இழந்து வெளியே வர வைத்திருந்தது.

பற்றியிருக்கும் தன் கரத்தை அவன் பிடியில் இருந்து உருவிக் கொண்டு காலைப் பற்றியவள் காயத்தை ஆராய்ந்தாள்.

சட்டென எழுத்து விறுவிறுவென உள்ளே சென்றவள், பஞ்சும், பருத்தி துணியும் கொண்டு வந்தாள்.

காயத்தில் இருக்கும் இரத்தத்தை ஒற்றி எடுப்பது போலே துடைக்க, அந்த வலிக்குச் சரவணன் அனத்தினான். துடைக்கத் துடைக்க பொங்கி, வந்த இரத்தமும் இவன் வலி நிறைந்த குரலும் அவளை வதைக்க, தன்னாலே கண்களில் கண்ணீர் திரண்டு கொட்டியது.

லலிதாவின் கண்ணீரைக் காணச் சரவணனிற்குத் தாள முடியவில்லை. வலியும் இவள் கண்ணீரும் எரிச்சலைக் கூட்டியிருக்க, “நீயேன் இதெல்லாம் செய்ற விடு” காட்டமாகக் கத்தினான்.

அப்படியே நிறுத்தியவள் அவன் முகம் பார்க்க, அவன் பார்வையும் இவள் கலங்கிய விழிகளில் விழுந்தது.

ஏன் நான் தொடக் கூடாதா? நான் செய்யாம வேற யார் செய்வா?” குரல் உயர, உரிமை கொண்டாடிக் கேட்க, சரவணன் வாயடைத்துப் போனான்.

சரவணனின் நொடி நேர மௌனம் இவளைப் பெரிதாகத் தைக்க, “அவ தான் செய்யணுமோ? ஆமாம், அவ தான் செய்யணும். உறவும் உரிமையும் அங்க தானே இருக்கு” வார்த்தையில் சடைத்துக் கொண்டவளுக்கு, குரலே சிறுத்துப்போனது.

சற்றே முன் இருவரும் திருமணம் பற்றிப் பேசியதெல்லாம் நினைவில் வர, லலிதாவிற்கு நொடியில் முகமே சுண்டிப் போனது. தொண்டை அடைத்துக்கொண்டு அழுகை வருவது போன்றிருந்து. ஏதோ தன் பொருள் ஒன்று தன் கை மீறி கை நழுவிப் போனதை நினைத்து மறுகினாள்.

இவள் முகத்தையே இத்தனை அருகில் இமைக்காது பார்த்திருந்த சரவணனிற்கு, அதில் மெல்லப் பரவும் வலியின் சாயலையும் உணர முடிந்தது.

தரையைப் பார்த்துக் கவனமா நடக்கணும், அதை விட்டுட்டு நினைப்பும் பார்வையையும் வேற யார் மேலையாவது வைச்சிட்டு சுத்தினா இப்படித்தான் ஆகும்என்றவள் ஆற்றாமையில் மெல்லிய குரலில் முனங்கினான்.

கட்டுக் கட்டுவதில் கவனமாக இருந்த போதும் லலிதாவின் வாய் பாட்டிற்குப் பாட, வலியில் அன்னத்திக் கொண்டிருந்த சரவணனிற்குத் துல்லியமாகக் கேட்டது.

எதையோ உள்ளுக்குள் வைத்துக்கொண்டு பேசுவது போலத் தோன்றியது, ஆனால் என்னவென்று முழுதாகப் புரியவில்லை சரவணனிற்கு.

என்ன? என்ன சொன்ன?” என்றவன் விசாரிக்க, “உங்களுக்கு எந்த மாதிரி கேட்டுச்சோ அந்த மாதிரி தான் சொன்னேன்என்றாள் வெடுக்கென.

உரிமையில்லை என்கிறாள், அவளுக்குக்குத் தான் இருக்கிறது என்கிறாள்? யாரையோ என்கிறாளே? இங்கு இவளைத் தவிர வேற எந்த பெண் இருக்கிறாள்? அவன் வேலை இடத்தில் அத்தனையும் ஆண்கள் தானே?

வேறு, கோமதிப் பாட்டிதான் இருக்கிறார், ஆனால் அவர் அதிகம் வெளியில் வருவதே இல்லை, ஏன் சரவணனிடம் பேச்சுவார்த்தையே கிடையாது. சொர்ணம் பாட்டியைப் போல் இவர் கிடையாது, அவருக்கு இவன் அந்நியமே!

பின் யாரைச் சொல்கிறாள் யோசித்தவனுக்குச் சற்று முன் வந்து சென்ற காவ்யா நினைவிற்கு வந்தாள்.

இப்போது தான் இவள் செயலுக்கான காரணம் புரிய, ஒரு இளநகை உதித்தது.

