நிவேதா கவனித்தவரை எம்.டி அறையின் உள்ளே ஆட்கள் போய் வந்து கொண்டுதான் இருந்தனர். இன்னும் அவள்தான் பார்க்கவில்லை. பார்க்கவே வேண்டாம் என்பது தான் அவள் எண்ணம். அவர் வேறு எதாவது கேட்டு, தான் எதாவது உளறி வைப்பதை விடப் பார்க்காமல் இருப்பதே நல்லது என நினைத்திருந்தாள்.
எம் டி அறைக்கு அந்தப் பக்கம் கான்பெரென்ஸ் அறை இருக்க… மீட்டிங் எல்லாம் அங்கேதான் நடக்கும் போல…. வெள்ளிக்கிழமை வரை இது போல டைபிங் வேலைகள் தான் செய்து கொண்டிருந்தாள்.
அவள் எதை நினைத்து பயந்து கொண்டிருந்தாளோ.. அன்று அது நடந்தது. அன்று மாலை நான்கு மணி இருக்கும், எம் டி அழைப்பதாக அஷோக் வந்து சொல்லிவிட்டு செல்ல… அப்போது ஆரம்பித்த திக் திக் தான்.
என்ன கேட்பாரோ? தான் எதுவும் உளறி மாட்டிக்கொள்ளக் கூடாது எனக் கடவுளை வேண்டியபடி சென்றவள், எம்.டி அறையின் வெளியே நின்று, கதவுக்கு வலிக்குமோ என்பது போல மெதுவாகத் தட்ட… உள்ளே எப்படிக் கேட்கும், உள்ளே இருந்து பதில் வரட்டும் என வெளியேவே காத்திருந்தாள்.
அவள் வெளியே நின்றிருப்பதைப் பார்த்த அசோக் உள்ளே போ என்றதும், கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவள், நடுக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தால்… அங்கே முகேன் இருக்கையில் உட்கார்ந்து லேப்டாப்பில் எதோ செய்து கொண்டிருந்தான்.
யாரையோ நினைத்து பயந்து கொண்டு வந்தால், முகேனைப் பார்த்ததும் முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் அவனும் ஆடிட்டிங் கம்பனி தானே வைத்திருப்பதாகச் சொன்னார்கள்… ஒருவேளை இது அவனுடைய அலுவலகம் தானோ என அப்போதுத்தான் தோன்றியது.
ச்ச… இது கூட எனக்குத் தெரியலை எனத் தன்னையே நொந்து கொண்டாள்.
வேலையில் கவனமாக இருந்த முகேன், என்ன இன்னுமா வரலை என நிமிர்ந்து பார்க்க, நிவேதா நின்றிப்பதை அப்போதுதான் கவனித்தான், “ஹாய் நிவேதா, வா… எப்படி இருக்கு புது வேலை? பிடிச்சிருக்கா?” என அவளைப் பார்த்து புன்னகையுடன் வரவேற்க….
“ம்ம்… நல்லா இருக்கு.” என்றபடி மெதுவாக நடந்து அவன் எதிரில் சென்று நின்றாள்.
“உட்காரு…” என எதிரில் இருந்த இருக்கையைக் காட்டியவன், “ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு வந்திடுறேன்.” என மீண்டும் லேப்டாப்பில் வேலைப் பார்க்க துவங்கி விட்டான்.
திடிரென்று எதிர்பாராமல் அவனைப் பார்த்தது அவளுக்கு அதிர்ச்சி என அவனுக்குத் தெரியும், அவள் இயல்புக்கு திரும்ப நேரம் கொடுக்க எண்ணியே உடனே பேச்சை ஆரம்பிக்கவில்லை.
நம் மேல் அவனுக்கு அக்கறை இல்லை என நினைத்தோமே, கடைசில் அவன்தானே வேலைக் கொடுத்திருக்கிறான் என நினைத்ததும், நிவேதாவின் கண்கள் கண்ணீரைப் பொழிய….
