Advertisement


இதயம் இணையும் தருணம்


அத்தியாயம் 2

கல்லூரிக் காலம் மிகவும் இனிமையாகச் சென்றது என்றால் அது மிகை அல்ல… இரண்டாம் வருடத்தில் முதல் செமெஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரி திறந்திருக்க… கடைசி வரிசையில் இருந்த முகேன், ஆகாஷ், ஜெய், அருண், பிரவீன், நிவேதா, உமா , ஹேமா மற்றும் வினோதா நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

உணவு வேளையில் மற்ற மாணவர்கள் கான்டீன் சென்று உணவருந்த இவர்கள் மட்டும் வகுப்பிலேயே உட்கார்ந்து உண்ணுவார்கள். எல்லோருமே வீட்டில் இருந்து உணவு கொண்டு வருவார்கள். அப்படிக் கொண்டு வராத நாட்களிலும் காண்டீனில் இருந்து வாங்கி வந்து எல்லோரும் பகிர்ந்து உண்பார்கள்.

ஜெய் தொலைவில் இருந்து வருவதால்… அதுவும் வசதி இல்லாத குடும்பத்து பையன். அவன் கொண்டு வரும் உணவு சுமாராகத்தான் இருக்கும். பூரிக்கு தேங்காய் சட்னி கொண்டு வருவான். மதியத்துக்குத் தோசையும் பொடியும் கொண்டு வருவான். முக்கால்வாசி நாட்கள் டிபன் தான் கொண்டு வருவான்.

“இது என்ன டா காம்பிநேஷன், உங்க வீட்ல யாருக்கும் சமைக்கத் தெரியாதா?” என நிவேதா கேட்டாலும், அவனுடையதை அவள்தான் அதிகம் எடுத்துக் கொண்டு தன்னுடையதை ஜெய்கு கொடுப்பாள். சில நேரம் இரண்டு டப்பா உணவும் கொண்டு வருவாள்.

உணவு உண்டு முடித்ததும், நிவேதாவும் பிரவீனும் நன்றாகப் பாடுவார்கள். அவர்களைப் பாட விட்டு மற்றவர்கள் பெஞ்சில் தாளம் போடுவார்கள். பரிட்சை நேரத்தில் ஒன்றாகப் படிக்கவும் செய்வார்கள்.

வெளியே எங்காவது செல்லலாமா என்றால் நிவேதா மறுத்து விடுவாள். அதனால் மற்றவர்களும் வெளியே சென்றது இல்லை. பையன்கள் மட்டும் வெளியே சந்தித்துக் கொள்வார்கள். உமாவும் ஹேமாவும் பொதுப் பேருந்தில் கல்லூரிக்கு வருவார்கள். நிவேதாவும் வினோதாவும் தங்கள் இருசக்கர வாகனத்தில் வருவார்கள். ஜெய் சற்றுத் தொலைவில் இருந்து வருவதால் அவனும் பேருந்தில் வருவான். மற்றவர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில், சில நேரம் தனித்தனியாக அல்லது சில நேரம் ஒரே வாகனத்தில் இருவர் சேர்ந்தும் வருவார்கள். 


கல்லூரி முடிந்ததும் ஒரு அரை மணிநேரம் இருந்து அரட்டை அடித்து விட்டே கிளம்புவார்கள். நிவேதாவும் வினோதாவும் உமாவையும் ஹேமாவையும் தங்கள் வாகனத்தில் ஏற்றி சென்று பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு செல்வார்கள. இவர்கள் கிளம்பி வெகு நேரம் சென்றுதான் பையன்கள் கிளம்புவார்கள். அவர்களும் ஜெய்யை பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டுச் செல்வார்கள். 

நான்காவது செமெஸ்டரில் நிவேதாவுக்குத் தலைவலியாக இருந்தது கார்பரேட் அக்கௌன்டிங் தான். கண்டிப்பாக அரியர் விழும் என நினைத்து பயந்து போய் இருந்தாள்.

