நேரம் போவதே தெரியாமல் வெண்மொழி அதில் ஆழ்ந்துவிட, அந்த மங்கிய ஒளியில் வேறு எதுவும் தெரியவில்லை அவளுக்கு. திடீரென்று ஏதோ அசௌகரியமாக உணர்ந்தாள். இடுப்பில் ஏதோ ஊர்வதைப் போல் இருந்தது. அந்த உணர்வு சட்டென்று அவளுக்கு எதையோ உணர்த்த, அதற்குள் அவளின் இடுப்பில் ஊர்ந்த கை அவள் எதிர்பார்க்காத நொடி அவள் முன்னழகை பற்றியிருந்தது.

உடல் விதிர்விதிர்த்து நடுங்கியவள்,  சட்டென்று அந்த கரத்தை தட்டி விட்டு வேகமாய் இருக்கையில் இருந்து எழுந்திருந்தாள். உடல் படபடப்புடன் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆத்திரமும் கோபமும் தலைக்கு ஏற நின்றவளுக்கு ஏதுவாக விளக்குகளும் உடனே ஒளிர்ந்தது.

கலங்கிய கண்ணீருடன் தாரிக்கைப் பார்க்க, அவனோ ஒரு புறம் தலை சாய்த்து நல்ல உறக்கத்தில் இருந்தான். அவளின் பார்வை வேகமாய் மறுபுறம் பார்க்க, அங்கே அவளுக்கு அருகில் இருந்த சீட்டில் கால் மேல் கால் போட்டு தோரணையுடன் அமர்ந்திருந்தான் அதிதீரன்.

யாரோ தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன் திரும்ப, அங்கே வெண்மொழியைக் கண்டு,

“ஹோ..! நீயா?” என்பதைப் போல் ஒரு பாவனையுடன் பார்த்திருந்தான்.

அவனை அந்த இடத்தில் பார்த்தவுடன் அவளின் ஆத்திரம் அவள் கண்ணை மறைக்க,

“யு ராஸ்கல், எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி கேவலமா பிகேவ் பண்ணுவ?” என்றவள் நொடியும் தாமதிக்காது அவனை அறைந்திருந்தாள்.

இதை சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை. அவனை விட அவனுக்கு அருகில் இருந்த விவேக் தான் கலவரத்துடன் பார்த்திருந்தான்.

அவள் அறைந்த மறுநிமிடம் அவனும் அவளை ஓங்கி அறைந்திருந்தான்.

“என்னாச்சு? எனி பிராப்ளம்?” என்று அருகில் இருந்தவர்கள் கேட்க, அவர்களிடம் நடந்ததைக் கூற அவளுக்கு நாக்கு கூசியது.

“ஒன்றுமில்லை” என்பதைப் போல் அவள் தலையை ஆட்ட, அவளையும் மீறி கண்ணீர் வெளியே வந்திருந்தது. அருகில் இருந்தவர்கள் கலைந்து செல்ல,

“என்னாச்சு பேபி?” என்றான் தாரிக் தூக்கக் கலக்கத்துடன்.

“போடா இடியட்” என்று அவனை ஆத்திர மிகுதியில் திட்டியவள் அழுது கொண்டே சென்று விட்டாள். அவள் கண்களைத் துடைத்துக் கொண்டே செல்வதை புருவம் இடுங்கப் பார்த்திருந்தான் அதிதீரன்.

“என்னாச்சு அதி? ஏன் இப்படி பிகேவ் பண்ணிட்டு போறாங்க?” என்றான் விவேக் புரியாமல்.

“அது தான் எனக்கும் தெரியலை?” என்றவனின் பார்வை இன்னமும் யோசனையில் தான் இருந்தது.

“நீ ரூம்க்கு போ விவேக். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று தீவிரத்துடன் சொன்னவனை தடுக்க முடியாமல் நின்றான் விவேக்.

“அதி சொல்றனேன்னு கோவிச்சுக்காத? எனக்கென்னமோ இந்த பிரச்சனையை இப்படியே விட்டுறது நல்லதுன்னு தோணுது.மேலும் மேலும் இதை வளர்க்க வேண்டாம்” என்றான் கவலையான குரலில்.

“சொன்னதை மட்டும் செய் விவேக். நீ ரூம்க்கு போ நான் வர்றேன்” என்றவன் வேகமாய் அவளைப் பின்தொடர்ந்து சென்றிருந்தான்.

அங்கே வெண்மொழி அழுது கொண்டே செல்ல, அவள் பின்னேயே சென்ற தாரிக் ஒரு கட்டத்தில் அவளின் கையைப் பிடித்து நிறுத்தியிருந்தான்.

