அத்தியாயம் 21 :

தன் அலைபேசி சத்தத்தில் கண் விழித்தான் அதிதீரன். ஒருமணி நேரம் என்று கூறியவன் கிட்டத் தட்ட மூன்று மணி நேரங்களுக்கு மேலாக உறங்கியிருந்தான்.

தூக்கக் கலக்கத்தில் இருந்தவன்,

“ஹலோ, சொல்லு மச்சான்” என்க, அவன் குரலில் இருந்தே அவன் இருக்கும் நிலைமையை புரிந்து கொண்ட விவேக்,

“நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா! நல்லா தூங்கிட்டு இருந்தவனை எழுப்பிட்டு வந்து காவல் காக்க விட்டுட்டு சாருக்கு நல்ல தூக்கம் போல, அதுவும் வருங்கால மாமனார் வீட்ல. இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சுடும். மாமனார் பெட் காபி கொண்டு வருவார், ஆற அமர குடிச்சுட்டு வீடு போய் சேரு மச்சான். நான் கிளம்புறேன்” என்றான் விவேக் குரலில் ஏகப்பட்ட கடுப்புடன்.

“மச்சான் துணை இருந்தா மலையேறலாம்னு சொல்லுவாங்கடா” என்றான் தீரன்.

“சார் எந்த மலை ஏறுனிங்க?”

“பைப் வழியா மொட்டை மாடிக்கு தான் ஏறுனேன் மச்சான்” என்றான் சிரிக்காமல்.

“எனக்கென்னமோ நீ கேஸ் விசாரிக்கிற மாதிரி தெரியலை அதி. கேஸ் பைலையே நீதான் கிரியேட் பண்ணிட்டு இருக்கன்னு நினைக்கிறேன். மரியாதையா வந்துடு மச்சான். இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்லை” என்ற விவேக் கடுப்புடன் போனை வைக்க,

“ஷிட் ஒரு மணி நேரம்னு சொல்லி இவ்வளவு நேரம் தூங்கிட்டேனே?” என்றவன் பட்டென்று எழப் போக, அவனால் நகர முடியவில்லை. தன் நெஞ்சில் முகம் புதைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை ஏனோ எழுப்ப மனம் வரவில்லை அவனுக்கு. ஆனால் அவன் சென்றாக வேண்டிய கட்டாயம்.

“மொழி” என்றான் மெதுவாக. அவளோ அசைந்தாள் இல்லை.

“மொழிமா” என்றான் அழுத்தமாய்.

“பேசாம தூங்குங்க தீரா” என்று முனங்கியவள் மீண்டும் தூக்கத்தை தொடர,

“சரித்தான்டி” என்று சிரித்து கொண்டவன், தான் அங்கு வந்த வேலை ஞாபகத்திற்கு வரவும் வேகமாய் தன் அலைபேசியில் மொழியின் அறையில் இருந்த கேமரா வழியாக பதிவுகளை பார்க்க, கட்டிலுக்கு அடியில் இருந்த உருவம் இப்போது இல்லை.

“எஸ்” என்றவன், அவர்கள் உறக்கத்தில் இருந்த அந்த இடைப்பட்ட மூன்று மணி நேரப் பதிவுகளைப் பார்த்தான். இடையில் ஒரு முறை பவர் கட் ஆகியிருக்க அடுத்த ஐந்து நிமிடங்கள் கழித்து தான் பவர் வந்திருந்தது. அந்த ஐந்து நிமிட இடைவெளியில் அந்த உருவத்தைக் காணவில்லை.

“ஷிட்” என்று எரிச்சலடைந்தவன் வேகமாய் விவேக்கிற்கு அழைத்தான்.

“உன்னை விட்டுட்டு போக மனசில்லாம வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அதி” என்றான் கடுப்புடன்.

‘இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாம’ என்று நொந்து கொண்டவன்,

“விவேக் அந்த கார் இடையில வெளிய போச்சா?” என்றான் எடுத்த எடுப்பில்.

“இல்ல அதி”

“நல்லா யோசிச்சு சொல்லு விவேக். இடையில நீ தூங்கிடலையே?” என்றான் தீரன் யோசனையுடன்.

