எப்போ வந்தாங்க பார்க்கவே இல்லை.” என நினைத்தவள், அவன் சொன்னபடி வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன் அவன் அறைக்குச் செல்ல… அவளை உட்கார சொன்னவன், செய்து கொண்டிருந்த வேலையை முடித்து விட்டே நிமிர்ந்தான். 


நிவேதா நாம புது ஆபீஸ்க்கு மாறப் போறோம் உனக்குத் தெரியம் தானே…. எனக்கு இங்க இருக்கப் பைல் எல்லாம் ரொம்ப முக்கியம். ஆபீஸ் மாறும் போது, எதுவும் தொலைஞ்சு போயிடக் கூடாது. அதனால இதை மட்டும் நீயே பார்த்துக்கோ.” 


ம்ம்…. சரி.” 


பைல்க்கு எல்லாம் நம்பர் போட்டு வச்சிடு. அப்ப அங்க போய் அடுக்கும் போது எல்லாம் இருக்கான்னு தெரியும்.” 


சரி அப்படியே பண்ணிடுறேன்.”

 
நாளைக்கு நான் புது ஆபீஸ் வேலை எவ்வளவு முடிஞ்சிருக்குன்னு பார்க்கப் போறேன். நீ என்னோட வர்றதுன்னா வரலாம்.” என முகேன் அழைக்க… 


அவளுக்கும் புது அலுவலகம் எப்படி இருக்கிறது எனப் பார்க்க வேண்டும் போல இருக்க… வருகிறேன் என்றாள். 


நாளைக்கு ஒரு மூன்னு மணிக்குக் கிளம்பலாம். நீ அங்க இருந்தே வீட்டுக்கு கிளம்பிடு. அதுக்குள்ள முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விடு.” என்றும் அவன் சொல்ல…. நிவேதா எல்லாவற்றிற்கும் சரி என்று சொல்லிவிட்டு வந்தாள். 


இரவு உணவு உணடுவிட்டு, மறுநாள் காலை சீக்கிரம் அலுவலகம் சென்று வேலைகளை முடிக்க வேண்டும் என நினைத்தவள், அப்போதே மறுநாளுக்குத் தேவையான உடைகளை எடுத்து வைக்க… முகேன் வெளியே செல்ல வேண்டும் என்று சொன்னது நினைவு வர… வெகு நேரம் தன் அலமாரியை ஆராய்ந்தாள். 


நிறையப் புடவைகள் கட்டப்படாமல் இருக்க… உடம்பு சதை வைத்ததில் புடவை கட்டினால் நன்றாக இருக்காது எனக் கட்டாமல் இருந்தாள். இப்போது மெலிந்திருப்பதால் கட்டிப் பார்க்கலாம் எனத் தோன்ற… முன்பு தைத்த ரவிக்கைகள் இப்போது பத்துமா என்னும் சந்தேகத்தில் அணிந்து பார்க்க… சற்று இறுக்கமாகதான் இருந்தது. ஒரு தையல் மட்டும் பிரித்து விட்டாள். 


மறுநாள் காலை தலைக்கு ஊற்றி, புடவை கட்டிக்கொண்டு நேராகக் கண்ணாடியின் எதிரே சென்றுதான் நின்றாள். குண்டாகத் தெரியுதா என்ற சந்தேகத்தில், கண்ணாடியில் இப்படியும் அப்படியும் அவள் திருப்பிப் பார்க்க…. இப்போது எக்ஸ்ல் சைசில் இருந்து எல் சைஸ்க்கு குறைந்து இருந்ததால்… நன்றாகத்தான் இருந்தது. 


நன்றாக இல்லையென்றால் சுடிதாரே அணிந்து செல்ல வேண்டும் என நினைத்திருந்தாள்.

என்ன டி அதியசமா புடவை எல்லாம் கட்டி இருக்க? ஆனா இன்னைக்குதான் லட்சனமா இருக்க.. இனி புடவையே கட்டிட்டு போ.” என்றார் தேவகி. மகளுக்கு இப்போதாவது நன்றாக அணிய வேண்டும் என்ற எண்ணம் வந்ததே… அதுவே அவருக்குச் சந்தோஷம். 


விரைவாகவே அலுவலகம் சென்று சேர்ந்தவள், வேலைகளைக் கவனிக்க… முகேன் மூன்று மணிக்கு அழைத்துச் செல்லலாமா எனக் கேட்க, சரி என்றாள். 


அவளை வரவேற்பு அறையில் இருக்கச் சொன்னவன், அவனே அஷோக்கிடம் நிவேதா தன்னுடன் வெளியே வருவதாகச் சொல்லிவிட்டான். 


