அத்தியாயம் 3 :

தன்னுடைய அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் வெண்மொழி. அவள் அறையில் இருந்த பால்கனி மட்டுமே இந்த இரண்டு நாட்களாக அவளின் உலகமாக இருந்தது. வெளியே செல்ல பிடிக்கவில்லை. யாருடனும் பேசப் பிடிக்கவில்லை. தன்னை யாரோ பின்தொடர்வதைப் போன்று தோன்றியது அவளுக்கு.

நந்திதாவும், டயானாவும் எவ்வளவு அழைத்தும் அவள் செல்லவில்லை. தாரிக் இரண்டு நாட்களாக அவளிடம் பேச முயற்சி செய்து கொண்டிருந்தான். யாரிடமும் அவள் முகம் கொடுத்தும் பேசவில்லை. தேவைக்கு வெளியே சென்றாள். மீண்டும் அறைக்குள் முடங்கிக் கொண்டாள். அவள் ரசித்த இயற்கையை கூட இப்போது பால்கனி வழியாக மட்டும் ரசிக்கிறாள். மன அமைதியைத் தேடி வந்திருந்த பயணம் அவளின் மொத்த அமைதியையும் உருக்குலைத்திருந்தது.

கப்பல், மலாக்கா நீரினை வழியாக கோலாலம்பூர் போர்ட் கிளாங் வந்து சேர்ந்திருந்தது. அடுத்து அங்கிருந்து சிங்கப்பூர் துறைமுகம். சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு ப்ளைட்டில் திரும்பி செல்வது. இது தான் அவர்களின் பயணத் திட்டம்.வெண்மொழிக்கோ எப்போது சென்னை திரும்புவோம் என்று இருந்தது.

யோசனையில் இருந்தவளை அலைபேசியின் அழைப்பு நிஜத்திற்கு மீட்டிருந்தது. ராஜ ராஜன் தான் அழைத்துக் கொண்டிருந்தார். திரையில் தந்தையின் எண்ணைக் கண்டவுடன் வேகமாய் எடுத்திருந்தாள்.

“டாடி” என்றாள் மெதுவாய்.

“பிரண்ட்ஸ்சோட ட்ரிப் போறது முக்கியமில்லை. அப்பப்போ வீட்டுக்கு போன் பண்ணி பேசணும்னு நினைப்பிருக்கா இல்லையா வெண்மொழி?” என்றார் கறார் குரலில்.

தந்தையின் பேச்சில் சட்டென்று கண் கலங்கியவள் “டாடி..அது நெட்வொர்க் இல்ல டாடி. இப்போதான் கிடைக்குது?” என்றாள் அமைதியான குரலில்.

“ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு? அங்க எதுவும் பிரச்சனை இல்லையே?” என்றார் அனுபவஸ்தர்.

அவர் அப்படி கேட்டதும் வந்த அழுகையை அடக்கியவள் “அதெல்லாம் ஒரு பிராப்ளமும் இல்ல டாடி. ரெண்டு நாள்ல சென்னை வந்துடுவேன்” என்றாள்.

“அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். ட்ரிப்ல வேற எந்த பிளானும் போட்டு நாளைக் கூட்டிட வேண்டாம். நீ சென்னை வந்ததும் உனக்கு நிச்சயதார்த்தம். அது ஞாபகம் இருக்குல்ல?” என்றார் கறார் குரலில்.

“ஆங்..ஞாபகம் இருக்கு டாடி” என்றவளுக்கு குரல் சற்று கம்மிப் போய் ஒலித்தது. ஏற்கனவே வீட்டில் இதைப் பற்றி பேசியிருந்தனர். இவளும் முயன்ற வரை அதைத் தடுக்கப் பார்த்தாள். பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். ராஜ ராஜனின் பேச்சை மறுப்பதற்கான தைரியம் அந்த வீட்டில் யாருக்குமில்லை.