“ஒரு பொட்டு கண்ணை மூடலை. என்னைப் பார்த்து எப்படி நீ இப்படி கேட்கலாம்?” என்றான் விவேக் கடுப்புடன்.

தீரனின் சிந்தனைகள் வேறெங்கோ செல்ல,

“என்னாச்சு அதி? எனி பிராப்ளம்?” என்றான் விவேக் நிலைமை உணர்ந்து.

“சம்திங் ராங் விவேக். நாம எதையோ மிஸ் பண்றோம். ஒரு விஷயம் அந்த ஒரு விஷயம் மட்டும் நமக்கு பிடிபட்டுட்டா, திஸ் கேஸ் வில் மூவ் டுவேர்ட்ஸ் த பைனல் ஸ்டேஜ்” என்றவனுக்கு ஆயாசமாய் வந்தது. லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு இப்படி கைநழுவிப் போகும் என்று அவன் நினைக்கவில்லை.

“இப்போ என்ன பண்றது அதி?” என்றான் விவேக்.

“யோசிக்கணும் விவேக். வெயிட் பண்ணு வந்திடுறேன்” என்றபடி போனை வைத்தவனுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான். யோசனைகளை புறந்தள்ளியவன்,

“மொழிமா நான் கிளம்பனும். விடியப் போகுது” என்றான் அவள் காதருகில்.

காதருகில் பட்ட அவன் இதழ்களின் ஸ்பரிசத்தில் கூசி சிலிர்த்தவள், இருக்கும் இடம் ஞாபகம் வந்தவளாய் பட்டென்று எழுந்திருந்தாள்.

“மேடம்க்கு நல்ல தூக்கம் போல?” என்றான் கிண்டலாய்.

“நிஜமாவே நிம்மதியா தூங்கினேன்” என்று கூறி இதழ்பிரிக்காமல் சிரித்தவளை அள்ளிக் கொள்ள வேண்டும் போல் தோன்றிய மனதை அடக்கியவன், கலைந்திருந்த அவள் ஆடைகளை சரி செய்து விட,

“தேங்க்ஸ் ஏசிபி” என்றாள் அவனையே பார்த்தபடி.

“எதுக்கு உன்னை தூங்க வச்சதுக்கா?” என்றான் சிரிப்புடன்.

“ம்ம்..! பயமில்லாம தூங்க வச்சதுக்கு” என்றவளின் வார்த்தைகளில் கனம் கூடிப் போனது அவனுக்கு.

“ஜஸ்ட் போர்டின் டேய்ஸ். அப்பறம் டெய்லி என்கூடத்தான் தூங்கியாகனும். அப்போ எந்த பயமும் இல்லாம நீ நிம்மதியா தூங்கலாம்” என்றான்.

“போர்டின் டேய்ஸ்ல என்ன வேணும்னாலும் நடக்கலாம் ஏசிபி. ஏன் நானே இருப்பனான்னு தெரியலை. என்னை பொறுத்த வரைக்கும் இந்த நிமிஷம் மட்டும் தான் நிஜம். அடுத்த நிமிஷம் என்ன வேணும்னாலும் நடக்கலாம்” என்றவளின் கழுத்தைப் பற்றி இழுத்தவன்,

“காலங்காத்தால நல்ல வார்த்தையா பேசுடி. கிழவி மாதிரி பேசுறதை விடு முதல்ல. ஒரு மினிஸ்டர் பொண்ணு இப்படி எதுக்கெடுத்தாலும் பயப்படலாமா?” என்றான் அவளையே உற்று நோக்கியபடி.

“மினிஸ்டர் பொண்ணுன்றதால வந்த பயம் தான் ஏசிபி இது. என் அப்பா மத்த அரசியல்வாதிங்க மாதிரி இருந்திருந்தா நான் இப்படி பயப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காதோ என்னவோ? ஆனா அவர் அப்படி இல்லை ஏசிபி.. அவருக்கு மானம்,குடும்ப கௌரவம், அவரோட பேர் இதெல்லாம் ரொம்ப முக்கியம்” என்றாள் கசங்கிய குரலில்.

