இதயம் இணையும் தருணம் 



அத்தியாயம் 10 



முகேன் இரவு ஆகாஷை அழைத்து நிவேதாவுடன் என்ன பேசினான் எனக் கேட்டதற்கு, “சாதாரணமா தான் பேசிட்டு இருந்தோம்.” என ஆகாஷ் சமாளிக்க… 


“டேய், நீ அவகிட்ட பேசணும்னு தான் போனே…. எனக்குத் தெரியும், என்ன சொன்னா சொல்லு.” என்றதும், நிவேதா என்ன எண்ணத்தில் இருக்கிறாள் என அவனும் தெரிந்து கொள்ளட்டும் என நினைத்த ஆகாஷும், நிவேதாவுடன் பேசியதை அப்படியே சொல்லிவிட்டான். 


“நீ அவளுக்காகத் தியாகம் பண்ணனும்னு எல்லாம் அவ எதிர்ப்பார்க்கலையாம் மச்சான்.” என்றும் சொல்லி விட…. முகேன் எதுவும் சொல்லவில்லை. அவன் மெளனமாக இருக்க… 


“அவங்க அப்பாவை தான் சமாளிக்கிறது கஷ்டம்னு நினைச்சா… இவளை சமாளிக்கிறது அதை விடப் பெரிய பாடா இருக்கும் போல…” 


இவளை எப்படிச் சம்மதிக்க வைக்கப் போகிறோம் என முகேனுக்கும் ஒன்றும் புரியவில்லை.
“கொஞ்ச நாள் போகட்டும் டா பார்க்கலாம்.” என வைத்து விட்டான். 


மறுநாள் வீட்டிற்கு வந்த சாருமதி, அலுவலகத்தைப் பற்றி விசாரிக்க… முகேன் தான் முதலாளி என அவளிடம் நிவேதா சொல்லிவிட்டாள். 


“அவனுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?” எனக் கேட்க, 


“இன்னும் இல்லை.” என்றாள். 


சாருமதி முகனைப் பற்றியே ஆர்வமாக விசாரிக்க… நிவேதா அவள் கைபேசியில் அவர்கள் அன்று மாலில் எல்லோரும் சேர்ந்து எடுத்த படத்தைக் காட்டினாள். 


மாநிறத்தில் களையான முகம், இவனே நிவேதாவை திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே எனத் தோன்ற… சாருமதி அதைச் சொல்லவும் செய்ய… ஆகாஷிடம் சொன்னதையே நிவேதா தன் அக்காவிடமும் சொன்னாள். 


“ஏன் தியாகம்ன்னு எல்லாம் சொல்ற நிவேதா. உனக்கு அப்படியென்ன குறை. நீ வேலைக்குப் போன இந்த ஒரு மாசத்தில இளைச்சு தான் இருக்க.” 


“போ கா… அப்படியே முகேன் விரும்பினாலும், அப்பா கல்யாணம் பண்ணி வச்சிடுவாரா என்ன? எதுக்கு நடக்காதது எல்லாம் நினைக்கிற.” என நிவேதா சொல்லிவிட்டு சென்று விட… 


நடக்காது என்று நினைத்து தான் நிவேதா எதோ ஒரு காரணம் சொல்லி தன்னையே ஏமாற்றிக் கொள்கிறாள் எனச் சாருமதிக்கு புரிந்து தான் இருந்தது. மனதில் இருக்கும் ஆசையைக் கூட வெளியே சொல்லாமல்… எல்லாவற்றையும் மனதிற்குள் வைத்து அழுத்திக் கொண்டிருக்கிறாளோ எனத் தங்கைக்காகக் கவலைபட்டாள். 


மறுநாள் நிவேதா அலுவலகத்திற்குச் செல்ல… அங்கே முகேனை அவளால் பார்க்க கூட முடியவில்லை. அவன் பிஸியாக இருக்க… நிவேதாவும் அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 


அவளுடைய வேலைகளை எல்லாம் யார் உதவியுமின்றிச் செய்யப் பழகியிருந்தாள். முகேன் தான் பழக்கியது. அது ஒரு காரணமாக இருந்தது. அதை வைத்து அவனைத் தினமும் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அந்தக் காரணமும் இல்லை. அவள் வேலை விஷயமாக ரிப்போர்ட் செய்ய வேண்டியது அஷோக்கிடம் தான். 


