நிவேதாவின் குணமே அதுதான். அவள் நண்பர்கள் சொன்னால் அதை ஆராய எல்லாம் மாட்டாள். அப்படியே ஏற்றுக்கொள்வாள். இன்னமும் ஆகாஷையும் முகேனையும் இங்கே எதிர்பாராமல் சந்தித்தாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
முன்பே ஒருவரையொருவர் தெரியும் என்றால்… வினோதா தன்னைப் பற்றிச் சொல்லி இருப்பாளோ என நினைத்து அதுவேறு வருத்தப்படப்போகிறாள் என்றுதான், முன்பே தொடர்பில் இருந்தோம் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் இருந்தனர்.
ஹேமாவுக்கு இரண்டு குழந்தைகள், அதில் இரண்டாவது குழந்தைக்கு இப்போதுதான் ஒரு வயதாகிறது என்பதால்… அவள் மட்டும் சீக்கிரமே கிளம்பிவிட… மற்றவர்கள் மாலை வரை மாலில் தான் இருந்தனர். அங்கே ஸ்னோ பவுலிங் விளையாடினர். ஐஸ்கிரீம் வாங்கி உண்டனர். எல்லோரும் சேர்ந்து தான் இருந்தனர். முகேன் நிவேதாவிடம் எதுவும் தனியாகப் பேச முயற்சிக்கவில்லை. நிவேதா ஆகாஷிடம் தான் முகேனைப் பற்றிக் கேட்டாள்.
“இந்த ஒரு வருஷமா தான் சென்னையில இருக்கான். சமீபத்தில்தான் பார்த்தோம்.”
“கல்யாணம் ஆகிடுச்சா?”
“பொண்ணு பார்த்திட்டு இருக்காங்க.”
“நல்லா படிச்சிருக்காங்க, சொந்த பிஸ்னஸ், ஆளும் பார்க்க செம்மையா இருக்காங்க. நல்ல வரனே வரும்.” என்றால் நிவேதா மகிழ்ச்சியாக. ஆகாஷ் அவளை ஒருமாதிரி பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.
கிளம்பும் சமயம் ஆகாஷ் பைக்கில் உமா அவனோடு சென்றுவிட… வினோதாவையும், நிவேதாவையும் முகேன் வீட்டில் விடுவதாக அழைத்துச் சென்றான்.
திரும்பக் கல்லூரி நாட்களுக்குள் சென்று விட்டு வந்தது போல இருந்தது. நிவேதாவுக்கு வீட்டுக்கு செல்ல மனமே இல்லை. இன்று போல மீண்டும் அவர்கள் எல்லாம் சேர்ந்து சந்திக்க முடியுமா என்பது சந்தேகமே…
வினோதா மதுரையில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றாள். ஹேமா இருப்பது ஹைதராபாத்தில். அவள் கணவர் வெளிநாடு சென்றிருப்பதால், இப்போது சில மாதங்களாக அம்மா வீட்டில் இருக்கிறாள். அடுத்த வாரம் அவர் வந்தால் அவளும் சென்று விடுவாள்.
எல்லோரும் பிஸியாக இருக்க, தான் மட்டும் தான் சும்மா இருக்கிறோம் எனத் தோன்றியது. தனக்குச் செய்ய எதுவும் இல்லையே என அது வேறு தன்னிறக்கமாக உணர வைத்தது. இதெல்லாம் யோசித்தபடி காரில் உட்கார்ந்து இருந்தாள். வினோதாவும் முகேனும் தான் பேசிக்கொண்டு வந்தனர்.
முதலில் நிவேதாவை அவள் வீட்டில் இறக்கி விட்டனர். முகேன் அவளை எதுவும் தனிப்பட்டு விசாரிக்கவே இல்லை. நிவேதாவுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. நின்றால் அழுதுவிடுவோமோ என்ற அச்சத்தில், வரேன் என்று மட்டும் சொல்லிவிட்டு சென்று விட… வினோதாவும் முகேனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஏன் டா நீ அவகிட்ட பேசவே இல்லை. போ… இதுக்குதான் நான் நீங்க வராதீங்க சொன்னேன்.”
“நான் வேற ஐடியா வச்சிருக்கேன், வா சொல்றேன்.” என முகேன் காரை திருப்பினான்.
