Advertisement

இதயம் இணையும் தருணம்

அத்தியாயம் 3

முகேன் சி ஏ படிப்புக்கு இண்டர்ஷிப் சென்று கொண்டிருந்தான். அதனால் கல்லூரிக்கு மதியம் போலத்தான் வருவான். சி ஏ படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் கல்லூரியில் அந்தச் சலுகை இருந்தது. நிவேதாவையும் சி ஏ படி இல்லையென்றால் வேறு எதாவது படி எனச் சொல்லிக் கொண்டு இருந்தான். 


இப்படியே ஒரு மூன்று வருடங்கள் கடத்தி விட்டால். அதற்குள் அவனும் நல்ல நிலைக்கு வந்துவிடுவான். பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என அவனுக்கு எண்ணம். அவன் அதற்குத் தான் சொல்கிறான் என நிவேதாவுக்குப் புரியாமல் இல்லை. 


அவள் முடிவு எடுக்க முடியாது. அவள் தந்தை தான் சொல்ல வேண்டும். அவள் அக்கா இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவள் அக்காவே அதுவரை வேலைக்கு சென்று வருகிறேன் என கெஞ்சி கேட்டு சென்று கொண்டிருக்கிறாள். முதலில் அவள் தந்தை முடியாது, நான் திருமணம் செய்து வைத்து விடுகிறேன். பிறகு உன் கணவன் அனுப்பினால் போ என்றுதான் சொன்னார். அவள் அக்கா ரொம்பவும் கெஞ்ச, சரி ஆனா ஒழுங்கா வேலைக்கு மட்டும் போயிட்டு வரணும் என எச்சரித்தே அனுப்பினார். 

அவளுக்கு முடித்து அடுத்த ஒரு வருடத்தில் நிவேதாவுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவள் வீட்டினரின் எண்ணம். 


அவன் நல்ல நிலையிலேயே வந்து பெண் கேட்டாலும், அவள் தந்தை அவனுக்குத் திருமணம் செய்து தர மாட்டார் என்பது அவளுக்குத் தெரியும். அவள் பெரியப்பா பெண் யாரையோ விரும்ப… அது தெரிந்து இவள் அப்பா சென்று அவர்கள் வீட்டில் ரகளைச் செய்து, அண்ணனும் தம்பியும் சேர்ந்து உடனே வேறு மாப்பிள்ளை பார்த்து அவள் அக்காவிற்குத் திருமணம் செய்து விட்டுதான் அடங்கினர். 


அதோடு சும்மாவா இருந்தார். அவர் அண்ணியையும் எதோ மகளின் காதலுக்கு உடந்தை போல… அவள் பெரியம்மாவையும் இவளது பெற்றோர் அந்தப் பேச்சு பேசினர்.
அவள் பெரியப்பா மகள் பட்ட வேதனையை நிவேதா உடன் இருந்து பார்த்து இருக்கிறாள். அவள் விரும்பிய பையன் தற்கொலை செய்து கொண்டான். 


“நான் சும்மாவே இருந்திருக்கலாம் இல்ல… எனக்கு நடக்காதுன்னு தெரியும். தெரிஞ்சும் நான் ஏன் இப்படிப் பண்ணேன்? என்னால ஒருத்தன் செத்துட்டான். நான்தான் அவன் சாவுக்குக் காரணம்.” என அவள் புலம்பி தவித்தது நிவேதா நேரிலேயே பார்த்து இருக்கிறாள். அப்படி ஒரு நிலை முகேனுக்கு வர அவள் காரணமாக இருக்க மாட்டாள். 


அவளுக்கு அவனை மிகவும் பிடிக்கும். நமக்குப் பிடித்த ஒருவர் நன்றாக வாழ வேண்டும் என்றுதான் நினைக்க வேண்டும். அவசரத்தில் காதல் சொல்லி அவனையும் வேதனைப்படுத்துவதை விட… விலகி செல்வதுதான் அவனுக்குத் தான் செய்யும் நல்லது என அவள் உணர்ந்திருந்தாள். அதனால் முகேனுக்குக் காதல் சொல்லும் வாய்ப்பையே அவள் கொடுக்கவில்லை. 


