நிம்மதி மூச்சை விட்டவன் அவளை முறைத்தபடி சென்று தலையைத் துவட்ட, அப்போது தான் கவனித்தாள் அவன் குளித்துவிட்டு டவலுடன் வந்து நின்றிருப்பதை.
ஏதோ கணவன் மனைவி ஒரே அறைக்குள் சகஜமாய் இருப்பதைப் போல் இருந்தது அவனின் நடவடிக்கைகள். அவளுக்குத் தான் ஒன்றும் புரியவில்லை. அவள் தான் சகஜ மனநிலையில் இல்லையே. அவனுக்கான ஆடைகளை எடுத்துக் கொண்டு அவன் மீண்டும் பாத்ரூம் நோக்கி சென்றதை பார்த்தாள் தான். ஆனால் எதுவும் சிந்தையில் பதியவில்லை. அமர்ந்த நிலையிலேயே மீண்டும் உறங்கிப் போனாள்.
கிளம்பி முடித்து வந்தவன் கண்டது மறுபடியும் தூங்கிக் கொண்டிருந்தவளைத் தான். மீண்டும் அறைக்குள் நடை பயின்றவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தீவிர சிந்தனையில் இருந்தான்.
இந்த கேஸ் அவன் கைக்கு வந்ததில் இருந்து நடந்த ஒவ்வொன்றையும் அவன் மூளை ரீவைண்ட் செய்து கொண்டிருந்தது. எங்கோ எதையோ விட்டுவிட்டதைப் போல் ஒரு உணர்வு அவனுக்கு.
விவேக்கிற்கு அழைத்தவன் அவன் சென்னை சென்று விட்டதை உறுதிப் படுத்திக் கொண்டான். குமரனுக்கு அழைத்தவன் விமலின் பாதுகாப்பை மீண்டும் உறுதி செய்து கொண்டான்.
டாக்டருக்கு அழைத்துப் பேச எண்ணியவன் நேரத்தைப் பார்க்க, அது அதிகாலை நான்கு முப்பதை காட்டியது. வேறு வழியின்றி அழைத்துவிட்டான்.
“சொல்லுங்க தீரன்” என்ற அகனின் குரலில் அவன் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது.
“சாரி டாக்டர், உங்க தூக்கத்தை தொந்தரவு பண்ணிட்டேன்” என்றவன், மொழி மன நிலை பற்றியும், இப்போது எழுந்து அவள் நடந்து கொண்ட விதம் பற்றியும் ஒன்று விடாமல் கூற, அகனோ பொறுமையுடன் கேட்டிருந்தான்.
“இதெல்லாம் நார்மலா நடக்கக் கூடிய விஷயம் தான் தீரன். இப்படி சூசைட் அட்டெர்ன் பண்றது, தன்னைத் தானே காயப்படுத்திக்கிறது, எப்பவும் சோர்ந்து போய் இருக்கிறது இது எல்லாமே இருக்கும். ரெண்டு நாளைக்காவது அவங்க இப்படித்தான் இருப்பாங்க. சரியாகுறது அவங்க கைல தான் இருக்கு. அது அவங்க மென்டல் ஹெல்த் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்குன்றதை பொறுத்து மாறுபடும்” என்றான் அகன்.
அகனிடம் பேசிவிட்டு அவளின் அருகில் அமர்ந்தவனுக்கு ஏனோ அவளை விட்டு விலகவேத் தோன்றவில்லை. அந்த கணமே அவளைத் தன்னுடன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விட வேண்டும் என்ற உத்வேகம் அவனுக்கு. ஆனால் நிதர்சனத்தை எண்ணி தன்னைத் தானே அடக்கிக் கொண்டான்.
அதற்கடுத்து வந்த அந்த நாளின் நிமிடங்கள் அனைத்தும் மொழி தன் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத நிமிடங்கள். தீரன் அவளை கவனித்துக் கொண்ட விதம், அவளைக் கையாண்ட விதம் என்று அவன் அவளுக்காக செய்த அனைத்து செயல்களிலும் அத்தனை இதம். அது எதுவும் அவளுக்கு அப்போது புரியா விட்டாலும், அவளின் சிந்தையில் ஒவ்வொன்றும் பதிந்து கொண்டிருந்தது.
கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு பிளைட்டில் தான் அழைத்து வந்தான். மீண்டும் அவளை அவள் வீட்டில் விடும் வரை அத்தனை பாதுகாப்பையும், தைரியத்தையும், இதத்தையும் அவன் அருகாமை அவளுக்குக் கொடுத்திருந்தது. ஆனால் ஒன்று அவளை வீட்டில் வந்து விடும் வரை ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை அவன்.
வீட்டிற்கு வந்தவளை “அக்கா” என்று விஹான் ஓடி வந்து அணைத்துக் கொள்ள, பிரகதியோ கலங்கிய விழிகளுடன் தங்கையின் கைகளை பிடித்துக் கொண்டாள். மொழிக்கு எதுவும் புரியவில்லை. நடந்ததை எண்ணி அவர்கள் கலங்குகிறார்கள் என்று மொழி நினைத்திருக்க, பாவம் அவளுக்குத் தான் இன்னமும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. தீரன் தான் அவளிடம் அவள் அலைபேசியை தரவேயில்லையே.
“தீரன்” என்று உணர்ச்சிவசப்பட்ட ராஜ ராஜன் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
“சார் நான் என் கடமையைத் தான் செஞ்சேன். உங்க பொண்ணை பத்திரமா உங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன். ஆனா திரும்பவும் வருவேன். இந்த கேஸ்ல உங்க பொண்ணோட வாக்குமூலம் ரொம்ப இம்போர்டேன்ட். உண்மையை சொன்னா என்னால அவங்களை காப்பாத்த முடியும். இல்லைன்னா, நான் இந்த கேஸ்ல இருந்து விலகிக்கலாம் னு இருக்கேன்” என்றவன் அவளின் பேக் மற்றும் போனை அவரிடம் ஒப்படைத்து விட்டு அவளைத் திரும்பியும் பாராது சென்று விட்டான்.
இப்போது தான் அவள் புத்திக்கு உரைத்தது. அவன் தன்னிடம் பேசாததும்..இதோ இப்போது அவள் முகத்தைக் கூட பாராமால் அவளிடம் விடைபெறாமல் சென்றதும். அவள் பார்வை அவன் முதுகைத் துளைத்திருக்க,
“பிரகதி,மொழியை ரூம்க்கு கூட்டிட்டு போமா” என்ற ராஜ ராஜனின் குரலில் மீண்டவள், தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள். மகளின் நிலை கண்டு சங்கரி மௌனமாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
வீட்டிற்குள் நுழைந்த மகனை எப்போது வருவான் என்று காத்திருந்தவர் போல் பிடித்துக் கொண்டார் வானதி. நரேந்திரன் மனைவியை அமைதிப் படுத்த,
“எப்படிங்க அமைதியா இருக்க முடியும்? நமக்கு இருக்குறது ஒரே பையன். அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தப்பா. இவன் இப்படி செய்வான்னு நான் நினைக்கவேயில்லை” என்றார் ஆதங்கமாய்.
“இப்போ நான் என்னம்மா பண்ணிட்டேன்” என்றான் சற்று எரிச்சல் கலந்த குரலில்.
“அதான் அந்த பொண்ணு வேணாம்னு சொல்லிட்டியே அதி. அம்மா உனக்கு வேற நல்ல பொண்ணை பார்க்குறேன்” என்றார் வானதி பேச்சை மாற்றும் பொருட்டு.
“வேற நல்ல பொண்ணுன்னா? அப்போ மொழி நல்ல பொண்ணு இல்லைன்னு சொல்றிங்களா?” என்றவனின் வார்த்தைகளில் அப்படி ஒரு அனல்.
“இல்ல அதி.. இருந்தாலும் இப்படி ட்ரக் யூஸ் பண்ற பொண்ணு” என்று வானதி வார்த்தையை முடிக்கவில்லை.
