Advertisement

அத்தியாயம் 13

அன்று இறுதியாகக் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு, அது மட்டுமின்றி கட்டிப்பாடு இல்லாது தன் மனதையும் வெளிக்காட்டிவிட்டனோ என நொந்து கொண்டாள் லலிதா.

கொடுத்த பணம் திரும்பி வந்தது, தங்கராசு பேசியது, அனைத்தும் உணர்ந்தும் சரவணன் மௌனமாக இருப்பது, தவிர்ப்பது தாங்க முடியவில்லை. அவ்வளவு தானா? என்ற ஏக்கம், வெளிக்காட்ட முடியாத வலி.

தன்மானமும் வீறுகொண்டு எட்டிப்பார்க்க, விலகிப்போனாள் லலிதா.

பொறுப்பாக மாறியிருக்கும் தங்கராசு லலிதா விஷயத்தில் அதீத பொறுப்போடு இருந்தான். இவன் பொறுப்பு இறுதியில் சரவணனிற்குத் தான் பாதகமாகிப் போனது.

அன்றைய நாளுக்குப் பின் லலிதாவிடம் பேசும் சந்தர்ப்பமே அமையவில்லை. இரண்டு நாட்களாகப் பேச வேண்டும் என்ற முடிவில் தான் சரவணனும் சுற்றுகிறான், ஆனால் ஏனோ லலிதா அதிகம் நின்று இவன் முகம் பார்ப்பது கூட கிடையாது.

சரவணனிற்கும் மழை காரணமாகத் தேங்கிய வேலைகள் இப்போது மலையாகக் குவிந்து கிடந்தது. இப்போதெல்லாம் திண்ணையில் கிடக்கும் தங்கராசு தான் இரவில் சாவி வாங்கிக் கொள்வான்.

கிடைக்காத வாய்ப்புக்கும் கொட்டிக்கிடக்கும் வேலைகளுக்கும் இடையில் சரவணன் சிக்கிக் கொள்ள, தன்னை தவிர்ப்பதாகவே நினைத்தாள் லலிதா.

சனிக்கிழமை சைட்டில் முக்கியமான வேலை நடந்து கொண்டிருக்க, கண்காணிப்பில் மும்முரமாக இருந்தான் சரவணன்.

லலிதாவும் தோப்பில் வேலையைப் பார்ப்பது போலே சரவணனின் திசையில் பார்வை வீசினாள்.

அவன் ஒரு பார்வைக்கே இறகு முளைத்துப் பறக்கும் இதயம் இன்று காற்றுப்போன பாலூனாக சுருங்கிப் போனது.

வாடிய வஞ்சிக்கொடியாக அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டிருக்க, அதே நேரம் ஒரு வெள்ளை நிறக் கார் ஒன்று வந்து நிற்பதை கவனித்தாள்.

சரவணனும் சரியாகத் திரும்ப, வண்டியில் இருந்து இறங்கிய காவ்யா அவனை நோக்கி கை அசைத்தபடியே சென்றாள்.

வரவேற்புச் சிரிப்போடு, “ஹேய்.. காவ்யா.. வா வா” ஆர்ப்பாட்டமாக வரவேற்றான் சரவணன்.

என்னவோ அவளைக் காணவும் சரவணன் முகத்தில் உதித்த, ஒரு விரிந்த புன்னகையைக் காண லலிதாவிற்குத் தாங்கவில்லை. யார் இவள்? உள்ளே குடைய, நேரடியாகவே அவர்கள் மீது நுண்ணோக்கி பார்வை வீசினாள்.

கை பிடிக்காத குறையாக, தன் நிழலே குடையென விரித்து, வேப்பமர நிழலுக்கு அழைத்து வந்தான் சரவணன்.

வரும்போதே இருவருக்கும் பரஸ்பர நலம் விசாரிப்புகள் முடிய, இங்கிருந்து பார்த்திருந்த லலிதாவிற்கு என்னவோ இருவரும் நெருங்கிக் கொஞ்சிப் பேசுவது போலே காட்சி தெரிந்தது.

உள்ளுக்குள் ஏதோ கனன்று கொண்டு புகையத் தொடங்கியது. மறுபுறம் நெருஞ்சியாகக் குத்தும் வலி! தன் மாமா கூறியதைப் போல் இவன் செய்தது அத்தனையும் உதவி மட்டும் தானோ? குழம்பித் தவித்தாள்.