“என்னாச்சுன்னு கேட்கிறேன்ல பேபி. எதுவுமே சொல்லாம இப்படி அழுதுகிட்டே வந்தா என்ன அர்த்தம்?” என்றான் சற்று கோபமாக.

“சொன்னா மட்டும் என்ன பண்ணி கிழிச்சுடுவ? உன்னை நம்பி இந்த ட்ரிப்புக்கு வந்தேன் பாரு? என்னைச் சொல்லனும் தாரிக்” என்றவளுக்கு இயலாமையில் மேலும் கண்ணீர் வந்தது.

“ஹோ ஷிட்..! என்ன நடந்ததுன்னு சொன்னாத் தான தெரியும்” என்றான் அவனும் பொறுமையிழந்து.

“அவன் என்கிட்ட மறுபடியும் மோசமா பிகேவ் பண்ணதை சொல்லச் சொல்றியா? அவன் கை என் மேல.. என்னை” என்றவளுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை.

“என்ன சொல்ற பேபி? தெளிவா சொல்லு” என்றான் தாரிக் அதிர்ந்து போய்.

“அதான் கேட்குறார்ல, நான் என்ன பண்ணேன்னு தெளிவா சொல்லுங்க மேடம்” என்ற குரலில் இருவரும் திரும்ப, அவர்களைப் பார்த்தபடி கைகளை கட்டிக் கொண்டு நின்றான் அதிதீரன்.

“ச்சீ! பொறுக்கி! நீ பண்ண அசிங்கத்தை விலாவரியா வேற நான் சொல்லனுமா? நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பிறக்கலை?. இதை நான் சும்மா விட மாட்டேன். உன்னை என்ன பண்றேன்னு மட்டும் பார்” என்றாள் ஆங்காரத்துடன்.

“என்ன வேணும்னாலும் பண்ணு, அதுக்கு முன்னாடி நான் என்ன பண்ணேன்னு சொல்லிட்டு பண்ணு. ஏன்னா? இந்த மாதிரி இருட்டுக்குள்ள பொறுக்கித் தனம் பண்றவன் நான் கிடையாது. எதையும் எனக்கு வெளிச்சத்துல வெட்டா வெளியில பண்ணித் தான் பழக்கம்.ஒரு விஷயத்தை செய்யணும்னு முடிவு பண்ணிட்டா என்னைத் தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது. இந்த இருட்டுல தவிட்டுப் பானையை தடவுற வேலையெல்லாம் எனக்குத் தெரியாது” என்றான் அதிதீரன். வார்த்தைகள் ஒவ்வொன்றும் அனலுடன் வந்து விழுந்தது.

அவன் பேச்சிலும் அவள் கண் பார்த்து அவன் பேசிய விதத்திலும் அவள் அதிர்ந்து போய் நிற்க,

“நீ எப்படி பட்ட ஆள்னு எங்களுக்குத் தான் ஏற்கனவே தெரியுமே?” என்றான் தாரிக் கோபமாக.

“அதைத் தான் நானும் சொல்றேன். உன் கண்ணு முன்னாடி உன் லவ்வரை தைரியமா கிஸ் பண்ண தெரிஞ்ச எனக்கு மத்ததையும் அதே மாதிரி பண்ற அளவுக்கு தைரியம் இருக்கு. இந்த தெரியாம தடவுற வேலையெல்லாம் எனக்கு அவசியமே இல்லாத ஒன்னு, மைன்ட் இட்” என்றவன்,

“ரூம் நம்பர் போர் ட்வென்டில தான் நான் இருக்கேன். உங்களுக்கு என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க” என்று தோள்களை குலுக்கியவாறு சென்று விட்டான்.

“பேபி” என்று அதிர்ந்து நின்றவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டான் தாரிக்.

“நான் என்னோட ரூம்க்கு போறேன் தாரிக்” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை.

“நந்தியும் டயானாவும் எங்க?” என்றான்.

“அவங்க, மத்த பிரண்ட்ஸ் எல்லாம் கிளப் போயிருக்காங்க” என்றாள் இயந்திரக் குரலில்.

“உனக்கு பயமா இருந்தா நான் வேணும்னா கூட இருக்கட்டுமா பேபி” என்றான் உண்மையான அக்கறையுடன்.