ஐ லவ் யூன்னு கேட்டுச்சு, அப்படியா?” கண் சிமிட்டியவன், குறும்புக் கூத்தாடக் கேட்டான்.

பேச்சற்று வாயடைத்துப் போனாள் லலிதா. உதடு பிதுங்க, அழுத விழிகள் நீரோடு அப்படியே சரவணனைப் பார்த்து முறைக்க, பிரம்மன் தீட்டி வைத்த ஓவியமாகச் சரவணனின் கண்ணையும் மனதையும் நிறைத்தாள் லலிதா.

அவள் கரத்தைப் பற்றி தன் கதகதப்பான உள்ளங்கைக்குள் அடைத்துக் கொண்டவன், மெல்ல வருடிக் கொடுத்தான்.

லலிதா உறைந்த சிலையாக அமர்ந்திருக்க, “ஓய் என்னாச்சு உனக்கு? பொறாமை?” என்றான் உல்லாசமாக.

பதில் சொல்லாது மௌனம் சாதிக்க, “ஹே அது, என் அக்காவோட நாத்தனார். ஜெஸ்ட் ரிலேட்டிவ் அவ்வளவு தான் லலிதா” சமாதானம் கூறியபடி, லலிதாவின் கரங்களில் அழுத்தி, இறுகப் பற்றிக் கொண்டவன், தன் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டான்.

லலிதாவிற்கு நடப்பவற்றை எல்லாம் நம்பவே முடியவில்லை. தானும் இந்த பூலோகத்தில் தான் இருக்கிறேனா? என்பதிலே இன்னும் சந்தேகம் தான்.

அவன் ஸ்பரிசமும், உடல் உஷ்ணமும், இதயத்துடிப்பும் இன்னும் இவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. கன்னங்கள் சிவக்க, கனலை உணர்ந்தவள், தலை தாழ்த்தி அமர்ந்திருந்தாள்.

பேசு லலிதாமென்குரலில் கிசுகிசுப்பாகச் சரவணன் வேண்ட,என்ன பேசணும்?” என அத்தனையும் மறந்தவளாக, மையல் மயக்கத்தில் விழித்தாள்.

நான் செய்த உதவிக்கு நீ ஏன் பணத்தைத் திருப்பிக் கொடுத்த? கடன் அன்பை முறிக்கும்னு சொல்லுவாங்களே, அது அதனாலையா?” சீண்டிப் பார்த்தான்.

இவள் மனம் அறிந்த போதும் தன்னைப் போன்றே முழுதாக வெளிப்படுத்த வேண்டுமென்ற, சின்னஞ்சிறு எதிர்பார்ப்பு சரவணனிற்கு.

எந்த விதத்திலும் இவனிடம் கடனாளியாக இருக்கக் கூடாதென நினைத்தாள் தான், ஆனால் இவன் செய்த அத்தனை உதவிக்கும் விலை நிர்ணயம் செய்திட முடியுமாமனசாட்சி கேட்டது.

அதான் அன்னைக்கே சொன்னேனே பாட்டிக்குச் செய்த உதவி எதுவும் எனக்கு வேண்டாம்னு” நிமிர்ந்து விழி பார்த்தவள் மெல்ல மொழிந்தாள்.

அப்போ உனக்காகத்தான் செய்தேன்னு சொன்னா ஏத்துப்பியா?” குறுக்காக வந்து மடக்கினான்.

லலிதாவிடம் இன்னும் பெரும் மெளனம் மட்டும் தான்.

உனக்காகத்தான் செய்தேன் லலிதா. இல்லாத பாட்டிக்காக நான் ஏன் உன் வீட்டுக்கும் உனக்கும் காவலா இருக்கப்போறேன்? பாட்டிக்காக இல்லை உனக்காகத்தான். உனக்காகத்தான் உங்களுக்கு வர வேண்டிய பணத்தை வசூல் செய்தேன், உனக்காகத்தான் காலையில இருந்து இருள்கிற வரைக்கும் இந்த சைட்ல இருக்கேன்.

உனக்காகத்தான் என்னை எவ்வளவு அவமானப்படுத்தின போதும், தங்கராசுகிட்ட பொறுமையாப் போறேன். உனக்கு என் மனசு புரியலையா? என்னை புரியலையா?” ஒரு மெல்லிய வருத்தம் இழையோடியது. என்னவோ விடவே மாட்டேன் என்பதைப் போல் இவள் கரங்களை இறுக்கப் பற்றிக் கொண்டான்.

லலிதாவிற்கு சரவணனின் உடல் மொழி அனைத்தும் புரிந்தது தான், இருந்தும், அதான் நீங்களே எனக்கு ஹாஸ்டல் எல்லாம் பார்த்து என்னை ஊர விட்டு விரட்டி விடப் பார்க்குறீங்களே?” குறைபட்டாள்.

யார் இப்படிச் சொன்னா? உன் மாமனா?”  மூக்கு விடைக்கச் சரவணன் கேட்க, ம்ம்..தலையாட்டினாள்.

