அத்தியாயம்28 :

வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் புரியாமல் திகைத்திருக்க, தனக்கு எதிரே இருந்த ஆனந்த ராஜனை விலக்கியவன்,

“உங்களைத்தான் சகலை ரெடியா?” என்றான் தீரன். அவனின் கைகள் காக்கி பேண்ட் பாக்கெட்டினுள் இருக்க, கால்களை சற்று அகற்றி நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தவனின் தோற்றம் கண்டு அங்கிருந்தவர்களின் முகத்தில் ஒரு பயம் கலந்த மரியாதை உணர்வைக் கொடுத்திருக்க, அவனுக்கு எதிரே அவனைப் போலவே தெனாவெட்டுடன் நின்றிருந்தான் சஞ்சய்.

“தீரன் என்ன நடக்குது இங்க?” என்ற ராஜனுக்கு ஒன்றும் புரியாத நிலை. பிரகதியோ அதிர்ந்து போய் பார்த்திருக்க, வீட்டுப் பெண்களின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அதிர்ச்சியும் பயமும் தெரிய வேண்டியவனின் முகமோ தெனாவெட்டுடன் இருந்தது.

தீரனுக்கு எதிரே இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன்,

“வெல்..! என்னை எதுக்கு கூப்பிடுறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ஏசிபி?” என்றவனின் பேச்சும், மேனரிசமும் அங்கிருந்தவர்களுக்கு புதிது. அவர்களைப் பொறுத்தவரை சஞ்சய் என்பவன் நன்றாய் படித்த,மாமனாரின் நகைக் கடைகளை நல்ல முறையில் நிர்வகிக்கும், சமூக அந்தஸ்துடன் இருக்கும் பக்கா ஜென்டில்மேன். அவனின் புறத் தோற்றமும் அதைத் தான் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

“ஏன்னு நிஜமா உங்களுக்குத் தெரியாதா? இல்லை சகலைக்கு எல்லாத்தையும் விலாவரியா சொல்லனுமா?” என்றான் தீரன்.

“சிம்பிள் ஏசிபி. எந்த ஆதாரத்தோட அடிப்படையில நீங்க  அரஸ்ட் பண்ண வந்திருக்கிங்க?” என்றவனின் முகத்தில் கொஞ்சம் கூட மாட்டிக் கொண்ட சாயலோ பயமோ இல்லை.

“என்டிபிஎஸ் ஆக்ட் 1985, செக்சன் 21-உற்பத்தி செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்துறது, செக்சன் 22- சைக்கோட்ராபிக் சப்ஸ்டன்ஸஸ் அதாவது மனமயக்க பொருட்களை பயன்படுத்துறது, செக்சன் 25-போதை பொருள் கடத்தலுக்கு தன்னோட இடம் வீட்டை பயன்படுத்துறது, செக்சன் 27A-போதைப் பொருள் கடத்தலுக்கு நிதி உதவி செய்றது, குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்குறது, BNS செக்சன் 308,351 பிளாக்மெயில் அன்ட் எக்ஸ்டார்ஷன். பெண்களை தவறா வீடியோ எடுத்து எதை பொது வெளியில் வெளியிடுவேன்னு சொல்லி மிரட்டுறது. இப்படி இன்னும் சொல்லிட்டே போகலாம்” என்றான் தீரன் நக்கலாய்.

“நீங்க சொல்லுவிங்க ஏசிபி? உங்க குற்றச்சாட்டுக்கு எல்லாம் என்ன ஆதராம் இருக்கு?” என்றான்.

“எவிடன்ஸ ப்ரொட்யூஸ் பண்ற இடம் கோர்ட்டு தான் சகலை. அக்யூஸ்ட் நாய்கிட்ட எல்லாம் ஆதாரத்தைக் காட்டணும்னு எந்த அவசியமும் இல்லை. அரஸ்ட் வாரன்ட் இருந்தா போதும்” என்றான் தீரன் நக்கல் சிரிப்புடன்.

