அத்தியாயம் 19 :

“கிளம்பியாச்சா?” என்றவனின் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள். குளித்து வேறு உடை உடுத்தியிருந்தாள் அவ்வளவே. வேறு எதுவும் பண்ணத் தோன்றாமல் கண்ணாடியில் தன் முகத்தை வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் வருகை பதட்டத்தை தான் அதிகரித்திருந்தது.

அவளை ஒரு முறை ஆராய்ந்தவன்,

“போகலாமா?” என்றவனிடன்,

“எனக்கு வெளிய போக பிடிக்கலை” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“வெளிய வர பிடிக்கலையா? இல்லை என் கூட வர பிடிக்கலையா?” என்றான்.

“அ..அது” என்று தயங்கியவளை,

“ஏன் உன் பிரண்ட்ஸ் கூட நீ வெளிய போனதே இல்லையா? அப்படி நினைச்சு வா போகலாம்” என்றவனின் குரலுக்கும் அவள் அசையாமல் இருக்க,

“ஓகே டேக் கேர்” என்றபடி அவன் திரும்பி செல்ல முற்பட, பதட்டத்துடன் அவன் கையைப் பிடித்திருந்தாள் மொழி. தீரன் ஒரு கேள்விப் பார்வையை அவள் மீதும் தன் கைகளைப் பிடித்திருந்த அவள் கைகள் மீதும் வைக்க,

“நா..நான் வர்றேன்” என்றாள் சோர்வாய்.

“பட் ஒன் கண்டிஷன்” என்றவனை அவள் கேள்வியாய் பார்க்க,

“இப்படி அழுது வடிஞ்சுகிட்டு வரக் கூடாது. அந்த ஒரு கண்டிஷன் மட்டும் தான்” என்றான்.

“இப் யு டோன்ட் மைன்ட்” என்றவன் அந்த அறையில் இருந்த ப்ரிட்ஜைத் திறந்து அவள் எடுத்த அதே கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை எடுக்க, அவளோ முகத்தில் எந்த பதட்டமும் இன்றி நிதானமாக இருந்தாள். அதைக்  குறித்துக் கொண்டான் தீரன். அவளறியாமல் அந்த பிரிட்ஜை நோட்டம் விட, அதே போல் நான்கைந்து பாட்டில்கள் இருந்தது. யோசனையுடன் புருவத்தை நெரித்தவன், அதை மீண்டும் எடுத்த இடத்தில் வைக்க,

“குடிங்க! அந்த ஜூஸ் நல்லா இருக்கும்” என்றாள் அமைதியான குரலில்.

“இசிட்..! உனக்கு பிடிக்குமா?”

“ம்ம்” என்றாள்.

“இட்ஸ் ஓகே. இப்போ வேண்டாம். உன்னை டிராப் பண்ண வரும் போது டேஸ்ட் பார்த்துக்கிறேன்” என்றவன்,

“உன் கேமராவையும் எடுத்துக்கோ மொழி” என்றான்.

அவனை நோக்கி விரிந்த அவள் பார்வையில் ‘உனக்கு எப்படி தெரியும்?’ என்ற கேள்வி தொக்கி நின்றது.

“அதான் உன்னோட ட்ரிப்ல பார்த்தேனே. கேமராவும் கையுமா தான இருந்த. அதான் சொன்னேன்” என்றான்.

“டாடிக்கு பிடிக்காது” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“நான் உன்னை எடுத்துக்கோன்னு சொன்னேன்” என்றான் மீண்டும். ஏனோ அவன் குரல் அழுத்தமாய் ஒலிக்கும் சமயங்களில் எல்லாம், அவளையும் மீறி அவன் சொல்கிற விஷயத்தை செய்து விடுகிறாள் மொழி. கேமராவை எடுத்துக் கொண்டவளை மெச்சுதல் பார்வை பார்த்துக் கொண்டான்.

காரில் தான் அழைத்து செல்வான் என்று அவள் நினைத்திருக்க, வெளியே நின்ற புல்லட்டைப் பார்த்து திகைத்தாள்.

“ஏன் இவ்ளோ ஷாக்?” என்றான்.

“இல்ல..பைக்ல எப்படி? யாராவது பார்த்தா?” என்று தயங்கினாள்.

