இதயம் இணையும் தருணம் 



அத்தியாயம் 1

ஞாயிறு அன்று காலை உணவை முடித்துக் கொண்டதும், என்ன செய்வது என்று தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு கடற்கரை சாலையில் நீண்ட தூரம் இலக்கில்லாமல் சென்று கொண்டிருந்தான் முகேன். 


பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். ஆனால் படிப்பு முடித்து வேலைப் பார்த்தது எல்லாம் வெளிமாநிலங்களில். மீண்டும் இந்த ஒருவருடமாகத்தான் சென்னை வாசம். 


சென்னையில் முக்கிய இடத்தில் சொந்தமாகப் பெரிய வீடு வாங்க வேண்டும் என்பது அவனது வெகு நாள் கனவு. அதற்கு ஏற்றார் போலப் பெரிய வீடு வாங்கியவன், இங்கே வந்ததும் பழைய காரைக் கொடுத்துவிட்டு, அப்போது வந்த புது மாடல் காரும் வாங்கி இருந்தான்.

வெகு தூரம் வந்த பிறகு காரை நிறுத்து விட்டு, ஆள் இல்லாத கடற்கரையில் நடந்து சென்று கடலைப் பார்க்கும்படி உட்கார்ந்து கொண்டான். இந்த இடத்திற்கு வருவதற்குள் நிறைய இழந்து இருக்கிறான். முக்கியமாக அவன் நட்பை இழந்தது தான் வருத்தமாக இருந்தது.

வாழ்க்கையில் அடுத்தக் கட்ட ஓட்டத்தில் தான் முழுக் கவனமும் இருந்ததே தவிர, நண்பர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் கொள்ளவில்லை. கல்லூரி முடிந்து ஆறு மாதங்கள் வரை தொடர்பில் தான் இருந்தனர். பிறகு மேற்படிப்பு வேலை என அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்பும் விட்டுப் போய்விட்டது.

இந்தக் காலத்தில் நண்பர்களைத் தேடிப் பிடிப்பது சவாலான விஷயம் அல்ல… சமுக வலைதளங்களே போதும். ஆனால் நண்பர்களைத் தான் மீண்டும் பார்க்கும் போது… நல்ல இடத்தில் இருக்க வேண்டும் என நினைத்து தான் எல்லாவற்றிலும் இருந்து விலகி இருந்தான்.

இத்தனைக்கும் முகநூலில் இருக்கிறான் தான். ஆனால் இப்போது இருக்கும் அவனைப் பற்றித் தகவல்கள் தவிர வேறு எதுவும் இருக்காது. அதனால் அவன் பள்ளி கல்லூரி நட்புகள் தொடர்பில் இல்லை.

முகேன் B.com., முடித்துக் கணக்காளர் CA தேர்விலும் வெற்றி பெற்று, மும்பையில் அரசாங்கப் பணியில் சேர்ந்தும் விட்டான். சில வருடங்கள் அரசாங்கத்தில் பணி புரிந்தவன், பிறகு தனியார் நிறுவனத்தில் பெரிய பொறுப்பிலும் நல்ல சம்பளத்திலும் இருந்தான். ஆனால் அவனுக்கே தனியாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற ஆசையில், இந்த ஒரு வருடமாகச் சென்னையில் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியும் வருகிறான். இவனின் திறமையால் பெரிய நிறுவனங்கள் சில வாடிக்கையாளர்களாகக் கிடைக்கப் பணம் வந்து கொட்ட ஆரம்பித்தது.

நிறைய நிறுவனத்தில் முதலீடுகள் செய்திருந்தான். அதைத் தவிரப் பணமாகவும் வங்கியில் பெரிய தொகை இருக்க… எதிர்காலத்தைப் பற்றிப் பயம் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். ஆனால் அதைச் சொல்லி சந்தோஷப்பட நண்பர்கள் இல்லை எனத் தோன்ற… அப்போதே அங்கேயே உட்கார்ந்து முகநூலில் நண்பர்களைத் தேட துவங்கினான்.

அவனோடு இளநிலை படித்த ஆகாஷை கண்டுபிடிக்க, அவனுக்கு ஒரு குறுந்தகவல் மட்டும் அனுப்பிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினான்.

வீட்டிற்கு வந்த மகனுக்கு நாவிற்கும் வயிற்றிற்கும் குறையில்லாது ஜெயஸ்ரீ உணவு பரிமாறினார். வீட்டில் அவனும் அவன் அம்மாவும் மட்டும் தான். அக்கா வெளிநாட்டில் திருமணமாகி இருக்கிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. அம்மாவின் நச்சரிப்பு தாங்காது இப்போது தான் பெண் பார்க்க சம்மதித்து இருக்கிறான்.

