“எப்படி அதி இவ்வளவு உறுதியா சொல்ற?” என்றான் விவேக்.

“அவன் என்னதான் கிளவரா மூவ் பண்ணாலும் அவனுக்கே தெரியாம நடந்த ரெண்டு தப்பு. ஒன்னு மொழி நம்ம கூட நம்ம கண்பார்வையில் இருக்குற அதே டைம்ல மொழிகிட்ட பேசினதா ரூபனை நம்ப வச்சது. ரெண்டாவது ரொம்ப சிம்பிள் விவேக்” என்றவன் அமைதியாக,

“என்னது?”

“மொழியை சிக்க வைக்கனும்னு நினைச்சுட்டு, பைத்தியம் மாதிரி அவனே எனக்கு கால் பண்ணி ஒப்பனா மிரட்டுனது. மொழி தான் இதையெல்லாம் பண்றாங்கிறப்போ இன்னொருத்தன் ஏன் நம்மை மிரட்டணும், அதுவும் மொழியை காப்பாத்திட்டோம்ன்ற கோபத்துல. அது மட்டுமில்லாம, தன்னைத் தானே அசிங்கப்படுத்திக்கிறதுக்கு மொழி என்ன முட்டாளா?” என்றான் தீரன் தெளிவாய்.

“கரெக்ட் அதி. நீ சொன்ன மாதிரி மொழி தான் இதுக்கு காரணம்னா நம்ம கூட வந்திருக்கும் போது எப்படி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பாங்க? பாயின்ட் அதி” என்ற விவேக் இப்போது தான் தெளிந்திருந்தான்.

“ஒரு வழியா உனக்கும் பல்ப் எரிஞ்சிடுச்சு விவேக். இனியாவது மொழி மேல சந்தேகப் படாத” என்றான் கடுப்புடன்.

“மச்சான் உனக்கு ஏன் இதுக்கு இவ்வளவு கோபம் வருது? உனக்கு நான் சந்தேகப்பட்டது பிரச்சனையா? இல்லை மொழியை சந்தேகப்பட்டது பிரச்சனையா?”  என்றான் விவேக் சிரிப்புடன்.

“அப்கோர்ஸ் நீ சொன்ன ரெண்டாவது ரீசன் தான். விட்னஸ் வேணும்னா அவளுக்கு எதிரா இருக்கலாம். அதை எப்படி உடைக்கணும்னு எனக்குத் தெரியும். பட் அவளை சந்தேகப்படுறது நான் என்னையே சந்தேகப்படுற மாதிரி” என்றவனை ஆச்சர்யமாய் பார்த்திருந்தான் விவேக்.

“என்ன?”

“மச்சான் அந்த பொண்ணுக்கு லவ்வர் இருக்கான்”

“நானும் அப்படி நினைச்சு தான் ஒதுங்கிப் போகலாம்னு பார்த்தேன். ஆனா இப்போ அந்த வெண்ணை வெட்டிக்காக எல்லாம் அவளை விட்டுத் தர முடியாது. அவனும் அவன் பேச்சும். முதல்ல அவனை விசாரிக்கணும்” என்றான் தீரன்.

சரியாக அதே நேரம் அவனை அழைத்திருந்தார் ராஜ ராஜன்.

“சொல்லுங்க சார்”

“தீரன் நீங்க கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமா?” என்ற ராஜனின் குரலில் ஆற்றாமையும், இயலாமையும்,கோபமும் கலந்திருந்தது.

“என்னாச்சு சார்?”

“உங்களால இப்போ உடனே வர முடியுமா?”  என்றார் மீண்டும்.

“ஒரு நிமிஷம் சார்”

“விவேக்! ரூபன் இன்னைக்கு ஒரு நாள் நம்ம கஸ்ட்டடியில இருக்கட்டும். இன்னும் கொஞ்சம் விசாரிக்க வேண்டியது இருக்கு. நான் போன உடனே வர்றேன்” என்றபடி ராஜனிடம் பேசிக் கொண்டே கிளம்பினான்.

எவ்வளவு சீக்கிரம் செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்றிருந்தான் தீரன். எப்போதும் காரில் செல்பவன் வேகமாய் செல்ல வேண்டும் என்பதற்காகவே புல்லட்டில் சென்றிருந்தான்.

வீட்டினுள் சென்றவனுக்கு அங்கு நிலவிய அசாதாரண அமைதி கண்டு உள்ளுக்குள் மனம் ஜெட் வேகத்தில் அடித்துக் கொண்டது.