கல்லூரியில் வைத்த மாடல் டெஸ்டில் நிவேதா ஒற்றை இலக்கில் மதிப்பெண் பெற்றிருக்க. முகேனுக்கு மிகுந்த அதிர்ச்சி.

“ஏன் நல்லா தானே படிப்ப?” என்றான்.

“எனக்குப் புரியவே மாட்டேங்குது. கண்டிப்பா அரியர் தான்.” என்றாள்.

“இப்படிக் கடைசி நேரத்திலேயா சொல்வாங்க.” எனக் கோபப்பட்டவன்,
பரீட்சைக்குப் பத்து நாட்கள் முன்பு அவளை உட்கார வைத்து கற்றுக் கொடுத்தான். மற்ற நண்பர்களுக்கும் அந்தப் பாடம் கடினமானது தான். அவர்களும் சேர்ந்துகொள்ள… தினமும் நான்கு மணி நேரங்கள் சொல்லிக் கொடுத்தான். அவன் சொல்லிக் கொடுத்ததை வைத்து தான் நிவேதா பரிட்சை எழுதுதினாள். நன்றாகவே எழுதி இருந்தாள்.

“ரொம்பத் தேங்க்ஸ் முகேன். நீ மட்டும் இல்லைனா கண்டிப்பா பாஸ் மார்க் கூட வந்திருக்காது.” என்றாள். 


“எனக்குப் போய்த் தேங்க்ஸ் சொல்வியா?” முகேன் கேட்க, 


“பிறகு வேற என்ன வேணும்?” என நிவேதா கேட்க, 


“எதுவும் வேண்டாம்.” என முகேன் சொல்ல… “ட்ரீட் கொடு நிவி.” என ஆகாஷ் கேட்க, நிவேதா எல்லோருக்கும் தன் செலவில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தாள். பரிட்சை முடிந்து கடைசி நாள் என்பதால்… வெகு நேரம் கல்லூரியில் இருந்துவிட்டே வீட்டிற்குக் கிளம்பினர். 


அந்த விடுமுறையில் தான் முகேன் ஒன்றை உணர்ந்தான். நிவேதாவை அவன் மனம் விரும்புவதை. அவளைப் பார்க்காமல் அவளுடன் பேசாமல் நாட்களைக் கடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது.

மறுநாள் நிவேதாவின் பிறந்த நாள் அன்று கண்டிப்பாகப் பார்த்து விட வேண்டும் என ஆகாஷிடம் எதுவும் சொல்லாமல் வெளியே செல்லலாம் என அழைத்து வந்தவன், நிவேதா வீடு இருக்கும் பக்கமே சுற்றிக் கொண்டிருந்தால்… ஆகாஷிற்குப் புரியாதா என்ன? அவன் தெரிந்தும் தெரியாதது போலவே இருந்தான்.

முகேன் ஆகாஷோடு அவள் வீட்டின் எதிரில் இருந்த கடையில் நின்றான். நிவேதாவின் வீடு பெரிய வீடாக இருந்தது. பிறந்தநாள் என்பதால் கோவிலுக்குச் செல்ல வெளியே வந்தவளைப் பார்த்ததும் தான் முகேனுக்கு மகிழ்ச்சி.

பாவாடை தாவணி அணிந்து, இடை வரை இருந்த கூந்தலை தழைய பின்னி பூ வைத்திருந்தாள். அவளைப் பார்க்கும் போது மனதில் ஒரு குளுமை வரும். அதே உணர்வு இப்போதும் தோன்,ற முகேன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இவர்களை அவள் பார்க்கவில்லை. அவள் ஸ்கூட்டியில் செல்ல… இவர்களும் அவள் பின்னே சென்றனர்.

கோவிலில் திடிரென்று சந்திப்பது போல முகேனும் ஆகாஷும் அவள் எதிரில் செல்ல… அவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல நிவேதா அவர்களைக் கடந்து சென்றாள். 


