Advertisement

அத்தியாயம் 10

அதிகாலையில் எல்லாம் எழுத்து விட்டாள் லலிதா.

வெளி வாசல் பெருக்கி, நீர் தெளிக்கும் நேரம் தான் சரவணனின் இருசக்கர வாகனம் அங்கிருப்பதைக் கண்டாள்.

என்ன நினைத்தாளோ, அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு,  விறுவிறுவென சரவணனின் சைட்டில் இருக்கும் அவன் அறை நோக்கிச் சென்றாள்.

தகரக் கதவு திறந்திருக்க, உள்ளே நாற்காலியில் அமர்ந்தபடியே மேசை மீது கை வைத்து, அதன் மீது தலை கவிழ்ந்து படுத்திருந்தான்.

விழி விரிய, அப்படியே ஸ்தம்பித்து நின்றாள் லலிதா. என்னவோ அவள் ஆவி துடித்தது, அப்படியே கசிந்துருகிப் போனாள்.

தனக்கு தைரியம் உரைத்தவன், அவன் வீட்டிற்குச் சென்றிருப்பான் என்றே நினைத்திருந்தாள்.

லலிதா வந்து நிற்கும் அந்த சிறு அருவத்தில் சட்டென உஷாரான நிலையில் விழித்துக் கொண்டான் சரவணன். லலிதாவைக் காண, சிறு மூச்சோடு உடல் தளர்ந்தவன், சோம்பல் தீர, நெட்டி முறித்தான்.

இன்னும் வெளிச்சம் வராத, இருள் நீங்காத அதிகாலை பொழுதில் மெல்லிய மின்சார விளக்கு ஒளியில் நின்றிருந்தாள்.

சிற்பமோ? ஓவியமோ? இல்லையில்லை அதை மிஞ்சிய அழகில் மிளிர்ந்தாள்.

சரவணனின் அதரங்களில் மிக மெல்லிய புன்னகை அழகாக அரும்பியது.

லலிதாவின் விழிகளிலோ வைரத்துளியாய் கண்ணீர்த் துளிகள் தேங்கி பளபளத்தன.

குளிர் வாடைக் காற்றிலும் கொசுக்கடியிலும் ஒரு கட்டில் கூட இல்லாது இப்படியே ஓர் இரவும் உறங்கினானா? நெஞ்சே தவியாய் தவித்தது.

தொண்டை அடைக்க,“நீங்க வீட்டுக்குப் போகலையா?” கலங்கிய குரலில் வினவினான்.

என்னவென்று சொல்வான்? நேற்றைய இவள் முகம், அதிலும் பயத்தில் வெளிறிய முகம், அதைக் கண்ட பின், இப்படியே விட்டுச் செல்ல இவனால் இயலவில்லையே!

“இல்லை..” ஒற்றை வார்த்தை உதிர்த்தவன், மெல்ல எழுந்து கொண்டான்.

ஒரு நொடி இமைக்காது, விழி எடுக்காது சரவணனின் முகம் பார்த்தாள். உள்ளுக்குள் என்னென்னவோ மாற்றங்கள் நிகழ்கிறது. கண்கள் இன்னும் கரித்துக் கொண்டு வருகிறது, கீழ் உதடுகள் வெடித்துத் துடிக்கிறது. தொண்டைக்குழிக்குள் ஏதோ உருண்டை உருள்கிறது, வார்த்தை சிதறாது அப்படியே விழுங்கினாள்.

பின் திரும்பியவள், அறையிலிருந்து வெளியேறிவிட்டாள்.

யார் இவன்? எனக்காக ஏன் இத்தனை உதவிகள் செய்கிறான்? பாட்டிக்கு உதவி செய்தவரைச் சரி, அதற்கு மேலும் ஏன்? அப்படியென்ன என்ன மீது இரக்கமோ? பரிதாபமோ? பாசமோ? என்னவென்று அறியாத போதும், அவன் தந்த பாதுகாப்பு, கதகதப்பு லலிதாவிற்குப் பிடிக்கிறது, இதமாக இருக்கிறது.

ஆனாலும் முழுதாக ஏற்றுக்கொள்ள லலிதாவால் இயலவில்லை. யார் இருந்தாலும் இல்லை என்றாலும் யார் நிழலும் இன்றி தனித்து வாழ பழகிக்கொள்ள வேண்டும் உறுதி கொண்டாள்.

