இதயம் இணையும் தருணம்

அத்தியாயம் 14 


வீட்டிற்கு வந்த நிவேதாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. முரளி நிவேதா இல்லாத நேரத்தில், தேவகியிடம் பேசி பேசி அவர் மனதை குழப்பி விட்டார். 


“ஏற்கனவே மூத்த பெண்ணும் வேற ஜாதி பையனை கல்யாணம் பண்ணி இருக்கா… இப்ப இவளும் பண்ணிகிட்டா, நம்ம சொந்தத்துல நம்மை மதிப்பாங்களா? நாம்தான் பொண்ணுங்களை ஒழுங்கா வளர்க்கலைன்னு சொல்லுவாங்க.” 


“உனக்கு நான் பார்த்த மாப்பிள்ளை பிடிக்கலைனா… நான் வேற மாப்பிள்ளை பார்க்கிறேன். இப்ப நிவேதாவும் ஆள் பார்க்க லட்சனமா இருக்கா… நகை வேணாலும் அதிகமா போட்டு, நல்ல இடமா நம்ம ஆளுங்கள்ள பார்ப்போம்.” 


“இவளுக்கும் நாம ஒழுங்கா கல்யாணம் பண்ணலைனா நம்மை யாரு மதிப்பா?” அப்படி இப்படியென்று ஏதேதோ பேசி தேவகியை குழப்பி விட்டார். 


நேற்று இருந்த பதட்டத்தில் தேவகியும் ஜெயஸ்ரீயிடம் அப்படிப் பேசி விட்டார். இப்போது யோசிக்கும் போது, தன்னால் கணவரை எதிர்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று தோன்ற… நிவேதா வந்தவுடன் அவளிடம், “அப்பாவே உனக்கு நல்ல இடம் பார்க்கிறேன்னு சொல்றாரு… எதுக்குத் தெரியாத இடத்தில பண்ணிட்டு. அவர் சொல்றதும் நியாயமாத்தான் தோணுது.” என்றதும், நிவேதா நொறுங்கியே போனாள். 


முன்பானால் எப்படியோ… இப்போது கண்டிப்பாக அவளால் முகேனை இழக்க முடியாது. அதுவும் அவன் என்ன ஆவானோ என நினைக்கவே கலக்கமாக இருக்க… 


“நீங்க நினைச்சு நினைச்சு ஒன்னு பேசுவீங்க, என்னால உங்க இஷ்டத்துக்கு மனசை மாத்திட்டே இருக்க முடியாது.” என்றாள் தைரியமாகவே. 


“அவங்க இப்பதானே கேட்டாங்க. அதுக்குள்ள அப்படி என்ன அவனையே கல்யாணம் பண்ணனும்னு?” என முரளி கேட்க, 


“முகேனும் நானும் காலேஜ்ல ஒன்னாதான் படிச்சோம். அவங்களுக்கு அப்ப இருந்தே என்னைப் பிடிக்கும். அதனால்தான் அவங்க அம்மாகிட்ட சொல்லி என்னைப் பொண்ணு கேட்க சொன்னாங்க.” என்றவள், 


“கல்யாணம் நீங்களே நடத்தி வச்சாலும் சரி, இல்லைனாலும் சரி… நான் முகேனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.” என்றால் உறுதியாக. 


நிவேதா இப்படிச் சொல்வாள் என அவள் பெற்றோர் எதிர்பார்க்கவே இல்லை.

“என்னையும் நீங்க அக்கா போலத்தான் ஆக்கப் போறீங்க போல…. அக்கா உங்களுக்குத் தெரியாம பதிவு திருமணம் பண்ணது, உங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது. ஆனா நான் அப்படிப் பண்ண நினைக்கவே இல்லை. என்னை அந்த நிலைமைக்குத் தள்ளிடாதீங்க.”

“உங்க நகை, பணம் எதுவுமே எனக்கு வேண்டாம். அதெல்லாம் நான் கொண்டு வரணும்னு முகேனும் எதிர்பார்க்க மாட்டார். நீங்க எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். என் கல்யாணத்தை மட்டும் நடத்திக் கொடுங்க. நான் அப்புறம் உங்ககிட்ட எதுக்குமே வர மாட்டேன்.” 


