இதயம் இணையும் தருணம் அத்தியாயம் 6 வினோதா நிவேதாவை அழைக்க, நிவேதா எடுக்கும் வரை உண்மையிலயே நிவேதா தானா எனப் பதட்டம் இருக்கவே செய்தது. நிவேதா எடுத்து ஹலோ என அவள் குரல் கேட்டதும் தான் நிம்மதி, மகிழ்ச்சி எல்லாம்.
“ஹாய் நிவேதா எப்படி இருக்க?”
“ஹாய் வினோ, நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? தூங்கிட்டு இருக்கேன்னு சொன்னாங்க, எழுப்பி விட்டாங்களா? இப்ப அங்க என்ன டைம்?”
“ம்ம்… இன்னும் கொஞ்சம் நேரம் போனா விடிஞ்சிடும்.”
“ஓ… சாரி வினோ, எனக்குத் தெரியாது. வனிதா அக்கா உன் மெசேஜ் லேட்டா தான் பார்த்திருப்பாங்க போல…. என்னைக் கேட்காம எப்படி நம்பர் கொடுக்கிறதுன்னு எனக்குக் கால் பண்ணி கேட்டாங்க. நானே பேசிக்கிறேன்னு சொல்லி, உன் நம்பர் வாங்கிட்டு உடனே கால் பண்ணிட்டேன்.”
“பரவாயில்லை நிவி.”
“சரி நீ தூங்கு நாளைக்குப் பேசலாம்.”
“நான் நிறைய உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்.”
“அண்ணா வேற முழிச்சிட்டு இருக்கார் போல… நாளைக்குப் பேசலாம்.” என நிவேதா சொல்ல… வினோதாவும் இந்த நேரம் அதிகம் பேச முடியாது என்பதை உணர்ந்து, சரி என வைத்து விட்டாள். அவர்கள் நட்பு வட்டத்திற்கு மட்டும் நிவேதாவுடன் அவளே பேசியது பற்றித் தகவல் அனுப்பி விட்டு வந்தவளுக்கு, மனதே லேசானது போல இருக்க… அப்போதுதான் பசியும் தெரிய… என்ன இருக்கு என்று பார்த்தவள், பிரட் டோஸ்ட் செய்து உண்டுவிட்டு படுக்க வர… தியாகு இன்னும் உறங்கி இருக்கவில்லை.
“என்ன மேடம் அதுக்குள்ள உன் பிரண்ட் கிட்ட பேசி முடிச்சிட்டியா?”
“நாங்க பேச ஆரம்பிச்சா, நாளைக்கு வரை தொடரும், அதுதான் நாளைக்குப் பேசலாம்னு இருக்கோம்.” என்றவள், கணவனின் அருகே படுக்க…
“எப்படியும் எந்திரிச்சிட்ட… இப்ப உடனே தூங்கணுமா? எழுந்ததுக்கு என்னைக் கொஞ்சம் கவனிக்கலாமே..” என்ற தியாகு மனைவியின் மேனி வருட….
“எப்படா சான்ஸ் கிடைக்கும்னு பார்த்திட்டே இருப்பீங்க போல…” என்றவள், மகள் உறங்கிக்கொண்டிருந்த கட்டிலைப் பார்க்க, அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். வினோதா கணவனின் ஆசையை நிறைவேற்றிவிட்டு மன நிறைவுடன் உறங்கிப் போனாள்.
மறுநாள் தாமதமாக எழுந்து தியாகு அலுவலகம் கிளம்ப, அவனுக்குச் சமைக்கும் போதே தங்களுக்கும் வினோதா சமைத்து முடித்தாள்.
“நேத்து வேற உனக்கு முடியலை… நான் வேணா இன்னைக்கு வீட்ல இருக்கட்டுமா?” என்ற கணவனிடம், “ஒன்னும் வேண்டாம், நான் நிவேதாவோட ப்ரீயா பேசணும். நீங்க ஆபீஸ்க்கு போங்க.” என அனுப்பி வைத்தாள்.
நிவேதாவுடன் ப்ரீயாக உட்கார்ந்து பேச வேண்டும் என்றே வேலைகளைப் பரபரவென்று முடித்தாள். மகளைக் குளிக்க வைத்து, காலை உணவைக் கொடுத்து, தானும் உண்டு, மகளைக் கார்ட்டூன் சேனல் போட்டு உட்கார வைத்தவள், கைப்பேசியுடன் பால்கனிக்கு வந்து நிவேதாவை அழைத்தாள்.
