Advertisement

இதழ் 06

வீட்க்குள்ளே சென்று கதவை சாத்தி விட்டு, நிலத்தில் பொத்தென அமர்தவளின் இதயம் வரண்டு கிடந்தது. அழமுடியாதளவு விக்கித்திருந்தாள். ஏனெனில் அவள் கடையில் பார்த்த நிகழ்வு அப்படி. 

ஆதவன் தங்களருகில் வரப்போகின்றான் என நினைத்து அவள் மனதுக்குள்ளே ஆர்வமாயிருக்க, அவன் இவர்களை காணாமலே, அவர்களுக்கு பின்னால் இருந்த அழகியினருகில் போய் நிற்கவும்,  அந்த அழகி அவனை பாய்ந்து இறுக்கி கட்டி அணைத்துக்கொண்டாள். 

அதற்கு மேல் அவர்களிருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. விரைந்து காரில் ஏறி கிளம்பிவிட்டனர். இருவருக்கும் வெவ்வேறு வகையில் அதிகபட்ச அதிர்ச்சியில் இருந்தனர். 

அதன் விளைவே மேகா இப்போது அறையை பூட்டி விட்டு மெளன கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள். 

‘மேகா நீ அழக்கூடாது. தைரியமாக இருடி. நீயே அவனை டிவோஸ் பண்ண   என்று நினைத்த பிறகும் எதுக்கு அழணும். எது நடந்தாலும் எந்த ரியாக்சனும் காட்டாதடி’ என்று தனக்கு தானே ஆறுதல் கூறியவளின் மனம் அலைகடலாய் கொந்தளித்து கொண்டிருந்தது. 

அவளது நீண்ட கால தவம் தவறென தள்ளி வைக்கப்பட்டது. ஹோட்டலில் பார்த்த பெண் தான் ஆதவனின் காதலி என்பது இத்தனை வருடங்களில் அன்று தான் அவள் தெரிந்தது கொண்டாள்.

                              *******

‘ஏய் கையை எடு, முதல்ல கையை எடு.’ என்று கூறியவாறு அனுராதாவின் பிடியில் இருந்து முதல் தடவையாக விலகிய ஆதியின் முகம் இறுகிக்கிடந்ததையே நினைத்து பார்த்தவண்ணம் கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள் அனுராதா.

அவள் எதிர் பார்க்கவில்லை, அவன் தன்னை உதறி தள்ளுவான் என்று. ஒரு வைரப்பொக்கிஷம் தன்னை விட்டு நழுவிப்போவதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

‘இவனை விடக்கூடாது. எப்பாடு பட்டேனும் வழிக்கு கொண்டு வரவேண்டுமே…!’ இல்லை  எனின் அவளது கனவெல்லாம் மண்ணாகி போய்விடுமே…? என்பதை புரிந்து கொண்டவள், அடுத்த காய்நகர்த்தலை ஆரம்பிக்கத்தொடங்கி, அவனுக்கு ஹோல் பண்ணவும், ஹோல் வெயிட்டிங் என்று வரவும், கடுப்பாகி ஃபோனை கீழே வைத்தவள் அடுத்தடுத்த திட்டங்களை தீட்டியபடி விசமச்சிரிப்பை உதடுகளில் படரவிட்டுக்கொணாடாள்.

                             *******

இன்னொருத்தியை இன்றுவரை காதலித்துக்கொண்டிப்பவனை, தன்னுடைய இதயக்கூட்டிற்குள் ஏற்றி வைத்திருந்தோம் என்ற நினைப்பே அவளது தேகம் முழுவதையும் கசக்கச்செய்தது.

தான் இதுவரையும் என்னவொரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நினைத்து மருகித்துடித்தவள், அன்று முழுவதும் வெளியே வரவில்லை. அவளது நடமாட்டம் இல்லாதது குறித்து மாமியாருக்கும், சமையல்காரம்மா காந்தாவும் உள்ளுக்குள்ளே யோசனையுடன் அவளது வரவுக்காக காத்திருந்து அந்த நாள் முடிந்தே போனது.