“தீரன் இங்க என்ன நடக்குது? நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க? சஞ்சய் அப்படியெல்லாம் கிடையாது” என்றாள் பிரகதி வேகமாய் முன் வந்து. மொழியோ அதிர்ந்து போய் நின்றிருந்தாள். சஞ்சய்யை ஒரு நிமிடம் கூட அப்படி அவள் எண்ணியிருக்கவில்லை. அவளால் நம்பவே முடியவில்லை.

“இல்ல ஏசிபி! மாமா அப்படிப்பட்டவர் இல்லை” என்றாள் வேகமாய். மனைவியை முறைத்தபடி, பிரகதியின் புறம் திரும்பியவன்,

“எந்த ஆதாரமும் இல்லாம ஒருத்தரை அரஸ்ட் பண்ண முடியாது பிரகதி. உங்களுக்கு இது தெரியாதா? நடந்திருக்குறது சாதாரண குற்றம் இல்லை. இன்டர்நேஷனல் ட்ரக் லீலிங்” என்றான் தீரன்.

“தீரன் நீங்க சொல்றது எல்லாம்” என்று ராஜன் நெஞ்சைப் பிடித்தபடி அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்துவிட, மொழியைப் பார்த்து கண் ஜாடை காட்டினான் தீரன்.

“டாடி..! டென்ஷன் ஆகாதிங்க” என்றவள் அவருக்கு பதட்டத்துடன் நீரை எடுத்துக் கொடுக்க, அதை வாங்க முற்பட்டவரின் கரங்கள் நடுங்கியது. திடீரென்று தெரிந்த விஷயத்தை அவரால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

“சார் என்னாச்சு?” என்ற தீரன் ஒரு எட்டு முன்னால் வைத்த தீரன்,

“எனக்கு ஒண்ணுமில்லை தீரன். திடீர்ன்னு இப்படி சொல்லவும் கொஞ்சம் படபடன்னு வந்திடுச்சு” என்றவர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

“பெரிய மாப்பிள்ளை! நீங்க இப்படின்னு இப்பக் கூட என்னால நம்ப முடியலை. எங்க அண்ணா உங்க மேல எவ்வளவு நம்பிக்கையும் மரியாதையும் வச்சிருந்தார். ஆனா,நீங்களா இப்படி?” என்றார் ஆனந்த ராஜன் அந்தர் பல்டி அடித்தவராய்.

ஆனந்த ராஜனை முறைத்தவன், பின் தீரனிடம் திரும்பி..

“யோவ் ! யாருய்யா நீ? நானும் பார்த்துட்டு இருக்கேன் ஹெவியா பெர்பார்மன்ஸ் பண்ணிட்டு இருக்க. உன்கிட்ட தான் ஆதாரம் இருக்குல்ல. அப்போ சட்டு புட்டுன்னு அரெஸ்ட் பண்ணிட்டு போக வேண்டியது தான. அதை விட்டுட்டு இந்தா அந்தான்னு இழுத்துட்டு இருக்க? பத்தாததுக்கு உன் பக்கத்துல இருக்கானே ஒருத்தன், சட்டைக்கு போடுற  ஒரு லிட்டரை கஞ்சியை ஒரே மூச்சில் குடிச்சவன் மாதிரி விறைப்பா நிக்கிறான்?” என்ற சஞ்சய்யை முறைத்திருந்தான் விவேக்.

சஞ்சயின் பேச்சை அனைவரும் புரியாமல் பார்க்க,

“விவேக் அரெஸ்ட் ஹிம்” என்று தீரன் சொல்ல, முறைப்புடன் சென்ற விவேக்கோ ஆனந்த ராஜனின் கைகளில் கைவிலங்கை மாட்டியிருந்தான்.

“என்ன பண்றிங்க? இப்போ அவரை எதுக்கு அரஸ்ட் பண்றிங்க?” என்றார் வாசுகி.

