Advertisement

அத்தியாயம் 12

தங்கராசு, வெறுமையாகக் கிடைக்கும் தோப்பை சுத்தப்படுத்த, வேலையாட்களை அழைத்து இருந்தான்.

வேலைகள் நடக்க, எட்டிப் பார்த்த லலிதா, இவ்வளவு நேரமாக வீட்டில் இருக்கிறானே? என்ற யோசனையுடன் அருகில் வந்தாள்.

மாமா நீங்க வேலைக்குப் போகலை? இங்க என்ன செய்றீங்க?” என்க, “இனி அந்த வேலைக்குப் போகலை, வேற வேலை பார்க்கணும். இப்போதைக்கு நிலத்தை உழுது தக்காளி போடலாம். உனக்கும் சிரமம் இல்லாம இருக்கும், சீக்கிரம் விளைச்சல் வந்துடும். அப்புறம் வேற என்னன்னு யோசிக்கலாம்” எனத் திட்டத்தை யோசனையுடன் விளக்கினான்.

லலிதாவிற்கு நிம்மதியாக இருந்தது. அதை விடவும் தங்கராசுவின் மீது நம்பிக்கை தோன்றியது.

சொன்னபடியே வேலைகள் விரைந்து நடைபெற,  பருவநிலைப் பார்த்து நிலத்தை உழுது, தக்காளி நாற்றுப் பாவி இருந்தனர்.

தங்கராசுவும் ஓட்டுநர் வேலையை விட்டுவிட்டு பக்கத்து ஊரில் இருக்கும் மில் ஒன்றிற்கு வேலைக்குச் செல்லத் தொடங்கி இருந்தான்.

காலையில் ஒன்பது மணிக்கு வேலைக்குச் சென்றால் மாலை ஏழு மணிக்கு எல்லாம் சரியாக வீடு வந்து விடுவான்.

அதை விடவும் இரவு வாசம் வீட்டுத் திண்ணையில் தான், இந்த நாட்களில் குடியை மறந்திருந்தான். இல்லையில்லை முற்றிலும் விலக்கி வைத்திருந்தான்.

அதுவே லலிதாவிற்கு அப்படியொரு நிம்மதி கொடுத்திருந்தது. இந்த மாற்றங்கள் அனைத்தும் சரவணன் பேசிய பின்பு தான் என்பதையும் உணர்ந்து இருந்தாள்.

மேலும் தன் சொந்த ஊரிலிருந்து வயதான பாட்டியை அழைத்து வந்து, லலிதாவிற்குத் துணையாக வீட்டில் விட்டிருந்தான் தங்கராசு.

தங்கராசுவிற்கு அத்தை முறை உறவு கோமதி பாட்டி. அவருக்குச் செவி கேட்கும் திறன் சற்று குறைவு, அவர் வீட்டிலும் மகன்கள் கவனித்துக் கொள்ளாது புறக்கணிக்க, தன் பராமரிப்பில் தங்கராசு அழைத்து வந்து விட்டான்.

அவரும் முடிந்த அளவு வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு லலிதாவிற்குத் துணையாக இருந்தார்.

ஆனால் லலிதாதான் அதிகம் வேலைகளைச் செய்ய விடாது அவரைக் கவனித்துக் கொண்டாள். என்னவோ திரும்பக் கிடைத்த பொக்கிஷத்தைப் பாதுகாக்கும் உணர்வு.

சொர்ணம் பாட்டியின் இடத்தை நிரப்பாவிட்டாலும் இவர் இருப்பு, இவர் துணை, இவர் நிழல் லலிதாவிற்கு ஆறுதலாக இருந்தது.

தங்கராசுவும் காலையில் தோப்பில் வேலையைப் பார்ப்பது, பின் மில்லு வேலைக்குச் செல்வது, வீட்டுத் தேவையைக் கவனிப்பது என அனைத்தையும் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.

காலையில் வசூலுக்குச் சென்று வந்த சரவணன் நேராக சைட்டுக்கு வந்திருந்தான்.

தக்காளிக்குத் தங்கராசு தண்ணீர் பாய்ச்சுக் கொண்டிருப்பது தெரிய, தோட்டத்திற்குள் சென்றான் சரவணன்.

தங்கராசு..” என்றபடியே ஒரு மஞ்சள் பையைச் சரவணன் நீட்ட, “என்னது?” என்றான் தங்கராசு.

வசூலுக்குப் போயிருந்தேன். சாந்தி அக்காகிட்ட உங்க சீட்டுப்பணம் பிடித்தம் இருக்கே அதையும் வட்டியோட வாங்கிட்டு வந்துட்டேன், அதான் இது. லலிதாவுக்கு யூஸ் ஆகுமே” என்றான்.

