அத்தியாயம் 6:

“அதி தீரன்” என்று மீண்டும் அவன் பெயரை உதடுகளுக்குள் உச்சரித்துப் பார்த்தாள்.

அவள் தன் பெயரை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்ப்பதைக் கண்ட தீரனுக்கு இதழோரம் ஒரு சிறு வெற்றுப் புன்னகை வந்து போனது.

“உட்காருங்க” என்றான் இருவரையும் பொதுப்படையாய்.

“இல்ல சார் இருக்கட்டும். எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்னு நம்பி இங்க வந்தோம். வந்து பார்த்தா இங்க நீங்க இருக்கீங்க? உங்ககிட்ட அதெல்லாம் கிடைக்குமா? உங்ககிட்ட இருந்து பொண்ணுங்களை காப்பாத்தவே இன்னொரு ஆள் வேணும். வேலிக்கு ஓணான் சாட்சின்ற மாதிரி. நாங்க கமிஷனரை பார்த்துக்கிறோம்” என்ற தாரிக்கை கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு முறைத்திருந்தான்.

“அப்படி எத்தனை பொண்ணுங்களை நான் கையைப் பிடிச்சு இழுத்ததை சார் நேர்ல பார்த்திங்க?” என்றான் தீரன் நக்கலாய்.

“வசதியா எல்லாத்தையும் மறந்துட்டிங்க போல இருக்கு. நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணை உங்க முன்னாடி நான் லிப் டூ லிப் கிஸ் பண்ணா எப்படி இருக்கும் உங்களுக்கு? நீங்க செஞ்சது யோக்கியமான செயலோ? இதுல கையைப் பிடிச்சு இழுத்ததை பார்த்தியான்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம கேட்குறிங்க? தெரிஞ்சோ தெரியாமலோ இவளைக் காப்பாத்தி ஒரு நல்லது பண்ணியிருக்கிங்க. அதுக்காக மட்டும் தான் அமைதியா இருக்கேன்” என்றான் தாரிக் நக்கலாய்.

அதுவரை பொறுமையாய் இருந்த தீரனுக்கு அதற்கு மேல் அதை கடைபிடிக்க முடியவில்லை. தனது இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன்,

“இல்லைன்னா மட்டும் சார் என்ன புடுங்கியிருப்பிங்க?” என்றான் வார்த்தைகளை கடித்துத் துப்பியபடி.

அவனின் வார்த்தைகளில் மொழி திகைப்புடன் அவனைப் பார்க்க, அவனின் பார்வையோ மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை. தாரிக்கை மட்டும் தான் நேருக்கு நேர் பார்த்திருந்தது.

“தாரிக் பிளீஸ்..! பிரச்சனை வேண்டாம்” என்றாள் அழுத்தமான குரலில்.

“உட்காருங்க மிஸ்.வெண்மொழி. அமைச்சரோட பொண்ணை நிற்க வச்சு பேசுனேன்னு நாளைக்கு ஒரு சொல்லு வந்துடக் கூடாது பாருங்க” என்றவனை இப்போது அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள்.

“ஏன் இப்படி ஷாக் ஆகுறிங்க? நீங்க அமைச்சர் ராஜ ராஜன் பொண்ணு தானே? ராஜன் ஜூவல்லரிஸ் ஓனரோட இரண்டாவது பொண்ணு தான நீங்க. உங்களைத் தெரியாம இருக்குமா?” என்றான் வேண்டுமென்றே.

‘இவனுக்கு எப்படி என்னைப் பத்தி தெரியும்?’ என்றவளுக்கு படபடவென்று வந்தது.

“சரி சொல்லுங்க! என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கிங்க?” என்றான் பக்கா போலீசாய் மாறி.

“உங்கமேல எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்க கமிஷனரை பார்க்கணும்” என்றான் தாரிக்.

“ஓகே போய் பாருங்க” என்றவன், அடுத்த வேலையைப் பார்க்க.. தாரிக்கும் வெண்மொழியும் என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே நின்றிருந்தனர்.