“பார்த்தா பார்க்கட்டும். நான் என்ன உன்னை யாருக்கும் தெரியாம இழுத்துட்டா ஓடுறேன். பதுங்கி பதுங்கி போக, ஏறு மொழி”  என்றவனின் குரலில் சிறிது கோபம் எட்டிப் பார்த்தது.

அவள் வீட்டினுள் பார்க்க,

“அங்கென்ன பார்வை? அதெல்லாம் உங்கப்பாவுக்கு தெரியும். எல்லாம் சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டு தான் கூப்பிடுறேன். சந்தேகமா இருந்தா போய் கேட்டுட்டு வா” என்றான். இப்போது நன்றாகவே எரிச்சல் பட்டான்.

“இல்ல..சாரி” என்றவள் ஒரு தயக்கத்துடன் பின்னால் அமர, அவனின் எரிச்சல் கோபமெல்லாம்  இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்திருந்தது. கேமரா பேக்கை இருவருக்கும் நடுவில் வைத்து அமர்ந்திருந்தவளை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அந்த நெடுஞ்சாலையின் இரவு நேர பயணம், அவள் மனதை கொஞ்சம் இலகுவாக்கியிருந்தது.

சட்டென்று வண்டியை அவன் சிட்டிக்குள் விட,

“பசிக்குது மொழி. சாப்பிட்டு போகலாம்” என்றான்.

“அவுட்டர்லயே சாப்பிடலாமே. ஏன் சிட்டிக்குள்ள?” என்றவள் தலையை எந்த பக்கமும் திருப்பாமல் குனிந்து கொண்டாள். அவளின் ஒவ்வொரு மாற்றத்தையும் கவனித்தும் கவனியாதவன் போல் இருந்து கொண்டான்.

“மொழி, நீ இறங்குனா தான் நான் இறங்க முடியும்” என்றவனின் குரலில் மீண்டவள் அப்போது தான் கவனித்தாள் அவள் பேவரைட் பிரியாணி கடையின் முன்பு வண்டி நிற்பதை. இப்போது அவள் முகத்தில் ஒரு சிறு சந்தோசம்.

“இங்க நல்லா இருக்குமான்னு தெரியலை” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்,

“பிரியாணி இங்க சூப்பரா இருக்கும்” என்றாள் வேகமாய்.

“அப்படியா? நீ இங்க வந்து சாப்பிட்டிருக்கியா?” என்றவனை அவன் மனசாட்சி வியந்து பார்த்தது. உலக மகா நடிப்புடா சாமி என்பதைப் போல்.

சட்டென்று தன் எக்சைட்மென்ட்டை குறைத்தவள்,”பிரண்ட்ஸ் கூட அப்பப்போ வந்திருக்கேன்” என்றாள்.

“நீ சொன்னா சரித்தான்” என்றவன் முதன் முறையாக அந்த கடைக்கு செல்வதைப் போல் சென்றான்.

“இங்க இது நல்லா இருக்கும் அது நல்லா இருக்கும்” என்றபடி அவளே ஆர்டர் செய்ய, அவனோ அவளை வேடிக்கை மட்டும் பார்த்திருந்தான்.

“சாப்பிடுங்க, ஏன் என்னையவே பார்த்துட்டு இருக்கீங்க?” என்றவள் நிதானமாய் சாப்பிட, அவளைப் பார்த்தபடியே அவனும் திருப்தியாய் சாப்பிட்டு முடித்தான்.

“வேற எதுவும் வேணுமா மொழி?”

எதையோ கேட்க வந்தவள் பின் தயங்கியவளாய்,”இல்ல போதும்” என்றாள்.

“நீ வண்டிகிட்ட வெயிட் பண்ணு மொழி. நான் பில் பே பண்ணிட்டு வந்திடுறேன்” என்றான்.

“ம்ம்” என்றவள் ஒரு தயக்கத்துடன் வெளியே சென்று நிற்க, உள்ளிருந்த தீரனின் பார்வையோ வெளியே சுற்றுப் புறத்தை ஆராய்ந்தது. கண்களுக்கு எதுவும் சந்தேகமாய் தென்படவில்லை.