மகளின் குரல் வித்யாசத்தை உணர்ந்து கொண்ட ராஜ ராஜன்,”என்ன? குரல் உள்ள போகுது? எனக்கு இந்த நிச்சயதார்த்தமும் கல்யாணமும் நடந்தாகணும். இது என்னோட கௌரவப் பிரச்சனை. உனக்குப் புரியும்னு நினைக்கிறேன். உன்னை நம்பித்தான் இந்த ட்ரிப்புக்கே அனுப்பியிருக்கேன். என் நம்பிக்கையை காப்பாத்துவன்னு நினைக்கிறேன் வெண்மொழி” என்றார்.

 “ச..சரிங்க டாடி” என்றவளுக்கு மனம் முழுவதும் குற்றவுணர்ச்சி வியாபித்துக் கொண்டது.

அதன் பிறகு அவளின் அம்மா சங்கரி வாங்கி சில நிமிடங்கள் பேச, அவர் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு கவனம் பேச்சில் இல்லை. ராஜராஜன் சொன்ன விஷயங்களைத் தான் மனம் உருப் போட்டுக் கொண்டிருந்தது.

அழைப்பு துண்டிக்கப் பட்ட பிறகும் கூட, அவளின் முகம் யோசனையைத் தான் சுமந்திருந்தது.

அறைக்குள் அழைப்பு மணி ஒலிக்க, அதே யோசனையுடன் சென்று கதவைத் திறந்திருந்தாள். நந்திதா, டயானா அவர்களுடன் தாரிக்கும் நின்றிருந்தான். அறைக்குள் வந்தவர்கள் அவளைத் தான் கோபமாய் பார்த்தனர்.

“என்னாச்சு? ஏன் எல்லாரும் கோபமா பார்க்குறிங்க?” என்றாள் புரியாமல்.

“இப்படி ரூம்க்குள்ளையே அடைஞ்சு கிடைக்குறது எதுக்குடி ட்ரிப் வரணும்? எங்களுக்கெல்லாம் கில்ட்டியா பீல் ஆகுது. நாங்க மட்டும் என்ஜாய் பண்ற மாதிரி தோணுது. நீ எங்க கூட மிங்கிள் ஆகவே மாட்டேங்குற? வரும் போது நல்லாத்தானே வந்த?இப்போ திடீர்ன்னு என்ன ஆச்சு உனக்கு?” என்றாள் நந்திதா.

“நான்தான் சொன்னேனே? எனக்கு, வெளிய யாரோ என்னை பாலோ பண்ற மாதிரியே பீல் ஆகுது. அது மட்டுமில்லாம நடந்தது தான் உங்களுக்குத் தெரியுமே? நடந்த எதையும் என்னால அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியும்னு தோணலை. இன்பேக்ட் அந்த டைம்ல நான் ஏன் ரியாக்ட் பண்ணாம அழுதுட்டு வந்தேன்னு இப்போ வரைக்கும் எனக்குப் புரியலை?” என்றாள் அவர்களைப் பார்த்தபடி.

“விடு பேபி பார்த்துக்கலாம். நீ எப்படின்னு எனக்குத் தெரியும். இன்னொரு தடவை உன்கிட்ட யாராவது அப்படி பிகேவ் பண்ணா அப்போ தெரியும் இந்த தாரிக் யாருன்னு? பிரச்சனை நடந்தா விஷயம் உங்க அப்பா காதுக்கு போய்டும்ங்கிற ஒரே காரணத்துக்காகத் தான் அமைதியா இருக்கேன். ஆனா உனக்காக நான் எதுவுமே பண்ணலைன்னு நீ எப்படி அப்படி சொல்ல போச்சு?” என்றான் கோபமாய்.

“உண்மையைத் தானே சொன்னேன் தாரிக். உனக்கு கோபம் வரவேண்டிய இடத்துல எல்லாம் மண்ணு மாதிரி வேடிக்கை மட்டும் தான பார்த்த? இதே மாதிரி எப்பவும் இருக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?” என்றாள் கோபமாய்.