வேலையின் நடுவே அவளை நிமிர்ந்து பார்த்தவன், தனது லேப்டாப்பை தள்ளி வைத்து விட்டு, “நிவேதா, இப்போ எதுக்கு அழற…. உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை. நீ என் ஆபீஸ்னா வர யோசிப்ப, அதுதான் சொல்லலை.”
“நான் ஒன்னும் அதுக்கு அழலை.”
“அப்புறம் எதுக்கு அழுத?”
“சொல்ல முடியாது போங்க.”
“சரி சொல்ல வேண்டாம். கண்ணைத் துடை நிவி, யாராவது வருவாங்க.” முகேன் சொல்ல, நிவேதா தனது துப்பட்டாவால் கண்ணீரை ஒற்றி எடுக்க…. அந்நேரம் யாரோ கதவை தட்ட, அவர்கள் வருவதற்குள் முகேனே எழுந்து வெளியே சென்றான். நிவேதா அதற்குள் சுதாரித்துக் கொண்டாள். இது அவன் அலுவலகம். இங்கே தன்னால் அவனுக்கு எந்தச் சங்கடமும் வரக் கூடாது என நினைத்தவள், இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தாள்.
யாரோ ஒருவரிடம் வேலைக்கு என்று வந்து விட்டாள். அது முகேனாக இருந்தால் நல்லதுதானே… இப்போது அவன் தன் முதலாளி என மனதில் பதியவைக்க முனைந்தாள்.
சிறிது நேரம் சென்று உள்ளே அந்த முகேன் அவளைப் பார்த்து விட்டு இருக்கையில் உட்கார்ந்தான்.
“சொல்லுங்க சார் எதுக்குக் கூப்பிட்டீங்க?” என அவளாகவே கேட்டாள். சார் என்ற அழைப்பிலேயே… அவள் என்ன நினைக்கிறாள் என முகேனால் யூகிக்க முடிந்தது.
“நிவேதா, நமக்குள்ள நாம எப்பவும் வெளிப்படையா பேசுவோம் சரியா…. உனக்குக் கஷ்டமா இருக்க வேண்டாமேன்னு தான் ஈஸியா வேலைக் கொடுத்தது. ஆனா அஷோக் அடுத்த வாரம் உனக்கு வேற வேலைக் கொடுப்பார். அப்ப நீ முழிச்சிட்டு இருக்கக் கூடாது. அதுக்குதான் கூப்பிட்டேன்.”
அடுத்த வாரம் அவள் செய்யப் போகும் வேலையை விளக்கியவன், ஒரு தாளில் அதற்குத் தேவையான குறிப்புகளையும் எழுதினான். அடுத்த வார வேலையின் முன்னோட்டமாக இப்போது சிலது சொல்லிக் கொடுத்தான்.
கல்லூரி காலத்திலேயே முகேன் சொல்லிக் கொடுத்தால் கேட்டுக் கொண்டே இருக்கலாம், மனதில் பதிவது போலத் தெளிவாகச் சொல்லிக் கொடுப்பான். அவன் மேஜையில் இருந்த இன்னொரு கணினியில் அவளை எக்ஸ்செல் ஷீட் திறக்க செய்து, அவளுக்குச் சில வேலைகள் கொடுக்க…. நிவேதாவுக்குச் சிலது தெரிய, சிலது தெரியவில்லை.
அவள் அவனிடம் கேட்க, “நிறைய மறந்திட்ட.” என்றவன், “நாளைக்கு ஆபீஸ் நாலு மணி வரை தான். நாளைக்கும் வா சொல்லித் தரேன்.” என்றவன், அவன் அறை அலமாரியில் இருந்து கணக்கியல் சம்பந்தமாகச் சில புத்தகங்களை எடுத்து கொடுத்து, வீட்ல உட்கார்ந்து முதல்ல இருந்து படிக்கிற என்று வேறு சொல்ல… ஐயோ திரும்ப முதல்ல இருந்தா என நினைத்தாலும், அவளுக்கும் வேறு வழியில்லை. வாங்கி வைத்துக் கொண்டாள்.