தீரன் வெளியே வரும் வரை மொழியும் பதட்டத்துடன் நிற்க, தீரன் அவளின் மனநிலையை கண்டு கொண்டான்.

“கிளம்பலாமா?” என்றவுடன் அவள் வேகமாய் தலையசைக்க,

“இதை மறந்துட்டியே?” என்றபடி அவள் கைகளில் குல்பியை திணித்திருந்தான்.

சிறு பிள்ளை போல் கண்கள் மின்ன குல்பியை பார்த்தவளைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் தீரன். பின்னால் அமர்ந்து சாப்பிட்டபடி வந்தவளுக்கு அதை சாப்பிட்டு முடிக்கும் வரை சுற்றுப் புறம் எதுவும் உரைக்கவில்லை.

“ஒரு குல்பி ஐஸ்ல இவளை கரெக்ட் பண்ணிடலாம் போலயே?” என்று எண்ணியவன் அப்போது தான் கவனித்தான் தங்களை ஒரு கார் பாலோ செய்வதை.

“பெர்பெக்ட்” என்று நினைத்துக் கொண்டவன், வண்டியின் வேகத்தை குறைக்க,

“என்னாச்சு?” என்றாள்.

“ஒன்னும் ஆகலை. குல்பி சாப்பிட்டா பத்தாது. அதை உருப்படியா சாப்பிடனும்” என்றவன் வாட்டர் பாட்டிலை நீட்ட, வாங்கி கைகளைக் கழுவிக் கொண்டவள்,முகத்தையும் கழுவிக் கொண்டாள்.

“தேங்க்ஸ்” என்றாள். அவன் பார்வையோ காரையும் கார் நம்பரையும் தான் நோட் செய்து கொண்டிருந்தது.

ஈசிஆர் சாலையின் இரவு நேரப் பயணத்தை ரசித்தபடி அவள் இருக்க, தங்களுக்கு பின்னால் வரும் காரை கவனத்தில் கொண்டபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

இரவு நேரத்தில் அந்த கடற்கரையில் அலைகளின் பேரிரைச்சல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் மனிதத் தலைகள்.

மணலில் கால் புதைய நடந்து கொண்டிருந்தவளோ தீரன் ஒருவன் இருப்பதையே மறந்து தன்னுடைய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அந்த பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் கடல் வெள்ளி அலைகளாய் மின்ன, ஒவ்வொன்றையும் தன் கேமராவுக்குள் அடக்கிக் கொண்டிருந்தாள்.

கடலில் கால் நனைத்து, அலைகளோடு விளையாடி, ரசனைகளை புகைபடமாய் பதிவு செய்து தன் கூட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தவளைத் தான் ரசித்துக் கொண்டிருந்தான் அதிதீரன்.

சட்டென்று அவனைப் பார்த்தவள், அவன் ஏதோ நினைவில் சிகையைக் கோதியபடி மென்னகையுடன் இருந்தவனை ஒரு முனைப்பில் புகைப்படம் எடுத்து விட்டாள் மொழி.

அவளின் அருகில் சென்றவன், கேமராவை நோக்கி கையை நீட்ட,

“எதுக்கு?” என்றவள் மென்று முழுங்கினாள்.

“இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு. லைக் யு ஆல்சோ. அப்படியே உன்னையும் கடலையும் சேர்த்து ஸ்டில் எடுத்துத் தர்றேன்” என்றவனிடத்தில் கேமராவை நீட்டியவள் அவன் சொன்ன மாதிரி நிற்க, விடாமல் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தவனை சந்தேகமாய் பார்த்தாள்.

“என்னாச்சு?” என்றான்.

“உங்களுக்கு நிஜமாவே கேமராவ யூஸ் பண்ணத் தெரியுமா?” என்றவளை முறைத்தவன்,

“அடிங்க” என்று அவன் துரத்தவும் அவனிடம் அகப்படாமல் இருக்க ஓடியவள், சட்டென்று யார் மீதோ மோதி விழப் போக, அவளை விடாமல் பிடித்தவனின் கரங்களை சட்டென்று தட்டி விட்டவளின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

“மொழி வாட் ஹேப்பன்? யார் அது?” என்றான் தீரன்.