அது தான் உண்மை என அறைந்து கூறினாலும் ஏற்கும் வலிமை தற்சமயம் லலிதாவிற்கு சிறிதும் இல்லை. ஒரே நாளில் உடைந்து, நொறுங்கிச் சிதைந்து போயிருந்தாள்.

நீ வந்திருக்கேன்னு கால் பண்ணியிருந்தா வீட்டுக்கே வந்திருப்பேன்ல?” சரவணன் சாட, “வீட்டுக்குப் போய் அண்ணியை பார்த்துட்டு தான் வந்திருக்கேன். உங்ககிட்ட தனியா பேசணும்னு தான் இங்க வந்தேன்” காவ்யா பதிலுரைத்தாள்.

அப்புறம் ஏன் நிக்கிற? உக்கார் காவ்யா” என உபசரித்தவன், முகிலை அழைத்து ஏதோ கூறினான்.

இரண்டே நிமிடத்தில் முகில் வந்து ஒரு பழச்சாற்றை நீட்ட, அதை வாங்கி, காவ்யாவின் கைகளில் கொடுத்தான் சரவணன்.

பார்த்திருந்த லலிதாவிற்குப் பொறுமை எல்லாம் பறந்தோடிப் போனது. இவள் நிற்கும் தொலைவிற்கு அவர்கள் பேச்சு வார்த்தை எதுவும் காதில் விழவில்லை. ஆனால் அவன் உபசரிப்பு எல்லாம் கண்ணில் படுகிறது, எரிச்சலூட்டுகிறது.

இவள் என்ன அத்தனை முக்கியமானவளோ? அப்படியென்ன வேலை இடத்தில் பார்க்க வேண்டிய அவசியமோ? தனியாகப் பேச வேண்டிய ரகசியமோ? நொடிந்தாள்.

முதல்ல உங்ககிட்ட மன்னிப்பு தான் கேட்கணும். எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம். அண்ணன், அண்ணிக்குள்ள இவ்வளவு பெரிய மனஸ்தாபம் ஆகும்னு எதிர்பார்க்கலை” காவ்யா வருத்தம் தெரிவிக்க, “இதுல எங்கிட்ட மன்னிப்பு கேட்க என்ன இருக்கு? என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சா என்னாலான தீர்வு பார்ப்பேன். எனக்குத் தேவை எங்கக்கா நிம்மதியும் சந்தோஷமும் தான்” தன்னிலை விளங்கினான்.

காவ்யாவும் தன் உடன் பயிலும் மாணவன் ஒருவனும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர்.

கடந்த விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்த போது, அலைபேசியும் கையுமாகச் சுற்ற, அண்ணி சாரதா கண்டுகொண்டாள். கதிர்வேல் வேலை விஷயமாக வெளியில் தான் பெரும்பாலும் வீட்டில் இருப்பதே இல்லை.

சாரதா காவ்யாவைப் பிடித்து வைத்து விசாரித்தாள். அண்ணியிடம் அனைத்தையும் கூறியவள், இப்போது காதலன் தன்னுடன் படித்துக் கொண்டிருக்கிறான், படிப்பு முடிந்து வேலை கிடைக்கும் வரை அண்ணன் கதிர்வேலிடம் இது பற்றி தெரியப்படுத்த வேண்டாம் எனச் சத்தியம் வாங்காத குறையாக வேண்டினாள் காவ்யா.

சாரதாவும் அன்றைய சூழ்நிலையில் ஒப்புக்கொண்டு, அறிவுரை கூறி காவ்யாவைக் கல்லூரி விடுதிக்கு அனுப்பி வைத்து விட்டாள்.

பின் ஒருநாள் ஏதோ ஜோசியம் பார்த்து வந்த கதிர்வேல் திடீரென தங்கை படிப்பு முடிந்து வரும் போது அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். இப்போதே மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறிக் கொண்டே இருந்தார்.

மனைவி சாரதாவிடம் நேராக வந்தவர் அவள் தம்பியை தன் தங்கைக்கு வரனாகக் கேட்கும்படியும் அவள் வீட்டில் பேசும்படியும் கூறினார்.