காலை இவள் வருவதற்கு முன்பு அவன் வந்திருப்பான். மதிய உணவும் வீட்டில் இருந்தே எடுத்து வருவதால்… அவன் அறையிலேயே உண்டு விடுவான். மாலையும் இவள் சென்ற பிறகு தான் அவள் செல்வான். அவனாக வேலை விஷயமாக யாரிடமாவது பேச வெளியே வந்தால் தான் உண்டு. 


அந்த வாரம் முழுவதும் அவள் அவனைப் பார்க்கவே இல்லை. சனிக்கிழமை மதியத்திற்கு மேல், அவனே வேலை விஷயமாக வெளியே வந்து ஒருவரிடம் பேசியவன், நிவேதாவின் இருக்கைக்கு எதிரே இருந்த இருக்கையில் உட்கார்ந்து எல்லோருடனும் அரட்டை அடித்தான். 


சில நாட்கள் கழித்துப் பார்ப்பதால்… வேலையைக் கூட மறந்து, நிவேதா அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். 


புது அலுவலகம் தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தவன், கிளம்பும் நேரம், “என்ன நிவேதா எப்படி இருக்கீங்க?” என்றான் அவள் அவனையே பார்ப்பதை உணர்ந்து. 


சட்டென்று அவன் அப்படிக் கேட்பான் என எதிர்பாராததால்… நிவேதா திகைத்து விழித்தவள், “நல்லா இருக்கேன்.” என ஒருவழியாகச் சொல்லி முடிக்க… புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பி சென்றான். 


முகேனை அன்று பார்த்தது, அவன் வெகு நேரம் அவள் அருகில் இருந்தது எல்லாம் சந்தோஷத்தை கொடுத்திருக்க… நல்ல மனநிலையில் அன்று வீடு திரும்பினாள். 


அன்று இரவு படுக்கையில் படுத்து யோசித்தவளுக்கு, இன்று ஒரு விஷயம் புரிந்திருந்தது.
முகேனை பார்க்காமல் பேசாமல் இருந்தால், அவளை அது மிகவும் பாதிக்கிறது. இன்று பார்த்த பிறகு அவள் அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தாள். 


இன்னும் எத்தனை நாள் என அவளே கேட்டுக் கொண்டாள். 


அவனுக்குத் திருமணம் ஆகும் வரை பார்த்துக்கொள்ளலாம். பிறகு வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும் என அவளே அவளுக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டாள். 


மறுநாள் கணவனுடன் சாருமதி வெளியே சென்றுவிட்டு மாலைதான் இங்கே வீட்டிற்கு வந்திருந்தாள். இன்னும் மனோகரோடு முரளி பேச மாட்டார் என்பதால்… அவன் வந்தாலும் வாசலோடு சென்று விடுவான். அன்றும் மனைவியை இவர்கள் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றிருந்தான். 


அன்று வீட்டிற்கு இரண்டு பேர் வந்தனர். இருவருமே நடுத்தர வயதில் இருந்த ஆண்கள். முரளி அவர்களை வரவேற்று ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தார். 


தாய் மகள்கள் எல்லாம் அறைக்குள் சென்று விட்டனர். அப்போது வந்த முரளி, “அவங்களுக்கு டீ போட்டு நிவேதாகிட்ட கொடுத்து விடு.” என்றதும், எதற்கு என்பது போல மூவரும் பார்க்க… 


“நிவேதாவுக்கு ஒரு வரன் வந்திருக்கு, வந்திருக்கிறது தரகரும் பையனோட அப்பாவும், நிவேதாவை பார்க்கனும்னு சொல்றாங்க. அப்புறம் இன்னொரு நாள் அவங்க குடும்பத்துல எல்லோரும் வருவாங்க.” என்றதும், தேவகி மகிழ்ச்சியுடன் டீ போட செல்ல… சாருமதியும் நிவேதாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 


தேவகி டீ போட்டுவிட்டு நிவேதாவை அழைக்க…. வந்திருப்பவர்கள் முன்பு எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என நினைத்த நிவேதா, டீயை எடுத்துக் கொண்டு சென்று கொடுத்துவிட்டு வந்தாள். 


அப்படி என்னதான் இவர் மாப்பிள்ளை பார்த்திருக்காருன்னு நாமும் பார்ப்போமே எனச் சாருமதியும், நிவேதாவும் ஹாலிலேயே ஒரு பக்கமாக நின்று அவர்கள் பேசுவதைக் கவனித்தனர். 


