“நாம எதுக்கு போனோம்? கப்பலை சுத்திப் பார்க்கவா போனோம்? நாம சீக்ரெட் மிஷனுக்கு போனோம். அதுவும் ட்ரக்ஸ் கேஸ் விஷயமா. அதுல சம்பந்தப்பட்ட விமல் அங்க இருந்திருக்கான். நாம பிடிச்ச கும்பல் அங்க இருந்திருக்கு. மொழியும் அவள் பிரண்ட்சும் அங்க இருந்திருக்காங்க. நாமளும் அங்க இருந்திருக்கோம். அப்போ இந்த கருப்பு ஆடும் அங்க இருந்திருக்கு? எல்லா பாயிண்ட்டும் ஒரே புள்ளியில தான் ஜாயிண்ட் ஆகியிருக்கு. கொஞ்சம் இழுத்துப் பிடிச்சு இணைச்சா போதும். பெர்பெக்ட் ரூட் கிடைச்சுடும்” என்றான் தீரன்.
“வெல்டன் அதி” என்றான் விவேக்.
“ஷிப்ல கலெக்ட் பண்ண எல்லா புட்டேஜையும் பிளே பண்ணு விவேக். அன்னைக்கு தன்னை யாரோ துரத்துறா மொழி என்னோட ரூம்குள்ள வந்தா. பின்னாடியே நம்ம ஆட்கள் வரவும் அவ தான் தப்பா புரிஞ்சுகிட்டான்னு நினைச்சேன். பட் அங்கயும் ஏதோ நடந்திருக்கு. அது யாருன்னு நமக்குத் தெரிய வேண்டாம்?” என்றான் தீரன்.
“இவ்வளவு நடந்திருக்கு, என்கிட்ட சொல்லவே இல்லை அதி?” என்று விவேக் அவனை முறைக்க,
“அப்பறம் முறைக்கலாம் மச்சான். இப்போ வேலையைப் பார்ப்போமா? சிசிடிவி இருக்குறது நம்ம வேலையை எவ்வளவு மிச்சம் பண்ணுது பார்த்தியா?” என்றபடி மீண்டும் கவனத்தை அதில் வைத்தான் தீரன்.
அன்றைய நாள்,தேதி நேரத்திற்கான பதிவுகளை ஒன்று விடாமல் பார்க்க, எதுவும் இருப்பது போல் தெரியவில்லை.
ஒரே ஒரு பதிவில் மொழியை யாரோ பின்னிருந்து வாயைப் பொத்துவது போல் தெரிய அதிலும் உருவம் தெரியவில்லை. மொழியை கத்த விடாமல் வாயோடு அழுத்தி மூடியிருந்த கைகள் மட்டும் தான் தெரிந்தது. அதுவும் மங்கிய ஒளியில் தெளிவாக இல்லை. அடுத்த நிமிடம் மின்சாரம் துண்டிக்கப் பட்டிருந்ததால், அதற்கடுத்த சில நிமிடங்களில் பதிவுகள் எதுவும் இல்லை.
“எல்லாமே வெல் பிளான் அதி” என்றான் விவேக்.
“சில நிமிடங்கள் கழித்து மொழி தலை தெறிக்க ஓடி வருவதைப் போல் இருந்தது. அவளுக்கு பின்னால் வந்த உருவம் சட்டென்று மறைந்து போக, அதிலும் அவர்களால் பார்க்க முடியவில்லை.
“அவனுக்கு ஷிப்ல எங்க எல்லாம் கேமரா இருக்குன்னு தெளிவா தெரிஞ்சிருக்கு. அதான் ஒரு புட்டேஜ்ல கூட தெளிவு இல்லை” என்றான் விவேக்.
“மொழி கடல்ல விழுந்தப்போ சந்தேகப்படுற மாதிரி ஏதாவது சிக்குச்சா விவேக்?”
“நோ அதி. நீ சொன்னப்பவே நாம ஷிப்ல இருக்கும் போதே அதை செக் பண்ணிட்டேன்” என்றான் விவேக்.
ஒரு நிமிடம் கண்களை மூடி மீண்டும் மீண்டும் யோசித்தவன்,
“சிம்பிள்..! நாம எந்த இடத்துல எல்லாம் சந்தேகப்படுறமோ, அந்த இடத்துல எல்லாம் அரைமணி நேரத்துக்கு முந்தின புட்டேஜ் அரைமணி நேரத்துக்கு பிந்தின புட்டேஜ் இதை செக் பண்ணு விவேக். அந்த கருப்பு ஆடு ஒண்ணுல சிக்குனாலும் போதும்” என்றான் தீரன்.