ஹாலில் தியாகராஜன் சோர்வாய் அமர்ந்திருந்தார்.

“தாத்தா” என்றவன் ஆதரவாய் அவர் கைகளைப் பற்ற, அவரோ சட்டென்று உடைந்தவராய் அவன் கைகளைப் திருப்பிப் பற்றிக் கொண்டு அழத் தொடங்கிவிட்டார்.

“தாத்தா என்ன நீங்க? எப்பவும் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருப்பிங்க? இப்போ ஏன் இப்படி?” என்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என் குடும்பமே ஒண்ணுமில்லாம போய்டும் போல தம்பி. எவ்வளவு சொத்து இருந்து என்ன செய்ய? மனசுல நிம்மதி இல்லையே? பொத்திப் பொத்தி வளர்த்ததெல்லாம் இப்படி எமன்கிட்ட தூக்கிக் குடுக்குறதுக்கா?” என்று அவர் சொல்லி முடிக்கவில்லை.

“நீங்க எ..என்ன சொல்றிங்க? யாருக்கு என்ன ஆச்சு? மொழி எதுவும்” என்றவனுக்கு மூச்சடைக்கும் நிலை.

“அந்த கொடுமையை நீயே போய் பாருப்பா” என்றவர் தளர்ந்த நடையுடன் அவர் அறைக்குள் சென்று விட, நாலு கால் பாய்ச்சலுடன் மேலே சென்றான் தீரன். பிரகதியும் சஞ்சையும் வெளியே நிற்க, மற்றவர்கள் மொழியின் அறைக்குள் தான் இருந்தனர். ராஜராஜனோ இடி விழுந்தவர் போல் இருந்தார்.

இதே நிலை நீடித்தால் அவனுக்கும் மூச்சு நின்று விடும் போல் தோன்ற, மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவன், திடத்துடன் உள்ளே சென்றான்.

“என்னாச்சு சார்?” என்றவன் அப்போது தான் அங்கு நின்றிருந்தவர்களை கவனித்தான். நந்திதாவும் டயானாவும் பேயரைந்தார் போல் நிற்க, மூலையோடு ஒடுங்கி, கால்களுக்குள் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்த வெண்மொழியை சமாதானப் படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான் தாரிக்.

“இப்ப என்ன நடந்துச்சுன்னு எல்லாரும் இப்படி இருக்காங்க?” என்று யோசித்தபடி எதார்த்தமாய் பார்வையை உயர்த்த, பேனில் தொங்கிக் கொண்டிருந்த துப்பட்டா கண்ணில் பட்டது அவனுக்கு. விழிகள் தெறிக்க அதையே வெறித்தவனுக்கு நடந்ததை யூகிக்க பிரயத்தனப் பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

‘ஹோ இன்னைக்கு தூக்கு மாட்டி சாகப் பாத்திருக்கா போல’ என்றவனுக்குள் விரக்தியாய் ஒரு சிரிப்பு.

“விஹான்” என்று அவன் அழைக்க அவன் அருகில் வந்தவனின் கண்கள் முழுவதும் கண்ணீர். அனைவரின் முகத்தையும் அதில் இருந்த கலக்கத்தையும் பார்க்கும் போதே தெரிந்தது, மொழியின் மேல் அவர்கள் கொண்ட அன்பின் அளவு. அதிலும் ராஜ ராஜன் உடைந்து போய் காணப்பட்டார்.

“ஏன் பேபி எப்படி பண்ண? இப்படி பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது? என்னைப் பத்தி யோசிச்சு பார்த்தியா நீ?” என்ற தாரிக் அவள் கைகளை பற்றிய படி பேசிக் கொண்டிருக்க, அவளோ மேலும் தனக்குள் இறுகிக் கொண்டாள்.

தாரிக்கை சொடக்கிட்டு அழைத்தான் அதிதீரன். அப்போது தான் தாரிக் தீரனையே பார்த்தான். அவன் பார்த்த பார்வையில் ‘என்ன?’ என்ற கேள்வி தொக்கி நிற்க,

“மொழி கையை விடு!” என்றான் தீரன். குரலில் அப்படி ஒரு அழுத்தம்.

“என் பேபி கையை நான் பிடிக்கிறேன், அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றான் கடுப்புடன்.

“மொழி கையை விடுன்னு சொன்னேன். அப்பறம் பிடிக்கிறதுக்கு கை இருக்காது” என்ற தீரனின் வார்த்தைகளில் வெகுண்டவன்,

“என்ன சார் மிரட்டுறிங்களா?”