“பொண்ணு எங்களுக்குத் திருப்தி தான். எவ்வளவு நகை போடுவீங்க?” என மாப்பிள்ளையின் அப்பா கேட்க, 


“முரளி அறுபது பவுன் போடுவோம்.” என்றார். 


“ஒரு கார் வாங்கி மாப்பிள்ளைக்குக் கொடுத்திடுங்க. இந்த வீடு உங்க சின்னப் பெண்ணுக்கு தானே… பின்னாடி எந்தப் பிரச்சனையும் வந்திடக் கூடாது.” எனச் சாருமதியை பார்த்த மாப்பிள்ளையின் தந்தை, “கல்யாணத்துக்கு முன்னாடியே சின்னப் பெண்ணுக்கு உரியதை அவ பேருக்கு எழுதி கொடுத்திடுங்க.” என வாய்க் கூசாமல் கேட்க,… 


“இப்பவே எழுதி கொடுத்திட்டு, சாப்பாட்டுக்கு இவங்க வீட்டுக்கு நீங்களும் அம்மாவும் போவீங்களா அப்பா?” எனச் சாருமதி முரளியிடம் கேட்க, அவர் தலை குனிந்தார். 


“நான் கல்யாணம் எல்லாம் பண்ணிக்கிறதா இல்லை. நீங்க கிளம்புங்க.” என்றால் நிவேதா எடுத்தெறிந்து. 


“என்ன முரளி உங்க பொண்ணுங்களைப் பேசவிட்டு பார்க்கிறீங்களா?” எனத் தரகர் கேட்க, முரளி எதோ சொல்ல வர… “இந்த மாதிரி வாயாடி பொண்ணு எல்லாம் எங்களுக்கு வேண்டாம்.” எனச் சொல்லி மாப்பிள்ளையின் அப்பா எழுந்து சென்று விட… தரகரும் உடன் சென்றார். 


“நான் பேசிக்க மாட்டேனா…. அதுக்குள்ள நீங்க எல்லாம் ஏன் பேசுறீங்க?” என முரளி மகள்கள் இருவரையும் பார்த்துக் கோபமாகக் கேட்க, 


“அவளுங்க கேட்டதுல என்ன தப்பு? உங்களுக்கு வேலையும் இல்லை. இருக்கிற சொத்தை இப்பவே எழுதி கொடுத்திட்டு, நாம தெருவுல நிற்கிறதா… ஒரு நல்ல இடமா பார்க்க சொன்னா… பெண் பார்க்க வரும் போதே இப்படிப் பேசுறாங்க? இன்னும் கல்யாணத்துக்குப் பிறகு எப்படிப் பேசுவாங்க?” என்றார் தேவகி. 


“அப்பா, அவ இதுவரை பட்டதே போதும், கல்யாணம் பண்றேன்னு சொல்லி இப்படி எல்லாம் வரன் கொண்டு வராதீங்க.” என்றால் சாருமதியும், 


“உன்னால தான் அவளுக்கு இந்த நிலை.” என முரளி சாருமதியைக் குற்றம் சொல்ல… 


“அது தானே பா உங்களுக்கு வேணும். இதுக்குதானே பா இத்தனை நாள் காத்திருந்தீங்க. ஆமாம் என்னால தான்.” 


“நான் தானே அவ வாழ்க்கை இப்படி இருக்கக் காரணம். அப்ப அதை எப்படிச் சரியாக்கிறதுன்னு எனக்குத் தெரியும். இனி நான் பார்த்துக்கிறேன்.” 


“நீ என்ன பார்த்துப்ப? நீயே எவனையோ பார்த்தியே, அவனைப் போல யாரையாவது கூடிட்டு வரப்போறியா? என முரளி வாய்விட…. 


“நான் பார்த்த மாப்பிள்ளைதான், ஆனா எனக்குக் குழந்தை இல்லைன்னு இத்தனை நாள்ல ஒருநாள் கூடச் சொல்லிக் காட்டியது இல்லை.” 


“எனக்குதான் பிரச்சனைன்னு அவருக்குத் தெரியும், அப்படியும் அவரோ அவங்க வீட்டு ஆளுங்களோ….ஒருநாளும் அதைச் சொல்லிக் காட்டியது இல்லை.” 


