இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 4
வினோதாவை யாரோ அவர்கள் குழுவில் சேர்த்து விட்டிடிருக்க, அவளிடம் இருந்து ஒரு ஹாய் கூடக் காணோம். மறுநாள் காலை தான் ஹாய் என்றே வந்திருந்தது. அலுவலகம் செல்லும் அவசரத்தில் முகேன் வந்து பார்ப்போம் என்று சென்று விட்டான்.
அலுவலகத்தில் வேலையும் நிறைய இருக்க… இரவு உணவு உண்ட பிறகே, கைபேசியை எடுத்துப் பார்த்தான். நூற்றுக்கும் மேற்பட்ட உரையாடலில் வினோதாவின் உரையாடலை கண்டுபிடிப்பதே பெரும் பாடாக இருந்தது. பொதுவான நல விசாரிப்புகள் தான் இருந்தது. அவன் ஆகாஷிற்கு அழைத்துச் சொல்ல…
“இரு நம்ம ப்ரண்ட்ஸ் மட்டும் தனியா ஒரு குரூப் தொடங்கலாம்.” என்றவன், அதே போல டேர் டெவில்ஸ் என்ற பெயரில், இவர்கள் எட்டுப் பேரை மட்டும் வைத்து குரூப் தொடங்கினான்.
வினோதா அப்போதும் ஆளைக் காணோம். அவள் எண்ணில் இருந்தே வெளிநாட்டில் இருக்கிறாள் என்று தெரிந்தது. இப்போது அவளுக்குக் காலை நேரம் பிஸியாக இருக்கிறாள் என்று புரிந்தது. நேற்றும் இரவு தான் வந்திருந்தாள். காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
“ஏய் எருமை, வெளிநாட்டில் இருக்கோம்னு திமிரா? பதில் போட மாட்டியா?” என ஆகாஷ் திட்டி போட… சிறிது நேரத்தில் வினோதா வந்தாள்.
“டேய், காலையில எனக்கு வேலை இருக்காதா… இவரு எட்டு மணிக்கு ஆபீஸ் போனதும்தான் நான் ப்ரீ ஆவேன். என் பொண்ணு இன்னும் தூங்கிறா. சொல்லு எப்படி இருக்க?”
“நான் நல்லா இருக்கேன். மேடம் யூ.எஸ் போய் ரொம்ப மாறிட்டீங்க. உன் வாட்ஸ் அப் டிபி பார்த்தேன். ஸ்லீவ்லெஸ் எல்லாம் போட்டு மாடர்னா ஆகிட்ட….” என ஆகாஷ் வம்பிழுக்க,
“இருக்கிற இடத்துக்கு ஏத்த மாதிரி இருக்க வேண்டாமா?”
“ம்ம்…. வெள்ளைக்காரிக்கே டஃப் கொடுக்கிற….என்ஜாய்.”
வினோதா சிரிக்கும் ஸ்மைலி ஒன்று அனுப்பினாள்.
“உன்னையும் கல்யாணம் பண்ணி இருக்கார் பாரு ஒரு தியாகி, அவரை நாங்க கேட்டதா சொல்லு.”
“ஹேய் அவர் பேரு தியாகு தான் டா. அவரு இங்க சாப்ட்வேர் இன்ஜினியர்.”
“ஹாய் வினோதா?” என முகேன் அனுப்ப,
“முகேன், நீங்களா எப்படி இருக்கீங்க? என்ன செய்றீங்க?” என வினோதா கேட்க,
“அவன் பெரிய ஆளு.” என்ற ஆகாஷ் முகேனின் சொந்த நிறுவனத்தைப் பற்றியும், அவன் வீட்டை பற்றியும் சொல்ல…
“ரொம்பச் சந்தோசம், நிவேதா அப்பவே சொல்லுவா… அவங்க லைப்ல ரொம்ப நல்லா வருவாங்கன்னு. அப்படியே ஆகிடுச்சு.” என்றவள், “ஆமாம் எங்க நிவேதாவை மட்டும் காணோம்? அவ எங்க இருக்கா?” எனக் கேட்க,
எல்லோருக்கும் சொத்தென்று ஆகிவிட்டது.