“உன் மாமா பொண்ணு அனிலாவும் உன்னைப் போலச் சிஏ தான் படிக்கிறாளாம். உன் கம்பெனியிலேயே அவளை இண்டர்ஷிப்கு சேர்த்துக்கச் சொல்லி உன் மாமா சொன்னார்.” என்றார் ஜெயஸ்ரீ. 


மாமா என்றால் சொந்த மாமா அல்ல… ஜெயஸ்ரீயின் பெரியப்பா மகன்தான். ஆனால் இவர்கள் குடும்பத்துடன் எப்போதும் ஒட்டுரவில் இருப்பர்கள்… மறுக்க முடியாது என்பதால் வர சொல்லுங்க. ஆனால் வேலையில கவனமா இருந்தாதான் வச்சுப்பேன் என்றான் அவன் அம்மாவிடம் கறாராக.

“அவளும் நல்லாத்தான் படிப்பா… உன் படிப்பே எடுத்து படிக்கும் போது எப்படி உதவ மாட்டோம்னு சொல்றது.”

“சரிமா வரட்டும் பார்க்கலாம்.” என்றவன் எழுந்து அவன் அறைக்குச் சென்றான்.

கைபேசி பார்க்க வசதியாகக் கட்டிலில் சாய்ந்து தான் உட்கார்ந்து இருந்தான். அதற்குள் அவனுக்குக் கைப்பேசியில் அழைப்பு வர… தெரியாத எண் என்றதும் யோசித்தபடிதான் அழைப்பை ஏற்றான்.

“ஹலோ…” என இவன் சொல்லிக் கூட முடிக்கவில்லை, “நீ இன்னும் உயிரோடத்தான் இருக்கியா?” என்ற ஆகாஷின் குரல் உடல் எங்கும் புது ரத்தம் பாயச் செய்ய… “ஹே… ஆகாஷ்.” என்றான் உற்சாகமாக.

“பேசாத சொல்லிட்டேன். நீ மட்டும் கையில மாட்டின செத்தடா…. எங்களை எல்லாம் மறந்திட்ட இல்ல… எருமை எருமை எங்க டா போய்த் தொலைஞ்ச?” என்ற நண்பனுக்கு,

“எங்க எல்லாமோ சுத்திட்டு. இப்போ இங்க வந்திட்டேன் டா.” என்றான்.

“எங்களை எல்லாம் நினைக்கவே இல்லையா டா…”

“அப்படியில்லை… வேலை வேலைன்னே இருந்திட்டேன்.” 


“நீ இந்தக் காரணம் எல்லாம் வேற யார்கிட்டையாவது சொல்லு… என்கிட்டே சொல்லாத. உன்னால ஒருத்தரோட பேச முடியாதுன்னு போனதும், நீ எங்க எல்லாரோடவும் இருந்த தொடர்பை விட்டுட்ட…” என்ற ஆகாஷின் குற்றச்சாட்டை மறுக்க முடியாமல் அமைதியாக இருந்தான்.

“சரி சொல்லு நீ எப்படி இருக்க?” என்ற நண்பனிடம், இப்போது வரை எல்லாம் சொன்ன முகேன், “உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா? மத்த பிரண்ட்ஸ் எல்லாம் பார்ப்பியா?” என ஆவலாகக் கேட்டான்.

“எனக்குப் போன வருஷம் தான் கல்யாணம் ஆச்சு. நம்ம செட் பொண்ணுங்க எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு தொடர்பில இல்லை. நாங்க பசங்களும் எல்லோரும் இல்ல. சில பேர் தான் இப்பவும் பேசிட்டு இருக்கோம். நான், அருண், ஜெய் மட்டும் இப்பவும் அடிக்கடி பார்த்துப்போம்.”

“ஓ… அப்ப மத்தவங்க.”

“நீ இப்ப வந்திட்ட இல்ல… புதுசா வாட்ஸ் அப் க்ரூப் தொடங்குவோம். எல்லோரும் வந்திடுவாங்க பாரு.” என்றான்.