நிவேதா பேசியதைக் கேட்டு தேவகி தான் ஆடிப் போனார். ஆனால் அப்போதும் முரளி தன்னை மீறி எதுவும் நடந்து விடாது எனத் தைரியமாகவே இருந்தார். நிவேதாவுக்கு அது அச்சத்தைக் கொடுக்க… சாருமதியை அழைத்து வீட்டில் நடந்ததைச் சொன்னவள், “எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்கு கா…. எனக்கு எதாவதுனா முகேன் என்ன ஆவாங்கன்னு நினைச்சு பார்க்கவே முடியாது. நான் வேணா லேடிஸ் ஹாஸ்டல் போயிடவா…” எனக் கேட்க, அவள் எவ்வளவு பயந்து போயிருந்தால் இப்படிக் கேட்பாள் எனச் சாருமதிக்கு புரியவே செய்தது. 

“நான் இருக்கும்போது, நீ ஏன் அங்க போகணும்? கல்யாணம் ஆகிற வரை நீ என் வீட்ல வந்து இரு.” என்றவள், 


“நீ இப்பவே பையில டிரஸ் எடுத்து வை. நான் உன்னைக் கூட்டிட்டு போக வரேன்.” என்றதும், 

“என்னால உனக்கும் அப்பாவுக்கும் பிரச்சனை வரும்.” என நிவேதா தயங்க….. 


“ஆமாம் இல்லைனாலும் அவர் என்னைச் சீராட்டிட்டு தான் இருக்கார். நான் சொல்றதை செய்.” என்றவள், உடனே மனோகரை அழைத்துக் கொண்டு கிளம்பியும் விட்டாள். 


சாருமதி திடிரென்று வந்து நிற்கவும் நிவேதா தான் சொல்லி இருப்பாள் எனப் பெற்றோருக்குப் புரிந்தது. 


“கல்யாணம் ஆகிறவரை நிவேதா எங்க வீட்ல இருக்கட்டும்.” எனச் சாருமதி சொல்ல… 


“அதெல்லாம் அவளை அனுப்ப முடியாது.” என்றார் முரளி. 


“உங்ககிட்ட யாரு பெர்மிஷன் கேட்டா? நான் என் தங்கைக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேன். உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க.” 


“இந்த அவமானத்தை எல்லாம் என்னால தாங்க முடியாது. நானும் உன் அம்மாவும்.” என முரளி பேசும் போதே அவரை இடைமறித்து, “இதேதான் நீங்க நான் கல்யாணம் பண்ண போதும் சொன்னீங்க. உங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்.” என்ற சாரு நிவேதாவைப் பார்த்து போகலாமா எனக் கேட்க, நிவேதா தனது உடமைகளை எடுக்க உள்ளே சென்றாள். 


“அவளை உங்கிட்ட விடக் கூடப் பயமா இருக்கு. ஜாதி வெறியில அவளை நீங்க எதுவும் பண்ணிட்டா….” என்றதும், 


தேவகி “என்ன டி பேசுற?” எனக் கோபப்பட…. 


“தெரியலை மா… நீங்க தான் முகேனுக்குக் கல்யாணம் பண்ணி தர்றதா சொன்னீங்க. அப்புறம் நீங்களே மாத்தி பேசுறீங்க. உங்களை எல்லாம் நம்ப முடியாது.” என்றவள், நிவேதா வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். 


“ஏன் கா எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?” என நிவேதா அழுது கொண்டே சொல்ல, 


“இனிமே எல்லாம் நல்லதா நடக்கும். விடு அதையே நினைக்காத.” எனச் சாருமதி சமாதானம் செய்தாள். 


“அப்பா எதுவும் பண்ணிகிட்டா பயமா இருக்கு கா…” 


“சும்மா நம்மை மிரட்டுறார்.” என்றவள், “உன் மேல எதுவும் தப்பு இல்லை புரியுதா… நீ சாதாரணமா இரு.” என்றாள். 


சாருவும், மனோகரும் இருப்பது வண்டலூரில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அபார்ட்மெண்டில். மாமனார் மாமியார் மாதவரத்தில் இருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு மரக்கடை இருக்கிறது. 


வீட்டிற்கு வந்த பிறகு அக்காவும் தங்கையும் ஆளுக்கொரு பக்கம் சோர்வாக உட்கார்ந்து இருக்க… 


“சாரு, நிவேதாவுக்குச் சாப்பிட கொடு. நீ உண்டாகி இருக்க…நேரத்துக்குச் சாப்பிட வேண்டாமா…” என மனோகர் நினைவுபடுத்த… அதன் பிறகே அக்காவின் நிலை நிவேதாவுக்கு நினைவு வர… அவளே சமையல் அறைக்குச் சென்று என்ன இருக்கிறது என்று பார்க்க… மதியம் வைத்த சாம்பார் இருந்தது. 