நிவேதா ரெஸ்ட் ரூம் சென்று தன்னைச் சீராக்கிக் கொண்டு வந்து அவனுக்காக வரவேற்பு அறையில் காத்திருக்க…. முகேன் வந்து அவளை அழைத்துச் சென்றான். முகேன் அப்போதுதான் நிவேதாவை நன்றாகப் பார்த்தான். சிவப்பு நிற ஷிபான் புடவை… அவள் உடலை தழுவி இருக்க… அடர்த்தியான கூந்தல் அவள் இடையையும் தாண்டி அசைய…. நெற்றிக்குச் சிவப்பு நிறத்தில் பொட்டும், கண்ணிற்கு மையும் தீட்டி இருந்தாள். முகத்திலும் பழைய களை மீண்டிருந்தது. 


இப்படியெல்லாம் இருந்தா எப்படி நாம பார்க்காம இருக்கிறது எனத் தனக்கு வந்த சோதனையை நினைத்தபடி சென்றான். 


அவர்கள் சேர்ந்து செல்வதை அலுவகத்தில் எல்லோரும் கவனித்துத் தான் இருந்தனர். அவர்கள் சென்றதும் வரவேற்பில் இருந்த காயத்திரி அலுவலகத்தின் உள்ளே செல்ல…. எல்லோரும் ஒரு குட்டி மாநாடே நடத்தினர். 

நிவேதா இங்கதான வேலைப் பார்க்கிறாங்க. ஆனா நாம அவங்க கூட வேலை பார்க்கிறவங்க போல நடக்கவும் சார் விட்டது இல்லை… கவனிச்சிருக்கீங்களா?” எனக் காயத்திரி மற்றவர்களிடம் கேட்க


எனக்கும் அப்படித்தான் தோன்றும்.” என்றான் அங்கே கணக்காளராக வேலைப் பார்க்கும் வசந்த். 


அஷோக் சார் தான் சொல்லணும். அவருக்குத் தெரியாதா என்ன?” எனக் காயத்ரி சொல்ல… எல்லோரும் அசோக்கை ஆர்வமாகப் பார்த்தனர்.

 
என்கிட்டையும் சார் எதுவும் சொன்னது இல்லை. ஆனா நிவேதாவை என்ன வேலை சொல்லணும் என எல்லாமே சார் தான் சொல்லுவார். நானா எதுவும் நிவேதாவை சொல்லிட முடியாது.” 


என்ன வா இருக்கும்? ஒருவேளை தங்கச்சி முறையா இருக்குமோ… அதனால அக்கறையா பார்த்துகிறாரோ….” என அங்கே வேலைப் பார்க்கும் விமலா கேட்க


தங்கச்சி எல்லாம் இல்லை… அன்னைக்கு இங்க வந்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாரே… எனக்கு அது நிவேதாவுக்காகன்னு தான் தோனுச்சு.” என்றான் வசந்த். 


எப்படியும் தெரிய வரும்… போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க.” என அஷோக் சொன்னதும், எல்லோரும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர். 


காரில் முகேன் ஒரு வாடிக்கையாளருடன் பேசியபடி வர… நிவேதா சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். புது அலுவலகம் இப்போது இருக்கும் அலுவலகத்தை விடத் தூரம் அதிகம். 

போக்குவரத்து குறைவான அதே சமயம் அகலமான தார் சாலையில் இருக்க, அந்தப் பகுதி முழுக்கவே சற்று இடைவெளியில் பெரிய மரங்களும் இருந்தது. 


கீழே பார்கிங் இருக்க… முதல் தளத்தில் வேறு எதோ கம்பனி இருக்க… அடுத்தத் தளத்தில் இவர்கள் அலுவலகம் இருந்தது. 


நுழைந்ததும் வரவேற்பு பகுதி, அடுத்து பெரிய அலுவலக இடம்… இரண்டு தனியறைகள், ஓய்வறைகள் என எல்லாமே பெரியது தான். 


ஒருபக்கம் பெயிண்ட் அடிக்கும் வேலை நடக்க, முகேனின் அறையில் மர வேலைகள் நடந்து கொண்டிருந்தது. நிவேதா சென்று சுற்றிப் பார்த்து விட்டு வந்தாள். முகேன் அங்கே வேலை செய்பவர்களிடம் அவனுக்கு எப்படி வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்க… அலுவலகத்தின் முன்பக்கம் நின்று தெருவை நிவேதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அரை மணி நேரம் சென்றுதான் முகேன் வந்தான். அவன் போகலாமா எனக் கேட்க, இருவரும் இறங்கி காருக்கு சென்றனர். 


காரில் ஏறியதும், எப்படி இருக்கு புது அலுவலகம் என்று அவன் கேட்க, “ரொம்ப நல்லா இருக்கு. ஆனா எனக்குதான் வந்து போக ரொம்பத் தூரம். நான் இங்க இருந்து ஆட்டோவில் தான் ரயில்வே ஸ்டேஷன் போகணும்.” என்றாள். 


கவலைப்படாதே வீட்டை மாத்திடலாம்.” என்றான் சிரித்துக் கொண்டு.