முதல் அழைப்பிலேயே நிவேதா எடுக்க…. “ஹே என்ன உடனே எடுத்திட்ட?” என்றதற்கு, “நீ போன் பண்றேன்னு சொன்ன இல்ல… அதுதான் கையிலேயே வச்சிருந்தேன்.” என நிவேதா சொன்னதும், வினோதாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
“சாரி டி… என் பெண்ணைக் குளிக்க வச்சு சாப்பிட வைக்க நேரம் ஆகிடுச்சு.”
“இன்னும் குழந்தை இல்லையா? சாரி டி தெரியாம கேட்டுட்டேன்.” என வினோதா சொல்ல…
“ஹே… நீ அவ்வளவு எல்லாம் பீல் பண்ணாத… எனக்குக் கல்யாணமே ஆகலை.” என்றாள். வினோதாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. “என்ன டி சொல்ற கல்யாணம் ஆகலையா? அப்பவே உனக்கு மாப்பிள்ளை பார்த்திருந்தாங்களே….”
“எங்க அக்கா கல்யாணம் நின்னு போனதும், எங்க அப்பா ஒரு மாதிரி ஆகிட்டார். அதோட என்னோட கல்யாணமும் நின்னு போச்சா…. சொந்தகாரங்க பேசினாங்களோ இல்லையோ… இவரே அவங்க எல்லாம் பேசுவாங்கன்னு சொல்லி, வீட்டை வித்துட்டு, தாம்பரம் அவுட்டர்ல வீடு வாங்கிட்டு அங்க போயிட்டோம்.”
“வேலையும் விட்டுட்டு வி. ஆர். எஸ் வாங்கிட்டார். அவரும் டென்ஷன் ஆகி எங்களையும் டென்ஷன் ஆக்கி, கொஞ்ச நாள்ல அவருக்கு உடம்பு முடியாம போய், எங்க அக்காவையும் வீட்ல சேர்க்கலையா… நானும் எங்க அம்மாவும் தான் அவரை பார்த்துகிட்டோம்.”
“அப்புறம் அவருக்குச் சரியாகி எனக்கு வரன் பார்த்தார். ஆனா அப்ப எனக்கு ஒரு விபத்து நடந்து நான் ஒரு வருஷம் படுத்திட்டேன். அதுல கொஞ்சம் குண்டாவும் ஆகிட்டேனா… அப்புறம் வரணும் சரியா வரலை… வந்த வரணும் எனக்குப் பிடிக்கலை. இனிமே கல்யாணம் பண்ணிக்கவும் பிடிக்கலை. அதுதான் அப்படியே விட்டுட்டேன்.” என நிவேதா வெகு சாதாரணமாகச் சொல்ல… கேட்டவினோதாவுக்கு ரத்தம் கொதித்தது.
“ஆமாம் உனக்கு இப்போ நாற்பது வயசு… அப்படியே விட்டுடாங்க மேடம். உனக்கு இருபத்தியெட்டு வயசு தான் ஆகுது. எதோ கிழவி ஆகிட்ட மாதிரி பேசுற.”
“கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஆகணுமா என்ன? நான் இப்ப நல்லாதான் இருக்கேன். நீ என்ன செய்யுற?” என பேச்சை மாற்றினாள்.
“இப்ப வீட்ல தான் இருக்கேன். உடம்பு முடியாம இருந்ததுனால எங்க அப்பா வேலைக்கும் விடலை. இப்ப சரியாகிட்டேன், இனிதான் வேலை தேடணும்.”
“இவ்வளவு நாள் என்ன பண்ண?”
“அம்மாவுக்கு வீட்டு வேலையில ஹெல்ப் பண்ணுவேன். அப்புறம் கதை புக் படிப்பேன். பாட்டு கேட்பேன். அப்படியே டைம் போயிடும்.”
“ஆமாம் நீ என்ன பண்ற? உன் வீட்டுகாரர் என்ன பண்றார்?” என நிவேதா ஆர்வமாகக் கேட்டு தெரிந்து கொண்டாள்.