தங்கராசுவின் பார்வையில் சற்று முறைப்புக் கூடியது, இவன் லலிதா மீது காட்டும் அக்கறையும் பரிவும் எடுத்துக் கொள்ளும் உரிமையும் பிடிக்கவில்லை.

அவன் உயரத்திற்கு தாங்கள் சமமில்லை என்ற எண்ணம். ஏற்கனவே காதல் தோல்வியைக் கண்ட அனுபவஸ்தன் வேறு, மேலும் சரவணனின் மீது அப்படியொன்றும் நம்பிக்கை வந்திருக்கவில்லை தங்கராசுவிற்கு.

சைட்டில் வேலை நடக்கும் வரை மட்டும் தானே, முடிந்து சென்றால் மறந்து விடுவான் என்னும் கணிப்பு, சரவணனிற்காக அவன் வசதிக்காக ஊருக்குள்ளும் உறவிலும் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்!

என்னவோ சரவணனிடம் சற்று இளகி வந்து நல்லவிதமாகப் பேசினாலும் லலிதாவின் மீது அக்கறை காட்டுவதில் இருக்கும் போட்டி மனப்பான்மை மட்டும் இன்னும் குறையவில்லை.

இங்கு பார் லலிதாவின் மீதும் அவள் நலன் குறித்தும் எவ்வளவு அக்கறையோடு இருக்கிறேன் எனக் காட்டுவதில் இருவருக்கும் போட்டியே!

கை வேலையாக இருக்கிறான், பாட்டிக்கும் செவி கேளாது லலிதாவை அழைத்து பணத்தை வாங்கச் சொல்வான் என்ற எதிர்பார்ப்பு. அவள் மதி முகம் காணும் ரகசிய ஆசை சரவணனிற்கு.

ஆமாம், உங்களுக்கு நான் கொடுக்க வேண்டிய பணத்தை லலிதா கொடுத்துட்டா தானே?” என்ற கேள்வியோடு தலையில் சுற்றியிருக்கும் துண்டை அவிழ்த்து வியர்த்த மேனியையும் கரங்களையும் துடைத்தான் தங்கராசு.

தங்கராசுவைப் பொறுத்தவரை இவனோடு கடன் என்ற ஒற்றை நூல் பந்தம் கூட இருக்கக் கூடாது என்றுதான் லலிதா கடனை அடைத்து விட்டதாக எண்ணினான்.

கைகளை துடைத்துக் கொண்டு, தங்கராசுவே பணத்தை வாங்கிக் கொண்டான். முகம் வாடிய சரவணன், லலிதாவைக் காண இயலாத ஏமாற்றத்துடனே சென்றிருந்தான்.

உள்ளே வந்த தங்கராசு, லலிதாவிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, தூணில் சாய்ந்தபடி அமர்ந்தான்.

லலிதா பணத்தைப் பற்றி விசாரிக்க, சரவணன் வசூலித்து கொடுத்துச் சென்றதாகக் கூறினான்.

விறுவிறுவென வாசலுக்கு விரைந்த லலிதா எட்டிப்பார்க்க, சரவணனின் கார் தொலைவில் சென்று கொண்டிருந்தது.

மீண்டும் உள்ளே வந்த லலிதா, “அதுக்குள்ளே போயிட்டாங்களே?” புலம்பலோடு பெருமூச்சு விட்டாள்.

லலிதாவின் செயலையும் முகபாவனைகளையும் பார்த்திருந்த தங்கராசு குழம்பினான்.

பின்ன, வாசலோட போகாம அவனென்ன நம்ம வீட்டுல வந்து உக்காந்து விருந்தா சாப்பிடப்போறான்? அவன் தகுதிக்கு நமக்கு இவ்வளவு உதவி செய்றதே பெரிது” ஏற்றிக் கூற, லலிதாவிற்கு மனம் ஒடிந்து போனது.

அப்போதே சில நிதர்சன உண்மைகள் முகத்தில் அறைந்தார் போன்று புரியத் தொடங்கியது பெண்ணிற்கு.

அதுவும் இந்தப் பணம், நீ கொடுத்தியே அதே மஞ்சப்பையும் அதே பணமும் தான், அன்னைக்கு ஊருக்கு முன்ன சாந்தி அக்காகிட்ட நம்ம பணத்தை வாங்கித் தாரேன்னு சொன்னதால இப்போ வாங்கிக் கொடுத்துட்டுப் போறான், கொடுத்த வாக்கை காப்பாத்திட்டான், உதவி செஞ்சான்னு ஊருக்குள்ள நல்ல பெயர். இதுக்குத்தானே செய்றான்?