அடுத்த நாள் காலையில் தானாகவே விழிப்பு வர கண்களை மூடிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள். கண்ணை திறக்க மனம் வரவில்லை. மறுபடியும் படுத்து தூங்கலாமா? என நினைத்த மறுநொடி படுக்கையில் சரிந்திருந்தாள். அப்படி ஒரு அரை மணித்தியாலம் உருண்டு, பிரண்டு எழுந்தவள்  கண்களை திறந்து வெளி உலகத்தை பார்த்தவளுக்கு, ஸ்ரோர் ரூம் ஓட்டை ஜன்னல் வழியாக தெரிந்த காலைக்கருக்கலை கண் கொட்டாமல் பார்த்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அன்றைக்கு வழக்கம் போலவே சீக்கிரமாக எழுந்தாலும், இனிமேல் அங்கே வேலைக்கு போகப்போவதில்லை என்பதால் ஸ்டோர் ரூமில் இருக்கும் பழைய பொருட்களோடு இன்னொரு பொருள் போல அமர்ந்திருந்தாள்.

இனிமேல் புது வேலையாள் வரும் வரை காந்தா தான் தனியாக சமைக்க வேண்டும். இந்தநிலை காந்தாவை காண்டு ஆக்கினாலும் மேகாவுக்காய் பொறுத்துக் கொண்டாள்.

அன்று விடியற்காலையில் வெண்பொங்கலுக்கும், சட்னிக்கும் தயார் செய்து வைத்து விட்டு காஃபியை ஊற்றி, எல்லோருக்குமாக தட்டில் எடுத்து வைத்து கொண்டு, ஒவ்வொரு ரூமிலும் வைத்து விட்டு தன் வேலையில் கவனமானார்.

சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக நடுக்கூடத்தில் வந்து அமரவும், சரிதாவும் சரவணணும் கூட அங்கே வந்தமர்ந்தனர்.

“அம்மா… இப்போதெல்லாம் மேகாக்கு குளிர் விட்டுப்போச்சுப்போல…” என்ற ஆத்மிகாவை திரும்பி என்ன? என்பது போல பார்த்தார்.

அவரது பார்வையின் சூட்டை புரிந்து கொண்ட மற்றவர்கள் பேசாமல் இருக்க ஆத்மிகா  மட்டும் துடுக்கு தனமாக “இது என்ன? காஃபியா, இல்ல காஃபி கப் கழுவின தண்ணியா”

“ம்… காஃபிக்கப் கழுவின மாதிரி தான் இருக்கு. என்ன? செய்யலாம் எண்டு நீயே சொல்லு ஆத்மி…” என்ற சரிதாவை எல்லோரும் பார்த்தபடி இருந்தனர்.

“மேகாவ முதல்ல வேலையை விட்டு தூக்கிட்டு, வேற நல்ல குக்கா அப்பாயிண்ட் பண்ணுங்க மம்மி.”

“நீ நினைத்தவுடன் குக் எல்லாம் அப்பாயிண்ட் பண்ண முடியாது. நீ காந்தாவோட சேர்ந்து ஒரு இரண்டு கிழமைக்கு சமையலுக்கு உதவி செய் ஆத்மிகா. இப்போதெல்லாம் காலையில் இருந்து தூங்கப்போகும் வரைக்கும் நீ ஃபோனை நோண்டுறதை விட்டுட்டு இப்படி கொஞ்சம் உதவி செய்தாலே போதும். நாம சமையல் பழகினமாதிரியும் இருக்கும். மத்தவங்களை நல்லா பாத்துக்கொண்ட மாதிரியும் இருக்கும். நீ இனி அதை செய்யேன் ஆத்மி.”

“சரியாக சொன்னீங்க அத்தை என்றவாறு அசோக் சொல்லவும் அவனை முறைத்தாள்.”ஆத்மி.

“என்ன? முறைப்பு ஆத்மி. இந்த வீட்ல எங்களுக்கு என்ன? உரிமை, கடமை, கத்தரிக்காய் எண்டு இருக்கிறதோ? அதே போல் தான் மேகா அக்காக்கும் இருக்கு. சொல்லப்போனால் எங்கள் எல்லோரை விடவும் அவங்களுக்கு தான் கூட இருக்கு. ஆதி அத்தானுக்கும், மேகாக்கும் இடையில் இருக்கிற பிரச்சனைக்குள்ள புகுந்து நீ குட்டையை குழப்பாத ஆத்மி. உனக்கு இந்த காஃபி பிடிக்கல்லன்னா வேற கேள். அதுவும் சரிவரேல்லை என்றால் நீயே காஃபி போட்டு குடிக்க பழகு.”