“ஏன் அதி?”
“முன்னாடி வந்திருந்தா அவன் செய்யப் போற காரியத்துக்கு நோட்டம் பார்க்க வந்திருப்பான். பின்னாடி வந்திருந்தா செஞ்சு முடிச்ச காரியத்துக்கு வேவு பார்க்க வந்திருப்பான்” என்று தீரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“சூப்பர் மச்சான். நீ சொன்னது கரெக்ட் தான். இதோ ஆடு மூணு பிரேம்ல சிக்கியிருக்கு” என்றபடி தீரனிடம் காட்ட,
“எஸ்” என்ற தீரனுக்கு அப்போது தான் நிம்மதி மூச்சே வந்தது.
“இவன் தான்னு நாம எப்படி ப்ரூவ் பண்றது அதி?”
“ஹைட் அண்ட் சிக் விளையாடிட்டு இருக்குறவங்களை ஆடு புலி ஆட்டத்துக்கு இழுக்கணும் விவேக். கெடா ஆட்டுக் குட்டியை வெள்ளாமை வச்சிருக்க காட்டுக்குள்ள கழட்டி விட்டா அது என்ன செய்யும்?” என்றான் புருவத்தை உயர்த்தியபடி.
“கரெக்ட்! வெள்ளாமைக் காட்டை பார்த்த ஆட்டுக்கு பின்னாடி இருக்குற ஆட்டோட ஓனரையும் கண்ணுக்குத் தெரியாது. முன்னாடி இருக்குற காட்டோட ஓனரையும் கண்ணுக்குத் தெரியாது. அதோட கண்ணுக்குத் தெரியறது எல்லாம் வெளைஞ்சு நிக்கிற பயிர் மட்டும் தான். ஆட்டை மேய விட்டு பிடிக்கப் போறோம்” என்று சாவகாசமாய் சீட்டில் சாய்ந்து கொண்டு சொன்னவனை வியப்பாய் பார்த்திருந்தான் விவேக்.
“இப்போ எதுக்கு மச்சான் என்னை சைட் அடிக்கிற?” என்றான் சன்ன சிரிப்புடன்.
“ம்ம்! கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லிட்டு வந்திருக்கேன்” என்றான் போகிற போக்கில்.
“அதி” என்ற விவேக் முகத்தில் நிச்சயம் மகிழ்ச்சி இல்லை.
“நண்பனுக்கு கல்யாணம்னு சொல்றேன். முகத்துல ஒரு சந்தோஷத்தையே காணோமே?” என்றான் கிண்டலாய்.
“அதி பி சீரியஸ்! இந்த கேஸ் முடியட்டும். அதுக்கு அப்பறம் நீ என்ன வேணும்னாலும் பண்ணு. நாம ஹேண்டில் பண்ணிட்டு இருக்குறது இண்டர்நேஷனல் ட்ரக் டீலிங் கேஸ். அதுல இப்போதைக்கு மெயின் விக்டிம் பிளஸ் விட்னஸ் மொழி. இந்த சமயத்துல இந்த மேரேஜ் நடந்தா அது உன்னோட கெரியரை டோட்டலா அழிச்சுடும். ஏன் மொழிக்கு பின்னாடி நீ தான் இருக்கேன்னு கேஸை உன் பக்கம் திருப்பக் கூட சான்ஸ் இருக்கு. சோ முதல்ல மொழியை இந்த கேஸ்ல இருந்து வெளிய கொண்டு வர்றதுக்கான வழியைப் பார்ப்போம்” என்ற விவேக்கை தீரன் அமைதியாய் பார்த்திருக்க,
“ஏதாவது சொல்லு அதி”
“அது வரைக்கும் எனக்கு பொறுமை இல்லை விவேக். மொழிக்கு என்ன ஆகுமோ ஏது ஆகுமோன்னு யோசிச்சுட்டே என்னால இருக்க முடியாது. எனக்கு கான்பிடன்ட் இருக்கு. நாம இந்த கேஸை சக்சஸா முடிப்போம். கருப்பு ஆடு எதுன்னு தெரியாததுக்கு முன்னமே மேரேஜ் பத்தி பேசிட்டு வந்துட்டேன். இப்போ செவன்டி பெர்செண்டேஜ் அக்யூஸ்ட் யாருன்ற அளவுக்கு நமக்குத் தெரிஞ்சிருச்சு. அப்பறம் ஏன் மச்சான் யோசிக்கணும்? விடு பார்த்துக்கலாம்” என்றான் தீரன்.