“தெ..தெரியலை” என்றாள்.

“இட்ஸ் ஓகே  வா அப்படி உட்காரலாம்” என்றான்.

“இல்ல நாம கிளம்பலாம்” என்றாள் பட்டென்று.

“என்னாச்சு?” என்றவனின் பார்வை சுற்றுப் புறத்தை ஆராய்ந்தது.

“ஒண்ணுமில்லை. இப்போ கிளம்பினா சரியா இருக்கும்” என்றாள்.

“ஆர் யு ஷ்யர்” என்றான்.

“ம்ம்” என்றவள் இப்போது அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். யோசனையுடன் பார்த்தவன்,

“கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாமா?” என்றவனிடத்தில் மறுக்கத் தோன்றவில்லை அவளுக்கு.

அவள் அமைதியாய் கடலையே வெறித்துக் கொண்டிருக்க,

“இப்போ எப்படி பீல் பண்ற மொழி?” என்றவனைத் திரும்பிப் பார்த்தவள் பதில் ஏதும் பேசாமல் மீண்டும் கடலையே பார்க்க,

“ஒரு விஷயம் கேட்கணும் மொழி” என்றவன் முகத்தைப் பார்த்தவள்,

“என்கிட்ட என்ன கேட்கணும்?” என்றாள்.

“அன்னைக்கு கார்ல இருந்து இறங்கி ஹோட்டலுக்குள்ள போகும் போது கேஷுவலா போனியே எப்படி? கிட்நாப் பண்ணிட்டாங்கன்ற பயமே இல்லாம?” என்றான் கேள்வியாய்.

“அப்போ என்னை கிட்நாப் பண்ணதே எனக்குத் தெரியாதே. இன்பேக்ட் டாடி சொல்லவும் தான் நான் அங்க போனேன்” என்றவளைக் கண்டு அதிர்வது தீரனின் முறையானது.

“வாட்? அங்கிள் சொன்னாரா?” என்றான் புரியாமல்.

“எஸ், கார்ல ஏறுன உடனே டிரைவர் காரை எடுத்துட்டார். நான் டென்ஷன் ஆகி கத்தவும், அவர் போனை நீட்டினார். வாங்கி பேசுனா, டாடி தான் பேசுனார். உங்களுக்கு வேலை இருக்குறதாவும், டாடி எப்பவும் தங்குற ஹோட்டல்ல ரூம் அரேன்ஜ் பண்ணியிருக்கறதாகவும் சொன்னார். நீங்க வேலையை முடிச்சுட்டு வந்து கூட்டிட்டு வருவிங்கன்னு சொன்னார். அதனால தான் கேஷுவலா இறங்கி போனேன். ஆனா எல்லாம் நடந்த பிறகு தான் புரியுது பேசினது டாடி இல்லைன்னு” என்றவளுக்கு கண்கள் கலங்க,

“இதையேன் என்கிட்ட நீ சொல்லலை மொழி?”

“சொல்லக் கூடிய நிலையில நான் இல்லை. நீங்களும் இப்போ தான என்கிட்ட கேட்டிங்க?” என்றாள்.

“சோ எல்லாத்தையும் நான் கேட்டா மட்டும் தான் சொல்லுவ இல்லையா?” என்றவனைத் திரும்பி ஆழ்ந்து பார்த்தவள்,

“சோ நீங்களும் என்னை கூட்டிட்டு வந்தது விசாரணைக்குத் தான் இல்லையா?” என்றாள் விரக்தியுடன்.

“என்னைப் பார்த்தா உன்னை விசாரணை பண்ண கூட்டிட்டு வந்த மாதிரியா தெரியுது. விசாரிக்க இவ்வளவு தூரம் கூட்டிட்டு வர வேண்டிய அவசியம் என்ன மொழி? சோ நான் உன்னை விசாரிப்பேன்னு உனக்கு முன்னமே தெரிஞ்சிருக்கு” என்றான். அவன் குரலில் ஆற்றாமையும் கோபமும் கலந்திருந்தது.

அவள் எதுவும் பேசாமல் மௌனத்தை தத்தெடுத்துக் கொள்ள, சட்டென்று எழுந்து சற்று தூரம் சென்றவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள அரும்பாடுபட்டான்.