“நீ தானே அவளோட க்ளோஸ், உனக்கு அவளைத் தெரியாதா?” ஆகாஷ் கேட்க,
“உங்களுக்குத் தெரியாது இல்ல… அவங்க அக்கா கல்யாணம் நின்னு, பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. நான் அவங்க அக்கா கல்யாணத்துக்குப் போய் இருந்தேன்.”
“அவங்க அக்கா வேற யாரையோ லவ் பண்ணி இருப்பாங்க போல…” வினோதா சொல்ல,
“நீ தெளிவா முதல்ல இருந்து சொல்லு.” என ஆகாஷ் கேட்க,
“டேய் எவ்வளவு டா டைப் பண்றது, ஸ்கைப் கால் வரலாமா?” என்றதும், ஹேமாவும் பிரவீனும் மட்டும் இப்போது வர முடியாது எனச் சொல்ல, அடுத்தப் பத்து நிமிடத்தில் மற்ற எல்லோரும் வீடியோ காலில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
நண்பர்கள் முகம் பார்த்து பேசவது மகிழ்ச்சியாக இருக்க.. எல்லோரும் நீ இப்படியிருக்க, அப்படியிருக்க எனக் கேலி செய்து பேச….
“நிவேதா பத்தி சொல்லு.” என்றான் முகேன்.
“நான் எம்.பி.ஏ காலேஜ்ல சேர்ந்து படிச்சேன். உங்களுக்குத் தான் தெரியுமே… நிவேதாவும் படிக்கிறேன்னு கேட்டதுக்கு, அப்போ தான் அவங்க அக்கா லவ் மேட்டர் தெரியும் போல… அதனால அவங்க அப்பா அவளைக் காலேஜ்க்கு விடலை. வீட்ல இருந்தே படின்னு சொல்லிட்டார்.”
“தபால்ல தான் எம்.பி.ஏ படிச்சா. நானும் காலேஜ்ல பிஸியா இருந்தேன். நான் எப்பாவாவது அவங்க வீட்டுக்கு போவேன். அப்போதான் நிறையப் பேசினோம். அவங்க அக்கா கூட வேலைப் பார்க்கிற பையனையே லவ் பண்ணாங்க போல… அவங்க அப்பா அவங்க அக்காவை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கிறதா சொன்னா.”
“அவங்க அக்காவும் ரொம்பப் போராடி பார்த்திருப்பாங்க போல… ஆனா அவங்க அப்பா கல்யாணம் பண்ணா சரி ஆகிடும்னு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு. நிவேதா என்னை மட்டும் கல்யாணத்துக்கு கூப்பிட்டு இருந்தா…”
“நான் முதல் நாள் வரவேற்புக்தான் போய் இருந்தேன்.” என்றவள், அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.
அக்காவின் திருமணம் என்பதால், நிவேதா மயில் வண்ண பட்டு புடவையில் அழகாக வரவேற்பில் நின்றிருந்தாள்.
ஹேமா, உமா இருவருக்கும் அப்போதே திருமணம் ஆகி இருக்க… அவர்கள் திருமணதிற்கு அழைத்தும் நிவேதா செல்ல முடியாத சூழ்நிலை. அதனால் திருமணதிற்குப் பிறகு அவர்களோடு தொடர்பும் விட்டுப் போய் இருந்தது. வினோதா மட்டும் தொடர்பில் இருந்தாள். அதுவும் வினோதாவின் முயற்சி தான். சாருமதியின் காதல் விவகாரம் தெரிந்ததில் இருந்து வீட்டில் கட்டுபாடுகள் அதிகம். அதனால் நிவேதா அவளாக அழைக்க மாட்டாள்.