“நோ நீட் தாரிக்” என்றவள் அடுத்த தளத்தில் இருந்த அவள் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தாள். தாரிக்கோ அவளை இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் சென்று கொண்டிருந்த தளத்தில் சட்டென்று மின்சாரம் தடைபட, அது நள்ளிரவு வேலை என்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

“என்னதிது?” என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஒருவன் அவளை பின்னால் இருந்து அவள் வாயை மூட, அவளுக்கோ பயத்தில் உடல் நடுங்கத் தொடங்கியது. அவனிடம் இருந்து தப்பிக்கப் முயன்றவளுக்கு அவனை அசைக்கக் கூட முடியவில்லை.

அவளைக் கைப்பிடியில் வைத்திருந்தவன், “நான் சொல்ற வரைக்கும் பவர் வரக் கூடாது. கேமரா எதுவுமே வொர்க் ஆகக் கூடாது” என்று யாருக்கோ தகவல் கொடுத்தான். அந்த குரலை அதற்கு முன்பு கேட்டதாய் அவளுக்கு ஞாபகம் இல்லை.

அவனின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றாள், முடியவில்லை. ஒரு வேகத்தில் அவனை உந்தி பின்னோக்கி தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தவளுக்கு எங்கு இருக்கிறோம்? எந்த திசையில செல்கிறோம் என்று சுத்தமாய் புரியவில்லை. கால்கள் போன போக்கில் ஓடிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் மூச்சு வாங்க அவள் நிற்க, அனைத்து விளக்குகளும் ஒளிர்ந்தது. அப்போது தான் அவளுக்கு நிம்மதி மூச்சே வந்தது.

எங்கு இருக்கிறோம் என்று ஆராய்ந்தவள் அங்கிருந்து கிளம்ப, அவள் வந்த தளத்தில் தன் அறையின் கதவை அன்லாக் செய்து கொண்டிருந்தான் அதிதீரன். அவனைக் கண்டு அப்படியே நின்று விட்டாள் அவள்.

‘என்னைத் துரத்தியது இவனா இருக்குமோ?’ என்று சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்க, அவனோ இவள் நிற்பது அறியாமல் அறைக்குள் சென்று விட்டான்.

‘இருக்காது, என்னைத் துரத்தியிருந்தா இவன் எப்படி இவ்வளவு இயல்பா இருக்க முடியும்?’ என்ற யோசனையுடன் சென்றவள் அந்த தளத்தின் வளைவில் எதிரில் வந்தவர்களைக் கண்டு சட்டென்று நின்றாள்.

வந்து கொண்டிருந்த இருவர் முகத்திலும் யாரையோ தேடிக் கொண்டிருப்பதற்கான பாவனை இருக்க, தூரத்தில் இருந்தே இவளை கவனித்து விட்டவர்கள், வேகமாய் இவளை நோக்கி வருவது போல் தோன்றியது அவளுக்கு. சட்டென்று பின்னே சென்றவள், அதிதீரனின் அறைக் கதவை வேகமாய் தட்டினாள்.

அவர்கள் வருவதற்குள் அவன் திறக்க வேண்டுமே என்ற படபடப்பு அவளுக்கு. அவளை சோதிக்கவென்றே அவன் கதவைத் திறக்காமல் இருக்க,

‘இதுக்கு மேல இங்க இருக்க முடியாது. இந்த வழியா போய்ட வேண்டியது தான்’ என்று யோசித்து வேகமாய் நகர போனவளை தடுத்திருந்தது திறந்த கதவின் ஒலி.

தன் அறைக்கு வெளியே நின்றிருந்தவளை புருவம் இடுங்கப் பார்த்தான் அதிதீரன்.

தன்னை நம்பாமல் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டவனுக்கு கோபம் அதிகமாகியது.

“நான் தான் அவ்வளவு தூரம் சொல்லிட்டு வந்தேனே? இன்னும் என் மேல சந்தேகமா?” என்றான் கடுமையான குரலில்.

“அது வந்து..! இல்ல.. நான்” என்றவளுக்கு வார்த்தைகள் தந்தியடிக்க, சட்டென்று அவனை அறைக்குள் தள்ளி, தானும் நுழைந்து கதவை அடைத்து விட்டாள்.

“ஹேய் என்ன பண்ற?” என்றான் கோபம் கலந்த குரலில்.

“பிளீஸ்!ஒரு பத்து நிமிஷம், நானே போய்டுறேன். யாருன்னு தெரியலை என்னை பாலோ பண்றாங்க” என்றாள் கசங்கிய குரலில்.

“வாட் டூ யு மீன்?” என்றான் புரியாமல்.

