இதயம் இணையும் தருணம்

அத்தியாயம் 7

ஒருநாள் ஆகாஷ் வினோதாவை அழைத்துக் கத்தினான். “உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? நிவேதாகிட்ட பேசினியா இல்லையா? அவ எப்படி இருக்கான்னு சொல்ல உனக்கு என்ன கஷ்டம்?” 


“முகேன் மட்டும் வேண்டாம். நாம மட்டும் பேசலாம்.” என்றாள். 


முகேனைத் தவிர எல்லோரும் வீடியோ காலில் கூடினர். பிரவீன் எப்போதுமே இவர்களுடன் அதிக ஒட்டுதலில் இல்லை. அதனால் அவனும் இல்லை. 


“நிவேதா எப்படி இருக்கா?” அருண் கேட்க, 


“சொல்லிக்கிற மாதிரி இருந்தா சொல்ல மாட்டேனா?” 


“என்ன வினோ சொல்ற, நிவேதாவுக்கு என்ன?” என்றதும், வினோதா எல்லாம் சொல்லி விட… கேட்டதும் எல்லோருக்கும் வருத்தமாக இருந்தது. 


எப்படி இருக்க வேண்டிய பெண், இப்படி இருக்கிறதே என எல்லோருக்கும் வருத்ததம், 


“இதுக்குக் காரணம் அவங்க அப்பா தானே… நான் அந்த ஆளைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போகப்போறேன்.” என்றான் ஜெய். 


“டேய், ஏன் டா லூசு மாதிரி பேசுற” என அருண் கண்டிக்க, 


“மச்சான், நாம பிரண்ட்ஸ் ஆன புதுசுல… சேர்ந்து சாப்பிடும் போது, நான் எடுத்திட்டு வர்ற டிபன் நல்லாவே இருக்காது. நீங்க எல்லாம் என்னோடது எடுதுக்கவே மாட்டீங்க, ஆனா உங்களதை மட்டும் என்னை எடுத்துக்கச் சொல்வீங்க. அதனால நான் உங்ககிட்ட இருந்து எடுக்கவே மாட்டேன். ஆனா நிவேதா அப்படி இல்லை. என்னோடதை முழுசா அவ எடுத்திட்டு, எனக்கு அவங்க வீட்ல இருந்து கொண்டு வந்ததைக் கொடுக்கும்.” 


“நல்ல மனசு டா அந்தப் பொண்ணுக்கு. அவ இப்படியெல்லாம் கஷ்டபடக் கூடாது.” என்றான். 


“நான் அப்ப எல்லாம் நினைச்பேன், நம்ம செட்லையே நிவேதா தான் அதிக முக லட்சனமா இருப்பா, பார்க்கிற முதல் மாப்பிள்ளையே அவளைக் கல்யாணம் பண்ணிட்டு போயிடுவாருன்னு, அவளுக்கு இவ்வளவு நாள் கல்யாணம் நடக்கலைன்னு நம்பவே முடியலை.” என்றால் உமா வருத்தமாக. 


“இப்பவும் ஒன்னும் ஆகிடலை, அவளைப் பார்த்த முதல் மாப்பிள்ளையே அவளைக் கட்டுவான்.” என்ற ஆகாஷ், “முகேன் தான் முதல்ல நிவேதாவை விரும்பினது, அவன்தான் கல்யாணம் பண்ணனும்னு இருக்கு. அவன் அவளைக் கல்யாணம் பண்ணிப்பான்.” என்றதும், அந்த விஷயம் உமாவுக்கும், ஹேமாவுக்கும் புதிது. 


“ஹே… அப்படியா?” என இருவரும் சந்தோஷப்பட… 


“இங்க பாரு, எதுனாலும் முகேன் தான் முடிவு பண்ணனும். நீ அப்ப இருந்த நிவேதாவை வச்சிட்டு பேசுற… இப்ப முகேன் இருக்கிற நிலைக்கும், நிவேதா இருக்கிற நிலையும், நாம யோசிச்சு பார்க்கணும்.” 


“முகேனுக்கு விருப்பம் இல்லாத எதையும் நாம அவன் மேல திணிக்க முடியாது. முகேனின் விருப்பம் தெரியாம, நிவேதா மனசுல எந்த ஆசையும் நாம உண்டாக்க வேண்டாம்னு நான் நினைக்கிறேன்.” 


“அதெல்லாம் எனக்கு அவனைத் தெரியும், நிவேதாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு தெரிஞ்சா, முகேன் நிவேதாவை தான் கல்யாணம் பண்ணுவான்.” என்றான் ஆகாஷ் நம்பிக்கையாக. 


“அதை நீ சொல்லாத… அவன் சொல்லட்டும். எதுனாலும் அவனே முடிவு எடுக்கட்டும்.” என வினோதா சொல்ல, ஜெய்யும் அவள் சொல்வதுதான் சரி என்றான். 