வினோதாவை பார்த்ததும் நிவேதா அவளை மகிழ்ச்சியாக வரவேற்று தன் அருகில் நிறுத்திக் கொண்டாள். வந்தவர்களை வரவேற்பதும், வினோதாவுடன் பேசுவதுமாக இருந்தாள். அப்போது திமு திமுவென்று சிலர் உள்ளே நுழைந்தனர்.
யாரு இவங்க என்பது போல வினோதா பார்க்க, நிவேதா முகம் வெளிற… அவர்கள் சென்ற பக்கம் அவளும் பரபரப்பாகச் செல்ல…இவளும் உடன் சென்றாள். மணமேடையில் நிச்சயத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்தனர்.
வந்தவர்கள் நேராக மாப்பிள்ளை வீட்டினரிடம் சென்று எதோ பேச… அந்த இடமே தீப் பற்றிக் கொண்டது போல் பரபரப்பானது.
முரளியை அழைத்த மாப்பிள்ளை வீட்டினர், “இந்தப் பையன் எதோ உங்க பெண்ணைப் பற்றிச் சொல்கிறானே…” எனக் கேட்க,
“இவன்தான் என் பொண்ணு பின்னாடி சுத்தினான். என் பொண்ணுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை. சும்மா வந்து பிரச்சனை பண்றான்.” என்று முரளி சொல்ல…
“இவர் பெண்ணுக்கும் எனக்கும் எப்பவோ பதிவு திருமணம் முடிஞ்சிடுச்சு.” எனச் சாருமதியின் காதலன் மனோகரன் சான்றிதழ் எடுத்து காட்ட…
இவன் பொய் சொல்றான் என முரளி சாதிக்க… சாருமதியையே அழைத்துக் கேட்டனர்.
அவள் வந்து ஒரே அழுகை. “நான் இதெல்லாம் வேண்டாம்னு தானே பா சொன்னேன். என்னைப் பெரிய பாவம் பண்ண வச்சிட்டீங்க பா… இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான். நீங்க எப்படியும் எங்களைப் பிரிக்கப் பார்ப்பீங்கன்னு, உங்களுக்குப் பயந்து தான் பதிவு திருமணம் பண்ணோம்.” எனச் சொல்ல….. அந்த இடமே களோபரம் ஆனது.
மாப்பிள்ளை வீட்டினர் பயங்கரமாகச் சண்டை பிடித்தனர். நிவேதா பயந்து போனாள். அவர்கள் காவல் நிலையத்தில் வேறு புகார் கொடுக்கச் செல்ல… பெண் வீட்டினரும் அவர்களோடு சென்றனர். மனோகரனும் சாருமதியை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் செல்ல… தேவகியும் நிவேதாவும் அழுதபடி மண்டபத்தில் இருந்தனர்.
நிச்சயத்திற்கு வந்தவர்கள் நடந்த களோபரத்தை அறிந்து உண்ணாமலே கிளம்பி செல்ல.. கல்யாணம் நடக்குமா நடக்காதா எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், நெருங்கிய சொந்தங்கள் மட்டும் இன்னும் இருந்தனர்.
வினோதா இரவு பத்து மணிவரை இருந்துவிட்டு, அதன் பிறகு முடிவு தெரியாமலே வீட்டிற்குக் கிளம்பி விட்டாள். இரண்டு நாள் சென்று அவள் நிவேதாவை அழைக்க…. நிவேதா நடந்ததைச் சொன்னாள்.
போலீசார் மாப்பிள்ளை வீட்டினர் மற்றும் பெண் வீட்டினருக்கு இடையில் பஞ்சாயத்து செய்தனர்.