தனக்கு வளைகாப்பு நிகழ்வு முடியவும் தங்கள் வீட்டிற்குச் சென்றதும் பேசுவதாகக் கூறிய சாரதா தற்சமயம் பிரச்சனைகளை ஒத்திப் போட்டாள்.

ஆனாலும் கதிர்வேலுக்குப் பொறுமையில்லை. மீண்டும் மீண்டும் அதையே கேட்டு மனைவியின் மீது அழுத்தம் திணிக்க, சாரதாவால் தாங்க இயலவில்லை. காவ்யாவிடம் கொடுத்த வாக்கிறக்கு கணவனிடம் உண்மையை உரைக்கவும் இயலாது, அவர் தரும் அழுத்தமும் தாங்காது வெடித்து விட்டாள்.

நேரடியாகவே தன்னால் தன் வீட்டில் கேட்க முடியாது என்றுவிட, கதிர்வேலுக்கு ஆத்திரம் கூடியது.

அப்படியென்ன நாங்கள் உங்களுக்குக் குறைந்து போய் விட்டோம்? என் தங்கையை விடவும் நல்ல பெண் உன் தம்பிக்குக் கிடைத்து விடுமா? உன் தம்பி என்ன அத்தனை பெரிதோ? என்றெல்லாம் தொடங்கி, நீயும் என் வீட்டு மருமகள் தானே? ஆனால் என் குடும்பத்தின் மீது உனக்கு அக்கறையே கிடையாது, என் தங்கையின் மீது பாசமே கிடையாது, அவளுக்கு நல்வாழ்க்கை அமையக் கூடாது என்ற கீழான எண்ணம். நீ மட்டும் நன்றாக வாழ வேண்டிமென்ற பேராசை, சுயநலவாதி என்றெல்லாம் அனல் வார்த்தைகளை அள்ளித் தெளித்தார்.

கேட்ட சாரதாவிற்கு இதயம் வெடித்துப் போனது. கேட்ட வார்த்தைகள் கூர்மையான ஈட்டியாகத் தாக்க, அதையும் தன்னை அறிந்த தன்னுடன் வாழ்ந்த கணவனே கூற தாங்க முடியவில்லை. கர்ப்பகாலத்தில் கணவனின் அரவணைப்பிற்கு ஏங்கி இருக்கும் பெண்ணிற்கு, வலி மட்டுமே நிரந்தரத் துணையானது.

கதிர்வேலும் விடாமல் அழுத்தம் தர, சாரதாவும் ஒரு கட்டடத்திற்கு மேல் பொறுமை பறந்தோடி வார்த்தையை விட, இருவருக்குள்ளும் பூகம்பம் வெடித்தது.

இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சனை எனச் சரவணன் கூறிய பின்பு தான் காவ்யா விஷயம் அறிந்திருந்தாள்.

தேர்வுகளை முடித்து விட்டு வீடு திரும்பியவள் அண்ணன் கதிர்வேலிடம் அத்தனை உண்மைகளையும் கூறி, சாரதாவின் மீது தவறில்லை என்றும் புரிய வைத்திருந்தாள்.

அண்ணியைக் கஷ்டப்படுத்தியதிற்கு அண்ணனைப் பிழி பிழியெனப் பிழிந்து எடுத்தவள், சாரதாவிடம் மன்னிப்புக் கேட்குமாறு கையோடு அண்ணனையும் இழுத்து வந்துவிட்டாள்.

அண்ணனை வைத்துக் கொண்டு அவன் சார்ப்பாகவும் சாரதாவிடம் மன்னிப்புக் கேட்டு ஆறுதல் கூறியிருந்தாள். அண்ணனை அண்ணியிடம் பேசுமாறும் சமாதானம் செய்யுமாறும் கூறிவிட்டு, சரவணனைக் காண வந்திருந்தாள் காவ்யா.

சரவணனிடம் அனைத்தும் கூறி முடிக்க, பொறுமையோடு கேட்டிருந்தவனுக்கு என்ன செல்வதென்றே தெரியவில்லை.

தன் உடன் பிறந்தவள் இதை தன்னிடம் கூறியிருந்தால் நானே பேசியிருப்பேனே? அக்காவிற்கு இத்தனை வேதனைகள் இருந்திருக்காதே? ஆற்றாமையாகத் தோன்றியது.