“அதை விட அவருக்கு அவரோட பொண்ணுங்களும் முக்கியம். இதை எப்பவும் மறக்காத மொழி. அவருக்கு பாசத்தைக் கூட கண்டிப்போட தான் காட்டத் தெரியுது. அது அவரோட நேச்சர். அதுக்காக அவரை நாம தப்பு சொல்ல முடியாது. அதுக்காக பாசமே இல்லைன்னு நாம முடிவு பண்ணிடக் கூடாது இல்லையா?” என்றான் பொறுமையாய்.

“நான் எப்போ அப்படி சொன்னேன். அப்பாவைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் ஏசிபி. எனக்கு இருக்குற ஆதங்கம் எல்லாம் ஒன்னு தான். எந்த பிரச்சனை வந்தாலும் அதை அவர்கிட்ட தைரியமா சொல்ற அளவுக்கு எங்களுக்கு ஸ்பேஸ் குடுத்திருக்கலாம். மத்தபடி என் அப்பா மாதிரி பெஸ்ட் யாரும் கிடையாது” என்றவளுக்கு கண்கள் கலங்க,

தனக்குத் தேவையானதை அவள் அறியாமலேயே வாங்கிக் கொண்டிருந்தான் தீரன்.

ஆமா, மினிஸ்டர் வீட்ல கரண்ட் போன உடனே யுபிஎஸ் டக்குன்னு ஆனாக வேண்டாமா? அது கூட அஞ்சு நிமிஷம் கழிச்சு தான்டி ஆனாகுது” என்றான்.

“அப்படியா?எப்பவும் டக்குன்னு ஆனாகிடுமே?” என்றவள்,

“ஏதாவது பிராப்ளமா இருந்திருக்கும் ஏசிபி” என்றாள்.

“கண்டிப்பா பிராப்ளமாத்தான் இருக்கும்” என்றவனின் சிந்தனை வேறெங்கோ செல்ல,

“என்னாச்சு அடிக்கடி யோசனைக்கு போயிடுறிங்க?” என்றவள், கலைந்திருந்த தன் முடியை கொண்டையிட்டு கொள்ள, அவளைப் பின்னோடு அணைத்தவன் அப்படியே அந்த கண்ணாடி அறையை விட்டு வெளியே அழைத்து செல்ல,

“எங்க கூட்டிட்டு போறீங்க?” என்றாள்.

“மொட்டை மாடி வியூ நல்லா இருக்கு. இப்போ கொஞ்சம் வியூ தெரியுது. அதான் உன்கூட சேர்ந்து பார்க்கலாம்னு கூட்டிட்டு போறேன்” என்றான்.

“அப்படியா? எனக்கொன்னும் புதுசா தெரியலை” என்றாள் கொட்டாவியுடன்.

“உங்க வீட்டுக்கு ரைட் சைட் இருக்குற வீட்டு எலிவேஷன் ரொம்ப அழகா இருக்குல்ல மொழி. அந்த வீடு பார்க்கவே ரொம்ப யுனிக்கா இருக்கு. ஓனருக்கு நல்ல டேஸ்ட்” என்றான்.

“இருக்காதா பின்ன? ஒவ்வொன்னையும் இப்படி வேணும் அப்படி வேணும்னு கேட்டு கட்டுன வீடு. அப்படித்தான் இருக்கும்” என்றாள் சன்ன சிரிப்புடன்.

“அதெப்படி உனக்குத் தெரியும்?”

“அதுவும் நம்ம வீடு தான் ஏசிபி” என்றாளே பார்க்கலாம், இப்போது அதிர்வது தீரனின் முறையானது.

“அப்படியா? இதையேன் யாரும் என்கிட்ட சொல்லலை?” என்றான்.

