Advertisement

அத்தியாயம் 11

வெளி வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு, மாலை நேரமாக சைட்க்கு கிளம்ப நினைத்திருந்தான் சரவணன்.

ஆனால் தங்கராசு வந்திருப்பதாக முகிலிடம் இருந்து தகவல் வர, உடனே கிளம்பி விட்டான்.

காலையில் இருந்தே லலிதாவின் பார்வை, சரவணனைத் தேடி ஓய்ந்து முகிலைக் கண்டு ஏமாற்றமே அடைந்தது.

சரவணன், லலிதாவின் வீட்டருகே நெருங்க, சரியாக எதிரே வந்தான் தங்கராசு.

கண்டு கொள்ளாமல் தாண்டிச்செல்ல இருந்தவனை அழைத்து வழியை மறித்து நின்றான் சரவணன்.

மாலை நேரமாக அடுப்பில் வேலையாக இருந்த லலிதா சரவணனின் வாகன சத்தம் கேட்டதும், சரியாக அடையாளம் உணர்ந்து ஓடோடி வந்தாள்.

எதிரே நிற்பவனைக் கண்டு சூடாகவும் கோபமாகவும் முறைத்த தங்கராசு, “ஏன்டா வம்பு பண்ற? என்ன வேணும்?” காய்ந்தான்.

லலிதாவிற்காக என உறுப்போட்டு பொறுமையை இழுத்துப் பிடித்த சரவணன், “உங்கிட்ட கொஞ்சம் பேசணும் நில்லு” தன்மையாக நிறுத்தினான்.

அன்று ஏனோ கொஞ்சம் நல்ல மனநிலையில் இருந்திருப்பானோ என்னவோ? கொஞ்சம் பொறுமையாக நின்று கேட்டான் தங்கராசு.

இருவரும் பேசிக்கொள்ளப் பிரச்சனையாகி விடுமோ என்ற பயத்தோடு திண்ணையிலே அமர்ந்துவிட்டாள் லலிதா.

சரவணன் அடங்காத ஆத்திரத்தோடு,“அன்னைக்கு என்னவோ பெருசா லலிதா உன் வீட்டுப் பொண்ணு அவளைக் கவனிச்சுக்க உனக்குத் தெரியும்னு எல்லாம் வீர வசனம் பேசுனே? அந்தப் பொண்ணு அவசரம்னு போன் பண்ணா நீ ஒருநாளாவது அட்டென் பண்ணியிருக்கியா?” என ஆரம்பித்தான்.

லலிதாவை பற்றிய பேச்சை சரவணன் எடுக்கவுமே மூக்கு விடைக்க, சினம் எகிறிக் கொண்டு வந்தது தங்கராசுவிற்கு. அதிலும் ஆரம்பமே தன்னைக் குற்றம் சாட்டத் தாங்கவில்லை.

அவளைப் பத்தி நீ ஒன்னும் கவலைப்படத் தேவையில்லை” வெடுக்கென கூறிய தங்கராசு விலக, முயன்றான்.

எட்டி அவன் கரத்தை வலிமையோடு பிடித்துக் கொண்ட சரவணன், “நான் கேட்பேன். உனக்கு என்னடா பிரச்சனை ஏன் இப்படி பொறுப்பில்லாம சுத்தற? உன் பொறுப்புல ஒரு பொண்ணு இருக்காங்கிற நினைப்பு கொஞ்சம் கூட இல்லையா?” நிதானமாக வினவினான்.

லலிதா அத்தனையும் கேட்டபடி தான் திண்ணையில் அமர்ந்திருந்தான். இத்தனையும் சரவணன் ஏன் தங்கராசுவிடம் பேச வேண்டும்? வெறும் பாட்டிக்காக, தன் மீது பரிதாபம் கொண்டு மட்டும் தானா? என்பதை அறிய அவள் மனம் ஆவல் அலைமோதித் துடித்துக் கொண்டிருந்தது.

தங்கராசுவை இக்கேள்வி குடைய, “உனக்கு என்னடா தெரியும் என்னோட வலியும் வேதனையும் கவலையும்? பெருசா பேச வந்துட்டான்?” சீற,“என்னடா உன் வலி? என்ன உன் கவலை? பத்து வருஷத்துக்கு முன்ன விட்டுட்டுப் போய் இப்போ குழந்தை குடும்பம்னு செட்டில் ஆன பொண்ணை நினைச்சி வீணா உருகிக்கிட்டு இருக்கிற, வீட்டுல இருக்கிற பொண்ணைப் பத்தி கொஞ்சமும் நினைக்க மாட்டியா?” சுள்ளென கேட்டான் சரவணன்.