“சரி டா… அடுத்த வாரம் நம்ம ப்ரண்ட்ஸ் அப்புறம் உங்க வீட்ல சிஸ்டர் எல்லாம் கூடிட்டு வீட்டுக்கு வா டா…” என முகேன் அழைக்க…

“அடுத்த வாரம் எதுக்கு? அதுக்குள்ள நீ தலைமறைவு ஆகிட்டேனா? இன்னைக்கே வரேன். என் பொண்டாட்டி பிரசவத்துக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்கா… அதனால நான் நம்ம பிரண்ட்ஸ் கூட வரேன். உன் அட்ரஸ் எனக்கு அனுப்பிடு.”
“நாங்க வந்து உன்னை மிதிக்கிறோம்.” என்றான் ஆகாஷ் இன்னும் கோபம் குறையாமல்.

“சரி டா வாங்க…” என்றான் முகேனும் சிரிப்புடன்.
ஆகாஷ்க்கு விலாசம் அனுப்பிவிட்டு, அப்போதே நண்பர்கள் வந்தால் உபசரிக்க வேண்டியது இருக்கா என்று பார்க்க எழுந்து சென்றான்.

மகனின் இன்ப படபடப்பை கவனித்த ஜெயஸ்ரீ, அப்போதே மாலை சிற்றுண்டிக்கு மற்றும் இரவு விருந்துக்குத் தயார் செய்ய ஆரம்பித்தார்.

மாலை ஐந்தரை மணி போல நண்பர்கள் ஆரவாரமாக வீட்டிற்குள் நுழைய…. முகேனும் ஜெயஸ்ரீயும் அவர்களை வரவேற்றனர். நண்பனின் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பார்க்கும் போதே, அவன் நல்ல நிலையில் இருக்கிறான் என்பது புரிய, நண்பர்களுக்கும் மகிழ்ச்சி தான். 


ஆகாஷ் சொந்தமாகப் பிஸ்னஸ் செய்ய… அருணும் ஜெய்யும் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தனர். மூவருக்குமே திருமணம் ஆகி இருந்தது. நண்பனிடம் பேசினாலும் இன்னும் ஆகாஷ்க்குக் கோபம் குறையவில்லை. அதை உணர்ந்த முகேன், “சாரி டா மச்சான். ப்ளீஸ் புரிஞ்சிக்கோ.” என்றான். 


இரவு உணவு முடிந்தும், வெளியே வந்து தோட்டத்தில் உட்கார்ந்து அரட்டைஅடித்தனர். ஆகாஷ் சற்று நேரத்திற்கு முன்பு தான் வாட்ஸ் அப் குரூப் தொடக்கி இருக்க… அவனிடம் தொடர்பில் இருந்த நண்பர்களை அவர் சேர்த்துவிட… வரிசையாக ஒவ்வொருவராக வந்து சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் அதில் இல்லாத நண்பர்கள் எண் இருந்தால் அவர்களையும் சேர்க்க… ஒவ்வொரு முறையும் முகேன் ஆவலாகக் கைபேசியை எடுத்து பார்த்துக் கொள்வான். இன்னும் அவன் எதிர்பார்த்த நபர் வராத ஏமாற்றம் முகத்தில் தெரிய, ஆகாஷ் அதைக் கண்டும் காணாமல் இருந்தான்.

“சரி டா பார்க்கலாம்.” என நண்பர்கள் விடைபெற்றுக் கிளம்ப…
வெளியே இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தே… நண்பர்கள் குழுவுடன் வாட்ஸ் அப்பில் பேசிக் கொண்டிருந்தான்.

“ஹே…. நீ எப்படி இருக்க?”
“எங்க இருக்க?”

“கல்யணம் ஆகிடுச்சா?” என வரிசையாகக் கேள்விகள் மேல் கேள்விகள் வர… இவனும் பதில் அளித்து, மற்றவர்களின் பதிலையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் வகுப்பில் மொத்தம் நூற்றிபத்து பேர்… இதுவரை நாற்பது பேர் தான் வந்திருந்தனர்.

நேரம் நள்ளிரவை தொட்ட பிறகும் இன்னும் நண்பர்கள் குழு அடங்கவில்லை. வெகு நாட்கள் கழித்துத் தொடர்பில் வந்ததால் ஒருவர் மாற்றி ஒருவர் மற்றவர்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் அவர்களின் குடும்பப் படங்களையும் பகிர்ந்தபடி இருந்தனர்.

நூறு பேருக்கு மேல் வகுப்பில் இருந்தாலும், இவர்கள் ஒரு ஒன்பது பேர் மட்டுமே நெருங்கிய நண்பர்கள். இந்த ஒன்பது பேர் மீண்டும் சேர எல்லோரையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இவர்கள் நட்பு வட்டத்தில் ஆறு பேரை கண்டுபிடித்திருக்க.. இன்னும் மீதம் மூன்று பேர் வர வேண்டும். எப்படியும் அவர்கள் ஒருவருக்கொருவர் தெரியும் என நினைத்திருந்தனர்.
முகேனின் தவிப்பை உணர்ந்தது போல ஆகாஷ், அந்த மூவரையும் யாருக்காவது தெரியுமா தொடர்பில் இருக்கிறார்களா என்று கேட்க, இல்லை என்றே பதில் வந்தது.

