தன்னையே பார்த்துக் கொண்டிருந்த நண்பனைக் கண்டும் காணாதவன் போல், உன் பார்வையெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்ற பாவனையில் வேடிக்கை பார்த்திருந்தான் அதிதீரன்.
நண்பனின் குற்றச்சாட்டில் திரும்பி அவனைப் பார்த்தவன், எதுவும் சொல்லாமல் மீண்டும் முகத்தை திருப்பிக் கொள்ள, விவேக்கிற்கு எரிச்சல் வந்தது தான் மிச்சம்.
“உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் அதி. நீ என்னடான்னா யாரையோ பார்க்குற மாதிரி பார்த்து வைக்கிற? இதெல்லாம் தெரிஞ்சு தான் பண்றியா? ஏன்னா எங்களுக்குத் தெரிஞ்ச அதிதீரன் நீ இல்லையே? நாங்க எல்லாரும் எவ்ளோ ஷாக் ஆகியிருக்கோம்னு தெரியுதா உனக்கு?” என்றான் கோபமாய்.
“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு மூச்சு விடாம கத்திட்டு இருக்க விவேக்” என்று நிதானமாய் கேட்டவனை வெட்டவா? குத்தவா? என்பதைப் போல் பார்த்து வைத்தான் விவேக்.
அவன் அறிந்த அதிதீரன் இவன் இல்லையே. ஆனால் இன்று அவன் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்திருந்த நண்பர்களுக்கு அவன் நடந்து கொண்ட விதத்தை நம்ப முடியவில்லை.
“ஜஸ்ட் ஒரு சிங்கிள் கிஸ்..அதுக்கு இப்படி ஒரு அக்கப்போரா?” என்றான் அதிதீரன் கேஷுவலாக.
“எதே..! ஜஸ்ட் ஒரு கிஸ்ஸா? இல்ல எனக்கு புரியலை அதி. நிஜமாவே இது நீதானா? இல்ல உனக்குள்ள ஆவி ஏதும் புகுந்திடுச்சா?” என்றான் விவேக் புரியாத பாவனையுடன்.
“சாட்சாத் அதே அதிதீரன் தான். அதுல உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றான்.
“அப்போ ஏன் அப்படி நடந்துகிட்ட?”
“ஏன்னா? என்னவோ தெரியலை, அந்த பொண்ணை பார்த்த உடனே பிடிச்சிருந்தது. அதான் கிஸ் பண்ணேன்” என்று சாவகாசமாய் சொன்னவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் விவேக்.
“என்னடா சொல்ற?”
“இப்போ ஏன் நீ இவ்ளோ ஷாக் ஆகுற விவேக். ஜஸ்ட் லீவ் இட்” என்றான்.
“இது தப்பு அதி. அந்த பொண்ணுக்குத் தான் ஏற்கனவே லவ்வர் இருக்கானே?” என்று விவேக் கேட்க,
“சோ வாட் ? இருந்துட்டு போறான்.. யாரு வேண்டாம்னு சொன்னா? லவ்வர் தான, புருஷன் இல்லையே? ஜஸ்ட் ட்ரை பண்ணி பார்ப்போம். கிடைச்சா லக். இல்லைன்னா பேட் லக். எனக்கில்லை, அந்த பொண்ணுக்குத் தான்” என்று தெனாவெட்டாய் கூறியவனை புரியாமல் பார்த்திருந்தான் விவேக். நிஜமாவே தன் நண்பன் தானா என்ற சந்தேகம் இப்போது அவனுக்குள் தீவிரமாய் எழுந்தது.
“டேய்..! போதும் ரொம்ப ஓவரா முறைக்காத? வா டைனிங் ஏரியா போவோம்” என்றவனை பயப் பார்வை பார்த்தான்.
விவேக்கின் பார்வையை வைத்தே அவன் நினைப்பதை புரிந்து கொண்டவன்,”எஸ் நீ நினைக்கிறது கரெக்ட் தான். அவளோட பிரண்ட்ஸ் எல்லாம் இப்போ டைனிங் ஏரியா தான் போயிருக்காங்க. எப்படியும் அவளும் அங்க தான் இருப்பா. இந்த சான்சை எப்படி மிஸ் பண்ண சொல்ற?” என்று கண்ணடித்தபடி கூறியவனை முறைத்தான் விவேக். முறைத்தாலும் அவன் உடன் செல்வதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.
‘எல்லாம் என் நேரம். நிம்மதியைத் தேடி ஒரு ட்ரிப் வந்தா இருக்குற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போய்டும் போல இவனால’ என்று புலம்பிக் கொண்டே அவனுடன் சென்றான் விவேக்.