“அதி இருந்தாலும்”
“அவ என்கூட இருந்தா தான் பாதுகாப்பா இருப்பான்னு நான் பீல் பண்றேன் விவேக். கோயம்புத்தூர் இன்சிடென்ட்ல இருந்து என்னால வெளிய வர முடியலை. அவளை என் கைக்குள்ள வச்சுக்கணும்னு தோணுது. அதுக்கு மேரேஜ், தாலின்ற அக்சஸ் கார்ட் தேவைப்படுது” என்றான்.
“இப்படி ஒரு கல்லுளி மங்கனா இருப்பன்னு நினைக்கலை அதி. குளோஸ் பிரண்ட் என்கிட்ட கூட உனக்குள்ள இப்படி ஒரு லவ் இருக்குன்னு சொல்லலை” என்றான் முறைப்புடன்.
“நான் அவகிட்டயே சொல்லலை. அப்பறம் எப்படி மச்சான் உன்கிட்ட சொல்லுவேன். அது மட்டுமில்லாம அந்த டைம்ல இதை பேசுற அளவுக்கு நாமளும் வெட்டியா இல்லை” என்றான்.
“எப்படியோ பிரச்சனையில்லாம முடிஞ்சா சரி” என்ற விவேக்கிற்கும் ஏதோ சில வேண்டாத நினைவுகளும் ஞாபகங்களும்.
“சார் அந்த பையன் ரூபன் உங்களைப் பார்க்கனும்னு சொல்றான் சார்” என்று ஒரு காவலர் வந்து சொல்ல,
“அவனை கூட்டிட்டு வாங்க” என்றான்.
தன் முன்னால் நின்ற ரூபனை பார்த்தவன்,
“இப்போ எதுக்காக என்னை பார்க்கனும்னு சொன்ன ரூபன்?”
“சார் நான் தான் எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் சொல்லிட்டேனே? என்னை விட்ருங்க சார். வீட்ல தேடுவாங்க” என்றான்.
“சரி இப்போ நீ கிளம்பலாம். ஆனா, நான் எப்போ கூப்பிட்டாலும் உடனே வரணும்” என்றான் தீரன்.
“ஷ்யர் சார்” என்றவன் கிளம்பப் போக,
“ரூபன் ஒரு நிமிஷம்”
“சார்”
லேப்டாப் திரையில் ஒரு முகத்தை ஜூம் செய்து காட்டியவன்,”இவனை யாருன்னு உனக்குத் தெரியுமா?” என்றான் கேள்வியாய்.
“ஹண்ட்ரெட் பெர்சன்ட் ஷ்யர் சார். இவர் தாரிக் அண்ணா ஜித்தேஷ்” என்றான் ரூபன்.
“ஆள் எப்படி?” என்றான்.
“அவரைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது சார். ஆனா தாரிக்கோடா பார்த்திருக்கேன்” என்றான்.
“ஓகே நீ இப்போ போகலாம் ரூபன்” என்றான்.
“தேங்க்ஸ் சார்” என்றபடி அவன் கிளம்பிவிட,
“ரூபன் நம்ம கண்காணிப்புல தான் இருக்கணும் விவேக்” என்றான்.
“ஆல்ரெடி இன்பார்ம் பண்ணிட்டேன் அதி. அதை விடு, அந்த ஆட்டுக்கு வெள்ளாமைக் காட்டை எப்போ ரெடி பண்றது?” என்றான்.
“முதல்ல விதைப்போம், அது வளரட்டும், அப்பறம் மேய விடுவோம்” என்ற தீரன், தன்னுடன் இருக்கும் மேலும் இரண்டு அதிகாரிகளை அழைத்தவன்,
“ஸ்பெஷல் டீம் ரெடி பண்ணுங்க.சிட்டியில இருக்குற எல்லா ஸ்கூல் காலேஜ்லயும் ஸ்டூடன்ஸ் எல்லாரையும் ஒரே இடத்துல அசம்பில் பண்ணச் சொல்லுங்க. ஒவ்வொரு ஸ்கூல் காலேஜ்க்கும் ஒவ்வொரு நாளை பிக்ஸ் பண்ணுங்க. எல்லாருக்கும் அவேர்னஸ் வீடியோ போட்டுக் காட்டுங்க. ட்ரக்ஸ் எந்த வகையில எல்லாம் ஸ்கூல் காலேஜ்க்குள்ள வருதுன்னு டீட்டெயில்டா சொல்லணும். டிரக்ஸ் கேஸ்ல மாட்டினா என்ன நடக்கும்னு தெளிவா சொல்லுங்க. முக்கியமா அந்த மேஜிக் எனர்ஜி டிரிங்க் பத்தி பேசணும். எல்லா ஸ்கூல் காலேஜ்க்கு வெளியேயும் மப்டில டீமை இறக்குங்க. யாருக்கும் எந்த சந்தேகமும் வந்துடக் கூடாது. ஸ்டூடன்ட்ஸ்க்கு விஷயம் தெரிய வரும் போது பிளசும் இருக்கும் மைனசும் இருக்கும். சோ அதை ஹேண்டில் பண்ற மாதிரி நம்ம டீமும் ரெடியா இருக்கணும்” என்றான் தீரன்.