இறுதி வருடத்தின் கடைசிச் செமஸ்டர் பரிட்சைகள் நடந்து கொண்டிருந்தது. பரீட்சை முடிந்து பேசுவோம் என முகேனும் படிப்பில் கவனம் செலுத்தினான். 


படிப்பை முடிக்கப் போகிறோம் என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி தான் என்றாலும், இனி கல்லூரிக்கு வர முடியாது, நண்பர்களைச் சந்திக்க முடியாது என்பது வருத்தத்தைத் தர… கிடைக்கும் நேரத்தில் நண்பர்கள் சேர்ந்தே இருந்தனர். பரிசுகள், வாழ்த்து ஆட்டைகள் என ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். 


எல்லோருமே பரிட்சையை நல்லபடியாக எழுதி முடித்து இருந்தனர். இரண்டு நாட்கள் சென்று வினோதா வீட்டில் நண்பர்கள் அனைவரும் சந்திப்பதாக இருந்தது. அன்று நிவேதாவுடன் பேசி விடுவோம் என முகேன் நினைத்திருந்தான். 


வினோதா வீட்டில் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்வதால்… வீட்டு வேலையாளிடம் மகள் கேட்ட உணவு வகைகளைச் சமைத்து தர சொல்லி ஏற்கனவே அவள் அம்மா சொல்லி வைத்திருந்தார். அதனால் காலையில் இருந்தே விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. 


பையன்கள் எல்லாம் மதிய உணவு நேரத்துக்குத் தான் வருவதாக இருந்தது. பெண்கள் மட்டும் காலை பதினோரு மணிக்கே வருவதாகப் பேச்சு. அதனால் உமாவும், ஹேமாவும் பதினோரு மணிக்கே வந்திருக்க, வினோதா மட்டும் வரவில்லை. 


மதியம் ஒரு மணி போலப் பையன்கள் சேர்ந்து வர… அதுவரையிலும் நிவேதா வந்திருக்கவில்லை. நிவேதா வந்திருக்கிறாள் என நினைத்து தான் முகேன் வந்தான். 


நிவேதா இல்லை என்றதுமே முகேனின் முகம் மாறிவிட்டது. அவன் டிவி பார்ப்பது போல அமைதியாக உட்கார்ந்திருந்தான். வினோதா, உமா, ஹேமா என மாறி மாறி நிவேதாவின் கைப்பேசியில் அழைத்துப் பார்க்க, சுவிட்ச் ஆப் என்றே வந்தது. 


இரண்டு மணி வரை பார்த்தவர்கள் அதற்கு மேல் உணவருந்த, முகேன் உண்டது போலப் பேர் பண்ணிவிட்டு உடனே கிளம்பி விட்டான். மற்றவர்கள் அப்போதும் உண்டு கொண்டு தான் இருந்தனர்.

 
முகேனின் பின்னே வந்த ஆகாஷ், “என்ன டா?” எனக் கேட்க, 


“ஒண்ணுமில்லை… கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க என்ஜாய் பண்ணுங்க.” என மட்டும் சொல்லிவிட்டு முகேன் கிளம்பி விட்டான். 


நிவேதா குளிக்கக் கூட இல்லை. அவள் அறையில் அடைந்தே கிடந்தாள். முகேன் காதலை சொல்லி அதைத் தான் மறுக்க முடியாமல், சரி என்று சொல்லி விடுவோமோ என்ற அச்சத்திலேயே இன்று அவள் செல்லவில்லை. 


வேண்டாம் என்று முடிவெடுத்தாலும், மனதில் எழுந்த வலியை தான் அவளால் தாங்க முடியவில்லை. 