சரவணனிற்கு இந்த காலை இனிமையாக, உற்சாகமாக விடிந்திருந்தது. முதல் முறையாக அவள் தன் இருப்பிடம் வரை வந்துள்ளாள், அது மட்டுமின்றி, விடியலே அவள் மலர் முகம் பார்த்து விடிந்த இனிமை!

பின்புற வேலிக்கதவை திறந்து கொண்டு தோப்பிற்குள் சென்று முகம், கை, கால்களைக் கழுவினான். ஒரு காஃபியோ தேநீரோ என எதிர்பார்த்தவனுக்கு அதெல்லாம் உன் அதிகப்படியான பேராசை என மனசாட்சி கொட்டியது.

சிறிது நேரம் காலாற வயல் வரப்புகளில் நடந்து வந்தான். உடல் அலுப்பை மறந்து, மனதெல்லாம் மலர, முகம் பூரிக்க, உல்லாசமாகச் சுற்றி வந்தான்.

முகிலும் வேலையாட்களும் வரும் வரையிலும் நேரம் கழியச் சுற்றி வந்தவன், அதன் பின்னரே வீட்டிற்குக் கிளம்பினான்.

தங்கராசு வீட்டிற்கு வரும் நேரமாக தன்னிடம் தெரிவிக்கும்படி கூறிவிட்டுத்தான் தங்கள் வீட்டிற்குச் சென்றிருந்தான்.

மறுநாள் கதிர்வேல் வந்திருந்தார். சாரதாவும் சற்றே தேறி இருக்க, வந்தவரிடம் முகம் காட்டாது உபசரித்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத் தேநீரோடு அனைவரும் குடும்பமாக அமர்ந்திருந்தனர்.

சாரதாவின் அருகில் அமர்ந்திருந்த கதிர்வேல், “என்ன மாமா சரவணனுக்கு எதுவும் பொண்ணு பார்க்கிற ஐடியா இருக்கா?” சட்டெனக் கேட்டார்.

அனைவரும் ஒருநொடி மௌனமாகிவிட, யாரும் அறியாது சாதாரண பார்வை போலே நிமிர்ந்து கணவனை முறைத்தாள் சாரதா.

“இவன் ம்ம் சொன்னா, பார்க்கலாம்! எதுவா இருந்தாலும் பையன் விருப்பம் தான் மாப்பிள்ளை” ரத்தினபாண்டியன் கூற, “என்ன மச்சான்?” என்ற கேள்வியோடு சரவணனை நோக்கித் திரும்பினார் கதிர்வேல்.

“எடுத்திருக்க ப்ராஜெக்ட்டை முடிக்கணும், அடுத்தொரு கவர்மென்ட் பிராஜெக்ட் வரது.. கொஞ்ச நாள் போகட்டும் மாமா” பிடிகொடுக்காது பதில் உரைத்த சரவணன் நழுவப் பார்த்தான்.

“இப்படிச் சொன்னா எப்படி மச்சான்? வேலை எப்பவும் இருக்கிறது தானே? இப்போ பார்த்தாத்தானே பொண்ணு அமைச்சி வர சரியா இருக்கும்” விடாது கதிர்வேல் துருவினான்.

கணவன் எதை மனதில் வைத்துப் பேசுகிறான் என்பதெல்லாம் மனைவியான சாரதாவிற்கு நன்கு புரிய, ஒரு கண்டிப்புப் பார்வை வீசினாள். இவள் பார்வையின் அர்த்தம் புரிந்தபோதும் அலட்சியப்படுத்தினார் கதிர்வேல்.

“அட பொறுங்க மாமா, நீங்க எல்லாம் தான் எனக்காக பார்க்கணும்” என்றான் இளகிய குரலில்.

அதற்குள் சாரதாவின் கைப்பேசி இசைக்க, எடுத்துப் பேசியபடியே தன்னறைக்கு எழுந்து சென்றாள்.

காவ்யாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்க, இவள் பேசி முடித்த நேரம், பின்னாலே வந்தார் கதிர்வேல்.

“என்ன செய்றீங்க நீங்க? இப்போ ஏன் சரவணனோட கல்யாணம் விஷயத்தைப் பேசுனீங்க?” சூடாக மனைவி கேட்க, “உன் தம்பி நல்லதுக்கு தானே? நீயேன் இப்படித் தப்பா நினைக்கிற?” அவரும் பதில் கேள்வி கேட்டார்.

