இதயம் இணையும் தருணம் 11 1 4306 இதயம் இணையும் தருணம் அத்தியாயம் 11 வினோதாவிடம் சாருமதியின் எண் இல்லை. அவள் நிவேதாவை அழைத்துச் சாருமதியின் அலுவலகத்தில் அவளுக்குத் தெரிந்தவர் வேலைக்குச் சேருவதாக எதோ சொல்லி எண்ணை வாங்கி முகேனுக்கு அனுப்பினாள். அப்போது இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், முகேன் மறுநாள் பேசிக்கொள்ளலாம் என முடிவெடுத்துக் கொண்டான். சற்று நேரம் முன்பு வரை நிவேதாவை எப்படியாவது ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. ஆனால் இன்று அவன் அம்மா சொன்னதும், அவனை வேறு விதமாக யோசிக்க வைத்திருந்தது. இரவு உணவு உண்ணும் போது ஜெயஸ்ரீ மகனிடம், “என்ன டா நிவேதாகிட்ட பேசினியா, என்ன சொல்றா?” எனக் கேட்டதற்கு, நிவேதா அவள் அப்பாவுக்காக யோசிப்பது, அவனுக்காக யோசிப்பது எல்லாம் சொல்ல… “இந்தப் பொண்ணு இப்படி எல்லாருக்காகவும் யோசிக்குது. அவளுக்காக யோசிக்க மாட்டேங்குதே…” என்றார். அப்போது டிவியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. பதினைந்து வயது பெண்ணைக் காதல் என்ற பெயரில் அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலையும் செய்திருந்தான் ஒருவன். “தினமும் இது போல ரெண்டு மூன்னு வந்திடுது. இதெல்லாம் பார்க்கும் போது காதல்ன்னு சொன்னாலே பெத்தவங்களுக்குப் பயம்தான் வரும். இப்படிப் பட்டவங்களும் இருக்கத்தானே செய்யுறாங்க.” “நிவேதா அவங்க அப்பா மனசையும் கஷ்டபடுத்த கூடாதுன்னு நினைக்கிறா. இது காதல் திருமணமா இல்லாம, ஏன் வீட்ல பார்த்த திருமணமா இருக்கக் கூடாது?” என ஜெயஸ்ரீ கேட்டதும்தான், முகேனும் வேறுவிதமாக யோசிக்க ஆரம்பித்தான். நிவேதாவிடம் காதல் சொல்லி, அவள் அதை ஏற்றுக்கொண்டு, அவர்கள் திருமணம் நடக்க எல்லாம் வாய்ப்பே இல்லை. வேறு விதமாகத்தான் முயல வேண்டும் என நினைத்துக் கொண்டான். அதன் விளைவாகவே வினோதாவை அழைத்துச் சாருமதியின் எண்ணைக் கேட்டது. மறுநாள் அலுவலகம் வந்த நிவேதா ரொம்ப வாடித் தெரிந்தாள். முன்தினம் வீட்டில் நடந்தது எல்லாம் அவளை மிகவும் சோர்வுற செய்திருந்தது. அன்று அவள் வந்த நேரத்திற்குத் தான் முகேனும் வந்தான். காரை நிறுத்திவிட்டு வந்தவன், நிவேதா வருவதைப் பார்த்து அங்கேயே நிற்க… நிவேதா அதைக் கூடக் கவனிக்கவில்லை. அவனைப் பார்க்காமல் கடந்து சென்றாள். முகேன் யோசனையுடன் அறைக்குச் சென்றவன், அப்போதே சாருமதியை அழைத்து விட்டான். அவள் காலை சீக்கிரமே அலுவலகம் சென்று விடுவாள். கணவன் மனைவி இருவருமே ஒரே அலுவலகம் என்பதால்… அலுவலகம் வருவதும் திரும்புவதும் எப்போதும் ஒன்றாகத்தான். போக்குவரத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம் எனக் காலை எட்டு மணிக்கே அலுவலகம் வருபவர்கள், அதே போல மாலையும் ஐந்து மணிக்கே வீடு திரும்பி விடுவார்கள். தெரியாத எண் என்றதும் சாருமதிக்கு எடுக்க யோசனைதான். ஆனாலும் எதாவது முக்கியமான அழைப்பாக இருந்து விடப் போகிறது என எடுத்தாள். “ஹலோ… நான் முகேன் பேசுறேன். நிவேதா என்கிட்ட தான் வேலை செய்கிறாள்.” என அவன் சொன்னதும், சாருமதிக்கு