“அந்தப் பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு, இப்ப என்ன பண்ண சொல்றீங்க?” எனப் போலீசார் கேட்க,
“இவங்க அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சே கல்யாண ஏற்பாடு பண்ணி இருக்காங்க. இப்ப எங்களுக்குத்தான் மானம், மரியாதை போச்சு. எங்களுக்கு எவ்வளவு அசிங்கம். இதுக்கு இவங்க பதில் சொல்லியே ஆகணும்.” என மாப்பிள்ளை வீட்டினர் நிற்க….
“ஏன் சார் உங்க பொண்ணுதான் லவ் பண்ணது உங்களுக்குத் தெரியும் இல்ல… பிறகு எதுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணீங்க? இப்ப பாருங்க என்ன ஆச்சுன்னு.” எனப் போலீசார் முரளியைக் கேட்க,
“எப்படிச் சார் இவனை நம்பி பெண்ணைக் கொடுக்க முடியும்? ஆனா பதிவு திருமணம் வரை போயிருப்பாங்கன்னு எனக்குத் தெரியாது.” என்றார் முரளி.
முரளி இன்னுமே மனோகரை மருமகனாக ஏற்றக்கொள்ள முடியாது என்றே நின்றார். “அவனை அத்து விடுங்க, என் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” என்று சொல்ல…
“எதுக்குக் கல்யாணத்துக்குப் பிறகு ஓடவா?” என்று அவளைக் கட்ட இருந்த மாப்பிள்ளைக் கேட்க,
“நீங்க இல்லைனாலும், நான் வேற மாப்பிள்ளை பார்த்துப்பேன்.” என முரளி சொல்ல…
“நீ என்னமா சொல்ற?” எனக் காவலர் சாருமதியைக் கேட்க,
“நான் இவரை விட்டு வரமாட்டேன்.” என்றால் உறுதியுடன்.
“உங்க பெண்ணே நல்ல மாப்பிள்ளை தானே பார்த்திருக்கு.” என்ற காவலர், “இனிமே நீங்க எதுவும் செய்ய முடியாது. கல்யாணம் நடந்தது நடந்தது தான்.” என்றனர்.
வெகு நேரம் பேசி, மாப்பிள்ளை வீட்டினருக்கு நஷ்ட ஈடாக ஒரு தொகை கொடுப்பதாக முரளி சொல்ல… பிறகு மாப்பிள்ளை வீட்டினர் களைந்து சென்றனர்.
முரளி சாருமதியை நன்றாக வசைப்படியபடி அங்கிருந்து கிளம்பினார். காவலர்கள் மனோகரையும் சாருமதியையும் சில நாட்கள் வெளியூரில் சென்று தங்கி இருக்கச் சொல்ல… ஏற்கனவே அவர்களும் அந்த முடிவு தான் எடுத்திருந்தனர்.
நிவேதா இதெல்லாம் சொல்லி இருக்க, “நல்லவேளை அக்கா இல்லைனா பரவாயில்லை, தங்கையைக் கட்டிக் கொடுன்னு சொல்லாம இருந்தாங்களே…” என வினோதா சொல்ல,
“அப்படியும் தான் சிலர் சொன்னாங்க. பேசாம தங்கச்சியைக் கொடுத்து நின்னு போன கல்யாணத்தை முடிங்கன்னு. ஆனா எனக்குதான் எங்க அப்பா வேற இடத்தில மாப்பிள்ளை பார்த்திருக்காரே…” என்றால் நிவேதா.
“அட எருமை, இதை இப்பத்தான் சொல்வியா? அப்போ நேத்து உனக்குப் பார்த்த மாப்பிள்ளை வந்திருந்தாரா?” என வினோதா ஆர்வமாக.
“இல்லை…. கல்யாணத்துக்குதான் வர்றதா இருந்தது. அதுக்குள்ள தான் கல்யாணம் நின்னுடுச்சே.”
“நீ மாப்பிள்ளையைப் பார்த்திருக்கியா?”