“இதே நீங்க பார்த்த மாப்பிள்ளையைக் கட்டி இருந்தா… குழந்தை இல்லைன்னு சொல்லி… என்னென்ன ரகளைப் பண்ணி இருப்பாங்களோ…” 


“நீங்க சொன்னது சரிதான். என்னால தான் நிவேதாவுக்கு இந்த நிலை. அதுதான் எனக்குக் குழந்தை இன்னும் உண்டாகலை.” எனச் சாருமதி வயிற்றில் அடித்துக் கொண்டு அழ… 


“அக்கா, நீ என்ன பண்ண? எனக்கு எப்ப நடக்கணுமோ அப்பத்தான் நடக்கும்.” என்றவள், 

“அப்பா, அக்காவை இவ்வளவு பேசுறீங்களே…உங்களுக்கு முடியாம ஆஸ்பத்திரியில இருந்த போதும், எனக்கு முடியாம ஆஸ்பத்திரியில இருந்த போதும், நம்ம சொந்தக்காரங்க வந்து என்ன செஞ்சாங்க? வெறும் பார்த்திட்டு மட்டும் போனாங்க.” 


“ஆனா நீங்க அவங்களுக்குப் பயந்து, இப்பவரை அத்தானோட பேசுறது இல்லை. ஆனா அவர்தான் நீங்க ஆஸ்பத்திரியில இருந்த போது எங்களுக்கு அவ்வளவு துணையா இருந்தார்.” 


“எனக்கு முடியாத போதும், அக்காவை இங்க அனுப்பி வச்சு. ஆஸ்பத்திரியில எங்களுக்குத் துணைக்கு இருந்து, அவர் நிறையச் செஞ்சாரு பா…” 


“நான் நம்ம சொந்தக்காரங்களைத் தப்பு சொல்லலை. அவங்கவங்களுக்கு அவங்க குடும்பத்தைப் பார்க்கத்தான் நேரம் இருக்கும்.” 


“அவங்கவங்க குடும்பத்திலேயே ஆயிரம் பிரச்சனை இருக்கு. இதுல நம்மைப் பார்க்க எல்லாம் அவங்களுக்கு நேரம் இருக்காது. நாமும் அந்த அளவில தான் இருக்கோம். இதுல அவன் என்ன பேசுவான்? இவன் என்ன பேசுவான்னு யோசிச்சே பாதி வாழ்க்கை போகுது.” 


“யாரு என்ன பேசினா என்னப்பா? அது அவங்களோட எண்ணம். அது எதுக்கு நமக்கு? நல்லதா சொன்னா எடுத்துப்போம், வேண்டாதது சொன்னா கண்டுக்காம போயிட்டே இருக்க வேண்டியது தான்.” 

“உங்களுக்கு ஒண்ணுன்னா நாங்கதான் பா வருவோம். மத்தவங்களுக்காக வாழ்ந்தது போதும் பா… நாம நமக்காக வாழுவோம். இனியாவது அத்தானோட பேசுங்க பா… இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருப்பீங்க?” 


“அக்கா பார்த்த மாப்பிள்ளை சரி இல்லைனா கூட நீங்க கோபப்படுறதுல நியாயம் இருக்கு. நீங்க இவ்வளவு அலட்சியப் படுத்தியும் அவங்க அக்காவை நல்லாத்தானே பா வச்சுக்கிறாங்க.” 


நிவேதா பேசப் பேச…. எல்லோருக்குமே அவள் சொல்வது நியாயம் தான் என்று தோன்றியது.
தேவையில்லாமல் அடுத்தவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போய், குடும்பத்திற்குள் நிம்மதியும் சந்தோஷமும் இழந்தது தான் மிச்சம். 


அன்று இரவு சாருமதியை அழைக்க வந்த மனோகரை முரளியே வீட்டிற்குள் அழைக்க… அவனுக்கு நம்பவே முடியவில்லை. 


தன் பெண்கள் பேசியது அவரின் அகக்கண்ணைத் திறந்து விட்டது. இன்றுதான் அவர் அவர்களை இவ்வளவு பேசவும் விட்டிருக்கிறார். இன்னொன்று தான் இன்னமும் முறுக்கிக் கொண்டால்… குழந்தை இல்லை என்று தன் பெண்ணை வேறு கொடுமை செய்வானோ எனப் பயம் வந்திருந்தது. 