“நீங்க ஒரு விஷயம் பண்ணுங்க. டாடிகிட்ட போய் அவருக்கு எங்கெங்க வீடு, சொத்தெல்லாம் இருக்குன்னு கேட்டு கன்பார்ம் பண்ணிக்கோங்க” என்றவளை அவன் முறைக்க,

“பின்ன என்ன? நீங்க கேட்டிங்களா முதல்ல” என்றவளை மீண்டும் தன் கைவளைவிற்குள் இழுத்தவன்,

“எனக்கு அவர் பெத்து வச்சிருக்குற இந்த ஐம்பது கிலோ சொத்து வெண்மொழி தான் தேவை. மத்த சொத்தெல்லாம் எனக்குத் தேவையில்லை” என்றவன்,

“அந்த வீட்ல இப்போ யார் இருக்குறது?” என்றான்.

“யாருமில்லை. ஏதாவது சின்ன சின்ன பார்ட்டிஸ்னா அங்க பண்ணுவோம். கட்சி ஆளுங்க நிறைய பேர் அப்பாவைப் பார்க்க வரும் போது, அங்க வச்சு தான் பேசுவார்” என்றாள் எதார்த்தம் போல்.

“இவ்வளவு பெரிய வீட்ல கார் ஷெட் எதுவும் இல்லையே?” என்றான்.

“அது அந்த பக்கம் இருக்கு. இங்க இருந்து பார்த்தா தெரியாது” என்றவள்,

“ஏன் அந்த வீட்டைப் பத்தியே கேட்குறிங்க? உங்களுக்கு அந்த வீடு அவ்வளவு பிடிச்சிருக்கா?” என்றாள் தலை சாய்த்து.

“ஜஸ்ட் இன்னோவேட்டிவா இருக்கேன்னு கேட்டேன்” என்றவன்,

“அப்போ நான் கிளம்புறேன் மொழிமா” என்றவன் கிளம்ப எத்தனிக்க, அதுவரை இல்லாத பயம் மீண்டும் அவள் மனதில் வந்து சூழ்ந்து கொண்டது. வீடியோ விஷயமும் மீண்டும் மண்டைக்குள் வந்து அமர்ந்து கொள்ள, தனக்குள் எழுந்த பதட்டத்தையும் பயத்தையும் மறைத்தபடி செல்லும் அவனையே பார்த்திருந்தாள் வெண்மொழி.

அவளின் மனநிலை அவனுக்குத் தெரிந்ததோ என்னவோ, திரும்பி அவளைப் பார்த்திருந்தவன் வேகமாய்  அவள் அருகில் வந்திருந்தான். அவள் புரியாமல் பார்க்க, அவனோ அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“தீரா” என்றவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.

அவள் முகமெங்கும் முத்தமிட்டு முடித்தவன்,

“நான் இருக்கேன் மொழி. நான் பார்த்துக்கிறேன். எதைப் பத்தியும் வொர்ரி பண்ணிக்காத. அன்ட் ஒன் திங்க் எந்த தேவையில்லாத எண்ணமும் உனக்கு தோணவே கூடாது, ரைட்” என்றான் தீர்க்கமாக.

“சரி” என்பதைப் போல் அவள் தலையை ஆட்ட,

“தட்ஸ் மை கேர்ள்” என்றவன் கிளம்பிவிட்டான்.

விவேக் காரை ஓட்டிக் கொண்டிருக்க, தீரனோ நெற்றியில் விரல்களைத் தேய்த்தபடி கண்களை மூடி அமர்ந்திருந்தான்.

“என்னாச்சு அதி?” என்றான் விவேக் புரியாமல்.

“அந்த பக்கத்து வீடு ராஜ ராஜன் அங்கிள் வீடு தானாம் விவேக்” என்றவனின் குரலில் சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தியிருந்தான் விவேக்.

“என்ன சொல்ற அதி? உனக்கு எப்படி தெரியும்?”

“மொழி சொன்னா” என்றவனின் குரலில் சுரத்தையே இல்லை.

“அடுத்து என்ன பிளான்?”

“தெரியலை. பட் நீ வீட்டுக்கு போக ஒன் வீக் ஆகிடும். நம்ம வீட்லயே ஸ்டே பண்ணிக்க மச்சான்” என்ற தீரனின் வார்த்தையில் அவனை முறைத்தவன்,

“ஆக, கடைசி வரைக்கும் என்னை நிம்மதியா இருக்க விடுற பிளான் இல்லை உனக்கு” என்றான் கிண்டலாய்.