“நம்ம ப்ரண்ட்ஸ் அப்புறம் பார்த்தியா? இப்பவும் பேசுறியா என்ன? எனக்கு யாரோடவும் தொடர்பு இல்லை. அப்படியே விட்டு போச்சு.” என்றவள்,
“நீ என்னை இப்ப பார்த்தா நம்பவே மாட்ட….. நான் நல்லா வெயிட் போட்டுட்டேன்.” என நிவேதா பேசிக்கொண்டே செல்ல… வினோதாவுக்குத் தொண்டை அடைத்தது. அவளால் பேச முடியும் என்று தோன்றவில்லை.
“நிவி நான் நாளைக்குப் பேசட்டுமா? என் பொண்ணுக்கு சாப்பாடு கொடுக்கணும். நீயும் தூங்கிற நேரம் ஆச்சே….”
“உன்னோட பேசிட்டு இருக்கேன்னு நம்பவே முடியலை வினோ. நீயே போன் பண்ணு. நீ எப்ப ப்ரீயா இருக்கியோ அப்ப பண்ணு. நான் எப்பவும் ப்ரீ தான்.” எனச் சொல்லிவிட்டு நிவேதா வைக்க…. வினோதாவுக்கு அடக்கி வைத்திருந்த கண்ணீர் கொட்டியது. பக்கத்து அறையில் அவள் பெற்றோர் உறங்க… நிவேதா கையில் நாவலுடன் கட்டிலில் படுத்துக் கொண்டாள். வாசித்துக் கொண்டிருந்த கதையில் மனம் லயிக்கவில்லை.
சாருமதி திருமணம் செய்து கொண்டு சென்ற பிறகு, அக்காவே இப்படி இருக்கத் தங்கச்சி எப்படி இருப்பாளோ… இவளும் மனமேடை வந்து கல்யாணத்தை நிறுத்தினா எங்களுக்குத்தானே அசிங்கம் என நிவேதாவுக்குப் பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளை வீட்டினர் சொல்லி விட… அதோடு அந்தத் திருமணப் பேச்சு வார்த்தை நின்று விட்டது. அவர்களுக்கு இவர்கள் வீட்டில் செய்ய விருப்பம் இல்லை. அதற்கு எதோ காரணம் சொல்லி கழண்டு கொண்டனர்.
முரளிக்கு யாரைப் பார்த்தாலும், அவர்கள் தங்கள் வீட்டை பற்றிப் பேசுவதாகத்தான் நினைப்பு. அதனால் அந்த ஏரியாவில் குடியிருக்க வேண்டாம் என வீட்டை மாற்றிக் கொண்டு வந்தனர்.
நடந்தது நடந்துவிட்டது அடுத்து என்ன என முரளி யோசிக்கவில்லை. அவருக்கு எப்படியாவது சாருமதி செய்தது தவறு, அப்பா பேச்சை கேட்காமல் போனோமே என அவள் வருந்த வேண்டும் என எண்ணம். ஆனால் சாருமதி புகுந்த வீட்டில் நன்றாகவே வாழ்ந்தாள். அதை முரளியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தினமும் அவளுக்குப் போன் செய்து சண்டை பிடிப்பார்.
தன்னைத் திட்டினாலும் பரவாயில்லை, தான் போன் எடுக்கவில்லை என்றால், அந்தக் கோபத்தை அம்மா தங்கையிடம் காட்டுவார் என்றுதான் அவளும் தினமுமே எடுத்து பேச்சு வாங்குவாள்.
முரளி எப்போதோ ஒருமுறை குடித்துக் கொண்டிருந்தவர், இதை வைத்து தினமும் குடிக்க ஆரம்பித்தார். குடித்து விட்டு வீட்டில் ஒரே ரகளை. வேலைக்குச் சென்றாலாவது சிறிது நாளில் சரியாகி இருக்கும். எந்த முகத்தை வைத்துக் கொண்டு அலுவலகம் செல்வது என்று வேலையும் விட்டு விட்டார்.
வாடகை வருமானம் நிறைய உண்டு. அதோடு அலுவலகத்தில் கிடைத்த தொகைக்கு வங்கியில் வட்டி வந்தது. அதனால் பணத்தைப் பற்றிக் கவலை இல்லை.