மனோகர் அங்கேயே உண்டுவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றான். 


சாருமதி அவனிடம் நடந்ததைச் சொல்ல, “அப்ப கொழுந்தியா போட்ட போடுல தான்… என் மாமனார் வழிக்கு வந்திருக்கார்.” எனஅவன் சிரிக்க, சாருமதி அப்போதும் சந்தோஷமாக இல்லை. 


மனோகரிடம் முகேனைப் பற்றிச் சொன்னவள், “பாவம் எப்படியும் நடக்காது, எதுக்கு வீணா வெளிய காட்டிக்கனும்னு காட்டிக்காம இருக்கா… அவளுக்கு முகேனை ரொம்பப் பிடிச்சிருக்கு.” எனச் சாருமதி சொல்ல, 


“நாம வேணா முகேன்கிட்ட பேசி பார்ப்போமா…” என்றன் மனோகர். 


“இவளுக்குத்தான் எங்க அப்பாவை நினைச்சுப் பயம், அவருக்கு என்ன? அவர் அவளைக் கல்யாணத்துக்குக் கேட்டா… நாமளும் எதாவது செய்யலாம். இப்ப அவர் என்ன நினைப்பில இருக்காருன்னே தெரியலை… நாமா போய் எப்படிக் கேட்கிறது?” 


“முகேனுக்கு விருப்பம் இருந்தா, கண்டிப்பா அவர் எதாவது செய்வார். நீ வீணா மனசை போட்டு குழப்பிக்காத. டாக்டர் கொடுத்த மாத்திரை சாப்பிட்டியா?” 


“ம்ம்…. சாப்பிட்டேன்.” 


தியாகி என்றெல்லாம் பெரிய வார்த்தை பேசினாளே… உண்மையிலேயே அவளுக்குத் தன் மேல் அப்படியெல்லாம் விருப்பம் இல்லையோ என்ற குழப்பத்திலேயே… முகேன் நிவேதாவை நேரில் சந்திக்காமல் இருந்தான். 


மற்றபடி அலுவலகத்தில் பொருத்தியிருந்த கமேரா வழியாக அவன் அவளைப் பார்த்துக் கொண்டு தானே இருந்தான். அவன் அறைக் கதவு திறக்கும் போதெல்லாம் நிவேதாவின் தலை அந்தப் பக்கம் ஆவலாகத் திரும்புவதை அவனும் கவனித்திருந்தான். 


நேற்று அவனைப் பார்த்ததும், அவள் தன்னை மறந்து விடாமல் பார்த்துக் கொண்டிருந்ததை அவனும் அறிவான். 


அவளுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது. நேரில் கேட்டால் ஒத்துக்கொள்ள மாட்டாள். இவளிடம் பேசுவதற்கு இவள் வீட்டினரிடமே பேசி விடலாம் என்ற முடிவுக்கு முகேன் வந்திருந்தான். 


வினோதா இங்கேயும் மாமியார் வீட்டிலுமாக மாறி மாறி இருந்து கொண்டிருந்தாள். இப்போது மாமியார் வீட்டில் இருக்கிறாள். அவளிடம் நிவேதாவின் அக்கா எண்ணைக் கேட்க, 


“உனக்கு இப்பவாவது இது தோனுச்சே… நான் திரும்ப ஊருக்குப் போறதுக்குள்ள கல்யாணம் வச்சிடு டா… உங்க கல்யாணத்தைப் பார்த்திட்டு போறேன்.” என்றாள். 


“உனக்கு உன் கவலை. உன் ப்ரண்ட்டை வச்சிட்டு நான் கல்யாணம் பண்ணி பிள்ளைக் குட்டி பெத்த மாதிரி தான்.” என முகேன் சலித்துக்கொள்ள… 

“நீ பெத்துபியா? எப்படி டா?” என வினோதா ஆச்சர்யப்பட, முகேன் கொந்தளித்துப் போனான். 


“ஏய் லூசு, நான்னா நான் இல்லை. நிவேதா தான் போதுமா…. நம்பரை அனுப்பு. அடுத்த மாசம் புதுக் கம்பனி திறப்பு விழாவுக்கு வந்து சேரு.” 


“சரி டா….” என வினோதா சிரித்தபடி போன்னை வைத்தாள்.