“நான் அடுத்த வாரம் சென்னை வரேன். நான் நிவேதாவை நேர்ல பார்த்து பேசுறேன். அவளும் முகேனை கல்யாணம் பண்ண ஒத்துக்கணும். நீ அதுக்குள்ள முகேனோட விருப்பம் கேட்டு வை.” என்றால் ஆகாஷிடம். 


ஆகாஷ் அன்றே மாலை நேராக முகேனின் அலுவலகம் செல்ல, இருவரும் கிளம்பி வெளியே சென்று பேசினர். ஆகாஷ் நிவேதாவைப் பற்றி எல்லாம் சொல்லி விட்டான். 


முகேன் வெகு நேரம் யோசனையில் இருந்தான். 


“என்ன டா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிற.” 


“நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு பீல் பண்ணாங்க.” என அவன் என்ன நினைக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ள ஆகாஷ் கேட்டுப் பார்த்தான். 


“கல்யாணம் லேட்டா கூடப் பண்ணிக்கலாம். இப்ப நிறையப் பெண்கள் லேட்டா தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அது பிரச்சனை இல்லை. ஆனா நிவேதா இருக்கிற நிலைதான் எனக்குக் கஷ்டமா இருக்கு.” 


“அவளுக்கு எவ்வளவு மனஉளைச்சல் இருந்திருக்கும். இதுல விபத்து வேற நடந்திருக்கு. ஒரு வேலைக்குப் போனா கூட அவளுக்கு ஒரு மாற்றமா இருந்திருக்கும். அதுதான் எனக்குக் கஷ்டமா இருக்கு.” என்றான் முகேன். 


“என்ன இவன் இன்னும் முக்கியமான விஷயத்துக்கு வர மாட்டேங்கிறான்.” என ஆகாஷுக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் முகேனுக்கு அது தெரியவில்லை. அவன் மேலும் தொடர்ந்தான். 


“எனக்கு இப்ப இருக்கக் கவலை எல்லாம், எப்படி நிவேதா மனசு மேலும் கஷ்டபடாம அவளை அந்தச் சூழ்நிலையில இருந்து மீட்டு எடுக்கிறதுன்னு தான்.” 


“மீட்டு எடுக்கிறதுன்னா, எனக்குப் புரியலை.” இப்படிச் சுத்தி வளைக்கிறானே நேரடியாக விஷயத்துக்கு வராமல் என ஆகாஷுக்கு கடுப்பாக இருந்தது. 


“எங்க அம்மா இப்ப கூட உடனே நிவேதா வீட்ல போய் எனக்குப் பொண்ணு கேட்பாங்க புரியுதா… ஆனா இப்பவும் அவங்க வீட்ல ஒத்துகிறது சந்தேகம்தான். எனக்கு இன்னும் நிவேதாவுக்கு எந்தக் கஷ்டமும் கொடுக்கிறது விருப்பம் இல்லை. சுமுகமா இந்தக் கல்யாணம் நடக்கணும். அதுக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கணும்.” என்றான் முகேன் விளக்கமாக. 


“மச்சான் நீ நிவேதாவை கண்டிப்பா கல்யணம் பண்ணிப்ப தான…” ஆகாஷ் நம்ப முடியாமல் கேட்க, 


“ஏன் இவ்வளவு சந்தேகமா கேட்கிற?” என்றதும், 


வினோதா நிவேதாவின் தோற்றம், குடும்பச் சூழ்நிலை எல்லாம் சொல்லி, “இப்ப இருக்க நிவேதாவை உனக்குப் பிடிக்குமான்னு வினோதா யோசிக்கிறா.” என்றும் சொல்லிவிட… 


“அது அவளோட எண்ணம். எனக்கு நிவேதா எப்படி இருந்தாலும் பிடிக்கும். நான் இந்த நிமிஷமே அவளைக் கல்யாணம் பண்ணிக்க ரெடியா தான் இருக்கேன்.” என்றான் முகேன்.
இன்னும் அவன் நிவேதாவை பார்க்க கூட இல்லை. ஆனால் அவளைத் திருமணம் செய்வதில் உறுதியாக இருப்பது, ஆகாஷுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 


“மச்சான் முன்னாடி மாதிரி நீங்க ரெண்டு பேரும், இந்தக் கண்ணுல பேசினது, மனசுல பேசுனது எல்லாம் வேண்டாம். ஒழுங்கா ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி முடிவு பண்ணுங்க.” 


“கண்டிப்பா மச்சான். அப்ப இருந்த மாதிரி இப்ப நான் இல்லை. என்னால தைரியமா நிவேதா அப்பாகிட்ட பேச முடியும். வினோ வரட்டும், அவ வந்தா தான் நிவேதாவோட நாம பேச ஈசியா இருக்கும். நானும் அதுக்குள்ள அம்மாகிட்ட பேசுறேன்.”