குடித்து டென்ஷனாகி அவருக்கு ஸ்ட்ரோக் வர… அதில் சில நாட்கள் மருத்துவமனை வாசம். பிறகு வீட்டிற்கு வந்து சில மாதங்களில் ஓரளவு நடக்கவும் செய்தார். அப்போதும் சாருமதியை சேர்க்கவில்லை. ஆனால் வெளியில் இருந்து அவள் உதவினாள்.
இனிமேல் தாமதிக்க முடியாது என் நிவேதாவுக்கு வரன் பார்த்தனர். நிவேதாவுக்கு நேரம் சரியில்லை போல… வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, பிழைத்து வரவே பெரும்பாடு பட்டுப் போனாள்.
மருத்துவமனையில் இருந்து வீடு வந்தாலும், முதுகு தண்டில் காயம் என்பதால், எழுந்து நடக்கவே சிரமபட்டாள். படுக்கையில் தான் அதிக நாட்கள் இருந்தாள். அவள் பட்ட வலியும் வேதனையும் கொஞ்ச நஞ்சமில்லை. வலி பொறுக்காது, ஐயோ என்னை அங்கேயே சாக விட்டிருக்கலாம் என்பாள். அதற்குப் பிழைத்து வந்து இப்படிக் கஷ்டபடுகிறோம் என்றிருந்தது.
அப்போதும் முரளி சாருமதியை அனுமதிக்கவில்லை தான். ஆனால் தேவகியால் தனியாகச் சமாளிக்க முடியவில்லை. அதனால் சாருமதியை மட்டும் அனுமதித்தார்.
நிவேதா சரியாக நடக்க ஆறு மாதங்கள் ஆனது. படுக்கையில் இருந்ததால்… அதோடு உடம்பு தேற சத்தாகச் சாப்பிட்டு, உடம்பு சதை வைத்து விட்டது. அதன் பிறகு அதைக் குறைக்கவும் அவள் நினைக்கவில்லை.
நம் நாட்டில் இருபத்தியேழு வயது தாண்டி திருமணமாகவில்லை என்றாலே முதிர்கன்னி என்று சொல்லி விடுவார்கள். அதுவும் நிவேதாவும் குண்டாக இருக்க… சற்று வயதான வரன்கள், சுமாரான குடும்பம் அப்படித்தான் வந்தது. அப்படி யாரையும் திருமணம் செய்ய நிவேதா விரும்பவில்லை.
நிவேதாவுக்கு எல்லாவற்றிலும் பற்று விட்டுப் போயிருந்தது. நன்றாக உடை அணிய வேண்டும், பார்க்க நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை. இருக்கிற காலம் வரை பெற்றோரோடு இருப்போம் என எண்ணம் வந்துவிட்டது.
நிவேதாவுடன் பேசி விட்டாளா எனத் தெரிந்துகொள்ள, நண்பர்கள் ஆளாளுக்கு அழைத்தும் அவள் எடுக்கவில்லை. அவர்களிடம் என்ன சொல்வது. நிவேதா எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்ல விரும்பமாட்டாள் என அவளுக்கு தெரியும்.
வினோதா மகளுக்கு உணவு கொடுத்து, அவளை உறங்க வைத்தவள், அழுதபடி உறங்கிப் போனாள்.
மனைவியின் சந்தோஷமான வரவேற்பை எதிர்ப்பர்த்து மாலை சீக்கிரமே வீடு வந்த தியாகுவுக்கு மனைவியின் அழுது சிவந்த முகம் கண்ணில் பட….
“என்ன வினோதா அழுதியா என்ன?” எனக் கேட்க, வினோதா நிவேதாவைப் பற்றிச் சொல்லி, மீண்டும் ஒரே அழுகை.
“அவ காலேஜ் படிக்கும் போது எப்படி இருப்பா தெரியுமா? அவ நல்லது தான நினைச்சா, ஆனா அவளுக்கு ஏன் நல்லது நடக்கலை. அவளும் சுயநலமா இருந்துக்கலாம் தான… என்னால தாங்கவே முடியலை தியாகு.”
“அவ உயிரோட இருக்காளானே தெரியாம இருந்தோம். இப்ப இருக்கா இல்ல, அதை நினைச்சு சந்தோஷப்படு. கல்யாணம் இப்ப கூடச் செய்யலாம். அதெல்லாம் கண்டிப்பா நடக்கும்.” என்றான்.