“என்னடி, இன்னைக்கு உன் பிரண்ட் வீட்டுக்கு போகணும் சொன்ன…” என அவள் அம்மா வர… நிவேதா பதில் சொல்லாமல் இருந்தாள். அப்போது அங்கே வந்த அவள் அக்கா சாருமதி, “இவ தானே போகணும்னு சொன்னா ஏன் போகலை? போகணும்னு ஆசையில தானே அன்னைக்கே டிரஸ் எல்லாம் எடுத்து வச்ச… போகலையா?” எனக் கேட்க, 


“போகலை விடேன். என்னவோ ஆசைப்பட்டது எல்லாம் நடந்திடுற மாதிரி. இந்த வீட்ல இருந்திட்டு நாம ஆசை எல்லாம் பட முடியுமா… கெடச்சதை வச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.” நிவேதா தனது ஆற்றாமையைக் காட்ட… 


“இப்ப என்ன அப்படி உன்னைக் கொடுமை படுத்திட்டாங்க.” என அவள் அம்மா தேவகி கோபப்பட, 


“என்ன பண்ணலை நீங்க. நாங்க விருப்பட்ட வாழ்க்கையாவது நாங்க வாழ முடியுமா?” 


“என்ன டி சொல்றா இவ?” என அவள் அம்மா மூத்த மகளைப் பார்க்க… சாருமதிக்குக் கொஞ்சம் புரிந்தது. 


“அவ பிரண்ட்ஸ் எதாவது சினிமாவுக்குப் போகலாம் சொல்லி இருப்பாங்க. அப்பா விட மாட்டார் இல்ல… அதுதான் அப்படிப் பேசுறா. நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க மா.” என்றாள்.
தேவகி சென்றதும், “என்ன நிவேதா என்கிட்டே சொல்லு.” எனச் சாருமதி கேட்க, 


“முகேன் என் கிளாஸ்ல படிக்கிறாங்க. ரொம்ப நல்ல மாதிரி. நல்லா படிப்பாங்க. பின்னாடி நல்லா வருவாங்க. அவங்களுக்கு என்னைப் பிடிக்கும், எனக்கும் தான். ஆனா சொல்ல முடியலை. நம்ம வீட்ல இருந்திட்டு நான் அதெல்லாம் நினைக்க முடியாது இல்ல…” 


“இன்னைக்கு அவங்களைப் பார்த்தா, என்னையும் அறியாம சரின்னு சொல்லிடுவேன்னு பயம், அதுதான் போகலை.” 


“அடுத்த ஜன்மம் இருக்கா தெரியாது. இருக்கிற இந்த ஜன்மத்தில நம்மால நமக்குப் பிடிச்ச மாதிரி கூட வாழ முடியலை… அதுதான் வெறுப்பா இருக்கு.” 


“ஏன் கா, லவ் பண்றது அவ்வளவு தப்பா? நாம லவ் பண்ணவங்க நல்லவங்களா இருந்தா பெத்தவங்க சரின்னு சொல்லலாம் தான…” என நிவேதா கண் கலங்க… 


“இவ்வளவு சொல்ற இல்ல அவனைப் பத்தி. உனக்கு அப்படி அவன்தான் வேணுமுன்னா நீதான் ஸ்ட்ராங்கா இருக்கணும்.” என்றால் சாருமதி. 


“நம்ம வீட்ல அதுவும் நம்ம அப்பாகிட்ட…” என நிவேதா சந்தேகமாகக் கேட்கும் போதே… அவள் தந்தை முரளியின் வண்டி சத்தம் கேட்க, 


அவள் குளிக்கவில்லை சாப்பிடவில்லை எனத் தெரிந்தால், அதற்கு வேறு ஒரு பாட்டு வாங்க வேண்டும் என நினைத்தவள், குளியல் அறைக்குள் சென்று மறைந்தாள். 


குளித்துவிட்டு வந்து அவளாகவே தட்டில் உணவு எடுத்து உண்ண, அவள் அம்மா தேவகியும் முரளியிடம் எதுவும் சொல்லவில்லை. 


மாலை வினோதா, உமா மற்றும் ஹேமா அவளைப் பார்க்க வீட்டிற்கே வந்தனர். 