நினைச்சேன்” பற்களைக் கடித்தபடியே மனதிற்குள் சரவணன் தங்கராசுவை வறுத்து எடுக்க, உண்மைய தானே சொன்னாங்க?” லலிதா பரிந்து பேசினாள்.

என்ன உண்மை? அவனுக்குத்தான் என் மேல நம்பிக்கை இல்லை! உனக்குமா?” இறங்கிய குரலில் வலியோடு கேட்க, வார்த்தையின்றி வாய் மூடிப் போனாள் லலிதா.

நீ சின்ன பொண்ணு லலிதா, அதை விடவும் எனக்கு முக்கியம் உன் படிப்பு. நீ ஆசைப்பட்டபடி படிக்கணும். அதுக்குத்தான் தங்கராசுவும் இந்த பாடுபடுறான்.

ஏன் உனக்கு காலேஜ் சீட் மட்டுமில்லை, ஹாஸ்டலும் சேர்த்துப் பார்க்கச் சொன்னதே தங்கராசு தான்.

நீ இங்க தனியா இருக்க வேண்டியதில்லை, ஹாஸ்டல்ல இருக்கிறது தான் நல்லது, வீடு, தோப்புன்னு மாங்கு மாங்கு கஷ்டப்பட்டு உழைச்சிட்டு படிப்பை விட்டுடக் கூடாது, அது மட்டுமில்லை பக்கத்துல என்னை வைச்சுக்கிட்டு நீ கவனம் சிதறக் கூடாதுன்னு எல்லாம் திட்டம் போட்டு தங்கராசு தான் இப்படி ஏற்பாடு பண்ணான்

என்றுமே வார்த்தைகளிலும் பார்வையிலும் கூட வெளிப்படுத்திடாத, தங்கராசுவின் தூய பாசத்தை லலிதா நன்கு அறிவாள்.

எனக்கும் அதான் ஆசை, நீ எந்த கவலையும் தொந்தரவும் இல்லாம படிச்சி முடிக்கணும். என்ன இரண்டு வருஷம் தானே நான் காத்துக்கிட்டு இருப்பேன் லலிதா. ஏன் தூரமா போனா என் மேல நீயும் உன் மேல நானும் வைச்சிருக்க அன்பு இல்லைன்னு போயிடுமா என்ன?” சரவணன் கேட்க கேட்க, லலிதா உடைந்து நொறுங்கியே போனாள். அப்படியே தாவி இவனை அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. இருந்தும் ஏதோ ஒரு தடை.

இழந்த அத்தனை உறவிற்கும் இவர்கள் இருவரும் ஈடானவர்கள் என்பதை உணர்ந்திருந்தாள். உலகிலே ஆகப் பெரும் பொக்கிஷத்தைப் பெற்றவள், பாக்கியசாலியாக நினைத்தாள்.

இன்னும் லலிதாவின் மௌனம் புரிய, “இல்லை நாமா வேணா இப்போவே கல்யாணம் செய்துக்கலாம். எங்க அப்பா கிட்ட சொல்லி, உன் வீட்டுல பேச சொல்றேன். இதுநாள் வரையிலும் என் மேல நம்பிக்கை இல்லாம தான் தங்கராசும் உங்கிட்ட இருந்து என்னைத் தள்ளி வைக்கிறான், அவனுக்கும் ஒரு முடிவு கட்டணும்என்றான் உறுதியாகவும் முடிவாகவும்.

மலைத்துப் போன லலிதா, விழிகள் தெறிக்க விழித்தாள். இந்த அழகு இன்னும் சரவணனைக் கொள்ளை கொள்ள, மற்றொரு கையால் அவள் அழகு முகம் நிமிர்த்தியவன், “என்ன? என்ன சொல்லுது இந்த கண்கள்? சம்மதம் தானே?” மொழிபெயர்த்துப் படிக்க முயன்றான்.

அவன் நெருக்கம் உணர்ந்தவள் தடுமாற்றத்தோடு, “இல்லை, இவ்வளவு வேகம்..” வார்த்தையை முடிக்காது நிறுத்த, கலகலவென பொங்கிச் சிரித்தான்.

அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, முத்தமிட்டவன், “என் கனவுல நமக்கு இப்போ இரண்டு குழந்தை! இப்போ சொல்லு இது வேகமா?” என்க, நாணச் சிரிப்போடு குளிர்ந்தவள், முகம் தாழ்ந்த, தோளோடு மெல்லச் சாய, சுகமாக அணைத்துக் கொண்டான்.

இனியெல்லாம் சுகமே என்ற நம்பிக்கை அவனால் அவளுள் விதைக்கப்பட்டது. இருவர் மனதிலும் எல்லையில்லா சந்தோஷம் நிறைந்து ததும்பியது.

***

 

Advertisement