பழைய கதையைக் கிளற, இன்னுமே தங்கராசுவிற்கு சீற்றம் மேலோங்கியது. “ஏய்! நீ என் நிலைமையில நின்னா தான்டா என் வலி உனக்குப் புரியும்”  ஆத்திரமாகக் கொட்டினான்.

ஆனால் சரவணனிற்கு இது எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. சரவணனிற்கு லலிதாவின் கஷ்டத்தை விட எதுவும் பெரிதில்லை.

என்ன உன் நிலைமை? குடிக்கக் காரணம் வேணும், அதுக்கு மறந்து போன பழைய காதலை இன்னும் காரணமா வைச்சு குடிச்சு சீரழியிற! உன் நிலைமையை யோசிக்க சொல்ற நீ? என்னைக்காவது லலிதா நிலைமையை யோசிச்சு பார்த்து இருக்கியா? ஆதரவா இருந்த பாட்டியும் இல்லாம தனத்தனியா கஷ்டப்பட்டு, பயந்து வெந்து கிடைக்காளே, அவளை விடவா உன் வலி பெருசு?”  முகத்தில் அடித்தார் போன்று கேட்டான்.

தங்கராசுவிற்கு ஆற்றாமை விம்மிய போதும் இவன் கேள்வியில் இருக்கும் நியாயம் புரிபட, மௌனமானான்.

ஆனாலும் சரவணன் விட்டபாடில்லை, “நீ உன் வேதனைக்கு தண்ணி அடிக்கிறன்னா, அவளுக்கு இருக்கிற வேதனையோட அளவுக்கு அவ என்ன செய்யட்டும் சொல்லு? விஷத்தை குடிச்சி சாகவா? சொல்லுடா?” சுள்ளென கேட்டான்.

அப்படியே தலை குனிந்து, புதைந்து போனான் தங்கராசு. லலிதாவிற்கு இருதயம் கனக்க, கண்களில் ஊற்றாக நீர் திரண்டது.

அவளுக்கு இருக்கிற, நம்பிக்கையான ஒரே சொந்தம் நீ மட்டும் தான். தாய்மாமன்னா தாய்க்குச் சமம் இல்லையா? அப்படி நினைக்காட்டாலும் அவளுக்கு நீ கடமைப்பட்டிருக்கியே அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லையா? அவ உன் கடமை தானே?” சரவணன் நறுக்கெனக் கேட்க, இங்கே, லலிதாவிற்கு நெஞ்சே அடைத்துப் போனது.

இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவனும் உறவினர்கள் கூறியபடியே சொல்லிவிடுவானோ?’ என சரவணனையே நினைத்துப் படபடப்பில் இருந்தாள்.

இன்னும் தங்கராசு நிசப்தமாக, “உன் பொறுப்புல இருக்கிறவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்காம, சதா முழு நேரமும் போதையில உன் பொறுப்பை தட்டிக் கழிக்கிறீயே இது என்ன நியாயம்?” நிதானமாக இறங்கிய குரலில் எடுத்துக் கூறினான் சரவணன்.

இதையும் விட நீ இப்படி இருந்தும் லலிதா ஒரு நாளாவது உன்னை மரியாதைக் குறைவா நடத்தியிருப்பாளா? இல்லை ஒரு வார்த்தையையாவது பேசி இருப்பாளா? உங்க அம்மாவுக்கு இறுதிச் சடங்குக்குச் செய்ய வேண்டியது உன் கடமை, அதற்கும் அவ காசை கொடுத்து ஊர், உறவு முன்னால உன்னைத் தலை குனிய விடாம பார்த்துக்கிட்டா.

அது மட்டுமில்லை, நீ கடன் வாங்கி சீட்டாடி, குடிச்சு தொலைச்ச கடனுக்கு அவ கழுத்துல கிடக்கிற நகையை கழட்டினா தெரியுமா..? எந்த இடத்துலையும் ஏன் என்கிட்டையே கூட அவ உன்னை விட்டுக் கொடுத்ததில்லை! அப்படிப்பட்ட லலிதாவுக்கு, உன் அக்கா மகளுக்கு நீ என்ன செய்திருக்க? யோசி” மெல்ல அவள் பாசத்தை எடுத்துக் கூறினான்.