“சாரி பேபி..!அதுக்காக உன்மேல எனக்கு இருக்குற அன்பை சந்தேகப்படாத. அப்படி நீ சந்தேகப் பட்டுட்டா அதுக்கப்பறம் நான் உயிரோட இருக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை” என்றான் தவிப்புடன்.

“சென்னை போன உடனே எனக்கு என்கேஜ்மென்ட். அப்பா இப்போதான் பேசிட்டு வச்சார்” என்றாள் இயந்திரக் குரலில். செய்தியைக் கேட்ட தாரிக் அதிர்ந்து போய் நின்றான்.

“நீ என்மேல இருக்குற கோபத்துல தான பேபி இப்படி சொல்ற?” என்றான் நம்பாத குரலில்.

“என்ன சொல்ற வொயிட்டி? அதுக்கு நீ என்ன பதில் சொன்ன?” என்றாள் நந்திதா.

“நான் என்ன பதில் சொல்ல முடியும் நந்தி? எதுவும் பேசாம எப்பவும் போல தலையை ஆட்டிட்டு போனை வச்சுட்டேன்” என்றவளின் குரலில் இருந்தது என்ன மாதிரியான பாவனை என்று அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.

“இதை உன்கிட்ட நான் எதிர்பார்க்கலை பேபி” என்று கோபமாய் சொன்ன தாரிக் வேகமாய் அங்கிருந்து சென்று விட்டான்.

“அவன் ஏதோ கோபத்துல பேசிட்டு போறான் வொயிட்டி. நீ எதுவும் பீல் பண்ணாத? சென்னை போனதும் அங்கிள்கிட்ட நேரடியா பேசிடு” என்றாள் டயானா.

“அது சரியா வரும்னு தோணலை. டாடியை பத்தி உங்களை விட எனக்கு நல்லா தெரியும். கண்டிப்பா இந்த மேரேஜ்க்கு அவர் சம்மதிக்கவே மாட்டார். அதுக்குத்தான் இந்த லவ்வு கிவ்வு எல்லாம் வேண்டாம்னு சிவனேன்னு இருந்தேன். இப்போ என்னால எல்லாருக்குமே கஷ்ட்டம்” என்றாள் மருகிய குரலில்.

“காதல்னா எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும் வொயிட்டி. இதெல்லாம் தெரிஞ்சு தான அவனுக்கு ஓகே சொன்ன?சோ, அடுத்து என்ன பண்றதுன்னு யோசி” என்றாள் நந்திதா.

“நந்தி சொன்னதைத் தான் நானும் சொல்றேன். எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் விடு வொயிட்டி. நீ காலையில இருந்து சரியா சாப்பிடவே இல்லை. அட்லீஸ்ட் இந்த ஜூசையாவது குடி” என்றபடி டயானா நீட்டிய ஜூசை வாங்கிக் குடித்து முடித்திருந்தாள் வெண்மொழி.

“தேங்க்ஸ்டி” என்றவளை முறைத்தவர்கள்,

“இன்னைக்கு ஸ்டேன்டப் காமெடி ஷோ இருக்கு. நீயும் வரியா?” என்றனர்.

அன்று நடந்த விஷயம் மறுபடியும் நினைவிற்கு வர,

“நான் வரலை நீங்க போயிட்டு வாங்க” என்று அவர்களை அனுப்பி வைத்தாள் வெண்மொழி.

அவர்கள் சென்றவுடன் கதவை அடைப்பதற்காக சென்றவளுக்கு தலையை சுற்றிக் கொண்டு வர, நின்று நிதானித்தாள். அதற்குள் அறைக்குள் நுழைந்த உருவம் பட்டென்று கதவை அடைக்க, அந்த நிலையிலும் அதிர்ந்து போய் பார்த்தாள்.

“யார் நீ?” என்றவளுக்கு வார்த்தைகள் குழறியது. வாட்ட சாட்டமாய் இருந்தவனை இதற்கு முன் பார்த்ததாய் அவளுக்கு ஞாபகம் இல்லை.