அப்போது தான் முகேன் நிவேதா பற்றி வினோதா சொன்னாள். “ஒருவேளை முகேனுக்குத் தான் நிவேதான்னு இருக்கோ என்னவோ… அதனால்தான் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணாம இருக்காங்களோ.” என்றான். ஆனால் வினோதா சந்தோஷப்படவில்லை.
“அப்ப இருக்க நிவேதாவை முகேனுக்குப் பிடிக்கும். இப்ப இருக்க நிவேதாவை பிடிக்குமா தெரியலையே…. திரும்ப நிவேதாவுக்கு எந்த வலியும், வேதனையும் நாம கொடுத்திட கூடாது. அதனால கண்டிப்பா நடக்கும்னா மட்டும் தான் பேசணும்.”
மனைவி சொல்வது தியாகுவுக்கும் சரியெனப்பட…. “அதுக்கு என்ன செய்யலாம் வினு?” எனக் கேட்க,
“நான் சென்னை கிளம்புறேன். குழந்தை பிறந்த பிறகு போகவே இல்லை. நமக்கும் கோவில் நேர்த்திகடன் எல்லாம் இருக்கு தான. நான் போய்க் கொஞ்ச நாள் இருக்கேன். நீங்க அப்புறம் என்னைக் கூப்பிட வாங்க, அப்ப தன்ஷிக்கு மொட்டை போட்டு, காது குத்திட்டு, நாம இங்க சேர்ந்து வந்திடலாம்.”
வெகு நாளாகவே பேசி வைத்திருந்தது தான். ஆனால் வினோதா உடனே கிளம்புவது நிவேதாவுக்காக.
“உன் ஃபரண்டுக்காகத் தான போற?” எனத் தியாகு கேட்க,
“ஆமாம், இப்ப சரி பண்ண முடியலைனா நிவேதா வாழ்க்கையை எப்பவும் சரிபண்ண முடியாது.”
“என் பிரண்ட் எப்படியோ போகட்டும்னு எல்லாம் என்னால விட முடியாது. அப்புறம் ஃப்ரண்ட்ஸ்ன்னு எதுக்கு இருக்கோம் சொல்லுங்க.”
“நிவேதாவை அப்படியே விட்டுட்டோம்னு எனக்குக் காலம் முழுக்கக் குற்ற உணர்வா இருக்கும். அதுக்கு ஒரு முயற்சி செஞ்சு பார்க்கிறது தப்பு இல்லை.”
“சரி போயிட்டு வா… உன் மூலமா நிவேதாவுக்கு ஒரு நல்லது நடந்தா, நமக்கும் சந்தோசம் தானே…”
“நீங்க வேணா பாருங்க, நிவேதா பத்தி என்னோட மத்த ஃப்ரண்ட்ஸ்க்கு தெரியும் போது, அவங்களும் கண்டிப்பா அவளுக்காக நிற்பாங்க. நிவேதாவை எல்லோருக்கும் பிடிக்கும்.”
முகேன் வினோதாவை அழைத்துப் பார்க்க, அவள் எடுக்கவே இல்லை. அவன் ஆகாஷை அழைத்துக் கேட்டான்.
“என்ன டா, நிவேதாகிட்ட பேசினேன் சொன்னா, அதுக்கு அப்புறம் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறா. நிவேதாவுக்கு வேற எதுவும் பிரச்சனையா? நம்மகிட்ட இருந்து மறைக்கிறாளா? எனக்கு மனசு கஷ்டமா இருக்கு டா…”
“என்கிட்டயும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறா மச்சான். பக்கத்தில இருந்தா போய் எட்டி மிதிச்சிட்டு வருவேன். அது எங்கையோ உட்கார்ந்திட்டு எல்லார் உயிரையும் எடுக்குது பிசாசு.” என அவனாலும் பதிலுக்கு புலம்பத்தான் முடிந்தது.
முகேன் உமாவை அழைத்து அவளிடமும் பேசினான். “நாங்க நிவேதாவோட பேசினா கூட பிரச்சனை வரும்னு சொல்லலாம். நீ வினோதாகிட்ட நிவேதா நம்பர் வாங்கி பேசேன் உமா.” என்றதற்கு, “சரி முகேன், நான் கண்டிப்பா பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்.” என்றவள், வினோதாவிடம் நிவேதாவின் எண்ணைக் கேட்க, அவள் எங்கே கொடுத்தாள்.