“நான் பார்த்தது இல்லை. வீட்ல பேசித்தான் வச்சிருந்தாங்க. சாருமதி கல்யாணத்துக்கு வரும் போதுதான் நேர்ல பார்க்கிறதா இருந்தது.”
“அப்போ இனி எப்ப வர்றாங்க?”
“யாருக்கு தெரியும்.”
“என்ன டி, உனக்குக் கல்யாணம், ஆனா ஒரு ஆர்வமே இல்லாம இருக்க…”
“ஐயோ ரெண்டு வருஷமா எங்க வீடு வீடாவே இல்லை. எங்க அக்கா பிரச்சனையால வீடே ஜெயில் மாதிரி இருந்தது. நானே கல்யாணம் பண்ணிட்டு தப்பிச்சு போகலாம்னு நினைக்கிற அளவுக்குக் கொண்டு வந்துட்டாங்க.”
“எங்க அக்கா லவ் பண்ணாலும், நல்ல பையனை தான் லவ் பண்ணா. எவ்வளவு கெஞ்சு கேட்டா தெரியுமா? அவங்க எங்க ஆளுங்க இல்லை அவ்வளவுதான். மத்தபடி நல்ல இடம். பையன் வீட்லயும் ஒத்துகிட்டாங்க. ஆனா எங்க அப்பா தான் கேட்கலை. சொந்தகாரங்களுக்குப் பயந்து ஒத்துக்கலை.”
“என் பொண்ணு லவ் பண்ணா, நல்ல பையன் கல்யாணம் பண்ணி வச்சிட்டேன்னு எங்க அப்பாவே பண்ணி வச்சிட்டு போய் இருக்கலாம். அதை விட்டு எங்க அக்காவை தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்ட… நீங்க பண்ணா, நானும் தற்கொலை பண்ணிப்பேன் பா… ஆனா வேற யாரையும் கல்யணம் பண்ணிக்க மாட்டேன்னு நிலையா நின்னுட்டா….”
“அவ சொல்றபடி கல்யாணம் பண்ணி இருந்தா… இப்போ இவ்வளவு அசிங்கமே பட்டிருக்க வேண்டாம். எல்லாம் எங்க அப்பாவோட வீண் பிடிவாதம். அவரும் நிம்மதியா இல்லை. எங்களையும் நிம்மதியா இருக்க விடலை.”
“எங்க அக்காவை, நீயாவது அப்பா பேச்சை கேளுன்னு சொன்னா அவளும் கேட்கலை. வீடே நரகம் போல இருந்தது. எங்காவது போனா போதும்னு இருக்கு.”
“ரொம்பக் கஷ்டபட்டியா?”
“ம்ம்… ஆமாம் ரொம்பவே… அவளை மட்டுமா வதைச்சாங்க. நீயும் இப்படித்தான் பண்ணுவேன்னு என்னையும் தான் வதைச்சாங்க.”
“நிஜமாவே நம்ம காலேஜ் நாட்கள்தான் நான் கடைசியா சந்தோஷமா இருந்தது. இப்ப யாராவது வந்து கல்யாணம் பண்ணிக்கலாம் வரியான்னு கேட்டா, நான் சந்தோஷமா போயிடுவேன்.” என நிவேதா வாயில் இருந்தே வந்தது. அவள் அவ்வளவு மன உளைச்சலில் இருந்தாள்.
“நம்ம நிவேதாவா அப்படிச் சொன்னது.” என ஜெய் ஆச்சர்யப்பட…
“ஆமா அவ அப்ப அப்படித்தான் இருந்தா…”
“ச்ச பாவம் இல்ல… நிவேதா காலேஜ்ல எவ்வளவு ஜாலியா இருப்பா?” என உமா வருந்த, மற்றவர்களும் வருந்தினர். முகேன் மட்டும் அமைதியாக இருக்க… ஆகாஷ் அவனை முறைத்தான்.