“சார் அதைப் பத்தி நாம் இன்னும் நியூஸ் வெளிய விடவே இல்லையே. இன்பேக்ட் அது நமக்குத் தெரியும்னே இன்னும் சப்ளையர்ஸ்க்கு தெரியாதே. அது சீக்ரெட்டா இருக்குற வரைக்கும் தான் குற்றவாளியை பிடிக்கிறதுன்னு ஈசின்னு சொன்னிங்க?” என்றான் விவேக். மற்றவர்கள் முன்பு சார் என்று தான் அழைப்பான் விவேக்.
“நான் தான் சொன்னேனே விவேக். முதல்ல விதைப்போம், அப்பறம் அறுப்போம்” என்றான் தீரன்.
“அப்போ யாரோ பேசுறதுக்கு நீங்க பேசுனா தான் சார் சரியா இருக்கும். நீங்க பேசி ரெக்கார்ட் பண்ண வீடியோவை எல்லா எஜுகேஷன் இன்ஸ்டிட்யூட்லயும் பிளே பண்ண சொல்லலாம் சார்” என்ற விவேக் சொல்ல,
“வொய் நாட்? இது கூட நல்ல ஐடியா தான்” என்றவன் அதற்கான வேலைகளில் இறங்கினான்.
“இப்படி பண்றதால என்னாகும் அதி?” என்றான் விவேக்.
“சிம்பிள் விவேக். இத்தனை நாள் திரை மறைவில் பண்ண வேலை வெளிச்சத்துக்கு வந்திடுச்சுன்னு முதல்ல அவனுக்குள்ள ஒரு பதட்டம் உருவாகும். விஷயம் நமக்குத் தெரியும்னு அவனுக்குத் தெரிய வரும் போது எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிப்பான். அப்படி யோசிக்கும் போது எசக்கு பிசக்கா ஏதாவது செய்வான். கண்டிப்பா நம்ம கிட்ட சிக்குவான்” என்றான் தீரன் உறுதியுடன்.
வேலையில் இருந்தவனின் அலைபேசி ஒலிக்க,
“சொல்லுங்கப்பா”
“வீட்டுக்கு வர்ற எண்ணம் இருக்கா இல்லையா அதி?” என்ற வானதியின் குரலில் ஆசுவாச மூச்சு விட்டவன்,
“முக்கியமான கேஸ்மா. வர முடியும்னு தோணலை” என்றான்.
“நேரத்தை பார்த்தியா அதி. நைட்டு ஏழு மணி ஆகிடுச்சு. வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஆகுது. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னா வீட்டுக்கு வர்ற வழியைப் பாரு அதி” என்றார் வானதி.
“அம்மா நானே சொல்லனும்னு நினைச்சேன். நாளைக்கு ராஜன் அங்கிள் வீடு வரைக்கும் போயிட்டு வந்திடுங்க” என்றான்.
“அதெல்லாம் அவரே கால் பண்ணி பேசிட்டார். இன்னும் ஒரு மாசத்துல ஒரு முகூர்த்தம் வருது. அதுலயே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்” என்றார்.
“ம்மா..!” என்று பல்லைக் கடித்தவன்,
“ஏன் ஒரு மாசத்துக்கு முன்னாடி முகூர்த்தமே இல்லையா?” என்றான் கடுப்புடன்.
“இதென்ன காய்கறி வாங்குற வேலையா? போன உடனே வாங்கிட்டு வர? கல்யாணம் அதி கல்யாணம். எல்லாம் பார்த்து பொறுமையா பண்ண வேண்டாமா? எங்களுக்கு இருக்குறது ஒரே பையன்” என்றார் வானதி.