அவள் கவனிக்கவில்லையோ என நினைத்து, அவள் வெளியே வரும் போது, அவளை நிறுத்தி வைத்து இவர்கள் பேச்சுக் கொடுக்க… நிவேதாவின் முகம் பதட்டத்தைக் காட்ட…

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிவேதா.” என்றான் முகேன்.

இதற்குத் தான் வந்திருக்கிறான் என அப்போதுதான் நிவேதா ஆகாஷ் இருவருக்கும் புரிந்தது. நிவேதாவின் முகம் ஒரு கணம் மென்மையாகவே செய்தது. ஆனால் உடனே அங்கிருந்து சென்றுவிட்டாள்.

“என்ன டா சாதாரணமா கூட ரெண்டு வார்த்தை பேச மாட்டேங்கிறா?” என்றான் ஆகாஷ்.

நிவேதா கல்லூரியில் இருப்பது போல வெளியே இருக்க மாட்டாள் என்று தெரிந்து கொண்டனர். கல்லூரியில் சந்தோஷமாகத் துள்ளித் திரியும் நிவேதா அல்ல என்றும் புரிந்தது.

நிவேதா தான் மட்டும் அல்ல தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வாள். அவள் இருக்கும் இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால் அதெல்லாம் கல்லூரியில் மட்டும் தான் என்று புரிந்தது.

அதன் பிறகு முகேனும் அவளைப் பார்க்க முயற்சி எடுக்கவில்லை. அன்று அவள் கண்ணில் தெரிந்த பயமே, அவனை அவளிடம் இருந்து விலகி இருக்க வைத்தது. தன்னால் அவளுக்குச் சிறு துன்பமும் வந்துவிடக் கூடாது என நினைத்தான். 


இரண்டாம் வருடம் முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தனர்.
விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்த நிவேதாவை ஆகாஷ் கிண்டல் செய்தே ஓட்டினான்.

“மேடம் வாய் எல்லாம் இங்கதான். வெளிய பார்த்தா பேச கூட மாட்டேங்கிறா.” என முகேனும் சொல்ல…

“எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதோட நாங்க ரெண்டு பேருமே பொண்ணுங்க. அதனால பசங்களோட பேசினது தெரிஞ்சது அவ்வளவு தான். அதுவும் வீட்டை சுத்தி எங்க சொந்தக்காரங்க இருக்காங்க. யாராவது பார்த்து வீட்ல போய்ச் சொன்னா பிரச்சனை ஆகும் அதுதான். சாரி தப்பா எடுத்துக்காதீங்க. நான் அப்படித்தான்.” என்றாள்.

“இந்தச் சொந்தக்காரனுங்க தொல்லை இருக்கு தெரியுமா அதுதான் பெரிய தொல்லை. இவனுங்க வீட்ல ஆயிரம் ஓட்டை இருக்கும். ஆனா அடுத்தவன் வீட்ல என்ன நடக்குதுன்னு பார்க்கிறதுதான் இவங்களுக்கு வேலை.” என்றான் ஆகாஷ்.

“எங்க வீட்லயும் ஸ்ட்ரிக்ட் தான்.” என்றனர் ஹேமாவும், உமாவும்.

“எங்க வீட்ல இல்லைப்பா… நீங்க எல்லாம் எங்க வீட்டுக்கு வரணும்.” என வினோதா எல்லோரையும் அழைத்தாள். 


நிவேதா கல்லூரிக்கு வரும் போது, போகும் போது, அவள் நண்பர்கள் தெருவோர கடையில் நின்று புகைப்பிடிப்பது அவள் கண்ணில் படும். ஆனால் அவள் அந்த மாதிரி முகேனைப் பார்த்தது இல்லை. அவளே ஒருமுறை அவனைக் கேட்டிருக்கிறாள். 