குளிர்சாதனத்தில் இருந்த மாவை எடுத்துத் தோசை ஊற்றித் தொட்டுக்கொள்ளச் சாம்பார் வைத்து எடுத்து வந்து அக்கா அத்தான் இருவருக்கும் பரிமாறியவள், பிறகு அவளும் உண்டாள். 


“அக்காவும் தங்கையும் அதையே நினைக்காதீங்க.” என மனோகர், புதுப் படம் ஒன்றை டிவியில் போட்டு விட…. அக்காவும் தங்கையும் நள்ளிரவு வரை பார்த்தவர்கள், படம் முடிந்து ஒன்றாகவே உறங்க சென்றனர். 


மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிவேதா அலுவலகம் செல்லவில்லை. முகேன் அவளுக்கு அழைத்தவன், “அம்மா உங்க அம்மாகிட்ட பேசணுமாம்.” என்றதும், நிவேதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. 


“நான் அக்கா வீட்ல இருக்கேன்.” என்றாள். 


“ஓ… உங்க அக்காவை பார்க்க வந்தியா?” என்றதற்கு, 


“இல்லை நம்ம கல்யாணம் வரை இங்கதான் இருப்பேன்.” என்றவள், சாருமதியிடம் கொடுக்க… 


“அத்தை, எதுனாலும் என்கிட்டையே சொல்லுங்க. நிவேதா கல்யாணத்துக்கு நான்தான் பொறுப்பு.” என்றால் அவள். 


“கல்யாணத்துக்கு மண்டபம் பார்த்திட்டு இருக்கோம். அதுக்கு முன்னாடி ஒரு நிச்சயதார்த்தம் பண்ணிட்டா நல்லா இருக்கும்.” என ஜெயஸ்ரீ சொல்ல… 


“சரி அத்தை பண்ணிடலாம். எங்க அபார்ட்மெண்டல கூட ஹால் இருக்கு. அதிலேயே வச்சுக்கலாம்.” என்றதும், ஜெயஸ்ரீ சரி என்றவர், நாள் பார்த்து விட்டுச் சொல்வதாகச் சொல்லி போன்னை வைத்துவிட்டார். 


எதற்கு அவள் அக்கா வீட்டில் இருக்கிறாள் என முகேனுக்கு ஒன்றும் புரியவில்லை. முகேன் அதை ஜெயஸ்ரீயிடம் சொல்ல…. 


“அவங்க அப்பாதான் எதாவது பிரச்சனை பண்ணி இருப்பார்.” என்றார் ஜெயஸ்ரீ. 


“அம்மா, கல்யாணத்தைச் சீக்கிரம் வைக்கணும்.” என்றதும், 

“நாம எல்லாம் ரெடியா இருந்தாலும் மண்டபம் கிடைக்கிறது தான கஷ்டமா இருக்கு.” என்றார். 


முகேனுக்குத் தங்கள் திருமணம் ஆடம்பரமாக இல்லையென்றாலும், நிறையப் பேரை அழைத்துச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கு என்ன வழி என யோசித்தான். 


முஹுர்த்த நாட்களில் மண்டபங்கள் எல்லாம் ஏற்கனவே ஆறு மாதத்திற்குப் பதிவாகி இருக்க…. ஒரு ஏஜென்ஸியிடம் அவன் பொறுப்பைக் கொடுத்து இருந்தான். 


எப்படியோ அன்றே பூந்தமல்லியில் இருந்த மண்டபத்தில், அடுத்த இரண்டு மாத்தத்தில் ஒரு முஹுர்த்த நாளில் மண்டபம் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துச் சொல்ல…. அந்த மண்டபத்தையே முன்பதிவு செய்தனர். 


ஜெயஸ்ரீ அதைச் சாருமதியிடம் பகிர்ந்து கொண்டவர், அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் வைத்துக்கொள்வோமா எனக் கேட்க, 


“நாங்க என்ன செய்யணும் அத்தை.” எனச் சாருமதி கேட்க, 


“நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். நாங்க தான் நிச்சயத்துக்கு எல்லாம் கொண்டு வருவோம்.” என்றார். 