“என் பையனை எதுக்கு அரஸ்ட் பண்றிங்க மாப்பிள்ளை. அவன் என்ன தப்பு பண்ணான்?” என்றார் தியாக ராஜன் நடக்கும் கூத்துக்களை பார்த்து சோர்ந்திருந்தவராய்.

அதிர்ந்து கோபத்துடன் நின்றிருந்த ஆனந்தராஜனைப் பார்த்த தீரன்,

“என்ன மிஸ்டர் ஆனந்த ராஜன்? எத்தனை நாளைக்கு தப்பிக்க முடியும்? எல்லாத்தையும் பக்காவா பண்ண நீங்க சில விஷயத்துல கோட்டை விட்டுட்டிங்களே? சும்மா சொல்லக் கூடாது வெல் ட்ரைன்ட். அன்ட் வெல் மைன்ட்” என்ற தீரனைப் பார்த்தவர்,

“தப்புப் பண்றிங்க தீரன்? இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு” என்றார் கோபமாய்.

“இது குற்றசாட்டு இல்லை மாமனாரே. கன்பார்ம் லிஸ்ட். சும்மா சொல்லக் கூடாது, அரசியல்வாதி ஆகுறதுக்கான எல்லா தகுதியும் உன்கிட்ட தான் இருக்கு” என்றவனின் குரலில் மரியாதை தேய்ந்திருந்ததை அனைவரும் உணர்ந்தனர்.

அனைவரைக் காட்டிலும் மொழி தான் மிகவும் ஒடுங்கிப் போனாள். தீரன் சொன்னதையும் மீறி அவள் கண்கள் கண்ணீரை வழிய விட்டிருக்க, மனைவியைப் பார்த்த தீரனின் கண்களில் ஏகத்திற்கும் கோபம் இருந்தது.

“என் தம்பியா இப்படி? என்னால நம்ப முடியலை தீரன்?” என்ற ராஜராஜனின் முகம் ஒரே நாளில் அத்தனை அதிர்ந்து சோர்ந்திருந்தது.

“மாமா நீங்க என்ன சொல்றிங்க?” என்ற விஹானின் கண்கள் கலங்கியிருக்க, வேகமாய் ராஜனின் அருகில் சென்று நின்று கொண்டான்.

“தேவையில்லாத வேலை செய்றிங்க தீரன். சொசைட்டில எங்களுக்குன்னு ஒரு பேர் இருக்கு. அதை கெடுக்குற மாதிரி இருக்கு நீங்க பண்ற வேலையெல்லாம். என்னைப் பத்தி எங்க வீட்ல இருக்குறவங்களுக்கு நல்லா தெரியும். யார் சொல்லி நீங்க இப்படி பண்றிங்கன்னு தான் தெரியலை” என்றார் ஆனந்த ராஜன்.

“என்ன அதி? இந்த ஆளை பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க? என்னமோ பெரிய நல்லவன் ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கார். யார் இவரு?  வயசுக்கும் செய்ற வேலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? இதுல சொசைட்டில நல்ல பேர் இருக்காமே? இனி நீ இருந்தாத்தானே பேர் இருக்குறதுக்கு?” என்றான் விவேக் கோபமாய்.

“அய்யோ என்னதான் நடக்குது இங்க?” என்று கத்திய வெண்மொழி, ஆனந்த ராஜனின் அருகில் சென்றிருந்தாள்.

“நீங்க எப்படி சித்தப்பா? நீங்களா இப்படின்னு இதோ இந்த நிமிஷம் வரைக்கும் கூட என்னால நம்ப முடியலை. அப்போ என்னை மிரட்டுனது? வீடியோ அனுப்பினது? என்றவளுக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்தவரின் செயல்களை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அப்படியே மடங்கி அமர்ந்து அழத் தொடங்க, பிரகதிக்கு ஒன்றும் புரியவில்லை.

“மொழி அப்படில்லாம் இல்லம்மா” என்றார் ஆனந்தராஜன் ஒரு தவிப்புடன்.

மனைவி கதறலைப் பார்த்த தீரன்,

“மொழி” என்று ஒரு அதட்டல் போட்டிருந்தான்.