“நான் பார்த்தது இல்லையா? இல்லை பழக்கம் இல்லையா?” என, 


“எனக்கு அதிலெல்லாம் விருப்பம் இல்லை. நாமே ஏன் நம்ம உடம்பை கெடுத்துக்கணும்.” என்றான். 


போன செமஸ்டர் மதிப்பெண் வந்திருக்க… நிவேதா எல்லாவற்றிலும் என்பதுக்கு மேல் எடுத்திருக்க, கார்பரேட் அக்கௌன்ட்டில் எண்பத்திரண்டு மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். அவளுக்கே அதை நம்ப முடியவில்லை. அவள் முகேனை பார்க்க, அவனும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அவன் இந்த முறையும் கல்லூரியில் முதல் இடம் வந்திருந்தான்.
தான் பெற்ற மதிப்பெண்களை விட நிவேதா முகேனுக்காகவே அதிகம் மகிழ்ச்சி கொண்டாள். 

“அடுத்த ரெண்டு செமஸ்டர்லையும் நீதான் முதல்ல வரணும் முகேன். நம்ம செட் டாப்பரா நீதான் இருக்கணும்.” என்றாள். 


நம் மீது ஒருவர் அதுவும் நமக்குப் பிடித்தவர் அக்கறை காட்டும் போது, அது தனித் தானே… முகேனுக்கும் அப்படித்தான் இருந்தது. தோழிக்கும் மேல் அவளைப் பிடிக்கும் என்பதை அவன் இன்னும் அவளிடம் சொல்லவில்லை. ஆனால் அவனின் சிறு சிறு செயல்கள் அவள் அவனுக்குத் தனி எனக் காட்டிக் கொடுக்கும். 


நண்பர்களுக்கும் இன்னும் அவன் நிவேதாவை லவ் பண்ணுகிறானா எனத் தெரியாது. ஆனால் நிவேதா அவனுக்கு ஸ்பெஷல் தான் எனத் தெரியும். 


“டேய் என்ன தான் டா நடக்குது?” என ஆகாஷ் கேட்டால்…. 


“எனக்கு அவளைப் பிடிக்கும் டா…” என்பானே தவிர, என்ன மாதிரி பிடிக்கும் என்று சொன்னது இல்லை. 


நிவேதாவின் நிலையே அவனைச் சொல்ல விடாமல், மேலும் அதைப் பற்றிச் சிந்திக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. 


நண்பர்களுக்கே புரியும் போது நிவேதாவுக்குப் புரியாதா… அதுவும் சில நேரம் முகேனின் பார்வை உரிமையாக அவள் மீது படிந்து விலகுவதை அவள் கவனித்தே இருக்கிறாள். 

சில நேரம் சொல்லி விடலாம் என நினைத்து முகேன் அவளை நெருங்கினால்… அவள் பார்வையே எதுவும் என்னிடம் சொல்லி விடாதே என யாசிக்கும். 


மூன்றாம் வருடத்தில் இருந்ததால், அவர்கள் கல்லூரியில் ஒரு நாள் சுற்றுலாவுக்கு அழைப்பு விடுத்தனர். நிவேதா வீட்டில் அதற்குக் கூட விடவில்லை. பையன்களும் வருவார்கள் என அனுமதிக்கவில்லை. 


எல்லோரும் செல்லும் போது தானும் செல்ல வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருந்தது. இதுதான் கடைசி வருடம். அதனால் நண்பர்களுடன் வெளியே செல்ல வேண்டும் என நிறைய ஆசை இருந்தாலும், வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை என அமைதியாக இருந்தாள். 


வகுப்பில் அதை நினைத்துக் கண் கலங்குவதும், பிறகு அதை மற்றவருக்குத் தெரியாமல் அவள் மறைப்பதையும் முகேன் பார்த்துக் கொண்டே இருந்தான். 