படித்து முடித்து வேலையில் சேர்ந்த பிறகாவது ஒருமுறை அவன் நிவேதாவை பார்த்து பேசி இருக்கலாம் என நினைத்தான். அப்போது அவள் வேறு மனநிலையில் இருந்தாள் என இப்போது தானே முகேனுக்கே தெரிகிறது.
“சரி அப்புறம் எப்ப நிவேதாவை பார்த்த, அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?”அருண் கேட்க,
“நான் ஒரு ரெண்டு மாசம் கழிச்சு, அவளுக்குப் போன் பண்ணேன். ஆனா அவ போன் போகவே இல்லை. அப்புறம் அவ வீட்டுக்கே போனா… அவங்க வீடு வித்துட்டு வேற எங்கையோ போயிட்டாங்க சொன்னாங்க.”
“நான் அக்கம் பக்கம் விசாரிச்சேன். ஆனா யாரும் எதுவும் சரியா சொல்லலை…”
“அவளுக்குக் கல்யாணம் ஆச்சா இல்லையா?”
“அந்த வீடல் இருந்தவரை ஆகலை… அப்படித்தான் சொன்னாங்க.”
“அப்புறம் நீ அவளைப் பார்க்கவே இல்லையா?”
“நான் கல்யாணம் பண்ணி இங்க வந்திட்டேன். அப்புறம் அவளைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது.”
“இப்படியா இருப்ப, உன் பிரண்ட்ஸ் தானே… அவளுக்குக் கல்யாணம் ஆச்சான்னு கூடத் தெரியாதா?” ஆகாஷ் கோபப்பட….
“எனக்கு மட்டும் தான் ப்ரண்டா, ஏன் உங்களுக்கு இல்லையா? நான் கல்யாணம் பண்ணிட்டு இந்த ஊருக்கு வந்து எவ்வளவு கஷ்டபட்டேன் தெரியுமா?”
“இவர் காலையில போனா நைட் தான் வருவாரு…. குழந்தை உண்டாகி மசக்கை வேற படுத்தி எடுத்துச்சு… நானே தான் எல்லா வேலையும் பார்க்கணும், தெரியுமா? டெலிவரிக்கு கூட எங்க வீட்ல இருந்து யாரும் வரலை… இவர்தான் ஒரு மாசம் லீவ் போட்டு பார்த்துகிட்டார். அதுக்கு அப்புறம் தான் அவங்க அம்மா வந்தாங்க. எனக்கு எவ்வளவு பிரச்சனை தெரியுமா?”
“நான் அவளை வேணுமுன்னே விட்டா மாதிரி பேசுற.” என வினோதா கோபிக்க…
“விடு வினோதா, அவன் எதோ தெரியாம பேசிட்டான். அவங்க வீட்ல ரொம்பக் கண்டிப்புன்னு தெரியும். அதுதான் நாங்க யாரும் அவளைப் பார்க்கவோ, பேசவோ நினைக்கலை… இப்ப நாம எல்லோரும் இருக்கோம், அவளையும் தேடி கண்டுபிடிப்போம்.” என்றான் முகேன்.
அப்போது வினோதாவின் இரண்டு வயது மகள் எழுந்து வர… வினோதா அவளைத் தூக்கிக் கொண்டவள், “குழந்தையை கை மாத்த கூட ஆள் இல்லை. நானே தான் பார்த்துக்கணும். வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு பெருமை பட்டத்துக்கு, தனியா தான் கிடக்கிறேன்.” என,
“சாரி வினு.” என ஆகாஷ் மன்னிப்புக் கேட்க,
“உன் மன்னிப்பு ஒன்னும் வேணாம் போ… நான் நிவேதாவை எப்படியும் தேடி கண்டுபிடிப்பேன்.” என்றால் வினோதா.
நேரம் நள்ளிரவை நெருங்கி இருக்க, இன்னொரு நாள் பேசுவோம் எனத் தொடர்பை துண்டித்தனர்.