இந்த நேரம் எதற்காக அவன் அழைக்கிறான், ஒருவேளை நிவேதாவுக்குத் தான் எதுவுமோ எனப் பயந்து விட்டாள். ஏற்கனவே நிவேதாவுக்கு விபத்து நடந்திருந்ததால்…. முதலில் அப்படித்தான் யோசிக்கத் தோன்றியது. “நிவேதாவுக்கு என்ன? அவ நல்லா தானே இருக்கா?” எனச் சாருமதி பதறிக் கொண்டு கேட்க, “அவ நல்லா இருக்கா. ஆபீஸ் கூட வந்திட்டா. நான் வேற விஷயமா போன் பண்ணேன்.” என்றதும், அப்போது தான் சாருமதிக்கு முகேன் யாரென்று மண்டையில் உரைத்தது. “சாரி முகேன், நான் எதோ டென்ஷன்ல பேசிட்டேன்.” “பரவாயில்லை… நான் முகேன்.” என் அவன் திரும்ப ஆரம்பிக்க… “எனக்கு உங்களைப் பத்தி எல்லாம் தெரியும். நானே உங்ககிட்ட எப்படிப் பேசுறதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்களே கூப்பிடீங்க.” “நீங்க என்ன பேசணும்னு நினைச்சீங்க?” என முகேன் கேட்க, “இல்லை, நீங்க முதல்ல சொல்லுங்க.” என்றால் சாருமதி. “எனக்கு நிவேதாவை கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு உங்க உதவிப் வேணும். நீங்க உதவி பண்ண முடியுமா?” என முகேன் கேட்டதும், சாருமதிக்கு சொல்ல முடியாத ஆச்சர்யம். “நாங்களே உங்ககிட்ட இதைப் பத்தி பேசுறதாதான் இருந்தோம். ஆனா உங்க விருப்பம் தெரியாம எப்படிப் பேசுறதுன்னு தான் யோசிச்சிட்டு இருந்தோம்.” எனச் சாருமதி சொன்னதும் முகேனுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தர… நாம நேர்ல சந்திச்சு பேசலாமா?” என்றான். சாருமதியின் வீடு தொலைவு என்பதால், அன்று முன் மதிய நேரத்தில், அவர்கள் அலுவலகத்தின் அருகே இருக்கும் வணிக வளாகத்தில் சந்திப்பதாக முடிவு செய்து கொண்டனர். நிவேதாவுக்கு இப்போது எதவும் தெரிய வேண்டாம் எனச் சாருமதியே சொல்ல… அவளும் பயந்து தங்களையும் டென்ஷன் செய்வாள் என நினைத்த முகேனுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. முகேன் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு பன்னிரெண்டு மணி போலக் கிளம்பிவிட்டான். அவன் அறையில் இருந்து வெளியே வர… நிவேதாவின் கண்கள் அவள் கட்டுப்பாட்டையும் மீறி அங்கே சென்றது. முகேன் வெளி வாயிலை நோக்கி செல்ல… “என்ன அதுக்குள்ள போறாங்க.” என நினைத்துக் கொண்டாள். அவன் இல்லாத அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பது இன்னும் சோர்வாக உணர வைத்தது. அஷோக்கோடு நின்று பேசுவது போல, முகேனும் அவளின் முக மாற்றத்தை கவனித்துதான் இருந்தான். அவன் சென்றதும் அந்த அலுவலகமே மங்கித் தெரிந்தது. இதெல்லாம் சரியே இல்லை. அவனைத் தினமும் பார்ப்பதால் இப்படி எல்லாம் தோன்றுகிறதா? என நிவேதாவுக்கே ஒரே குழப்பம். வேண்டாம், நடக்காததை நினைக்காதே என அவளே சொல்லிக் கொண்டவள், வேலையில் கவனம் செலுத்த முயன்றாள். முகேன் அங்கே அரை மணி நேரத்தில் சென்று சேர்ந்து விட… அதற்கு முன்பே சாருமதியும் மனோகரும் வந்திருந்தனர். முகேன் படத்தை ஏற்கனவே சாருமதி பார்த்திருந்ததால், அவனை அடையாளம் கண்டுகொள்வது எளிதாக இருந்தது. முகேன் அவனை அறிமுகம் செய்துகொள்ள… மனோகர் சென்று மூவருக்கும் குடிக்க ஜூஸ் வாங்கிக் கொண்டு வர… வார