டைனிங் ஏரியாவில் தோழிகள் மூவரும் உணவருந்திக் கொண்டிருக்க, தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டவன் அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகிலேயே சென்று அமர்ந்தான்.
‘சரித்தான் இப்போ என்ன பஞ்சாயத்தைக் கூட்டப் போறானோ தெரியலையே?’ என்று எண்ணிய விவேக்கும் வேகமாய் வந்து அவனுடன் அமர, நண்பனைப் பார்த்து மார்க்கமாய் சிரித்து வைத்தான் அதிதீரன்.
“ஹாய் ஹேண்ட்சம்! நீங்க எங்க இங்க?” என்றாள் நந்திதா ஒரு விதமான எதிர்பார்ப்புடன். தோழியின் குரலில் அப்போது தான் அவனை கவனித்தாள் வெண்மொழி. அதுவரை சாதரணமாய் இருந்தவளின் முகம் சட்டென்று வெறுப்பைப் பூசிக் கொண்டது. அவளின் முக மாற்றத்தை அவனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
“ஆமால்ல..! அது, உங்களைப் பார்த்த ஒரு எக்சைட்மென்ட்ல கேட்டுட்டேன். எனிவே தேங்க்ஸ் பார் யுவர் டைம்லி ஹெல்ப் ஹேண்ட்சம்” என்றாள் நந்திதா.
“இன்னும் எத்தனை தடவை தான் தேங்க்ஸ் சொல்லுவிங்க? இப்படியான ஆட்கள் எல்லா இடத்துலையும் இருக்காங்க. இங்க கப்பல்ல கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கு. அது தெரிஞ்சும் இப்படி சில நாய்கள் இருக்கத்தான் செய்யுது” என்றான் அதிதீரன் கோபமாய்.
“ம்க்கும்..!! சாத்தான் வேதமெல்லாம் ஓதுது நந்தி” என்றாள் வெண்மொழி நக்கலாக. கையில் இருந்த போர்க்கை வைத்து அவள் உணவை குத்திய விதத்தில் அவள் அருகில் சென்றால் அவனையும் குத்தி விடும் ஆத்திரம் தெரிந்தது அவள் கண்களில். இது எதுவும் அவன் கண்களில் இருந்து தப்பவில்லை.
“ஓதுறது வேதம்தான்னு முடிவானதுக்கு அப்பறம் அதை சாத்தான் ஓதுனா என்ன? இல்ல வேற யாரும் ஓதுனா என்ன? இந்த உலகத்துல அறிவுரை சொல்ற தகுதி எந்த ஒரு மனுஷனுக்கும் இல்லை. ஏன்னா? எல்லாரும் ஒரு வகையில கடவுள்னா இன்னொரு வகையில சாத்தான் தான்” என்றவன் நிதானமாய் தன் உணவை சாப்பிட, வெண்மொழியோ அதிர்ந்து போய் பார்த்திருந்தாள்.
“வொயிட்டி அவர் உன்கிட்ட நடந்துகிட்ட விதம் சரின்னு நான் சொல்ல வரலை. ஆனா அதுக்காக அந்த தேர்ட்ரேட் பொறுக்கி கூட இவரை கம்பேர் பண்ணி பேசாத. அவன் என்ன பண்ணான்னு தெரியுமா உனக்கு? இவர் மட்டும் சரியா அங்க வரலைன்னா என்ன ஆகியிருக்கும்” என்றாள் நந்திதா.
“ஒன்னும் ஆகியிருக்காது. நாம ஒன்னும் அத்துவான காட்டுல இல்லை. இந்த கப்பல் முழுக்க ஆட்கள் இருக்காங்க. எல்லா இடத்துலையும் கேமரா இருக்கு. தப்பு பண்ற தைரியம் யாருக்கும் வராது. அப்படி தப்பு பண்ணாலும் அதுல இருந்து ஈசியா தப்பிக்க முடியாது” என்றாள்.
“தப்பிக்கிறது இருக்கட்டும். ஒரு தப்பு நடந்து முடிஞ்சதுக்கு அப்பறம் என்ன நடந்தாலும் பாதிப்பு என்னமோ நமக்குத் தான?” என்றாள் டயானா.
“சரி சரி இப்போ எதுக்கு முடிஞ்சதைப் பத்தி பேசி டென்ஷன் ஆகணும். பீல் பிரி” என்ற விவேக், நண்பனை முறைத்தான்.
‘எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை’ என்பதைப் போல் தோள்களைக் குலுக்கியவன், சாப்பிட்டவரை போதும் என்று எழுந்து சென்று விட்டான்.