“என்னால முடியலை ஏசிபி. இவர் எப்படி? அய்யோ நினைக்கும் போதே எனக்கு கூசுது..ச்சைக்..எத்தனை வீடியோ எல்லாமே”என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தையே வரவில்லை. ஆதங்கம் அழுகையாய் வர, ஒருகட்டத்தில் அது ஆத்திரமாய் மாறியிருந்தது.

“இந்த ஆளை என் கையால கொன்னாத்தான் எனக்கு ஆத்திரமே அடங்கும்” என்றவள், கண்ணில் ஏதாவது அகப்படுமா என்று தேட, அவளின் தவிப்பும் எண்ணவோட்டமும் தெளிவாய் புரிந்தது தீரனுக்கு.

சட்டென்று அவளைத் தனக்கு அருகில் இழுத்தவன்,

“அமைதியா இரு மொழி” என்று ஓங்கி கத்திய கத்தில் அவள் கப்சிப் என்று அமைதியாக,

“என்னடி மொழி? என்னென்னவோ சொல்ற? உன்னை என்ன மிரட்டினார்? என்ன வீடியோ?” என்றாள் பிரகதி புரியாமல்.

“அக்கா” என்று அழுத்தம் தாங்காமல் உரைக்கப் போனவளை,

“மொழி” என்றான் தீரன் மீண்டும் அழுத்தமாய்.

“சத்தியமா என்னால முடியலை தீரா. இவருக்கும் நான் பொண்ணு தான? ஒருவேளை இவர் பெத்த பொண்ணா இருந்திருந்தா இப்படி பண்ணியிருப்பாரா? அதுவும் அன்னைக்கு ஹோட்டல்ல?” என்றவளுக்கு வார்த்தைகள் தடுமாறி கண்ணீர் தளும்பியது.

“உன்னை அமைதியா இருன்னு சொன்னேன் மொழி. இன்னும் நாங்க பேசி முடிக்கலை. அது மட்டுமில்ல, உனக்கு வீடியோ அனுப்பினது இந்த ஆள் இல்லை. இந்த ஆள் வேலை ட்ரக் டீலிங் மட்டும் தான்” என்றான்.

மாட்டிக் கொண்டது புரிந்து போனது ஆனந்த ராஜனுக்கு. முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்று எண்ணியவராய்,

“ஆமா நான் தான் பண்ணேன். அதுக்கு என்னாங்குற இப்போ? நீ என்ன பண்ணாலும் என்னை ஒன்னும் புடுங்க முடியாதுடா. நேத்து வந்த சின்னப் பைய நீ” என்றார் ஆனந்த ராஜன்.

அங்கிருந்த அனைவருக்கும் அவரின் இன்னொரு முகத்தைப் பார்த்து அப்படி ஒரு அதிர்ச்சி. எப்போதும் சாந்தமான முகத்துடன், அண்ணனுக்கு பின்னால் நின்று ‘சரிங்கண்ணா’ சொல்லும் தம்பியா இவர்? என்பதைப் போல் இருந்தது அவரின் நடவடிக்கைகள்.

“நானும் எம்புட்டு நேரம் தான் நல்லவனாவே நடிக்கிறது?” என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்து ஆயாசமாய் சாய்ந்து கொண்ட தீரன்,

“யோவ் ஆனந்த ராஜா? நீ அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லைன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். சொல்லப் போனா நீ அந்த அளவுக்கு வொர்த் பீசே இல்லை. இப்ப யாருக்காக பழியைத் தூக்கி உன்மேல போட்டுக்கிட்டு ஓவர் ஆக்சன் குடுக்குற? இவ்வளவு தூரம் வந்த நாங்க நுனிப் புல்லு எது? அடிப் புல்லு எதுன்னு பார்க்காமையா வந்திருப்போம்?” என்றான் நக்கலாய்.

