தீரன் சொன்னதைப் போல் கிட்டத் தட்ட அவன் நன்றாக உறங்கி விட்டான் என்று தெரிந்த பின்னர் அவளுக்கு அழைப்பு வந்தது. அவளும் தூக்கக் கலக்கத்தில் போனை எடுப்பவளைப் போலவே எடுத்தாள்.
“என்ன புருஷன் கூட ஒரே குஜாலா இருக்க போல” என்றவனின் குரலில் அவளையும் அறியாமல் சட்டென்று எழுந்து அமர்ந்திருந்தாள்.
‘இவளை பயப்படுற மாதிரி நடிக்க சொன்னா, நிஜமாவே பயந்து எழுந்துக்குறாளே” என்று பல்லைக் கடித்தவன், பொறுமையாய் இருந்தான்.
“இல்ல, அது வந்து” என்று திணறியவளுக்கு எப்போதும் போல் நடுக்கம் எடுக்க,
“என்ன நான் சொன்னது மறந்துடுச்சா?இல்லை நாளைக்கு சுடச் சுடச் வீடியோ வேணுமா?” என்றவன், “இல்ல இப்பவே அனுப்புனாத்தான் நல்லா இருக்கும்” என்றவன் ஒரு வீடியோவை அனுப்பி அவளைப் பார்க்க சொல்ல, நடுக்கத்துடன் அதைத் திறந்தவளின் விழிகள் விரிந்தது.
“என்ன வீடியோ நல்லா இருக்கா? இவ உன் பிரண்ட் டயானா தான. நாளைக்கு ஹாட் நியூசே இவ தான்” என்றான்.
“பிளீஸ் அப்படி பண்ணிடாத?” என்றாள் நடுங்கும் குரலில்.
“அது உன் கையில தான் கண்ணு இருக்கு. இந்த பர்ஸ்ட் நைட் கொண்டாடுறேன், புருஷனைக் கொஞ்சுறேன்னு அவன் கூட உன்னைப் பார்த்தேன். நான் மிருகம் மாதிரி. என்ன செய்வேன்னு உனக்கு நல்லா தெரியும்” என்றபடி போனை வைக்க, போனையே வெறித்திருந்தவள், பக்கத்தில் படுத்தால் அதற்கும் ஏதாவது சொல்லுவான் என்று நினைத்தாளோ என்னவோ? தீரனை விட்டு சற்று தள்ளிப் படுக்க, கேமராவில் பார்த்திருந்தவனின் இதழ்கள் வளைந்தது.
தீரனைப் பொறுத்தவரை அவனுக்கு பயந்து தீரன் இதையெல்லாம் செய்யவில்லை. அவனுக்கு தோன்றிய எண்ணத்தை உறுதிப் படுத்திக் கொண்டான். கூடுதலாக, அவனுடைய பார்வை அன்று முழுவதும் தங்கள் மேல் இருப்பதைப் போன்று பார்த்துக் கொண்டான் அவ்வளவே.
ஆனால் இப்போது மொழி விலகி சென்று படுக்கவும் அவனுக்கு கோபம் தலைக்கேறியது. மனைவியை இடையோடு இழுத்து தன்னருகில் போட்டு மீண்டும் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தான். ஆம் பார்த்துக் கொண்டிருந்தவனின் பிபியை ஏகத்துக்கும் எகிற வைத்துக் கொண்டிருந்தான். மொழியோ அவனிடமிருந்து வேண்டுமென்றே விலகப் பார்க்க, சட்டென்று கண் விழித்து எழுபவன் போல் எழுந்தவன்,
“இப்போ என்னடி உனக்கு பிரச்சனை?” என்று ஒரு அதட்டு அதட்டியிருந்தான்.
அவள் பேந்த பேந்த முழிக்க, அதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்திருந்தது.
“மனுஷனை நிம்மதியா தூங்க விடுறியாடி? இப்படி பேந்த பேந்த முழிச்சா நான் என்னன்னு நினைக்கிறது?” என்று அவள் இதழ்களை வருடியவன்,
“ஒரு கிஸ் பண்ணிக்கலாமா?” என்றான் அனுமதி வேண்டி.