“நீங்க என்ன மனசுல வைச்சிட்டு இப்படியெல்லாம் பேசுறீங்கன்னு எனக்குத் தெரியும்?” ஆணி அடித்தார் போன்று கூற, “தெரிஞ்சா சரிதான், இனி உன்னை நம்பி இருக்கிறது பிரோஜனமில்லை, அதான் நானே காரியத்துல இறங்கிட்டேன்” என்றார் மிதப்பாக, உள்ளுள்ளே கொஞ்சம் ஆத்திரம் கனன்று கொண்டும் இருந்தது.

“நீங்க என்னை வைச்சு மிரட்டுறது, உங்க காரியத்தைச் சாதிக்க நினைக்கிறது சரியில்லை. இதுக்கு நான் இடம் கொடுக்கவும் மாட்டேன்” நேரடியாகச் சாரதா தன் எதிர்ப்பைக் காட்டினாள்.

“நீ செய்றது மட்டும் நியாயமோ? நீ வயித்துல இருக்கிற என் குழந்தைக் காட்டி என்னை பிளாக்மெயில் செய்ற!” பட்டென முகத்தில் அறைந்தார் போல் கூறி விட்டார்.

கோபம் உச்சியில் ஏற, உள்ளம் வாட, செம்முகம் கனலாகச் சிவந்து போனது.

“போதும் நிறுத்துங்க, குழந்தை எனக்கும் குழந்தை தான்!” பரிதவிப்போடு, வீராப்பாகவும் உரைத்தாள்.

“அப்படி நினைத்திருந்தா இப்படி உடம்பைக் கெடுத்து, என்னையும் அலைகழிச்சு, என் பிள்ளையும் வருத்தியிருக்க மாட்டியே?” சீற, அழுகையுடன் சாரதாவும் வெடித்தாள்.

மெல்லியதாகத் துவங்கிய விவாதம் காரசாரமாக வெடிக்க, இருவரும் தங்கள் முடிவிலும் கருத்திலும் நிலையாக நின்றனர். இருவருக்கும் பொறுமையும் விட்டுக்கொடுக்கும் எண்ணமும் இல்லை.

முடிவில் அத்தனை அழுத்தத்தையும் பாரத்தையும் தாங்காது, சாரதா கண் முன்னே மயங்கி விழ, தாங்கிப் பிடித்தார் கதிர்வேல்.

கதிர்வேலுக்கு தன் தவறு புரிய, சற்று பயமும் பதட்டமும் கூடி வர, தண்ணீரைத் தெளித்து எழும்ப முயன்றார். பின்னாலே வந்த சரவணனும் உதவ, மெல்லக் கண் விழித்தாள் சாரதா.

இதற்கு மேலும் தான் இருந்தால் இவள் ஆரோக்கியத்திற்கும் மனதிற்கும் கேடு என நினைத்துக்கொண்ட கதிர்வேல் அப்போதே விடைபெற்றுக் கிளம்பினார்.

அவர் எண்ணப்போக்கு அறியாத சாரதாவோ பாதியில் விட்ட சண்டையில் தன் மீது கோபமாக கிளம்புவதாக, நினைத்தவள் கண்ணீரோடு நின்றிருந்தாள்.

இருவரும் இருதிசை செல்ல செய்வதறியாது, வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தான் சரவணபாண்டியன்.

இரண்டு நாட்களாக எதிர்பார்க்கிறான், முகிலும் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறான், தங்கராசு கண்ணிலே படாது ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறான்.

மதிய உணவு நேரம், வேலையாட்கள் அனைவரும் சென்றிருக்க, முகிலும் சரவணனும் மட்டும் சைட்டில் இருந்தனர்.

முகிலும் அவர்கள் அறைக்குள் அமர்ந்து கொண்டு, அவன் அன்னை கொடுத்து விட்டிருந்த லஞ்ச் பாக்ஸை திறந்து உண்ணத் தொடங்கி இருந்தான்.

சரவணன் மட்டுமே தலையில் கை வைத்தபடி மரத்தடியில் அமர்ந்திருந்தான்.

சாரதாவிற்கும் மாமாவிற்கும் என்ன பிரச்சனை? ஏன் அவளையே வருத்திக் கொள்கிறாள்? சிந்தனையும் கவலையும் உடன் பிறந்தவளைச் சுற்றி வர, தலை வலிப்பது போலே உணர்ந்தான்.

அதே நேரம் தன் முன் ஏதோ நிழல் அருவம் உணர, கண் திறந்து பார்க்க, கையில் தேநீர் டம்ளருடன் லலிதா நின்றிருந்தாள்.