அந்த தனிமையும் இருளும் அவளுக்கு ஒரு வித அச்சத்தை கொடுக்க, எழுந்து சென்று தீரனின் அருகில் நின்று கொண்டாள்.

“நமக்கு இன்னும் பிப்டீன் டேய்ஸ்ல மேரேஜ்” என்றான்.

“தெரியும் வீட்ல சொன்னாங்க” என்றாள். அவள் குரலில் இருந்த உணர்வை சத்தியமாய் தீரனுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை.

“உனக்கு இதுல ஓகே தானே மொழி” என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.

“நான் என்ன நினைச்சாலும் கடைசியில வீட்ல என்ன டிசைட் பண்றாங்களோ அது தான் என் விஷயத்துல நடக்கும். இதுல எனக்கு ஓகேவா இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? தாரிக் விஷயம் தெரிஞ்சும் நீங்க இப்படி கேட்குறது தான் எனக்கு ஷாக்கிங்கா இருக்கு?” என்றாள்.

“போதும் நிறுத்துறியா?” என்று எறிந்து விழுந்தவன்,

“நீ அவனை லவ் பண்ணவே இல்லைன்னு ஏற்கனவே கன்பார்ம் பண்ணிட்டேன். நீ உன் வீட்ல இருக்குறவங்கள ஏமாத்தலாம். என்னையும் அதே மாதிரி ஏமாத்த பார்க்காத மொழி” என்றான்.

“இல்ல..! நிஜமாவே நானும் தாரிக்கும்” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே,

“வில் யு ஜஸ்ட் ஸ்டாப் இட் திஸ் நான்சென்ஸ்” என்று தீரன் கத்த அப்படியே வாயை மூடிக் கொண்டாள்.

“அவனோட காதல் கதைக்கு பின்னாடி இருக்குற ரீசன் எனக்குத் தெரியாதுன்னு இன்னமும் நினைச்சுட்டு இருக்கியா? என்னைப் பார்த்தா அந்த அளவுக்கு முட்டாளா தெரியுதா என்ன?” என்றான்.

“உங்களுக்கு வேற நல்ல சாய்ஸ்..ஐ மீன் நல்ல பொண்ணே கிடைப்பாங்க” என்றவளுக்கு காரணமே இன்றி மீண்டும் கண்கள் கலங்க, அதை சட்டென்று தனக்குள் மறைத்துக் கொண்டாள்.

“உங்க அட்வைஸ்க்கு ரொம்ப நன்றிங்க வெண்மொழி. நீங்க உங்க வீட்ல பார்த்திருக்க பையனே மேரேஜ் பண்ணிக்கோங்க. நான் என் வீட்ல பார்த்திருக்க பொண்ணையே மேரேஜ் பண்ணிக்கிறேன். எதுக்கு இந்த வேண்டாத பேச்செல்லாம் எனக்கு” என்றவன் முகத்தை மேலும் கடுமையாய் வைத்துக் கொண்டான்.

“நான் என்ன சொல்ல வரேன்னு” என்றவள் நிறுத்த,

“கிளம்பலாம் மொழி”  என்றவன் மேற்கொண்டு அவளிடம் எதுவும் பேசவில்லை.

தன் ஜெர்க்கினை அவளிடம் நீட்டியிருந்தான்.

“வேண்டாம்” என்றவளை முறைத்தவன்,

“போகும் போது குளிரும் போட்டுக்கோ” என்றான்.

ஜெர்க்கினை அணிந்து கொண்டவள்,”உங்களுக்கு குளிருமே?”  என்றாள்.

“ஆமா குளிரும். அதுக்கு என்ன செய்யலாம்? வேணும்னா கட்டிப் பிடிச்சு உட்கார்ந்து வாயேன்,குளிராது” என்று கடுப்புடன் சொன்னவனை அவள் முறைக்க,

‘வந்துட்டா இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேட்க’ என்று முனுமுனுத்தவனுடைய  கோபத்தில் வண்டி சீறிப் பாய்ந்தது. கண்ணாடி வழியாக அந்த கார் மீண்டும் வருகிறதா என்று பார்க்க, அவன் கணிப்பை பொய்யாக்காமல் இப்போதும் அவர்களைத் தொடர்ந்து தான் வந்து கொண்டிருந்தது கார்.