அவள் ‘வேண்டாம் ‘ என்பதைப் போல் தலையை ஆட்ட,
“ஏன்டி பர்ஸ்ட் நைட்ல வேற ஒன்னும் தான் நடக்கலை. அட்லீஸ்ட் ஒரு கிஸ் கூட இல்லைன்னா நாளைக்கு வரலாறு இந்த அதிதீரனை தப்பா பேசாது?” என்றபடி அவள் இதழ்களைப் போர்த்தியவன், போர்வையையும் இழுத்து போர்த்தியிருந்தான்.
‘என்னா நடிப்பு நடிக்குறிங்க? தூங்குறதுக்கு முன்னாடி வரைக்கும் இதே வேலையா தான திரிஞ்சிங்க?” என்றாள் ஹஸ்கி குரலில்.
“எல்லாம் என் நேரம்? இதை வச்சு தான் காலம் தள்ளனும்னு இருக்கு” என்றான்.
“ஆமா நாம எப்போ ரூம்க்கு வந்தோம்?” என்றாள்.
“இந்த கேள்வி இப்போ அவசியமா? செம்ம டென்ஷன்ல இருக்கேன் மொழிமா. கொஞ்ச நேரம் தூங்கியே ஆகணும்” என்றவன் சற்று நேரத்தில் உறங்கியும் விட்டான். பாவம் மொழியிடம் பேசிவிட்டு வைத்தவனோ தன் செல்போனை கோபத்தில் உடைத்திருந்தான்.
தீரனைப் பொறுத்தவரை மறுநாள் விடியல் ஒரு சிறப்பான விடியல் தான்.
காலையில் மொழியை பிடித்து வைத்துக் கொண்டு பிரகதி வம்பிழுத்துக் கொண்டிருக்க, விஹானும் சேர்ந்து கொண்டான். அப்போது தான் உள்ளே நுழைந்தார் ஆனந்த ராஜன்.
“எங்க டாடி போயிட்டு வரீங்க?” என்றான் விஹான்.
“அது ஒரு சின்ன வேலை விஹான்” என்றவர் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
“மொழி” என்று தீரனின் குரல் கீழே ஹால் வரை கேட்க, அடித்துப் பிடித்து மேலே ஓடினாள் மொழி.
அறைக்குள் ஆளைக் காணாமல் தேட, அவனோ பாத்ரூம் உள்ளிருந்து எட்டிப் பார்த்தவன்,
“டவல் எடுத்துட்டு வாயேன்” என்றான்.
அவளும் டவலை எடுத்து நீட்ட, சட்டென்று உள்ளே இழுத்திருந்தான் தீரன்.
“அது படத்துக்கு சரித்தான். நீங்க ஏன் இழுத்திங்க?” என்றாள்.
அவளை இடையோடு இழுத்து தன் மேல் மோதச் செய்தவன்,
“பரவாயில்லை, கொஞ்சம் தேறிட்டடி. புத்திசாலித் தனமா கேள்வியெல்லாம் கேட்குறியே?” என்றவனை அவள் முறைக்க,
“யு லுக்கிங் சோ ப்ரிட்டி மொழிமா” என்றான்.
“காலையிலேயே என்னாச்சு ஏசிபிக்கு?” என்றாள் சிறு புன்னகையுடன்.
“நான் ஒன்னு சொல்லுவேன்! நீ கேட்கணும்” என்றான் பீடிகையுடன்.
“என்ன?” என்றவளின் கண்களில் வந்து போன பயத்தைக் கண்டவன் நொந்து போனான்.
“இப்படி பயந்து சாகாதடி” என்று அதட்டியவன்,
“இன்னைக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம். ஐ மீன் விருப்பத்தகாத விஷயங்கள் எது வேணும்னாலும் நடக்கலாம். உன் பேமிலில இருக்குறவங்களுக்கு இன்னைக்கு நீ தான் சப்போர்ட்டா இருக்கணும். என்னால இங்க இருக்க முடியாது. சோ நீ எப்பவும் போல வாட்டர் டேங்கை ஒப்பன் பண்ணாம இன்னைக்காவது கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ மொழி” என்றான்.
“மாமா என்ன பாட்டை முனுமுனுக்குறிங்க? சத்தமா பாடினா நாங்களும் கேட்போம்” என்றான் விஹான்.
“அதுவா உன் அக்காவுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு” என்று கண்ணடித்தான் தீரன்.