சரவணன் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை, தங்கராசுவிற்கும் லலிதாவின் பாசம் நன்கு புரியுமே! இப்போது மேலும் கசிந்துருகி நின்றான்.

எப்பவும் இக்கட்டான நிலைமையில அவளைத் தவிக்க விட்டிருக்க, கஷ்டத்தைக் கொடுத்து இருக்க, வேற என்ன செஞ்சிருக்க நீ?” இவனுக்கு உரைக்க வேண்டுமென்றே குரல் உயரக் கேட்டான் சரவணன்.

தங்கராசுவுக்கும் இவன் கேள்விகள் உள்ளே சுருக்கெனக் குத்திக் கொண்டே தான் இருந்தது. அதனாலே இந்த மௌனம், அமைதி, அசைவற்று நின்றான்.

அட, நீ எதுவுமே செய்ய வேண்டாம். நீ குடிச்சு குட்டிச்சுவரா சீரழிச்சு போ ஆனால் இராத்திரி மட்டும் வீட்டுக்கு வந்துடு, வீட்டோட இரு.. இல்லை கை, கால உடைச்சாவது வீட்டுல படுக்க வைப்பேன் பார்த்துக்கோ” என ஆத்திரம் தீர அனைத்தையும் கொட்டி, அறிவுரையும் கூறி, இறுதியில் மிரட்டி விட்டுச் சென்றான் சரவணன்.

அத்தனையும் கேட்டிருந்த லலிதாவிற்கு நெஞ்சே உருகிப் போனது. மாமனைக் குறைவாகப் பேசுகிறான் என்றோ? குறை கூறுகிறான் என்றோ நினைக்கவில்லை. தனக்காக ஒருவன் பேசுகிறான் என்ற தித்திப்பே நெஞ்செல்லாம் நிறைந்தது. முதல் முறையாகச் சந்தோஷம் தாங்காமல் கண்ணீர் பூத்ததுக் கொட்டியது.

வந்தவர்கள் சென்றவர்கள் என அனைவருமே தங்கராசுவையும் தன்னையுமே திருமணத்திற்கு இணைத்துப் பேச, சரவணன் ஒருவன் தான் அவ்வாறு பேசவில்லை. உண்மையான அக்கறையோடு தனக்காகப் பேசினான் என நன்கு புரிந்தது பெண்ணிற்கு.

கைகால் கழுவி வந்து அமர்ந்த தங்கராசு அமைதியாக இருக்க, அவன் பசியறிந்து பரிமாறினாள் லலிதா.

பெற்ற அன்னையே என்றாலும் மனமுவந்து எல்லாம் தனக்கு ஒரு நாளும் அன்னமிட்டதில்லை சொர்ணம்.

லலிதாதான் எப்போதும் சாப்பாடு வைப்பாள், சொர்ணம் உண்ணும் போதும் இவன் பொறுப்பின்மையை குறை கூறி அள்ளி வீசும் வசை மொழிகளைக் கேட்டுக்கொண்டே உண்பவனுக்கு இப்போதைய மௌனம் பிடிக்கவில்லை. சொர்ணம் இல்லாத வெறுமையைப் பேரமைதி அறைந்து காட்டியது.

ஒரு நொடியே அவரையே யோசிக்க, அன்னை திட்டிய வார்த்தைகள் எல்லாம் அப்படியே நினைவில் வந்து இதயம் குடைந்தது. அத்தனையும் உண்மையான வார்த்தைகள் எவ்வளவு பொறுப்பில்லாமல் இருந்திருக்கிறேன்? அவர் இல்லாத வெறுமையில் இப்போது உணர்ந்தான்.

கண் முன் அங்கும் இங்கும் ஆடியோடும் லலிதாவின் கரங்களில் பார்வை பதிய, நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

முன்னனொரு நாள் லலிதா கடைசி வருடக் கல்லூரி படிப்பில் இருந்த நேரம்.

ஒருநாள் மதிய உணவைத் திட்டியபடியே பரிமாறிய சொர்ணம், “இந்த ஆவணியில முகூர்த்தநாள் பார்க்குறேன், லலிதாவை கல்யாணம் கட்டிக்கோ, இனியாவது உனக்கு பொறுப்பு வருதான்னு பார்க்குறேன்” என்க, சூடானவன், “வயசாகவும் உனக்குப் புத்தி மங்கிப்போச்சா? என்ன பேச்சு பேசுற?” அதட்டினான் அன்னையை.