“இதெல்லாம் டூமச் மம்மி. உங்களை இன்னொரு பையன் பெத்துக்க வேண்டாம்னு நானா சொன்னேன்” என்றவனின் பேச்சில் தலையில் அடித்துக் கொண்டார் வானதி.
போனை வாங்கிய நரேந்திரன்,
“உங்க அம்மாவுக்கு வேற வேலை இல்லை அதி. அடுத்த பதினஞ்சு நாளல்ல முகூர்த்தம் இருக்கு. ராஜன் அந்த தேதியிலையே வச்சுக்கலாம்னு சொல்லிட்டார் அதி” என்றார்.
“பதினைஞ்சு நாளா?” என்றவனின் பதிலைக் கேட்டு இப்போது தலையில் அடிப்பது நரேந்திரனின் முறையானது.
“ஆளை விடு மச்சான். ரெண்டு நாளா தூக்கமில்லை. ஒரு நாளாவது ரெஸ்ட் வேணும். இன்னைக்காவது போய் கொஞ்சம் நிம்மதியா தூங்கனும். நான் கிளம்புறேன் அதி” என்றபடி விவேக் கிளம்பிய வேகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டான் தீரன்.
ஆசுவாசமாய் அமர்ந்தவன் தன் மொபைல் திரையில் மொழியைத் தான் பார்த்திருந்தான். தூங்கி எழுந்தவள் இன்னமும் அதே நிலைமையில் தான் அமர்ந்திருந்தாள். அவள் செல்லை பார்ப்பதும், ஒரு வேகத்தில் அதை தூக்கிப் போடுவதும், மீண்டும் அதை எடுத்துப் பார்ப்பதுமாய் இருந்தது அவள் செய்கைகள். அவள் அறையில் அவன் வைத்து விட்டு வந்திருந்த கேமரா மூலம் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்.
“டாக்டர் அகன் சொன்ன மாதிரி நாளுக்கு நாள் ரொம்ப டல்லாகிட்டே போறாளே? எதுவும் ஹெல்த் இஷ்யூஸ் இருக்குமா?” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மெதுவாய் எழுந்து சென்று அவள் அறையில் இருந்த அந்த மினி ப்ரிட்ஜை திறந்தவள், அந்த ஜூஸ் பாட்டிலை வெளியே எடுக்க, அதை வீடியோவில் பார்த்திருந்த தீரனின் கண்கள் விரிந்தது.
“மைகாட்..! இதை எப்படி மறந்தேன்” என்று பரபரப்புடன் வேகமாய் கிளம்பியவன், சற்றும் யோசிக்காமல் மொழியின் எண்ணிற்கு அழைப்பு விடுத்திருந்தான்.
“வண்டியை வீட்டுக்கு விடுங்க” என்றவன் அவள் அழைப்பை எடுப்பதற்காக காத்திருந்தான். அவளோ அலைபேசித் திரையை யோசனையுடன் பார்ப்பதை தீரன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அவன் விடாமல் அழைக்க,
“ஹலோ”
“மொழி” என்றவனின் ஆழ்ந்த குரலில் அவளுக்கு உடலில் நடுக்கம் எடுத்தது.
“மொழி” என்றான் மீண்டும் அழுத்தமாய்.
“ங்கான்..! சோ..சொல்லுங்க சார்” என்றாள்.
“சாரா” என்று மனதிற்குள் எரிச்சலடைந்தவன்,
“என்ன பண்ற?” என்றான்.
“இல்ல சும்மா தான்” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
“ஆர் யு ஓகே” என்றான்.
“ம்ம்”
“பார்த்தா அப்படி தெரியலையே? இன்னும் அதே அழுக்கு ட்ரஸ். குளிக்கக் கூட இல்லை போலயே?” என்றவனின் குரலில் அதிர்ந்தவள், கண்களை விரித்தபடி சுற்றும் முற்றும் பார்க்க.. தலையில் அடித்துக் கொண்டான் தீரன்.
“அப்போ நிஜமாவே அப்படித்தான் இருக்க போல” என்றவனின் வார்த்தைகளில் கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள்.
“குளிச்சுட்டு கிளம்பு மொழி. ஜஸ்ட் ரிலாக்ஸா வெளிய போயிட்டு வரலாம்” என்றானே பார்க்கலாம், அவள் காதலிருந்த போனை எடுத்தவள் ‘கேட்ட செய்தி நிஜமா’ என்ற பாவனையில் பார்த்திருந்தாள். அவளின் பாவனையில் அவனுக்கு சிரிப்பு வந்தது.