“எதுக்கு இவ்வளவு ஸ்பீடா போறீங்க?” என்றாள் பயத்துடன்.

“ம்ம்..! வேண்டுதல்மா..!” என்றவன் வேகத்தைக் குறைக்க, அந்த காரும் வேகத்தை குறைத்திருந்தது.

‘தங்களுக்கு நடுவில் இருந்த கேமரா பேக்கை எடுத்து முன்னால் வைத்துக் கொண்டவன்,

“என்ன பண்றிங்க?” என்றவளை திரும்பி முறைத்தவன், அவளின் கைகளை பிடித்து தன் இடுப்போடு சுற்றிக் கொள்ள, அவளோ சட்டென்று கைகளை இழுத்தாள்.

“அம்மா தாயே? உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன். ஏன் நீ இப்படி என்னை பிடிச்சதே இல்லையா? காரணமாத்தான் சொல்றேன். கொஞ்சம் ஒட்டி வந்து உட்காரு” என்றான்.

அப்போதும் அவள் பட்டும் படாமல் நகர்ந்து வர,

“ஸ்பீடா தான் போகப் போறேன். அதுக்கு மேல உன் இஷ்ட்டம்” என்றவன் வண்டியை முறுக்க, தன்னால் அவன் முதுகோடு ஓட்டிப் போனாள்.

“என்னாச்சு? ஏன் டென்ஷனா இருக்கீங்க?” என்றவளின் குரல் அவனுக்கு கேட்கவே இல்லை. அங்கு எடுத்தவன் வண்டியை வீட்டில் வந்து தான் நிறுத்தியிருந்தான். தன்னைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவளின் வெம்மையை அப்போது தான் உணர்ந்தான் தனக்குள். இருந்த பதட்டத்தில் இதை கவனிக்க அவனுக்கு எங்கிருந்தது நேரம்.

அவளின் சில்லிட்ட கரங்களைப் பிடித்தவன்,“மொழி வீடு வந்திருச்சு” என்றான்.

சட்டென்று அவனிடமிருந்து விலகியவள், “எதுக்கு இப்படி ஸ்பீடா டிரைவ் பண்ணிங்க?” என்றாள் கோபமாய்.

“சும்மா ஒரு ரைட் போகனும் போல இருந்தது அதான்” என்று சமாளித்தவன், அவளின் கேமரா பேக்கை அவளிடம் கொடுத்தான்.

“தேங்க்ஸ்” என்றவளின் கையைப் பிடித்தவன்,

“இந்த கேமராவை எனக்கு யூஸ் பண்ண தெரியுமான்னு கேட்ட தான? நிஜமாவே உனக்கு இதுல இன்ட்ரஸ்ட் இருக்குன்னா, ஒரு போட்டோவை வச்சே அதை எடுத்தவங்களோட மனநிலையை நீ உணர முடியும். கேமராவை யூஸ் பண்ணத் தெரியாதவன் எடுத்த போட்டோஸ்ல இருந்து நீ என்ன பீல் பண்றன்னு நானும் பார்க்குறேன். குட் நைட்” என்றவன் அவளே எதிர்பார்க்கா நேரம் அவளின் முகத்தைப் பற்றி நெற்றியில் முத்தமிட்டிருந்தான்.

அவள் அப்படியே நிற்க,

“உள்ள போமா” என்றவன் அவள் வீட்டிற்குள் சென்றதை உறுதிப் படுத்திக் கொண்டு மீண்டும் வந்த வழியே திரும்பியிருந்தான். வந்தவன் பைக்கை மறைவில் நிறுத்தி அந்த காருக்காக காத்திருந்தான். வெகு நேரம் காத்திருந்தும் அந்த கார் வராததில் கோபமடைந்தவன்,

“ஷிட்” என்று ஆத்திரத்தில் புல்லட் சீட்டினை தட்டப் போன நேரம் அந்த கார் சரியாக வந்தது.

வந்த கார் சரியாக ராஜ ராஜன் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டிற்குள் நுழைய அதிர்ந்து நின்றான் தீரன்.