நாள் என்பதால் மாலிலும் கூட்டம் இல்லை… அங்கே தரைதளத்தில் இருந்த இருக்கையிலேயே மூவரும் உட்கார்ந்து பேசினர். “என்னைப் பத்தி நிவேதா உங்ககிட்ட சொல்லி இருக்காளா?” என முகேன் ஆச்சர்யப்பட… “இப்போன்னு இல்ல… அப்ப நீங்க காலேஜ் படிச்சு முடிச்ச போதே… உங்களைப் பத்தி சொல்லி இருக்கா… எனக்குப் பிடிக்கும், ஆனா நம்ம வீட்டு சூழ்நிலையால உங்ககிட்ட எதுவும் சொல்லலை சொன்னா… இப்பவும் அதேதான் சொல்லிட்டு இருக்கா….” தங்கை எப்படியும் இதெல்லாம் முகேனிடம் சொல்ல மாட்டாள் எனத் தெரியும், அதனால் சாருமதியே எல்லாம் சொல்லி விட்டாள். “உங்க தங்கச்சிகிட்ட லவ் சொல்லி, அவ ஒத்துகிட்டு எங்க கல்யாணம் நடக்கணும்னா அது இப்போதைக்கு நடக்கவே நடக்காது. உங்க அப்பாவுக்காக எங்க அம்மாவும் யோசிக்கிறாங்க.” “இது காதல் திருமணமா வேண்டாம். நான் இதுவரை அவகிட்ட லவ் பண்ணறேன்னு சொன்னதும் இல்லை. நிவேதா இப்போ என் கம்பெனியில வேலைப் பார்க்கிறா… நாங்க வந்து பெண் கேட்டா உங்க அப்பா கொடுப்பாரா?” “உடனே ஒத்துக்கமாட்டார் தான். ஆனா இப்போ நிவேதாவுக்கு எதுவும் வரன் சரியா அமையலை… அதனால கொடுக்கலாம். நாம அவருக்குப் புரிய வைக்கிறதுல தான் இருக்கு.” “இன்னும் சிலரை வேலைக்குச் சேர்த்து, பெரிய இடத்துக்குக் கம்பனியை அடுத்த மாசம் மாத்துறோம். நான் அந்த விழாவுக்கு உங்க எல்லாரையும் கூப்பிடுறேன். உங்க அப்பா வந்து எங்களைப் பத்தி முதல தெரிஞ்சிக்கட்டும். அதுக்குப் பிறகு நாங்க வந்து உங்க வீட்ல பேசுறோம்.” “நீங்க சொல்றது சரிதான் முகேன். எடுத்ததும் போய்ப் பொண்ணு கேட்கிறதை விட… முதல்ல உங்களைப் பத்தி அவரும் தெரிஞ்சிகிட்டா நல்லது.” என்றான் மனோகர். “நிவேதாவுக்கு இப்போ எதுவும் தெரிய வேண்டாம். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா பிறகு சொல்லிக்கலாம்.” என முகேன் சொல்ல… “ஆமாம் அவள் மனதில் ஆசையை வளர்த்துவிட்டு பிறகு அவள் தந்தை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் வருத்தம் தானே….” எனச் சாருமதியும் நினைத்தவள், “ஒருவேளை எங்க அப்பா ஒத்துக்கவே இல்லைனா…” என அவள் கேட்டே விட… “என்னங்க உங்களுக்கு மட்டும் தான் ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கத் தெரியுமா என்ன? எனக்குத் தெரியாதா… என்ன உங்க தங்கச்சி தான் ஒத்துக்கமாட்டா… அவளுக்கும் தெரியாம பண்ணிக்க வேண்டியது தான்.” என முகேன் சிரிக்க… என்ன இவன் எப்படிச் சொல்றான் என்பது போலச் சாருமதி பார்க்க… “நானும் உங்க தங்கச்சி மனசு, உங்க அப்பா மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு தாங்க பார்க்கிறேன். அவங்க ஒத்துக்கலைனா தான் அப்படி. மத்தபடி நான் நல்லவன் தான்.” எனச் சொல்லிவிட்டு முகேன் செல்ல…. சாருமதி இன்னும் குழப்பத்தில் இருக்க, மனோகர் புன்னகையுடன் அவனுக்கு விடைக் கொடுத்தான். முகேன் திரும்ப அலுவலகம் வந்ததை நிவேதா பார்க்கவில்லை. மாலை அவள் கிளம்பும் நேரம் இண்டர்காம் அழைக்க… எடுத்து பார்த்தால் முகேன் தான் அழைத்திருந்தான். “போறதுக்கு முன்னாடி என்னோட ரூமுக்கு வந்திட்டு போ….” என அவன் சொல்ல…