என்னடா தப்பா கேட்டேன்? இன்னும் நீ பாழப்போனவளையே நினைக்கிச்சிட்டு இருக்கியா? லலிதாவைக் கொஞ்சம் நினைச்சிப் பாருடா, ஒன்னுக்குள்ள ஒன்னாவே இருந்துட்டோம், என் பேத்தியை என் மகனுக்கு முடிக்க நான் நினைக்கக் கூடாதா? இவளை வெளியே கட்டிக்கொடுத்துட்டா இந்த வீடையும் தோப்பையும் அவளுக்கே கொடுக்க வேண்டி இருக்குமேடா?” பேத்தியின் மீது இருந்த பாசம் அவள் சொத்துக்களின் மீதும் இருந்தது சொர்ணத்திற்கு.

அவளோடது தானே? அவளுக்குத்தான். அத்தனையும் கொடுத்து நல்ல இடமா பார்த்துச் சிறப்பா கல்யாணம் செஞ்சி வைக்கணும்மா” என்றே சொன்னான் தங்கராசு.

மகனின் மனநிலைப் புரிய, சொர்ணம் வாயடைத்துப் போனார்.

எனக்கு என்னம்மா வேணும்? ஒத்தக் கட்டை இப்படியே போகட்டும். லலிதா சின்னப் புள்ளைம்மா, என் புள்ளை மாதிரிம்மா. அவளை நான் வேற மாதிரி எல்லாம் பார்த்து இல்லை. இனி நீ இந்தமாதிரி கிறுக்குத்தனமா எல்லாம் பேசாத” கடிந்தான் பெற்றவளை.

என்றோ கூறியது தான், இப்போது சொர்ணம் இல்லாத போதும், உறவினர்கள் என்னென்னவோ அறிவுரைகள் கூறிய போதும் தங்கராசுவின் மனநிலையில் மாற்றமில்லை.

இப்போதும் நினைத்தபடியே, வீட்டில் இருக்கும் இந்த ஐந்து நிமிடத்திற்கே, அன்னை இல்லாத வெறுமை அதிகம் தாக்குகிறதே, முழுதும் முற்றிலுமாக லலிதாவிற்கு எப்படியிருக்கும்? முதல் முறையாக அவளுக்காகவும் யோசித்தபடி வெறுமையான நிலத்தில் உலாத்திக் கொண்டிருந்தான் தங்கராசு.

சரவணன் காவ்யாவின் எண்ணிற்கு அழைத்திருந்தான்.

இரண்டே நொடியில் அழைப்பு ஏற்கப்பட, பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப் பின், “உன் வீட்டுல எதுவும் பிரச்சனையா? இல்லை அக்கா மாமாவுக்குள்ளதான் பிரச்சனையா? மாமா இங்க வரும் போதெல்லாம் எங்க அக்காவோட சண்டை தான்” சற்று காட்டமாக அவளிடம் குற்றச்சாட்டு வாசித்தான்.

தாங்க இயலாது, “சாரிங்க..” இறங்கிய குரலில் அண்ணனின் சார்பாக வேண்டினாள் பெண்.

தன் அண்ணனிடம் காய முடியாதது தன்னிடம் ஏறுகிறான் எனப் புரிந்த போதும் தணிந்து போனாள்.

உன் சாரியெல்லாம் வேண்டாம், என்னை பிரச்சனைன்னு கேட்டேன், அதுக்கு பதில் சொல்லு” பிடித்த பிடியில் நிற்க, தயங்கி, குறுகி மெல்லிய குரலில், “என்னால இல்லை நம்மளால தான் பிரச்சனை” என்றாள்.

குழப்பமும் அதிர்ச்சியுமாக, ‘தங்களாலா? தங்களை ஏன் இணைத்துப் பேசுகிறாள்?’ யோசித்தான்.

என்ன? என்னால பிரச்சனை?” அதிர, “இந்த வீக்கென்ட் ஊருக்கு வருவேன், நேர்ல வந்து எல்லாம் விளக்கமா சொல்றேன். அண்ணி, அண்ணாகிட்டையும் நானே பேசிக்கிறேன். நீங்க கவலைப்பட வேண்டாம்” என அவசர அவசரமாகக் கூறியவள் அழைப்பையும் துண்டித்து விட்டாள்.

சரவணனும் இருக்கும் வேலையில் நேரில் வருவாள் தானே பார்த்துக்கொள்ளலாம் என ஒதுக்கி வைத்தவன், மற்ற வேலைகளில் மூழ்கிப் போனான்.

 

Advertisement