அவள் பதில் சொல்லும் முன் மீண்டும் அறைக் கதவு தட்டப்பட,

“பிளீஸ்…!” என்றாள். அவன் யோசனையுடன் கதவைத் திறக்க, உள்ளே வந்திருந்தனர் அந்த இருவரும்.

“பாஸ், நீங்க சொன்ன மாதிரி சரக்கை கை மாத்தி விட்டுட்டோம்” என்றனர் மெதுவாக. அதி தீரன் அவர்களை முறைக்க, அப்போது தான் உள்ளிருந்த அவளை கவனித்தனர்.

அவளோ அதிர்ச்சியில் அப்படியே நிற்க,

“சாரி பாஸ்” என்றனர் அவனின் கோபம் கண்டு.

சொடக்கிட்டு அவர்களை வெளியே செல்லுமாறு சைகையில் கூறியவன் சட்டென்று கதவை அடைத்தான்.

‘அப்போ இவன் கடத்தல்காரனா?’ என்று எண்ணியவளுக்கு நெஞ்சாங்குழி முழுவதும் பயத்தில் உறைந்திருந்தது.

“என்ன?” என்றான் அதிகாரமாய்.

“இவங்க” என்றாள் புரியாமல்.

“என் ஆளுங்க தான்” என்றான் தெனாவெட்டாய்.

“இவங்க எதுக்காக என்னைத் துரத்தனும்?” என்றாள் கோபமாய்.

“இவங்க உன்னைத் துரத்துனத்தை நீ பார்த்தியா? எப்பவுமே ஒரிஜினல் எது டூப்பிளிகேட் எதுன்னு உன்னால கண்டு பிடிக்கவே முடியாதா? உன்னைத் துரத்துனவங்க என்கிட்ட எதுக்கு பேசிட்டு போகணும். நீ தான் தேவைன்னா இந்நேரம் உன்னைத்தான அவங்க இங்க இருந்து தூக்கிட்டு போயிருக்கனும்?” என்றான்.

‘ஆமால்ல’ என்று உள்ளுக்குள் எண்ணியவளுக்கு தன்னைத் துரத்தியது யார் என்று மட்டும் புரியவில்லை.

“சரக்கு அது இதுன்னு பேசுனிங்களே..! அப்போ நீங்க இல்லீகல் பிஸ்னஸ் பண்றிங்களா?” என்றாள்.

“ஆமாம்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்?” என்றான் தெனாவெட்டாய்.

“நான் போய் இப்போ நடந்ததை சொல்லிட்டா என்ன பண்ணுவ?” என்றாள் கோபமாய்.

“யாரு நீ? உன்கிட்ட தப்பா நடந்துகிட்டவனையே உன்னால ஒன்னும் பண்ண முடியலை. இதுல என்னை காட்டிக் குடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்ப?” என்றான் நக்கலுடன்.

“பார்க்கத்தான் யோக்கியன் மாதிரி, செய்றது எல்லாம் அயோக்கியத்தனம்” என்றாள் வெறுப்புடன்.

“என் ரூம்க்கே வந்து என்னைப் பத்தி பேச உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும். நீ பொண்ணா போயிட்டன்ற ஒரே காரணத்துக்காகத் தான் அமைதியா இருக்கேன். இல்ல அன்னைக்கு மாதிரி முத்தக் காட்சி வேணுமா?” என்றான் அதிதீரன்.

“பொறுக்கி” என்றாள் வெறுப்பாய்.

“இந்த பொறுக்கியைத் தேடி நீங்க தான் வந்ததா ஞாபகம்” என்றான் நக்கல் சிரிப்புடன்.

“ச்சை..! மனுஷி பேசுவாளா உன்கிட்ட” என்றவள் சட்டென்று அந்த அறையை விட்டு வெளியேறப் போக, அவளின் கையைப் பிடித்தவன்..

“இன்னொரு தடவை என் கண்ணுல பட்டுடாத. மீறி உன்னைப் பார்த்தேன் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை” என்றான் அவளின் இதழ்களைப் பார்த்தபடி.

“ஏய்” என்று நீட்டிய அவளின் விரலை மடக்கியவன்,

“எவ்வளவு சீக்கிரம் கிளம்புறியோ கிளம்பிடு. அது தான் உனக்கு நல்லது”  என்றான்.

“முடியாதுன்னு சொன்னா?” என்றாள் எதிர் பார்வை பார்த்தபடி.

“எனக்கொரு பிரச்சனையும் இல்லை” என்றவன் தன் சட்டையின் முதல் இரண்டு பட்டன்களையும் கழற்ற, அவன் செய்கையில் அதிர்ந்தவள் வேகமாய் அவன் அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.