“கொஞ்ச நேரமா உங்களையே பார்க்கிறேன், தலைவலி போலே இதை குடிங்க சரியா போயிடும்” என்றாள் இதமான மென் குரலில்.

சரவணனிற்கு நடப்பவற்றை நம்ப முடியவில்லை. இவளின் இந்த அணுகுமுறையும் அக்கறையும் புதிதாக இருக்க, சற்று இதமாக உணர்ந்தவனுக்கு இருக்கும் வலி குறைந்தது போன்று இருந்தது.

மெளனமாக வாங்கிப் பருகியவனுக்கு தங்கராசுவின் நினைவு வர, “இன்னும் உன் மாமன் வீட்டுக்கு வரலையா?” என்றான்.

“ம்கூம்..” என்றபடியே லலிதா மறுப்பாகத் தலையசைக்க, ஏனோ அந்த நொடி அக்காவின் சூழ்நிலையோடு தங்கராசுவை பொருத்தி யோசித்தான்.

“ஏன்? என்ன பிரச்சனை உன் மாமனுக்கு? ஏன் இப்படி குடிச்சி அவன் உடம்பையும் கெடுத்துட்டு பொறுப்பில்லாமல் சுத்துறான்?” பட்டென மனதில் தோன்றிய நொடியே கேட்டுவிட்டான் சரவணன்.

முகம் சுணங்கியவள், “பாட்டி இறந்த வேதனையா இருக்கும்” என்க, “ஓஹோ! அப்போ இதுக்கு முன்ன மட்டும் சின்சியர் சிகாமணியா பொறுப்பா இருந்தானோ?” நக்கலாக சுள்ளெனக் கேட்டான்.

“ம்ச்..” என சலித்துக்கொண்ட லலிதாவிற்கு ஏனோ இவனிடம் எதையும் மறைக்கத் தோன்றாது, தான் அறிந்தவரை அனைத்தையும் கூறினாள்.

லலிதா அப்போதெல்லாம் பள்ளி செல்லும் சிறுமி, தங்கராசு அப்போது வாலிபன். இந்த ஊருக்கு வந்த புதிது, அருகே கல்லூரி ஒன்றில் டிப்ளமோ இன்ஜினியிரிங் படித்துக் கொண்டிருந்தான். முதல் வருடமே உடன் படிக்கும் ஒரு பெண்ணோடு காதல் மலர்ந்தது. பக்குவமும் தெளிவும் இல்லாத அந்த வயதில் உதிக்கும் காதல் அனைத்துமே வெற்றிப் படி ஏறுவதில்லையே!

மறு வருடமே அப்பெண் வீட்டில் விஷயம் அறிந்து அவசர அவசரமாக திருமணம், இதில் அவள் படிப்பு பாதியில் நிறுத்தப்பட, அதன் பின் தங்கராசுவும் கல்லூரி செல்லவில்லை.

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே என சோகம் பாதியும் சென்றவளுக்கு நல்வாழ்வு அமையாத வேதனை மீதியுமாக அவனை அரித்து, எரித்தது.

அத்தனையும் தன்னால் தான் என்ற குற்றவுணர்வும் மேலும் குத்திக் கீற, அந்த வலியும் வேதனையும் தாங்கிக் கொள்ள இயலாத வயது. சரியான வழிகாட்டுதலும் தண்டிக்கும் பெரியோர்களும் இல்லாது போன சூழல். வலிக்கு நிவாரணி என எடுத்துக் கொண்ட போதை இப்போது முற்றிலுமாக அவனை ஆக்கிரமித்து அவனை அடிமைபடுத்தி வைத்திருக்கிறது.

லலிதா கூற, அனைத்தையும் கேட்ட சரவணன், நிசப்தமுடன் நீண்ட பெறு மூச்சை விட்டான்.

‘சற்று நல்லவன் தான், நிகழ்காலம் உணராத மூடன், அதிலும் தனக்கு மட்டும் முரடன்’ என தங்கராசுவை எண்ணியபடி, காலி டம்ளரை லலிதாவிடம் நீட்டினான்.

அப்போதே லலிதாவின் கையில் சுருட்டிய நிலையில் மஞ்சள் பை ஒன்று இருக்கக் கண்டான், அப்போதே அவன் பார்வையை உணர்ந்த லலிதா, அவன் முன் நீட்டினாள்.