அதிதீரனின் டேபிளில் இருந்த தொலைபேசி ஒலிக்க,

“ஏசிபி தீரன் ஹியர்” என்றவனின் கம்பீரக் குரலில் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இவ்வளவு நேரம் மூளைக்குள் நெருடிக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று அவள் கண் முன் வந்தது.

“தீரன் கிட்ட நீ பேசுனியா?” என்ற ராஜன் குரல் தான் அது. மேலும் இந்த வரன் வந்த சமயத்தில்,

“மொழி, மாமா கோயம்புத்தூர் சிட்டி அசிஸ்டன்ட் கமிஷனராம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கும் பிடிச்சிருக்கு தானே” என்று விஹான் கேட்க, சிந்தனையின்றி தான் தலையை ஆட்டியதும் ஞாபகத்திற்கு வந்தது.

‘ஆனா விஹான் கோயம்புத்தூர்னு தான சொன்னான். ஒருவேளை இவரா இருக்குமோ’ என்ற யோசனை வேறு அவளுக்கு.

அவளின் முகத்தில் ஓடிய சிந்தனை ரேகைகளை பார்த்தும் பார்க்காதவன் போல் பேசி முடித்தவன், தாரிக்கைப் பார்த்தான்.

“என்னாச்சு? ஏன் இன்னும் வெயிட் பண்றிங்க? கமிஷனர் இன்னும் ஹாப்னார்ல வந்துடுவார். இருந்து அவரைப் பார்த்து உங்க பிரச்சனையை சொல்லிட்டு போங்க. ஐ ஹேவ் அ அர்ஜன்ட் வொர்க்” என்றவன் எழுந்து கொள்ள முற்பட,

“அது வந்து..சாரி சார்” என்று தாரிக் சொல்ல அவனை முறைத்துக் கொண்டே மீண்டும் அமர்ந்தான்.

“என்ன விஷயம்?” என்றான் கத்தரித்தார் போல்.

“நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம் சார். அது வீட்டுக்குத் தெரிஞ்சு பிரச்சனையாகிடுச்சு. அதான் பாதுகாப்பு கேட்டு வந்திருக்கோம். நீங்க தான் எங்களுக்கு மேரேஜ் பண்ணி வைக்கணும்” என்றான் தாரிக். பேசிக் கொண்டிருந்தது தாரிக் என்றாலும் தீரனின் பார்வை என்னவோ இப்போது மொழி மேல் தான்.

“வீட்ல பேசி அவங்களை கன்வைன்ஸ் பண்ண ட்ரைப் பண்ணலாமே? ராஜன் சார் ஒரு மினிஸ்டர். விஷயம் வெளிய தெரிஞ்சா இஷ்யூ ஆகும்னு உங்களுக்குத் தெரியாதா? இப்படி அவசரமா கமிஷனர் ஆபீஸ்ல வந்து கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என்ன வந்தது?” என்றான் பொறுமையாய்.

“வீட்ல மொழிக்கு மேரேஜ் ஏற்பாடு நடக்குது சார். எங்க லவ்வை அவங்க அக்சப்ட் பண்ற மாதிரி தெரியலை” என்றான் தாரிக்.

“அக்சப்ட் பண்ணலையா? இல்லை அவங்க அக்சப்ட் பண்ணிக்கிற மாதிரி உங்களுக்கு கன்வைன்ஸ் பண்ணத் தெரியலையா?” என்றான் தீரன்.

“தேவையில்லாத பேச்செல்லாம் எதுக்கு சார்? நாங்க ரெண்டு பேரும் மேஜர். நாங்க ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கிறதுக்கான எல்லா உரிமையும் எங்களுக்கு இருக்கு. நாங்க பாதுகாப்பு கேட்டு வந்தா பாதுகாப்பு கொடுக்க வேண்டியது உங்க கடமை” என்றான் தாரிக் சற்று குரலை உயர்த்தி.

“வந்ததுல இருந்து நீங்க மட்டும் தான் பேசிட்டு இருக்கீங்க? ஏன் மேடம் பேச மாட்டாங்களா?” என்று தீரன் நக்கலாய் கேட்க,

“யார் பேசினா என்ன சார்?” என்றான் தாரிக்.