“ம்மா” என்று கத்தியிருந்தான் தீரன்.
“அவ ட்ரக் யூஸ் பண்ணதை நீங்க நேர்ல பார்த்திங்களா? சொல்லப் போனா நடந்த எல்லாத்துக்கும் நான் தான் காரணம். அவங்க பொண்ண என்னோட பாதுகாப்புல கூட்டிட்டு போனேன். அப்போ நான் தான் சரியா பார்த்துட்டு இருந்திருக்கணும். நடந்த எல்லாத்துக்கும் என்னோட கவனமின்மையும் ஒரு காரணம். நடந்த எதையும் முழுசா தெரிஞ்சுக்காம ஒரு பொண்ணைப் பத்தி இப்படி பேசாதிங்க. என் அம்மா இப்படியெல்லாம் பேசுவாங்களான்னு எனக்கு ஷாக்கிங்கா இருக்கு” என்றான்.
“உன் அம்மாவைப் பத்தி உனக்குத் தெரியாதா அதி. எப்பவாவது இப்படி பேசியிருக்காளா? ஏதோ உன்மேல இருக்குற பாசத்துல பேசிட்டா,விடு அதி” என்றார் நாரேந்திரன்.
“சாரி அதி” என்ற வானதியின் முகம் பார்த்தவன் என்ன நினைத்தானோ அவரின் மடியில் தலைவைத்து படுத்து விட்டான். மனதில் அதீத அழுத்தம் இருக்கும் போது மட்டுமே அவன் அப்படி நடந்து கொள்வான்.
“அதி”
“ம்மா..! பிளீஸ் பத்து நிமிஷம் எதுவும் பேசாதிங்க” என்றவன் கண்களை மூடிக் கொள்ள, கழுத்தை அறுத்துக் கொள்ளப் போன மொழியின் முகமும் செய்கையுமே அவன் கண் முன் மீண்டும் மீண்டும் வந்தது. கண்ணோரம் உருண்டோடிய ஒரு துளி கண்ணீரைத் தாய் அறியாமல் துடைத்துக் கொண்டவன்,
“கமிஷனரைப் பார்க்க போகணும். எனக்கு ஒரு காபி மட்டும்மா” என்றவன் வேகமாய் அறைக்குள் சென்று மறைந்தான்.
“இந்த ஜென்மத்துல அதி வேற யாரையும் கட்டிக்க சம்மதிக்க மாட்டான் வானதி. இனி இந்த பேச்சை அவன்கிட்ட எடுக்காத” என்றார் நரேந்திரன். தாயிடம் மறைத்த கண்ணீரை தந்தை பார்த்துவிட்டதை அவன் அறியவில்லை.
சற்று நேரத்தில் யூனிபார்மில் மிடுக்காய் வந்த மகனைப் பார்த்த நரேந்திரன் உள்ளுக்குள் மெச்சிக் கொண்டார். ஆம், இப்போது அவன் முகம் எதையும் காட்டிக் கொள்ளாமல் தெளிவாய் இருந்தது. காபியை குடித்து முடித்தவன் அடுத்த கணம் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
“இப்போ தான் வந்தான், அதுக்குள்ள கிளம்பிட்டான்” என்றார் வானதி குறையாய்.
கமிஷனரின் அறையில் அவர் முன் விறைப்பாய் நின்றிருந்தான் அதிதீரன். கமிஷனரோ அவனை முறைத்துக் கொண்டிருந்தார். அவனும் அவரை சளைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,
“எவ்வளவு தைரியம் இருந்தா மீடியாகிட்ட இப்படி பதில் சொல்லியிருப்பிங்க தீரன்? ஒரு பொறுப்பான போஸ்ட்டிங்ல இருக்கீங்க நீங்க. நீங்களே இப்படி பண்ணா பொதுமக்கள் நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க? டிப்பார்ட்மென்ட்ல உங்க மேல ஆக்சன் எடுக்க சொல்லி எனக்கு அவ்ளோ பிரஷர்” என்றார் கமிஷ்னர்
“இதுல என்ன தப்பிருக்கு சார்? லாஸ்ட் மந்த் நீங்க கூடத்தான் ஒரு லேடி கூட ஒரு ஹோட்டல் ரூம்ல ஒண்ணா இருந்திங்க. நான் எதுவும் கேட்டேனா சார்?” என்றான் வந்த சிரிப்பை அடக்கியபடி.