“சரி இன்னைக்குப் போதும், நீ வீட்டுக்கு கிளம்பு.” என்றான். அப்போது நேரமும் ஆறு மணி ஆகியிருக்க, நிவேதா அவன் தாளில் எழுதியதையும் நியாபகமாக எடுத்துக் கொண்டு சென்றாள்.
கதவின் அருகே சென்று திரும்பிப் பார்த்த நிவேதா, “தேங்க்ஸ் சார்…” என்றாள் அழுத்தி.
இப்போதே பேசி அவளைக் குழப்ப வேண்டாம். முதலில் அவள் பழைய மாதிரி ஆகட்டும் என நினைத்தான்.
நிவேதா வெளியே வந்த போது, மொத்த அலுவலகமும் காலியாக இருந்தது. ஓய்வறைக்குச் சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தவள், அவள் பையை எடுத்துக் கொண்டு சென்றாள்.
ரயில் நிலையம் வந்ததும் வினோதாவை அழைத்தவள், “ஏன் டி என்கிட்டே அது முகேன் கம்பெனின்னு சொல்லலை… உன்னால நான் இன்னைக்குப் பல்பு வாங்கினேன்.” என்றதும், நிவேதாவுக்குச் சுவாரசியமாக இருக்க…
“என்ன நடந்துச்சு?” என்றதும், தான் பயந்து கொண்டே சென்றது, அங்கே முகேன் இருந்தது, அவன் அவளுக்கு வேலையைக் கற்றுக் கொடுத்தது வரை சொன்னாள்.
வினோதா நொந்து போனாள். “வேற ஒன்னும் நடக்கலையா?” எனக் கேட்க,
“வேற என்ன நடக்கும்? சரி நீ ஏன் சொல்லலை அதைச் சொல்லு.”
“முகேன் தான் சொல்ல வேண்டாம் சொன்னான். அவன் கம்பெனினா நீ வர மாட்டன்னு சொன்னான்.” என்றாள்.
“அப்போ அவங்களுக்கு என்னைப் பத்தி எல்லாம் தெரியுமா?”
“நீ ஆகாஷ்கிட்ட அவனைப் பத்தி கேட்டு தெரிஞ்சிகிட்ட இல்ல….. அது போல அவன் என்கிட்டே கேட்டான்.” என்றதும், நிவேதா வாய் மூடிக் கொண்டாள். ஆகாஷ் இப்படி உளறி வைப்பான் என அவளுக்கு எப்படித் தெரியும். “உனக்கு அங்க வேலைப் பார்க்கிறது ஓகே தான…” என வினோதா கேட்க,
“எனக்கு ஓகே, ஆனா பாவம் அவங்களுக்குத்தான் என்னால வேலை.” என்றவள், “ஏற்கனவே ஆபீஸ்ல அவங்களுக்கு ரொம்ப வேலை. இதுல என்னை வேற பார்த்திட்டு இருக்காங்க. அதுக்காகவே வேலையைச் சீக்கிரம் கத்துக்கணும்.” என்றவள், ரயில் வருவதைப் பார்த்து, “சரி வினோ, ட்ரைன் வந்திடுச்சு, அப்புறம் பேசுறேன்.” என வைத்து விட்டாள்.
நிவேதா அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் போதே நல்ல பசியாகத்தான் வருவாள். வந்ததும் உண்டு விட்டு, முகேன் கொடுத்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.
முன்பெல்லாம் பசிக்குதோ பசிக்கவில்லையோ, உண்பதை ஒரு வேலையாக வைத்திருப்பாள். அவ்வளவு மன அழுத்தம். ஆனால் இப்போது சில நாட்களாகப் பசித்தால்தான் உணவின் நினைவே வந்தது. மதியம் சப்பாத்தி தான் எடுத்து செல்வாள். இரவு ஏழரைக்கே சாப்பாடு சாப்பிட்டு பிறகு எதுவும் உண்ணுவதில்லை.