“லுக்..!உங்களுக்கு பாதுகாப்பு குடுக்க வேண்டியது எங்க கடமை. உங்களுக்கு யார்னால பிரச்சனை? எதுக்காக இங்க பாதுகாப்பு கேட்டு வந்திருக்கிங்கன்னு ஒரு ரிட்டன் கம்ப்ளைன்ட் எழுதிக் குடுங்க முதல்ல. அதுக்கு அப்பறம் தான் பர்தரா ஆக்சன் எடுக்க முடியும்” என்றான்.

“கம்ப்ளைன்ட் எல்லாம் வேண்டாம் சார்” என்றாள் மொழி வேகமாக.

“கம்ப்ளைன்ட் வேண்டாம்னா எதன் அடிப்பையில உங்களுக்கு பாதுகாப்பு குடுக்க முடியும்?” என்றவன்,

“கொஞ்ச நேரம் வெளிய வெயிட் பண்ணுங்க தாரிக். எனக்கு இவங்ககிட்ட பேச வேண்டியிருக்கு” என்று தீரன் சொல்ல,

“அவகிட்ட நீங்க ஏன் சார் தனியா பேசணும்?”

“லுக்..! நீங்க வந்த உடனே மேரேஜ் பண்ணி வைக்கணும்னு எந்த சட்டமும் சொல்லலை. எல்லாம் விசாரிச்சு சரியா இருந்தா தான் பண்ண முடியும். உங்க கூட வந்திருக்கிறது மினிஸ்டர் பொண்ணு. நாளைக்கு இதை வச்சு எனக்கு எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாது பாருங்க” என்றான் தீரன் கடினமான குரலில். அந்த குரலில் நீ’ கண்டிப்பாய் இப்போது வெளியே செல்ல வேண்டும்’ என்ற கட்டளை மறைந்திருந்தது.

“இவரை அழைச்சுட்டு போய் அந்த ரூம்ல உட்கார வைங்க” என்று அங்கிருந்த காவலரிடம் கூறியவன், இப்போது மொழியிடம் திரும்பினான். தாரிக் அங்கிருந்து செல்ல மனமே இல்லாமல் சென்றான்.

தீரன் அவளைப் பார்த்திருக்க, அவளோ அவனை நிமிர்ந்து பார்க்காது, வியர்த்து பிசுபிசுத்த விரல்களை மூடித் திறந்து கொண்டிருந்தாள்.

“மிஸ். வெண்மொழி என்ன படிச்சிருக்கிங்க?” என்றான்.

“எம்பிஏ சார்” என்றாள்.

“குட்..! நல்லா படிப்பிங்களா?”

“டிஸ்டிங்ஷன்” என்றாள் ரோஷமாய்.

“இல்ல அழகா இருந்தா அறிவு சுத்தமா இருக்காதுன்னு எங்கயோ கேட்ட ஞாபகம்” என்றான் நக்கலுடன். அவனின் நக்கல் பேச்சில் அவனை முறைத்தவள்,

“நீங்க கூட பார்க்க அழகாத்தான் இருக்கீங்க. அதுக்காக உங்களுக்கும் அறிவு இல்லைன்னு அர்த்தமா சார்?” என்றாள் எரிச்சலுடன்.

“சோ அப்போ ஒத்துக்கிறிங்க?”

“எதை?”

“நான் அழகா இருக்கேன்ற விஷயத்தை தான்” என்றவன், சட்டென்று தீவிர மனநிலைக்கு மாறினான்.

“நீங்க இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு தெரியுதா மிஸ். வெண்மொழி. இதனால நாளைக்கு என்னென்ன பாதிப்பு வரும்னு தெரியுமா உங்களுக்கு? சின்ன பிள்ளை விளையாட்டு காரியம் போல, கமிஷனர் ஆபீஸ்ல வந்து கல்யாணம் பண்ணனும்னு நிக்கிறிங்க? லவ் பண்றப்போ இருக்குற தைரியம், பிரச்சனைகளை பேஸ் பண்றப்பவும் இருக்கணும்” என்றான் நேர் பார்வையாய்.