“நான் யாருன்னு கொஞ்ச நேரத்துல நீயே தெரிஞ்சுக்குவ. எத்தனை நாளா எனக்கு போக்கு காட்டிட்டு இருக்க? உள்ளயே இருந்தா என்னால இங்க வர முடியாதா?” என்றவன் அவளை நோக்கி முன்னேற, அவளோ அந்த நிலையிலும் வேகமாய் தன் போனை எடுத்து நண்பர்களுக்கு அழைப்பெடுக்க முயற்சி செய்ய, அவளின் போனை பிடுங்கியவன், அதை வேகமாய் பால்கனி வழியாக கடலில் வீசியிருந்தான்.

“ஹேய் என்ன பண்ற?” என்றவளுக்கு நிதானம் கொஞ்சம் கொஞ்சமாய் தவற,

“சென்னையிலேயே வச்சு வேலையை முடிக்க வேண்டியது. என்னை இங்க வரைக்கும் அலைய வச்சுட்ட. அதனாலென்ன? உனக்காக எங்க வேணும்னாலும் வரலாம். சும்மா சொல்லக் கூடாது செதுக்கி வச்ச சிலை மாதிரி பொண்ணை பெத்து வச்சிருக்கான் அந்த ராஜ ராஜன்” என்றவனின் பேச்சு அந்த மயக்க நிலையிலும் அவளுக்குத் தெளிவாய் காதுகளில் விழுந்திருந்தது.

அவனோ அவளிடம் அத்து மீறப் பார்க்க,

“டோன்ட் டச் மீ!” என்று தடுமாறியபடி அவனைத் தள்ளியவள், அறையில் இருந்த எமெர்ஜென்சி பட்டனை அழுத்தப் போக, அவளின் அந்த முயற்சியும் அவனால் தடுக்கப்பட்டது.

முடிந்த மட்டும் அவனை பலம் கொண்டு தள்ளியவள், தடுமாறியபடி பால்கனியில் சென்று நின்று கொண்டாள். பக்கத்து அறைகளின் பால்கனியில் இருப்பவர்களுக்கு இவள் நிற்பது தெரியும். அதற்காகவே போய் நின்றுவிட்டாள்.

அவளைப் பிடிக்க முயன்றவன் அவள் பால்கனிக்கு செல்லவும் அப்படியே அறைக்குள்ளேயே நின்று விட்டான். வெளியே சென்றால் மாட்டிக் கொள்வோம் என்று அவனுக்குத் தெரியும். கப்பலின் வெளிப்பகுதிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டிருந்தது.

“ஷிட்..! முன்னமே இந்த பால்கனி டோரை குளோஸ் பண்ணியிருக்கணும்” என்று ஆத்திரத்தில் தன்னைத் தானே திட்டிக் கொண்டவன்,

“ஒழுங்கா உள்ள வந்துடு” என்றான் மிரட்டல் தொனியில்.

அந்த அரை மயக்க நிலையிலும் ‘மாட்டேன்’ என்று தலையை ஆட்டியவள் அவனை நன்றாகப் பார்க்க முயற்சி செய்தாள். அவனை எங்கோ பார்த்திருப்பதை போன்ற ஞாபகம். ஆனால் எங்கு என்று தான் தெரியவில்லை.

‘இன்னும் சற்று நேரத்தில் அவளுக்கு முழு மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு’ என்று அவளும் உணர்ந்திருந்தாள். அவனும் அதைத் தெரிந்து தானோ என்னவோ அவள் முழுதாய் மயக்க மடைய காத்திருந்தான் போலும்.

‘டாடி பேரை எதுக்கு சொல்லணும்?’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போது கண்கள் முழுவதுமாய் சொருக ஆரம்பித்தது. மயக்கத்தில் பிடிமானம் அற்றுப் போக, அவன் அவளைப் பிடிக்க வெளியே செல்வதற்குள் தவறி கடலில் விழுந்திருந்தாள் வெண்மொழி.

“ஷிட்” என்று தலையில் அடித்துக் கொண்டவன், வேகமாய் அந்த அறையை விட்டு வெளியேறியிருந்தான்.