“என்ன டி வந்ததும் கதை புக்கோட உட்கார்ந்திட்ட.”என்ற அன்னையிடம்,
“இது கதை புக்கா… அக்கௌண்ட்ஸ் புக் மா… எனக்கே ஒன்னும் தெரியலை, நீங்க வேற…” என்றவள், உறக்கம் வரும் வரை படித்து விட்டே உறங்கினாள்.
“சனிக்கிழமை என்பதால் நான்கு மணி வரைதான் அலுவலகம். எல்லோரும் கிளம்பியதும், முகேனின் அறைக்குச் செல்ல… அவளை எதிர்பார்த்திருந்தவன், அன்றும் அவளுக்கு நிறையச் சொல்லிக் கொடுத்தான்.
ஆறு மணியானதும் நிவேதா கிளம்ப, முகேனும் அவளுடன் கிளம்பினான். “வா நான் உன்னை ரயில்வே ஸ்ட்ஷனில் விடுறேன்.” என்று முகேன் அழைக்க,
“இல்லை கிட்டதான் நான் நடந்தே போயிடுறேன்.” என நிவேதா சென்று விட்டாள்.
மறுநாள் வீட்டிற்கு வந்த ஆகாஷ் முகேனிடம், “டேய் நீ என்ன பண்ணிட்டு இருக்க. அவளுக்குக் கிளாஸ் எடுத்திட்டு இருக்கியா? இன்னும் கல்யாணம் பண்ணனும்னு உனக்கு நினைப்பு வரலை.” எனக் கேட்க,
“ம்ம்… இப்ப அதுதான் பண்ண முடியும். அவ என்னைச் சார்ன்னு கூப்பிடுறா டா… மேடம் என்னைத் தள்ளி வைக்கிறாங்களாம்.” என்றான். அவன் சாதாரணமாகக் காட்டிக் கொண்டாலும், அவன் வலி புரியவே செய்தது.
“பேச வேண்டியது தான…”
“கொஞ்ச நாள் போகட்டும். அவ என்னைக் கல்யணம் பண்ணிகிறாளோ இல்லையோ… ஆனா இதுக்கு முன்ன இருந்த மாதிரி இல்லாம… தைரியமா அவ சொந்தக் காலில நிற்கணும்.”
“இப்பத்தான் வேலையை நல்லா கத்துக்கிறா… கொஞ்ச நாள் போகட்டும். நான் எதாவது பேசி… மேடம் வேலைக்கு வராம போயிட்டா…” என்றான்.
திங்கள் கிழமை அஷோக் அலுவலகத்தின் கணக்கு வழக்குகளைக் கணினியில் பதிவு செய்யக் கொடுக்க.. ஏற்கனவே முகேன் சொல்லிக் கொடுத்திருந்ததால்… நிவேதா தடுமாற்றம் இல்லாமல் செய்ய… அசோக் அங்கிருந்து திருப்தியாகச் சென்றார்.
நிவேதாவுக்கு ஒரு இடத்தில் சந்தேகம் வர… முகேனை கைப்பேசியில் அழைத்தாள். அலுவலகத்தில் இருந்து கொண்டு எதற்கு அழைக்கிறாள் எனப் புரியாமல் எடுத்தவன், எதிரில் அஷோக் இருந்ததால்… “ம்ம்…. சொல்லு.” என்று மட்டும் சொல்ல…
தனது சந்தேகத்தைக் கேட்டவள், இது டெபிட்டா கிரெடிட்டா எனக் கேட்க, முகேனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.
ஒரு நிமிஷம் என அஷோக்கிடம் சொல்லிவிட்டு, தள்ளி ஜன்னலோரம் வந்தவன், “அது வரவா செலவா” என அவளையே கேட்க, வரவு என்றாள். “அப்ப அது எங்க வரும்?” என்றதும், “புரிஞ்சிடுச்சு, சரி வச்சிடுறேன், தேங்க்ஸ்.”