‘ஏதோ பொண்டாட்டியை கூப்பிடுற மாதிரி கூப்பிடுறான்’ என்று எண்ணியவள்,
“இல்ல நான் வரலை” என்றாள். சத்தமில்லாமல் சொன்ன அந்த குரலில் சற்று கோபமிருந்ததைப் போல் உணர்ந்தான் தீரன்.
“நான் வர்றியான்னு கேட்கலை மொழி. கிளம்புன்னு சொன்னேன்” என்றான்.
“இல்ல, டாடிக்கு இதெல்லாம் பிடிக்காது. அதுவும் நைட் நேரம்” என்றாள்.
“அவர்கிட்ட நான் பேசிக்கிறேன். நீ கிளம்புமா” என்றான்.
“ம்ம்” என்று அரைமனதாய் போனை வைத்தவள், அடுத்த சில நிமிடங்களுக்கு அலைபேசி திரையைத் தான் வெறித்திருந்தாள்.
அவள் கிளம்ப ஆயத்தமாவதைப் பார்த்த பிறகு தான் வீடியோவை ஆப் செய்திருந்தான்.
வீட்டிற்கு வந்தவன் குளித்து முடித்து மீண்டும் வெளியே செல்ல கிளம்பி வர, அவனை முறைத்தார் வானதி.
“வந்த உடனே சார் எங்க கிளம்பிட்டிங்க?” என்றார்.
“மொழியை வெளிய கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்ம்மா” என்று போகிற போக்கில் சொல்ல,
“என்ன அதி சொல்ற? ராஜன் அண்ணா கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டார். அவங்க வீட்ல ஏற்கனவே ஆயிரத்தெட்டு ரூல்ஸ், அதுவும் இந்த நைட் நேரத்துல” என்றார்.
“நான் வெட்டியா ஊர் சுத்த கூட்டிட்டு போகலைம்மா. மொழிக்கு கொஞ்சம் ரிலாக்சேஷன் தேவை. அவ மைண்டை டைவேர்ட் பண்ணனும். இப்படியே இருக்குறது நல்லதில்லை, அதான்” என்றான்.
“அம்மாவுக்கு கூட ரிலாக்ஸ்ஷேஷன் தேவைப்படுது அதி” என்றார் சிரிக்காமல்.
“நீங்களும் அப்பா கூட எங்கயாவது நைட் ரைட் போயிட்டு வாங்களேன்” என்றபடி கிளம்பியவனைப் பார்த்த நரேந்திரன் சிரித்துக் கொண்டார்.
“பார்த்திங்களா உங்க பையனை எப்படி சொல்றான்னு? நான் வெளிய ஒரு கடைக்கு கூப்பிட்டா கூட டியூட்டி அது இதுன்னு சாக்கு சொல்லி வர மாட்டான். ஆனா இன்னைக்கு..ம்ம் நான் குடுத்து வச்சது அவ்வளவு தான்” என்றார் வேண்டுமென்றே.
“உங்கம்மாவுக்கு சமைக்கத்தான் வரலைன்னு பார்த்தா, நடிக்கவும் வரலை அதி” என்று நரேன் சிரிக்க,
“வெளிய பார்த்துக்கிறேன்ம்மா” என்றவன் புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்பிட்டான்.
ஒன்பது மணிக்கு வந்து நின்ற தீரனை ராஜ ராஜன் என்னவோ ஏதோவென்று பார்க்க,
“அங்கிள் வித் யுவர் பெர்மிஷன் நான் மொழியை வெளிய கூட்டிட்டு போகலாமா?” என்றான்.
“என்ன தீரன் திடீர்ன்னு? அதுவும் நைட் நேரத்துல” என்றவர் யோசிக்க,
“என் மேல நம்பிக்கையில்லைன்னா அனுப்ப வேண்டாம்” என்றான் பட்டென்று.
“அப்படி யோசிக்கலை தீரன். ஏற்கனவே பிரச்சனை ஆகியிருக்கு. இப்போ இப்படி நைட் நேரத்துல யாராவது பார்த்து, அதையும் இஷ்யூ ஆக்கிட்டா உங்களுக்கும் அது தேவையில்லாத பேர் தான? அதுக்காக யோசிக்கிறேன்” என்றார்.
“அதுக்காக எனக்கான பர்சனல் ஸ்பேசே இருக்கக் கூடாதா என்ன? மொழியோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு அங்கிள்” என்றான் அழுத்தத்துடன்.