“நல்லாக்கேளு அசோக். இன்று காஃபி குடித்த வீட்ல இருக்கிற மற்றாக்கள் ஒருத்தரும் ஒன்றும் சொல்லவில்லை. இவ மட்டும் வந்துட்டா விளக்கம் கேட்க.” என்றவாறு சரிதா சரவணனுடன் சென்று அமர்ந்து கொண்டார்.

“ஆத்மி ஆதி அத்தான் உனக்கு அண்ணா என்றால், மேகா அக்கா எங்களுக்கு பெரியம்மா மகள் எங்களுக்கும் அவ அக்கா. நீ ஆதி அத்தானை காரணமாக வைத்து மேகா அக்காக்கு பண்றதெல்லாம் இங்கே இருக்கிற எல்லாருக்கும் தெரியும். நீ சின்னப்புள்ள ஏதோ விளையாட்டுக்கு செய்கிறாய் என நினைத்தால் சின்னத்தனமா நீ நடந்துக்கிறாய் என்று இப்போது தானே தெரிகின்றது.”

இங்கே நீ மட்டுமில்ல. உன் வயசப்பசங்க அர்ஜுன், அபிநயா என இன்னும் இரண்டு பேர் இருக்காங்க. அவங்க ஒருத்தரும் மேகா அக்காவோட உன்னைப்போல் எடுத்தெறிந்து பேசுவதில்லை. சொல்லப்போனால் ஆதி அத்தான் இல்லாத நேரம் முழுவதும் அக்கா கூட பேசிட்டு தான் இருக்காங்க.

“உனக்கு பிடிக்கல்ல என்றால் தள்ளியிரு. அதை விட்டுட்டு அக்காவை சமையல்ல இருந்து நிப்பாட்டுறன். வீட்டை விட்டு துரத்துறன் என்று கதை பேசு. நீ படிக்காமல் பிரண்ஸ்சோட ஊர் சுத்துறதை ஆதி அத்தான்கிட்ட நிஜமா சொல்லிடுவேன்.” என்றவன் திரும்பி மாடிக்கு சென்றான்.

அபிநயா, அர்ஜுன் கூட தத்தம் வேலைகளில் ஆழ்ந்து விட்டனர். ‘இருங்கடா ஆதி அண்ணா வரட்டும். எல்லாரையும் தனித்தனியா போட்டுக்கொடுக்கிறேன்.’ என உள்ளுக்குள்ளே கருவியவள் எழுந்து சென்று கதவடைத்து கொண்டாள்.

“அபி இந்த விசக்குட்டான் ஆத்மி நாங்க மேகா அக்காவோட கதைக்கிறதுக்கு எங்களை ஆதி அத்தானிட்ட மாட்டி விடுவதற்கு தான் ப்ளான் போட்டிட்டு போறா” என்றான். அர்ஜுன்.

“விடு அர்ஜுன். என்ன நடந்தாலும் நாங்கள் மேகா அக்காட கட்சி தான் அதில் எந்த மாற்றமுமில்லை.”

“மேகா அக்கா எவ்வளவு சூப்பர். ஏன்? தான் இந்த ஆதி அத்தானுக்கு அவங்களை பிடிக்கவில்லயோ தெரியல்ல?”

“அக்கா ஆதி அத்தானை லவ் பண்ணிணதுக்கு கல்லை காதலிச்சிருக்கலாம்.”

“ம்… இருந்தாலும் ஆதி அத்தான் ரொம்ப ஓவரா பண்றாங்க ….”

“நானெல்லாம் மேகாக்கா மாதிரி தவம் எல்லாம் இருக்க மாட்டேன். போடா என்று தூக்கிப்போட்டுட்டு அடுத்த வேலையை பார்ப்பேன்.”

“அதுக்கு பேர் தான் லவ் அபி. ஒருத்தங்களை நாயாய், பேயாய், பிச்சைக்காரராய், பைத்தியமாய், பரதேசியாய், சட்டையை கிழித்து அலைய வைக்கும் வல்லமை காதலுக்கு மட்டுமே உண்டு. ஆத்தா.”