உடம்பு சரியில்லை என எதோ சொல்லி நிவேதா சமாளிக்க…“முகேன் உன்கிட்ட தான் நல்லா பேசுவாங்க. நீ வந்திருந்தா இருந்திருப்பாங்கலோ என்னவோ… சாப்பிட்டதும் கிளம்பிட்டாங்க. மத்தவங்க இவ்வளவு நேரம் வரை இருந்து அரட்டை அடிச்சிட்டு தான் போறாங்க.” 


வினோதா சொன்னதைக் கேட்டிருந்தாலும் நிவேதா எதுவும் சொல்லவில்லை. அவள் அப்பா மிகவும் கண்டிப்பு என வினிதாவுக்குத் தெரியும். அதனால் அவள் மேலும் எதுவும் துருவவில்லை. அவர்தான் அனுமதி கொடுத்திருக்க மாட்டார் என நினைத்தாள். 


முகேன் அன்று இரவு உணவு உண்ணாமலே படுத்துவிட்டான். மறுநாளும் அவன் முகம் தெளிவில்லாமல் இருக்க, ஜெயஸ்ரீ மகனை உட்கார வைத்து பேசினார். முகேன் எல்லாவற்றையும் அவன் அம்மாவிடம் மறைக்காமல் சொல்லி விட்டான். ஜெயஸ்ரீ மகனிடம் தோழிப் போலதான் பழகுவார்.  ஜெயஸ்ரீ மேலும் நிவேதா குடும்பத்தைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார். 


இவன் அந்தப் பெண்ணிடம் காதலை சொல்லவில்லை. அவளும் விரும்புகிறேன் என்று சொல்லவில்லை. அதற்கே இந்தப் பையன் இப்படி இருக்கிறான். இன்னும் காதலை சொல்லி… பின்னாளில் அந்தக் காதல் கை கூடவில்லை என்றால்… என்ன ஆவானோ என நினைக்கும் போதே தாயுள்ளம் தவிக்க… 


“இப்ப அவ உன்னை விரும்புறேன்னு சொன்னா மட்டும் நீ என்ன செய்வ?” 


“உன்கிட்ட படிப்பு இருக்கா? வேலை இருக்கா? இல்லைனா உனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற வயசா?” 


“எதுக்கு அந்தப் பொண்ணு மனசுல ஆசையை வளர்க்க நினைக்கிற? நீயே சொல்ற அந்தப் பொண்ணு வீட்டுக்கு ரொம்பப் பயப்படுவான்னு… அப்புறம் ஏன் அவ மனசை கலைச்சு நிம்மதி இல்லாம செய்யுற.” 


“அவளுக்குத் தெரியும் இது நடக்காதுன்னு. அதுதான் அவ வரலை.” 


“உன் வயசு தானே அந்தப் பெண்ணுக்கு, அவ எவ்வளவு தெளிவா இருக்கா பாரு.” 


“நீ பாட்டுக்கு காதலை சொல்லிடுவ, அவளும் சரின்னு சொல்றான்னு வச்சுப்போம். அவங்க வீட்ல தெரிஞ்சா அவளுக்கு அவசர அவசரமா ஒரு மாப்பிள்ளையைப் பார்ப்பாங்க. நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டா பரவாயில்லை. அமையலைனா….” 


“அதுக்குக் காரணம் நீதான் தெரிஞ்சிக்கோ… தெரிஞ்சே ஒரு பொண்ணுக்கு அந்தப் பாவத்தைப் பண்ணாத.” 


“நீ இன்னைக்குக் காதலை சொல்லி நாளைக்குக் கல்யாணம் பண்ற நிலையில இல்லை.” 


“படிப்பை முடிச்சு நல்ல வேலைக்குப் போயிட்டு, அதுக்குப் பிறகு வேணா அவங்க வீட்ல போய்ப் பேசிப் பாரு. நானும் வேணா உன்னோட வரேன்.” என ஜெயஸ்ரீ சொன்னதற்கு, 


“அதுவரை அவங்க வீட்ல அவளைக் கல்யாணம் பண்ணாம வச்சிருக்க மாட்டாங்க.” என்றான். 


“உனக்கே தெரியுது இல்ல… அப்ப அந்தப் பெண்ணை நிம்மதியா இருக்க விடு.” 