“இரு…” என்றவன், “ஆனா உனக்கு ரொம்பத் தைரியம் தான். எம் டிகே போன் பண்ணி டவுட் கேட்கிற பார்த்தியா… வேற கம்பனிக்கு போயிருந்தா என்ன பண்ணி இருப்ப?” என அவன் சிரித்தபடி கேட்க,
“அப்படியெல்லாம் இல்லை முகேன். இப்ப நீங்க இருக்கிற இடத்துக்கு மரியாதை கொடுக்கணும் தான… அஷோக் சார் எவ்வளவு பெரியவர், அவரே உங்களைச் சார்ன்னு தான் கூப்பிடுறார். அதனாலதான் வேற ஒண்ணுமில்லை.”
“சரி நம்பிட்டேன்.” என்றவன், அஷோக்கை பார்க்க, அவர் கைப்பேசியில் எதோ பார்த்துக் கொண்டு இருக்க… அவள் இன்றுதான் இயல்பாகப் பேசியதால் பேச்சை தொடர்ந்தான்.
“என்னைப் பத்தி எப்பவும் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கலையா நிவேதா?” என அவன் ஆழ்ந்த குரலில் கேட்க,
“முதல்ல வீட்ல நடந்த பிரச்சனையில எதுவும் யோசிக்கவே முடியலை. அப்புறம் மூன்னு வருஷம் கழிச்சு, கூகுல்ல முகேன் சி.ஏன்னு போட்டு தேடி பார்த்தேன்.”
“நீங்க சேர்ல ஜம்முன்னு உட்கார்ந்திருக்க ஒரு போட்டோவோட… முகேன் சி.ஏன்னு இருந்தது. நீங்க நினைச்ச மாதிரி சி.ஏ ஆகிடீங்கன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன்.” என்றாள்.
அவன் மும்பையில் வேலைக்கு சேர்ந்த புதிதில், முகநூல் தொடங்கிய போது அந்த புகைபடத்தை தான் வைத்திருந்தான். அதைப் பார்த்திருப்பாள் என நினைத்தான்.
அஷோக் நிமிர்ந்து அவனைப் பார்க்க, “சரி அப்புறம் பேசலாம்.” என வைத்து விட்டான். மனம் ஏனோ லேசானது போல இருந்தது.
ஒரு மாதம் சென்றிருக்கும், அன்று சனிக்கிழமை மாலை, ஆகாஷ் ஜெய்யையும் அழைத்துக் கொண்டு மாலை முகேனின் அலுவலகம் வந்தான். மற்ற அலுவலர்கள் கிளம்பி இருக்க… இவர்கள் நான்கு பேர் மட்டும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
ஜெய்யைப் பார்த்தது நிவேதாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவனைப் பற்றிக் கேட்க,
எதோ கம்பெனியில் எச். ஆர் என்றவன், மனைவியும் வேலைப் பார்ப்பதாகச் சொன்னான்.
“இவன் பொண்டாட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட். சார் பொண்டாட்டிக்கு ரொம்பப் பயப்படுவார்.” என ஆகாஷ் சொல்ல… நிவேதாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் அப்படியா என ஜெய்யைப் பார்க்க… “நான் முன்னாடி பணத்துக்காகக் கஷ்டபட்டேன் தான… அதனால இப்ப கொஞ்சம் அதிகம் செலவு செய்வேன். அவ சேர்த்து வைக்கணும் சொல்வா… அதுதான் வேற ஒன்னுமில்லை. என் நல்லதுக்குதானே சொல்றா… அதனால நானும் அவ சொல்றபடி கேட்பேன்.” என்றான் ஜெய்.
“இல்லைன்னா மட்டும் நீ அந்த வீட்ல இருந்திட முடியுமா?” என ஆகாஷ் கேட்க, ஜெய் அவனை முறைக்க… நிவேதா வாய்விட்டு சிரித்தாள்.