முகேன் சி ஏ முதல் சுற்றில் தேர்வான போது, நிவேதாவிடம் தான் முதலில் சொன்னான். எப்போதுமே நிவேதா அவனுக்கு ஸ்பெஷல் எனக் கல்லூரி நாட்களில் உணர்ந்திருக்கிறாள். ஒருவேளை அப்படி இல்லையோ… தான் அதிகபடியாகக் கற்பனை செய்து கொண்டோமோ…. என இப்போது தோன்றியது.
என் வாழ்க்கையின் மீது அவனுக்கு அக்கறை இல்லையா… நான் எப்படி இருக்கிறேன் எனத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவே இல்லை. அவன் கேட்டாலும், தன்னால் என்ன சொல்லியிருக்க முடியும் என்றும் நினைத்து, இரு வேறு மனநிலையில் தவித்தாள்.
வீட்டிற்குள் வந்தவளுக்கு வீட்டினரை பார்த்ததும், இவர்களால் தானே என அவ்வளவு கோபம் வந்தது.
வீட்டிற்குள் நுழையும் போதே… செருப்பைத் திசைக்கு ஒன்றாக உதறிவிட்டு தான் வந்தாள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாருமதி வந்திருந்தாள்.
“என்ன டி போகும் போது நல்லாத்தானே போன… இப்ப என்ன?” என்றார் தேவகி.
“ம்ம்… இந்த வீட்ல சொல்லிட்டா மட்டும்.” என்றவள், “என் பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லிக்கிற மாதிரி இருக்காங்க. ஆனா நான் என்னைப் பத்தி என்ன சொல்றது?”
“படிப்பும் கரஸ்ல தான் முடிச்சேன். வேலையும் இல்லை… இப்ப நான் வேலைக்குப் போகணும்னு நினைச்சாக் கூட… எனக்கு யார் வேலைக் கொடுப்பா?”
“எதுக்கு வேலைக்குப் போகணும்? கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான…”
“ஆமாம் அப்படியே நீங்க நல்ல மாப்பிள்ளையை பார்த்து நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். மனசாட்சி தொட்டு சொல்லுங்க, எனக்கு நல்ல இடமா வந்தது.”
உண்மையில் நிவேதாவின் விபத்து குறித்து அறிந்தவர்கள், வேறு எதுவும் உடலில் பிரச்சனை இருக்குமோ என்ற அச்சத்தில் அவளை எடுக்கத் தயங்கினர். அது தெரிந்ததால்தான் வந்த வரனை முடித்து விடுவோம் எனப் பெற்றோர் நினைக்க, நிவேதாவுக்குப் பாவம் அதெல்லாம் தெரியவில்லை. தான் ஏன் அப்படித் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தாள். “வயசு ஆகுது இல்ல… முன்ன பின்ன தான் வரும்.” என்றார் தேவகி. நிவேதாவுக்கு அப்படியொரு கோபம் வர…
“அதுக்கு யார் காரணம்? உங்களை நம்பினதுக்கு எனக்கு நீங்க என்ன செஞ்சீங்க?” என்றவள்,
“உங்களுக்காக எல்லாம் பார்த்துப் பார்த்துதான் நான் இன்னைக்கு இந்த நிலைமையில நிற்கிறேன். இனி என் வாழ்க்கையை நான் பார்த்துகிறேன். நான் வேலைக்குப் போகப் போறேன். அதுக்கும் எதாவது சொன்னீங்க அவ்வளவுதான்.” என ஆத்திரமாகக் கத்திவிட்டு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். முரளிக்கும் அவள் பேசியது கேட்டுதான் இருந்தது.
இன்று நண்பர்களை எல்லாம் பார்த்ததில், தான் மட்டும் இப்படி இருக்கிறோமே என்ற எண்ணமே இப்படியெல்லாம் நிவேதாவை பேச வைத்திருந்தது. இத்தனை நாள் அவள் தன்னிலை உணராமலே தான் இருந்தாள். இப்போதுதான் தனக்கு என்று யோசிக்கவே எண்ணம் வந்திருந்தது.
சாருமதி தன்னால் தான் தங்கைக்கு இந்த நிலை என உணர்ந்தே இருந்தாள்.