“இனி அவளே மனசு மாறி வந்தாலும், நீ அவகிட்ட உன்னை விரும்புறேன்னு எதுவும் சொல்லாத. வேண்டாம் இதோட விட்டுடு.” என ஜெயஸ்ரீ சொன்னதற்கு, முகேன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவன் அதன்பிறகு நிவேதாவை பார்க்கவோ பேசவோ முயலவில்லை. 


நண்பர்களைப் பார்த்தால் நிவேதாவின் நினைவு வரும், அவள் பற்றிய பேச்சு வரும், அவளைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் எனத் தோன்றும் என்ற காரணத்துக்காகவே, அவன் மற்ற நண்பர்களையும் தவிர்த்தான். 


இண்டர்ஷிப் சென்று கொண்டே சி ஏ முடித்தவன், மும்பையில் வேலை என்றதும், சென்னையை விட்டுப் போனால் போதுமென்று அங்கிருந்து சென்றுவிட்டான். மகன் நல்ல வேலையில் சேர்ந்து விட்டான் என்ற நிம்மதியில் இருந்த முகேனின் தந்தை திடிரென்று உடல்நலக் குறைவால் இறந்து விட.. முகேன் அவன் அம்மாவை அவனுடன் அழைத்துக் கொண்டான். அவன் பள்ளி இறுதியில் இருக்கும் போதே, அவன் அக்காவிற்குத் திருமணம் ஆகிவிட்டது. 


கல்லூரிக் காலக் காதல் என்றாலும், இப்போது வரை நிவேதா கிடைக்கவில்லை என்ற வருத்தம் அவனுக்கு உண்டு. 


வெளியே சென்ற வேலை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்குத் திரும்பியவன், அனிலாவை அவன் அறைக்கு அழைத்தான். அவள் வந்து நின்றதும், அவள் தந்தையைக் கைபேசியில் அழைத்தவன், “மாமா, நான் அனிலாவுக்கு வேற இடத்தில இண்டர்ஷிப்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். இன்னும் அனிலா அங்க நல்லா கத்துக்கலாம்.” என்றதும், அவள் மாமாவும் சரியென்று சொல்ல… அவன் கைபேசியை வைத்து விட்டு அனிலாவைப் பார்க்க, அவள் ஏன் என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள். 


“நான் ஏற்கனவே இந்த வலியை ஒரு பெண்ணுக்குக் கொடுத்திருக்கேன். என்னால இன்னொரு பொண்ணுக்கும் அந்த வலியை கொடுக்க முடியாது. உன் மனசுல எந்த ஆசையையும் வளர விட எனக்கு விருப்பம் இல்லை. தயவு செஞ்சு என்னைப் புரிஞ்சிக்கோ.” 


“இப்போ உனக்குப் படிக்கிற வயசு. படிக்கிறதுல மட்டும் கவனம் வை.” என்றான். அனிலாவும் புரிந்து கொண்டாள். 


அன்று இரவு உண்ணும் போது, மகனுக்குப் பரிமாறியபடி ஜெயஸ்ரீ, “அனிலாவை வேற ஆபீஸ்க்குப் போகச் சொல்லிட்டியாமே. உன் மாமா சொன்னார்.” என, 


“ஆமாம் அங்க அவ இன்னும் நிறையக் கத்துக்கலாம்.” என்று மட்டும் சொன்னான். 


இரவு கைப்பேசியோடு வெளி ஊஞ்சலில் உட்காரந்தவன், வாட்ஸ் அப் பார்க்க… அவர்கள் குழுவில் வினோதாவும் பிரவீனும் இணைந்து இருந்தனர். இன்னும் நிவேதா மட்டுமே வர வேண்டும். 


விநோதாவுக்குக் கண்டிப்பாக நிவேதா பற்றித் தெரிந்திருக்கும் என முகேன் நினைத்து மகிழ்ந்து போனான். எப்படியும் இன்று நிவேதா பற்றித் தெரிந்துவிடும் என ஆவலாக இருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது எதுவும் நடக்காது எனத் தெரிந்தால்….













Advertisement