“டாடி சம்மதிக்கலை. நானும் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன். அவர் பார்த்த பையனுக்குத் தான் கழுத்தை நீட்டனும்னு சொல்றார். கழுத்தை நீட்ட நான் என்ன ஆடா? மாடா?” என்றாள் மிதம் மிஞ்சிய வெறுப்பில்.

“கல்யாணத்துல விருப்பமில்லைன்னு சொல்லியிருக்கலாம்” என்றான்.

“சொன்னேன், யாரும் கேட்கலை?”

“எப்போ சொன்னிங்க?” என்றான் சற்று குரலை உயர்த்தி.

“அது” என்றவளுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் தந்தியடிக்க,

“கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டாங்க. அவங்க கேட்ட விதம் நான் சம்மதம்னு மட்டும் தான் சொல்லனும்னு இருந்துச்சு. அப்போ வேற வழி தெரியலை. சரின்னு தலையை ஆட்டிட்டேன். எப்படியும் நிச்சயத்துக்கு முன்னாடி டாடி கிட்ட சொல்றது தான் என் பிளான். நான் சொல்லாம அவருக்கே விஷயம் தெரிஞ்சிடுச்சு. பிரச்சனையும் பின்னாடியே வந்திடுச்சு” என்றாள் விடாமல்.

“இப்போ நீங்க பண்ணப் போற விஷயம் தப்புன்னு உங்களுக்குத் தோணலையா?” என்றான்.

“வேற ஆப்ஷன் இல்ல. தாரிக் ரொம்ப கம்பெல் பண்றான். அப்பா அவனை ஏதாவது பண்ணிடுவாரோன்னு பயப்படுறான்” என்றாள்.

“அமைச்சரின் மகள் காதலனுடம் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டுத் தஞ்சம்” அப்படின்னு நாளைக்கு தலைப்புச் செய்தி வருமே? உங்களுக்கு பரவாயில்லையா? எனக்குத் தெரிஞ்சு, உங்க அப்பா ஒரு நேர்மையான அரசியல்வாதி. இந்த விஷயம் அவரோட அரசியல் வாழ்க்கையில எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்னு தெரியுமா? தலை நிமிர்ந்து சிங்கம் மாதிரி நடந்த இடத்துல தலை குனிஞ்சு அவர் நடக்கணும். அதுக்காக காதல் கல்யாணம் தப்புன்னு நான் சொல்ல வரலை. அதை பண்ற விதமும், பண்ண முடிவெடுத்த இடமும் தான் தப்புன்னு சொல்றேன்” என்றான் நிதானமாக.

அவன் சொன்னது எல்லாம் அவள் கண் முன் வந்து போக, மனம் உள்ளுக்குள் பதைபதைத்தது. இதெல்லாம் நடக்குமென்று அவளுக்கும் தெரியும் தானே. அதனால் தானே அத்தனை யோசனையுடன் வந்தாள். இருந்தாலும் அவனிடம் பணிந்து போக அவளுக்கு விருப்பமில்லை.

“உங்க அட்வைஸ்க்கு ரொம்ப நன்றி சார். மேரேஜ் முடிஞ்சுட்டா எப்படியும் என் டாடி எங்களை அக்சப்ட் பண்ணிப்பார்” என்று பட்டென்று சொல்லியவளை எரிச்சலுடன் பார்த்தான் தீரன்.

“நீங்க கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்ன உடனே நாங்க பண்ணி வைக்க முடியாது. ரெண்டு வீட்டு சைடும் பெரியவங்களை கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்துவோம். அவங்க உடன் படாத பட்சத்துல எங்க பாதுகாப்போட உங்க மேரேஜ் நடக்கும். இது தான் இங்க நடைமுறை. மத்தபடி நான் அட்வைஸ் பண்ற அளவுக்கு இங்க எதுவும் அவ்வளவு வொர்த் இல்லை” என்றான் வேண்டுமென்றே. அவனின் கோபத்தை அவனுக்கும் எப்படி காட்ட வேண்டுமென்று தெரியவில்லை.

“டாடியை இங்க கூப்பிடுவிங்களா?” என்றாள் பயத்துடன்.

“எஸ்..! அப்கோர்ஸ்” என்றான்.