தேவகி மகள்களைப் பார்க்க நேரிலேயே வந்துவிட்டார். 

“நம்ம வீட்டுக்கு வா…” என நிவேதாவை அவர் அழைக்க… 


“நாலு மாசத்துக்கு முன்னாடி நீங்க உயிரை கொடுக்கச் சொன்னா கூடக் கொடுத்திருப்பேன் மா… ஆனா இப்ப எனக்கு எதாவதுனா முகேன் ரொம்பப் பாவம் மா… நான் அவங்களுக்காகவாவது நல்லா இருக்கணும். எனக்கு அப்பா எந்த நிமிஷம் என்ன பண்ணுவாரோன்னு பயமா இருக்கு, நீங்களும் மாத்தி மாத்தி பேசுறீங்க.” என்று நிவேதா சொல்லியே விட… தேவகி அழுதே விட்டார். 


“எனக்கு என்ன தெரியும்? நான் உங்க அப்பா பேச்சை தான கேட்க முடியும். ஆனா உனக்கு அந்தப் பையன் மேல விருப்பம்னு இப்பத்தானே சொல்ற. நான் உங்க அப்பாகிட்ட பேசுறேன்.” என்றார். 


“அம்மா, அவ யாரோ தெரியாத வீட்லையா இருக்கா… எங்க வீட்ல தான இருக்கா…. அவ இங்கயே இருக்கட்டும் மா…” என்ற சாரு, “வர்ற ஞாயிற்றுக் கிழமை நிவேதவுக்கும் முகேனுக்கும் நிச்சயம். நீங்களும் அப்பாவும் வர பாருங்க.” எனச் சொல்லி அனுப்பினாள். 


மறுநாள் அலுவலகத்திற்கு வந்த நிவேதா சாதாரணமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாள். அவள் எதுவும் சொல்லப் போவது இல்லை என முகேன் புரிந்து கொண்டான். 


மாலை அவளை ரயில் நிலையத்தில் விடும் போது, “நீ உங்க அக்கா வீட்ல எதுக்கு இருக்கன்னு தெரியலை. ஆனா நான் எதாவது உனக்கு உதவ முடியுமா?” எனக் கேட்க, 

“நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே போதும். இப்போதைக்கு நீங்க வேற எதுவும் பண்ண முடியாது.” என்றாள். 


முகேனிடம் அவள் அப்பாவைப் பற்றிச் சொல்லி, அவன் மனதில் வெறுப்பை உண்டாக்க அவள் விரும்பவில்லை. முரளியும் முகேனை கோபத்தில் எதாவது பேசிவிட்டால்… பிறகு உறவுக்குள் சிக்கலை உருவாக்கி விடும் என்பதும் காரணம். 


முகேனின் பக்கம் எத்தனை பேர் நிச்சயத்திற்கு வருவார்கள் எனக் கேட்டுக் கொண்டு, சாருமதி அவர்கள் பக்க நெருங்கிய உறவினர்களுக்கு அவளே அழைத்துச் சொன்னாள். 


“யாரு மாப்பிள்ளை?” என ஆவலாக விசாரித்தவர்களிடம்,
முகேனின் படிப்பு அவனின் சொந்த நிறுவனம் பற்றி எல்லாம் சொல்ல… பாரேன் நிவேதாவுக்கு நல்ல வரன் தான் என ஆச்சர்யப்பட்டனர். 


“நிவேதா அந்தக் கம்பெனியில தான் வேலைப் பார்க்கிறா… அவளைப் பிடிச்சு அவங்களே விரும்பி கேட்டாங்க.” எனச் சாருமதி கூடுதல் தகவல் சொல்ல… “நம்ம ஆளுங்க தான…” எனக் கேட்டவர்களிடம், “நாங்க அதெல்லாம் கேட்கவே இல்லை. நல்ல இடம் வேற என்ன வேண்டும்.” என்றாள். 


நிவேதா திருமணம் முடிவானது குறித்து உறவுக்குள் பேச்சு எழுந்த போது, “சாருமதி சொல்றதுல இருந்தே நம்ம ஆளுங்க இல்லைன்னு தெரியுது. எங்கே நிவேதாவுக்குக் கல்யாணமே பண்ணாம இருந்திடுவானோனு நினைச்சதுக்கு, இப்போ நல்ல இடம் வந்திருக்கு, நாம எதுவும் சொல்ல வேண்டாம். அவங்க விருப்பபடி செஞ்சிட்டு போகட்டும்.” எனக் குடும்பத்தில் மூத்த பெண்மணி நிவேதாவின் பாட்டி சொல்ல… எல்லோரும் சரி என ஏற்றுக்கொண்டனர். 