“ஆமா, மிரட்டுறேன் தான்” என்றவன் தாரிக்கைப் பார்த்த பார்வையில் மொழியின் கையை விட்டிருந்தான்.

“நீங்க எதுக்காக இங்க வந்திங்க?” என்றான் தீரன்.

“சார் மொழியைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்” என்றாள் நந்திதா.

“நீங்க வந்திங்க சரி, இவன் எதுக்கு வந்தான்?” என்றான்.

“இதென்ன சார் கேள்வி? நான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு தான் சொன்னேன். மொழியை வேண்டாம்னு சொல்லலை. நான் அவளைப் பார்க்க வர்றதை யார் தடுக்க முடியும்?” என்றான் தாரிக் கோபமாய்.

“இவங்க வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் அக்காகிட்ட நாங்க போனை குடுக்கலை. இவங்க தான் வந்து ஆறுதல் சொல்றோம்னு எல்லாத்தையும் சொல்லிட்டாங்க” என்றான் விஹான் கோபமாய்.

“இவங்களை யாரு உள்ள விட்டது? வீட்ல இருக்குறவங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா?” என்றான் கோபமாய்.

“மொழி அக்கா தான்” என்று விஹான் தயங்க,

“ரெண்டு நாளா ரூமை விட்டு வெளிய வராத பொண்ணு, இவங்க குரல் கேட்கவும் வந்து அவங்களை உள்ள கூப்பிடும் போது, எங்களால ஒன்னும் செய்ய முடியலை மா..”என்ற சங்கரி அப்படியே வார்த்தையை முழுங்கினார்.

“சார் நாங்க பார்த்துட்டு கிளம்பிட்டோம் சார். எங்ககிட்டயே அவ சரியா பேசலை சார். நாங்க வெளியேறின உடனே இப்படி செய்வான்னு நாங்க நினைக்கலை. வாசல் வரைக்கும் போயிட்டு சத்தம் கேட்டுத் தான் திரும்ப வந்தோம்” என்றாள் டயானா.

“யார் பார்த்தது?” என்றான்.

“நான் தான்” என்ற விஹான்,

“அவங்க கிளம்பின பிறகு அக்கா அழுதுகிட்டே கதவை வேகமா சாத்துனா. அதான் சந்தேகம் வந்து கதவைத் தட்டுனேன். அவ திறக்கவே இல்லை. என் ரூம் பால்கனியில இருந்து அவ ரூம் பால்கனி வழியா வந்து பார்த்தா இப்படி ஒரு காரியம் செய்ய துணிஞ்சுட்டா” என்ற விஹான் ஆதங்கமாய் சொன்னான்.

“உங்களை யாரு மொழிகிட்ட நடந்ததை எல்லாம் சொல்லச் சொன்னது?” என்று கோபமாய் கேட்க, நந்தியும் டயானாவும் மிரண்டு போய் நின்றனர்.

“செய்றதை எல்லாம் நீ செஞ்சுட்டு இப்போ நல்லவன் மாதிரி எங்களை கேள்வி கேட்குறியா? பக்காவா பிளான் பண்ணி மொழியை மீடியா முன்னாடி அசிங்கப்படுத்தியிருக்க?” என்றான் தாரிக் கோபமாய்.

தாரிக் பேசியதை எல்லாம் தீரன் கண்டு கொண்டான் இல்லை. அவன் பார்வை முழுவதும் மொழியின் மீது மட்டுமே. வெகு சீக்கிரத்திலேயே அவர்கள் காப்பாற்றியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவள் முயற்சியை முறியடித்திருக்க வேண்டும். அதனால் தான் இப்படி அமர்ந்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டான். இல்லையென்றால் இந்த நேரத்திற்கு ஆம்புலன்சில் தான் ஏற்றியிருக்க வேண்டும்.

அவளின் அருகில் சென்றவன்,”மொழி” என்றான் ஆழ்ந்த குரலில். அவள் தலையை நிமிர்த்தவே இல்லை.

“மொழி” என்று மீண்டும் அவன் அவள் பெயரை அழுத்திய விதத்தில் மெல்ல தலையை நிமிர்த்தியிருந்தாள். இரண்டு நாட்களில் மேலும் மெலிந்திருந்தாள். கண்களில் ஜீவனில்லை. அழுது வீங்கி, முகமெல்லாம் சிவந்து இருந்தவளைப் பார்த்தவனுக்குள் இதயத்தை கசக்கிப் பிழியும் வலி. அவள் கழுத்தைச் சுற்றி இறுக்கியதில் துப்பட்டாவின் தடம் நன்றாக பதிந்து போயிருந்தது.