“அவர் ஏற்கனவே தாரிக்கை கொல்ல ஆட்களை அனுப்பியிருக்கார். தாரிக் எப்படியோ தப்பிச்சு வந்திருக்கான். இங்க வந்து ஏதாவது பண்ணிட்டா?” என்றாள்.

“எனக்குத் தெரிஞ்சு ராஜன் சார் ரொம்ப நேர்மையான மனுஷன். இப்படிப்பட்ட வேலைக்கெல்லாம் அவர் போவார்னு எனக்கு நம்பிக்கையில்லை. மூணாவது மனுஷன் எனக்கு இருக்குற நம்பிக்கை கூட பெத்து இத்தனை வருஷம் வளர்த்த உங்களுக்கு அவர் மேல் இல்ல போலயே? அப்படி அவர் அடி ஆட்களை அனுப்பியிருந்தா கண்டிப்பா அவர் மேல தாரிக் ரிட்டன் கம்ப்ளைன்ட் குடுத்து தான் ஆகணும்” என்றான்.

அவள் அதிர்ந்து பார்க்க,

“அவனைக் கொலை பண்ண அவர் ஆள் அனுப்பியிருந்தா, இப்படி நீங்க சுதந்திரமா அவன் கூட கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் வந்திருக்க முடியுமா? ஆள் அனுப்பினவருக்கு, உங்களை வீட்ல அடைச்சு வைக்க எவ்வளவு நேரம் ஆகும்? யோசிக்க மாட்டிங்களா? உங்கமேல இன்னும் அந்த நம்பிக்கை இருக்கப் போய் தானே இவ்வளவு சுதந்திரமா நடமாட விட்டிருக்கார். அந்த நம்பிக்கை ஏன் அவர் மேல உங்களுக்கு இல்லாம போச்சு?” என்று அவன் கேட்ட எந்த கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை.

“பேசுங்க வெண்மொழி, ஏன் அமைதியா இருக்கீங்க?”

“நான் இப்படியெல்லாம் யோசிக்கலை” என்றாள்.

“நீங்க யோசிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். எனக்கு தெரிஞ்சு இந்த ட்ரிப்ல உங்களுக்கு நடந்த எந்த விஷயத்தைப் பத்தியும் நீங்க உங்க அப்பாகிட்ட ஷேர் பண்ணலை, அப்படித்தானே” என்றான் கண்களில் கூர்மையுடன்.

“அது நான் தவறி விழுந்து” என்று அவள் மென்று முழுங்க,

“நோ..! அன்னைக்கு நடந்தது ஒரு  அட்டம்ட். நீங்க ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சிருக்கிங்க. நீங்க குடிச்ச ஜூஸ்ல ட்ரக்ஸ் இருந்திருக்கு. உங்களை செக் பண்ண டாக்டர் சொன்ன ஸ்டேட்மென்ட் அது. ஆனா இதை நீங்க மறைக்க வேண்டிய அவசியம் என்ன?” என்றான்.

“இப்படியெல்லாம் நடந்ததுன்னு தெரிஞ்சா டாடி அடுத்து என்னை எங்கயும் அனுப்ப மாட்டார்” என்றாள் உள்ளே போன குரலில்.

“லுக்..! ஒன்னு உங்களை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்குற அளவுக்கு தெளிவு இருக்கணும். உங்களை மீறி நடக்குற விஷயத்துல இருந்து தப்பிக்கிற அளவுக்கு தைரியம் இருக்கணும். இல்லையா இதையெல்லாம் உங்க அப்பாகிட்ட சொல்லி, ஆக்சன் எடுக்குற அளவுக்கு அறிவு இருக்கணும். இப்படி எதுவுமே இல்லாம, கல்யாணம் பண்றேன்னு மட்டும் வந்து நிக்க வேண்டியது?” என்று அவன் வார்த்தைகளை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான்.

அவன் பேச்சில் தலை குனிந்து அமர்ந்திருந்த அவளின் தோற்றம் அவனுக்குள் சொல்ல முடியாத ஒரு வலியை ஏற்படுத்த, அதை மறந்தும் முகத்தில் காட்டவில்லை அவன்.

“தாரிக்கோடா சொந்த ஊர் எது?” என்றான் மொட்டையாக.

“ஏன் கேட்குறிங்க?”