சாருமதிக்குத் திருமணம் முடித்த இந்த ஏழு ஆண்டுகளில் நிறைய மாறி இருக்கவும் செய்தது. அக்கம் பக்கம் நடப்பவைகளை எல்லோரும் அறிவார்கள் தான். அதோடு அவரவர் வீட்டிலேயே என்ன நடக்கும் எனத் தெரியாத போது, நாம் அடுத்தவர் வீட்டு விஷயத்தில் ஆலோசனை சொல்வதும் தேவையில்லை என உணர்ந்திருக்கலாம். 


முரளி அழைக்க வேண்டும் எனக் காத்திருக்காமல், அவர் அண்ணன், அக்கா, தங்கை எல்லாம் அவர்களே முரளியை அழைத்துப் பேசினர். “நிவேதாவுக்குக் கல்யாணமே ஆகாம இருந்திடுமோன்னு நினைச்சோம். இப்பவாவது நடக்குதே பரவாயில்லை… நாங்க எல்லாம் வந்திடுறோம்.” எனச் சொன்னதும், முரளிக்கு ஆச்சர்யமே… இவர்களை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என நினைத்து தானே ஏதேதோ செய்து கொண்டிருந்தார். அவர் கவலை எல்லாம் அனாவசியம் என்றாகிவிட… தேவகியும் கணவருக்கு எடுத்து சொல்லி இருந்தார். 


நிவேதா சொல்லவில்லை என்றாலும் முகேன் மனோகர் மூலம் நடந்ததை அறிந்திருந்தான். அவனும் ஜெயஸ்ரீயும் நிவேதாவின் பெற்றோரைப் பார்த்து பேசினர். 


“என் பையனுக்கு உங்க பெண் மேல காலேஜ் படிக்கும் போதே விருப்பம் இருந்தது. நிவேதா மட்டும் சரின்னு அப்ப சொல்லி இருந்தா… இன்னைக்கு என் பையன் இப்படிப் படிச்சு, சொந்தமா கம்பனி வைக்கிற அளவுக்கு முன்னேறி இருப்பானா தெரியாது.” 

“காதல் கை கூடலைங்கிற வேதனையில, அதை நினைச்சு நினைச்சே வாழ்க்கையை வீணாக்கிற பசங்களை நாம பார்க்கத்தான் செய்யுறோம். ஆனா நிவேதா அந்த நிலைமைக்கு என் பையனை கொண்டு வரலை. எனக்கு அதே அவ மேல நல்ல எண்ணம் வரக் காரணம்.” 


“அப்பவே என் பையனுக்குக்காக யோசிச்சவ… என் பையனுக்கே மனைவியா வந்தா… அவனை எப்படிப் பார்த்துப்பா….” 


“என் பையன் நல்லா இருக்கணும். அவன் சந்தோஷமா இருக்கணும். எனக்கு அதுதான் வேணும். நீங்களும் உங்க பெண்ணோட சந்தோஷத்தை, வாழ்க்கையைப் பத்தி மட்டும் நினைச்சு பாருங்க. வேற எல்லாம் யோசிக்காதீங்க.” என எடுத்து சொல்லிவிட்டு வந்தார். 


முகேன் நிவேதாவிடம் எதுவும் தெரிந்து கொண்டது போலே காட்டிக்கொள்ளாமல் இருக்க… அவளும் தினமும் எப்போதும் போல வேலைக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். ஆனாலும் பெற்றோரை பிரிந்து இருப்பது, இந்தத் திருமணம் எப்படி நடக்கப்போகிறது என்ற கவலையெல்லாம் அவள் கண்ணில் தெரியும். 


ஒரு காலத்தில் அவன் காதலை ஏற்க கூட அவ்வளவு பயந்தவள், இப்போது  தனக்காகவே அவள் பெற்றோரை பிரிந்து சென்றால் என்பது எல்லாம் முகேனுக்கு வார்த்தையால் சொல்ல முடியாத நிலையைக் கொடுத்திருந்தது.
மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம். அவனால் அவளிடம் அதைக் காட்ட கூட முடியவில்லை. எப்போது திருமணம் ஆகும் என நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான்.