அதுமட்டுமில்லை பணத்துல கூட வித்தியாசம் பார்க்குறான், நம்ம கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்திருக்கான்னா நம்ம பணம் கூட அவன் கிட்ட இருக்கத் தகுதி இல்லைன்னு நினைக்கிறான் போலே? அப்படித்தானே அர்த்தம்.

இந்த பெரிய வீட்டு மனுஷங்களே இப்படித் தான், ஊருக்கு ஒரு முகம் காட்டுனாலும் உள்ளுக்குள்ள தகுதிதராதரம் பார்க்கிறாங்களாதான் இருப்பாங்க. இந்த சமத்துவம் பேசுறதும் எல்லாம் வெறும் பேச்சுக்குத்தான், உதவி செய்றதும் எல்லாம் வெளிவேஷத்துக்கு வெத்து கௌரவத்துக்கும் பந்தா காட்டிக்கவும் தான்?” எனப் பெரிதும் புலம்பி, நொந்து கொண்டான் தங்கராசு.

லலிதா நொறுங்கிப் போனாள்! அப்படித்தானோ? ஒரு சந்தேகமும் தோன்றியது. விளம்பர புத்திக் கொண்ட பிற பெரிய மனிதர்களும் சரவணனும் ஒன்றா? ஆமாம், இது வரையிலும் சரவணன் தனக்குச் செய்த அனைத்தும் உதவி என்னும் பட்டியலின் கீழ் தானே? அதுவும் பாட்டிக்காக தானே? தனக்காகவா? அவன் பிரியத்தைக் காட்டியதோ, கூறியதோ இல்லையே?

பிரியமா? பிரியம்! பிரியம் இருந்தால் தானே காட்ட இயலும்? கசந்த புன்னகை விரக்தியோடு உதிக்க, விழிகளில் உப்புநீர் ஊற்றேடித்தது. லலிதாவிற்கு அப்படியே உள்ளம் வெடித்து விம்மியது, இதயம் எரிந்து கருகியது.

தங்கராசு எழுந்து கொள்ள,“டவுன்க்கு போகும் போது எனக்கு வெத்தலை பாக்கு வாங்கிட்டு வந்திடு தங்கம்” கோமதி பாட்டி வேண்ட, சரியெனத் தலையாட்டினான்.

மாலை நேரமாக, அலைபேசி ஒரு கையிலும் மறுகையில் தேநீர் கோப்பையோடும் வாசலில் நின்றிருந்தான் சரவணன்.

இன்று காலையில் இருந்து இளம் தூறலும் சாரலும் விழுந்துக் கொண்டே இருக்க, சைட்டில் வேலையில்லை. மில்லுக்கு மட்டும் சென்று வந்த சரவணன் தற்போது வீட்டில் இருந்தான்.

சரியாக தந்தையின் கார் வந்து நின்றது. ஒருபுறம் இருந்து தந்தையும் மறுபுறம் ஓட்டுநர் இருக்கையில் இருந்து தங்கராசுவும் இறங்கினர்.

இவன் என்ன இங்கு தந்தையோடு? யோசனையிலே சரவணன் பார்த்திருந்தான்.

சரிப்பா தங்கராசு, நான் கண்டிப்பா சீட் அரேஞ்ச் பண்ணிடுறேன், என்றபடியே வாசல் நோக்கி வந்தார் ரத்தின பாண்டியன்.

தங்கராசு அந்த இடத்திலே நன்றி கூறி விடைபெற, “தூறலா இருக்கே, நில்லு குடை வாங்கிட்டுப் போப்பா” என்ற குரலுக்கு, “பரவாயில்லைங்க ஐயா, பக்கம் தானே வீடு போயிடுவேன்” என்றபடியே கேட் தாண்டி வெளியே சென்றிருந்தான்.

படிகளில் ஏறி வரும் தந்தையின் கையில் இருக்கும் கோப்பில் பார்வையைப் பதித்தபடி, “இவன் ஏன் உங்களை வந்து விட்டுட்டுப் போறான்? என்ன விஷயம் அப்பா?” விசாரித்தான் சரவணன்.

மில்லுக்கு என்னைப் பார்க்க வந்திருந்தான், அப்படியே என்னோட வீட்டுக்கு வாடான்னு கூப்பிட்டேன். என்னை உக்கார வைச்சு வண்டியோட்டி வந்து விட்டுட்டுப் போறான்” என்றபடியே அருகில் வந்திருந்தார்.