அதன்பிறகும் ஒரே சிரிப்புச் சத்தம் தான். இப்படிச் சிரித்து வெகு நாட்கள் ஆகியிருக்க… அன்று சந்தோஷமான மனநிலையில் நிவேதா வீட்டுக்கு கிளம்ப… அவளுடன் பேச வேண்டும் என நினைத்து வந்த ஆகாஷ், ஜெய்யை வண்டியை எடுத்துக் கொண்டு பல்லாவரம் ஸ்டேஷன் வர சொன்னவன், நிவேதாவுடன் ரயிலில் சென்றான்.
சனிக்கிழமை என்பதால் ரயிலில் கூட்டம் இல்லை. இருவரும் வாயிலிலேயே நின்று பேசிக்கொண்டு வந்தனர்.
“அப்போ தான் எதோ காரணத்தினால விலகிடீங்க. இப்ப என்ன? ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை… நீங்களே கல்யாணம் பண்ணிக்கலாம் தான…” என கேட்டே விட்டான்.
“எப்படியும் நடக்காதுன்னு தெரியும் ஆகாஷ். எனக்கு முகேனை கஷ்டபடுத்திப் பார்க்க விருப்பம் இல்லை… அதுதான் நானே விலகிட்டேன்.”
“சரி இப்ப என்ன?”
“இப்பவும் நடக்காதுதான். எங்க அப்பா ஏற்கனவே எங்க அக்கா கல்யாணத்துல மனசு உடைஞ்சு போயிட்டார். திரும்ப நானும் அப்படிப் பண்ணா, அவர் என்ன ஆவாரோ தெரியாது.”
“இன்னொன்னும் யோசிச்சு பாரு. முகேனுக்கு இப்ப நான் பொருத்தமே இல்லை. அவங்க எப்படி இருக்காங்க. அவங்களுக்குச் சமமா படிச்ச, அழகான பொண்ணு கிடைப்பா.”
“அப்படின்னு அவன் சொன்னனா? நீயா ஏன் நினைக்கிற?”
“எனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கு. நான் அவங்க வேண்டாம்னு போயிட்டேன் புரியுதா… எல்லாம் நல்லபடியா போயிருந்தா… எனக்கு எப்பவோ கல்யாணம் ஆகி இருக்கும். அப்ப நான் அவங்களைப் பத்தி யோசிச்சிருபேனா என்ன? என் வாழ்க்கையைத் தானே பார்த்திட்டு போயிருப்பேன்.”
“அவங்க கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் முன்னேறி இருக்காங்க. அவங்களுக்கு எல்லாமே சிறப்பா கிடைக்கணும். அவங்க எனக்காகத் தியாகம் பண்ணனும்னு அவசியம் இல்லை. நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை.”
“அவங்க வாழ்க்கை ரொம்பச் சிறப்பா இருக்கணும். நான் அதைதான் விரும்புறேன்.”
“சரி அப்புறம் உன் இஷ்டம். எனக்குக் கேட்கனும்னு தோனுச்சு நான் கேட்டேன் ஓகே வா… முகேனுக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லை.”
“அவன் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லை. கம்பெனியை இன்னும் பெரிசாக்கணும் சொல்லிட்டு இருந்தான்.” என நிவேதா எதையும் நினைத்துக் குழப்பக் கூடாது என ஆகாஷ் அவளை திசை திருப்பி விட்டான்.
இப்போது வாடிக்கையாளர்கள் அதிகரித்து இருக்க… இன்னும் சில ஆட்களை வேலைக்கு எடுத்து பெரிய அளவில் கம்பனியை அவன் விரிவுபடுத்த போவது நிவேதாவும் அறிந்தது தான். மற்றவர்கள் வாடிக்கையாளர்களின் கணக்கு வழக்குகளைப் பார்க்க… நிவேதாவும் அஷோக்கும் அவன் கம்பனியின் கணக்கு வழக்குகளைப் பார்ப்பதால் அவளுக்குத் தெரியும்.
முகேனின் வளர்ச்சியை நினைத்து நிவேதா சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.