வினோதாவை அழைத்து அவள் வீட்டில் சென்று பேசும்படி அவன் சொல்ல… வினோதா தைரியமான பெண், அதோடு பட்டு பட்டேன்று பேசும் ரகம். அவளுக்கும் நிவேதா தங்களுடன் வர வேண்டும் என்ற ஆசை இருக்க… அவள், ஹேமா, உமா மூவரும் சென்று நிவேதாவின் தந்தை முரளியிடம் அனுமதி கேட்டனர். 


முதலில் மறுத்தவர் வினோதா ரொம்பவும் வற்புறுத்தவும் சரி என்றார். ஆனால் நிவேதாவை பையன்களோட போற… பார்த்து போகணும் என எச்சரித்தே அனுப்பினார். 


அவர்கள் கல்லூரியில் இருந்தே மூன்று இடங்களில் ஒன்றை தேர்வு செய்யச் சொல்ல… இவர்கள் வகுப்பில் பாண்டிச்சேரி செல்வது எனத் தீர்மானித்து அங்கே சென்றனர். 

“எப்போதுமே நீங்க தானே எனக்கு தருவீங்க, இந்தத் தடவை நான் உங்களுக்கு  தரேன்.” என்ற ஜெய் நிவேதாவையும் நண்பர்களையும் ஹோட்டளுக்கு அழைத்து சென்று, அவர்கள் போதும் போதும் என்று சொல்லும் வரை விடாமல், அவர்கள் கேட்டது கேட்காதது எல்லாமே வாங்கிக் கொடுத்தான். 

அதுவும் நிவேதாவை அவன் இன்னும் வாங்கிக்கோ என நன்றாக கவனிக்க, 

“நிறைய சாப்பிட்டேன் போதும்.” என புன்னகைத்தாள்.

“சென்னையிலே உங்களை ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகணும்னு தான் நினைச்சேன். ஆனா நீ அங்க வெளிய வர மாட்ட இல்ல… அதுதான் இங்கயே கூடிட்டு வந்தேன்.” என்றான் நிவேதாவிடம்.  

“நிவேதாவுக்கு தான் டா ட்ரீட், கூட நமக்கும் கொடுக்கிறான்.” என்றான் முகேன்.

“எப்படி டா திடீர் பணக்காரன் ஆன…” என அருண் கேட்க, 

“உங்களுக்கு எல்லாம் ட்ரீட் கொடுக்க சேர்த்து வச்சிருந்தேன்.” என்றது, நண்பர்களுக்கு நெகிழ்ச்சியாகவே இருந்தது. இருப்பவர் கொடுப்பது ஆச்சர்யம் இல்லை. ஆனால் தன்னிடம் இல்லாத போதும், நண்பர்களுக்கு செய்ய நினைப்பது பெரிய விஷயம் தான் அல்லவா.

முக்கியமான இடங்களைப் பாண்டிச்சேரியில் பார்த்து விட்டு மதியத்திற்கு மேல் கடற்கரையில் தான் இருந்தனர். இவர்கள் நண்பர்கள் குழு எங்குச் சென்றாலும் சேர்ந்தே இருக்க… இது போல ஒரு சந்தர்ப்பம் திரும்ப வாய்க்காது என தெரிந்தே என்னவோ, எல்லோருமே எவ்வளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தனர். முகேனும் நிவேதாவுடனே இருந்தான். 

கடலில் செம ஆட்டம் போட்டனர். முகேன் நிவேதாவுடன் இருக்கும் தருணங்களை, ஆகாஷ் அவர்கள் இருவருக்கும் தெரியாமல் படம்பிடித்து வைத்தான். 

நிஜத்தில் இருவரும் சேருவார்களா என்பது தெரியாது. நிழலிலாவது சேர்ந்திருக்கட்டும் என எடுத்து வைத்தது. ஆனால் இருவரிடமும் அவன் அப்போது சொல்லவில்லை. பிறகு சொல்வதற்குச் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. 

Advertisement