சரவணனிற்கு உள்ளுக்குள் என்னென்னவோ எதிர்பார்ப்புகள், கேள்விகள், குழம்பித் தத்தளிக்க, பதற்றத்தை மறைத்தபடியே, “என்ன விஷயமா உங்களைப் பார்க்க வந்தான்?” மேலும் விசாரித்தான்.

இவன் வீட்டுல ஒரு புள்ளை இருக்கே, அதான் இவன் அக்கா மக..” என்றவர் ஆரம்பிக்கும் போதே, “ம்ம்.. லலிதா” எடுத்துக் கொடுத்தான் சரவணன்.

ஆமாம், அந்த பொண்ணை மேல் படிப்பு படிக்க வைக்கணுமாம், நல்ல ஹாஸ்டல் இருக்கிற காலேஜ்ல சீட் வாங்கிக் கொடுங்கன்னு கேட்குறான். எல்லா காலேஜூம் திறந்துட்டாங்கல்ல, லேட் என்ட்ரி. எனக்கு தெரிஞ்ச காலேஜ்ல ரெகமென்ட் செய்து சீட் கன்ஃபார்ம் பண்ணித் தரச் சொல்லிக் கேட்குறான், எந்தப் படிப்பா இருந்தாலும் எவ்வளவு செலவா இருந்தாலும் பரவாயில்லையாம்” என்றார் பெருமூச்சோடு.

சரவணன் அப்படியே அதிர்ந்து நின்றான். தங்கராசுவின் புறமிருந்து இப்படியொரு திட்டத்தைச் சரவணன் எதிர்பார்த்திருக்கவில்லை.

என்ன அடுத்த கட்டமாக, தங்கராசுவே லலிதாவைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்வான் இல்லையேல் அவன் வசதிக்கு ஏதோ ஒரு வரனைப் பார்க்கத் துவங்குவான் என்பதே இவன் கணிப்பாக இருந்தது.

உண்மையில் லலிதாவின் மீதான தங்கராசுவின் பாசத்தில் நெஞ்சம் நெகிழ்ந்து போனான் சரவணன்.

சரிப்பா, நான் பார்த்துப் பேசி இந்த வேலையை முடிச்சிடுறேன்” என்றபடியே தந்தையின் கையில் இருக்கும் கோப்பை வாங்கிய சரவணன், உள்ளே இருக்கும் சான்றிதழ் நகல்களைப் பார்வையிடத் துவங்கினான்.

இல்லைடா எனக்கு டவுன் பக்கம் ஒரு வேலையிருக்கு, அப்படியே நம்ம பாரியோட காலேஜ்க்கு போயிட்டு நானே பேசிட்டு வந்திடுறேன்” என்றபடி மகனை உரசிப் பார்த்தார் தந்தை.

உங்களுக்கு ஏன்ப்பா சிரமம்? என்ன படிப்பு முடிச்சிருக்கு, மேல என்ன படிக்க வாய்ப்பிற்கு? என்ன காலேஜ்ன்னு எல்லாம் நான் பார்த்துக்கிறேன் அப்பா, நீங்க உள்ளே போய் காஃபி குடிங்க, போங்க” தந்தையின் பார்வையைச் சந்திக்காது தலை குனிந்தபடியே அனுப்பி வைத்தான்.

ரத்தின பாண்டியனும் மகனை ஒரு அழுத்தமான எடை போடும் பார்வை பார்த்துவிட்டுக் கடந்து, உள்ளே சென்றார்.

அன்று சொர்ணம் இறந்த போது, உதவி என உடனிருந்தது, அவர்களுக்கான சீட்டுப் பணத்தை வசூலித்துக் கொடுத்தது என அனைத்தையும் அறிந்தவர். இது வெறும் உதவி மட்டுமில்லை என்பது உரைக்க, மகனின் மனமும் ஓரளவிற்குப் புரிந்தது.

கையில் இருக்கும் கோப்பை பார்வையிட்டு முடிந்த சரவணன், அதை மூடி விட்டி அப்படியே நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். என்னவோ லலிதாவே கை அணைப்பிற்குள் வந்தது விட்டதைப் போன்ற பகல் கனவில் குளிர் காய்ந்து கொண்டிருந்தான்.

எப்படியும் தங்கராசு அடுத்ததாக லலிதாவிற்கு வரன் பார்க்கத் தொடங்குவான், அப்போது தன் வீட்டில் தன் தந்தையிடம் கூறி முறையாகப் பெண் கேட்டுக்கொள்ளலாம் என்பது சரவணனின் யோசனை.

ஆனால் இவன் கனவில் விழுந்த கல்லாக லலிதாவின் படிப்பு சார்ந்தப் பொறுப்பு, இவன் கையில் தங்கராசுவால் வந்து விழுந்தது.

 

Advertisement