அங்கிருந்த அனைவரும் புரியாத மொழி திரைப்படம் பார்ப்பதைப் போன்று முழித்திருக்க,

“யோவ் சகலை..! மாமனாரு இவ்வளவு வீர வசனம் பேசுறாரு? நீ என்னடான்னா வேடிக்கை பார்த்துட்டு இருக்க? நீ தான இத்தனை நாள் இந்த ஆள் நிழலாவே இருந்த. இந்த ஆளை அரஸ்ட் பண்ணவா இத்தனை மாசமும் தூங்காம ராப்பகலா வேலை பார்த்திருக்கோம். இருந்தாலும் இந்தாளுக்கு ஓவர் கான்பிடன்ஸ் அதிகம் சகலை. சரி சரி சட்டுப் புட்டுன்னு விஷயத்தை ஒடைச்சு விடு. நான் வேற புது மாப்பிள்ளையா? ஆக வேண்டிய காரியம்லாம் நிறைய இருக்கு” என்றான் தீரன்.

அனைவரும் சஞ்சய்யை புரியாமல் பார்க்க,

“என்ன எல்லாரும் இப்படி பார்க்குறிங்க? சகலை வேற யாருமில்லை. அன்டர்கவர் ஆப்ரேஷன்ல இருக்குற டிஎஸ்பி தான். அவன் குடுத்த தகவல்ல தான்யா உங்க டீலிங் எல்லாத்தையுமே பிடிச்சோம். இல்லைன்னா அந்த அந்தமான் சரக்கு விபரமெல்லாம் எங்களுக்கு எப்படிய்யா தெரியும்?” என்று தீரன் சொல்ல, கண்களை விரித்த பிரகதி அதிர்ந்து பின் கணவனை முறைத்திருந்தாள்.

“இதை சொல்றதுக்கு நல்ல நேரம் பார்த்த போ” என்று புலம்பிய சஞ்சய்,

“யோவ் இப்ப நீயா அவனை வர சொல்றியா? இல்ல நானே போய் இழுத்துட்டு வரவா? இளிச்சவாயன் ஒருத்தன் கிடைச்சா போதுமே? மொத்தப் பழியையும் தூக்கி அப்படியே போடுற? என்ன நடிப்புய்யா நடிக்கிற நீ?” என்ற சஞ்சய்,

“அவன் வர மாட்டான் போலத் தெரியுது ஏசிபி. அவனுக்குக்கு கேமரா செட் பண்ணி வீடியோ எடுக்கத் தான் தெரியும். ஆம்பளை மாதிரி நேருக்கு நேரா மோதவெல்லாம் தெரியாது” என்ற சஞ்சயின் குரலில் அப்படி ஒரு ஆத்திரம்.

“இப்போ அவனை வர சொல்றியா? இல்லை சுட்டுத் தள்ளிட்டு.. என்கவுன்ட்டர் லிஸ்ட்ல சேர்த்துட்டு போயிட்டே இருப்பேன்” என்றான் தீரன்.

“நீங்க யாரைக் கேட்குறிங்க? நான் தான் எல்லாம் பண்ணேன்னு ஒத்துக்கிட்டேன்ல. இங்க வேற யாரும் இல்ல” என்றார் ஆனந்த ராஜன்.

“அப்போ இங்க யாரும் இல்லை. பக்கத்து வீட்ல கூட யாருமில்லை. அப்போ இது யாரு?” என்று தன் போனில் இருந்த போட்டோவை தீரன் காட்ட, ஆனந்த ராஜன் எச்சிலை முழுங்கினார்.

“அவன் இங்க தான் இருக்கான். இந்த நிமிஷம் இங்க நடக்குறதை கூட பார்த்துட்டு தான் இருக்கான். நேத்து ரெண்டு கொலை பண்ணிட்டு வந்தவனுக்கு நீதான அடைக்கலம் கொடுத்து வச்சிருக்க?” என்றான் கோபமாய்.

தீரனின் அருகில் நின்றிருந்த மொழியோ அந்த போட்டோவை பார்த்து இன்னமும் அதிர்ந்தாள்.