“ஐயோ…வேண்டாம் அர்ஜூன். இந்த இத்து போன லவ்வுக்கும், எனக்கும் ரொம்ப தூரம். ஆளை விடு.”

“லவ்வை பற்றி விலாவரியாக, விளக்கம் சொல்றியே… நீ யாரையாவது லவ் பண்றியா அர்ஜுன்.”

“ஏற்கனவே லவ் என்ற பெயரில் ஒருத்தி தன்னை வேலைக்காரியா மாத்திக்கிட்டு, தனக்குள்ளேயே மூழ்கி பரவசநிலைக்கு 

போயிட்டா. ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆள் போதும். நமக்கு சரி வராது. காலம் தான் பதில் சொல்லோணும்.” என்றவன் கிளம்பி வந்து அபியை கொண்டு போய் லைபிரரியில் விடுவதாக தன்னறைக்குள் சென்றான் அர்ஜுன்.

                         *********

குளித்து முடித்து அணிவதற்குகென இருந்த நான்கு ஓரளவான புடவைகளுடன் போட்டி போட்டு ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு, அடர்ந்த கூந்தலை பின்னி பின்னால் விசிறியவள், சாதாரண மரூன் நிற ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிக்கொண்டு, தனது சேட்டிபிக்கட் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்ரோர் ரூம் கதவை சாத்தினாள்.

அவள் வெளியே நடைபாதையில் நடந்து செல்லவும், என்ன? ஆடிட்டர் மேடம் கிளம்பியாச்சா? என்று பின்னோடு வந்த குரல் நிறுத்தவும், திரும்பியவள் சரிதா நிற்க கண்டு சிரிப்போடு அருகில் வந்தாள்.

“அத்தை நீங்களா…?”

“போகும் போது சொல்லிட்டு போக மாட்டியா? மேகா. நீ வந்து சொல்லீற்று போவாய் என்று நினைத்தேன்.”

“இ… இல்ல… அத்தை வேலை கிடைத்த பிறகு சொல்லலாம் என்று நினைத்தேன்.”

முகம் சுருக்கியபடி… “இந்தா மேகா கைச்செலவுக்கு கூட பணம் கேட்கவில்லை நீ.” என்றபடி கையோடு கொண்டு வந்த கற்றை பணத்தை அவள் முன் நீட்டினார்.

“அத்தை என்னிடம் பணம் இருக்குது. பஸ்சில போறதுக்கு எதுக்கு இவ்வளவு பணம்.”

“அது எனக்கும் தெரியும். உன் திறமைக்கு உனக்கு கட்டாயம் வேலை கிடைக்கும். அதனால வரும்போது, நல்ல துணிக்கடையாக பார்த்து நல்ல புடவை, மற்றும் உனக்கு தேவையான பொருள் எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ளடா.”

“அது வாங்குவதற்க்கும் என்னிடம் பணம் இருக்கு அத்தை.”

“இருக்கட்டும். இதையும் வைத்துக்கொள். கவனமாக போய்வா.” என்றவர் அவளது பைக்குள் இருந்த பழைய சிப் அறுந்து போன வோலட்டுக்குள் அதனை வைத்தார்.

“சரி… அத்தை நான் கிளம்புகிறேன்.”

“சரிடா.” என அவர் கூறியதும் அவள் கிளம்பி வெளியே போக சரிதா உள்ளே சென்றார்.

ஒருவாறு சரியான நேரத்துக்கு ஆபிசுக்குள் நுழைந்தவளை, அவளது நண்பி வினோதினி கண்டுகொண்டு அருகில் வந்தாள். நீ வராமல் போய் விடுவாயோ? என நினைத்தேன்.”

“இல்ல வினோ பஸ்ல சரியான கூட்டம். அதுதான்… என இழுத்தவள், இன்ரவியூ ஆரம்பிச்சாச்சா… என்றாள் பயமும் கவலையுமாக.”

“இன்னும் இல்லை. மேலே போய் வலது பக்கமாக திரும்பு இரண்டு, மூன்று பேர் இன்ரவியூக்காக வந்தவர்கள் இருப்பார்கள் அங்கே போய் உட்காரு. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. பிறகு உன்னை சந்திக்கின்றேன்.” என்றவாறு அவள் கிளம்ப, இவளும் மேலே சென்று ஆட்களோடு ஆளாய் அமர்ந்தாள்.

Advertisement