அவனைப் பார்த்து முறைத்தவர்,” டேய் அது என் வொய்ப்டா” என்றார் பல்லைக் கடித்துக் கொண்டு.
“இந்த வாய்க் கொழுப்பு மட்டும் உனக்கு அடங்காதே” என்றவர்,
“ராஜ ராஜன் என்ன சொல்றார் தீரன்?” என்றார் கமிஷனர்.
“உங்க பிரண்டு தான அவரு. உங்ககிட்ட எதுவும் சொல்லலையா?” என்றான் நக்கலாய்.
“இருந்தாலும் அவனுக்கு இப்படி ஒரு அழுத்தம் இருக்க கூடாது தீரன். இவ்வளவு பிரச்சனை நடந்த பிறகும் ஒரு போன் பண்ணி கூட என்னோட உதவியைக் கேட்கலை. சம்மந்தப்பட்டிருக்கிறது அவர் பொண்ணுன்னு தெரிஞ்சும்” என்றார் கமிஷனர்.
“அவர் எப்பவுமே அப்படித்தான சார். அந்த நேர்மை தான் அரசியல்ல அவரை இந்த அளவுக்கு கூட்டிட்டு வந்திருக்கு” என்றான் தீரன்.
“கேஸை நடத்துறது அதிதீரன்ற நம்பிக்கையில கூட அமைதியா இருக்கலாம் இல்லையா தீரன்?” என்ற கமிஷனருக்கு அமைதியைத் தவிர அவன் பதிலேதும் சொல்லவில்லை.
“இனி எடுத்து வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்லையும் கவனமா இருக்கணும் தீரன். ஏற்கனவே மீடியா வாய்க்கு அவுலா மாறிட்டிங்க. இந்த கேஸ்ல வெண்மொழி மேல தப்பில்லைன்னு நீ நிரூபிச்சே ஆகணும் மேன். ஆல்ரெடி மீடியா முன்னாடி சட்டமா பேட்டி குடுத்துட்ட. இனி இந்த கேஸ்ல மொழி பேர் அடிபட்டா, கண்டிப்பா அது உன் பேரையும் சேர்ந்தே பாதிக்கும் தீரன். டிரக் கேஸ்ல சம்மந்தப்பட்ட பொண்ணோட ஒண்ணா இருந்தன்னு உன்னோட கெரியரையும் அது பாதிக்கும். அட் த சேம் டைம், உன்னையும் அக்யூஸ்ட் லிஸ்ட்ல சேர்த்துடுவாங்க” என்றார் கவலையாய்.
“அவங்க சேர்க்கலைன்னா கூட நீங்க ஐடியா குடுப்பிங்க போல இருக்கே” என்று சிரித்தவனின் முகம் சட்டென்று சீரியசாய் மாற,
“இந்த காம்பிளிகேஷன்ஸ் எல்லாம் தெரியாமையா சார் நான் தலையைக் குடுத்திருப்பேன். எப்பவும் நாம பதுங்கி இருக்குற வரைக்கும் தான் எதிராளியும் பதுங்கி இருப்பான். எப்போ நாம வெளிய வர்றமோ, அப்பவே அவனும் வெளிய வர ஆரம்பிச்சுடுவான். வந்து தான் ஆகணும்” என்றவனை,
“வேற ஆப்ஷன் இல்லை தீரன்” என்றார் கமிஷனர்.
“ஐ டேக் ரெஸ்பான்ஸ்பிலிட்டி போர் எவ்ரிதிங் தட் ஹேஸ் ஹேப்பன்ட் அன்ட் வில் ஹேப்பன் சார்” என்று சல்யூட் அடித்தவனை கர்வத்தோடு பார்த்திருந்தார் கமிஷனர்.