“அவன் யாரு என்னன்னு விசாரிக்காம நாங்க எதுவும் பண்ண மாட்டோம். அவங்க பேரண்ட்சும் இங்க வந்தாகனும்” என்றான்.

“கோயம்புத்தூர்” என்றாள் மெதுவாக.

“அவங்க பேரண்ட்ஸ்?” என்றான் கேள்வியாக.

“இங்க சென்னையில தான் இருக்காங்க இப்போ” என்றாள்.

வெளியில் இருந்த காவலரை அழைத்து,“இன்ஸ்பெக்டர் விவேக்கை வர சொல்லுங்க “  என்றான்.

சில நிமிடங்களில் அங்கு வந்த விவேக் அங்கிருந்த மொழியைக் கண்டு ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

“சார்” என்றான்.

“இவங்க கூட தாரிக்னு ஒருத்தர் வந்திருக்காரு. அவங்க பேரண்ட்ஸ்க்கு இன்பார்ம் பண்ணி இங்க வர சொல்லுங்க. அப்பறம் தாரிக்கோடா புல் டீட்டெயில்ஸ் வேணும். நேட்டிவ் கோயம்புத்தூர்.  இன்ஸ்பெக்டர் உதய குமரனை காண்டாக்ட் பண்ணி டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ண சொல்லுங்க” என்றான் அதிதீரன்.

“எஸ் சார்” என்றவன் யோசனையுடன் வெளியே செல்ல, தாரிக்கை அழைத்து வர சொன்னான் தீரன்.

“உங்க பேரண்ட்ஸ்க்கு இன்பார்ம் பண்ணி வர சொல்லணும் தாரிக். மிஸ்.வெண்மொழியோட பேரண்ட்ஸ்சும் இங்க வரணும். பேசிப் பார்த்து முடியாத பட்சத்துல கண்டிப்பா உங்களுக்கான பாதுகாப்பை நான் குடுப்பேன்” என்றான் தீரன்.

“சார் அவங்கல்லாம் எதுக்கு சார். நாங்க மேஜர். சட்டப்படி மேரேஜ் பண்றதுக்கான எல்லா உரிமையும் எங்களுக்கு இருக்கு” என்றான் தாரிக்.

“அப்போ நீங்க போக வேண்டியது ரிஜிஸ்டர் ஆபீஸ். அங்க தான் நீங்க சட்டப்படி மேரேஜ் பண்ண முடியும். இங்க வந்திருக்கிறது பாதுகாப்பு கேட்டு. அதுக்கான நடைமுறை என்னவோ அதைத் தான் நாங்க பண்ண முடியும்” என்றான்.

“சார் புரியாம பேசாதிங்க சார், மொழியோட அப்பா அவளை என்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய்டுவார் சார்” என்றான் தாரிக் கோபமாய்.

“அவ்வளவு வீக்கான லவ்வா உங்க லவ்?” என்ற தீரனின் குரலில் நிச்சயம் கிண்டல் இருந்தது.

வந்ததில் இருந்து அவனின் எந்த கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை. தீரன் சொன்ன அனைத்தும் அவள் மூளைக்குள் குடைந்து கொண்டிருந்தது.

“ரெண்டு பேரும் அந்த ரூம்ல வெயிட் பண்ணுங்க. அன்ட் யாரு கேட்டாலும் முக்கியமான விஷயமா என்னை பார்க்க வந்ததா மட்டும் சொல்லணும். இது தான் விஷயம்னு வெளிய சொல்லக் கூடாது. விஷயம் மீடியாவுக்குப் போனா என்ன நடக்கும்னு உங்களுக்குத் தெரியும் தானே மிஸ்.வெண்மொழி” என்றான் தீரன்.

“தெரியும்” என்பதைப் போல் தலையை ஆட்டியவள் மௌனமாய் தாரிக்குடன் சென்றாள்.

அவனுக்கு வால் பிடித்துக் கொண்டு அவள் செல்வதைப் பார்த்த தீரன் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.

‘இந்த பாழாய் போன காதல் எப்பேர்பட்டவங்களையும் கோழையாக்கிடுது’ என்று நினைத்துக் கொண்டான்.