ஒருவேளை அவள் வீட்டு விஷங்களை தன்னிடம் பகிர விரும்பவில்லையோ? என நினைத்தே மனதைச் சமாதானம் செய்து கொண்டான்.

அதே நேரம், லலிதாவோ செங்காந்தளாக காந்திக் கொண்டே இருக்க, பொறுமை இழந்து, மெல்ல யாரும் கவனிக்காத வண்ணம், நடுத் தோப்பில் இருந்து பக்கவாட்டு வேலியருகே வந்து நின்று கொண்டாள்.

லலிதாவிற்கு அப்போதும் பாதி கேட்கவில்லை. எரிச்சல் மண்டியது.

அதே வேளை, இருவருக்கும் இடையில் திருமணம், அண்ணன், அண்ணி விருப்பம் என்பது வரை சிற்சில வார்த்தைகள் கோர்வை இன்றி செவியில் விழ, மொத்தமாக உடைந்தே போனாள்.

எனக்கு வேலை வைக்காம, ஒருவழியாக நீயே சமாதானம் பேசி முடிச்சிட்டே, சந்தோஷம்” சரவணன் நிம்மதி தெரிவிக்க, மெல்லிய புன்னகையோடு ஏற்றாள் காவ்யா.

அப்படி மட்டும் நினைச்சு நிம்மதியாகிடாதீங்க, இன்னைக்கு எங்க அண்ணன் நினைச்ச மாதிரி நம்ம வீட்டுப் பெரியவங்க யாரும் பேசாம இருக்கணும்ன்னா நீங்களோ இல்லை நானோ ஒரு ஆள் கல்யாணத்தைச் சீக்கிரம் முடிச்சிக்கணும்” சிரிப்போடு கேலி போலே உரைத்தாள்.

மலர்ந்து பூரித்த முகத்தோடு, “அதுக்கென்ன சீக்கிரமே செய்திடலாம்” என்றான் கண்களில் கனவுகள் மின்ன.

என்ன? என்ன? நிஜமா தானா? பொண்ணு யாரு சொல்லவே இல்லை?” ஆர்ப்பரித்து மகிழ்வோடு விசாரித்த காவ்யா, “அதான் மாப்பிள்ளைக்கு இப்போவே முகத்துல கல்யாணக்களை ஒளி வீசுதோ?” கேலியும் செய்தாள்.

இங்க தான் பக்கத்துல, ரொம்ப பக்கத்துல” கனிந்து மொழிய, அவன் பார்வை சென்ற திசையில் திரும்பியவள், சற்றே தொலையில் நிற்கும் லலிதாவைக் கண்டுகொண்டாள்.

ஓஹோ, இவங்க தானா அது? அழகா இருக்காங்க” பாராட்டியவள் மனதாரவும் வாழ்ந்த, உள்ளம் குளிர்ந்து போனான் சரவணன்.

சரவணனின் இளகிச் சிவந்த முகமும், அவள் கேலியும் சிரிப்பும் என்னவோ இங்கே லலிதாவிற்குத் தாள முடியவில்லை.

லலிதாவின் மனசாட்சியோ என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்? எங்கே உன் நாகரீகம்?

அவன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி விட்டான், நீயோ இப்படியொரு நிலையில் நிற்கிறாய்? புத்தி குத்திக்காட்டிக் கேட்டது.

தன்னை நினைத்தே கீழாக உணர்ந்தவள் நொறுங்கிய இதயச் சில்லுகளை அள்ளிக்கொள்வதை இதயத்தை கொத்தாகப் பற்றிக் கொண்டு, மௌனமாக வீட்டிற்குள் ஓடி விட்டாள்.

எனக்கு ஒரு உதவியாக கேட்குறேன், சீக்கிரமா இவங்களைக் கல்யாணம் செய்துக்கோங்க” வாழ்ந்தும், நிறைவுமாக விடைபெற்றுக் கிளம்பினாள் காவ்யா.

மனமெங்கும் லலிதாவே நிறைந்து ததும்ப, தலையாட்டியபடி விடைகொடுத்து அனுப்பி வைத்தான் சரவணன்.

 

Advertisement