“பாரு வொயிட்டி உன்னால தான் அந்த ப்ரோ சாப்பிடாம போய்ட்டாரு” என்ற டயானாவை எரிச்சலுடன் பார்த்தவள், சட்டென்று எழுந்து சென்று விட்டாள்.
“நம்ம வொயிட்டியா இது? இவளுக்கு இப்படியெல்லாம் கோபம் வருமா நந்தி? நமக்கு தெரிஞ்ச வரைக்கும் இவ ரொம்ப சாப்ட் பெர்சன் தான?” என்றாள்.
“அவளைப் பத்தித்தான் நமக்குத் தெரியுமே? அப்பறம் அந்த ஹேண்ட்சமும் அப்படி நடந்திருக்க வேண்டாம். அவளுக்கு ஒரு தடவை ஒருத்தரை பிடிக்காம போயிடுச்சுன்னா, அவங்க நல்லதே பண்ணாலும் தப்பாத்தான் பார்ப்பா. இந்த குணத்தை எப்பத்தான் மாத்திக்கப் போறாளோ தெரியலையே?” என்ற நந்திதாவுக்கும் வெண்மொழி குறித்தான கவலை மனதிற்குள் இருக்கத்தான் செய்தது.
அதற்கடுத்து வந்த மூன்று நாட்களும் அவர்கள் கண்ணில் அதிதீரன் படவேயில்லை. நடந்ததை மனம் மறக்காவிட்டாலும் அப்போதைக்கு அதை தள்ளி வைத்திருந்தாள் வெண்மொழி.
நந்திதா கூட அதிதீரனைப் பற்றி பல முறை கேட்டுவிட்டாள். அதற்கு வெண்மொழியிடருந்து ஒரு முறைப்பு மட்டும் வரும். வேறு எந்த விதமான எதிர்வினையும் இருக்காது அவளிடம்.
கப்பல் இப்போது அந்தமான் கடல் வழியாக மலேசியாவின் லங்காவி தீவு நோக்கி சென்று கொண்டிருந்தது.
அன்று இரவு கப்பலின் அந்த பிரம்மாண்ட தியேட்டரில் சர்வதேச கலைஞர்களின் மேஜிக் ஷோ நடந்து கொண்டிருந்தது. அரங்கத்தில் இருந்த மொத்த பார்வையாளர்களின் கவனமும் மேடையில் தான் இருந்தது. வெண்மொழியின் கவனமும் நிகழ்ச்சியைப் பார்ப்பதில் தான் இருந்தது. அவள் அருகில் இருந்த தாரிக்கோ அவளை ஒரு பார்வையும், நிகழ்ச்சியை ஒரு பார்வையும் என்று மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் செயலில் கவனம் கலைந்தவள்,
“இப்போ உனக்கு என்ன பிராப்ளம் தாரிக்?” என்றாள் பொறுமையிழந்து.
“நீ ஷோவை ரசிக்கிற! நான் உன்னை ரசிக்கிறேன்” என்று புன்னகையுடன் கூறியவனை முறைக்க முயன்று தோற்று சிரித்திருந்தாள்.
“வரவர நீ ஆளே சரியில்லையே?” என்றாள் மென் புன்னகையுடன்.
“எவனாது இப்படி லவ்வரோட வந்து ஷோவை ‘ஆ’ன்னு பார்ப்பானா? நீ ஷோ பாரு, நான் உன்னை பார்க்குறேன்” என்று கன்னத்தில் கை வைத்து அவளைப் பார்த்தபடியே சொல்ல,
“சரித்தான், உனக்கு லவ் ஓவர் பிளோ ஆகுது தாரிக்” என்றவளுக்குள்ளும் அவனின் ரசனை கண்டு மெல்லிய தென்றல் வீசத்தான் செய்தது.
“இன்னும் எத்தனை நாளைக்கு பேபி இப்படி சைவக் காதல் பண்றது. எனக்கு இப்பவே உன்னை அப்படியே அள்ளி எடுத்துக்கணும் போல இருக்கு” என்றவனின் வார்த்தைகளில் அவனை முறைத்தாள் வெண்மொழி.
“பேபி”
“கொஞ்சம் நேரம் தத்துப் பித்துன்னு உளராம ஷோ பார்க்க விடு தாரிக்” என்றாள் பொறுமையாக.
“சாரி பேபி, நீ பாரு” என்றவனுக்குள் முதன் முறையாக எரிச்சல் தோன்றியிருந்தது. அதே கடுப்புடன் அவனும் வேண்டா வெறுப்பாய் ஷோவைப் பார்க்க ஆரம்பித்தான்.