 “ஆன்ட்டி குடிக்க ஹாட் வாட்டர் எடுத்துட்டு வாங்க” என்றான் சங்கரியிடம்.

“இப்போ என்ன நடந்ததுன்னு இப்படி அழுதுட்டு இருக்க?” என்றவன் அவள் முகம் பற்றி அவள் கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்து விட, அவனின் கரங்களை அவள் தட்டி விடவே இல்லை. அதுவே அங்கிருந்தவர்களுக்கு ஆச்சர்யம். இவ்வளவு நேரம் எல்லோரையும் தள்ளி விட்டு ஆர்ப்பாட்டம் செய்திருந்தாளே!

“அன்னைக்குத் தான சொன்னேன் மொழி. இப்படி முட்டாள் தனமான காரியமெல்லாம் பண்ணக் கூடாதுன்னு. நான் அதுல இருந்தே இன்னும் வெளிய வரலை. இப்போ மறுபடியும் ஏன் இப்படி பண்ண மொழி?” என்றான் நிதானமாய்.

அவன் கூறியதைக் கேட்ட குடும்பத்தினருக்கு அதிர்ச்சி.

“என்ன சொல்றிங்க தீரன்?” என்றார் ராஜன்.

‘இப்ப எதுவும் பேச வேண்டாம்’ என்பதைப் போல் அவரைப் பார்த்து இமைகளை அழுத்தமாய் மூடித் திறந்தான்.

“எனக்கு வாழப் பிடிக்கலை” என்றவளின் குரலில் திரும்பியவன்,

“அப்படி என்ன வாழ முடியாத அளவுக்கு கஷ்ட்டம் உனக்கு?” என்றான் தீரன் சற்று கோபமாய்.

“சாரி..! என்னால தான் உங்களுக்கும் கெட்ட பேர்” என்றவள் மீண்டும் தலையை கவுத்திக் கொள்ள,

“நீ ஏன் பேபி இப்படி சொல்ற? தெனாவெட்டா பேட்டி குடுத்த இவனே உயிரோட இருக்கும் போது, நீ ஏன் சாகனும்?” என்றான் தாரிக். அவள் நண்பர்களைப் பொறுத்தவரை வெளியான வீடியோவில் இருப்பது தீரன் தான் என்று நம்பினர்.

“அதானே உன் பிரண்ட் சொல்ற மாதிரி நானே உயிரோட இருக்கும் போது நீ ஏன் சாகனும்?” என்றான் தீரன் கிண்டலாய்.

“நான் உயிரோட இருக்கும் போது உன்னை மட்டும் எப்படி சாக விடுவேன்” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக அழுத்தமாய்.

“ஒரு தடவை சொன்னா உங்களுக்குப் புரியாதா? எனக்கு வாழ இஷ்ட்டமில்லை. எனக்கு இங்க யாரையும் பிடிக்கலை. எனக்கு என்னையே பிடிக்கலை” என்றாள் அழுகையுடன்.

“அப்போ உனக்கு என்னையும் பிடிக்கலையா மொழி?” என்றவனின் குரலும் வார்த்தைகளும் அவளுக்குள் எதையோ உணர்த்த கண்ணீருடன் அவனைப் பார்த்தவளின் விழிகள் விரிந்தது.

“சொல்லுமா, மொழிக்கு இந்த தீரனையும் பிடிக்கலையா?” என்றவன் சங்கரி கொண்டு வந்து கொடுத்த சுடு நீரை அவளுக்குப் புகட்டிக் கொண்டிருந்தான்.

தீரனின் பேச்சில் அவள் தோழிகள் அதிர்ந்து பார்க்க, தாரிக்கோ கோபத்தின் உச்சத்தில் இருந்தான்.

“உ..உங்களை எனக்கு எதுக்கு பிடிக்கணும்?” என்றவளின் வார்த்தைகள் தடுமாறி வர,

“ஏன் பிடிக்கணும்னா?” என்று அவள் முகத்தை கைகளால் தாங்கியவன்,கண்களை மூடி தன்னை நிதானப் படுத்தியபடி,

“நான் தான உனக்கு புருஷன்..ஐ மீன் புருஷனாகப் போறவன். அப்போ என்னை உனக்கு பிடிக்கணும் தான?” என்றவனின் பதிலில் பெற்றவர்கள் மகிழ, மற்றவர்கள் அதிர மொழியோ தீரனை திகைப்புடன் பார்த்திருந்தாள்.