இதுவரையில் இருந்த உற்சாகம் வடிந்து முகேன் சோர்ந்து போனான்.

“எனக்கு வேற எதுவும் தெரிய வேண்டாம். நீ நல்லா இருக்கேன்னு மட்டும் தெரிஞ்சா போதும்.” என யாரையோ நினைத்தபடி கிடந்தான். கல்லூரி வாழ்க்கை வெறும் வசந்தத்தை மட்டும் தருவதில்லை. வலிகளையும் தருகிறது.

மறுநாள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அலுவலகம் சென்றான். அவன் மாமா தன் பெண் அனிலாவுடன் வந்து அவளை விட்டுவிட்டு அவரது அலுவலகத்திற்குக் கிளம்பி சென்றார். 


அனிலா பி காம் கடைசி வருடத்தில் இருந்தாள். அதோடு சிஏ பரிட்சையின் நுழைவு தேர்வில் வெற்றியும் பெற்றிருக்க… முகேன் அங்கிருந்த அவன் உதவியாளரிடம் அவளுக்குத் தேவையான பயிற்சி அளிக்கச் சொன்னான். உதவியாளரை பார்த்துக்கொள்ளச் சொன்னதும், அவளின் முகம் மாறி விட்டது. முகேனுக்கு அதெல்லாம் தெரியவில்லை. 


அனிலா காலை இங்கே நேராக வந்து விடுவாள். பிறகு மாலை நேர கல்லூரிக்கு இங்கேயே மதிய உணவு உண்டுவிட்டு செல்வாள். பிறகு கல்லூரி முடிந்து வீட்டிற்குச் சென்று விடுவாள். முகேனின் அலுவலகம் நகரத்தின் மத்தியில் இருந்ததால்… அவளுக்குச் சென்று வர வசதியாக இருந்தது. 


ஒருநாள் காலை அலுவலகம் வந்த முகேன் வெளி வேலையாகக் கிளம்பி செல்ல… அவன் சென்றுவிட்டான் என நினைத்து, அனிலா மாடி ஜன்னல் வழியாக அவனை எட்டிப் பார்க்க… அவன் கைபேசியை எடுக்க முகேன் அறைக்குள் வந்தவன், அனிலாவை பார்த்துவிட்டு அங்கேயே நின்றான். 


“என்ன இன்னும் இவனைக் காணோம்.” என அனிலா வெளியே பார்த்துக் கொண்டிருந்தவள், எதோ தோன்ற திரும்பினால்… அவளை முறைத்தபடி முகேன் நின்றான். 


அனிலா மாட்டிக் கொண்ட பார்வைப் பார்க்க… முகேன் அவளைப் பார்த்து முறைத்தவன், “வந்த வேலையை மட்டும் பாரு.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான். 


அவள் வந்ததே இவனைப் பார்க்காதானே… அனிலாவுக்கு முகேனைப் பிடிக்கும். அவனோடு பேசிப் பழகத்தான் சிஏ படிக்க நினைத்ததே… ஆனால் படிப்பிலும் கெட்டி தான். 


என்ன டா இதுவேற புதுத் தலைவலி என நினைத்தபடி முகேன் காரை எடுத்துக் கொண்டு சென்றான். 


கார் சிக்னலில் நிற்க… அங்கே அருகில் ஒரு கல்லூரி இருப்பதால்….. தோளில் பையைச் சுமந்தபடி நிறைய மாணவிகள் பேசியபடி நடந்து சென்றனர். முகேனுக்கு அப்போது கண்ணில் ஒரு முகம் மின்னி மறைந்தது. 


நிவேதா, அவளும் இப்படித்தான் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பாள். எப்போது பார்த்தாலும் யார் உடனாவது பேசிக்கொண்டு தான் இருப்பாள். பேசாமல் இருந்து அவளைப் பார்த்ததே இல்லை. 


முதல் வருடம் வகுப்பில், நடு வரிசை முழுவதும் மாணவிகள் உட்கார்ந்து இருக்க… அதற்கு இரண்டு பக்க வரிசையில் மாணவர்கள் இருப்பார்கள். நிவேதாவும் கடைசி இருக்கை தான் முகேனும் கடைசி இருக்கைதான். அதனால் அவள் செய்யும் லூட்டிகள் அவனுக்கு அத்துப்படி. 