முகேன் சொன்னது போல அன்று இரவே அவன் அம்மாவிடம் எல்லாம் சொல்லி விட்டான். 


“நான் நிவேதவைக் கல்யாணம் பண்ணிக்கலாம் நினைக்கிறேன். நீங்க என்ன மா நினைகிறீங்க?” 


“இங்க பாரு நான் இதை எப்பவோ சொல்லிட்டேன். ஒழுங்கா நீ அப்பவே என் பேச்சை கேட்டிருந்தா… நிவேதாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.” 


அம்மா சொல்வது சரிதான் என முகேனும் நினைத்தான், அவள் கஷ்டப்படத் தானும் காரணம் தான் என நினைத்தான். 


அதை உணர்ந்த ஜெயஸ்ரீ, “உங்களுக்கு நேரம் இப்பதான் வந்திருக்கு. அதுதான் இவ்வளவு உங்களைச் சுத்த விட்டிருக்கப் போல…” என்றார். 


“ஆனா அவ பட்ட கஷ்டம் ரொம்ப அதிகம் மா…. இனியும் அவளுக்கு எந்தக் கஷ்டமும் வந்திடக் கூடாது. அதுதான் எனக்குக் கவலையே…” என்றவன், 


“அம்மா நிவேதா எப்படி இருந்தாலும், என் முடிவு மாறாது சரியா…” என்றான். 


இதை ஏன் தன்னிடம் சொல்கிறான் என ஜெயஸ்ரீக்கு புரியவில்லை. எப்படி இருந்தாலும் என்றால் என்ன அர்த்தம்? என யோசித்தார். 


“இல்ல நிவேதா நடுவுல விபத்து நடந்து வெயிட் போட்டுட்டா போல… உங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டா, நீங்க எதுவும் அவ முன்னாடி காட்டிக்க மாட்டீங்க இல்ல…” என்றான். 


“வரப் போகிற பொண்டாட்டிக்காக எப்படி யோசிக்கிறான் மகன்.” என ஜெயஸ்ரீக்கு வியப்பாகவே இருந்தது. 


இந்தப் பையன் கல்யாணம் ஆகி செட்டில் ஆனால் போதும் என்ற மன நிலைக்கு அவர் வந்திருந்தார். இவன் வேறு யாரையும் திருமணம் செய்வான் என்றும் அவருக்குத் தோன்றவில்லை. 


“அவ ஒல்லியா இருந்தா எனக்கு என்ன? குண்டா இருந்தா எனக்கு என்ன? உன் பொண்டாட்டியை நானா தூக்கிட்டு சுத்த போறேன். அதைப் பத்தி நீதான் கவலைப்படணும்.” என்றார். 


“கல்யாணத்துக்கு அப்புறம் குண்டானா என்ன பண்ணுவோம். ஏன் நானும் குண்டாதான் இருக்கேன். உங்க அப்பா என்ன வேற பெண்ணா பார்த்திட்டார்.” 


“இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லிட்டு, நான் என்னமோ ஏதோன்னு பயந்திட்டேன்.” என ஜெயஸ்ரீ செல்ல, முகேன் அசடு வழிந்தான். 


இவன் பக்கம் எல்லாம் தயாராக இருந்தது. நிவேதா மட்டும் சரி என்று சொல்லிவிட்டால் போதும், அவள் என்ன சொல்வாளோ என்றுதான் படபடப்பாக இருந்தது. முகேனுக்குத் தெரியும், அவள் உடனே சரி என்று சொல்லிவிட மாட்டாள் என்று. ஆனால் ரொம்பவே தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என அவன் நினைக்கவில்லை. 


வினோதா சென்னைக்குச் செல்ல எடுத்து வைத்துக்கொண்டிருக்க, தியாகு அவன் பெற்றோரிடம் பேசிக் கொண்டு இருந்தான். வினோதா அவனை முறைத்துக் கொண்டே துணிகளை எடுத்து வைத்தாள். 


“அம்மா அங்க இறங்கினதும், அவளை நம்ம வீட்டுக்கு வர சொன்னா எப்படி வருவா?” 


“அவளுக்கும் களைப்பா இருக்கும். அவ அப்பா அம்மாவோட இருக்கணும்னு நினைப்பா தான.” 


“நீங்க சென்னைக்கு எல்லாம் வர வேண்டாம். அவளே ஒரு வாரம் கழிச்சு, நம்ம வீட்டுக்கு வருவா… வந்து ஒருவாரம் இருக்கட்டும். அப்புறம் நான் வரும் போது, என்னோட வந்து நம்ம வீட்ல நிறைய நாள் இருப்பா…” எனப் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.