“அம்மா, அவ வெளிய நாலு இடத்துக்குப் போய் வந்து இருந்தாதான். கல்யாணம் செஞ்சுக்கணும்னு அவளுக்குத் தோணும். வேலைக் கிடைச்சா அவ போகட்டும். நானும் அவளுக்கு எதாவது வேலைக்கு ஏற்பாடு பண்றேன்.” எனச் சொல்லிவிட்டு சென்றாள்.
அப்படிப் பேசி விட்டாலும், தனக்கு யார் வேலைக் கொடுப்பார்கள் என நிவேதாவுக்குத் தோன்ற… அதை நினைத்து வேறு அழுது கொண்டிருந்தாள். அன்று இரவு உண்ணவே இல்லை.
இரவு வினோதா, உமா, ஆகாஷ் எல்லாம் அழைத்துப் பார்க்க… இருந்த மன நிலையில் யாரோடும் பேச விருப்பம் இல்லாமல் போன்னை எடுக்கவே இல்லை.
மறுநாள் தீவிரமாக வேலை தேடத் துவங்கினாள். அதில் அவர்கள் கேட்டிருந்த முன் அனுபவத்தை எல்லாம் பார்த்துவிட்டு, வேலை கிடைக்காது என முடிவுக்கு வந்திருந்தாள்.
“உன் தங்கச்சி ஒரு மாதிரி இருக்கா.” எனச் சாருமதிக்கு அழைத்துத் தேவகி சொல்லி இருக்க… அவள் நிவேதாவிடம் கொடுக்கச் சொன்னாள். நிவேதா வேலைக் கிடைக்காது போல என்றாள்.
“எதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சிட்டு, வேலைத் தேடினா கிடைக்கும்னு அத்தான் சொன்னாங்க. நான் அது பத்தி விசாரிச்சிட்டு சொல்றேன்.” என்றாள்.
அதற்கு அடுத்த நாள் வினோதாவே நேரில் வந்துவிட்டாள். அவள் மட்டும் வந்திருந்தாள். “எருமை போன் பண்ணா எடுக்க மாட்டியா?” என்றதும்,
“நானும் வீணாகி போய், என் வாழ்க்கையும் வீணாகிப் போய்த் தான் உட்கார்ந்திருக்கேன். என்னோட பேசி நீங்க ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க? அதுதான் எடுக்கலை.” என்றாள். வீட்டினர் எல்லோரையும் வைத்துக் கொண்டுதான் சொன்னாள்.
“என்ன இவ இப்படிப் பேசுறா….” என வினோதாவுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
“அடிச்சேன்னு வச்சுக்கோ பல்லெல்லாம் கொட்டிடும்.” என்ற வினோதா,
“நான் ஏன் இப்ப வந்தேன் தெரியுமா? உனக்கு என் ப்ரண்ட்கிட்ட சொல்லி வேலைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன். நாளையில் இருந்து ஒழுங்கா வேலைக்குப் போற…” என்றாள்.
“எனக்கு எந்த வேலையும் தெரியாது. வீணா நீ எனக்காகப் பார்த்து அசிங்கப்படாத.”
“உன்னைப் பத்தி எல்லாம் சொல்லி இருக்கேன். முதல்ல ட்ரைனிங் தான். அதுக்குப் பிறகு அவங்களே வேலை கொடுப்பாங்க.” என்றதும், நிவேதாவுக்குச் சிறிது நம்பிக்கை வர…
“எதுக்கும் எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லிடு.” என்றாள்.
“எனக்கு வேலைக் கொடுக்கிறதே பெரிசு…. அது என்ன பிடிச்சா…. நான் பிடிச்சாலும், பிடிக்கலைனாலும் போவேன்.” என்றால் நிவேதா வீட்டினரை பார்த்து முறைத்துக் கொண்டு.
அறைக்குள் இருந்து கேட்டிருந்த முரளி, வெளியே வந்து வினோதாவிடம் கம்பனி பற்றிக் கேட்க, அவள் விபரம் சொன்னாள்.
“இங்க இருந்து தூரம் போல இருக்கே… கிட்ட இருக்க மாதிரி வேற வேலை பார்க்கலாமே.” என்றதும், நிவேதாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
“ஆமாம் எனக்கு வேலைக் கொடுக்க வரிசையில நிற்கிறாங்க, கிட்ட தூரம் எல்லாம் பார்க்க…” எனச் சிடு சிடுத்தாள்.