நிவேதா ஆள் உயரமாக அதற்கு ஏற்ற உடல்வாகுடன் கொஞ்சம் பூரிப்பகத்தான் இருப்பாள். மாநிறம் என்றாலும் மாசு மறு இல்லாத சருமம். கன்னம் இரண்டும் கும்மென்று இருக்க… பெரிய விழிகளில் கண் இமைக் கூட அடர்த்தியாக இருக்கும். அதோடு ரோஜா நிற உதடுகள். அந்த உதடுகள் தான் மூடவே மூடாது. 


முதல் வருடம் சீனியர் மாணவர்கள் வந்து இவர்கள் கொண்டு வரும் உணவை, இடைவேளை நேரத்தில் வந்து உணடுவிட்டு சென்று விடுவார்கள். அதனால் அவளும் அவள் தோழிகளும் தங்கள் பையைக் கொண்டு வந்து பையன்கள் இருக்கைக்குக் கீழே ஒளித்து வைத்து விட்டுச் செல்வார்கள். 


ஒருமுறை முகேனின் இருக்கையில் சென்று நிவேதா அவள் மதிய உணவை ஒளித்து வைக்க… அவன் அவளை ஒருமாதிரி பார்க்க… 


“ரொம்ப அல்பமா இருக்கு இல்ல… எனக்கே அப்படித்தான் இருக்கு. ஆனா எனக்கும் பசிக்கும் இல்ல…” என அவள் சொன்ன விதத்தில் முகேன் சிரித்து விட்டான். 


முதல் வருடம் அதிகம் பேசி பழகவில்லை. இரண்டாம் வருடம் வந்ததும் சீனியர் மாணவர்களின் தொல்லையும் இல்லை. ஆனால் நிவேதாவின் குறும்பு அதிகமாகி இருந்தது. 


இவர்கள் வகுப்பில் எப்போதும் சத்தம் அதிகம் இருக்க… ஒருநாள் மிகவும் அதிகமாகி மற்ற வகுப்பினர் புகார் அளிக்க, அவர்களின் துறைத்தலைவர் அவர்கள் வகுப்பை சஸ்பென்ட் செய்து உத்தரவிட… நிவேதாவும் அவள் தோழிகளும் முதல் ஆளாகச் சந்தோஷமாகத் துள்ளி குதித்து வகுப்பை விட்டு வெளியே சென்றனர். 


அந்த வகுப்பு நேரமும் முடிந்துவிட… இவர்களாக வந்து மன்னிப்புக் கேட்பார்கள் என எதிர்ப்பார்த்த துறைத்தலைவர், இவர்கள் வரவில்லை என்றதும், அவரே வந்து தான் அவர்களை மன்னித்து விட்டதாகச் சொல்லி வகுப்பிற்குச் செல்ல சொல்ல… 


“நாங்க மன்னிப்பே கேட்கலையே…” எனக் கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வர… மற்ற மாணவர்களும் அதையே சொல்லி கத்த…. 


நிவேதா தான் ஆரம்பித்தது என முகேனுக்குத் தெரியும். அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்க… ஒழுங்கா எல்லாம் கிளாஸ்க்கு போங்க எனத் துறைத்தலைவர் எச்சரித்து விட்டு செல்ல… சோகமாகக் கடைசி ஆளாக நிவேதாவும் அவள் தோழிகளும் உள்ளே வந்தனர். 


அவர்கள் கல்லூரி மற்ற கல்லூரிகளை விடக் கண்டிப்பு அதிகம் தான். ஆண்கள் சட்டை ஜீன்ஸ் பேன்ட் தான் அணிந்து வர வேணும். அதே போலப் பெண்கள் சுடிதார் மற்றும் ஜீன்ஸ் அணியலாம். ஆனால் மேலாடை நீளமாக இருக்க வேண்டும். கைபேசி கல்லூரிக்குள் உபயோகிக்கக் கூடாது. பொதுத் தொலைபேசியில் தான் அழைத்துப் பேசலாம். அதே போல ஆண் பெண் தேவையில்லாமல் நின்று பேசுவதும் கூடாது. அதனால் தான் நிறையப் பெண்களும் இந்தக் கல்லூரியில் படித்தனர். 


நிவேதா கடைசி நேரத்தில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெரும் திறமைசாலி. முகேன் எப்போதுமே நன்றாகப் படித்து முதல் இடம் வரும் மாணவன்.