“இது ஹாஸ்பிட்டல்ல பாட்டிக்காக நீங்க செலவு செய்ததுக்கு, என்னால முடிஞ்சது வாங்கிக்கங்க” என நீட்டினாள்.

சரவணனின் பார்வை காலியான இவள் தோப்பை நோக்கிப் பாய்ந்தது, இதற்காகத்தான் இத்தனை அவசரமாக வாழைகளை விற்றாளா? சரியாகக் கணித்தவனுக்கு சுறு சுறுவென கோபம் ஏறியது. அது வரை இருந்த இதம் காற்றில் கரைந்து கற்பூரமாகிப்போனது.

“பாட்டிக்காகச் செஞ்சதுன்னு அன்னைக்கே சொன்னேனே! இப்படி அவங்க மேல நான் வைச்ச பாசத்தை விலை பேசி ஆசிக்கப் படுத்தாததே லலிதா” பட்டென கூறினான்.

இப்போது கூட தனக்காகத்தான் என்றொரு வார்த்தை வராத ஏமாற்றம், உரிமை கொண்ட கோபமாக உருமாறியது.

“பாட்டி, என் பாட்டி தான், ஆனாலும் அவளுக்காகச் செய்த எதுவும் எனக்கு வேண்டாம்” சூடாக பதில் மொழி கொடுத்தவள், பணத்தையும் கொடுத்துவிட்டு நில்லாது சென்றாள்.

கடுகடுவென அமர்ந்திருந்த சரவணனின் அருகே, “கருவாட்டுக் குழம்பு சூப்பர்ண்ணே!” என்றபடி வந்து நின்றான் முகில்.

“பேசாம போயிடு.. இல்லை எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு கரும்பு சக்கையாக புழிஞ்சிடுவேன்” வெடித்து விழுந்தான்.

கையில் இருக்கும் மஞ்சள் பைக்குள் மைசூர் பாக்கை எதிர்பார்த்தபடி வாங்கி பிரித்துப் பார்த்த முகில், கட்டான பணத்தை காணவும், “என்னாச்சு?” என்றான் விசாரணையாக.

முகிலின் குரலில் ஒருவித அனுசரணையும் வந்து வருட, அசதியுற்ற குரலில் அனைத்தையும் கூறினான் சரவணன்.

“இதுக்கு ஏண்ணே இவ்வளவு சோகமாக உக்காத்து இருக்க? நல்லவிதமாகத்தானே சொல்லிட்டுப் போயிருக்கு அந்தப்புள்ளை?” என குதூகல குரலில் முகில் ஆர்பரிக்க, புரியாது பார்த்தான் சரவணன்.

“இதுக்கு தான் என்னை மாதிரி லேஜென்ட், பிர்லியன்ட் பக்கத்துல வேணும்னு சொல்றது!” என்றவன் விஷயத்தை விளக்காது தன்னையே மெச்சி தற்பெருமை கூற, கொலைவெறியில் முறைத்தான் சரவணன்.

“அண்ணே லலிதா என்ன சொல்லிட்டுப் போச்சு?” ராகமாக முகில் கேட்க, பற்களை கடித்தபடியே, “பாட்டிக்காக செய்த எதுவும் எனக்கு வேண்டாம்ன்னு சொன்னா” எரிந்து விழுந்தான் சரவணன்.

“அப்போ அதுக்கு என்ன அர்த்தம்?”

“என்னடா அர்த்தம்?”

“நீங்க என்ன செய்தாலும் செய்து இருந்தாலும் அது அவளுக்கானதா இருக்கணுமாம். அப்படி இல்லாத எதுவும் அவளுக்கு வேண்டாம், தேவையில்லைன்னு உரிமையா சொல்லிட்டுப் போறா!”

“நிஜமாவாடா?”  நம்ப இயலாது, இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்து எழுந்து முகிலைப் பற்றி உலுக்கிக் கேட்டான்.

“ஏன் நான் சொன்னா நம்ப மாட்டியா? இதுக்கு என்ன நான் சொர்ணம் பாட்டி ஆவியவா கூட்டிட்டு வர முடியும்?” கிண்டலாக மொழிந்தான் முகில்.

இது எதுவும் சரவணனின் செவியில் ஏறவில்லை. கனவுலகில் வெள்ளையாடை தேவதைகள் சூழ சந்தோஷக் கூத்தாடிக் கொண்டிருந்தான்.

 

Advertisement