“அப்படி என்ன பாட்டு?”
“நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது
நம்ம கோட்டையில் கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது
சதுரங்கத்தில் வெட்டுப்பட்டா கண்ணீர் விடாதே
பெண்ணங்கத்தில் ஒட்டிகிட்டா கவலைப் படாதே
விளையாடு விளையாடு விடிய விடிய விளையாடு” என்று தீரன் பாட, அவன் மொழியைத் தான் கிண்டல் செய்ய பாடுகிறான் என்று மற்றவர்கள் நினைக்க, சம்பந்தப்பட்டவனின் முகமோ சட்டென்று இறுகி மீண்டது.
தியாகராஜன் வரவும் சட்டென்று அந்த இடம் அமைதியாக, தீரனும் மேற்கொண்டு பேச நேரமின்றி சாப்பிட்டு முடித்தவன் கிளம்பிவிட்டான்.
அவன் கிளம்பி வெளியே செல்லும் தருவாயில் ராஜன் மீண்டும் உள்ளே வந்தார்.
“என்னாச்சு அங்கிள்?”
“நியூஸ் பார்த்திங்களா தீரன்? அந்த தாரிக் பயலும் அவன் அண்ணனும் ஏதோ தகராறுல மாத்தி மாத்தி சுட்டுகிட்டாங்களாமே?” என்றார் சற்று பதட்டத்துடன்.
“ஆமா அங்கிள்..! எனக்கும் விஷயம் இப்போ தான் தெரியும். அதான் கிளம்பிட்டு இருக்கேன்” என்றான். இவர்களின் பேச்சைக் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ந்து போய் பார்க்க, மொழியின் கண்களில் பயம் அப்பட்டமாய் தெரிந்தது. திரும்பி மனைவியை உறுத்து விழித்திருந்தான் தீரன். அவன் பார்த்த பார்வையில் சட்டென்று இயல்புக்கு வந்தாள்.
“பேப்பர்ல கூட நியூஸ் வந்த மாதிரி தெரியலையே தீரன்?” என்றார் ராஜன்.
“தெரியலை அங்கிள். மேபி நாளைக்கு எடிசன்ல வரலாம். இன்னைக்கு எடிசன் டைம் முடிஞ்சதுக்கு அப்பறம் கூட கிரைம் நடந்திருக்கலாம்” என்றான் தீரன்.
“அப்படி ஒன்னு இருக்கோ” என்றவர் தீரனைப் பார்க்க, அவன் இமைகளை அழுந்த மூடித் திறந்த விதத்தில் ஆசுவாசம் அடைந்தவர்,
“அப்போ நான் கிளம்பவா?” என்றார்.
“பெட்டர் நீங்க இன்னைக்கு மீட்டிங்க கேன்சல் பண்ணிடுறது தான் அங்கிள்” என்றவன் கிளம்பிவிட்டான்.
தீரன் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் அனைத்து சேனல்களிலும் பிரேக்கிங் நியூஸ் தான் ஓடிக் கொண்டிருந்தது.
“பள்ளிக் கல்லூரிகளில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம். மேஜிக் டிரிங் என்ற பெயரில் போதை மருந்து விற்பனை செய்தது அம்பலம்.. இந்த குற்ற செயல்களில் முக்கிய புள்ளிகள் பலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது” என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்க, அந்த ஜூஸ் பாட்டிலை பார்த்த மொழிக்கு மயக்கம் வராத குறை தான். அவளைப் போல் அதிர்ந்தவர்களை எண்ணிக்கையில் அடக்க முடியாது.
இதோ அதைத் தொடர்ந்து தீரன் பேசிய விழிப்புணர்வு வீடியோவும் ஒளிபரப்பாக, கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மொழி.
“நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவங்க கம்ப்ளைன்ட் பண்ணலாம். கம்ப்ளைன்ட் குடுக்குறவங்க டீடெயில்ஸ் எக்காரணம் கொண்டும் வெளிய தெரியாது. தைரியமா கம்ப்ளைன்ட் குடுக்கலாம்” என்ற தீரன்,
“இதுல மெயின் சப்ளையரா இருந்த ஜித்தேஷ் அவன் தம்பி தாரிக் ரெண்டு பேருமே சொந்த மோட்டிவ்ல ஒருத்தரை ஒருத்தர் சுட்டுகிட்டாங்க. மேற்கொண்டு இதுல வேற யாரும் சம்பந்தப் பட்டிருக்காங்களான்னு விசாரிச்சுட்டு இருக்கோம். சந்தேகத்துக்கு உட்பட்ட ஸ்கூல்ஸ் காலேஜ்ஸ் எல்லாத்துலையும் ரெய்டு நடந்துட்டு இருக்கு” என்று பேசிக் கொண்டிருந்தான் தீரன். மேற்கொண்டு மீடியா நபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவன் திணறாமல் பதில் குடுத்ததில் இருந்தே தெரிந்து போனது, இதற்காக பல நாள் வேலை செய்திருக்கிறான் என்று.
“இதுக்குத்தான் ஏசிபி அவ்வளவு வேகமா டிப்டாப்பா கிளம்பி போனாரா மொழி?” என்றாள் பிரகதி.
“ம்ம் தெரியலைக்கா” என்ற மொழி இன்னமும் அதிர்ச்சியில் இருந்தே வெளி வந்திருக்கவில்லை.
ராஜ ராஜன் வீட்டைச் சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர்.
“நம்ம வீட்டைச் சுத்தி எதுக்கு இவ்வளவு போலீஸ்?” என்று வீட்டில் இருந்தவர்கள் புரியாமல் முழிக்க,
“சார் சம்மந்தப்பட்டிருக்கிறது முக்கியமான கேஸ். தீரன் சார்க்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லி உத்தரவு மேடம்” என்று சொல்லவும் அதையும் நம்பிக் கொண்டனர் வீட்டில் இருந்தவர்கள்.
“கடைக்கு கிளம்பலாமா மாப்பிள்ளை?” என்றார் ஆனந்த ராஜன்.
“ஓகே மாமா” என்றபடி இருவரும் கிளம்பி வெளியே வர,
“இன்னைக்கு ஒரு நாள் யாரும் வெளிய போக அனுமதி இல்லை சார். புல் ப்ரொடக்ஷன் குடுக்க சொல்லி இருக்காங்க” என்றார் அந்த டிஎஸ்பி.
“இவங்க என்ன சொல்றாங்கண்ணா? நாம கடையைத் திறக்க வேண்டாமா?” என்றார் ஆனந்த ராஜன்.
“இன்னைக்கு ஒரு நாள் கடையைத் திறக்க வேண்டாம் ஆனந்தா. தீரன் சொன்னா அதுல ஒரு காரணம் இருக்கும்” என்ற ராஜனை எரிச்சலுடன் பார்த்தார் ஆனந்த ராஜன்.
மொழிக்கு உள்ளுக்குள் மனம் அடித்துக் கொண்டது. தீரன் வாயால் கேட்டதுக்கே மயக்கம் போட்டு விழுந்திருந்தாள். இப்போது நடப்பதை எல்லாம் பார்த்தவளுக்கு மீண்டும் மயக்கம் வந்து விடுமோ என்ற பயம் வேறு.
ஓவ்வொரு நிமிடத்தையும் பயத்துடன் கழித்தவளை இரண்டு கண்கள் விடாமல் பார்த்திருந்தது.
வாசலில் தீரனின் கார் வந்து நிற்கவும் தான் மொழிக்கு போன் நிம்மதி திரும்பி வந்திருந்தது.
அவனுடன் வந்த விவேக் வாசலிலேயே நிற்க,
“உள்ள வா விவேக்” என்றான் தீரன்.
“இருக்கட்டும் அதி. நீ போ” என்றான்.
“உள்ள வாங்க இன்பெக்டர் விவேக். நாம அபீஷியலா வந்திருக்கோம்” என்ற தீரனின் குரல் அதிகாரமாய் ஒலித்தது. அவன் குரல் சத்தத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ந்து பார்க்க, ராஜனோ புரியாமல் பார்த்திருந்தார்.
மொழி இரண்டு எட்டு பின்னால் சென்று தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொள்ள, தனக்கருகில் வந்து நிற்கும் மகளையும், அவள் பயத்தையும் பார்த்தவருக்கு என்னவோ ஏதோவென்று மனம் அடித்துக் கொண்டது.