அவள் வீட்டை மாற்றுவதா என நினைத்து நிவேதா அவனை முறைக்க… அவள் அவன் வீட்டுக்கு வந்துவிடுவாள் என்ற அர்த்தத்தில் முகேன் சொன்னான். இங்கிருந்து அவன் வீடு பக்கம்தான். 


சற்றுத் தூரம் வந்ததும், அங்கே பெருமாள் கோவில் இருக்க…கோவிலுக்குப் போகலாமா? உனக்குப் போகலாம் தானே…” என்றதும், சரி எனக் காரில் இருந்து இறங்கினாள். அவளும் கோவிலுக்குச் சென்று வெகு நாட்கள் ஆகிவிட்டது. 


சாமிக்கு பூ வாங்கும் போது,” உனக்கும் வாங்கிக்கோ.” என்றான். 


இன்று என்ன இவன் இப்படி எல்லாம் செய்கிறான் என்று இருந்தாலும், அவன் அவள் மேல் ஆர்வமாக ஒரு பார்வைக் கூடச் செலுத்தவில்லை. அவன் சாதாரணமாகத்தான் இருக்கிறானோ… நாம்தான் கற்பனை செய்து கொள்கிறோமோ என நினைத்தாள். 


பூ வைக்கப் பின் இல்லை என அவள் சொல்ல… அந்தப் பூக்கார பெண்ணே வைத்திருந்தார். நிவேதா மல்லிகை பூ வாங்கி வைத்துக் கொண்டாள். 


முகேன் முன்னே செல்ல… நிவேதா அவன் பின்னே சென்றாள். அந்த நேரம் கோவிலில் வேறு யாரும் இல்லை. அதனால் நிதானமாகச் சாமி கும்பிட்டனர். பெருமாள் சந்நிதியில் தீர்த்தமும் துளசியும் கொடுக்க… அடுத்து இருந்த தாயார் சந்நிதியில் குங்குமம் கொடுத்தனர். முகேன் நிவேதவிடம் குங்குமத்தை கொடுத்து விட்டு, அவள் கையில் இருந்து சிறிது எடுத்து வைத்துக் கொண்டான். நிவேதா மீதம் இருந்ததைப் பத்திரமாகத் தாளில் மடித்து வைத்துக் கொண்டாள்.

இருவரும் அங்கே சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு வந்தனர். மீண்டும் வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி, சிற்றுண்டியும் காபியும் அருந்தினர். அவன் இங்கெல்லாம் செல்ல வேண்டும் என திட்டமிட்டு அழைத்து வரவில்லை. அவள் வீட்டிற்கு செல்ல இன்னும் நேரம் இருக்க… அவளோடு சற்று நேரம் இருக்கலாமே என்ற ஆசையில் அழைத்து சென்றான். 

நிவேதா, புது ஆபீஸ் போறதுனால நிறைய வேலை இருக்கும். நீ எனக்கு உதவி பண்ணுவ தானே…” என அவன் கேட்க… 


என்ன பண்ணும் சொல்லுங்க செய்யுறேன்.” என்றாள் சந்தோஷமாகவே. 


என்ன செய்ய வேண்டும் என்று சொன்னான். நிறைய வேலைகள் இருந்தது.
அவளை அருகில் இருந்த ரயில் நிலையத்தில் அவன் இறக்கிவிட… அன்று மன நிறைவுடன் வீடு திரும்பினாள். 


அவனுமே அன்று சீக்கிரம் வீடு திரும்பிவிட்டான். ஜெயஸ்ரீயிடம் நிவேதாவுடன் வெளியே சென்றதை சொல்ல… அவர் மகளிடம் பேசும் போது அதைச் சொன்னார்.

 
போன்னை ஸ்பிகரில் போட சொன்னவள், “அம்மா அவனுக்கு முக்கியமானவங்களைக் கூடிட்டு போய் ஆபீஸ் காட்டினானே…. உங்களுக்குக் காட்டினானா மா…” எனப் போட்டுக் கொடுக்க… 


நான் அம்மாவை கூப்பிடத்தான் செஞ்சேன். அவங்கதான் வரலை.” என்றான் முகேன். 


அவன் என்னைக் கூப்பிடத்தான் செஞ்சான். நான்தான் திறப்பு விழா அன்னைக்குப் பார்த்துக்கிறேன் சொல்லிட்டேன்.” 


என்னைக் கூப்பிடவே இல்லை…” என அவன் அக்கா தேவி குற்றபத்திரிக்கை வாசிக்க… 


நீ இப்ப வந்தேனா… உடனே திரும்பக் கல்யாணத்துக்கு வர கஷ்டமா இருக்கும். நீ கல்யாணத்துக்கே வா…” என்றான் முகேன். 


அது தானே நீ எவ்வளவு விவரம்.” எனச் சொல்லிவிட்டுத் தேவி வைத்தாள். 


எந்த நம்பிக்கையில டா நீ இதெல்லாம் சொல்லிட்டு இருக்க என அவனே அவனைக் கேட்டுக் கொண்டான்.