“விவேக் பீ சீரியஸ். இது நார்மல் ட்ரக் கேஸ்னு தான் உள்ள நுழைஞ்சோம். பட் இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தும்னு நாம எதிர்பார்த்தோமா? சம்திங் வெரி சீரியஸ்” என்றான்.

“புரியுது அதி” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

வீட்டிற்கு சென்று குளித்து முடித்து கிளம்பி வந்தவன், தீவிர யோசனையுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்க,

“அதி கல்யாண வேலையெல்லாம் பார்க்கணும். நீ எப்போ லீவ் போடுற?” என்றார் வானதி.

“வாய்ப்பில்லைம்மா..! நிமிரக் கூட நேரம் கிடைக்காது” என்றவனை அவர் வெட்டவா குத்தவா என்று பார்த்து வைக்க, வேகமாய் சாப்பிட்டு முடித்தவன் பெற்றோர்களை தீர்க்கமாய் பார்த்தான்.

“என்னாச்சு அதி?” என்றார் நரேந்திரன் மகனின் முக மாற்றம் அறிந்தவராய்.

“அப்பா மேரேஜ் இன்விடேஷனை ரிஷப்ஷன் இன்விடேஷனா மாத்திடுங்க. நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு அரேன்ஜ் பண்ணிடுங்க. ராஜன் அங்கிள் கிட்ட நான் பேசிக்குறேன். விஷயம் வெளிய தெரிய வேண்டாம்” என்ற மகனை அவர்கள் புரியாது பார்க்க,

“காரணம் இருக்குப்பா. அதை சொல்லக் கூடிய சூழ்நிலை இப்போ இல்லை” என்றான்.

“இதுக்கு நான் கண்டிப்பா நான் சம்மதிக்க மாட்டேன் அதி. இவ்வளவு அவசரமா யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் ஆபீஸ்ல செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு? ராஜன் அண்ணா கண்டிப்பா இதுக்கு சம்மதிக்க மாட்டார்” என்றார் வானதி.

மண்டை காய்ந்தது தீரனுக்கு. கேஸ் டென்ஷன் ஒரு பக்கம். இந்த பிரச்சனை ஒரு பக்கம். இதில் முகம் தெரியாதவனின் ஆட்டம் ஒரு பக்கமென தலைக்குள் அனைத்தும் சேர்ந்து குடைந்து கொண்டிருந்தது. ஏனோ மொழி கடைசியாய் பார்த்த பார்வையை அவனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏதோ மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. எதுவாகினும் அவன் தன்னருகில் இருப்பது தான் அவளுக்கும் பாதுகாப்பு, தனக்கும் மனநிம்மதி என்று உறுதியாக நம்பினான் தீரன்.

எதுவும் பேசாமல் வானதியை தீர்க்கமாய் பார்த்தவன் கிளம்பிவிட்டான்.

“இதுக்குத்தான் நான் தலைப்பாடா அடிச்சுகிட்டேன். இந்த போலீஸ் உத்தியோகம் எல்லாம் நமக்கு வேண்டாம்னு. யார் கேட்டிங்க? ஒத்தப் பிள்ளையை பெத்து வச்சிருக்கேன். இப்படி நேரத்துக்கு சாப்பிடாம தூங்கமா ஒரு நல்ல நாளுக்கு கூட வீட்டுல இல்லாம என்ன பொழப்பு இதெல்லாம். நம்ம பிஸ்னஸ பார்த்துட்டு அக்கடான்னு இருக்க மாட்டாம?” என்று வானதி ஆரம்பிக்க, வழக்கம் போல் காது கேளாதவர் போல் இருந்து கொண்டார் நரேந்திரன்.

டியூட்டிக்கு செல்லும் வழியிலேயே ராஜனுக்கு அழைத்துப் பேசியிருந்தான். வானதி சொன்னதைப் போல் அவரும் அரைமனதாகத் தான் பேசினார். ஆனால் தீரன் சொல்லும் போது அவரால் மறுப்பு சொல்லவும் முடியவில்லை.